மல்லாவிக் கஜன் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
எனது பெயர் கஜன். ஆனாலும் எழுத்துலகில் எனது பிரதேசத்தையும் எனது பெயருடன் உள்வாங்கி மல்லாவிக் கஜன் என்ற பெயரில் எழுதிவருகின்றேன். இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மருதநிலம் சூழ் நிலமாம் மல்லாவி எனது பிறப்பிடம். அப்பா, அம்மாவுடன் நானும் இணைந்ததாய் அழகிய சின்னக் குடும்பம். ஆரம்பக்கல்வி முதற்கொண்டு உயர்தரக் கல்வி வரை கல்வியாலும், கலையாலும் முஃமல்லாவி மத்திய கல்லூரி என்னை வளர்த்துவிட்டது மட்டுமன்றி யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்திற்கு என்னை உரியவனாக்கியுமிருந்தது.

ஆனாலும் அதற்கிடைப்பட்ட நாட்களில் அரச துறையில் ஓர் வேலை வாய்ப்பு, குடும்ப சூழல், மற்றும் தற்கால நிலைப்பாடுகளையும் உள்வாங்கியவனாய் பல்கலைக்கழக கல்வியைத் துறந்து தற்போது துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராய் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். அத்துடன் காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இளமானி படடப் படிப்பில் முதலாம் ஆண்டில் வெளிவாரியாக பயின்றுகொண்டிருக்கின்றேன். பகுதிநேரமாக தனியார் கல்வி நிலையங்களில் தமிழ், புவியியல் பாடங்களை இடைநிலை மற்றும் உயர்தரப் பிரிவுகளுக்கு கற்பித்தும் வருகின்றேன். அதனைவிட என்னைப் பற்றி பெரிதாக கூறுவதற்கில்லை.
02. உங்கள் இலக்கிய முயற்சிகளின் பின்புலம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது இலக்கிய முயற்சிகளின் பின்புலம் என்னும் போது, இலக்கியம் என்பது சிறுவயது முதல் என்னுள் முளைத்துக்கொண்ட ஒரு செடியல்ல. இடைப்பட்ட காலச்சூழலில் எதிர்பாராமல் முளைத்துக்கொண்ட ஒரு செடியென்றே நான் கருதுகின்றேன். நான் முதலில் பேனா பிடிக்கவில்லை. தூரிகையையே பிடித்தேன். இளவயதிலிருந்து நான் ஊறிச் செயற்பட்ட கலையென்றால் அது சித்திரக்கலை மட்டும்தான். அதற்கு பக்க துணையாக நின்றவர், ஆசிரியர் திரு.கு. நிமலரஞ்சன் அவர்கள். எனது சித்திரபாட குரு அவர்தான்.
பாடசாலைக் காலங்களில் கவிதை, சிறுகதை, கட்டுரை, விவாதம் உள்ளிட்ட போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றும் ஏராளமான வாய்ப்புக்கள் கிட்டின. என்னை அணுகி வந்த அத்தனை சந்தர்ப்பங்களையும் முடியுமானவரை பயன்படுத்தி வெற்றிகளையும் பெற்றேன். இதற்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் என் பெற்றோரும் பேருதவியாக இருந்தார்கள். 2010 ஆம் ஆண்டில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தரம் 11 இல் மீள்குடியமர்வின் பின்னான காலத்தில் தற்காலிகமாக படித்துக்கொண்டிருக்கையில் முதற் தடவையாக தமிழ் மொழிக் கலைத் திறன் போட்டியில் சிறுகதை ஆக்கத்தில் பங்குபற்றி யாழ் மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றிருந்தேன். முதலாமிடம் பெற்று மாகாண மட்ட போட்டிக்குச் செல்ல முடியவில்லையே என்ற துடிப்பு, என்னை இன்னும் எழுத வைத்தது. 2011 இல் சிறுகதை ஆக்கத்தில் தேசிய நிலைப் போட்டியில் பங்கு பற்றும் வாய்ப்புக் கிட்டியதோடு 2012 இல் திறனாய்வுப் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றிருந்தேன். இதற்கு எனக்கு வழிகாட்டியாக இருந்த திருமதி வித்தியா, திரு சி. டிகுகுமார், திரு க. சந்திரலிங்கம் ஆகிய ஆசிரியர்களை என்றும் நினைவுகூருகின்றேன்.
03. கவிதைத் துறையில் உங்கள் ஈடுபாடு எப்படியுள்ளது?
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தொடக்கத்திலே சிறுகதை எழுதுவதிலேயே என் முழு ஆர்வமும் இருந்ததது. ஏராளமான கவிதை நூல்களை வாசித்திருக்கின்றேன். வெளிவரும் படைப்புக்களில் நிறைந்திருக்கும் கவிதைகள் பலவற்றை வாசித்திருக்கின்றேன். இதன் தாக்கமே என்னை கவிதை எழுதத் தூண்டியது. ஆரம்பத்தில் பொதுவாக கவிதைகளை எழுதினாலும், தற்போது எனக்கென்று ஒரு பாணியைப் பின்பற்றி கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன். இற்றைவரை ஏறத்தாள 50 வரையான கவிதைகளை எழுதியிருக்கின்றேன். பெரும்பாலும் என் கவிதைகள் என் முகநூலில் பதிவேற்றியிருக்கின்றேன். பத்திரிகைகள், இணையத்திலும் என் கவிதைகள் பலவற்றைக் காணவியலும். எதிர்வரும் ஆண்டு தொடக்க காலத்தில் எனது இரண்டாவது நூலாக கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடவும் எதிர்பார்த்திருக்கின்றேன்.
04. பொதுவாக கவிதை மூலமே இலக்கியத்திற்குள் நுழைவார்கள். ஆனால்; நீங்கள் சிறுகதைத் தொகுதியையே முதலில் வெளியிட்டுள்ளீர்கள். இதற்கு விசேட காரணம் என்ன?
தற்காலத்தில் இலக்கிய உலகில் பல இளம் எழுத்தாளர்களும் தங்களை உள்வாங்குவதற்காக பயன்படுத்தும் ஆயுதம் நீங்கள் சொன்னது போல கவிதைதான். தற்காலத்தில் சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவருவது அரிதாகவிட்டது. அதிலும் குறிப்பாக என்போன்ற புதுமுக எழுத்தாளர்களின் வருகை கவிதையில் தொடங்க, முதுபெரும் சிறுகதை எழுத்தாளர்கள் சிறுகதை நூல்களை வெளியிடும் நிலை காணப்படுகின்றது. ஆனாலும் ஷஷகவிதையைவிட சிறுகதையை நான் அதிகம் காதலிக்கின்றேன்|| என் முதற் காதல் முதனூலாய் மலர்ந்தது. இரண்டாவது காதல் அடுத்து மலர எதிர்பார்த்தபடி இருக்கிறது.
05. உங்கள் இலக்கியப் படைப்புக்களின் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
பொதுவாக எனது படைப்புக்களின் கருப்பொருட்கள் போர் மற்றும் சமுதாயா சீர்திருத்தம் என்ற இரண்டு வகுதிக்குள் உள்ளடக்காலம். போரக்; காலத்துள் புதைபட்டும் அதன் வலிகளைச் சுமந்தும், வலி சுமந்தவர்களை கண்டும் கழிந்த என் வாழ்வில் ஆறா வடுக்கள் ஆயிரமாயிரம்.
ஏதாவது எழுத வேண்டும் என்று ஆரம்பித்தால் அதிகம் களமிறங்குவன போரின் வலிகள்தான். சில நேரங்களில் அவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு வேறு கருப்பொருட்களை உள்வாங்கி எழுதுவதுமுண்டு. அத்துடன் இன்றைய எமது சமுதாயம் படும்பாடு பெரும்பாடு. ஆகையால் சமுதாய சீர்திருத்தக் கருக்களை நிறையவே உள்வாங்கி சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதுகின்றேன். குறிப்பாக பெண்ணியம், போதைப்பொருள் பாவனை, சீதனக் கொடுமை, வெளிநாட்டு வாழக்கை, சாதியக் கொடுமைகள், ஏழ்மை, பாலியல் கொடுமைகள் போன்ற கருப்பொருட்களை என் படைப்புக்களில் அதிகம் பேசப்படுகின்றன.
06. "ஒருபிடி மண்" சிறுகதைத் தொகுப்பு பற்றிக் கூறுங்கள்?
எனது கன்னி நூலே "ஒருபிடி மண்" சிறுகதைத் தொகுப்பு ஆகும். என் மனப்பிடிக்குள் அடங்கி ஒடுங்கி நலிந்து கிடந்த கருக்களை சிறுகதைகளாக்கி சிறுக விதைத்திருக்கின்ற விளைநிலம் தான் ஷஷஒருபிடி மண்||. ஒரு பிடி நிலமேனும் எமக்கு வேண்டும் என்று ஒருபிடி நிலம்கூட எஞ்சாது துன்புற்றோரின் ஏக்கம் - வலிகள் - உணர்வுகளின் கொப்பழிப்பு என்பவற்றின் உள்வாங்கல்களுடன் ஒருசில கதைகள் ஒருபிடி மண்ணில் விதைத்திருக்கின்றேன். அத்துடன், சமூக சீர்திருத்த விடயங்களையும் உள்வாங்கி மொத்தம் 10 கதைகளைக் கொண்டமையும் வகையில், கதை – கதைப் படங்கள் - அட்டைப் படங்கள் யாவும் ஒருங்கே என் கீறல்களினால் துணுக்காய் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் வெளியீடாக 2016 மார்ச் 08 ஆம் நாள் இந்நூலை வெளியீடு செய்திருந்தேன்.
07. சமகாலப் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு சிறுகதைகள் பொருத்தமானவை என்று நினைக்கிறீர்களா? ஏன்?
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது முடியும் என்றே. கவிதைகளில் குறியீடுகள் மூலமாகவோ, அல்லது குறிப்பாலோ கூறும் பல விடயங்கள் எல்லா வாசகர்களாலும் எளிதில் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. ஆனாலும், சிறுகதையில் எதனையும் அடக்கியொடுக்கி கூறவேண்டிய அவசியப்பாடு இல்லை. சொல் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவசியமான விடயங்களை எளிதாக எல்லோரும் விளங்கும் வண்ணம் கூறமுடியும். இது வாசகர்களுக்கு இயல்பானதாக அமையுமென்பது எனது கருத்து. ஆகவே சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கவிதைகள் மூலம் சுட்டிக்காட்டி கூறுவதிலும் பார்க்க சிறுகதையூடே புரிதலுடன் கூறி வைக்க முடியுமென்று நான் நினைக்கின்றேன்.
08. உங்கள் படைப்புக்களின் பிரசுர களங்கள் யாவை?
இளவயது முதல் கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவவிடாது பயன்படுத்தியவன் நான். அதுபோல்தான் இப்போதும். எந்தெந்த ஊடகங்கள், நபர்கள் எனது படைப்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கி சந்தர்ப்பங்களை வழங்குகின்றார்களோ அது எனக்குப் பொருத்தமானதாய் அமையுமாயின் நிச்சயம் எனது படைப்புக்களை பிரசுரிக்கின்றேன். இந்நிலையில் தேசிய பத்திரிகைகள், இணையத்தளங்கள், சஞ்சிகைகள், நூல்கள் பலவும் எனது எழுத்துக்களின் பிரசுர களங்களாக நிற்கின்றன. கவிதைகளை பதிவேற்றம் செய்வதில் முகநூலும் எனக்கு அதிக துணை புரிகின்றது.
09. உங்கள் ஆதர்ஷ எழுத்தாளர்கள் பற்றிக் கூறுங்கள்? யாருடைய நூல்களை அதிகமாக வாசிக்கின்றீர்கள்? உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?
சிறுகதை என்னும் போது புதுமைப்பித்தன், செங்கை ஆழியான் ஆகியோருடைய சிறுகதைகளை விரும்பிப் படிப்பேன். கவிதைகளில் கவிப்பேரரசு வைரமுத்து, சோலைக்கிளி முதலானோரின் கவிதைகள் பிடித்தமானவை, ஆனாலும் பாரபட்சமின்றி எந்த எழுத்தாளரின் நூல்களையும் நான் வாசிப்பதுண்டு. அவற்றிலுள்ள நல்ல விடயங்களை பொறுக்கிக்கொண்டு வாசித்து முடிப்பேன். எந்தவொரு எழுத்தாளரின் படைப்புககளையும் குறைகூறி ஒதுக்கும் பழக்கம் என்னிடமில்லை.
10. ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
திடமாய் ஒரு பதிலை இதற்கு தரவும் முடியாதுதான். ஆனாலும், ஷஷபடிப்பவனின் மனதில் ஏதோ ஷஞம ஞம| என்று பண்ணிக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் நல்ல சிறுகதை|| என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பதிலாகும். எல்லா சிறுகதைகளும் வாசகர் மனதில் ஞம ஞம என்று ஏதோ பண்ணுவதில்லை. சில கதைகளின் தாக்குத்திறன் உயர்வாயும், சில கதைகளின் தாக்குதிறன் குறைவாயும் இருக்கச் செய்கின்றன.
கதைக்குத் திரு கருவே ஆகும். கரு உருவானால் கதை நல்லதாகவிடும் என்பது பொருளல்ல. நல்ல கருவை வைத்து பொருத்தமான பாத்திரங்களை உள்வாங்கி சொற்கோர்ப்புடன் பின்னப்பட்;டு வாசகர் மனதில் ஏதோவொரு ஈர்ப்பை நல்ல கதை ஏற்படுத்த வேண்டும்.
சிறுகதைகளை எழுதும்போது நான் ஒரு எழுத்தாளன் என்ற அந்தஸ்தை இழந்துவிடுகின்றேன். என்னை ஒரு வாசகனாய் நோக்குகின்றேன். நான் ஒரு எழுத்தாளரின் ஒரு சிறுகதையை வாசிக்கும்போது எவ்வௌ; விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி வாசிக்கின்றேனோ, எத்தகைய எதிர்ப்பார்ப்புடன் வாசிக்கின்றேனோ, ஒரு வாசகன் ஒரு கதையூடே எதனை அடைய முற்படுகின்றானோ அதனை நான் என் கதையிலும் இருக்கச் செய்யவேண்டும். அப்போது தான் என் கதையை யாரோ ஒரு வாசகன் விரும்பி வாசிப்பான். அந்நிலையை ஏற்படுத்த வேண்டுமாயின் எழுத்தாளனாக நின்று கதையை எழுதுவதிலும் பார்க்க என்னை வாசகர்களாய் பாவனை செய்து எழுதுவது பொருத்தமென்று நான் எண்ணுகின்றேன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சென்பர். ஆகவே அத்தனை அம்சங்களிலும் அளவுடன் கதை அமையுமாயின் நிச்சயம் அது ஒரு நல்ல கதையாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.
11. இலக்கியத் துறையில் உங்கள் எதிர்கால இலட்சியங்கள் யாவை?
வானுக்கு எல்லை இல்லாதிருப்பது போல எழுத்திற்கும் எல்லை கிடையாது. இறைத்த கிணறுதான் ஊறுமென்பார்கள். அதுபோல எழுத எழுதத்தான் இன்னும் நிறைய இலக்குகள் உருவாகும். அந்த இலக்குகளை அடைய வேண்டிய இலட்சியங்கள் உருவாகும். என்னைப் பொறுத்தவரை இப்போதுள்ள இலட்சியங்களைவிட இன்னும் நிறைய இலட்சியங்கள் எதிர்காலத்தில் என்னுள் உருவாகும் என்று நம்புகின்றேன்.
"நிறைய எழுதணும், நிறையச் சாதிக்கணும்" என்று அடிக்கடி நினைப்பவன் நான். இன்னும் இதனையே நினைத்துச் சாதிக்க வேண்டும் என்ற அவாவுடன் என் எழுத்துப் பணியை தொடர எதிர்பார்த்துள்ளேன். குறிப்பாக சமூகத்திற்கு தேவையான விடயங்களை உள்ளடக்கி நல்ல நூல்களை எழுதவேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை. தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்து வருவதனால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை கருத்திற்கொண்டு அரச பாட நூல்களை தழுவி துணை நூல்களை தயாரிக்க வேண்டும் என்பது எனது பேரவா. இதன் முதற் கட்டமாக தற்போது இரண்டு நூல்களை எழுதியிருக்கின்றேன். அதனை வெளியீடு காணச் செய்வது எனது அடுத்த கட்ட பணியாகவுள்ளது. புதுமுக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களது நூல்களை உள்வாங்கி நூலாய்வுகளை எழுதி வருகின்றேன். இலக்கியச் செயற்பாட்டில் முழுத் திருப்தியுடன் இன்னும் நிறையச் சாதிக்க வேண்டும்.
12. உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு யாது கூறுவீர்கள்?
இன்றைய காலச் சூழலில் எழுதவல்ல நிறைய எழுத்தாளர்கள் இருப்பினும், அவர்கள் எல்லோரும் இலக்கிய உலகில் இடம் பிடிப்பது என்பது மிகக் கடினம். பொருளாதார நிலை எல்லா எழுத்தாளர்களுக்கும் இடமளிப்பதில்லை. ஆகவே உங்களுக்கான சந்தர்ப்பங்களை நீங்களே தேட வேண்டியதோடு, உங்களை நாடிவரும் சந்தர்ப்பங்களை பொருத்தமுற பயன்படுத்துங்கள். முடியாதென்று எதனையும் முடித்து வைக்காதீர்கள். முடியுமென்று துணிந்து செய்யுங்கள். உங்களுக்கான இடத்தையும் தனித்துவத்தையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். சமூகத்திற்கு ஏற்ற நல்ல படைப்புக்களை படையுங்கள். நிச்சயம் உங்களுக்கான இடங்களை சமூகமே உங்களுக்கு வழங்கி ஆதரிக்கும். சக எழுத்தாளர்களையும் மதித்து போட்டி - பொறாமை - குரோத குணங்களை களைந்து யாவரும் எழுத்தாளர்களே என்ற கோட்பாட்டில் இயங்குங்கள்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:
Post a Comment