இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.12.22
சட்டத்தரணி இரா. சடகோபன் அவர்களுடான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
01. உங்கள் வாழ்விடம், கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் பிறந்து வளர்ந்தது நாவலப்பிட்டி நகருக்கு அருகாமையில் உள்ள தொளஸ் பாகை என்ற இடத்தில் இருந்த மொஸ் வில்ல (தமிழில் மாசி விலை தோட்டம்) என்ற தோட்டத்தில் ஆகும். அந்தத் தோட்டத்தில் இருந்த தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றுவிட்டு அதன் பின்னர் அருகிலிருந்த நகரமான நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் க.பொ.த. உயர்தரம் வரை படித்துவிட்டு அங்கிருந்து பட்டக் கல்வி பயில கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானேன். அங்கே எனக்கு கிடைத்தது புவியியல் சிறப்பு பட்டம். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதும் கிடைத்த முதல் தொழில் சந்தைப்படுத்தல் ஆய்வு உத்தியோகத்தர். அதன் பின்னர் பத்திரிகைத்துறை, சட்டத்துறை என தொடர்ந்ததே என் வாழ்க்கை.
02. உங்கள் குடும்பப் பின்னணி பற்றிக் கூறுங்கள்?
எங்கள் குடும்பத்தில் மொத்தம் பதினோரு பேர். அதில் நான் ஆறாவது. சிறுவயதில் சுட்டிப் பையன் என்று பெயர் பெற்று இருந்தேன். நான்கு அக்காமார், ஒரு அண்ணன், ஒரு தம்பி, மூன்று தங்கைகள். செல்வச் செழிப்பு வாய்ந்த குடும்பமாக இல்லாவிட்டாலும் தாய் தந்தையார் எமக்கு எந்தவிதக் குறைகளையும் வைக்காமலேயே எங்களை வளர்த்தனர். எங்களுக்கு கல்வி புகட்டுவதற்கு அவர்கள் மிகுந்த பிரயத்தனப்பட்டனர். அதன் விளைவாக எங்கள் குடும்பத்தில் ஒரு சட்டத்தரணி, ஒரு கணக்காளர், ஒரு வைத்தியர், ஒரு ஆசிரியை ஆகியோர் உருவாகினர்.
எனது துணைவியார் ஒரு உயர் அரசாங்க அதிகாரி. நாங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது சந்தித்துக் கொண்டோம். எங்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். மகள் என்னைப்போல் இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டி வருகின்றார். இருவருமே ஓவியத்தில் வல்லவர்கள் என்று கூற முடியும். அதற்குக் காரணம் என் தாய் வழி முன்னோர்கள் ஸ்தபதிகள் என்று அழைக்கப்படுகின்ற கோயில்களில் சிற்பங்கள் வடிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் மரபணுக்கள் எமது ரத்தத்திலும் இருக்கலாம் என்று கூற வாய்ப்புண்டு.
03. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?
எனது தந்தை ஒரு நல்ல பாடகர். அவர் ஒரு பாட்டு ரசிகரும் ஆவார். எனது இரண்டு அக்கா மார்களும் நன்றாக நடனமாடுவார்கள். எனது அப்பாவுக்கு பாட்டின் மீது காணப்பட்ட மோகம் காரணமாகவே அக்காலத்தில் புகழ்பெற்ற பாடகராகத் திகழ்ந்தத வி. சடகோபன் என்ற பின்னணிப் பாடகரின் பெயரையே எனக்கும் பெயராகச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார். அந்தக் காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டு வாசல் முற்றத்தில் திண்ணைக் கச்சேரிகள் நடக்கும். எனது தந்தையும் வேறு சிலரும் பாடுவார்கள். எனது தந்தைக்கு சில வாத்தியக் கருவிகளை இசைக்கவும் பரிச்சயம் இருந்தது. அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து நடனம் மற்றும் கூத்து கலைஞர்கள் வருடா வருடம் வருவார்கள். அவர்கள் சுமார் மூன்று மாதங்களுக்கு நாடகங்களும் கூத்துக்களும் நடத்துவார்கள். ஒரு சில காமன்கூத்து அனுபவங்கள் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. கூத்துக் கலைஞர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு விருந்துபசாரம் அளித்து என் தந்தை மகிழ்வார். எனது தாயாரும் அதற்கு உறுதுணையாக இருப்பார்.
04. சட்டத்தரணியாக பணியாற்றும் நீங்கள் இலக்கியத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? அதற்கான காரண கர்த்தாவாக இருந்தவர் யார்?

நான் முதலில் ஒரு பத்திரிக்கையாளர். அதன் பின் நீண்ட காலத்திற்கு பின்னரே நான் ஒரு சட்டத்தரணியாக வந்தேன். ஆனால் நான் பாடசாலையில் இருக்கும்போதே எனது இலக்கியப் பணியைத் தொடங்கிவிட்டேன். 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே நானும் நண்பர்களும் இணைந்து கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்து நடத்தினோம். அது எங்கள் பாடசாலையில் மட்டுமல்ல சுற்றியிருந்த பாடசாலைகளிலும் புகழ்பெற்றது. அப்போதுதான் என் முதலாவது கவிதையை நான் எழுதினேன். அதன் தலைப்பு ஷஷதேனீர் மலர்கள்'. அது ஒரு துன்பியல் கவிதை. என் நண்பர்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அக்காலத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு தமிழ் இலக்கியம் ஒரு பாடமாக இருந்தது. இந்தப் பாடத்தை எங்களுக்குப் படிப்பித்தவர் சண்முகலிங்கம் பண்டிதர் அவர்கள்.

ஒவ்வொரு நாளும் அவர் பாடத்தைத் தொடங்கும் முன்பு ஒரு சங்ககால கவிதையை வாசித்து, அதற்கு நய விளக்கம் செய்வார். அன்று பாடத்தின் போது எப்படியோ என் கவிதை அவர் கையில் இருந்தது. அவர் அதைக் கையில் எடுத்தவுடன் எனக்கு திக்கென்று இருந்தது. அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்தேன். ஆனால் அவர் சொல்லச் சொல்ல என் மேனி சிலிர்த்தது. எனக்கு வியப்பாகவும் இருந்தது. என்னை அவர் எழுந்திருக்கச் சொன்னார். எனது கவிதையை ஒவ்வொரு வரியாக வாசித்தார். அதற்கு நய விளக்கம் சொன்னார். அதன் மொழி நடை, எதுகை மோனை, சுருதி சந்தம், அது எவ்வாறு இலக்கணத்துக்குள் வருகிறது, அதன் கருத்து உள்ளடக்கம், அதில் பொங்கும் உணர்ச்சிப் பிரவாகம் என்று எல்லாம் ஒரு அரை மணி நேரம் பேசினார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கூச்சமாகவும் இருந்தது. என் கவிதைக்குள் இத்தனை சங்கதிகளா என்று வியந்து போனேன். அவர் பேசி முடித்ததும் பாராட்டு விண்ணைப் பிளந்தது. அப்போது பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு காலம் நிறைவுற்றதனைத் தொடர்ந்து அவர்கள் பொன்விழா கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார்கள். அந்த கவிதைப் போட்டிக்கு என்னை அந்த கவிதையை அனுப்புமாறு ஆசிரியர் எனக்கு வேண்டுகோள் விடுத்தார். நானும் அப்படியே செய்தேன். அகில இலங்கை கவிதை போட்டியான அதில் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. எனக்கு முன் முதலாம் இரண்டாம் பரிசுகளை வென்றவர்கள் அப்போது புகழ் பெற்றிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் க.ப. லிங்கதாசன் ஆகியோர் ஆவர். அவர்களுடன் போட்டியிட்டு நான் மூன்றாம் பரிசு பெற்றேன் என்று எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நான் ஒரு கவிஞனாக வர வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். எனினும் நாடகத்துறை, சிறுகதைத் துறை, நாவல், மொழிபெயர்ப்பு என என் இலக்கிய பணிகள் விரிந்து பறந்து சென்றன.
05. ஒரு சஞ்சிகையாசிரியராக உங்களது இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் வீரகேசரியில் ஒரு பத்திரிகையாளனாக இருந்து விலகிய அனுபவம் ஒரு கசப்பான அனுபவம் ஆகும். எனது எழுத்துப் பணிக்கு அங்கே அங்கீகாரம் கிடைக்கவில்லை. நான் அங்கிருந்து விலகி சட்டத்தரணியாக என் பணியை ஆரம்பித்த போது லங்காதீப பத்திரிகை நிறுவனம் அவர்களால் ஆரம்பிக்கப்படவிருக்கும் சிறுவர் பத்திரிகைக்கு என்னை ஆசிரியராக பணிபுரிய அழைத்தார்கள். அதுதான் பின்னர் ஷஷவிஜய்' சிறுவர் பத்திரிகையாக புகழ்பெற்றது. அதில் நான் எனது எல்லாத் திறமைகளையும் பதித்து சிறப்புறச் செய்தேன். அதன் விற்பனை நாடெங்கும் பெருகி பரவியது. அதில் நான் எழுதிய சிறுவர் சிறுகதைகள், சிறுவர் தொடர் கதைகள் பிரசித்தி பெற்றன. அவையே என்னை புகழின் உச்சத்திற்கு உயர்தின. அங்கிருந்து நான் விலகி வந்தபோது மீண்டும் வீரகேசரி நிறுவனம் ஷஷசுகவாழ்வு' என்ற சஞ்சிகையை என் கரங்களில் வைத்து அதனை நடத்தித் தருமாறு பணித்தது. அதிலும் இன்று வரை எனது எழுத்துப் பணிகள் தொடர்கின்றன.
06. இதுவரை வெளிவந்த உங்கள் படைப்புக்கள் பற்றி விரிவாகக் குறிப்பிடுங்கள்?

01.
வசந்தங்களும் வசீகரங்களும் (1998)
02.
ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள் (2002)
03.
உழைப்பால் உயர்ந்தவர்கள் (2007)
04.
கசந்த கோப்பி (2010)
05.
எங்கள் கிராமம் (2012)
06.
கண்டிச் சீமையிலே (2014)
07.
சொந்த மண்ணின் அந்நியர் (2015)
08.
இரத்த வரலாறு (2017)

ஆகிய 08 நூல்களை வெளியிட்டுள்ளேன். 1998 இல் வெளிவந்த எனது முதலாவது நூலான ''வசந்தங்களும் வசீகரங்களும்'' ஒரு கவிதை தொகுப்பு. இந்த நூல் மத்திய மாகாண சாகித்திய விருதினை பெற்றுக்கொண்டது. 2002 இல் வெளிவந்த ''ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்'' நூல் சிறுவர்களுக்கானது. அந்த நூலில் கடந்த 1000 ஆண்டுகளில் இந்த உலகை மேம்படச் செய்தவர்கள் என்ற வகையில் முதல் பத்து பேர்களை தெரிவு செய்து அவர்களின் வாழ்க்கை குறிப்பை அதில் தொகுத்தேன்.
அதனைத் தொடர்ந்துதான் நான் மொழிபெயர்ப்புத் துறைக்குள் நுழைந்தேன். 2007 ஆம் ஆண்டு வெளிவந்த எனது முதலாவது மொழிபெயர்ப்பு நூல் ''உழைப்பால் உயர்ந்தவர்கள்'' ஆகும். அதனைத் தொடர்ந்து கிறிஸ்டின் வில்சனின், ''கசந்த கோப்பி'', மார்ட்டின் விக்ரமசிங்கவின் ''எங்கள் கிராமம்'' ஆகிய எனது மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தன. இந்த மூன்று மொழிபெயர்ப்பு நூல்களுக்குமே எனக்கு சாகித்திய விருதுகள் கிடைத்தன. அதன் பிறகு வெளிவந்த ''கண்டிச் சீமையிலே'' பாரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ஏனோ தெரியவில்லை அதற்கு சாகித்ய விருது வழங்கப்படவில்லை. 2015 இல் வெளிவந்த ''சொந்த மண்ணின் அந்நியர்'' எனது சிறுகதைகளை உள்ளடக்கியதாகவே வெளிவந்தது. இறுதியாக எனது சொந்த நாவலான ''இரத்த வரலாறு'' வெளியானது.
07. உங்கள் கவிதை, சிறுகதை, நாவல்களுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக் கொள்கிறீர்கள்?
எனது சிறுகதைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ஒன்று நான் நீண்ட காலமாகவே அவ்வப்போது எழுதி வரும் எனது மலையக சமூகம் சார்ந்த சிறுகதைகள். இரண்டாவது நான் விஜய் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது சிறுவர்களுக்காக எழுதிய சுமார் 300 சிறுகதைகள். மூன்றாவது இப்போது நான் ஆசிரியராக கடமை புரியும் சுகவாழ்வு சஞ்சிகையில் "வாழ்வின் பாடங்கள்'' என்ற தலைப்பில் எழுதிவரும் படிப்பினைக் கதைகள்.

மலையகம் சார்பாக நான் எழுதியிருக்கும் சுமார் 18 சிறுகதைகளும் எனது அனுபவ சிறுகதைகள். அவை என் வாழ்க்கையில் உண்மையாக நடந்த சம்பவங்களை வைத்து நான் எழுதியவைகள். குறிப்பாக கூறப்போனால் அந்த எல்லாச் சம்பவங்களுமே மலையக மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிகளின் பால் விளைந்தவை. உதாரணமாக லட்சக்கணக்கான ஏக்கரில் அழகிய பல தேயிலைத் தோட்டங்கள் சிறுதுண்டுகளாக சிதறடிக்கப்பட்டு இனவாத நோக்கில் அங்கே காலங்காலமாக கூடியிருந்த மலையக மக்களைப் புறந்தள்ளி சிங்கள மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட போது என் குடும்பங்கள் போன்றவைகள் அங்கிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.
அவ்விதம் வெளியேற்றப்பட போது யுத்த காலத்தில் எவ்வாறு அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேற்றப்பட்டனரோ அதேபோன்ற துன்பங்களுடன் நாங்கள் கூட நாங்கள் இருந்த எங்களது வாழ்விடங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டு எங்கே செல்வது என்று தெரியாமல் எங்கோ ஓரிடத்தில் ஓடி ஒழிந்து பின்னர் அவ்விதம் ஒழிந்த இடங்களையே எங்களது நிரந்தர வாழ்விடங்களாக ஆக்கிக்கொண்டு துன்பங்களை சுமந்துகொண்டு வாழ்ந்த கதைகள் நிறைய உள்ளன. அத்தகைய சம்பவங்களே இந்தக் கதைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவைதான் இந்த சிறுகதைகளுக்கும் எனது கவிதைகளுக்கும் கருவாக அமைந்திருக்கின்றன. அவற்றைப் படிப்பவர்களுக்கு நான் எவ்வாறு வலியை உணர்ந்து சுமந்தேனோ அதே வழியை அவர்களால் உணர முடியும். அவை உணர்வுகளுடன் கூடியவை. அவற்றைப் படிக்கும்போது உங்கள் கண்களிலும் ஒரு துளி கண்ணீர் வராமல் இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன்.
08. 'வசந்தங்களும் வசீகரங்களும்' கவிதை நூலை 1998 இலேயே வெளியிட்டுள்ளீர்கள். இந்த வகையில் ஒரு சிறந்த கவிதை எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தான் வெளியிட்ட முதலாவது நூல்தான் இந்தக் கவிதை நூல். அந்தக் கவிதை நூலில் என் இளமைக் காலத்திலிருந்து சுமார் இருபத்தைந்து வருடங்களாக நான் எழுதிய என் இளமைக்கால கவிதைகள் காணப்படுகின்றன. என்றாலும் நான் அந்த நூலுடன் என் கவிதைகளை நிறுத்தி விடவில்லை. அதன் பின்னரும் நான் கவிதை எழுதிக் கொண்டுதான் இருந்தேன். இப்போது கூட அவைகள் அனைத்தையும் தொகுத்தால் இன்னொரு கவிதை நூலை என்னால் வெளியிட முடியும் என்ற அளவுக்கு என்னிடம் கவிதைகள் நிறையவே உள்ளன. அவற்றில் வடக்கில் இடம் பெற்ற யுத்தத்தைப் பற்றிய கவிதைகளும் உள்ளன.
ஒரு சிறந்த கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எவராலும் கூறிவிட முடியாது. ஆனால் சிறந்த கவிதைகள் எப்படி இருந்திருக்கின்றன என்று கூற முடியும். சிறந்த கவிதைகள் உணர்வு பூர்வமாக இருந்திருக்கின்றன. உணர்ச்சி பொங்கும் விதமாக இருந்திருக்கின்றன. அநீதிகளுக்கு எதிராக சீரிப் பொங்குவனவாக இருந்திருக்கின்றன. சமுதாயக் கேடுகளை கண்டிப்பதாக இருந்திருக்கின்றன. அராஜகங்களை எள்ளி நகையாடுவதாக இருந்திருக்கின்றன. அரசியல் அவல நிலைகளை சித்தரிப்பதாக இருந்திருக்கின்றன. கொடுமைகளை சாடுபவையாக இருந்திருக்கின்றன. இத்தகைய அம்சங்களை உள்வாங்கி பாடினால் அவை சிறந்த கவிதைகளாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
09. இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க முடியாதவர் அல்லது மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டா?
என் வாழ்க்கையும் இலக்கிய உலகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. அவை பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்திருக்கின்றன. இருந்தாலும் சுவாரசியமான ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.
1990களை அண்டிய காலப் பகுதி அது. அப்பொழுது நான் வீரகேசரி வாரமலரில் பொதிகை என்ற இலக்கியப் பக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். அதில் 'நெற்றிக் கண்ணன்' என்ற தலைப்பில் ஷஷநக்கீரன்' என்ற பெயரில் இலக்கிய உலகில் நடக்கும் அடாவடித்தனங்களைப் பற்றி விமர்சன நோக்கில் கண்டித்து எழுதி வந்தேன்.
அப்போது எழுத்தாளர் என். ரகுநாதன் என்பவர் ஒரு இலக்கிய விழாவில் உரை நிகழ்த்தும் போது இப்போது எழுதிவரும் எல்லா எழுத்தாளர்களும் அயோக்கியர்கள். அவர்கள் எழுதுவது ஒன்று செய்வது வேறு ஒன்று. அவர்களின் பேனாக்கள் எல்லாவற்றையும் பிடிங்கி நெருப்பிலிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் நான் பின்வருமாறு எழுதியிருந்தேன். ''அப்படி எல்லா எழுத்தாளர்களின் பேனைகளையும் பிடுங்கி நெருப்பிலிட்டு கொளுத்த வேண்டுமென்றால் அதில் அவரது பேனையும் சேர்ந்து தான் இருக்கும். சமகால எழுத்தாளர்கள் பற்றி அவருக்கு தெரிந்து இருப்பதனால்தான் அவ்வாறு அவர் கூறுகிறார். ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சங்ககாலப் புலவர்களின் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் நல்லவர்களா அயோக்கியர்களா என்பதும் நமக்கு தெரியாது. அவர்களிடமிருந்து அயோக்கியர்களைப் பிரித்து அவர்கள் எழுதியவற்றை தீ வைத்து கொளுத்துவது முடியாத காரியம். ஆதலால் படைப்பையும் படைப்பாளியையும் ஒருசேர பார்க்கக் கூடாது. படைப்பு ஒன்றைப் படைத்த பின் படைப்பாளி இறந்து விடுகிறான் என்றொரு ஆங்கிலக் கூற்று ஒன்று உண்டு. படைப்பு எப்போதுமே தனித்துவமானது'' என்று குறிப்பிட்டிருந்தேன்.
இதனால் கோபம் அடைந்த மேற்படி எழுத்தாளர், அதனை எழுதியது பிரபல எழுத்தாளர் கே. விஜயன் என்று தவறாகக் கருதி அவரை ஒரு இலக்கிய கூட்டத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துவிட்டார். இக்காலத்தில் கே. விஜயனும் என்னோடு வீரகேசரியில்தான் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் ஓடோடி வந்து ஷஷநீர் இப்படி எழுதப் போய் நான் அல்லவா உதை வாங்க வேண்டியிருக்கிறது' என்று வருத்தப்பட்டுக் கூறினார்.
நான் அவரை ஆறுதல்படுத்தி ஷஷநல்ல விஷயம் தானே அதனை நீங்கள் எழுதியதாகவே வைத்துக்கொள்ளுங்கள். கிடைத்ததை உங்களுக்கு கிடைத்த பரிசாக எண்ணிக்கொள்ளுங்கள்' என்று சிரித்துக்கொண்டே கூறினேன். அவர் அதற்கு ஒன்றுமே பதில் சொல்லவில்லை.
10. நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக இலக்கியத் துறையில் பணியாற்றி வரும் உங்களுக்கு இலக்கியத்துறை பற்றி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஏதாவது முக்கியமான விடயம் ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுங்கள்?
உண்மையைச் சொன்னால் இன்று இலக்கியத்துறை அல்லது இலக்கிய உலகு ஆரோக்கியமானதாக இல்லை. நாட்டின் ஏனைய துறைகளைப் போலவே இத்துறையிலும் போட்டி, பொறாமை, ஊழல், முறைகேடுகள், தில்லு முல்லு, வெட்டுக் குத்துகள் எல்லாமே நிறைந்து போய்க் காணப்படுகின்றன. ஒருவரின் திறமையை மதித்து அங்கீகரிக்கும் மனப்பாங்கு எங்கோ காணாமல் போய்விட்டது. கௌரவிப்புகள், விருது வழங்குதல் என்பனவெல்லாம் போலியான சடங்குகளாகப் போய்விட்டன. விருதுகள் கூட ஆளைப் பார்த்து வழங்கப்படுகின்றதுவேயன்றி படைப்பை பார்த்து வழங்கப்படுவதில்லை. தவறான இடங்களில் தவறான மனிதர்களே பதவிகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று கூறி வைத்தார்களோ என்னவோ.
11. உங்கள் எழுத்துக்களின் வெற்றிக்கு காரணம் என்ன வென்று நினைக்கின்றீர்கள்?
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கிய காரணத்தை நான் பிரதானமானதாகக் குறிப்பிடலாம். அது எனது கடுமையான உழைப்பும் முயற்சியும்தான். ஒரு சிற்பி ஒரு சிலையை வடித்து எடுக்கும்போது அதனை ஒரே மூச்சில் செய்து முடித்து விடமாட்டான். அதனைப் பார்த்து பார்த்து, சிந்தித்துச் சிந்தித்து ஒவ்வொரு கோணங்களிலும் மெதுமெதுவாக சரிசெய்து, அதனை செதுக்கிப் பூர்த்தி செய்வான். அதன் பின்பும் அவன் பணி ஓய்ந்து விடுவதில்லை. சிலையின் எல்லா அங்கங்களும் உரிய முறையில் வடிக்கப்பட்டுள்ளனவா என தடவித் தடவிப் பார்ப்பான். இறுதியாக அச்சிலையின் உதடுகளும் மூக்கும் கண்களும் உயிருள்ளனவாக இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்த பின்னரே அவன் பணி முற்றுப்பெறுகிறது. எழுத்தாளர்களின் சிருஷ்டிகளும் அவ்விதம் நிர்மாணிக்கப்படுமானால் அவை கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
12. இலக்கியப் பணி சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?
இலக்கியப் பணி வேறு எனது வாழ்க்கை வேறு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அதனால் இரண்டுக்குமே ஒரே கொள்கை தான் இருக்க முடியும். அது சகலருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடமைக் கொள்கையாகும். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றில் அங்கத்தினராக சேர்ந்து செயல்பட ஆரம்பித்தேன். எனக்கு சிங்கள மொழியில் புலமை ஏற்பட அதுவே ஒரு காரணமாக அமைந்தது. அவ்விதம் சிங்களத் தோழர்களுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில்தான் எமது இயக்கத்தின் கிளைச் செயலாளராக செயலாற்றிய தோழர் கூடியிருக்கும் மக்களுக்கு சிங்களத்தில் உரையாற்றிய போதெல்லாம் நான் அதனைத் தமிழில் சமகாலத்தில் உரை பெயர்த்து சொல்வேன். அந்தக் கொள்கை தான் என் இலக்கியத்திலும் பரிணமிக்கிறது.
13. இறுதியாக நீங்கள் வெளியீடு செய்த ஷஇரத்த வரலாறு| நாவல் வெளியீட்டு விழா ஒரு வெற்றி விழாவாக இடம்பெற்றதாக அறிகின்றேன். இதுபற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
இறுதியாக இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற்றது என்று சொல்வதிலும் பார்க்க நான் ஏற்பாடு செய்த அனைத்து விழாக்களும் வெற்றிகரமான நிகழ்வுகள்தான் என்று கூறி வைக்க விரும்புகிறேன். காரணம் அவை எல்லாமே வாசகனை மையமாகக் கொண்டு அவனை மதித்து ஏற்பாடு செய்து செய்த விழாக்கள். எனவே அவை சபை நிரம்பிய விழாக்களாக இருந்தன. நான் இதுவரை 08 நூல்களை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் இரண்டைத் தவிர ஏனையவை எனது சொந்த முயற்சியால் வெளியீடு செய்தவை. எனது ஏதாவது ஒரு நூலின் வெளியீட்டு விழா தோல்வியடைந்திருந்தால் நான் அடுத்த நூலாக்க முயற்சிக்கு போய் இருந்திருக்க மாட்டேன். அவ்விதம் முயற்சித்து தோல்வியடைந்து வாழ்க்கையில் நொந்து போன பலரை எனக்கு தெரியும். இலங்கை நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து முயற்சிகளை ஊக்குவிக்கப் போதுமான அமைப்புகள் இல்லை. நூல் கையெழுத்துப் பிரதியை அதற்கான பெறுமதியை விலை கொடுத்து வாங்கி பதிப்பித்து சந்தைப்படுத்தி விநியோகம் செய்யும் எந்த அமைப்பும் கிடையாது. அரசாங்கத்தின் சில ஏற்பாடுகளும் ஊழல் மலிந்தவைகளாகவே காணப்படுகின்றன. எழுத்தாளனே பிரதியையும் தயாரித்து, தட்டச்சு செய்து, எழுத்துப் பிழைகளைச் சரிபார்த்து, பதிப்பித்து, பிரசாரப் படுத்தி, தோளில் சுமந்து சென்று விற்பனை செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் எழுத்தாளன் மிகப் பாரிய சுமை ஒன்றை சுமந்து கொண்டுதான் இருக்கிறான். இதனைக் கண்டு கொள்ளாத பலரும் அவனை எள்ளி நகையாடுவதற்கு மாத்திரம் தவறுவதில்லை.
14. இலக்கிய அமைப்புக்களில் தாங்கள் அங்கத்தவராக இருக்கிறீர்களா? அவ்வகையான இலக்கிய அமைப்புக்களின் சேவைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளராகவும் மற்றும் சில அமைப்புகளில் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறேன். அவற்றில் சிங்கள அமைப்புகளும் உள்ளடங்குகின்றன. அவற்றின் வாயிலாக பல இலக்கியக் கூட்டங்களையும், எழுத்தாளர் சந்திப்புகளையும், இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளையும், இலக்கியப் போட்டிகளையும், எழுத்தாளர் கௌரவிப்பு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றோம். அவற்றில் கலந்து கொண்ட பலர் இன்று வளர்ந்த எழுத்தாளர்களாக உருவாகி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
அண்மையில் கூட கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஷஷபாடசாலை பிள்ளைகளுக்கு மத்தியில் படைப்பாற்றலை வளர்ப்பது எப்படி?' என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் என்னதான் முயற்சி எடுத்தாலும் இளையோர் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டு போகிறது. அதற்கு நம் நாட்டின் கல்விக் கொள்கை தடையாக இருக்கிறது. பாடசாலைகளில் அறிவு உண்டாக்கும் கல்விமுறை இல்லாமல் போய் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான கல்வி முறையாக நமது கல்விமுறை மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இதில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். என்றபோதும் ஆசிரியர், அதிபர், பெற்றோரின் மனப்பாங்கும் இது தொடர்பில் மாற்றப்பட வேண்டும்.
15. மலையகத் தமிழர்களின் இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றி விசேடமாக என்ன குறிப்பிடப் போகிறீர்;கள்?
மலையக தமிழர்கள் மத்தியில் எழுத்து, கலை, கலாசாரம் என்பன பிற்பட்ட காலத்திலேயே உருவாயின என்ற ஒரு தவறான கருத்து நிலவுகின்றது. இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோப்பித் தோட்டங்களில் தொழில் புரிவதற்காக இலங்கை வந்தபோதே தமது சகல பாரம்பரிய கலை கலாசார அம்சங்களையும் சேர்த்தே தம்முடன் கொண்டு வந்தனர்.
இவற்றில் மிகப் பிரதான அம்சமாக பங்கு வகிப்பது மக்கள் கலை இலக்கியமாக பரிணமிக்கின்ற வாய்மொழி இலக்கியங்களாகும். தமிழ்நாட்டின் கலை இலக்கியப் பாரம்பரியங்கள் சங்க காலத்துக்கும் முன்னிருந்து ஆரம்பிக்கின்றன. அதனால் மலையக மக்களின் கலை இலக்கிய கலாச்சார பாரம்பரியங்களை சங்க இலக்கியத்தின் இலக்கிய கலை கலாசார பாரம்பரியங்களும் பின்னர் மன்னர் காலத்து கலை கலாசார பாரம்பரியங்களின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும். வாய்மொழி இலக்கியம், கூத்து நாடகம், வாத்தியக் கருவிகளின் பாவனை, நடனம் போன்றவற்றில் தேசிய கலை இலக்கியத்திற்கு அவர்களது பங்களிப்பு பாரியதாகவே காணப்படுகின்றது.
16. உங்கள் ஆக்கங்கள் எழுத்து வடிவில் மாத்திரம்தான் உள்ளதா? மேடைப் பேச்சுக்களில் ஏதும் பங்களிப்பு செய்து வருகின்றீரா?
எனது மேடைப் பேச்சுக்கள் எனது பாடசாலை காலத்தில் இருந்து ஆரம்பமாகின்றன. தமிழ்த்தின போட்டிகள் அல்லது வேறு ஏதேனும் இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு அது பாடசாலைக்குத் தெரிய வந்தால் அதில் பங்கு பற்றுவோரின் பெயர் பட்டியலில் முதலாவதாக எனது பெயர் எப்போதும் காணப்படும். நான் பங்குகொண்ட அனேகமான போட்டிகளில் பரிசும் விருதுகளும் பெற்று எனது பாடசாலைக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன். நற்றமிழ் கழகம் என்று அழைக்கப்பட்ட எமது பாடசாலை இலக்கிய மன்றத்தின் தலைவராக நான் இரண்டு வருடங்கள் பதவி வகித்தேன். அந்தக் காலமே அந்த மன்றத்தின் பொன்னான காலமாக கல்லூரியில் இப்போதும் பேசப்படுகிறது. அதன்பின் பல்கலைக்கழகத்திலும் எனது இலக்கியப் பணிகள் தொடர்ந்தன. பல்கலைக்கழகத்தில் நான் மூன்று நாடகங்களை மேடையேற்றினேன். அவற்றில் ஒரு நாடகத்துக்கு நடுவராக விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் வந்திருந்தார். அவர் பின்னர் ஷஷசன்' என்ற ஆங்கில பத்திரிகையில் அது தொடர்பாக எழுதியிருந்த விமர்சனம் என்னை வெகுவாக உற்சாகப்படுத்துவதாக அமைந்தது. எனது வாழ்க்கையிலும்கூட மேடைப்பேச்சு, நாடகம் மற்றும் ஏனைய கலை வடிவங்களான சித்திரமும் சிற்பமும் கூட என் வாழ்க்கையுடன் ஒன்றாக இணைந்து போய்விட்டன. நான் சில ஓவியங்களையும் சிற்பங்களையும் கூட படைத்துள்ளேன். சுமார் 35 நூல்களுக்கு அட்டைப் படங்கள் வரைந்துள்ளேன். மலையக மக்கள் தொடர்பான அரசியல் பொருளாதார சமூக பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றினை ஆய்வு செய்து பல கட்டுரைகளை பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் எழுதியதுடன் மேடைகளில் அவற்றை ஆய்வுக் கட்டுரைகளாக கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்திருக்கிறேன் என்பது தொடர்பில் விசேடமாக இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
17. விருதுகள் தகுதியானவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றனவா? சில படைப்புக்கள் நடுவர் குழுக்கே போவதில்லை. இது எனக்கு ஏற்பட்ட அனுபவம். இதுபற்றி என்ன சொல்வீர்கள்?
விருதுகள் சரியானவர்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கம்பரின் பாட்டுக்களில் குற்றம் கண்டுபிடிக்க ஒட்டக்கூத்தர் என்ற ஒரு புலவர் இருக்கவில்லையா? அந்த ஆண்டவனின் பாட்டிலேயே குற்றம் கண்டு பிடித்து தருமிக்கு பொற்கிழி வழங்குவதே தடுப்பதற்கு நக்கீரன் என்ற ஒரு புலவன் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறான். இப்போதெல்லாம் முதலில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விருது வழங்குகிறார்கள். அப்புறம்தான் தகுதியானவர்களைத் தேடுகிறார்கள். விருது வாங்குவதற்கு கூட செல்வாக்கு உள்ளவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்படுகிறார்கள். தகுதியானவர்கள் பின் வரிசைக்குத் தள்ளப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
18. மொழிபெயர்ப்புத் துறையில் நீங்கள் செய்துவரும் பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கும் போது அவற்றின் மூல நூல்களை வாசிப்பது போன்ற இரசனை கிடைக்குமா?
இதுவரை நான் மொத்தம் ஆறு நூல்களை மொழி பெயர்ப்பு செய்து இருக்கிறேன். அவற்றில் மூன்று சிங்களத்திலிருந்து தமிழுக்கும் ஏனைய மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றைப் பேர் சொல்லி குறிப்பிடுவதாயின் பந்துபால குருகேயின் ஷஷஉழைப்பால் உயர்ந்தவர்கள்', கிறிஸ்டின் வில்சனின் ஷஷகசந்த கோப்பி', மாட்டின் விக்ரமசிங்கவின் ஷஷஎங்கள் கிராமம்', உப்பாலி லீலா ரத்னாவின் ஷஷதேத்தண்ணி', லோனா ரைட் அவர்களின் ஷஷமாநிற மங்கை||, சார்ணல்ஸ் டிக்கன்ஸின் 'ஒலிவர் ட்விஸ்ட்' என்பனவாகும்.
இவற்றில் முதல் மூன்று நூல்களுக்கு எனக்கு சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன. ஏனைய மூன்று நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து இப்பொழுது நூல் வடிவில் உருவாக காத்துக்கொண்டிருக்கின்றன.
நான் மொழிபெயர்த்த அனேகமான நூல்கள் என்னது இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சமூகம் சார்ந்தவை. இவற்றை எழுதியவர்கள் சிங்களவர்களும் ஆங்கிலேயர்களும் ஆவார்கள். எனவே எனது மொழிபெயர்ப்புக்கள் உடன் ஒப்பிடும்போது எனது நூல்கள் மூலநூல் போலவும் அவர்கள் எழுதியவை மொழிபெயர்ப்புகள் போலவும் காணப்படுகின்றன. உதாரணமாக கிறிஸ்டின் வில்சன் என்ற எழுத்தாளர் தனது ஷஷபிட்டர் பெரி' என்ற நாவலில் வுhநல யசந டிநயவiபெ வழஅ.. வழஅ.. வழ உநடிசயவந னநநியஎயடi என்று எழுதுகிறார். இதனையே அனுலா டி சில்வா என்ற எழுத்தாளர் சிங்களத்தில் மொழிபெயர்க்கும்போது ஷஷஅவர்கள் பெர வாத்தியம் இசைத்து தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்' என்று கூறுகிறார்.
மலையக தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த இரண்டு கூற்றுக்களுமே அச்சமூகத்திடமிருந்து அன்னியப்பட்டுக் காணப்படுகின்றன. இதனை நான் தமிழில் மொழி பெயர்த்த போது அவர்கள் ஷஷதப்படித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்' என்று எழுதினேன். தப்பு என்பது இச் சமூகத்துக்கு மிக நெருங்கிய ஒரு வாத்தியக் கருவி ஆகும். அதனை ஷஷடொம்... டொம்....' என்றோ அல்லது ஷஷபெர' என்றோ அழைக்க முடியாது. எது எப்படி இருந்த போதும் வேறொரு சமூகத்தைப் பற்றி அவர்களது எண்ணங்கள் கருத்துக்கள், கலை கலாசாரங்கள், மற்றும் ஏனைய சமூக அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவற்றை இத்தகைய மொழிபெயர்ப்புகள் மட்டுமே பிற இன மக்களுக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.
19. இலக்கியத்தினூடாக அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறீர்களா? இன்று நடைபெற்று வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இது சாத்தியமாகுமா?
மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளமாகவும் உள்ளது. ஒரு மனிதன் பேசுவதை அவன் அவன் பேசும் மொழியை அறிந்திருந்தால் மட்டுமே மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும். எனவே ஒரு சமூகத்தை பற்றி தெரிந்துகொள்ள, வேறொரு நாட்டினர் பற்றி தெரிந்து கொள்ள, அவர்கள் மொழியை நாம் தெரிந்திருத்தல் வேண்டும். ஆனால் அப்படி பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருப்பது சாத்தியமானதல்ல. இங்குதான் மொழிபெயர்ப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலக்கியங்களும் நூல்களும் ஒரு சமூகத்தைப் பற்றியும் அவர்களது பிரச்சினைகள் என்ன என்பது பற்றியும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன. எனவே ஒரு சமூகத்தின் இலக்கியங்களை வாசிப்பதன் வாயிலாக அந்த சமூகத்தின் பிரச்சினைகளையும் அவர்கள் என்ன கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள் என்பதையும் இன்னொரு சமூகத்தால் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய செயற்பாடு சமூகங்களிடையே காணப்படுகின்ற பல்வேறு சந்தேகங்களையும், அச்சங்களையும்கூட தீர்க்கும் வல்லமை பொருந்தியது. இன்று தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனைகளை சிங்கள சமூகம் புரிந்து கொள்ளாமை காரணமாகவே அவர்கள் தமிழ்ச் சமூகத்தையும் முஸ்லிம்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அச்சம் கொள்கிறார்கள். இரண்டு சமூகங்களும் இரண்டு மொழிகளையும் பேசுவார்களாயின், அவர்களின் இலக்கியங்களை படிப்பார்களாயின் நமது 90 சதவீத பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் நடைமுறையில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களின் மொழியையும் இலக்கியத்தையும் அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
அரசாங்கங்கள்தான் உரிய மொழிக் கொள்கையை வகுத்து செயற்படுத்துவதன் மூலம் இலக்கியங்கள் வாயிலாக இன ஒற்றுமையை ஏற்படுத்தலாம். கனடா நாட்டின் கியூபெக் மாநிலம் அந்த நாட்டில் இருந்து பிரிந்து போவதை இத்தகைய மொழிக்கொள்கை வாயிலாக அந்த நாடு வெற்றிகரமாக தடுத்திருக்கிறது.
20. சிறுகதை, நாவல்களைப் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள் துப்பறியும் மர்மக் கதைகள் பற்றி என்ன சொல்வீர்கள்?
இறுதியாக வெளிவந்த எனது ''இரத்த வரலாறு'' என்ற நாவலைப் படித்ததன் விளைவாக இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த நாவல் ஒரு சரித்திர நாவலாக இருந்தாலும் அதனை ஒரு துப்பறியும் கதைப் பாணியிலேயே நான் எழுதியிருக்கிறேன். அதனை வாசித்து ஒரு வாசகன் உங்கள் கதை 200 மைல் வேகத்தில் ஒரு திரைப்படம் போல் ஓடுகிறது என்று குறிப்பிட்டார். இந்தக் கதையை நான் ஏன் எழுதினேன் என அந்த நூலின் முன்னுரையில் விரிவாக விளக்கி இருக்கிறேன். இந்தக் கதை தொடராக சூரியகாந்தி பத்திரிகையில் வெளிவந்த போது இந்த மாதிரி கதைகளை எல்லாம் சடகோபன் போன்றவர்கள் எழுதக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
இப்படி ஒரு சிலரின் அறியாமை, குறுகிய மனப்பான்மை காரணமாக இலங்கையில் இத்தகைய இலக்கியங்கள் படைக்கப்படாமலேயே போகின்றன. ஷஷதுப்பறியும் கதை தானே' என்று எள்ளி நகையாடி அந்த நூலையும் அந்த எழுத்தாளரையும் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். அதனால் இலங்கை வாசகனுக்கு அவனது பதின்ம வயதில் படிப்பதற்கு படைப்புகள் கிடைக்காமல் போகின்றன. இப்போது முதிய வயதில் இருக்கும் மூத்த எழுத்தாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலை விமர்சகர்கள் இப்படி யாரையாவது கேட்டால் அவர்களின் பதின்ம வயதில் அவர்கள் இத்தகைய துப்பறியும் கதைகளை வாசித்துத்தான் தமது வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்து கொண்டார்கள் என்பது தெரியவரும். இது எனது அனுபவ உண்மை. இலங்கை எழுத்தாளர்கள் இத்தகைய படைப்புக்களை சிருஷ்டிக்க முன்வருவதில்லை. அதனை ஜனரஞ்சகப் படைப்பு என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அதன் காரணமாக பதின்ம வயதுப் பாடசாலை மாணவர்கள் தமிழ்நாட்டின் இத்தகைய நூலாசிரியர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், ரமணி சந்திரன் போன்றோரின் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து வாசிக்கின்றார்கள். நான் ''விஜய்'' பத்திரிகையின் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் இதனை நன்றாகவே உணர்ந்தேன். அக்காலத்தில் நான் எழுதிய ஷஷமர்ம தேசம்', ''பேய்களுக்கு இசை விருந்தளித்த கண் தெரியாத இசைஞன்'', ''விஷப் பரிட்சை'' போன்ற நாவல்கள் பதின்ம வயது வாசகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்திருந்தன. ஆரம்பகால வாசகன் தனது வாசிப்புப் பழக்கத்தை அபிவிருத்தி செய்து கொள்ள இத்தகைய நூல்கள் மிக அவசியமான வழிகளாகும்.
21. உங்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது வாழ்க்கை முழுவதிலுமே விருதுகளும் பரிசுகளும் சான்றிதழ்களும் குவிந்து கிடக்கின்றன. நான் எனது 16 வயதில் எழுதிய எனது முதல் கவிதையே பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் தனது பொன் விழாவையொட்டி நடத்திய அகில இலங்கை கவிதை போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது. அதன் பிறகு கவிதை, சிறுகதை, கட்டுரைகள் என வந்த பல போட்டிகளிலும் தொடர்ச்சியாக பங்குபற்றி பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறேன். மத்திய மாகாண சாகித்திய விருது, இலங்கை இலக்கியப் பேரவை தந்த விருது, துறைவி - தினகரன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கிடைத்த விருது, மொழிபெயர்ப்புக்காக பெற்ற மூன்று தேசிய சாகித்திய விருதுகள் போன்றன குறிப்பிடத்தக்கன.
22. இளம் படைப்பாளர்களுக்கு விசேடமாக தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
''சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்'' என்று ஒரு பழமொழி இருக்கிறது. நம்மிடம் எல்லையற்ற அறிவை நாம் சேமித்து வைத்திருந்தால்தான் நாம் எழுதும் எழுத்தில் அவை வெளிப்பட்டு அதனை படிப்பவர்களுக்கும் சமூகத்துக்கும் அது பிரயோஜனமாக இருக்கும். நாம் இடைவிடாது வாசிப்பதன் மூலம்தான் நமக்குள் அறிவை களஞ்சியப்படுத்திக்கொள்ள முடியும். உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் பலரையும் நுணுகிப் பார்த்தோமானால் அவர்கள் எல்லோருமே அறிவாற்றலில் உயர்ந்தவர்களாகவும் அறிஞர்களாகவும் தத்துவவியலாளர்களாவும் இருந்திருக்கிறார்கள் என்பதைக் காண முடியும். எழுத்தாளன் என்பவன் சமூக மேம்பாட்டுக்காக தன் எழுத்து வாயிலாக ஏதாவது ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். ஆதலால் தாம் எழுத்தாளனாக வேண்டும் என்று விரும்புபவர் ஒவ்வொருவரும் முதலில் அறிவுச் செல்வத்தை தேடிக் கொள்ள வேண்டும். அதனைத் தேடி வைத்துக்கொண்டு எழுதுகோலை பிடிப்பவன் அத்துறையில் நிச்சயம் வெற்றி பெறுவான்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்