Sunday, September 14, 2025

51. தேசிய கலைஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜாவுடனான நேர்காணல்

தேசிய கலைஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜாவுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

 

உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

நான் 'காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா' என்ற பெயரில் எழுதி வரும் ஓர் எழுத்தாளர். ஊவா மாகாணத்தில் நமுனுகுல அடிவாரத்தில் அமைந்துள்ள கோணக்கலை பசறை காவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான், குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. எனது தகப்பனார் காலஞ்சென்ற வேலு பழனியாண்டி, தாயார் கருப்பையா தங்கம்மா ஆவார். எனது குடும்பத்தில் மனைவி, மகன், மகள் என நாம் இருவர், நமக்கு இருவராய் வாழ்ந்து வருகின்றோம். சமாதான நீதவானாகவும், தேசிய கலைஞராகவும் செயற்படுவதோடு இலக்கியத் துறையில் முழுமையான ஆர்வத்துடன் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றேன். ஓய்வு நேரங்களில் அதிகமான நேரத்தை இலக்கியத் துறைக்காகவே அர்ப்பணித்து, கல்விச்சாலைகளில் இலவசமாக கவிதைப் பட்டறைகளையும் நடாத்தி வருகின்றேன்.


உங்களது பாடசாலைக் காலம், தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை முதலாம் தரம் தொடக்கம் சாதாரணம் தரம் வரை (1985 - 1995) பதினொரு ஆண்டுகள் கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும், ஈராண்டுகள் உயர்தர கற்கையை (1996 - 1998) பதுளை பாரதி கல்லூரியிலும் பயின்றேன். 1998 ஆம் ஆண்டு முதல் நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்தில் இணைந்து கனவரெல்ல தொழிற்சாலையில் தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தருக்கான பயிற்சியைப் பெற்று தொடர்ந்து கோணக்கலை, கினளன் போன்ற தோட்டங்களில் பணிபுரிந்து பிறகு பலாங்கொட பெருந்தோட்ட நிறுவனத்தில் இணைந்து தெளிவத்தை தோட்டத்தில் எட்டு வருடங்களும் சுமார் மூன்றரை வருடங்களாக தற்போது ஸ்பிறிங்வெளி தோட்டத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றேன். அத்தோடு பல சவால்களுக்கு மத்தியில் எதற்கும் துணிந்தவனாக தொழிலையும் செய்துகொண்டு எழுத்து எனும் ஆயுதத்தால் எல்லோர் மனங்களையும் வென்று வெற்றிநடை போட்டு வருகின்றேன்.


உங்களிடம் வாசிப்புப் பழக்கம் எப்போதிருந்து ஆரம்பித்தது? கவிதைத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

வாசிப்பு பழக்கமானது பாடசாலைக் காலத்திலே ஆரம்பமானது. கல்லூரியில் நடைபெறுகின்ற  போட்டிகளான கவிதை கட்டுரை, சிறுகதை, வில்லுப்பாட்டு, வினாவிடை, அறிவிப்பு என எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிக்கனி சுவைக்க வாசிப்பு ஒரு உந்துசக்தியாக அமைந்தது. அத்தோடு பாடசாலையின் இலக்கிய மன்றத் தலைவராகவும், மாணவத் தலைவராகவும் செயற்பட்டதன் காரணத்தால் எல்லா விதமான பொது அறிவு விடயங்களையும் தேடிப் படிக்க வேண்டிய ஆர்வமும் கடப்பாடும் எனக்கிருந்தது. 


உயர் தரம் கலைப் பிரிவில் கற்றபோது திறந்த கவிதைப் போட்டியில் பங்கெடுத்து மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு சிலகாலம் தொழில் நிமித்தமாக கவிதை எழுத நேரம் கிடைக்காததால் காலங்கள் கடந்தோடின. ஒருநாள் எதேச்சையாக சூரியன் வானொலிக்கு அந்தநாள் ஞாபகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவிதை வாசித்தபோது உங்களுக்கு கவிநயமும், கவிதை எழுதுகின்ற ஆற்றலும் இருக்கிறது என்ற விடயத்தை வலியுறுத்திய முகுந்தன் சுந்தரலிங்கம் அவர்கள் எனது கவித் திறமையை வெளிக்கொணர்ந்தார்.

அன்று முதல் கவிதை எனும் அழகிய மலரின் நறுமணத்தை சுவாசிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து மடுல்சீமை சதாசிவம் அவர்கள், கவிஞர் நீலாபாலனின் 'கடலோரத் தென்னை மரம்' என்ற நூல் அறிமுக விழாவில் வாழ்த்துப்பா பாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். இதுவும் எனக்குள் இருந்த கவிதை எழுதுகின்ற ஆற்றலை மெருகேற்றிக்கொள்ள நல்லவொரு சந்தர்ப்பமாக அமைந்தது.


ஆரம்பத்தில் உங்களை ஈர்த்த படைப்புகள் எவையெவை? எழுத்தாளர்கள் யார், யார்?

மடுல்சீமை சதாசிவம் அவர்கள் எழுதி, ஆடித்திருவிழா கலை விழாவில் வாசித்த ஆன்மீகக் கவிதை, கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'அர்த்தமுள்ள இந்துமதம்', கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல', கவிஞர் மதன் சதாசிவம் வெளியிட்ட 'கவிஞன்' காலாண்டிதழ், மறைந்த கவிஞர் நீலாபாலன் எழுதிய 'கடலோரத் தென்னை மரம்', கவிஞர் நா. ஜெயபாலன் எழுதிய 'வெளிச்சம் காணாத விழிகள்', மூதூர் அருந்தமிழ் ஆசான் திரு. என். வஸ்தியான் நீக்கொலாஸ் அவர்கள் பாரதியாரைப் பற்றி எழுதிய 'நான் கண்ட பாரதி', காளமேகப்புலவர் எழுதிய சிலேடைக் கவிதைகள், கவிஞர் மலையரசன் கோவிந்தராஜன் எழுதிய 'மரபுத்தேன்' போன்றவை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


உங்களது கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

'டெங்குவை ஒழிப்போம்' என்ற தலைப்பில் என்னால் எழுதப்பட்ட கவிதை நல்ல வரவேற்பைப் பெற்றது. பட்டித்தொட்டியெல்லாம் பாடல்களைக் கேட்பது போல இந்த டெங்கு கவிதைக்கு அத்தனை வரவேற்பு. அத்தோடு ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் என்ற பெரு நூலிலும், உதய சூரியன் பத்திரிகையிலும், உயர்நாடு மற்றும் கவிஞன் காலாண்டிதழிலும், பிரசுரமாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு 'எனது ஊர்' என்ற தலைப்பில் எழுதிய கவிதையும் 'எரிந்தது நூலகமா இல்லை தாயகம்' என்ற தலைப்பில் எழுதிய கவிதையும் கவித்தேனி விருதைப் பெற்றுத் தந்தது. 'புதுக்கவிதை' என்ற தலைப்பிலான கவிதையும் இன்னும் பல கவிதைகளும் சிறியவர் முதியவர், பாமரர் பண்டிதர் என எல்லோரது மனதையும் ஈர்த்தது. தமிழகம், அவுஸ்த்திரேலியா, ஜேர்மனி, பிரான்சு, போன்ற நாட்டுப் படைப்பாளிகளின் ஆதரவுகளும், வாழ்த்துகளும், வரவேற்புகளும் என்று எனக்குக் கிடைத்தவை எண்ணிலடங்காதவையாகும்.


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துகள் உங்களை அதிகமாக கவர்;ந்ததாகக் கருதுகின்றீர்கள்?

ஆம். வாசிப்பதுண்டு. எப்போதுமே காளமேகப்புலவரின் சிலேடைக் கவிதைகளையே அதிகம் வாசிப்பது எனது வழக்கம். அத்தோடு கவிஞர்களான பாரதியார், மு. மேத்தா, கண்ணதாசன், வைரமுத்து, வாலி, யுகபாரதி, பிறைசூடன், அப்துல் ரகுமான், தாமரை, நா. முத்துக்குமார், சிநேகன் மற்றும் ஏனைய எல்லா நாட்டு முகநூல் கவிஞர்களது கவிதைகளையும் வாசிப்பேன்.


நீங்கள் வெளியிட்ட 'எண்ணங்களின் வண்ணங்கள்' கவிதை நூல் வெளியீடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற வள்ளுவனின் வாக்கினைப் போலவும், அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழியைப் போலவும் நான் கண்ட இலட்சியக் கனவு நிறைவேற பதினொரு ஆண்டுகள் தேவைப்பட்டன.

எனது அக்காவான கிருஷ்ண லீலாவின் பிறந்தநாளில் புத்தகத்தை வெளியீடு செய்ததில் அளவற்ற பேரானந்தம். எனது பரம்பரையில் பிறந்த முதல் கவிக் குழந்தையே 'எண்ணங்களின் வண்ணங்கள்' எனும் கவிதைத் தொகுதி. இப்பனுவலானது அன்னையின் அகங்குளிர தமிழ் ஆர்வலர்கள், கல்விமான்கள், கலையுறவுகள், அதிபர்கள், மாணவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வர்த்தக பிரமுகர்கள், நலன் விரும்பிகள், சான்றோர்கள் கூடிய பசறை நூலக கேட்போர் கூடத்தில் 2023.08.26 அன்று எனது மற்றும் தாயின் திருகரங்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அரவிந்தகுமார் ஐயா அவர்களும், விசேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், கௌரவ அதிதிகள், விசேட அதிதிகள், சமாதான நீதவான்கள், சகபாடிகள், பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் காவத்தையூர், மடுல்சீமையூர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்தோடு இந்நிகழ்வானது மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, அறிமுகவுரை, குழுநடனம், பாடல், பிரதம அதிதியுரை, சிறப்புரை, வாழ்த்துரை, நூலாசிரியருரை, நன்றியுரை என விழா மேடையை அலங்கரித்தன.


இந்தத் தலைப்பைச் சூட்டி, உங்கள் கவிதை நூலை அழகுபடுத்தக் காரணம் என்ன?

உண்மையிலே சூழலின் பிரதிபலிப்பே உண்மைக் கவிஞனின் படைப்பாகும். அதற்கமைய எந்தவொரு மனிதனதும் எண்ணத்திலே தோன்றுகின்ற இயற்கையியல் வாழ்வியலோடு கலந்த சந்தோச மற்றும் கவலை என பலதரப்பட்ட, தாக்கங்கள் உணர்வுகளால் மட்டுமே கவிதை எனும் அழகிய கரு உருவாகிறது. எனவே அதனை பிரதிபலிக்கும் முகமாகவே 'எண்ணங்களின் வண்ணங்கள்' எனும் அழகிய தலைப்பை இந்நூலுக்கு சூட்டிடக் காரணமாக அமைந்தது. எண்ணத்திலே தோன்றுகின்ற சிந்தனைகளே பல வடிவில் எழுத்துகளாக உயிர் பெற்று  கவிதைகளாக மலர்கின்றன.


இந்தக் கவிதை நூலில் பொதிந்துள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடலாமே?

பொதுவாக எல்லா விடயங்களும் சார்ந்த கருப்பொருட்கள் இந்நூலிலே வலம் வருகின்றன. இயற்கை, அன்பு, நட்பு, காதல், எழுச்சி, மலையக மாந்தரின் மனக்குமுறல், அன்னை, தந்தை பாசம், ஆசிரியர்கள் பணி, குடும்ப உறவுகளின் பாசம், பிறந்து வாழ்ந்த எனது ஊர், தொழிலாளர் நிலை, பூக்கள் தூது விடுதல், நிலவு, மனிதம், நாடு, மொழி, நிறம் மாறும் மனிதர்கள், உலக இயல்பு, மதம், ஆன்மீகம், மனித நேயம், உரிமைகோரல் என்று இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கிய வகையிலான கருப்பொருட்களைக் கொண்டே எனது 'எண்ணங்களின் வண்ணங்கள்' என்ற இந்தக் கன்னிக் கவிதை நூலில் உள்ள கவிதைகள் யாவும் அமைந்துள்ளன.



உங்களது அண்மைய வெளியீடான அருகம்புல்லில் பனித்துளிகள் என்ற ஹைக்கூ நூல் குறித்துக் கூறுங்கள்?

தமிழகத்தில் அச்சிடப்பட்ட எனது இரண்டாவது நூலான 'அருகம்புல்லில் பனித்துளிகள்' என்ற ஹைக்கூ நூல் சர்வதேச ஹைக்கூ தினத்தை முன்னிட்டு 2025 மே மாதம் 11 ஆம் திகதி இனிய நந்தவனம் மாத இதழ் மற்றும் தமிழ் ஹைக்கூ கவிதையாளர்;கள் இயக்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்து, இந்தியாவிலிருந்து வருகை தந்த இலக்கிய அதிதிகளுக்கு மத்தியில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பிரம்மாண்டமாக வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூலின் முதற்பிரதியை ஆயிரம் முதற் பிரதிகளுக்கும் மேலாகப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பெற்று சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நீங்கள் கவிதை எழுதுவதற்கான சந்தர்ப்பங்களை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றீர்கள்?

ஒரு தனிமனித வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் இந்த கேள்விக்கான விடை பெரும் அதிர்ச்சியையும் அடைவு மட்டத்தை அடைய மேற்கொள்கின்ற முயற்சியையும் திறமையையும் திரும்பிப் பார்க்கும் என்றால் மிகையாகாது.

பல இயந்திர சத்தங்களுக்கும், நிர்வாக வேலைப் பழுவுக்கும், பாமர மக்கள் வாழும் சமூகத்திற்கும், மத்தியில் கவிதை படைப்பதென்பது ஒரு கடினமான காரியமென்பது யாவரும் அறிந்ததே. அத்தோடு என்னிடம் இதுபற்றி வினா தொடுத்தவர்களுமுண்டு. இரவுப் பணி முடித்து வீடு திரும்பியதும் கொஞ்ச நேரம் விழிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கவிதைகளை எழுதுவேன். பகல் நேர வேலை முடிந்த பின்னர் சுணங்கிச் சயனித்து வைகறையில் எழுந்து கவிதைகளை எழுதுவது, ஓய்வு நேரங்களில் அல்லது உந்துருளி, பேருந்துகளில் பயணம் செய்யும்போது காட்சிகளைக் கண்டதும் மன ஏட்டிலே கவிதைகளைப் பதித்துகொள்வது, என எந்த நேரத்தில் என்றாலும் கவிதைகளை எழுதுவது, புத்தகங்கள் வாசிப்பது என தமிழ் சுவாசக் காற்று வியாபித்து நகர்கிறது.


ஒரு கவிதையின் மொழியானது எப்படியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

எண்ணத்திலே தோன்றிய எழுத்துகளை மூளையின் வழியே ஒத்திகைப் பார்த்து, மானுடம் புரியும்படி வடிப்பதே பான்மைமிகு படைப்பாகும். பாமர மற்றும் பண்டிதர்கள் எல்லோரும் எளிய, இனிய முறையில் விளங்கும் வண்ணம் மொழியினைக் கையாண்டு படைப்புகளை வெளிக்கொணர வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.


நீங்கள் எதற்காக எழுதுகின்றீர்கள்? எழுதுவது தொடர்பில் விசேட நோக்கமொன்று உள்ளதா?

எழுதுவதன் மூலம் நமக்கு நல்ல மூளை வளர்ச்சி, அறிவாற்றல், நற்சிந்தனை, அறிவுத் திறன் போன்றவை வளர்ச்சியடைவதோடு புதிய விடயங்களைக் கற்கவும் பல பன்முக அனுகூலங்களை பெற்றுக்கொள்ளவும் முடிகிறது. அத்தோடு எழுதுவதன் விசேட நோக்கமென்று சொல்வதைக் காட்டிலும் சமூகவியல் மாற்றத்தை கொண்டு வர முடியுமென்பது எனது உறுதியான நம்பிக்கை.

எழுதுவதோடு மட்டுமல்லாது அதனை மாணவச் செல்வங்களுக்கு கவிதைப் பட்டறைகள், மேடைப் பேச்சுகள் மூலம் ஊட்டும் போது அம்மாணவர்களுக்கு முதலில் எழுதுவதற்காக சிந்தனை நரம்புகள் தூண்டப்படுகிறது. அதன்மூலம் அவர்களிடையே சிந்திக்கும் ஆற்றலும் ஆர்வமும் கூடுகிறது. அத்தோடு நல்ல சிந்தனையாளர்களாக மாறி நல்ல படைப்புகளை மக்களுக்கும் வழங்க வேண்டுமென்ற ஆணிவேர் ஊன்றத் தொடங்குகிறது.


பல்வகையான இலக்கியப் போக்குகள் குறித்து காலத்துக் காலம் தர்க்கங்கள் அல்லது சாடல்கள் எழுவது வழக்கம். அவை பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

தேவையற்ற தர்க்கங்கள் செய்வதைத் தவறான நகர்வாகவே பார்க்கிறேன். இல்லாத ஒன்றுக்காக இருப்பதைப் போல விதண்டாவாதம் செய்வது ஒருவனது இயலாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை விடுத்து, தட்டிக்கொடுத்துத் தவறுகளை மனதார ஏற்று திருத்துவதற்கான ஆற்றுப்படுத்தலைக் கையாள்வதே சிறப்பு. இப்படியான தர்க்கங்கள் அல்லது சாடல்கள், தோன்றி மறையும் நீர்க்குமிழியைப் போன்றது. அதனைப் பொருட்படுத்தாது தத்தமது படைப்பாற்றல்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஓடையில் ஒதுங்கும் சருகுகளாய் ஒதுக்க்கி நோக்கம் என்ற ஆழியை அடைவதே தலையாய கடமையாகுமெனக் கருதுகின்றேன்.

ஒரு சிலர் மூத்த இலக்கியவாதிகள் என்ற பெயரில் தமிழை விற்று கௌரவ யாசகம் பெறும் இக்கால கட்டத்தில் தமிழின் வளர்ச்சிக்காகவும் தன்னின முன்னேற்றத்திற்காவும் பாடுபட்டு உழைத்து தூங்கிக்கொண்டிருந்த அருகம்புல்லை விடாமுயற்சி எனும் மழையைப் பொழிந்து துளிர்விட காரணமான உள்ளங்களை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி வீழ்த்த நினைக்கும் மானிட நரிகள் திருந்தும் காலம் வெகு சீக்கிரத்தில் மலர வேண்டும். அசுழத்தின் (நாய்க்) குணத்தை அகமதில் நிறுத்திவிட்டு, ஆறறிவு - பகுத்தறிவு உடையவர்களாய் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.


இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில் வாசிப்பு மட்டம் எந்தளவில் இருக்கின்றது என்று நினைக்கின்றீர்கள்?

வாசிப்பு மட்டம் தற்போது குறைவாகத்தான் இருக்கிறது. புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டும், தூண்டுதல் சுரப்பியே ஆகுலத்தில் (கவலையில்) அசதியாக மௌனம் காக்கிறது. எனவே வாசிப்பைத் தூண்டும் படியான செயலமர்வுகள், விழிப்புணர்வுமிக்க நாடகங்கள், பாடல்கள், கவிதைகள் என பலதரப்பட்ட கலைகளுடாக செயற்படுத்த வேண்டும். முகநூல் மற்றும் பற்றியம் (மெசெஞ்ஜர்), புலனம் (வட்ஸ்அப்), வலையொலி (யூடியூப்) ஆகியன மூலமாகவும் வாசிப்பைத் தொடர்கிறார்கள் என்பது கணிப்புகளின் வெளிப்படுத்திய தரவுகளாகும். இலத்திரனியல் வளர்ச்சியின் காரணமாகவே எல்லோரது கவனமும் இதன் பக்கம் திரும்பியுள்ளது.


உங்கள் இலக்கிய வாழ்வில் இதுவரை மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய உள்ளன. அவற்றில் இந்திய வம்சாவளி மக்களாக வாழுகின்ற நாம் தமிழகத்தின் சென்னை இக்சா மையத்தில் உலக ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் நடாத்திய கவியரங்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காக பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கி கௌரவித்த தருணத்தையும் அந்நிகழ்வில் உ. மாதவன் அவர்களின் 'சுகமூட்டிய அந்த நிழல்' என்ற நூலை வெளியீடு செய்து வைத்தமையும் என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாகக் கருதுகின்றேன்.


கவிதைத் துறை தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகின்றீர்கள்?

பாடல்கள் எழுதுவது, இலக்கியம் சார்ந்த நூல்களை வாசிப்பது, தமிழ்த் தின விழா, பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டி போன்றவைகளுக்கு நடுவராகப் பணியாற்றுவது, அறிவிப்பு செய்வது, முக்கிய நிகழ்வுகளுக்கு அதிதியாகச் சென்று சிறப்புரை ஆற்றுவது, இசைக் கச்சேரிகளில் பாடுவது, கவிதைப் பட்டறை நடாத்துவது, விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட சொற்பெருக்காற்றலை வழங்குவது, தமிழ் இலக்கிய மன்றங்களில் செயலராகக் கடைமையாற்றுவது, சமூக நற்பணி மன்றங்களோடு பங்கெடுத்து ஆலோசனை வழங்குவது, புத்தகங்கள் வெளியிடுவோருக்கு பணம் மற்றும் உடல், உள ரீதியாக உதவுவது என்று பல தரப்பட்ட செயற்பாடுகளில் இயங்கி வருகின்றேன்.


நீங்கள் அண்மையில் வாசித்து இரசித்த நூல் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட முடியுமா?

ஆம். தமிழ்மணி மானா மக்கீன் ஐயா அவர்கள் எழுதி, கண்டி கெப்பட்டிபொல நினைவு மண்டத்தில் வெளியீடு செய்த 'பதுளை துங்கிந்த சாரலில் ஒரு ஜில்' என்ற ஆய்வு நூலே நான் கடைசியாக வாசித்த ஆய்வு நூலாகும். இந்நூலுக்கு முதன்முதலில் பதுளை மண்ணிலிருந்து விமர்சனத்தை எழுதி, நூலாசிரியரின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நல்லாசிகளையும் பெற்றதோடு தேசிய கலைஞராக நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கெடுத்தமை என் மனதை நிறைத்த சந்தோசமாக உணர்கின்றேன். இந்த நூல் வெளியீட்டுக்குச் செல்லக் காரணமாக அமைந்தவர் நண்பி, எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஆவார் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.


உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பல தரப்பட்ட கவிதை மற்றும் சிறுகதை நூல்களை வெளியிட வேண்டுமென்ற பெரிய அவா இருக்கிறது. அத்துடன் கவிதைப் பட்டறைகளினூடாக புதிய எழுத்தாளர்களை உருவாக்கி நல்லதொரு சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் சமுதாய, இலக்கிய வட்டத்திற்குத் தந்து கல்விச்சாலையில் மாணவர்களது ஆக்கங்களை நூலாக்கி ஆவணமாக வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.


இதுவரை உங்கள் எண்ணங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டீர்கள். எமது வாசகர்களுக்கும், சக எழுத்தாளர்களுக்கும் விசேடமாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

என் மீது அன்பும் அளவற்ற நேசமும் கொண்ட வாசகர்களே எனது நேர்காணலை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தமைக்கு நன்றியும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும். வாழ்ந்தால் புகழோடு வாழ்க என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க சமூகத்தில் இளைய தலைமுறையினரிடையே காணப்படுகின்ற தீய பழக்கங்களை அகற்றி, வாசிப்புத் திறனை அதிகரித்து நேர்மறை சிந்தனைகள் வழியே பயணிக்க சிறந்த படைப்புகளைத் தருவதோடு காலத்தின் தேவை கருதி புத்தம் புதிய படைப்புகளை வழங்க வேண்டுமென எழுத்தாளர்களாகிய உங்களிடம் விசேடமாகவும் வினயமாகவும் கேட்டுக்கொள்கின்றேன்.


நீங்கள் இதுவரை படித்த படைப்புகள் பலவற்றில் உங்களை மிகவும் பாதித்த படைப்பு எது? ஏன்?

தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இலக்கியத் துறையானது இன்று போல் அன்றும் தடம் பதித்து வந்துள்ளது. இருந்தும் ஒரு சில தவறான குதர்க்க செயற்பாடுகளால் என்னவோ சற்று சரிவை கண்டும் இருக்கிறது. இருந்தும் பதுளை மண்ணில் ஜில் சுல்தான் என்ற ஒரு இலக்கியவாதி 1905 - 1979  ஆம் ஆண்டளவில் வாழ்ந்துள்ளார். அவரைப் பற்றி நம் தமிழ் சமூகம் இதுவரை காலமும் தெரிந்தும் தெரியாததுபோல் அசமந்த போக்கில் வாழ்ந்திருப்பது என் மனதை மிகவும் பாதித்துள்ளது. மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். மதமென்பது அவனவது பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை தொடர்ந்து கொண்டுசெல்ல அன்புநெறி ஆற்றுப்படுத்தல் அவ்வளவே. எனவே இவற்றையெல்லாம் நாம் கடந்து பயணிக்க வேண்டுமென்ற கட்டாயத்திற்கு நிர்ப்பந்தபட்டிருக்கிறோம். எல்லா மத இனத்தவர்களின் இலக்கிய கர்த்தாக்களை மதித்து மனிதநேய மாண்புடன் செயற்படுவோம்.


இறுதியாக வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்..?

எனது நூல் வெளியீட்டின்போது கலந்துகொண்டு சிறப்புப் பிரதிகளை பெற்றுக்கொண்ட இலக்கியவாதிகள், சகபாடிகள், கலைஞர்கள், வர்த்தக பிரமுகர்கள், நண்பர்கள், பெற்றோர், அரசியல்வாதிகள், நலன் விரும்பிகள், மனைவி, குழந்தைகள், எழுத்தாளர்கள், ஆரம்பம் முதல் உயர் தரம் வரை கற்பித்த  ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உற்றார் உறவினர்கள், எல்லோருக்கும் இதயமலர் தூவி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எல்லோரும் அதிகதிகமாக  வாசியுங்கள். எழுதுங்கள். நீங்களும்  ஒருநாள் தூவலைக் கொண்டு எழுத்துகளை தூவும் கவிப்போராளியாக மிளிரலாம். சாதிக்க வேண்டுமென்ற எண்ணமானது ஊற்றெடுத்தாலே சாதனை என்ற  இமயத்தை அடைய முடியும்.

எனது இந்த நேர்காணல் வெளிவரக் காரணமான பன்னூல் மற்றும் பூங்காவனம் சஞ்சிகை ஆசிரியருமாகிய இலக்கியப் போராளியான ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு எனது நன்றிகளைக்  குறிப்பிட்டேயாக வேண்டும். அத்துடன் இந்த நேர்காணலைப் பிரசுரித்து களமமைத்துத் தந்த செந்தூரம் இதழாசிரியருக்கும் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


50. கவிஞர் மருதூர் ஜமால்தீன் அவர்களுடனான நேர்காணல்

கவிஞர் மருதூர் ஜமால்தீன் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களை வாசகர்கள் எப்படியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்?

எம்.எம். ஜமால்தீன் என்ற இயற் பெயரைக் கொண்டவன் நான். தான் சார்ந்த சமூகத்தின் விழிப்புணர்வுக்கான படைப்புகளை தேவையான சந்தரப்பங்களில் சிறந்த கவிதைகளையும், சிறுகதைகளையும் தரும் ஓர் எழுத்தாளனாக, மருதூர் ஜமால்தீன் என்ற எனது நாமத்தையே இன்றுவரை இலக்கிய உலகில் சிறப்பாகப் பதித்து வருகிறேன். இதுவே எனக்கு மனநிறைவு தரும் அறிமுகமாக அமைகிறது.


உங்களுடைய குடும்பப் பின்னனி குறித்து?

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது எனும் கிராமத்தில் அப்துர் ரஹ்மான் மீரா முகையதீன் இஸ்மா லெவ்வை - உம்மு குல்தூம் ஆகிய பெற்றோரின் ஐந்து பிள்ளைகளில் மூன்றாவதாக நான் பிறந்தேன். ஏறாவூரில் திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளின் தந்தையாக (இருவர் பட்டதாரிகள்) வாழ்ந்து வருகின்றேன்.


உங்களுடைய கல்லூரி வாழ்க்கை பற்றியும், தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது ஆரம்பக் கல்வி கஃமு சாந்தமருது றியாளுள் ஜன்னாஹ் வித்தியாலயத்திலும் ஆறாம் வகுப்பு தொடக்கம் க.பொ.த. உயர் தரம் வரை கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும் பின்னர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியிலும் கற்று மௌலவியாக வெளியேறினேன்.

ஏறாவூரில் திருமணத்தின் பின் மட்/ ஏறாவூர் அல்அக்ஷா வித்தியாலயத்தில் (தற்போது மாக்கான் மார்க்கார் வித்தியாலயம்) தொண்டர் ஆசிரியராக சில வருடங்கள் கற்பித்து, அதன்பின்னர் ஏறாவூர் அஞ்சல் திணைக்களத்திலும்; எட்டு வருடங்கள் கடமை புரிந்;தேன். பின்னர் தற்போதுவரை ஏறாவூர் வாளியப்பா ஜும்ஆ மஸ்ஜிதில் சுமார் 27 வருடங்களாக இமாமாகக் கடமைபுரிந்து வருகிறேன்.


உங்களுக்குள் இலக்கிய ஆர்வம் எப்படி வந்தது?

வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு என்பதை உலக நியதியாக ஏற்படுத்தி மனிதனை அளவிடும் தீப்பண்புகள் புரையோடிப் போயுள்ள சமூக அமைப்பில் கல்நெஞ்சர்களால் உள்ளத்தாலும், உணர்வாலும், செயலாலும் சிறுவயது முதல் அதிகம் பாதிக்கப்பட்டேன். படித்தவர்கள் முதல், பாமரர் வரை படர்ந்துள்ள இந்நோய்க்கு விடை காண முடியாத நிலையில் நிறைய நூல்கள், இலக்கியம், நாவல்கள் என வாசிக்க ஆரம்பித்தேன். அவற்றின் மூலம் சமூகத்தில் படர்ந்துள்ள இந்தத் தீய பண்புகளைக் களைந்திட முதலில் கவிதைத் துறையைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் பல நல்ல உள்ளங்களையாவது சிந்திக்க வைக்கலாமென்று எண்ணினேன். இறைவனும் அந்த ஆற்றலை எனக்குத் தந்தான். எனது கவிதைகள் அநேக உள்ளங்களைத் தொட்டிருக்கின்றன. எனக்குக் கிடைக்கின்ற வாழ்த்துக்களை இறைவன் எனக்களித்த வெற்றியாகக் கருதுகிறேன்.

எனது சிந்தனையோடு உடன்பாடு கொண்ட சில நண்பர்களின் ஒன்று கூடலும் ஊக்குவிப்பும் கையெழுத்து, றோணியோ சஞ்சிகை வெளியீடுகளும் எனக்கு சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தன என்பேன்.


நீங்கள் முதன் முதலில் கவிதை எழுதிய அனுபவம் பற்றிக் குறிப்பிட முடியுமா?

1983 ஆம் ஆண்டு அது. இந்த இளமைப் பருவக் காலத்தில், சமூக சிந்தனையும், வேட்கையும், அறிவுபூர்வமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, 'சாய்ந்தமருது இஸ்லாமிய இலக்கிய வட்டம்' என்னும் பெயரில் ஓர் இலக்கிய அமைப்பை ஆரம்பித்து, அதனூடாக முதற் கட்டமாக 'அல்ஹுதா' என்ற கையெழுத்துப் பத்திரிகையை மர்ஹும் பன்னூலாசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு ஆரம்பித்தோம். அந்தச் சஞ்சிகையில் நான் எழுதிய 'இஸ்லாத்தின் வழி வாழ்வோம்' என்ற கவிதையினூடாக எனது இலக்கியப் பயணம் ஆரம்பித்தது. அப்பத்திரிகையினூடாக எழுதிய சிலர் இன்று சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்வதனை எமது இலக்கியப் பயணத்திற்கு இறைவன் தந்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?  (நூலின் பெயர், வகை, வெளிவந்த ஆண்டு உட்பட)

01. தடயங்கள் - 2008 (கவிதை, புரவலர் புத்தகப் பூங்கா) 

02. ரமழான் ஸலவாத் - 2010

03. கிழக்கின் பெருவெள்ளக் காவியம் - 2010

04. முஹம்மது (ஸல்) புகழ் மாலை - 2011

05. இஸ்லாமிய கீதங்கள் - 2012

06. தாலாட்டு - 2015

07. பத்ர் யுத்தம் - 2016 (கவிதை)

08. வலிகள் சுமந்த தேசம் - 2017 (கவிதை)

09. தீ நிலம் - 2018 (கவிதை)

10. வல்லூறின் வானம் - 2019 (கவிதை)

11. மனிதம் வாழும் - 2019 (கவிதை, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்)

12. கொறொனா குறுங்காவியம் - 2019 

13. திருப்பம் - 2024 (சிறுகதை)


ஆரம்ப காலங்களில் மரபுக் கவிதைகள் மீது இருந்த தீவிரம் இப்போது இருப்பதாகக் கருதுகிறீர்களா?

என்னை ஒரு சிறந்த கவிஞனாக சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியது மரபுக் கவிதைகள்தான். அதனை எழுதுமாறு ஊக்கப்படுத்திப் பாராட்டியவர்களில் குறிப்பாக எனது ஆசான்களான மர்ஹும்களான கலாபூஷணம் யூ.எல். ஆதம்பாவா சேர், கவிச்சுடர் அன்பு முகையதீன் சேர் ஆகியோர்களாவார். மரபுக் கவிதைகளில் இருக்கும் பற்று என்றும் அழியாது. ஆனாலும் நான் புதுக் கவிதைகளையும் அதிகமாக எழுதியுள்ளேன். பொதுவாக நான் கவிதைகள் அதிகம் எழுதிவிட்டேன். தற்போது குறிப்பிட்ட சில சஞ்சிகைகளுக்கு மட்டுமே தொடர்ந்து எழுதுகிறேன்.


உங்களுடைய 'கொறோனா குறுங்காவியம்' பற்றி முக்கியமாக என்ன குறிப்பிட முடியும்?

'கொறோனா' என்னும் புயலில் சிக்குண்டு தத்தளித்தவன் நான். உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு அயலவர்களாலும் ஒதுக்கப்பட்டதன் விளைவே எனது கொறோனா குறுங்காவியம். இந்தப் புத்தகம் நிச்சயம் இலக்கிய வரலாற்றில் இடம் பிடிக்கும்.


உங்களுக்கு சிறுகதைகள் எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

வாழ்வில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வேதனையான சம்பவங்களையும் கூற முனையும் அதேவேளை, என் போன்ற பாதிப்புக்களைச் சந்தித்தோருக்கும் எனது கருத்துக்களை முன்வைத்து சமுகமயப்படுத்த சிறந்த ஊடகம் சிறுகதைகளாக அமைந்ததனாலேயே இந்தச் சிறுகதை எனது தாகத்தை ஓரளவு தீர்த்தது.


சிறுகதை எழுதும் போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவம் உண்டா?

பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் திறந்த வெளிப் போட்டிகளில் கலந்துகொண்டு மாகாண மட்டம், மாவட்ட மட்டங்களில் பல விருதுகள், சான்றிதழ்கள், பரிசுகளையும் பெற்றுள்ளேன்.


கவிதைகள் எழுதும் போது இருக்கின்ற மனநிலைக்கும் சிறுகதைகள் எழுதும்போது இருக்கின்ற மனநிலைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் ஒரே மனோநிலைதான். 'சுருங்கக் கூறி விளங்க வைத்தல்' கவிதையாகும். நாம் எடுக்கும் தலைப்பில் குறிப்பிட்ட விடயத்தை முடிக்கலாம். சிறுகதைகளை எழுதும் போது எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பில் சற்று விரிவாக்கி சாதாரண வாசகர்களும் விளங்கிக் கொள்ளும் உணர்வுடன் எழுதப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும்.


கடைசியாக வெளிவந்த உங்களது 'திருப்பம்' சிறுகதை நூல் பற்றியும் அத்தொகுதியில் உள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

இறுதியாக வெளிவந்த 'திருப்பம்' சிறுகதைத் தொகுதி எனது நீண்டகால முயற்சியாகும். பல்வேறு கால கட்டங்களில் நான் எழுதி, பல சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பாகவே இந்தச் சிறுகதைத் தொகுதி அமைந்துள்ளது. இந்தத் தொகுதியின் கருப்பொருட்கள் எனது வாழ்வில் நான் சந்தித்த அனுபவங்களும் கசப்பான உண்மைச் சம்பவங்களுமாகவே அமைந்துள்ளன என்ற உண்மையையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். ஒரு எழுத்தாளனின் அனுபவங்கள்தானே சிறுகதைகளாகவும் அமைகின்றன.


சிறுகதைகள் வெளிக்காட்டும் சமூகச் சிக்கல்களுள் தனிமனித சிக்கல்களே முதலிடம் பெறுகின்றன. இதுபற்றி நீங்கள் என்ன சொல்வீரகள்?

உண்மையும் அதுதான். தனிமனிதர்கள் இணைந்துதானே ஒரு சமூகம் உருவாகிறது. அந்தவகையில் சமூகத்திற்கான படைப்புகளாக வலம் வருவது தனிமனிதச் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.


உங்களைக் கவர்ந்த சிறுகதை, சிறுகதையாசிரியர்கள் யாவர்?

பலரது சிறுகதைகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. இன்னாரது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது சங்கடமாகவுள்ளது. அதிகமான சிறுகதைத் தொகுதிகளை வாசித்திருக்கிறேன். அதில் பல கதைகள் என்னைக் கவர்ந்ததுண்டு. எல்லாச் சிறுகதையாசிரியர்களும் என்னைக் கவர்ந்தவர்கள்தான். என்றாலும் திக்குவல்லைக் கமால், தீரன் ஆர்.எம். நௌஷாத், திக்குவல்லை ஸப்வான் எனது ஆரம்ப ஆசான்களான மர்ஹும் யூ.எல். ஆதம்பாவா, ஏ. பீர் முஹம்மது, மு. சடாட்சரன், மர்ஹும் வை. அஹமத் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.


இலக்கிய உலகில் நீங்கள் எப்படி அறியப்பட வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?

எழுத்துப் பணியென்பது இறைவன் தந்த அமானிதம். இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்த அமானிதத்தை உரியமுறையில் பாதுகாத்து ஒப்படைப்பதன் மூலமே இறையின் பரிசு கிடைக்கும். இந்த எண்ணத்துடனேயே எழுத ஆரம்பித்தேன். இதில் பாராட்டுகள் தேடி வந்தாலும் அதில் பெருமையடைந்துவிடக் கூடாது. எனது படைப்புகள் சமுதாயத்தில் உள்ள சிலரது உள்ளங்களையாவது தொட்டு இருக்கும். அதுவே பிரார்த்தனையாக மாறி, நன்மைகளாக வந்து சேரட்டும். என்னைப் பொறுத்தவரை ஆன்மீக ஈடேற்றம் நோக்கிய இலட்சியப் பயணமாகவே இது அமையும்.


பல எழுத்தாளர்கள் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பது போலவே சில எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு எதிராக மட்டுமே குரல் எழுப்புகின்றனர். இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஏனைய எழுத்தாளர்களின் நோக்கும் போக்கும் இலட்சியமும் வேறுபட்டதாக இருக்கலாம். நான் எனக்கென்று ஒரு பாதையை வகுத்து இலக்கிய உலகில் பயணிக்கிறேன். எனது இலக்கு வேறு. எனவே நான் இதுவரை எந்த எழுத்தாளர்களைப் பற்றியும் கருத்துச் சொல்லி விமர்சித்ததில்லை. 


பத்திரிகைகள் மற்றும் இதர ஊடகங்கள் உங்கள் படைப்புகளுக்கு எந்தளவுக்கு களம் தருவதாக நினைக்கின்றீர்கள்?

கடந்த காலங்களில் எனது சகல படைப்புகளுக்கும் பத்திரிகைகள் களம் தந்தன. இன்று களம் தருவது குறைவு. எனவே அவற்றுக்கு நான் எழுதுவதும் குறைவு. ஆனால் சஞ்சிகைகள் தொடர்ந்து களம் தருகின்றன. எனவே அவற்றில் தொடர்ந்து எழுதியும் வருகிறேன்.


தற்காலத்தில் நாவல் வகையான இலக்கியங்கள் அதிகமாக வெளிவருவதில்லை இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒரு எழுத்தாளன் தனது படைப்புகளை வெளியீடு செய்வதற்கான அதிகரித்த செலவுகள் ஒரு புறம் இருக்க, அத்தகைய வெளியீடுகளை மிகவும் சிரமப்பட்டு வெளியீடு செய்தாலும் அவற்றை ஊக்குவித்து வாசிக்கும் நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை என்று மொத்தமாகச் சொல்வதைவிட மிகக் குறைந்துவிட்டனர் என்றே சொல்ல முடியும். இந்த நிலையே நாவல் இலக்கியங்கள் வெளிவராமைக்கான பிரதான காரணமாகும்.


உங்களை, உங்கள் படைப்புகளை எப்படி வரையறுக்க விரும்புகின்றீர்கள்?

எனது படைப்புகள் சிறிதும் பெரிதுமான அளவில் பல வகையான படைப்புகளாக அதாவது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் அநேகமானவை சமகாலப் பிரச்சினைகளில் எமது சமூகத்தின் பாதிப்பினை எதிர்கால சந்ததிக்கு அறிமுகம் செய்கின்றன. அதிலும் விசேடமாக எமது முன்னோர்கள் எமக்களித்த கவிதை பாடல்களின் 'மாலை' வகைகளையொட்டிய கவிதை வகைகளை (உதாரணமாக ஸலவாத்து மாலை) தற்கால இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் நூல்களை வெளியிடுவதற்கு எண்ணியுள்ளேன்.


இப்போதைக்கு உங்களது இலக்கிய செயற்பாடுகள் என்னவாக இருக்கிறது?

அதிகமாக இல்லாவிட்டாலும் முடிந்த வகையில் சேகரிப்பில் கிடக்கும் எனது ஆக்கங்கள் பலவற்றையும் திரட்டித் தொகுத்து நூலாக்குவதற்கு ஏற்றாற் போல் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கே நான் முயற்சிக்கிறேன்.


இன்றைய காலங்களில் புத்தகப் பதிப்புச் சூழல் எப்படி உள்ளது?

பொதுவாக இப்போதைய காலங்களில் அதிகமான நூல்கள் பதிப்புச் செய்து வெளியிடப்படுகின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவை காத்திரமான படைப்புகளாக வெளிவருதில் அதிகமான இளையோர் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.


நிறைவாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?

எழுத்துலகில் புதியவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அந்தவகையில் அவர்கள் நல்ல நூல்களைத் தெரிவு செய்து அதிகம் வாசிப்பதுடன், தான் எழுதும் ஆக்கங்கள் பிற்கால சமூகத்திற்கு விட்டுச் செல்லும் பணியென்பதை நினைவில் வைத்து, தன் படைப்புகள் சிறப்பாக வெளிவருவதில் கவனம் செலுத்தி எழுதுங்கள் என அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



49. கவிஞர் உரும்பையூர் து. திலக் (கிரி) அவர்களுடனான நேர்காணல்

கவிஞர் உரும்பையூர் து. திலக் (கிரி) அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய  அறிமுகத்தை சுருக்கமாகக் கூறுங்கள்?


யாழ்ப்பாண மாவட்டத்தின் உரும்பிராயை சொந்த ஊராகக் கொண்ட திரு. திருமதி. துரைராசா குணேஸ்வரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தேன். எனது இயற்பெயர் துரைராசா கிரிகேஸ்வரன் என்பதாகும். நான் ஆரம்பக் கல்வியை யாழ். உரும்பிராய் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலைவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும், உயர் தரத்தை கிளி/அக்கராயன் மகாவித்தியாலயத்திலும் பயின்றுள்ளேன்.

1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் வன்னி பெருநிலப் பரப்பில் எனது கல்வியைத் தொடர்ந்து வந்துள்ளேன். அக்காலப் பகுதியில் கிளி/ அக்கராயன் தமிழொளி கலா மன்றத்தினூடாக அரங்க நாடகங்கள், தெருவழிக் கலையாற்றுகைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பான போட்டி நாடகங்களிலும் நான் பங்குபற்றி வந்துள்ளேன். அக்காலங்களில் நாடக ஆசிரியர்களாக திரு. ச.சக்திவேல் அவர்களும், திரு. பாலா அவர்களும் இருந்தனர். பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைந்து நடாத்திய நாடகத்தில் பாலா ஆசிரியர் அவர்களின் நெறியாழ்கையில் இடம்பெற்ற 'சூரியனைச் சுட்டெரிப்போம்' என்ற எமது நாடகம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஆசிரியர் திரு. சக்திவேல் அவர்களின் தயாரிப்பில் இடம்பெற்ற 'மீண்டும் வருவோம்' எனும் எமது சமூக விழிப்புணர்வு நாடகம் பல இடங்களில் அரங்கேற்றம் கண்டு வந்தது.

1999 ஆம் ஆண்டு மூத்த கவிஞர் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் ஐயா அவர்களின் தலைமையிலான கவியரங்கில் நான் கலந்துகொண்டு வரவேற்பையும் பலரது பாராட்டுகளையும் பெற்றமை பசுமையான நினைவுகளாக இன்றும் என் மனதில் பதிந்துள்ளது. தொடர்ந்து கிராமங்கள் தோறுமான மக்கள் பணிகள், சமூக சேவைகள் என்பவற்றை வழங்கி வந்துள்ளேன். பின்னாட்களில் போர்க்காலப் பகுதியிலான இடர்காலப் பணிகள், மக்கள் சேவை என்பவற்றில் பணியாற்றி 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தடுப்பு முகாம் சென்று வவுனியா, பொலனறுவை, காலி, அனுராதபுரம், கொழும்பு போன்ற மாவட்டங்களில் நான்கு வருடங்களும் ஏழு மாதங்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அக்காலப் பகுதியில் தினக்குரல், வீரகேசரி, சுடரொளி, மித்திரன், உதயன், வலம்புரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்துள்ளேன்.

மித்திரன் பத்திரிகையில் வெளிவந்த 'உயிர் வலித்த கணங்கள்' பகுதியில் எனது 'வலி சுமந்த உணர்வின் வரிகள்' என்ற தலைப்பில் அமைந்த தொடர் கட்டுரைகளும், உணர்வின் வலிகளும் எழுதப்பட்டதோடு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுங்கதைகள் என்பனவற்றையும் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளேன். சூரியன் வானொலியின் 'ரீங்காரம்' நிகழ்ச்சிக்கும் எனது பல ஆக்கங்களையும் வழங்கினேன். பின்னர் 2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்தடைந்தேன்.

2023 ஆம் ஆண்டு 'சிதறல்கள் - 100' எனும் எனது முதற் கவிதை நூலை 'ஜீவநதி' வெளியீட்டகமும், யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கமும் இணைந்து யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் வெளியீடு செய்தது. இதுவே எனது இலக்கியத் துறை சார்ந்த அறிமுகமாகும்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, இலக்கிய ஈடுபாடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

இடைநிலைக் கல்வியைக் கற்ற உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இணை பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டுத் துறைகளில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது. அந்தவகையில் உடற்கல்வி அணியின் தலைமையாளனாகவும், பாடசாலை உதைப்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளனாகவும் இருந்து வந்துள்ளேன். அத்துடன் சமய நிகழ்;வுகள், பேச்சு, நகைச்சுவை செய்தி வாசித்தல் போன்றவற்றோடு 'காத்தவராயன்' கூத்தில் பாலகாத்தானாகவும் நடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒருதடவை நகைச்சுவை செய்தி வாசித்து அதே நாளில் அதனைச் சுட்டிக்காட்டி கணித பாட ஆசிரியரிடம் அடிவாங்கிய நினைவும் இருக்கிறது.


முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அநுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

நான் தொடர்ந்து பத்திரிகைகளை அதிகம் வாசிப்பதுண்டு. அதிலும் குறிப்பாக ஆசிரியர் தலையங்கத்தை முதன்மை அடிப்படையில் வாசித்துக்கொள்வேன். அத்தோடு மக்கள் மன்றம், குறைகேள் மன்றம், கட்டுரைகள் என்பனவற்றையும் அதிகமாக வாசிப்பேன். இதனூடாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள், பொது இடங்களில் சீர்செய்யப்பட வேண்டிய விடயங்கள் என்பற்றை எழுத வேண்டுமென்று என்னை அதிகமாகத் தூண்டியது என்னுடைய வாசிப்புப் பழக்கமே. இப்பொழுதும் மின்னிதழ்ப் பத்திரிகைகளில் முதலில் நான் வாசிக்க முனைப்புக் காட்டும் பகுதி அன்றைய நாளுக்கான ஆசிரியர் தலையங்கமே. நாட்டின் அரச, அரசியல், சமகால நிலைப்பாட்டை அன்றைய நாளுக்கான முதன்மைப்படுத்தலாக இருப்பது ஆசிரியர் தலையங்கம் ஆகும்.


முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் எப்படிப்பட்டது?

வலி நிறைந்த வாழ்வு, போர் நிறைந்த சூழல், பொருளாதார நெருக்கடி, மரண ஓலங்கள், தொற்று நோய்களின் தாக்கங்கள், பிறர் வாழ தம்முயிர் ஈய்தல், அளப்பரிய தியாகங்கள், பாரிய அர்ப்பணிப்புகள் இவ்வாறான நாளாந்த வாழ்வியல் பயணத்தில் காலக் கடிகாரம் ஓய்வின்றிச் சுழன்ற அந்த நெஞ்சை நெருடிய தருணங்கள், கண் கண்ட காட்சிகள், உள்ளெழுந்த உணர்வுகளை எழுத்துகளாக வடிக்கத் தூண்டியது. இவ் உணர்வுப் பிரவாகத்தின் கிறுக்கல்களே கவிதைகளாக, கட்டுரைகளாக, தொடர் கலை ஆற்றுகைகளாக என்னுள் வெளிப்படத் தோன்றியது.


உங்களது முதலாவது ஆக்கம் எப்போது எந்த ஊடகத்தில் வெளிவந்தது?

1997 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வன்னியில் அக்கராயனில் வாழ்ந்த காலத்தில் ஈழநாதம் பத்;திரிகையின் வார இதழான வெள்ளி நாதத்தில் 'படத்திற்கு மெருகூட்டுங்கள்' பகுதியில் ஒரு கல்லறையின் அருகே தாய் இருந்த அழுவதான காட்சி இருந்தது. அதனைப் பார்த்துவிட்டு,


கருவறையில் சுமந்தவள்

கல்லறை அருகிலிருந்து கதறுகிறாள்

அவன(ள)து நினைவுகள்

இன்னமும் நெஞ்சறையில்

பசுமையாய் இருப்பதனால்!



இதுவே எனது முதல் கவிதை வரியாக்கமாகும். இது பரிசுக்கான கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'அர்ச்சனா புகைப்படக் கலையகம்' இதற்கான நினைவுப் பரிசினை வழங்கியது.


வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?

என் ஆரம்ப கால எழுத்துக்களை அங்கீகரித்து ஆதரவு தந்து இற்றைவரை உந்து சக்தியாக முன்னகர்த்திச் செல்வது வாசகர்களே என்று பேரன்போடு சொல்வேன். நெருக்கடி மிகுந்த சூழலில் ஒவ்வொரு இடமாக மாற்றப்படுகின்ற போதும் என் உணர்வுகளுக்கும், ஏட்டுக்கும், எழுத்தாணிக்கும் நான் கடிவாளமிட்டதேயில்லை. எனது, என் சார்ந்தவர்களின் வலிகளை, தாங்கொணா உணர்வுகளை வரிகளாக்கிய போது இதைப் பெருமனதுடன் ஏற்று எம் வலிக்கு ஒத்தடம் கொடுத்த அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர் குழுமங்களையும் இந்த நேரத்தில் நன்றியுணர்வுடன் நினைத்துப் பார்ப்பதோடு மித்திரன் வாரமலர், சுடரொளி வாரமலர், சூரியனின் ரீங்காரம், என் உணர்வுகளுக்கு அயராது களம் தந்த மற்றும் ஏனைய பத்திரிகைகளும் என் வலிகளுக்கு ஒத்தடம் போட்டதை இலக்கிய வாழ்வில் என்றும் மறந்திடலாகாது. மித்திரனின் 'பேசும் நெஞ்சங்கள்' பகுதியில் ஒவ்வொரு வாரமும் என் ஆக்கங்கள் பற்றிய கருத்தாடல்கள் வந்துகொண்டே இருக்கும்.



நீங்கள் இதுவரை எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்லுங்கள்?


சிறகு!


வெட்டை வெளியில் நின்று என்

விழிகளை மூடி

கற்பனைச் சிறகுகளை விரித்தேன்..

உயர உயரப் பறக்கலானேன்..

இந்த உள்ளங்கை உலகத்தின் 

உருவத்தை

மறந்து திளைத்தேன்!


உண்மை உலகத்தில்

மகிழ்ந்து சிரித்தேன்..

இறை தந்த இயற்கையை

ரசிக்கக் கற்றுக்கொண்டேன்..

அவன் கற்பனைகளை 

ஆழமாக சுவைக்கவும்

பழகிக்கொண்டேன்!


பாழ்படுத்தும் நவீன யுகத்தில்

வேடிக்கை முலாம் பூசப்பட்ட

வினோத மனிதர்கள் மத்தியில்;

உண்டு கொழுத்து

வாழ்ந்து மடிவதை விடுத்து

தமிழை உண்டு குடித்து 

உலகெலாம் சிறகு விரிக்கும்

ஒரு பேராசை எனக்குள்!


உலகத்தின் எண் திசையும்

என் மொழியைக் காவிச் சென்று

உலக மாந்தர் நாவுகளில்

உச்சரிப்பாய் உதிர்த்து வரவும் 

ஒரு நப்பாசை எந்தனுக்குள்!


வன்மங்கள் விலகிய

வளமான மானிடராய்

உலக மாந்தர்கள் வலம் பெற்று

வாய் மொழியாய் வண்தமிழை

வாய் நிறைத்துப் புன்னகைக்கும்

பேரழகைக் காணவும் ஓர் பேராசை!!!


இவ்வரிகள் என் தாய் மொழி பற்றிய கவிதையாதலால்; அதிகம் இரசிப்பேன்.


உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞர்கள் தாக்கம் காணப்படுகின்றது?

எனது ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணர் அவர்கள். அத்துடன் மூத்த கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் ஐயா, எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார், தாயகக் கவிஞர் கு.வீரா, கவிஞர் வேலணையூர் சுரேஸ்;, கவிஞர் வன்னியூர் வரன்;, கவிதாயினி ரிம்ஸா முஹம்மத், கவிஞர் யோ. புரட்சி;, இராமசாமி ரமேஸ்;, கவிதாயினி எச்.எப். ரிஸ்னா, மீசாலை பொன்னிலவன், மருதோடை நிலா, கவிஞர் ம. சுமன், சக்கர நாற்காலி தன்னம்பிக்கைக் கவிஞன் மன்னார் பெனில், கவிதாயினி கோபிகை (ஜெசிலா), கவிதாயினி யோ. வனிதா, கவிதாயினி ஜோ. ஜெயசுதா, கவிதாயினி பிறேமா எழில்  இவ்வாறாக இன்னும் பலரது கவிப் படையல்கள் விழிப்புணர்வையும் சமூக நீரோட்டத்தையும் தொட்டு நிற்பதனால் அவர்களது அரங்கக் கவிதைகளையும் அச்சு இலத்திரனியல் வாயிலான கவிதைகளையும் விருப்பத்தோடு இரசித்துக்கொள்வேன்.

எனது கவிதை வரிகள் அதிகம் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே வெளிப்படுத்தப்படுகிறது. அவ்வப்போது ஏற்படுகின்ற உள்ளக, வெளியகத் தாக்கங்களையே உணர்வின் வெளிப்பாடாகப் படைத்து வருகிறேன். இங்கு புரட்சிக் கவிஞர்கள், விழிப்புணர்வுக் கவிஞர்களின் தாக்கங்களே என்னுள் பற்றி நிற்கிறது.


உங்களுடைய முதல் பிரசவமான 'சிதறல்கள் - 100' என்ற கவிதைத் தொகுதியின் தலைப்புப் பற்றிக் கூறுங்கள்?

'சிதறல்கள் - 100' என்பது ஒரு நூலுக்கான தலையங்கம் அல்ல. என் வாழ்நாளில் நான் எதிர்கொண்ட பல்வேறுபட்ட நெருக்கடியான சூழல்களின் எண்ணச் சிதறல்களை வரிகளாக்கி நின்றது. அந்த வரிகளினூடாக பல்வேறுபட்ட தலைப்புக்களில் அமைந்த என் வலிகளுக்கு நானே ஒத்தடம் கொடுத்து நின்றேன். அந்த வேளைகளில் எண்ணக் குவியல்களாகச் சிந்தப்பட்ட சிதறல்களுள் 100 ஆக்கங்களை தேர்ந்தெடுத்து 'சிதறல்கள் - 100' என்ற எனது முதலாவது காகிதப் பிரசவத்திற்கு பெயர் சூட்டி அகமகிழ்ந்தேன்.


உங்களது கவிதை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் குறித்துக் கூறுங்கள்? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?

எனது படைப்புக்கள் ஊடாக பெற்றோர்களை மதித்தல், மொழிச் சிதைவு, பண்பாட்டுப் பிறழ்வு, போதைப் பொருட்களுக்குள் அடிமையாதல், சமகாலத்தில் போலிகளின் தாக்கம், இன அழிப்பின் வலிகள், நிழ்கால ஏமாற்று அரசியல், வாழ வலுவற்று நிர்க்கதியான மனிதர்கள், வாழ்வாதாரத்திற்கான உதவி தேடல், தனவந்தர்கள், பரோபகாரிகள் ஆற்றவேண்டிய தார்மீகப் பொறுப்புக்கள் என்பவற்றைத் தலைப்புக்களாக்கி என்னால் இயன்றவரை சிதறவிட்டிருக்கிறேன்.

கால ஓட்டத்திற்குள் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை தொலைத்து அல்லது மறந்து பயணிக்கும் எதிர்காலச் சமூகம் அல்லது இளைய தலைமுறையினர் பண்டைய எமது வாழ்வியல் முறைகளை, பண்பாட்டு விழுமியங்களை வாசித்தறியும் வகையில் படைக்க வேண்டுமென்கின்ற எழுத்தாளர்களின் பெரு விருப்பத்தில் நானும் ஒருவனாக பங்காற்றுவதனூடாக இந்த சமூகத்திற்கு என்னாலான செய்திகளைச் சொல்லியிருக்கிறேன்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

ஆம், நிச்சயமாக. நாம் அனுபவித்தவற்றை, எமது வாழ்வியல் முறைமைகளை, எமது மூதாதைகள் கட்டுக் கோப்புடன் பாதுகாத்து வந்த பண்பாட்டு விழுமியங்களை இளைய தலைமுறைக்கு தொட்டு நிற்பதன் ஊடாக அல்லது கலை வடிவங்களாக வெளிப்படுத்துவதன் பிரதிபலிப்பாக கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை சமூகத்தின் மத்தியில் வெறுப்புக்குரிய தன்மையை ஏற்படுத்தும். அவ்வாறன நிலை தோற்றுவிக்கப்படின் ஒரு கட்டுக் கோப்பான சமூகம் நிலை தடுமாறாது நின்று நிலைத்து வாழும் என்ற நம்பிக்கையோடே கலை வடிவங்கள் சமூகப் பொதுவெளியில் படைக்கப்படுகின்றுது. அதில் எனக்கும் அசையாத நம்பிக்கை உண்டு.


இதுவரை சுமார் எத்தனை கவிதைகளை எழுதியுள்ளீர்கள்?

1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 நடப்பாண்டு வரை எனது எழுத்துப் பணியை தொடர்ந்த வண்ணமே வருகிறேன். சமூக வலைத்தளங்கள், அச்ச இலத்திரனியல் ஊடகங்கள் என அவ்வப்போது எண்ணக் கருவில் தோன்றுபவற்றை வெளிப்படுத்தி வருகிறேன். அதற்குள் 100 ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்தே கவிதை நூலாகத் தொகுத்துள்ளேன். இன்னும் பலநூறு படைப்புகள்; என் கைவசம் சேமிப்பில் உள்ளது. அவற்றைக் காலம் வருகின்ற போது நூலாக்கம் செய்வேன். ஆனால் அவற்றின் எண்ணிக்கையினை என்னால்; குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது.


நீங்கள் அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள். இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?

இது ஒரு நல்ல கேள்வி. இலக்கியப் பரப்பில் பத்திரிகைகளுக்கு கட்டுரையாக, குறுங்கதையாக, 'வலி சுமந்த உணர்வின் வரிகள்' என்ற தலைப்பில் வாரத் தொடராக, சிறுகதை, பத்திரிகை வாயிலான விவாத மேடைகள் போன்றவற்றை தொடர்ந்து எழுதியதுடன் இலைமறை காயாக இருக்கின்ற கலை இலக்கியவாதிகள், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், அரசியல்வாதிகளை வாரப் பத்திரிகைகளுக்கு நேர்காணலும் செய்திருக்கிறேன். அவற்றைக் காணலை (வீடியோ)  வடிவமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறேன். அத்துடன் விழிப்புணர்வு சார்ந்த எனது கவிதை வரிகளை ஒலி வடிவமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளேன்;. பத்திரிகைகளுக்கு செய்திகள் சேகரிக்கும் பணிகளிலிலும் ஈடுபட்டுள்ளேன். இதுவரை மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன். இன்னும் இலக்கியப் பரப்பில் இரண்டறக் கலந்து பயணிக்கும் ஆவலில் உள்ளேன்.


இதுவரை நீங்கள் எழுதிய உங்களது சிறுகதைப் படைப்புகள் பற்றிக் கூற விளைவது?

நான் எழுதிய சிறுகதைகளுள் 'நடமாடும் தெய்வங்கள்' இது வைத்தியர்கள், தாதியர்களின் சேவை குறித்ததான சிறுகதையாக அமைந்துள்ளது. 'பொய்க்கால்' போரினால் காலை இழந்த ஒருவர் பேருந்தில் பயணிக்கின்ற பொழுது ஏற்படுகின்ற அசௌகரியங்களைக் குறித்ததான ஒரு சிறுகதையாக இருக்கிறது. 'பட்டாசு வேண்டாம்' இது யுத்தத்தில் தந்தையை இழந்த சிறுவர்கள் பண்டிகை நாளில் கொழுத்தப்படுகின்ற பட்டாசின் சத்தத்தைக் கேட்டு அச்சப்படுவதான சிறுகதையாகும். 'ஓட்டக் குடை' இது ஒரு குறுங்கதையாகும். எழுதிய பல சிறுகதைகளுக்குள் இந்த மேலே சொல்லப்பட்ட தலைப்பிலமைந்த சிறுகதைகள் என் நேரடி அனுபவத்தில் சாதக பாதகங்களை ஏற்படுத்தியமையால் இந்தக் கதைகளின் தலைப்புகள் இன்றும் என் நினைவில் உள்ளது.


உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது? சிறுகதைகளுக்கான உங்களது பாத்திரப்படைப்பு எப்படிப்பட்டது?

என்னைப் பொறுத்தவரையில் எனது படைப்புகள் கற்பனைக்கு அப்பால் அனுபவ ரீதியான அல்லது கண்டுணர்ந்த பட்டறிவுகளையே படைத்து வருகிறேன். அதற்கான கதாபாத்திரங்களை புனைப் பெயரில் சித்தரித்து வருகிறேன். அத்தனை கருக்களும் சமூகத்திற்கு அல்லது எனது கடந்து வந்த வாழ்வியல் பயணத்தில் பட்டுத்தெறித்த விம்பங்களேயாகும். ஆதங்கப் படைப்பாக மட்டுமன்றி ஒரு விழிப்புணர்வுப் படைப்பாகவே இதனை நான் படைத்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாதவர்கள் யாவர்?

எனது இலக்கியப் பயணத்தில் சக எழுத்தாளர்கள் ஆரம்பம் முதல் தற்போது வரை போட்டி பொறாமைகள் அற்ற நல்ல இலக்கிய வாதிகளாக இருந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஒவ்வொரு ஒவ்வொரு இடங்களில் இருந்தவாறே அச்சு ஊடகங்களின் ஊடாக எங்கள் உணர்வு வரிகளைக் கிறுக்கி வந்தோம். அவ்வாறான வேளையிலெல்லாம் எங்களது ஆக்கங்கள் பிரசுரமாகின்ற போது தபால் மூலமாக அந்த ஆக்கங்களின் பிரதிகளை அனுப்பிப் பகிர்ந்து, ஒவ்வொருவரைப் பற்றி ஒவ்வொருவரும் பேசும் களங்களில் உற்சாகப்படுத்தி குறிப்பாக வாசகர்கள் மத்தியிலும் ஒர் இளவட்டமாகப் பெரு வரவேற்பைப் பெற்றுவந்துள்ளோம். இதற்குப் பெரிதும் களம் தந்தது பத்திரிகைகளே. 

அந்தக் காலத்து எழுத்தாளர்கள் பலர் இன்றும் மறக்க முடியாத நட்புக்களில் இருந்து வருகின்றமை தொடரும் இலக்கியப் பயணத்தில் ஒரு ஊன்றுகோலாகவே அமைகின்றது. இவர்களுள் குறிப்பாக மித்திரன் வாரமலர் ஆசிரியராக இருந்த திருமதி. பொன்மலர் சுமன் அவர்கள், சூரியன் வானொலி 'ரீங்காரம்' நிகழ்வின் தொகுப்பாளர் திரு. ரி.எஸ். முகுந்தன் அவர்கள், சுடரொளியில் பணியாற்றிய இராமசாமி ரமேஸ் அவர்கள் இன்னும் பலர் நினைவில் கொள்ளத்தக்கவர்கள்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

ஒரு நெருக்கடியான சூழலில் இருந்தவாறு பத்திரிகைகளுக்கு எழுதிய காலத்தில் பத்திரிகைகளைப் பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி இருந்தேன். ஆனாலும் எழுதிய ஆக்கங்களை எப்படியாவது பத்திரிகைப் பிரசுரமாகப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு மேலெழுந்து நிற்கும். அதனைப் பெறுவதற்கு பலவழிகளில் முயற்சித்திருக்கிறேன். இன்றும் அதை நினைத்தால் அது ஒரு கசப்பான அனுபவமாக இருக்கிறது. ஆனாலும் விடா முயற்சியோடு அந்தப் பிரசுரங்களைப் பார்க்கின்ற துடிப்பின் பயனாக உறவினர்கள், நண்பர்களின் ஆதரவோடு உணவுப் பார்சலில் அந்தப் பத்திரிகைப் பிரசுரங்களை எடுத்து வாசித்த அந்த மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் இலக்கியப் பரப்பில் மட்டுமன்றி வாழ்வியல் பயணத்திலும் மறக்க முடியாதவையே. இது வலி நிறைந்த அனுபவமாகும்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது எழுத்துலகப் பயணத்தின் நீண்ட கால அவா, எனது முதல் காகிதப் பிரசவத்தோடு 2023.12.16 இல் ஒரு அத்திவாரத்தை ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்தும் என்னிடம் இருக்கிற பல்வேறுபட்ட இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்தி இலக்கியப் பரப்பிற்கு நிறைவான ஒரு ஆக்கத் திறனைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல திடம் கொண்டிருக்கிறேன். அதற்கான காலம் கனிவாகும் என்று நம்புகிறேன்.


உங்களது படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது படைப்புகள் முழுமையும் அச்சு இலத்திரனியல் சமூகப் பொது வெளிகளிலேயே பகிரப்பட்டு வந்துள்ளது. அன்று தொட்டு இன்றுவரை அதற்கான அங்கீகாரத்தை வாசகர்கள், இரசிகர்கள் நான் பாவித்த அதன் ஊடக வாயிலாகவே எனக்கான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பகிர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வந்துள்ளனர். அதன் பிரதிபலனாகவே இன்றுவரை இலக்கியத்தோடு இரண்டறக் கலந்த நிலையில் நிற்கிறேன். அதனால் உங்கள் கேள்விக்கு ஏற்ற பதிலை என்னால் பகிர முடியவில்லை. ஆனால் இந்த வாசகர்களும் இரசிகர்களும், நட்பு உறவுகளுமே என்னை இன்னும் இன்னும் முழு வீச்சுடன் படைக்கத் தூண்டுகின்றன என்பதே வெளிப்படையாகும். 


நீங்கள் செய்து வரும் தொடர் பணியில் 'ஏர் நிலம்' சமூக சேவைகள் குறித்து குறிப்பிட முடியுமா?

ஆம். இருப்பதைக் கொடுத்து வாழ்வதால் ஒருவகை ஆத்ம திருப்தியே. 2015 ஆம் ஆண்டு 'ஏர் நிலம்' என்கின்ற சமூக அமைப்பை நிறுவி தாயகத்தின் வடகிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளுக்கு வாழ்வாதார, கல்வி, பொருளாதார பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை அந்தந்த சூழலின் தன்மைக்கேற்ப தேவையுடையோரின் வேண்டுகையின் அடிப்படையில் வழங்கி வருகின்றோம். இப் பெரும்பணிக்கு அல்லது இந்த மனித நேய தார்மீக உரிமைக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற தனவந்தர்கள், பரோபகாரிகள் தங்கள் வாழ்வியல் சுமைகளோடு இவ்வாறான பணிகளையும் பெரு விருப்போடு முன்னெடுத்து வருகின்றனர். 

ஏர் நிலத்தின் நிறுவுனராக சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்தவாறு நானும், ஆரம்ப காலத்தில் தாயகத்தில் ஏர் நிலப் பணிகளை கவிஞர் யோ. புரட்சி அவர்களும் முன்னெடுத்து வந்தோம். தற்போது கள, புல இணைப்பாளராக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திரு. தனம் நித்தி அவர்களும், மாவட்ட ரீதியான செயலாற்றுனர்களாக மன்னார் மாவட்டம் கவிஞர் மன்னார் பெனில், முல்லைத்தீவு மாவட்டம் கவிஞர் ஜே. லக்சிதரன், கிளிநொச்சி மாவட்டம் கவிஞர் தே. பிரியன், மகளிர் செயற்பாட்டாளர் சமூக சேவகி ர.வதனா, யாழ். மாவட்டம் சமூக சேவகர் திரு. த.லதன், திருகோணமலை மாவட்டம் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடாகவும், வடிவமைப்பாளர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஜெயா சஞ்ஜீவன், சமூக ஆர்வலர் திரு. ப.கரிகரன் ஆகியோருடன் ஆலோசகர் திருமதி கலாநிதி இ. சூரியகுமாரி அதிபர் கிளிஃ முரசுமோட்டை மகா வித்தியாலயம் ஆகியோருடன் சமூகப் பொருளாதார அபிவிருத்தி, முன்பள்ளிகள் அமைத்தல், பாடசாலை வகுப்பறைகள் அமைத்தல், இல்லிடம் அமைத்தல், குடிநீர் வசதி, விவசாயம் எனப் பல்வேறுபட்ட சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன் 'அமுதம்' கல்வித் திட்டம் நிறுவப்பட்டு வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கு மாத அடிப்படையில் கற்றல் ஊக்குவிப்பு நிதி நான்கு வருடங்களாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இவ் அமுதம் கல்வித் திட்டமானது ஆரம்ப காலத்தில் 15 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 35 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இவ்வருட நடுப் பகுதியில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாடுகள் மக்களால் மக்களுக்காகவே முன்னெடுக்கப்படுகின்ற ஒர் ஆத்ம திருப்தியான பணியாகும்.


சக இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன?

படைப்புக்கள் என்பது வெறுமனே வாசித்துவிட்டு கடந்து போவதற்கானதாக அல்லாமல் ஒரு காலத்தின் அல்லது ஒரு சமூகத்தின் சீர்திருத்தத்தை அறிந்து கொள்வதற்கு ஏற்றால்போல் உயிரோட்டம் நிறைந்ததாக ஓரளவேனும் ஆழ்மனதில் மாற்றங்களை உண்டு பண்ணக்கூடியதாக, அதற்கும் மேலாக சிந்தனா சக்தியை விழிப்படையச் செய்வதாக, நாளாந்த வாழ்விற்கு உரமேற்றக் கூடியதாக அமைதல் வேண்டும். கற்பனைகளுக்கு அப்பால் எம்மவரின் படைப்புகளுக்குள் வலியும் வேதனையும் வாழ்வியலில் நிறைந்திருப்பதனால் எமது படைப்புகள் ஆத்ம உயிரோட்டம் உள்ளது என்பதை இளைய படைப்பாளர்கள் நன்குணர்ந்து படைத்தல் நன்று.


முடிவாகப் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் கூற விரும்புவது என்ன?

படைப்பாளர்களே! நீங்கள் ஒரு காலத்தின் கண்ணாடி. உள்ளதை உள்ளபடியும் வெளிப்படைத் தன்மையோடும் எழுதுகின்ற, பேசுகின்ற ஒரு கருத்துச் சுதந்திரவெளி முடக்கப்படுவதென்பது படைப்புக்களுக்கான பாய்ச்சலை பெரிதும் பாதிக்கும் என்பதே வெளிப்படையானது. இருந்தாலும் ஒரு அசாத்திய துணிச்சலோடு, ஒர் இலக்கிய வெறியோடு, சமூகப் பற்றோடு தன்னார்வப் படைப்பாளர்களாக பல படைப்பாளர்கள் தங்களை சமூகவெளியில் கட்டுடைத்து வெளிப்படுத்தி நிற்கிறார்கள். 

காலத்தை, அதன் கனதியை, எமது வாழ்வியலை, எமது வலிகளை, நாங்களே படைக்க வேண்டும் என்ற ஓர்மத்தோடு ஒவ்வொரு படைப்பாளர்களும் இலக்கியத் தரப்பில் புதுயுகம் படைக்கத் தயாராக வேண்டும் என்பதோடு, பெண் படைப்பாளர்கள் தமக்கான அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து அதற்கெதிராக படைப்புகளை அதிகம் வெளிப்படுத்தி நிற்க வேண்டும். இவை அனைத்திற்கும் வாசகர்கள் பெரும் களம் தந்து தொடர் பயணத்திற்கு பாலம் அமைத்து ஒரு எழுத்தாளன் சமூகத்தில் எழுத்துக்களால் புரட்சி செய்ய அல்லது மாற்றத்தை ஏற்படுத்த தகுந்த முறையில் வரவேற்பினையும் உற்சாகத்தினையும் தாங்கி நிற்க வேண்டிய தார்மீகப் பொறுப்பினை வாசகர்களே கொண்டிருக்க வேண்டும். 

ஓர் இலக்கியப் படைப்பாளி தொடர்ந்தும் பயணிக்க தாங்கு தூண்களாக வாசகர்களே பெருந் துணை புரிய வேண்டும். இதற்கு வாசகர்கள் அதிகம் வாசிப்பு மற்றும் கலை நாட்டங்களில் தீவிர போக்கைக் கடைப் பிடிப்பதே சாலவும் நன்றாகும். இச் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கிய நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் ஊடகவியளலாளர், கவிதாயினி, அன்புச் சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் பத்திரிகை ஆசிரியர், நிர்வாகக் குழுவினர் பெருமதிப்பிற்குரிய வாசக நெஞ்சத்தினர், இலக்கிய உலகத்தினர் அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகும் என்று கூறி; நிறைவு செய்கிறேன்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


48. கிழக்கு வானம் முஸ்தபா மௌஜுத் அவர்களுடனான நேர்காணல்

கிழக்கு வானம் முஸ்தபா மௌஜுத் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் முஸ்தபா மௌஜூத். கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் என்னும் ஊரில் தற்பொழுது வசித்து வருகின்றேன். ஆசிரியராக, அதிபராக 36 வருடங்கள் கல்விப் புலத்தில் பணி செய்து வருகின்றேன். சிறுவயது முதல் இலக்கியத்தின் பால் எனக்கு அதிக ஆர்வமுண்டு. நான் கிழக்கு வானம் என்ற புனைப் பெயரிலும் ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளேன்.


உங்கள் பாடசாலை, மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?


ஆரம்பக் கல்வியை தோப்பூர் அல்-ஹம்றா மத்திய கல்லூரியில் கற்றேன். இடைநிலைக் கல்விக்காக 1977 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிராவில் சேர்ந்து கற்றேன். மீண்டும் ஊர் வந்து அல்-ஹம்றாவிலே 1980 இல் க.பொ.த. சாதாரண தரம் கற்று சித்தியடைந்தேன். 

பின்னர் உயர் தரத்தில் சித்தியடைந்து 1984 இல் எனது பாடசாலையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதலாவது மாணவன் நான்தான். 1985ஃ1986 கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று கலைப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன். பல்கலைக்கழக வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தந்தது. எனது கவிதைப் பயணம் அங்குதான் கிளைவிட்டு வளரத் தொடங்கியது. அந்த இயற்கைச் சூழலும், அழகும் புதிய நட்புகளும் கவிதையின் ஆர்வத்தை தூண்டியது.


உங்கள் தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1987 இல் ஆசிரியப் போட்டிப் பரீட்சை எழுதி திருகோணமலை மாவட்டத்தில் ஆசிரியராக 1988.05.19 இல் நியமனம் பெற்று திஃமூஃஅல்-தாஜ் மகா வித்தியாலயத்தில் கற்பித்தேன். பின்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முடித்ததும் மீண்டும் அந்தப் பாடசாலையில் கற்பித்தேன். பின்பு சாஹிறா வித்தியாலயம், அதன் பின்பு அல்-ஹம்றா மத்திய கல்லூரி, பின்னர் அந்நூர் வித்தியாலயம், அதன் பின்னர் அல்ஸிபா வித்தியாலயம் என்று எனது கற்பித்தல் நடவடிக்கை தொடர்ந்தது. 


பின்னர் புதிய பாடசாலை ஒன்றை உருவாக்கி அல்ஸாஹிர் வித்தியாலயம் எனப் பெயரிட்டு அதிபராக 05 வருடங்கள் கடமையாற்றினேன். பின்னர் சுயவிருப்பில் மீண்டும் ஆசிரியராக திஃமூஃஅல்-ஹம்றா மத்திய கல்லூரியில் கடமையாற்றினேன். தற்போது பாலத்தோப்பூர் ஸாஹிறா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருகின்றேன். 

தரம் 8 முதல் 13 ஆம் வகுப்புக்களுக்கு இஸ்லாம், தமிழ், சமூகக் கல்வி, இஸ்லாமிய நாகரிகம், அரசியல் போன்ற பாடங்களைக் கற்பித்துள்ளேன். 100 க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைகழகம் செல்ல மிகுந்த அர்ப்பணிப்போடு கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனது ஆசிரியர் பணி 35 வருடங்களைக் கடந்து செல்கிறது. ஆசிரியர்ப்பணி அறப் பணி. அர்ப்பணிப்பே முதற் பணி.


உங்களுக்கு இலக்கியத் துறையில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

அது 1979 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன், அப்போதுகளில் எனது பள்ளியில் உள்ள சக நண்பர்கள் சிலர் கவிதை எழுதுவார்கள். அதைப் பார்த்துத்தான் நானும் கவிதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அத்துடன் பழைய சினிமாப் பாடல்களை நான் அதிகமாகக் கேட்பேன், அதன் ஒவ்வொரு வரிகளையும் மிகவும் உன்னிப்பாக இரசிப்பேன், குறிப்பாக கண்ணதாசன் பாடல்கள், வாலியின் பாடல்கள் என்னை வெகுவாகப் பாதித்தன. என் மானசீகக் கவிக் குருவாக கவியரசர் கண்ணதாசனை மகிழ்வோடு குறிப்பிடுவேன். அவரின் பாடல் வரிகள்தான் என்னைக் கவிதை உலகுக்கு வேகமாக வரத்துண்டியது. 


முதலாவது கவிதையை எழுதிய தருணத்தை நினைவுபடுத்தி கூற முடியுமா?

1979 ஆம் ஆண்டு தரம் 10 இல் கற்றுக்கொண்டிருக்கும் வேளை சக நண்பர்களுக்குப் போட்டியாக நானும் கவிதை எழுதினேன். நட்பு என்ற தலைப்பில் நான் எழுதிய முதற் கவிதை அது. அக்கவிதையின் நினைவிலுள்ள வரிகள் பின்வருமாறு:-


அன்று சொன்னாயே

நன்றென்று

அந்த வாழ்க்கையின் 

நன்னாளை 

அன்னாளை என்றென்றும்

நான் மறவேன்

என்னுயிர் உள்ளத்தில்

உள்ளவரை


இதுதான் நான் எழுதிய முதற் கவிதை. இதை எழுதியதும் வகுப்பறையில் நான் வாசித்துக் காட்டினேன். வகுப்பறை ஒரே கலகலப்பாக இருந்தது. இதை என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றும் கூறலாம். இந்த சந்தர்ப்பத்தில் எனது சக நண்பன் ஏ.ஜே. பறக்காத் தொழிலதிபர் (கொழும்பு) துணையாக இருந்து, உற்சாகம் தந்தார். அந்தப் பயணம் இன்று வரை தொடர்கிறது.


புதுக்கவிதைகள் மீது இளைஞர்களுக்கு ஏன் இவ்வளவு மோகம்? நீங்கள் ரசித்த புதுக் கவிதைகளைச் சொல்ல முடியுமா?


புதுக்கவிதை இலகு நடையில் அழகு தமிழில் புனையப்படுவது. பாமரன் வரை புரிந்து கொள்ளக் கூடியதானது. வரம்புகள் இல்லாத காட்டாறு மாதிரி. பூமியைத் தழுவி நழுவி இலக்கியக் கடலில் சங்கமமாவது. ஆதலால்தான் புதுக் கவிதைகளை ஆசிர்வதிக்கிறார்கள். எண்ணங்கள் வண்ணங்களாக யாரும் எழுதலாம் என்பதால் இதற்கு ரசிகர்கள் அதிகம். கவிஞர் வைரமுத்துவின் மரம் பற்றிய புதுக் கவிதை என்னை வெகுவாகக் கவர்ந்தது.


மரம்தான் மரம்தான்

எல்லாம் மரம்தான்..

மறந்தான் மறந்தான்

மனிதன் மறந்தான்..


மனிதா

மனிதனாக வேண்டுமா

மரத்திடம் வா,

ஒவ்வொரு மரமும் போதிமரம்..


மற்றும் கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகள், கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இரசித்த இன்னுமொரு கவிதை,


காற்றில் அலக்கழிந்து

செல்கிறது

பட்டாம் பூச்சி

அதன் கால்களில் காடு


இந்தக் கவிதையை எழுதிய கவிஞரின் பெயர் ஞாபகத்தில் இல்லை. இவ்வாறு நான் இரசித்த கவிதைகள் நிறைய உண்டு. அனைத்தையும் இங்கு எழுத முடியாதுள்ளது.


நீங்கள் இதுவரை வாசித்த நூல்களில் உங்களைக் கவர்ந்த நூல் எது?

நான் வாசித்த முதல் நூல் ஷஷஉமர் முக்தார்|| என்ற நூலாகும். சரித்திர நாவல் சிந்து நதிக் கரையினிலே, மஹ்ஜபீன், மேற்கு வானம், நபிமார்கள் சரிதம், வன வாசம், இப்பி பக்கீர், வந்தார்கள் வென்றார்கள், புனித பூமியிலே, சிலுவை யுத்தங்கள் இதில் மிகவும் பிடித்தவை "மேற்கு வானம்" என்ற நூலாகும். அத்துடன் வைரமுத்துவின் காவி நிறத்தில், வைகறை மேகங்கள் போன்ற கவிதைத் தொகுதிகள், கண்ணதாசன் கவிதைகள், சோலைக் கிளியின் அவணம் கவிதைத் தொகுதி போன்றவற்றையும் குறிப்பிடலாம்.


நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1987 இல் முத்திங்கள் (மூன்று மாதங்களுக்கொரு முறை) வெளியீடு கையெழுத்துப் பிரதியாக ஷஷநினைவாகும் நிஜங்கள்|| என்ற பெயரில் கவிதை இதழ்கள் இரண்டை வெளியீட்டேன். அடுத்து தோப்பூர் மண்ணில் முதலாவது வெளியாகிய எனது தனிப்பட்ட இலக்கியப் படைப்பு ஷஷகீழ்த்திசைக் காற்று|| என்ற கவிதை நூலாகும். எனது இந்தக் கவிதை நூல் 2022.02.20 இல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் 94 கவிதைகள் இடம்பிடித்துள்ளன.


உங்களது நூலான கீழ்த்திசைக் காற்றின் பேசுபொருள் குறித்துக் கூறுங்கள்?

கிழக்கின் விடியல் பக்கமாக எழும் காற்றையே இது குறித்து நிற்கிறது. விடியலுக்கான தூதாகவே இக்காற்று அமைகிறது. (எனது நூலும் அமைகிறது) மெல்லியதாய் வீசும் போது தென்றலாய், வருடலாய், இதமாய், கனிவாய், எம்மை மகிழ்வித்துச் செல்லும் தன்மை கொண்டது. காற்று வேகம் கொள்ளும் போது, கோபம் கொள்ளும் போது புயலாகி பெருஞ் சூறாவளியாய் உலகையே உசுப்பி விட்டுப் பாடம் சொல்லும். இந்த இரண்டு கருவையும் மையப்படுத்தியே எனது எழுத்துக்கள் பலருக்குத் தென்றலாகவும், பலருக்குப் புயலாகவும் வீசி அடித்துத் தாக்கும் வல்லமை கொண்டது. இதில் கிராமியம் மணக்கும். காதல் சிலிர்க்கும். ஏக்கம், தவிப்பு, ஏமாற்றம், வலி, துயரம், விடுதலை எல்லாம் தாங்கி சமாதனம், சமத்துவம் போதிக்கும்.


நூல் வெளியீடுகளில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதல் காப்பாற்பட்டது, வெற்றி கிட்டியது, வரவேற்பு பலமாக இருந்தது என்று சொல்வதைவிட இது மனத்திருப்திக்கான பயணம் என்றே சொல்ல முடியும். இதனால் நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. 


புதுக்கவிதையென்பது மரபுக் கவிதையிலிருந்து தன்னை முழுமையாகத் துண்டித்துக் கொள்கின்றதா? 

இல்லை. சந்தம், சீர், அணி, எதுகை, மோனை, இவைகள் கலந்த சுவைமிக்கதானதே புதுக் கவிதை. எழிய நடையில் இவைகளைக் கலந்து அழகு செய்ய வேண்டும். இல்லாது போனால் உப்பில்லாத பண்டம் போல் ஆகிவிடும்.


மரபுக் கவிதைகளை மனதில் நிறத்தி வைப்பது மாதிரி புதுக் கவிதைகளை நினைவில் நிறுத்திக் கொள்ள முடியுமா?

ஏன் முடியாது? இதற்கு சில உதாரணங்களைக் குறிப்பிட முடியும். சினிமாப் பாடல்கள் எல்லாம் புதுக்கவிதைகள்தான். அந்தவகையில் கண்ணதாசன், வைரமுத்து, வாலி, மு. மேத்தா, பேன்றவர்களின் பாடல்கள் மக்கள் மனதில் பதியவில்லையா? பேச முடியாத குழந்தையும் முணுமுணுப்பது இந்தப் பாடல்களைத்தானே. கடின சொற்களால் வடிக்கப்பட்ட கவிதைகளை மெத்தப் படித்தவர்கள் மட்டுமே வாசித்து இன்புற முடியும்.  அதாவது 20 வீதத்தினர் மட்டுமே. மிகுதி 80 வீதத்தினர்; புதுக் கவிதைகளின் சுவைகளைப் பருகியவர்கள் தான். இதுதான்  நிதர்சனம். இன்று உலகை, தமிழை ஆட்சி செய்வதும் இதுதான்.


மரபுக் கவிதைகள் காலப்போக்கில் முற்றாக அழிந்துவிடும் என்று பரவலாகச் சொல்லப்படுகிறதே இதுபற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மரபுதான் புதுக் கவிதையின் பிறப்பிடம், அடித்தளம். அது இன்றி இது இல்லை. ஓரளவு மரபுகள் பேணி எழுதும் புதுக்கவிதையே காலங் கடந்தும் மணக்கும். வேரில்லாது கிளைகள் ஏது? மரபின் அலங்காரமே புதுக்கவிதையாகும்.


இலக்கணம் தெரியாதவர்கள் புதுக்கவிதை எழுதுகிறார்கள் என்கிறார்களே இதற்கு என்ன சொல்வீர்கள்?


கவிதையை யார் உருவாக்கியது? வரம்புகள் இட்டவர்கள் யார்? இது குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் உரித்தானதா? என்ற வினா இன்றும் எழுதுகிறது. புரியாத மொழியில், புரியாத வடிவில் இருந்தால் யாருக்கு இலாபம்? மண்ணில் புதைந்த மாணிக்கம் மாதிரித்தான். 

கவிதைகளின் தோற்றுவாய் படிக்காத ஏழை பாமரமக்களே, அவர்கள் முறையாக இலக்கணம் படிக்கவில்லை. இலக்கியம் வடிக்கவில்லை. ஆனால் எண்ணங்கள் வாழ்வியல் சோகங்களை, மறக்க நாட்டாரியலை உருகிப் பாடி மகிழ்ந்தார்கள். அவர்களை அறியாமலே மரபுகளும், ஓசைகளும், சந்தங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து சுவை தந்தன. வாழ்வில் அனைத்தையும் அவர்கள் அப்பாடல்களுக்குள்ளே கொண்டு வந்தார்கள். அவர்களின் அழகு நடைகளே காலப்போக்கில் மரபுகளாகவும், புதுக் கவிதைகளாகவும் தோற்றம் பெற்று வளர்ந்தது. படித்தவர்கள் பேர் பெறக் காரணமாயிற்று என்பதுதான் வரலாற்று உண்மை. இதை மறுப்பார் யாரும் இல்லை.

கருத்தாழம், அழகு, மென்மை, இனிமை சுருங்கச் சொல்லல், அவைகள் கலந்து வரும் அழகான அருவியே புதுக்கவிதை. இரண்டும் ஒரு தாய்ப் பிள்ளைகள்தான். முத்தவர், இளையவர் அவ்வளவுதான். ஆகவே இலக்கணம் ஒரு பொருட்டல்ல. இதில் மொழி வளமே முக்கியம் பெறுகின்றது.


பாரதியார் பெண்களை தமிழ் பாடல்களில் உயர்த்திப் பாடி "பாரதிகண்ட புதுமைப் பெண்" எனப் புரட்சி எழுப்பினார். உங்கள் கவிதைகளில் பெண்கள் எந்த இடம் வகிக்கின்றனர்?

நான் பெண்களை மதிப்பவன். என் எழுத்துக்கள் பெரும்பாலும் ஏழைகளையும், பெண்களையும் அவர்களின் வலிகளையும் பாடுவதாகவே அமையும். பெண்ணியம் போற்றுதற்குரியது பெண்மை மகத்துவமானது. பெண்மை அது தூய்மையின் உறைவிடம். பெண்களின் எழுச்சி சமூகத்தின் மறுமலர்ச்சியாகும்.

 

பிறமொழிக் கவிஞர்கள் பற்றி?

உருது கவிஞர் அல்லாமா இக்பால், உருது கவிஞர் உமர் கையாம் ஆகியோரின் கவிதைகள் கருத்தாளமும் புதுமையும் புரட்சியும் மிக்கவையாக உள்ளன. அதனால் அவற்றை விரும்பிப் படிப்பேன். அவர்களின் புரட்சி வரிகள் எனது கவிதைகளிலும் இழையோடிக் காணப்படும்.


நீங்கள் இதுவரை எழுதிய கவிதைகளில் கிராமிய மணம் பரப்பும் அழகிய கவிதை ஒன்றைக் குறிப்பிட முடியுமா?

ஒரு ஏழைக் கணவன் - மனைவியின் காதலும் ஊடலும் பற்றி பின்வரும் ஷஷகடலுக்குப் போனவக|| என்ற கவிதை மூலம் தருகிறேன்.


கடலுக்குப் போன மச்சான்

கருக்கலுக்க வாறீங்களா

காத்து நாகெடந்து

கருவாடாப் போகலாமா


கடலுக்க மீனுமில்லக்

கண்டலுக்க நண்டுமில்லக்

கடிநாயப் போலனாக்

கடலுக்க அலைஞ்சேன்டி


ஒன்ட நெனப்போட

ஒத்தயா நின்டேன்டி

ஓரா ஒன்னுரெண்டு

ஒனக்காகப் புடிச்சேன்டி


அதுக் கொண்ணும் அலுப்பில்ல

ஆசைக்கு வெக்கமில்ல

தொட்டிலில பச்சப் புள்ள

அஞ்சாவது வேணுமாக்கும்


அடியே கருவாச்சி

ஆசைக்கு அலுப்பில்ல

வக்கணயாப் பேசாத

வாடாத மல்லிகையே 


பூசி மெழுகிப்

பேசினது போதும் மச்சான்

பூவான கையால

வெள்ளாணம் கேக்கு தாக்கும்


புளிய காச்சிருக்குப்

புளியங்கா கொண்டாங்க

தேங்காயும் திருவுங்க

தங்கத்துக்கு நாதறென்


காத்தும் அடிக்குதுகா

கருமேகம் சுத்துதுகா

மழைக்கு முன்னால

மல்லாந்து படுக்கனுங்கா


ஊரு பொம்பளைக்க

ஒசத்தி நீதான்டி

உசிரு கெடக்கும் வர

உசிரா இருப்பேன்டி


அடிப்போடும் மச்சானே

அதுக் கொண்ணும் கொறவில்ல

படுக்கப் பாயில்ல

பவுசுக்குப் பஞ்சமில்ல


சிரிப்பு வருவுதடி

சொன்னவொரு சொல்லால

கறுப்பு என்றாலும்

கட்டழகி நீதான்டி


அடுப்புல கறிகொதிக்க

அடிமனசும் கொதிக்குதுகா

கொடுஞ் சிரிப்பும் பறியுதுகா

நெனச்சுப் பாக்கயில


குருவிக் குஞ்சுகளப்

பசியாத்திப் படுக்கவையி

கைகால அலம்பிக்கிட்டு

அடுப்படிக்கு நாவாறன்


ஏழைங்க இல்லத்து

இதிகாசம் இதுதாங்க

மண்வீட்டு மாளிகையின்

மணிக் காதல் சுவைதாங்க


ஆசிரியராக, அதிபராக கடமையாற்றிய உங்களால் மாணவர்களிடையே காணப்படும் இலக்கிய ஆர்வம் பற்றி என்ன சொல் முடியும்?

இன்றைய கால கட்டத்தில் மாணவர்கள் இலக்கியத்தின்பால் மிகவும் ஈர்ப்பு இல்லாமலே காணப்படுகின்றார்கள். படிப்பதில், வாசிப்பதில் ஆர்வமின்மை, தேடல் மிகவும் குறைந்துள்ளது. தொலைபேசி பாவனை, சினிமா மோகம், நாகரீக மோகம் இவைகள் எல்லாம் இலக்கியம் மீதான பார்வையை மிகவும் வேகமாகப் பாதிக்கின்றன. இவர்களை மீட்டெடுக்க, கலை உணர்வை வளர்க்க வேண்டியது தலையாயக் கடமையாகும். 


இப்போதைய ஒரு சில மாணவர்களிடம் போதைப் பழக்கம் காணப்படுகிறது. மாணவர்களைப் போதையில் இருந்து மீட்க ஒரே வழி இலக்கியத் தாகத்தை அவர்களிடம் தூண்ட வேண்டும். அதன்பால் அவர்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் ஒரளவு மாற்றம் நிகழும் என்பது எனது கருத்தாகும்.


உங்கள இலக்கிய வாழ்வில் இதுவரையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவம் என்றால் எனது நாற்பது வருடக் கனவான கீழ்த்திசைக் காற்று நூல் வெளியீடுதான். எனது நீண்ட காலக் கனவு நனவான சம்பவம், ஊர் கூடி மகிழ்ந்த தருணம், நான் அங்கீகரிக்ப்பட்ட நாள், இது எனது மண்ணின் சாதனையின் முதற்படி ஆகும். இந்த இலக்கியப் படைப்பை இந்த மண்ணில் உருவாக்கியவன் என்ற மனத்திருப்தியே இன்னும் படைக்க ஆர்வம் ஊட்டுகிறது.


இதுவரை நீங்கள் பெற்ற விருதுகளும் சான்றிதழ்களும் பற்றி நீங்கள் குறிப்பிட முடியுமா? 

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளின் கலை இலக்கியக் குழுமங்களுக்குப் போட்டிக் கவிதை எழுதி 750 க்கும் மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களும்  குழுமங்களிலிருந்து 40 க்கும் மேற்பட்ட விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றின் விபரங்களைத் தருகின்றேன்.

• 2019.09.09 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2019.10.07 - 08 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2020.08.06 - 09 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2020.10.22 கிராமியக் கவி விருது - கவியுலகப் பூஞ்சோலை கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2020.10.25 கவிக்குறல் விருது - கவியுலகப் பூஞ்சோலை கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2020 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை)

• 2021.06.18 கவியமுது விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2021.08.19 சிந்தனைச் சிற்பி விருது - கவிதைச் சரணாலயம் (இந்தியா)

• 2021.08.23 கவியருவி விருது - கவிதைச் சரணாலயம் (இந்தியா)

• 2021.09.11 கவிச்சுடர் விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2021.09.18 மகாத்மா விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2021.09.19 விடிவெள்ளி விருது - மகாகவி பாரதி கவிச்சுடர் குழுமம் (இந்தியா)

• 2022.12.27 கலை முத்து - மூதூர் பிரதேச செயலகம் (இலங்கை)

• 2021 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை)


உங்களது எதிர்கால எழுத்து முயற்சி பற்றி குறிப்பிடுங்கள்?

எதிர்காலத்தில் பின்வரும் 05 நூல்களை வெளியிடவுள்ளேன். 


1. தோப்பூர் வரலாறு

2. வெந்து தணிந்தது ஊரு (சிறுகதை நூல்)

3. மலர்வனம் (சிறுவர் பாடல் நூல்)

4. மண் வாசம் (கிராமியக் கவிதை நூல்)

5. பௌர்ணமி இரவு (கவிதை நூல்)


இவற்றையே எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக வெளியீடு செய்ய நினைத்துள்ளேன்.


வேற எதாவது செல்ல விரும்பினால்?

இதுவரை நான் பல குறும்படங்களில் நடித்துள்ளேன். அதாவது கொவிட் பாஸ், கிரிக்கட் வேணாங்க 1, 2, மூதூர் தயாரிப்பான புதையல் மற்றும் கூலி, விளைவு, கில்லர் ஆகிய குறும்படங்களில்; முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளேன். இவற்றை யூடியுப் இணையத் தளத்திலும் காணலாம்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்