Sunday, March 29, 2020

09. பஸ்லி ஹமீட் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.08.13

எழுத்தாளர் பஸ்லி ஹமீட் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் பஸ்லி ஹமீட். களுத்துறை மாவட்டம், பேருவலைக்கு அருகாமையில் உள்ள தர்கா நகரே எனது ஊர். நான் என்னை ஒரு சிறந்த வாசகனாகவே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அதுபோக கதை, கவிதை, ஹைக்கூ எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறேன். தொழிலாக நண்பர் ஒருவருடன் கூட்டிணைந்து அச்சகம் ஒன்றை நடத்துகிறேன். www.facebook.com/kaviththolan என்ற பக்கத்தில எனது கவிதைகளை வாசிக்கலாம்.


02. உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

வாழ்வின் பொற்காலமே பாடசாலை வாழ்க்கை என்பார்கள். அதிலும் குறிப்பாக உயர்தரம் படித்த அந்த இரண்டு வருடங்கள் எனக்கும் அப்படியே. நான் தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரியிலேயே கற்றேன். வெறும் பாடசாலைக் கல்வியோடு மட்டுப்படுத்தப்படாமல் சமுதாயத்தில் ஒரு சிறந்த அங்கத்தவனாக வாழ்வதற்கான அடிப்படைகளையும் எனது பாடசாலையே கற்றுத் தந்தது. அக்காலத்திலேயே நான் இலக்கிய உலகிற்குள் நுழைந்தேன். பாடசாலை சார்பாக பல இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கின்றேன். அந்த நாட்கள் ஒவ்வொன்றையும் இன்றுவரை என் ஞாபகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்.


03. உங்களை எழுதத் தூண்டியது எது?

வாசிப்பே என்னை எழுதத் தூண்டியது. சிறு வயதிலேயே புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன்;. அதிலும் குறிப்பாக கதைப் புத்தகங்களை அல்லது கதைகளை தேடி வாசிப்பேன். வாராந்தப் பத்திரிகைகள், நூல் நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் புத்தகங்கள் என வாரத்திற்கு ஐந்தாறு கதைகளையாவது படித்திருப்பேன். நான் கவிதைக்குள் காலடி வைத்தது சற்றுத் தாமதித்தே. 1985, 1990 களில் சஹீட் எம். நியாஸ் என்ற கவிஞரின் கவிதைகளைத்தான் நான் முதன் முதலாகப் படித்தேன். அவர் ஒரு சிறந்த மரபுக் கவிஞர். துரதிர்ஷ்டவசமாக 1990 களுக்குப் பின் அவர் எழுதுவதை நிறுத்திக்கொண்டார். அவரது கவிதைகளே என்னை கவிதை எழுதத் தூண்டின.


04. முதலாவது படைப்பு பிரசுரமானபோது உங்களது மனநிலை எப்படியிருந்தது?

இந்தக் கேள்விக்கு நீங்கள் ஆச்சரிப்படக்கூடிய ஒரு பதிலையே என்னால் தர முடியும். எழுத்துத் துறையில் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆர்வம் இருந்த போதும் எனது ஆக்கங்களை நான் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கியது நான் உயர்தரப் பரீட்சை எழுதி முடித்ததன் பின்னர்தான். எனது முதலாவது ஆக்கமாக பத்திரிகையில் வெளிவந்தது ஒரு கவிதையே. அதனைக் கண்டதும் எனக்கு வெறுப்பே ஏற்பட்டது. மிகுந்த கவலையடைந்தேன். நான் நீண்ட காலமாக பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை அனுப்பி வந்தேன். ஆனால் அவை ஒன்றுகூட வெளிவரவில்லை. இப்படி ஆக்கங்களை அனுப்பிவிட்டு பிரசுரமாகும் என்று எதிபார்த்து ஏமாற்றத்தை மட்டுமே பெற்றுக் கொண்ட நான் எனது ஆக்கங்களின் தரத்தின் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக நான் ஏற்கனவே ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய கவிதையொன்றை ஒரு பெண்ணின் பெயரிட்டு அவர் அனுப்புவதுபோல் அதே பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். என்ன ஆச்சரியம், இரண்டாவது வாரமே பிரசுரமாகி இருந்தது. அதையடுத்து இன்னும் சில கவிதைகளை அதே பெண்ணின் பெயரில் அனுப்பி வைத்தேன். அவையும் பிரசுரமாகின. எனது எழுத்துக்களில் தவறில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை அனுப்புவதை அத்தோடு நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் 2000 ஆம் ஆண்டளவில் மர்ஹூம் திரு. எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் தினகரனில் 'புதுப்புனல்' என்ற பகுதியைத் தொடங்கி பல இளையவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். நானும் எனது கவிதையொன்றை அனுப்பி வைத்தேன். அது பிரசுரமானதுடன் திரு. ஷம்ஸ் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதமும் வந்தது. புதுப்புனலுக்கு கவிதைகள் அனுப்ப வேண்டாம் எனவும் ஞாயிறு தினகரனுக்கு அனுப்பும்படியும் அதில் கேட்டிருந்தார். அதன்பின் தொடர்ச்சியாக தினகரன் வாரமஞ்சரியில் எனது கவிதைகள் வெளிவந்தன. திரு. ஷம்ஸ் அவர்களின் மறைவிற்குப் பின்னால் அதுவும் நின்று போனது.


05. ஒரு நல்ல கவிதை எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கவிதைகள் எப்படியும் இருக்கலாம் என்றே சொல்வேன். கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.  கவிதை பல வடிவங்களைப் பெற்றுவிட்டது. இன்றும் பல புதிய வடிவங்களில் கவிதை தன்னை வெளிப்படுத்துகிறது. எதிர்காலத்தில் இன்னுமின்னும் மாற்றங்களுக்கு உட்படலாம். கவிதையில் கெட்டது என்று ஒன்று இருக்க முடியாது. கவிதையில் நல்ல கவிதை, நல்லது அல்லாத கவிதை என்று தரம் பிரிப்பதற்குமில்லை என்றே சொல்ல வேண்டும். எல்லாக் கவிதைகளும் நல்ல கவிதைகளே. கவிதை வெறும் வாசிப்போடு நின்றுவிடுவதில்லை. அது உணர்வுகளில் கலக்கின்றது. ஒரு கவிஞன் ஒரு சம்பவத்தில், தான் உணர்ந்து அனுபவித்ததை அதே உணர்வோடு பிறிதொருவரும்  அனுபவிக்க வழங்கும் அவகாசம் கவிதையில்தான் உள்ளது. இங்கே வாசகனின் இரசனை மட்டமும் செல்வாக்குச் செழுத்துகின்றது. எல்லோருக்கும் ஒரேமாதிரியான இரசனை இருப்பதில்லை. எனவே ஒரு கவிதை வௌ;வேறுபட்ட வாசகர்களுக்கு வௌ;வேறுபட்ட அனுபவங்களைக் கொடுக்கலாம். ஆனாலும் சில கவிஞர்கள் முரண்பட்ட இரசனை மட்டங்களிலிருப்பவர்களுக்கும் தான் உணர்ந்த அதே அனுபவத்தை உணர்ந்து அனுபவிக்கக் கூடிய தருணங்களை தமது கவிதைகளால் வழங்குகின்றனர். அவர்களுள் மிக முக்கியமானவராக றியாஸ் குறானாவை நான் காண்கின்றேன்.

06. இதுவரை நீங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளேன். ஒற்றையடிப்பாதை, இயற்கை இயல்பு என்பனவே அவை. ஒற்றையடிப்பாதை நான் பேஸ்புக்கில்; தொடர்ச்சியாக படங்களோடு பதிவேற்றி வந்த சின்னஞ்சிறு கவிதைகள் 200 இனை அப்படியே படங்களோடு தொகுத்து நூலாய் வெளியிட்டேன். இயற்கை இயல்பு 100 ஹைக்கூக்களை கொண்ட ஹைக்கூ நூல். இந்த நூல் முற்று முழுதாக ஹைக்கூ விதிமுறைகளை ஏற்று அசைக் கட்டுப்பாட்டுக்கு அமைய இலங்கையில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


07. உங்களுடைய எந்தப் படைப்பு முதன் முதலாகப் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றது?

பலரதும் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு என்னுடைய கவிதைகள் பெரியளவில் பத்திரிகைகளில் பிரசுரமானதில்லை. நான் முன்பு குறிப்பிட்டதுபோல் மர்ஹூம் திரு. எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் தினகரனில் பணிபுரிந்த காலத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 2001.01.04 ஆம் தினம் வெளிவந்த 'மணமகள் தேவை!' என்ற எனது கவிதை பலரது கவனத்தையும் ஈர்த்ததை அறிவேன். மிகுந்த பாராட்டுக்கள் கிடைத்தன. அக் கவிதைக்கான பல கவிஞர்களின் பதில்க் கவிதைகளும் அடுத்தடுத்த வாரங்களில் தினகரனில் பிரசுரமாகின. அதுவல்லாமல் தற்போது பேஸ்புக்கில் நான் பதிவிடும் கவிதைகளுக்கும் மகிழ்ச்சிகொள்ளத்தக்க அளவு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.


08. உங்கள் படைப்புகளுக்கான கருப் பொருள்களை எவ்வாறு தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

கண்ணுக்குத் தெரியும் காட்சிகளும், கற்பனைக்கு எட்டும் சாத்தியங்களுமே கவிதைக்கான கருப் பொருட்களாகின்றன. கவிதையைத்தேடி ஒரு போதும் நான் கற்பனையை அலையவிடுவதில்லை. எப்போது அது என் கற்பனைக்குள் வருகின்றதோ அப்போது எழுதிவைத்துக் கொள்வேன். அதற்கு நேரகாலம் கிடையாது. சிலபோது பிரயாணத்தில் கவிதை வரும். சிலநேரம் தனிமையில், சாப்பிடும்போது, குளிக்கும்போது, தூங்கும்போது என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் கற்பனையில் கவிதை எட்டும். அவற்றை உடனுக்குடன் பதிந்து கொள்வேன். பிறகு மெருகேற்றுவேன். யாதார்த்தத்தில் உள்ள முரண்களை கவிதையாக்குவதையே அதிகம் விரும்புகிறேன். அதிலும் மிகவும் நீண்டுவிடாமல் சிறியதாய் எழுதவே அக்கறை காட்டுகிறேன்.


09. எழுதுவது, வாசிப்பது இதில் எதற்கு அதிக நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?

குடும்ப வாழ்க்கை, தொழிற்றொரவுக்கு மத்தியில் கிடைக்கும் நேரத்தை வாசிப்பதற்கே ஒதுக்குகிறேன். கவிதை எழுதுவதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கவது கிடையாது. எந்த நேரத்தில் கவிதை தட்டுப்படுகிறதோ அந்த நேரத்திலேயே எழுதிவிடுவேன். பின்பு வேறொரு வேலையில் ஈடுபட்டிருக்கும் போதுகூட எழுதிவைத்த கவிதையயை செப்பனிட்டுக் கொள்வேன்.  எனவே நான் என்னை ஒரு எழுத்தாளன் என்று சொல்வதை விடவும் ஒரு நல்ல வாசகன் என்று சொல்லவே அதிகம் விரும்புவேன். மாதத்துக்கு ஒரு நாவலாவது படிப்பேன். நிறையப் புத்தகங்கள் வாசிப்பேன். இணையத்தளங்களில் உள்ள பயனுள்ள கட்டுரைகளைத் தேடிப் படிப்பேன்


10. இதுவரைகால இலக்கிய வாழ்வில் உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் கூறுங்கள்?

ஏராளமான சம்பவங்கள் உண்டு. 2000 ஆம் ஆண்டுகளில் சக்தி எப்.எம். வானொலி ஞாயிற்றுக் கிழமை இரவுகளில் சக்தியின் முத்துக்கள் பத்து என்ற பாடல் தேர்வு நிகழ்ச்சியொன்றை நடாத்தியது. அந் நிகழ்ச்சியில் 10 பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வந்ததுடன் அதில் ஒரு பாடலுக்கு நான்கு வரிக் கவிதையுடன் வாக்களிக்கும் வாய்ப்பினையும் நேயர்களுக்கு வழங்கியிருந்தது. 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே.....' என்ற 'ஜோடி' படப் பாடலுக்கு நான் தொடர்ச்சியாக 100 வாரங்கள் 4 வரிக் கவிதைகள் எழுதியுள்ளேன். அந்தக் காலத்தில் ஒரு நாள் வழமைபோல் அப்பாடலுக்கு 4 வரிக் கவிதை ஒன்றை தபாலட்டையில் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் நான் எழுதித் தபாலிட்ட அதே நான்கு வரிகள் ஒரு தேனீர் கடையில் பாடலாய் ஒலித்துக் கொண்டிருந்தன. அது ஒரு பழைய திரைப்படப் பாடல். ஆனால் உண்மையில் அந்த வரிகளை கற்பனை செய்துதான் எழுதினேன். ஆனாலும் அவை பாடலாய் ஒலிக்கும்போது எனக்குத் திக்கென்று இருந்தது. உடனே தபால் நிலையத்துக்குத் திரும்பிச் சென்று அங்குள்ள அலுவலர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி கெஞ்சிக் கதறி ஒருவாறு தபாலட்டையை மீளப் பெற்றுக் கொண்டேன். தப்பித் தவறியேனும் அந்த வரிகளை குறிப்பிட்ட நிகழ்ச்சியில் வாசித்திருந்தால் நானும் ஒரு இலக்கியத் திருடனாக ஆகியிருப்பேன். அந்த சம்பவத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அப்படி என்னைத் தடுமாறச் செய்த அந்த நான்கு வரிகள்.

மலரைப் பறித்தாய்
கூந்தலில் வைத்தாய் - என்
மனதைப் பறித்தாய்
எங்கே வைத்தாய்?


11. நீங்கள் சிறுகதைகளையும் எழுதுவதாக அறிகின்றேன். உங்களுடைய கதைக்கான கரு எப்படி உருவாகின்றது?

சிறுகதைகளைக் கொண்டுதான் எனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தேன். ஆனபோதும் இப்போதெல்லாம் கவிதைகள் எழுதும் அளவிற்கு கதைகள் எழுதக் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்காமையே முக்கிய காரணம். சுற்றுச் சூழலிலிருந்துதான் சிறுகதைகளுக்கான கருக்களைப் பெற்றுக் கொள்கின்றேன். அநீதியிழைக்கப்பட்ட அல்லது அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை பின்னணியாக வைத்தே பெரும்பாலும் கதைகளை எழுதியிருக்கிறேன். அவற்றில் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள் எதுவுமின்றி யதார்த்தமாய் அமையும்படி பார்த்துக்கொள்வேன்.


12.  இன்றைய இலக்கியப் போக்கு பற்றி உங்களது கருத்து யாது?

மிகச்சுருக்கமான ஒரு பதிலையே சொல்ல விரும்புகிறேன். இன்றைய இலக்கியப் போக்கு முதலாலித்துவம் சார்ந்த போக்காகத்தான் உள்ளது. அதிகாரம் உள்ளவர்கள் ஆளுகிறார்கள். அதிகாரம் அற்றவர்கள் அடங்கிப் போகிறார்கள்.


13.  உங்களுடைய படைப்புகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு அமைந்திருந்தன?

பத்திரிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவருவதில்லை என்பதனால் பரவலான விமாசனங்கள் எதுவும் கிடைப்பதில்லை. எனது எழுத்துக்களுக்கு நானே இரசிகன். என்னைத் திருப்திப்படுத்தவே நான் எழுதுகிறேன். பேஸ்புக்கில் எனது நட்பு வட்டத்திலிருக்கும் நண்பர்கள் நான் இடும் பதிவுகளை இரசிக்கின்றனர். தட்டிக் கொடுக்கின்றனர். ஆனாலும் ஒற்றையடிப்பாதை நூலுக்கு உற்சாகம் தரும் விதத்தில் பல விமர்சனங்கள் கிடைத்தன.

14. பேஸ்புக் புக் அல்லது இணைய எழுத்தாளர்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

நானும் ஒரு பேஸ்புக் எழுத்தாளன் என்ற வகையில் சமூகத்தளம் அல்லது இணையத்தளங்கள் எழுத்தாளர்களுக்கு அதிலும் குறிப்பாக இளம் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வரம் என்றே சொல்வேன். இன்று பெரும்பாலான எழுத்தாளர்கள் பேஸ்புக்கில் எழுதத் தொடங்கிவிட்டார்கள். தமது ஆக்கங்களை உடனுக்குடன் உலகலாவிய வாசகர்களின் பார்வைக்கு கொண்டு செல்லக்கூடியதுடன் அவை பற்றிய கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றமையே இதற்கான பிரதான காரணம். அடுத்து பத்திரிகைகளினால் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த என்னைப் போன்ற பலர் மீண்டும் எழுதத் தொடங்கியமைக்கு பேஸ்புக் போன்ற வலைத்தளங்களே வழியமைத்தன. பல இளம் எழுத்தாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் இங்கும் பெரும்பாலானவர்கள் குழுக்களாகவே இயங்குகிறார்கள். தத்தம் குழுக்களில் உள்ளவர்களின் எழுத்துக்களையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களையே தட்டிக் கொடுக்கிறார்கள். இது கவலைக்குரிய விடயமாகும்.


15. உங்களுடைய எழுத்து வாழ்க்கை உங்களுக்கு மன நிறைவைத் தருகிறதா?

என் எழுத்துக்கள் நிச்சயமாக மன நிறைவைத் தருகின்றன. நான் என்னைத் திருப்திப்படுத்தவே எழுதுகிறேன். எழுதிய ஆக்கங்களை மீண்டும் மீண்டும் பல முறை வாசித்துப் பார்ப்பேன். நான் திருப்திப்படும் வரையினில் அவற்றைச் செப்பனிடுவேன். என் மனதுக்கு நிறைவாய் இருந்தால் மட்டுமே பதிவிடுவேன். நிறைய வாசிக்க வேண்டும், நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அன்றாட வேலைகளுடன் கிடைக்கும் சொற்ப நேரத்திலேயே இவைகளைச் செய்ய முடிகின்றது.


16. இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பரிசுகள் கிடைப்பதற்கு எந்த விதமான போட்டிகளிலும் எனது கவிதைகளை நான் பங்குபெறச் செய்ததில்லை. கவிதைகளுக்கு போட்டி நடத்தி, தரம் பிரித்து பரிசு கொடுப்பது உகந்ததல்ல என்பதே எனது நிலைப்பாடு. இரசனை என்பது எல்லோருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை. குறித்த ஒருவர் எழுதும் ஒரு இலக்கிய ஆக்கத்தை நான்கைந்து பேர் கொண்ட குழுவொன்று அவர்களின் இரசனை மட்டத்திற்கேற்ப தரம் பிரிப்பது நியாயமாகத் தோன்றவில்லை. அடுத்து விருதுகள் பெறும் அளவுக்கு எனது எழுத்துக்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. எனது எழுத்துக்கள் இன்னும் பயிற்சிக் காலத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். அதேபோன்றே இலங்கையில் வழங்கப்படும் விருதுகள் பற்றி எனக்கு எந்தவித நல்லபிப்பிராயமும் இல்லை. விண்ணப்பித்து பெறுகின்ற விருது விருதாக இருக்காது.


17. நிறைவாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

சொல்லவேண்டியவற்றை சொல்லி முடித்துவிட்டேன். இனி இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்து கேள்விகளையும் கேட்ட ரிம்ஸா முஹம்மத் சகோதரிக்கும், பின்வரிசை எழுத்தாளர் என்று புறந்தள்ளிவிடாமல் எம்மைப் போன்றவர்களுக்கும் வாய்ப்பளித்து பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment