திக்குவல்லை கமால் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
அறிமுகம்: தென்னிலங்கையைச் சேர்ந்த திக்குவல்லை கமால், நீண்டகாலமாக எழுதி வருபவர். ஆரம்ப காலம் முதலே மாற்றுச் சிந்தனை கொண்டவராக இயங்கி வருகிறார். ஆசிரியராக ஆரம்பித்து பிரதிக் கல்விப் பணிப்பாளர் வரை உயர்ந்து, தற்போது ஓய்வு நிலையில் உள்ளார். புனைகதை, கவிதை, ஒலி நாடகம், மொழிபெயர்ப்பு என்று கணிசமான ஆக்கங்களையும் 50 க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளிக் கொணர்ந்துள்ளார். சாதனை விருதுகளையும் இலக்கியக் கௌரவங்களையும் நிறையவே பெற்று வருபவர். மொழி வேலி கடந்து இலக்கிய சஞ்சாரம் செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இலக்கியம் இரத்தத்தில் இருக்க வேண்டுமென்று சொல்வார்கள். பிறப்புரிமையாய் இலக்கிய உணர்வு வந்து வாய்க்க வேண்டுமென்பதே இதன் அர்த்தம். அப்படி இருக்கும் பட்சத்தில்தான் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படும். இவ்வாறாகவே எனக்கும் எழுத்துத் துறையில் ஆர்வம் மேலிட்டிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் எழுத்தாளர் ஆனவர்களையும் ஆக்கப்பட்டவர்களையும் நாம் காண்கிறோம். இவர்கள் அடித்தளமில்லாத கட்டிடம் போல் காலப்போக்கில் சரிந்து காணாமல் போய்விடுகிறார்கள்.
உங்கள் முதலாவது படைப்பு எவ்வாறு, எப்போது உருப்பெற்றது? அதனை வெளியீடு செய்வதில் எவ்வகையான சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?எனது முதலாவது படைப்பு ஒரு சிறுகதை. 'தண்டனை' என்ற இக்கதை 1968 இல் 'ராதா' பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது நான் மேல் வகுப்பு மாணவனாக இருந்தேன். அக்கதையை வெளியீடு செய்வதில் நான் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை. ஒரு பத்திரிகைக்கு எவ்வாறு ஒரு ஆக்கத்தை அனுப்புவதென்பதை நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஏ.இக்பால், இ. சந்திரசேகரன் போன்ற இலக்கியவாதிகள் எனது ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் எல்லா வகையிலும் என்னை நெறிப்படுத்தினர்.
ஒரு படைப்பாளன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
என்னைப் போன்ற, கிராமத்துக்காரனான ஒரு சாதாரண இலங்கைப் படைப்பாளி எப்படி இருக்க வேண்டுமென்பதே எனது பதிலாக இருக்கும். இலக்கியத்தினூடாக சமூக விமர்சனம் செய்யும் படைப்பாளி, அந்த சமூகத்தில் மோசமாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர், பணிப்பாளர், செயலாளர்கள், டாக்டர்கள், சட்டத்தரணிகள், இப்படியெல்லாம் பலதரப்பட்ட படைப்பாளிகள் இருக்கின்றனர். உத்தியோகம் வேறு இலக்கியம் வேறு என்று சொல்ல முடியாது. கடந்த காலங்களில் மோசமான விமர்சனத்துக்குள்ளான படைப்பாளிகளைப் பற்றி நாமறிவோம். தனிப்பட்ட நடத்தைகள், குடும்ப வாழ்வு, கொடுக்கல் வாங்கல், சக மனிதருடனான ஊடாட்டம் இப்படி எல்லா வகையிலும் ஒரு படைப்பாளி முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
படைப்பு வேறு, படைப்பாளி வேறு, யார் என்பது முக்கியமல்ல, என்ன சொல்லப்படுகிறதென்பதே முக்கியம் என்றெல்லாம் தத்துவார்த்தம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படிச் சொல்லித் தப்பிக் கொள்ள சமகாலச் சமூகம் இடம்தரப் போவதுமில்லை.
எவ்வாறான படைப்புக்களை வெளியிடுகிறீர்கள்?
எனது சுய ஆக்கங்களை அதிகமாக வெளியிட வேண்டுமென்றே விரும்புகிறேன். அதற்கு நிறையப் பணம் தேவை அல்லது வெளியீட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும். இரண்டுமே சாத்தியமில்லை. தனிநபர்களிடம் கையேந்தி, வெளியீட்டு விழா நடாத்தி பணம் சேகரிப்பது போன்ற 'புத்தி| எனக்கில்லை. சகோதர மொழிகளுக்கிடையிலான இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள் காலத்தின் தேவை. இதனை விளங்கிக் கொண்ட பெரும்பான்மைச் சமூகத்து சில வெளியீட்டு நிறுவனங்கள் அதற்கு முன்வந்துள்ளன.
இனநல்லுறவை மேம்படுத்தும், உள்ளடக்கம் கொண்ட படைப்புக்களைத் தெரிவு செய்து, அதைச் சிறப்பாக இலக்கு மொழிக்கு கொண்டுவரும் ஆற்றல் உள்ளவர்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வாய்ப்பு எனக்கும் கிட்டியுள்ளது.
பதிப்பகங்களினூடாக புத்தகங்களை வெளியிடும் போது புத்தகத்தின் விலையைத் தீர்மானிப்பதில் குறிப்பிட்ட பதிப்பகமே தீர்வை எடுத்துக் கொள்கிறது. எழுத்தாளனின் தீர்மானத்துக்கு இங்கு இடமில்லையே ஏன்?
தனிப்பட்ட முறையில் நூல் வெளியிடும் போது நூலாசிரியர் தாம் விரும்பியபடி விலை போட்டுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. பதிப்பகங்கள் பொறுப்பெடுத்து வெளியிடும் போது நிலைமை வேறு. பதிப்பித்தல், விநியோகம், விற்பனை போன்ற சகல விடயங்களையும் அவர்களே மேற்கொள்கின்றனர். அது மட்டுமன்றி நூலின் விலை, பிரதிகளின் எண்ணிக்கைக்குமேற்ப ஆசிரியர் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. அதனால் விலை நிர்ணயித்தலில் ஆசிரியர் தலையிட முடியாது. பதிப்பகங்களில் விலையை தீர்மானிப்பதற்கென்று தனியான அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வானொலி நாடகங்களுக்கு கூடுதலான பங்களிப்பு செய்துள்ள தாங்கள் அதுபற்றிக் கொஞ்சம் சொல்வீர்களா?
1970-80 களில் வானொலி நாடகம் கொடி கட்டிப் பறந்த காலம். முஸ்லிம் சேவை நாடகங்கள் முஸ்லிம் அல்லாதவர் மத்தியிலும் தமிழ் நாட்டிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தொண்ணூறுகளிலிருந்து தொலைக்காட்சியின் வரவால் மாத்திரமன்றி உள்நிலைக் காரணங்களாலும் வீழ்ச்சி கண்டதென்றே சொல்ல வேண்டும். இன்றும் நேயர்கள் மத்தியில் அதற்கான வரவேற்புண்டு. புகையில் கருகிய பூ (2001), நிராசை (2005) ஆகிய எனது இரண்டு நாடகப் பிரதித் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
நிறைய ஒளிபரப்பான நாடகப் பிரதிகள் கைவசமுண்டு. 'மண்ணில் விழுந்த நிலவு' என்ற தொடர் நாடகம் ஒலிபரப்பாகியது. அப்பொழுது வானொலி நாடகப் பிரதிக்கும் நடிகர்களுக்கும் சன்மானம் கொடுத்தார்கள். இன்று நிலைமை அவ்வாறில்லை. ஏனைய நிகழ்ச்சிகளின் நிலையும் அதுதான். பெயருக்காகவோ, புகழுக்காகவோ, நல்லெண்ணத்துடனோ விரும்பியவர்கள் வந்து இலவசமாக செய்துவிட்டுப் போகலாமென்ற நிலை. சமூகத்துக்கு நல்ல செய்திகளைச் சொல்வதற்கு ஒலி நாடகம் நல்லதொரு ஊடகம். அந்த வாய்ப்பு அற்றுப்போனது கவலைதான்.
மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, பின் நவீனத்துவக் கவிதை பற்றிய உங்களது பார்வை என்ன?
காலத்தின் தேவையை ஒட்டிக் கவிதை தனக்கான பெயர்களைப் புனைந்து கொள்கிறது. எனது கவிதை வாசிப்பில் நான் கவிதைகளை மூன்று விதமாகப் பார்க்கிறேன். அவை விளங்கும் கவிதை, விளங்கியும் விளங்காததுமான கவிதை, விளங்காத கவிதை. ஒரு கவிதை விளங்குகிறது என்பதற்காக அது நல்ல கவிதை என்ற அர்த்தமல்ல. புதுக்கவிதை தமிழில் அறிமுகமான போது அதன் உள்ளடக்கம் உள் மன ஓலங்கள், விரக்தி, விரசம் கொண்டதாகவுமே இருந்தது.
புதுக்கவிதையின் உருவத்தை வரவேற்ற பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் வானமாமலை போன்றவர்கள் மானுட உள்ளடக்கம் கொண்டதாகக் கவிதைகள் அமைய வேண்டுமென வலியுறுத்தினர். ஷவானம்பாடி'கள் மானுடம் பாடத் தொடங்கினர். மீரா, கங்கைகொண்டான், தமிழன்பன், அரங்கநாதன், அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஞானக்கூத்தன், இன்குலாப் இப்படியொரு பட்டாளமே வெளிப்பட்டது. 'உங்கள் கவிதை விளங்குதில்லையே' என்று சொன்னால் அதை கௌரவமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்.
'கவிதை எல்லோருக்கும் விளங்கவேண்டுமென்ற அவசியமில்லையே' என்பாரும் உளர். பல்லாயிரம் கவிதைகள் எழுதப்படுகின்றன. எல்லாம் நின்று நிலைக்கவா போகின்றன. இப்படியான சந்தர்ப்பங்களில் எனக்கு சில்லையூர் செல்வராசனை ஞாபகம் வரும். அவர் சொல்வார் இப்படி.. 'வல்லன வாழும்'.இலக்கியத்தின் சகல துறைகளிலும் பங்களிப்பை நல்கியுள்ள நீங்கள் எப்பேர்ப்பட்டவைகளை எழுத முடியவில்லையே என ஆதங்கப்படுகிறீர்கள்?
ஒரு படைப்பை வெளிக்கொணர முனையும் போது அதற்குப் பொருத்தமான கலை உருவத்தை தெரிவு செய்கிறோம். அந்தக் கலை உருவத்துக்கான வெளியீட்டு வாய்ப்பு இருக்கின்றதா என்றும் பார்த்துக் கொள்கிறோம். வெளியீட்டு வாய்ப்பில்லாத போது எழுதிப் பயனில்லை. அதனால் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதுபோக, இன்று இன-மத முறுகல்கள் மலிந்து காணப்படுகின்றன. எழுத வேண்டிய விடயங்கள் ஏராளம். பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதன் காரணமாக எழுத வேண்டிய பல சமூகப் பிரச்சினைகளை எழுத முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்குண்டு.
அளவுக்கதிகமாக பதிவிடப்படும் முகநூல் கவிதைகள் பற்றி யாது நினைக்கிறீர்கள்?
முகநூல் கவிதைகள் பிரசவ வேதனை இல்லாத பிரசவங்கள். இடைத்தடை இல்லாத வெளிப்பாடுகள். தாங்கள் கவிதைகள் என்று நினைத்து எதையோ எழுதுகிறார்கள். கவிதைகள் என்று நினைத்து 'லைக்கும், பின்னூட்டலும்' செய்கிறார்கள். மனதில் பட்டதை கொட்டித் தீர்ப்பதற்காக, மனப்பிரமைகளை வெளிப்படுத்துவதாக, தன்நிலை சார்ந்ததாகவே எழுதுகிறார்கள். புத்தகம் போடவும் துணிந்துவிடுகிறார்கள்.
முகநூலை ஒரு பழகுதனமாகக் கருதி, பின்னர் பத்திரிகை சஞ்சிகைகளிலும் எழுதி அதிலிருந்து தொகுப்பு முயற்சிகளுக்கு செல்லும் போது பக்குவமான கவிஞர்களாக வெளிப்படலாம். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் முகநூல் மூலமாகவும் சில நல்ல கவிஞர்கள் வெளிப்பட்டுமிருக்கிறார்கள்.
சமகால இலக்கியத்தின் இன்றைய தேவை என்ன?
ஒரு தேசத்தின் புத்திரர்களாய் கைகோர்த்து வாழ வேண்டிய நாம் வேறுபட்டுக் கூறுபட்டுப் போயிருக்கிறோம். அரசியல் தேவைக்காக இனவாதம் எல்லாப் பக்கமும் எல்லா வகையிலும் பரப்புரை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எல்லோரும் எல்லாமும் பெற்று வாழவும், பன்முகப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளச் செய்யவும், மனித நேயத்தைவிட மகத்தானது வேறொன்றில்லை என்பதை உணர்த்தவும் மிகப் பெரும் பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதில் இலக்கியத்தின் பங்கு மிக முக்கியமானது. இதுதான் இன்றைய தேவையும் கூட.புலம்பெயர் இலக்கியங்கள் குறித்து உங்கள் கணிப்பு யாது?
யுத்தம், சுதந்திரமாக வாழ்தல், பொருளீட்டல் இப்படிப் பல நோக்கங்களோடு இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்கின்றனர். இவர்களுள் இலக்கியவாதிகளும் அடங்குவர். யுத்த சூழலுக்கு முகம் கொடுத்தவர்கள் தமது அனுபவங்களை இலக்கியமாக்கி வருகின்றனர். எந்தத் துப்பாக்கிகளதும் பயமுறுத்தலற்ற சுதந்திரப் படைப்புக்களாக அவை வெளிப்படுகின்றன. அவர்கள் எல்லோருமே ஏக பார்வையும் நோக்கும் கொண்டவர்களென்று சொல்வதற்கில்லை.
இதற்கு அப்பால், பெயருக்காக ஏதாவது எழுதினால்தான் கௌரவம் என்பதற்காக, இலங்கை வரும்போது கையில் ஒரு புத்தகத்தோடு வந்து ஒரு 'சோ'| காட்டிவிட வேண்டும் என்பதற்காகவெல்லாம் புத்தகம் எழுதப்படுகின்றன. பொதுவாக யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து, யுத்த அவலங்களையும் அனுபவங்களையும் எழுதுவதே 'புலம்பெயர் இலக்கியமாக' கருதப்படுகின்றன. இத்தகைய நிறைய ஆக்க இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் முப்பது வருட கால யுத்தப் பதிவுகளாகவும் அதேவேளை இலக்கியப் பெறுமானம் கொண்டதுமான கணிசமான பிரதிகள் கிடைக்கப் பெற்றுமுள்ளன.
இக்காலத்தில் வாசகர்களை விட கவிஞர்கள் அதிகமாகிவிட்டார்களா?
அப்படிச் சொல்லத் தோன்றுகிறதுதான்தான். கவிதை அமைப்பில், மிகக் குறைந்த சொற்களில் எவராலும், எழுதிவிடக் கூடிய வசதி இருப்பதால் எல்லோருமே கவிஞர்களாகிவிடலாம். இடைத்தடங்கலற்ற எழுது களங்கள் இப்பொழுதெல்லாம் தாராளமாக இருப்பது இன்னொரு வசதி. ஒரு நல்ல வாசகனால்தான் ஒரு நல்ல இலக்கியவாதியாகலாம் என்பார்கள். இன்று அப்படியில்லை. பேராசிரியர் கா. சிவத்தம்பி 'கவிஞர்கள் தோன்றிய அளவுக்கு கவிதைகள் தோன்றவில்லை' என்பார். அது எவ்வளவு உண்மை.
ஈழத்து இலக்கியத் துறைக்கு நீண்ட காலமாக காத்திரமான பங்களிப்பை நல்கிவிரும் உங்களின் தற்போதைய எழுத்து முயற்சிகள் என்ன?
புதிதாகவோ பெரிதாகவோ ஒன்றுமில்லை. இதேபோக்கில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதுதான் சாத்தியம். எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான நேரம், ஆரோக்கியம் கருதி வரவரக் குறைந்து செல்வது தவிர்க்க முடியாததே. எழுதிய பல விடயங்களைத் தொகுத்து நூலாக்க வேண்டுமென்று விரும்பினாலும் அதற்கான வசதி வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொதுவான கவலைதான்.
'ஓர் எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் எவ்வளவு புத்தகங்கள் போட முடியுமோ அவ்வளவு புத்தகங்களைப் போட்டுவிட வேண்டும். அவனுக்குப் பிறகு அதை யாரும் செய்யமாட்டார்கள்' என்று எஸ்.எச்.எம். ஜெமீல் அடிக்கடி சொல்வார். அந்தப் பொன்னான வார்த்தைகள் அடிக்கடி மனதில் வந்து மோதிக் கொண்டே இருக்கிறது.
மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றி?
ஆண்டுதோறும் நமது நாட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், மொழிபெயர்ப்பு நாவல்களே அதிகம் விற்பனையாவதாகப் பதிவாகி வருகிறது. சர்வதேச மொழிகளிலிருந்து படைப்பிலக்கிய மொழிபெயர்ப்பு முயற்சிகள் இங்கு மிகச் சொற்பமாகவே நடைபெற்று வருகிறது. நீங்கள் தமிழ் - சிங்கள் மொழிபெயர்ப்பு சம்பந்தமாகக் கேட்பது புரிகின்றது. கடந்த பத்தாண்டுகளாக நடைபெறும் இத்தகைய முயற்சிகளை ஒரு தேசியத் தேவையின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும்.
நீண்டகாலமாக நாட்டில் நிலவிய விரும்பத் தகாத மோதல்கள் இனிமேலும் தொடரக் கூடாது. அதற்காக இலக்கியத்தை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டுமென பல்லினப் படைப்பாளர்கள் கூடிக் கலந்துரையாடினர். அதன் ஒரு அம்சமாகவே சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு சில வெளியீட்டு நிறுவனங்கள் இதற்குக் கைகொடுத்தன. அது இன்றுவரை தொடர்கிறது. எதிர்பார்த்தது போல் அரச மட்டத்தில் இதற்கான ஒத்துழைப்புக் கிட்டவில்லை. எல்லாப் படைப்பாளிகளுமே தங்களது நூல்கள், படைப்புக்கள் மொழிபெயர்ப்பாக வெளிவரவேண்டுமென விரும்புகின்றனர். அந்த ஆர்வம் பல கோளாறுகளை ஏற்படுத்தி வருகிறது. நல்ல படைப்புக்கள் இலக்கு மொழிக்கு செல்வதிலும் சிக்கல்கள் உண்டு.
தற்பொழுது கிடைக்கும் அங்கீகாரங்கள் பற்றிக் கூற முடியுமா?
படைப்பாளிகளுக்கு அவ்வப்போது அங்கீகாரங்கள் கிடைக்கும்போதுதான், அவர்கள் மேலும் ஊக்கமடைவர். இதை தேவையில்லாத ஒன்றென ஒதுக்கிவிட முடியாது. எனக்கும் நூல் விருது, இலக்கிய கௌரவங்கள், பட்டங்கள் என்று கிடைத்து வருகின்றன.
கொடுக்கும் நிறுவனங்களுக்கும் தகுதி வேண்டும். எடுக்கும் கைகளுக்கும் தகுதி வேண்டும். இவை இரண்டும் சரியாக அமையாத பட்சத்தில் அங்கீகாரம் அர்த்தமற்றுப் போகும்.
தனிப்பட்ட இலக்கிய நிறுவனங்கள், தாம் விரும்பியவர்களுக்கு விருது வழங்குவதில் தவறில்லை. அதைப் பொதுமைப்படுத்த முயற்சிக்கும் போதே பிரச்சினை ஏற்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தெளிவான விதிமுறைகளும் சரியான ஒழுக்கங்களும் தேவை. அங்கீகாரத்துக்காக அலைபவர்களை நாங்கள் பார்க்கிறோம். அதேவேளை அங்கீகாரத்தை எந்த வகையிலும் விரும்பாதவர்களையும் காண்கிறோம்.
இளவயது எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அனுபவ மொழிகள் யாவை?
பயிலுநர் எழுத்தாளராக இருந்த காலத்தில் கையெழுத்து சஞ்சிகைகள் நடாத்தினோம். பாடசாலையிலும் வெளியிலும் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து குழுவாகச் செயற்பட்டோம். ஊர் மட்டத்தில் எமக்கு முன் எழுதியவர்களுடன் சம்பந்தப்பட்டு வழிகாட்டல் பெற்றோம். இலக்கிய ஈடுபாடு கொண்ட ஆசிரியர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டோம். புத்தகம் வாசிப்பவர்களை நாடிச் சென்று அவர்களிடம் இரவலாகப் பெற்று வாசித்தோம். எமக்குக் கிடைக்கும் புத்தகம் சஞ்சிகைகளை சக நண்பர்களோடு பரிமாறிக் கொண்டோம். பத்திரிகை – சஞ்சிகைகளில் வெளிவரும் எமது ஆக்கங்களைப் பற்றி, அவ்வப்போது கூடிக் கருத்துப் பரிமாற்றம் செய்தோம். சமகால வெளியூர் நண்பர்களோடு கடிதத் தொடர்பு கொண்டோம். மூத்த எழுத்தாளர்களின் முகவரிகளைப் பெற்று எமது ஆக்கங்களை அனுப்பி திருத்தங்களையும் அபிப்பிராயங்களையும் பெற்றோம். அவ்வப்போது நடைபெறும் இலக்கியப் பிரதிப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கு கொண்டோம்.
இப்படி இன்னும் சொல்லலாம். இலக்கியச் செயற்பாடுகளுக்குள் நுழைய நுழையத்தான் எங்களுக்குத் தெரிந்தது மிகச் சொற்பமென்பதை உணர்ந்தோம். வரும் காலத்தில் பெயர் பெற வேண்டுமென்ற வேட்கையுடன் வளர்ந்தோம். இன்று வசதி வாய்ப்புக்கள் அதிகம். மேற்சொன்னவற்றில் சிலவற்றையாவது மேற்கொள்ள இளம் எழுத்தாளர்களின் மனம் இடம் கொடுக்குமாயின் அவர்களும் முன்னேற வாய்ப்புண்டு.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்









No comments:
Post a Comment