பாடகர் மாத்தளைக் கமால் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
1962 நவம்பர் 07ஆந் திகதி மாத்தளையில் பிறந்த நான், மாத்தளைக் கமால் என்ற பெயரில் கலை உலகுக்கு அறிமுகமாகினேன். எனது தாயார் மாத்தளையைச் சேர்ந்தவரானாலும், தந்தையார் இந்தியர். அதாவது தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக்காரர். (1998 இல் அவர் காலஞ்சென்றுவிட்டார்)
என் சிறு வயதிலிருந்தே நான் கலை, இலக்கியத் துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக வளர்ந்து வந்தேன். தமிழ்ப் பாடத்தில் ஒரு பிழை விட்டதற்காக 03ஆம் வகுப்பில் ஒரு தடவையும் ஆங்கிலப் பாடத்தில் ஒரு பிழை விட்டதற்காக 04ஆம் வகுப்பில் ஒரு தடவையும் ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்ட நான், அந்த நிகழ்வுகளின் பின் எல்லா வகுப்புகளிலும், அவ்விரு பாடங்களில் 60க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெறக் கூடியவனாகத் திகழ்ந்தேன். வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக எந்த ஒரு நூல் கையில் கிடைத்தாலும், வாசித்து முடித்த பின்பே அதைக் கீழே வைப்பேன்.
02. உங்களது பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?க.பொ.த. சாதாரண தரம் வரை மாத்தளை மற்றும் கம்பளை ஸாஹிராக் கல்லூரிகளில் கற்று, உயர்தரத்துக்கு சித்தியடைந்த நிலையில், எனது குடும்பத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக எனக்கு உயர்தரப் படிப்பைத் தொடர முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. அதுவரை எல்லா வகுப்பிலும் சித்தியடைந்தேன்.
எனது முதலாவது தொழிலே ட்யூஷன்தான். தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் ஆங்கிலம் பயின்று வந்தார்கள். பிறகு சில பள்ளிவாசல்களில் கடமையாற்றிய அனுபவங்களும் எனக்குண்டு.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் கொழும்புத் துறைமுக அதிகார சபையில் 1996 இல் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவியை வழங்கியிருந்த போதிலும், குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் மூன்று வருடங்கள்கூட அங்கு பணியாற்ற முடியாமற் போனது.தற்போது பொது அமைப்புக்களுக்கான கொள்கை விளக்கப் பாடல்களை இயற்றி, பாடிக் கொடுத்தல் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் பாடுதல் போன்றவற்றை எனது தொழிலாகக் கொண்டுள்ளேன். அத்துடன் வருமானம் ஈட்டும் நோக்கில் வீட்டில் ஒரு சிறிய கோழிப்பண்ணை ஒன்றையும் நடத்தி வருகின்றேன்.
03. ஒரு பாடகராக வருவதற்கு உங்களுக்கு எப்படி வாய்ப்புக் கிடைத்தது?
04. நீங்கள் ஒரு பாடகராக வளர வழிவகுத்தவர்கள் யார்?
நான் பாடகராக வர வழிவகுத்தவர்கள் ஏலவே நான் குறிப்பிட்டவர்களோடு, எனது கல்லூரிப் பருவத்தில் வகுப்புக்களில் பாடச் சொல்லி வேண்டுகோள் விடுத்து, பாட வைத்து ரசித்துப் பாராட்டிய ஆங்கிலப் பாட ஆசிரியர்களான எம்.எம். பாரூக் சேர் மற்றும் பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம். ஃபாரூக் சேர் அத்துடன் கணிதப் பாட ஆசிரியரான ஹுசைன் சேர் ஆகியோர்களாவார். ஆரம்ப காலத்தில் நான் ஹிந்திப் பாடல்களையே பாடி வந்தேன்.
என் குடும்பத்தினரில் எனது மூத்த சகோதரர் தம்பி வஸீர் தனது கவிதைகள் புனையும், மெட்டமைக்கும் ஆற்றலை என்னைப் போன்று தொடர்ந்து வெளிப்படுத்தும் நேர அவகாசம் அற்றவர், அவர் தன் தொழிலுக்காக கணிசமான நேரத்தை அர்ப்பணித்து வருவதன் காரணமாக கலை, இலக்கியத் துறைகளுக்கான அவரது பங்களிப்பு பெரிதாக இல்லை. அவர் தற்போது தமது குடும்பத்தினருடன் மல்வானையில் வசித்து வருகிறார்.
எனது மூத்த சகோதரி மாத்தளை ஃபர்வீன் அவர்கள், 1970களின் ஆரம்ப வருடங்களில் ஹிந்திப் பாடல்களின் மெட்டுகளுக்கு தமிழ்ப் பாடல்களை இயற்றும் ஆற்றலுடையவராகத் திகழ்ந்தார். அத்துடன் மித்திரன் வாரமலர், ஜனனி வார இதழ் முதலியவற்றில் சுமார் 42 தொடர்கதைகளை எழுதி இருந்தார். அவர் 2014 ஓகஸ்ட் 15 ஆம் திகதி காலஞ்சென்ற பின்பும் கூட "ஃப்ரெண்ட்ஷிப்" என்ற தலைப்பிலான அவரது இறுதித் தொடர்கதை மித்திரன் வாரமலரில் தொடர்ந்து பிரசுரமாகிக் கொண்டிருந்தது. கவலையான விடயம் என்னவென்றால் அவற்றுள் ஒன்று கூட நூலுருப் பெறவில்லை என்பதுதான்.
06. உங்களாலும் பாட முடியும் என்று முதலாவதாக உணர்ந்த சந்தர்ப்பம் எப்படியானது?
நான் மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் 04ஆம் தரத்தில் பயின்ற கால கட்டத்தில்தான் எனக்குப் பாட முடியும் என்ற உணர்வும், நம்பிக்கையும் ஏற்பட்டது.
07. உங்கள் மனதைக் கவர்ந்த பாடகர் யார்? அவரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விடயமென்ன?
என் மனதைக் கவர்ந்த பாடகர் அதாவது என் அபிமானப் பாடகர், கலாஜோதி டாக்டர். கே.ஜே. யேசுதாஸ் அவர்கள். அவர் 1990ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் வாழும் மலையாள சமூகத்தினரின் ஓணம் பண்டிகைகளில் கலந்து கொள்ள வருகை தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நான் அவரை மூன்று தடவைகள் கொழும்பில் சந்தித்து அளவளாவியுள்ளேன். அவற்றுள் ஒரு தடவை 1996 இல் என்று நினைக்கிறேன் அவரது இசைநிகழ்ச்சி ஒன்றை நேரில் பார்வையிடும் விருப்பத்தை அவரிடம் நான் தெரிவித்த நாளில், அன்று மாலை சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற அவரின் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று, அங்குள்ள ஏற்பாட்டாளர்களிடம், "இந்தப் பையனுக்கு முன் வரிசையில ஒரு சீட் கொடுத்துடுங்க!" என்று வேண்டுகோள் விடுத்த ஒரு நல்ல மனிதாபிமானி அவர். அன்று அந்த நிகழ்ச்சியில் அவர் முதன் முதலாகப் பாடிய பாடல், "கிளிப்பேச்சு கேட்க வா" படத்தில் இடம்பெற்ற "அன்பே வா அருகிலே!" என்று ஆரம்பமாகும் இனிமையான பாடலாகும். இதில் மறுபக்கம் என்னவென்றால் அந்த நேரம் எனது சட்டைப்பையில் இருந்தது வெறும் ஐம்பது ரூபாய்தான். மேலும், அவரது இலட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இதுவரை வேறு எவருக்குமே இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று நம்புகிறேன். தான் ஒரு பெரிய பாடகர், உலகப் பிரசித்தி பெற்றவர் என்ற எந்தவிதமான பந்தாவும் அவரிடம் இருந்ததே இல்லை.
அன்றைய பிற்பகலில் அவர் தங்கியிருந்த ஹோட்டலின் லொபியில் அவரை நான் சந்தித்தபோது, நான் இயற்றி, மெட்டமைத்திருந்த, "சிங்காரப் பைங்கிளியே காலெடுத்து வா!" என ஆரம்பமாகும் என்ற பாடலை அவரிடம் பாடிக் காட்டியபோது, மிகவும் உற்சாகமாக தாளம்போட்டு அவர் ரசித்துக் கேட்டதை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது.
மேலும், 1997 இல் ஆரம்பித்து 1999 மார்ச் வரை ஜனனி வார இதழில் 60 வாரங்களாக நான் எழுதி வந்த தொடர்கதைக்கு அவர் அன்று ஆரம்பமாகப் பாடிய "அன்பே வா அருகிலே!" என்று ஆரம்பமாகும் பாடலின் முதல் வரியிலேயே பெயரைச் சூட்டியதன் காரணம்கூட அவருக்கு ஒருவகையில் நன்றி தெரிவித்துக் கொள்வதற்கே. ஆனால், என் அபிமானப் பாடலைப் பாடியவர் சிம்மக் குரலோன் டீ.எம். சௌந்தரராஜன் அவர்கள். அவர் "எங்க மாமா" என்ற படத்துக்காகப் பாடிய, "எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்!" என்று ஆரம்பமாகும் பாடலாகும்.
08. பாடல் துறையில் இஸ்லாமியர்களின் வகிபங்கு எவ்வாறுள்ளது?
ஆரம்ப காலம் முதலே பாடல்கள், கவிதைகள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த கணிசமானோரால் போசிக்கப்பட்டு வந்துள்ளபோதிலும், மார்க்க ரீதியான கட்டுப்பாடுகளும் இருந்தே வருகின்றன. தற்காலத்தில் அந்த வரம்புகளை மீறிச் செல்வோர்க்கு உலகம் ஒரு பெரிய வரவேற்பை அள்ளி வழங்கத் தயாராக உள்ளது. வட்டத்தின் வரம்புக்குள் நின்றபடியே இத்துறையில் உச்சம் கண்ட உமர் கய்யாம், அல்லாமா இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோரும் நம் மத்தியில் இருந்தே வருகின்றனர்.
09. உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது? ஏன்?
முன்பு குறிப்பிட்ட சிம்மக் குரலோன் டீ.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய, "எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்!" என்று ஆரம்பமாகும் பாடலே எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதற்குக் காரணம், என் மனோ நிலையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் 100 வீதம் பிரதிபலிக்கும் கருத்துக்கள் இப்பாடலில் விரவிக் கிடக்கின்றன.
10. இத்துறையில் உங்களை வியப்பில் ஆழ்த்தியவர் யார்?
கின்னஸில் இடம்பிடித்து, சுமார் அரைநூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் இசை உலகை ஆக்கிரமித்திருந்த மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி. அவர்களின் ஆற்றல்களும், அவரது பணிவான நடத்தையுமே என்னை வியப்பிலாழ்த்தியது.
11. நீங்கள் இதுவரை வெளியிட்ட இறுவட்டுக்கள் குறித்து கூறுவீர்களா?
2001இல் நான் முதன் முதலில் வெளியிட்டது, "இன்னும் ஓர் இன்த்திஃபாழா" என்ற ஓர் ஒலிநாடாவைத் தான். அதன் விற்பனை, பிரதிகள் 5000 ஐத் தாண்டின. எனது முதலாவது ஒலிநாடாவின் வெளியீடு 2001 ஆம் ஆண்டில் கொழும்பு - 02 தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் முஸ்லிம் மீடியா ஃபோரமின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அதுதான் ஃபலஸ்தீனப் புரட்சி தொடர்பில் தமிழ் மொழியில் முழு உலகிலும் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஓடியோ வெளியீடாகும். முற்றிலும் சுய மெட்டுக்களிலான 12 பாடல்கள் அந்த ஒலிநாடாவில் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் 06 பாடல்களை நான் பாடியதுடன், அக்கரைப்பற்று ஜாவித் இப்ராஹீம், திஹாரிய மஸாஹிர், பஸ்யால இஷ்ரத் ஹுஸைன், கஹடோவிட அன்ஃபால் நஹாஸ், முஜாஸா ஜமால்தீன் முதலிய ஐந்து இளவயதுப் பாடகர்களை அவ்வெளியீட்டில் பாட வைத்து, அவர்களை கலைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதற்காக முழு அனுசரணையையும் வழங்கியிருந்த என் சகோதரர் வஸீர் அவர்களும் ஒரு பாடலைப் பாடியிருந்தார். அதன் பிரதிகள் 5000 ஐயாயிரத்துக்கு மேல் விற்பனையாகின.
எனது இரண்டாவது வெளியீடு "கல்" என்ற தலைப்பில் 2004இல் வெளியாகியது. மொத்தமாக 11 பாடல்கள் கொண்டிருந்த அந்த ஒலிநாடா வெளியீடு எனது கலைத்துறைப் பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு 1998 முதல் 2004 வரை பல்வேறு கல் வகைகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு நான் இயற்றிய "கல்லுதான்.." என ஆரம்பமாகும் பாடல் அவ்வெளியீட்டில் இடம்பெற்றிருந்ததே காரணமாகும். அதன் பிரதிகள் 11,500க்கு மேல் விற்பனையாகின.
அதற்கு அடுத்த வருடம் எனது மூன்றாவது பாடல் தொகுதி, "ஓ.. ஸுநாமியே!" என்ற தலைப்பில் வெளியானது. அதில் இடம்பெற்றிருந்த 13 பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அவற்றுள் மிக அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்த பாடலான, "மர்ளிய்யா தாத்தா.. ராளியா தாத்தா.." பட்டிதொட்டி எங்கிலும் ஒலிக்கத் தொடங்கியது. அதன் பிரதிகளும் 10,500ஐத் தாண்டி நாடுபூராகவும் விற்பனையாகின.
அதைத் தொடர்ந்து 2006 இல், "ஃபலஸ்தீன தாயகமே", 2007இல் "நெஞ்சம் ஏங்குதே!" 2008இல் "இன்ஷா அல்லாஹ்", 2010இல் "ஆடு", "மதுர கான மழை", 2013இல் "Why this மதவெறி?' போன்றவையும் வெளியாகின.
2001 முதல் 2018 வரையான 17 வருட காலத்துக்குள் மொத்தமாக 50,000 (ஐம்பதாயிரம்) பிரதிகளுக்கு மேல் எனது 09 ஒலிநாடா மற்றும் இறுவட்டுத் தொகுதிகளும் விற்பனையாகி சாதனை படைத்தன. நாடு பூராவும் பல ஊர்களில் ஆயிரத்துக்கும் மேலான பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளேன்.
12. இந்த ஒவ்வொரு ஒலிநாடாவிலும் அல்லது இறுவட்டிலும் எத்தனை பாடல்கள் உள்ளடக்கம்? இவற்றுக்கான பாடல் வரிகளையும் நீங்களே எழுதி, இசையமைத்துப் பாடினீர்களா?
1. இன்னும் ஓர் இன்த்திஃபாழா (12 பாடல்கள்) - ஒலிநாடா
2. கல் (11 பாடல்கள்) - ஒலிநாடா, இறுவட்டு
3. ஓ ஸுநாமியே! (13 பாடல்கள்) - இறுவட்டு
4. ஃபலஸ்தீன தாயகமே! (15 பாடல்கள்) - இறுவட்டு
5. நெஞ்சம் ஏங்குதே! (14 பாடல்கள்) - இறுவட்டு
6. இன்ஷா அல்லாஹ் (15 பாடல்கள்) - இறுவட்டு
7. மதுர கான மழை (16 பாடல்கள்) - இறுவட்டு
8. ஆடு (9 பாடல்கள்) - இறுவட்டு
9. Why this மதவெறி? (10 பாடல்கள்) - இறுவட்டு
ஆகிய 09 வெளியீடுகளிலும் மொத்தமாக இடம்பெற்றிருந்த 115 பாடல்களுள் 55 பாடல்களுக்கான மெட்டுக்களையும் நானே அமைத்திருந்தேன். "மதுர கான மழை" இறுவட்டு பாடற்தொகுதியில் இடம்பெற்ற முதலாவது பாடலான ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சி கீதத்துக்கு மெட்டமைத்தவர் எனது மைத்துனரான கலகெதர எம்.எம்.ஏ. ஹக் ஆவார்.
13. பலரது மனதிலும் இடம் பிடித்த, நீங்கள் வரிகள் எழுதிப் பாடிய, "மர்ளியா தாத்தா.. ராளியா தாத்தா.." பாடல் குறித்து என்ன சொல்வீர்கள்?
பாடலை ஆரம்பத்தில் ஃபாத்திமா தாத்தா.. ஆயிஷா தாத்தா.. என்றே இயற்ற நினைத்திருந்தும், பிறகு எனது முடிவை மாற்றிக் கொண்ட காரணம், அப்பெயர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த விசுவாசிகளின் அன்னையரது புனிதமான பெயர்களின் கண்ணியத்தைப் பேணிக்கொள்ள வேண்டும் என்பதனாலாகும். எனவே, சாதாரணமாக சமூகத்தில் புழங்கக்கூடிய பெயர்களோடு பாடலை ஆரம்பித்தேன். அப்பாடல் என்னை உலக அளவில் பிரபல்யப்படுத்தும் என்று நான் முதலில் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அறிவுரைகளை நகைச்சுவையாக பாடல்கள் மூலமும் வழங்கலாம் என்பது எனது இப்பாடலின் வாயிலாக நிரூபணமாகியுள்ளது.
கணிசமான பெண்கள் இப்பாடலை செவிமடுத்த பின் தொலைக்காட்சி பார்ப்பதை குறிப்பாக டெலி ட்ராமாக்கள் பார்ப்பதை அறவே நிறுத்திவிட்டதாக மிகவும் நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்தன. இப்போதும் கிடைக்கின்றன.
14. நீங்கள் எழுதிய பாடல்களைத் தொகுத்து ஒரு "மெல்லிசைப் பாடல்கள்" நூலை வெளியிடலாமே? ஏன் இதுவரை இதில் அக்கறை காட்டவில்லை?
நம் நாட்டில் எவருமே தமிழ் இலக்கியத் துறையில் முதலீடு செய்து, 100 வீதம் வெற்றி மற்றும் இலாபம் பெறுவது கடினமான ஒரு காரியம். எனவே, கையைச் சுட்டுக்கொள்ள நான் விரும்பவில்லை. எனினும், இன்ஷா அல்லாஹ், இதன் பிறகு அதுபற்றி சிந்திக்கலாம்.
15. பாடல் தவிர வேறு எவ்வகையான துறைகளில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகின்றீர்கள்?
சிறு வயதிலிருந்தே நான் ஒரு தீவிர வாசிப்பாளன். கலையும், இலக்கியமுமே என்னை ஈர்த்த இரண்டு துறைகளாகும். விளையாட்டுத் துறையில் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆன்மீக நாட்டம் 18 வயதில் உண்டானது.
1970களில் தினகரன் பத்திரிகையில் அவ்வப்போது இலங்கையில் முஸ்லிம் தனித்துவ அரசியலின் அவசியம் தொடர்பாக எம்.எச்.எம். அஷ்ரஃப் எழுதிய பல கட்டுரைகளை என் பதின்ம வயதிலேயே வாசிக்கக்கூடிய வாய்ப்பு எனக்கிருந்தது. ஆனால், அவர் யார், எப்படி இருப்பார் முதலிய விவரங்களை நான் அந்நாட்களில் அறிந்திருக்கவில்லை.
எனினும், 1988இல் முதன்முதலாக மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தொலைக்காட்சியில் ஒவ்வொரு கட்சியினரும் கொள்கை விளக்க பிரசார ஒளிபரப்புகளில் அதே எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் ஒருநாள் உரையாற்றிய நிகழ்ச்சியை காணக் கிடைத்ததும் அதுநாள் வரை அரசியலில் எந்த ஓர் ஈடுபாடும் இருந்திராத என் மனசை ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் ஆகர்ஷித்தது. பின்னர் தேர்தல் பரப்புரைக்காக மாத்தளைக்கு வந்த மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களை நேரில் சந்தித்து, அந்தப் பிரசாரக் கூட்டத்தில் ஒரு பாடலைப் பாட அனுமதி கேட்டுப் பாடினேன்.
தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக நாகூர் ஈ.எம். ஹனீஃபா அவர்கள் பல பிரசார கீதங்களை இசைத்துள்ள தகவலை அவரிடம் தெரிவித்து, "உங்களது கட்சிக் கொள்கைகளையும் இதே அடிப்படையில் பிரசாரப்படுத்தலாம்தானே?" என்று கேட்டேன். அவரோ எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் எனது மஷூராவை அதாவது ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, என்னையும் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டார். பின்னரான பல வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது பிரசாரப் பாடல்களை நான் பல மேடைகளில் பாடி வந்தேன்.
1992இல் கட்சிக்கான ஒரு கீதத்தை அவர் இயற்றியவுடன் அதைத் தாங்கள் பாட வேண்டும் எனப் பல பாடகர்களும் வேண்டுகோள்களை விடுத்தபோதிலும், மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களோ, "முஸ்லிம் கொங்கிரஸுக்கு ஆயிரம் பாடகர்கள் வரலாம். ஆனால், கட்சி கீதத்தை நமது மாத்தளைக் கமால்தான் பாட வேண்டும்." என்று மிகத் தீர்மானமாகச் சொல்லியதுடன், அதனைப் பாடவைத்து, 1992 இல் கொழும்பின் பரடைஸ் பார்க்கில் நடைபெற்ற கட்சியின் 10ஆவது தேசிய மாநாட்டின் போது, அக்கீதம் உட்பட பதினொரு பாடல்கள் கொண்ட ஓர் ஒலிநாடாவையும் வெளியிட்டு வைத்தார். அவ்விழாவுக்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்கள், அக்கீதத்தை அந்த மேடையில் நான் பாடிய போது மிகவும் ரசித்துக் கேட்டதுடன் சுமார் அரை மணி நேரத்தில் அந்த கீதத்தை மீண்டும் ஒரு முறை என்று சொல்லி, மீண்டும் கேட்டு ரசித்தமை, அக்கட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
பின்னர் 1997 ஜனவரியில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அக்கட்சி கீதத்தின் மீள் ஒலிப்பதிவுக்காக என்னை அழைத்துச் சென்றார் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள். 1997 மார்ச் 19ஆந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, "புதிய வெளிச்சங்கள்" ஒலிநாடாவின் வெளியீட்டு விழாவின்போது, கட்சி கீதத்தைப் பாடியமைக்காக எனக்குப் பொன்னாடை போர்த்தி, விருதும் வழங்கி கௌரவித்தார் அந்தப் பெருந்தகை.
எனினும், 1988 முதல் 2018 வரை அக்கட்சியின் ஆஸ்தானப் பாடகராக பணியாற்றி வந்த நான், தற்போதைய தலைமைத்துவம் மர்ஹும் எம்.எச்.எப். அஷ்ரஃப் அவர்களின் உயரிய கொள்கைகளைக் கைவிட்டு விட்டு தான்தோன்றித்தனமாக செயல்படுவதன் காரணமாக பிறகு அக்கட்சியிலிருந்து விலகி, தற்போது அகில இலங்கை மக்கள் கொங்கிரஸ்ஸில் இணைந்துள்ளேன்.
16. வேறு என்ன வெளியீடுகளைச் செய்ய உத்தேசம்?
The Real Super Star என்ற தலைப்பில் எனது இறுதி ஒலிவடிவ (mp3) வெளியீட்டைச் செய்ய நல்லாட்சி அரசாங்க காலத்தில் நான் முடிவெடுத்திருந்த போதிலும், அது சாத்தியமாகவில்லை. இன்ஷா அல்லாஹ், இவ்வருடம் நான் ஏற்கெனவே ஜனனி வார இதழில் 1997, 1998, 1999 வருடங்களில் தொடராக எழுதிவந்த, "அன்பே வா அருகிலே!" என்ற தொடர்கதையை ஒரு தனி நாவலாக அல்லது இரண்டு பாகங்களாக வெளியிடும் உத்தேசமும் உள்ளது. மேலும், தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகிய என் 200க்கும் மேற்பட்ட கவிதைகளின் தொகுதிகள் ஒன்றிரண்டு வெளியிடவும் நாடியுள்ளேன்.
17. பழைய அல்லது இடைக்காலப் பாடல்களைப் பாடும் போது எவ்வகையான மன உணர்வைப் பெறுவீர்கள்?
பழைய பாடல்களில் கணிசமானவை தத்துவக் கருத்துக்கள் பொதிந்தவையாக இருந்தமையே என் மனசு பாடல் துறையில் ஆகர்ஷிக்கப்பட்டமைக்கான அடிப்படைக் காரணம் என்ற உண்மையை இங்கே ஒப்புக் கொண்டாக வேண்டும். அவற்றை எந்த ஒரு சபையிலும் பாடலாம். பாடும்போதும் ஒரு லயிப்புணர்வு இருக்கும். இடைக்காலப் பாடல்கள் பெரும்பாலும் "இசைஞானி" இளையராஜாவின் இரண்டு தசாப்த கால ஆதிக்கத்தில் இருந்தன. உண்மையில் என்னை அதிகமாகப் பாடத் தூண்டியவை அவர் இசையில் உருவான பாடல்களே. அதிலும் காலஞ்சென்ற திரு. எஸ்.பி.பி. ஒரு சகலகலா வல்லவராக இருந்து பாடிய பாடல்கள், மறக்க முடியாதவை. அவரது அணுக்குகள் எனும் அசைவுகள் வளரும் பாடகர்களுக்கு நல்ல பயிற்சிகளைத் தரக் கூடியன. இன்பமான பாடல்களைப் பாடுகையில் ஒரு துள்ளல் உணர்வும், சோகமான பாடல்களைப் பாடுகையில் உணர்வை உருக்கி, கண்ணீரையும் கசியச் செய்கிற குழைவும் இருக்கும்.
18. ஹிந்தி மொழிப் பாடல்களையும் பாடியுள்ளீர்களா? இதுபற்றி?
அக்கால கட்டத்தில் பிரபலமாக இருந்த "ஆராதனா" படப் பாடல்களான "மேரே ஸப்னோகி ராணி கப் ஆயேகீது", "ரூப்பு தேரா மஸ்தானா" மற்றும் "கிஸ்மத்" படப் பாடலான "லா கோன் ஹெயஹா திலு வாலே" போன்ற பாடல்கள் எனது சிறு வயதிலிருந்தே நான் பாடிய பாடல்களாகும். பாஷை விளங்காவிட்டாலும்கூட, ஹிந்தி மிகவும் இனிமையான ஒரு மொழி என்பதால் அம் மொழியிலான பாடல்கள் உலக அளவில் இன, மொழி, தேச பேதமின்றி அனைவராலும் ரசிக்கப்படுகிறது கூடியவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
19. புதிதாக இசையமைத்து, புதிய பாடலாசிரியர்களின் பாடல்களையும் பாடலாம் தானே?
ஆம். ஆனால் அப்படியான எந்த ஓர் உத்தேசமும் எனக்கு இதுவரை இருந்ததில்லை. சிலவேளை புதிய பாடலாசிரியர்கள் ஏதாவது முக்கியமான கருத்தாழமுள்ள பாடல்களை இயற்றித் தந்தால், மெட்டமைத்துப் பாட முடியும்.
20. ஈழத்து இளம் பாடகர்களுக்கு ஒரு பாடகராக என்ன கூற விரும்புகிறீர்கள்?
நல்ல கருத்துள்ள பாடல்களைப் பாடுங்கள். பிரபல்யம் கிடைக்கலாம் என்பதற்காக ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட பாடல்களைத் தவிர்த்துவிட்டு, இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும், சமாதான சகவாழ்வையும் மேம்படுத்தக்கூடிய நல்ல பாடல்களைத் தெரிவு செய்து பாடுங்கள் என்று தான் இன்றைய காலகட்டத்தில் கூற வேண்டியுள்ளது.
21. பாடல் துறையில் இனிவரும் காலங்களில் உங்கள் பயணம் எப்படியானதாக இருக்கும்?
YouTube தளத்தில் ஒரு மோசடிப் பேர்வழி எனது குரலில் ஒலிக்கும் "மர்ளியா தாத்தா.." என்ற பாடலை பல்வேறு செம்மையாக்க வேலைகளைச் (Editing) செய்து பதிவேற்றியுள்ளார். ஆனால், எனது அனுமதியை அவர் பெறவே இல்லை. ஆயிரக்கணக்கானோர் அப்பாடலைப் பார்வையிட்டுள்ளார்கள். ஆனால், எனக்கு அதில் வெறும் பிரசித்தி மட்டுமே கிடைத்துள்ளது. அந்தத் திருட்டுப் பேர்வழி இந்தக் காரியத்தைச் செய்து, எத்தனை ஆயிரம் ரூபாய்களை சம்பாதித்துக் கொண்டாரோ எனக்குத் தெரியவில்லை. எனினும், எனது அனுமதியைப் பெறாத அவரது இந்தச் செயலை நான் இதுவரை அங்கீகரிக்கவுமில்லை. மன்னிக்கவும் மாட்டேன். எனது நேயர்களுக்காக இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் எனது பல பாடல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளேன்.
22. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
பெரும்பாலும் கிடைத்ததெல்லாம் பாராட்டுப் பரிசுதான். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் 14 போட்டிகளில் பங்குபற்றி, 10 தடவை முதற்பரிசு பெற்றேன். "பாட்டுக்கு பாட்டு" நிகழ்ச்சியின் அனுசரணையாளர்கள் பரிசு என்ற பெயரில், வவுச்சர் ஒன்றைத் தந்து, அதற்கான பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ள அவர்களது வியாபார ஸ்தலத்திற்கு நாம் போனதும், "நீங்கள் ஏதாவது நகைகளை எம்மிடம் விலைக்கு வாங்கினால், அந்தப் பரிசுத் தொகையைக் கழித்துவிட்டு நகையைத் தருவோம்.." என்று ஈனத்தனமாகச் சொல்வதுண்டு. தவிரவும், 1990 இல் மஹாபொல அகில இலங்கை ரீதியிலான பாடல் போட்டியில் முதற் பரிசாக 5,000 ரூபா கிடைத்தது.
மேலும், மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தி வந்த பாடல் போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளை அள்ளிக் குவித்த அனுபவம் எனக்குண்டு. ஆம். 1992, 1993 ஆகிய இரு வருடங்களிலும் அகில இலங்கை ரீதியிலான இஸ்லாமிய கீதப் போட்டிகள் மற்றும் புதிய பாடல்கள் போட்டிகள் இரு பிரிவிலும் மொத்தம் 04 போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றமை என் கலைத்துறை வரலாற்றில் மறக்க முடியாத பொன்னான நிகழ்வுகள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சி கீதத்தைப் பாடியமைக்காக 1997 மார்ச் 19ஆந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "புதிய வெளிச்சங்கள்" ஒலிநாடாவின் வெளியீட்டு விழாவின்போது, கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் பொன்னாடை போர்த்தி, விருதும் வழங்கி என்னை கௌரவித்தார்.
1999 இல் இரத்தினபுரி அகில இன நல்லுறவு ஒன்றியம் "சாமஸ்ரீ இசை நிலா" எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
2007 பெப்ரவரியில் புத்தளத்திலிருந்து பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த "அஸ்ஸகீனாஹ்" சஞ்சிகையின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற அதிபருமான அல்ஹாஜ். ஸீ.எஸ்.எம்.எம். ஹனீஃபா அவர்கள் எனக்கு "மக்கள் கவிஞர்" எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
அந்தப் பட்டம் பழம்பெரும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதாகும் எனப் பின்னர் நான் அறிந்தேன். ஒரு கத்துக்குட்டிக் கவிஞனான எனக்கு இப் பட்டம் குருவியின் தலையில் பனங்காய் மாதிரிதான்.
23. இறுதியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?
ஒவ்வொரு மனிதனிடம் காணப்படும் அனைத்து ஆற்றல்கள் ஏக இறைவனால் வழங்கப்படும் அருட்கொடைகளாகும். அவற்றின் மூலம் மனித சமுதாயம் முன்னேறவும், நன்மைகளை விளைவிக்கவும், சமாதானத்தைக் கட்டிக் காக்கவும் உயர் பங்களிப்புக்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதுவே எனது இறுதிப் பகிர்தலாகும்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்





