அனஸ் அப்பாஸ் உடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்
01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
நான் ஐ.ஏ. அனஸ். நீர்கொழும்பு, போருதோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட பாத்திமா நஸ்லீமா - இபுனு அப்பாஸ் தம்பதிகளின் மூத்த புதல்வன். எனக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள்.
மூத்த சகோதரன் குவைத் நாட்டில் அரச பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார். மூத்த சகோதரி கலைப் பிரிவில் பட்டப் படிப்பை தற்போது ஆரம்பித்துள்ளார். ஏனைய இருவரும் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். நான் தற்போது இங்கிலாந்தின் வணிக பகுப்பாய்வு முதுமாணிப் பட்டத்தை (Msc. in Business Analystics) கொழும்பில் உள்ள வை கல்வி நிறுவனத்தில் தொடர்ந்து வருகின்றேன்.
02. உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?நான்கு பாடசாலைகளில் கற்ற அழகான அனுபவம் எனக்கு இருக்கின்றது. தரம் 01 முதல் தரம் 06 வரை எமது ஊரிலேயே உள்ள நீர்/ அல் பலாஹ் மகா வித்தியாலயத்திலும், தரம் 07 முதல் தரம் 09 வரை மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியிலும், தரம் 10 முதல் - தரம் 11 க.பொ.த சாதாரண தர பரீட்சை வரை நீர்/ விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியிலும், இறுதியாக, உயர்தரத்தை நீர்/ அல் ஹிலால் மத்திய கல்லூரியிலும் கற்றேன். பாடசாலைக் காலத்தில் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி, மீலாத்தின போட்டி, விளையாட்டுப் போட்டி என பல போட்டிகளில் பங்கு பற்றியிருக்கிறேன். வகுப்புத் தலைவராக (ClassMonitor) ஊடகத் துறைத் தலைவராக (Media President), மாணவத் தலைவராக (Prefect) பதவிகள் வகித்திருக்கின்றேன். நான்கு வித்தியாசமான சூழலில், வித்தியாசமான நூற்றுக்கணக்கான நண்பர்களுடன் பழகிய அனுபவம் இன்றும் எனது தொழில் வாழ்க்கைக்குப் பல வழிகளில் உதவுகின்றது. நான்கு பாடசாலைகளினது பழைய மாணவராக இருக்கின்ற அங்கீகாரமும் கிடைப்பதற்கரியதே.
03. தேசிய ஊடக மத்திய நிலையத்தில் கடமையாற்றுவது குறித்து..?
2016 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, அண்மையில் மேதகு ஜனாதிபதி அவர்களால் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய ஊடக மத்திய நிலையத்தில் தகவல் உத்தியோகத்தராகக் கடமையாற்றுவது, ஒரு த்ரில்லான அனுபவம். ஊடகத் துறையில் அனுபவம் இருந்த நிலையில் இங்கு பணியாற்றுவது மிகவும் இலகுவாகவும், சுமூகமாகவும் இருக்கின்றது. என் சக அலுவலக நண்பர்கள் பட்டதாரிகளாகவும், ஊடகத் துறையில் (தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, இதர) அனுபவமும், முதிர்ச்சியும் உள்ளவர்களாக இருப்பது தேடல் சார்ந்த விடயங்களில் என்னைத் தொடர்ந்தும் உத்வேகப்படுத்தும் ஒரு சக்தியாகவும் இருக்கின்றது.
04. இந்நிலையத்தினூடாக நீங்கள் மேற்கொள்ளும் பணி?
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் சார்ந்த விடயங்கள், ஊடக ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ளவே 2016 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக தேசிய ஊடக மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது. உலகின் அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான், இந்தியா, மேற்கு நாடுகள், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட அரபு நாடுகள் பலவற்றிலும் இந்நிலையம் காணப்படுவதாக இந்நிலையத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர மாக்கார் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம் ஆகிய மூன்று தூண்களை இணைத்து, சுயாதீனமாக இந்நிலையம் தொழிற்பட்டு வந்தது. அண்மைய அரசியல் நெருக்கடியின் பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களத்தையும், பிரதமர் அலுவலகத்துடன் இணைத்திருந்த தேசிய ஊடக மத்திய நிலையத்தையும், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்கள் தனது கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பட்டியலிட்டுள்ளார். இதன் பிரகாரம் தற்போது ஜனாதிபதிக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
05. எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?
2012 ஆம் ஆண்டு உயர்தரப் பரிட்சை முடிந்ததும் கொழும்பிலுள்ள அக்வைனாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிநுட்ப பட்டப் படிப்பை (I.T Degree) ஆரம்பித்தேன். ஏக காலத்தில் மீள்பார்வை பத்திரிகை அலுவலகத்தில் பகுதிநேர சந்தாதாரராக இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாட்கள் நகர்ந்தன. சமூக வலைதளங்களில் எனக்கிருந்த ஆக்க ரீதியான ஈடுபாட்டைக் கண்டு பிரதம ஆசிரியர் பியாஸ் முகம்மத் அவர்கள் மீள்பார்வை இணையத்தள ஆசிரியராக என்னை நியமித்தார். அதன் சமூக ஊடகப் பக்கங்களையும், வீடியோ ஆவண செயற்பாடுகளையும் மகிழ்வுடன் பொறுப்பேற்று நடாத்தக் கோரினார். இதுவே எனது எழுத்துத் துறைப் பிரவேசம் எனலாம். இணையத்தள கட்டுரையாளராக, வீடியோ ஆவணச் செய்தியாளராக, பத்தி எழுத்தாளராக முன்னேறி மீள்பார்வை பத்திரிகை ஆசிரியர் குழுமத்திலும் இடம்பிடித்தேன். அல்ஹம்துலில்லாஹ். எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட காரண கர்த்தா எனும்போது, எனக்கு சமூக உணர்வை ஊட்டிய தந்தையையும், அடிப்படை அறிவைப் போதித்த தாயையும், எனக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களையும், குறிப்பாக எழுதுவதற்கு வாய்ப்பை வழங்கிய பியாஸ் முஹம்மத் அவர்களையுமே குறிப்பிட வேண்டும்.
06. உங்களது முதலாவது படைப்பு எதில், எப்போது வெளிவந்தது?
எனது முதலாவது படைப்பாக "தேசிய சாதனை மடல்" என்ற நூல் கடந்த ஆண்டு (2018) இல் Focus Media (Pvt) Ltd நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மீள்பார்வை பத்திரிகையில் நான் தொடராக எழுதிவந்த முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேசிய ரீதியில், சர்வதேச ரீதியில் அரிய சாதனையை மேற்கொண்டவர்களின் நேர்காணல் பத்திகளின் தொகுப்பாகவே அது வெளிவந்தது. அதில் 30 நபர்கள் கௌரவிக்கப்பட்டனர். நான் தொடர்ந்து எழுதிவரும் பத்திகளை பிரதி வருடமும் நூலாக வெளியிட மீள்பார்வை பத்திரிகை நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. இதன்படி இரண்டாவது நூலுக்கான மூன்றில் ஒரு பகுதி நேர்காணல்களை இதுவரை நிறைவு செய்துள்ளேன்.
07. எத்தனை ஆண்டுகளாக எழுதி வருகின்றீர்கள்?
2012 ஆம் ஆண்டளவில் சுய ஆர்வ உந்துதலால் எழுத ஆரம்பித்தேன். அதுவும் சமூக வலைதளங்களில். பல முகநூல் பக்கங்களின் Admin ஆக செயற்பட்ட அக்காலப் பகுதியில் நிறையவே எழுதினேன். குறிப்பாக இந்தியாவை மையமாகக் கொண்டு நான் தொடங்கிய சமூக நல முகநூல் பக்கமொன்று இலட்சக் கணக்கான விருப்பங்களையும், பாரிய வரவேற்பையும் பெற்றதே என்னைத் தொடர்ந்தும் எழுத ஊக்கப்படுத்தியது. இதன்பின்னர் இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளின் போதுதான் ஊடகவியல் குறித்தான ஆர்வம் என்னைத் தொற்றியது.08. பத்திரிகைத் துறையில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது? அந்த அனுபவம் பற்றியும் கூறுங்கள்?
எந்தவொரு கட்டத்திலும் ஒரு ஊடகவியலாளராக, பத்திரிகையாளராக வருவேன் என்று நான் எண்ணியது கிடையாது. முன்னர் நான் குறிப்பிட்டது போன்று மீள்பார்வை பத்திரிகையே என்னை ஊடகத்துறைக்குள் ஈர்த்தது. அதையும் ஒரு தற்காலிக முடிவாகவே நான் எடுத்தேன். ஆனால், இறைவனின் நியதி, நான் என்னை அதற்காக அர்ப்பணிக்கும் நிலைக்கு ஆக்கியது.நான்கு சுவர்களால் அடைக்கப்பட்ட அறைக்குள் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதை மனதால் எண்ணிப் பார்த்து, அதனை வெறுக்க ஆரம்பித்ததே தொடர்ந்தும் என்னை ஊடகத் துறையில் முன்னேற்றியது எனலாம். புதிய உலகை இதனால் பார்க்கக் கிடைத்தது. நலிவடைந்தவர்கள், அநீதியிழைக்கப்பட்டவர்கள், குரலற்றவர்கள், பெரும் அரசியல்வாதிகள், அதிகாரமுள்ளோர், சாதனை செய்தோர் என சமூகத்தில் உள்ள சகல விதமான மக்களைச் சந்திக்கவும், அவர்களுடன் பழகவும், அவர்களது உணர்வுகளை புரியவும், அலசவும் இது ஒரு கிடைப்பதற்கரிய வாய்ப்பாகவே இருந்தது.
பெரும் பணம் செலவு செய்தும் கிடைக்க முடியாத நபர்களின் சந்திப்பைப் பத்திரிகைத்துறை சாத்தியப்படுத்தி இருக்கின்றது. பத்திரிகைப் பணிக்காக மேற்கொண்ட பயணங்களில் பலரது கண்ணீர் எனது வாழ்வை சீரமைக்க உதவியிருக்கின்றது. அவர்களது கண்ணீருக்குப் பின்னர் மனதார மேற்கொண்ட பிரார்த்தனைகளை எனது வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றகரமான, அதி உன்னத பொழுதுகளிலும் நன்றியுடன் எண்ணிப் பார்ப்பேன்.
பிரார்த்தனைகள் அதிசக்தி வாய்ந்தவை. அதிலும், அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள்வீராக, ஏனெனில் அவரின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் எத்தகைய திரையும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பத்திரிகைத்துறை சோறு போடாது என்பார்கள். ஆம், அது உண்மை. 05 வருடங்கள் மிகச் சொற்ப சம்பளத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அது ஒரு மன நிறைவானதும் சுவாரஷ்யமானதுமான தொழிலாகும்.
9. இலக்கிய வகைப்பாட்டுக்குள் நீங்கள் அதிகம் விரும்பும்துறை? ஏன்?
ஊடகப் பணியில் ஈடுபட ஆரம்பித்த பின்னரே இலக்கியத் துறையில் முன்னரைவிட அதிக நாட்டம் ஏற்பட்டது எனலாம். துரமான கவிதை, சிறுகதை, நாவல், பாடல், நூல் விமர்சனம் ஆகியவற்றின் மேல் என்றும் ஒரு தீராப் பசி இருக்கின்றது. மிகவும் விரும்பும் வகை என்று இதில் எதனையும் என்னால் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை. எமது ஊரில் நிறைய கவிஞர்கள் இருக்கின்றார்கள். பலபோது வட்சப் குழுமங்களில்கூட கவிச் சமர்களை மேற்கொள்வர். இதுவும் சுவாரஷ்யமாக இருக்கும். கவிதைகளை எழுத முயற்சிக்கவும் தூண்டும். சிறுகதை, நாவல்களை வாசிப்பதில் முன்னர் கடும் ஆர்வம் இருந்தது. ஆனால் தற்போது அது குறைவு.
10. நீங்கள் வெளியிட்ட "தேசிய சாதனை மடல்" குறித்து..?
இலக்குகளை வகுத்துக் கொண்டு செயல்படுபவர்கள் தங்கள் காலடிச் சுவடுகளை எவருமே பயணித்திராத ஒரு இடத்தில் பதித்து புதிய பாதைகளை உருவாக்குகிறார்கள். அப்படி தமக்கான பாதையில் உச்சம் தொட்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேசிய, சர்வதேச ரீதியில் சாதனை புரிந்துவிட்டு தனது அடுத்த சாதனைக்கு முயற்சித்துவரும், வாழும் சில உதாரணங்களையே ஷஷதேசிய சாதனை மடல்|| தாங்கி வந்தது. இலங்கையில் சிறுபான்மை சமூகமொன்றாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேசத்துக்கு பெருமை சேர்க்கும் சாதனையாளர்களை, கௌரவிக்கும் ஒரு செயற்பாடாகவும், ஆவணமாக்கும் ஒரு முயற்சியாகவும் இதனை குறிப்பிடலாம். இதில் கண்டு பிடிப்பாளர்கள், விளையாட்டுத் துறை உள்ளிட்ட பலதேசிய, சர்வதேச அரிய சாதனை நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். மீள்பார்வைப் பத்திரிகைக்கு தொடராக நான் எழுதிவரும் இப்பத்திகளை ஒவ்வொரு வருடமும் தொகுத்து வெளியிட Focus Media நிறுவனம் முன்வந்தமைக்கு எனது நன்றிகள்.
11. அடுத்து எவ்வகையான நூல்களை வெளியிட உத்தேசம்?
"தேசிய சாதனை மடல்" நூல் எனக்கு ஏற்படுத்தித் தந்த அங்கீகாரத்தையும், சந்தோசத்தையும் சொற்களால் வர்ணிக்க முடியாது. பத்திரிகைக்கு எழுதும்போது கிடைத்த வரவேற்பைவிட நூலாக வெளிவரும்போது கிடைத்த வரவேற்பு அலாதியானது. நூல் வெளியீட்டு நிகழ்வை முழு ஊருமே கொண்டாடித் தீர்த்தது. அரங்கம் நிறைந்தமை, வெளியீட்டாளர்களையும், ஏற்பாட்டாளர்களையும் (பலகத்துறை கலை இலக்கிய வட்டம்), விசேடமாக பங்களித்த SMFC குழுமத்தையும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அடுத்த நூல், அதே வரவேற்புடன் அல்லது அதைவிட அதிகமாக சமூகம் எதிர்பார்க்கும் விதமாக அமைய, தரமாக பத்திகளை எழுத கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொருவருடமும் புதிய பல முகங்களை சமூகத்துக்கு ஆவணப்படுத்திக் கொடுக்க வெளியீட்டாளர்களதும், சமூகத்தினதும் பங்களிப்பு தொடர்ந்து அவசியம். வேறு நூல்களை வெளியிட தற்போதைக்கு எவ்வித உத்தேசமுமில்லை.
12. ஏனைய எழுத்தாளர்களுடனான உறவு எப்படியுள்ளது?
இறைவன் அருளால் பல நாடுகளைச் சேர்ந்த பல வகையான எழுத்தாளர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றேன். அவர்களுடைய பதிவுகளை வாசிக்கின்றேன். அவர்களும் என்னை பல வழிகளில் ஊக்கப்படுத்துகின்றார்கள். நூல் வெளியீடுகள், விழாக்களின்போது பல புதிய எழுத்தாளர்களுடன் அறிமுகம் ஏற்படுகின்றது. உயிரோட்டமிக்க எழுத்துக்கள் வேண்டுமாயின், அதிகமதிகம் வாசிக்க வேண்டும். தொழிநுட்ப முன்னேற்றத்தின் பயனாக இன்று அவர்களது ஆக்கங்களை உடனுக்குடன் வாசிக்கவும், கருத்துக்கள்ளைப் பகிரவும் சந்தர்ப்பம் அதிகமாகி இருக்கின்றது.
13. உங்கள் படைப்புகளுக்கு ஊடகங்கள் எவ்வகையில் உதவுகின்றன?
சமூக வலைதளங்கள் சிறந்த எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் ஒரு சிறந்த ஊடகம். நிறைய எழுதவும், மீள் வாசிக்கவும் எனக்கு உதவுகின்றது. கடந்த 05 ஆண்டுகளில் நிறைய ஊடகத்துறை நண்பர்களைப் பெற்றிருக்கின்றேன். அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களில் எனது ஆக்கங்களுக்கு நிறையவே இடம் தந்திருக்கின்றார்கள். இணையத்தள நிர்வாகிகளாக இருக்கும் நண்பர்களும் சிறந்த ஆதரவைத் தொடராக தருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.
14. யாருடைய எழுத்துக்களை அதிகம் வாசிக்கின்றீர்கள்?
பாரபட்சமின்றி இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்களை அதிகம் வாசிக்கின்றேன். ஒவ்வொரு எழுத்தாளர்களும் கையாளும் விஷேட உத்திகளை இதன் மூலம் ரசித்து உள்வாங்க முடிகின்றது.
எழுதுவதற்கான எரிபொருளாக பல்வகை எழுத்தாளர்களின் ஷஷவித்தியாசமான மொழிநடைகள்|| உதவுகின்றன. முகநூலிலும் நிறைய எழுத்தாளர்கள் உருப்பெற்றிருக்கின்றார்கள். ஏக காலத்தில் பேசு பொருளாக உள்ள வசனங்களை சுவாரஷ்யத்துக்காக இவர்கள் உள்நுழைத்து எழுதுகின்றமை வாசகர்களைக் கவர்ந்து வருகின்றன. தவிரவும் ஒரு விடயத்தை புள்ளியுடனான கவனக் குவிப்பு (குறிப்பாக ட்விட்டர்) எழுத்துக்களும் பாரிய அடைவுகளுக்கு வழியமைக்கின்றன.
15. எழுத்துக்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
புகழனைத்தும் இறைவனுக்கே! நிறையவே பாராட்டுக்களை எனது எழுத்துக்கள் பெற்றிருக்கின்றன. முதல் அங்கீகாரம் சமூக வலைத்தளங்கள். பின்னர் பத்திரிகை. இறுதியாக "தேசிய சாதனை மடல்" நூல். இவைதவிர மேலும் பல பரிசுகளும் கிடைத்திருக்கின்றன.
நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்





No comments:
Post a Comment