கவிஞர் கிசோகுமார் உடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
நான் கோவிந்தசாமி கிசோகுமார். மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை எனும் நகரத்தை அண்டி அமைந்துள்ள பெரியமண்வெட்டியூர் (டிறைட்டன் என்று அழைப்பார்கள்) என்ற தோட்டத்தினை வசிப்பிடமாகக் கொண்டுள்ளேன். வீட்டில் அம்மா, அப்பா, மனைவி மற்றும் இவர்களுடன் வசிக்கும் எனக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறாள். அத்துடன் என் அக்காவும் தம்பியும் ஆசிரியர்களாக பணிபுரிகின்றார்கள். நானும் ஒரு அரசாங்கப் பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாட ஆசிரியராக 10 வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றேன்.
நான் 2008 ஆம் ஆண்டு பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாட கற்பித்தலில் டிப்ளோமா (னுip ஐn வுநயஉhiபெ ஐஊவு) கற்கை நெறியில் இணைந்து கொண்டேன். அங்கு ஆங்கில மொழி மூலமான கற்றல் என்றாலும் தமிழ் கலாசார கலைத் துறைகளிலேயே என்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டேன். சிறுவர், சமூக வரலாற்று நாடகங்களில் மிகுந்த ஆர்வமாக பங்கேற்ற நினைவுகளை இப்போது மீட்டிப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அத்துடன் எனக்கு நாடகம், வில்லுபாட்டு, தாளலயம் போன்ற துறைகளில் அதிக நாட்டம் இருந்தது. அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாட ஆசிரியராக நியமனம் பெற்ற பிறகும். தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாடத்தினை கற்பித்தலோடு மட்டும் நிற்காமல் மாணவர்களின் நாடக ஆற்றுகை, கலைத்துறை, இலக்கியத் துறை சார்ந்த முயற்சிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் வழங்கி அவர்களின் முயற்சிகளில் பங்கேற்பதுமாய் கடமையாற்றும் எனக்கு தொழில் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது.நீங்கள் எப்போது, எந்த வயதில் எழுத்துத் துறைக்குள் நுழைந்தீர்கள்?
கல்லூரிக் காலத்தில் நூலகத்தில் நிறைய, நிறையக் கற்றலோடு தொடர்புபட்ட புத்தகங்கள் இருந்தபோதும் கவிஞர் வைரமுத்து கவிதை நூல்கள் மற்றும் எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே வாசிக்க ஆரம்பித்தேன். தபுசங்கரின் காதல் கவிதையிலும் மயங்கியிருந்து மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்தேன். அவையே எனக்கு கவிதையாயின.
நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதத் தூண்டப்பட்ட சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
ஆரம்பத்தில் நண்பர்களோடு சேர்ந்து நானும் விளையாட்டாகக் காதல் கவிதைகளை எழுத ஆரம்பித்திருந்தாலும். ஆசிரியராகி சமூகத்திற்குள் நுழைந்தபோது எம் சமூகத்தில் இலையாடும் அவலங்களே சமூகம் சார்ந்த கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் தூண்டின. அத்துடன் மலையக மக்கள் கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக இன்றுவரை எதிர்நோக்கும் இன்னல்கள், அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், அவர்களின் அறியாமை மற்றும் அவர்களின் எதிர்மறையான சிந்தனைகள் போன்றவை என்னை அதிகமாக யோசிக்கவும் எழுதவும் நிர்ப்பந்தித்தன என்று சொல்லலாம்.
பத்து வருட காலமாகத்தான் எழுதி வருகின்றேன். எப்போதாவது ஏதோ ஒரு நிகழ்வு, ஒரு சம்பவம் அல்லது ஒருவகையான சிந்தனை என்னைப் போட்டு சுழற்றிக்கொண்டும் ஏதேதோ எண்ண ஓட்டங்களை என்னுள் ஓடவிட்டுக் கொண்டும் இருக்கும். அதன் விளைவாக ஏதாவது ஒரு கவிதை அல்லது கவிதைக்கான அடி மனதில் வரைய ஆரம்பிக்கும். அதை மனதிலே வடித்துக் கொண்டே இருப்பேன். நான் திருப்தியடைவது போல் அதற்கான உருவம் கிடைத்தால் உடனே ஏட்டில் எழுதி வைத்துவிடுவேன். அல்லது தற்காலங்களில் திறன்பேசியின் நோட்ஸ் எப்பில் குறித்துக் கொள்வேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை வாசித்துவிட்டு ஏதேனும் மாற்றம் தோன்றினால் அதனையும் திருத்தம் செய்து கொள்வேன்.
புதுக் கவிதைக்கும், நவீன கவிதைக்கும் இடையே என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?
மரபுக் கவிதைகளில் இருந்து அமைப்பு ரீதியாக தன்னை விடுவித்துக் கொண்டதுதான் புதுக் கவிதை என்று சொல்லலாம். ஆரம்ப நிலைக் கவிதை வாசகர்களுக்கு புதுக் கவிதைகள் மீதான வாசிப்பே அவர்களை ஈர்க்கச் செய்யும். பொதுவாக புதுக் கவிதைகள், எதுகை மோனைகளிலான மொழி அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் வாசகர்கர்களோடு நெருக்கமான மொழி நடையிலும் இலகுத் தன்மையோடும் எழுதப்படுவதாகவே உணர்கிறேன்.
கவிதைகளால் எத்தனையோ மாற்றங்களும் புரட்சிகளும் நிகழ்ந்த இந்தப் பூமியில் நமது கவிதைகளும் என்றாவது ஒரு நாள் யாரிடமாவது ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்றுதான் ஒவ்வொரு கவிஞனும் முயல்கின்றான். நானும் அதற்கு விதிவிலக்கானவன் அல்ல.
உங்களைக் கவர்ந்த கவிஞர் யார்? அவரது எந்தப் படைப்பு உங்களை மிகவும் கவர்ந்தது?
கவிதைகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும்? ஒரு சிறந்த கவிதை எவற்றைப் பிரதிபலிக்க வேண்டும்?
என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் கவிதை என்பதை ஒரு புதினமான ஒரு அழகியலுடனான எண்ண வெளிப்பாடாகவே உணர்கிறேன். ஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு உணர்வு, ஒரு அனுபவம் போன்றவை கவிதை ஒன்றை எமக்குக்குள் ஊற்றெடுக்க வைக்கும் போது அது வாசகர்களை ஈர்க்கச் செய்ய வேண்டும். ஒரு நுணுக்கமான மொழியாடலால் பிணைக்கப்பட்டு தேவை ஏற்படின் தேவையான அளவான படிமங்களோடு வாசிப்பவர் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக வடிக்கப்படும் கவிதைகளே சிறந்த கவிதைகளாக அறியப்படுகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கவிஞராக இருக்கும் நீங்கள் சக கவிஞர்களின் கவிதைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
சக கவிஞர்களின் கவிதைகளை எனக்கு உசாத்துணையாகவே எடுத்துக் கொள்கிறேன். அவர்களுடைய கற்பனை, பார்வை, தளம் பற்றி அறிந்து கொண்டு காலத்திற்க்கு ஏற்றாற் போல எனது எழுத்துக்களையும் சீர் செய்து கொள்கிறேன்.
நீங்கள் இதுவரை எழுதியுள்ள கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கவிதை எது? என்ன காரணம்?
நான் எழுதிய பல கவிதைகளில் மழை பற்றிய கவிதை ஒன்றையே எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை ஒன்றாக முன்வைக்க விரும்புகின்றேன்.
மழை!
இடி கலந்த அடை மழை
அனுப்பி விட்டேன்
பிள்ளைகளை மழை ரசிக்க..
ஒரு பிள்ளை மட்டும்
தனிப் பிள்ளையாய்
ஏதோ கலக்கத்தில்
ஒதுங்கி நிற்க..
விழித்தேன்..
விரைந்தேன்..
வினவினேன்..
விடை கிடைத்ததும்
என் கண்கள் இரண்டிலுமே
கண்ணீர்..
"அம்மா தலைக்கி
ஒன்னுமே கொண்டு
போகல சேர்"..
மலையப் பிரதேசங்களில் தேயிலை கொழுந்து பறிக்கச் செல்லும் எம் அம்மாக்களுக்கு மழை, வெயில், காற்று, வெள்ளம் என எந்த தயவு தாட்சனையும் கிடையாது. வேலைக்குச் சென்றே ஆக வேண்டும். மழைக் காலங்களில் ஈரம், குளிர் வாடையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பொலிதீன் விரிப்புகளை உடலில் சுற்றிகொண்டும், தலைக்கு போர்த்திக் கொண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். அப்படி ஒரு மழைக் காலத்தில் சின்ன வயதில் என்னுடைய அக்கா சொன்னார். "அம்மா தலைக்கு ஒன்னுமே கொண்டு போகல" என்று. அதனை கவிதையாகப் பதிவு செய்யும் போதும் நினைக்கும் போதும் எனது கண்கள் ஈரமாகும்.
இலக்கிய இரசனையுள்ளவர்கள் நூல்களை வெளியிடுவது வழமை. அந்தவகையில் நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?
"மூங்கில் கூடை" என்ற மகுடத்தில் அமைந்த ஒரே ஒரு கவிதை நூலைத்தான் நான் இதுவரை வெளியிட்டிருக்கிறேன். இந்தக் கவிதை நூல் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கான அணிந்துரையை மூத்த எழுத்தாளர் கல்வியியலாளர் மொழிவரதன் அவர்கள் எழுதியுள்ளார்கள். வாழ்த்துக் கவிதையை தலவாக்கலை தமிழ்ச் சங்கத் தலைவர் சு. சுரேஷ் அவர்கள் வழங்கியுள்ளார். 78 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 59 சிறியதும் பெரியதுமான கவிதைகள் இடம்பிடித்துள்ளன.
நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது? உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
கவிதை எழுத ஆரம்பித்ததுமே நூலொன்றாக வெளியிட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே இருப்பேன். அதன்படி ஒரு பெரிய பிரயத்தனத்தோடு என் கவிதைகள் ஷஷமூங்கில் கூடை' என்ற கவிதை நூலானது. அதற்குப் பக்க பலமாக மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மற்றும் தலவாக்கலை தமிழ் சங்கத்தினர் பெறும் துணை நின்றார்கள்.
உங்கள் "மூங்கில் கூடை" கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
கருப்பொருட்கள் என்று பார்த்தால் எம் மலையக மண் சார்ந்த அவலங்களைத்தான் ஷஷமூங்கில் கூடை' கவிதை நூலில் பரவலாக கவிதையாக்கி வாசகர்களுக்கு முன்வைத்துள்ளேன். இன்னும் ஒரு வகையில் கூறுவதாயின் எம் மண்ணின் மீதும் மண்ணின் மைந்தர்கள் மீதும் கொண்ட அதீத அன்பே எனது கவிதைகளின் பாடுபொருள்களாகியது என்றும் சொல்லலாம்.
உங்கள் நூலினூடாக இலக்கிய உலகுக்கு குறிப்பாகக் குறிப்பிட விரும்புவது என்ன?
அப்படி ஒன்றும் பெரிதாக நினைத்து எழுதவில்லை. எனக்குள் தோன்றும் கற்பனை அலைகளை எனக்கு வருவது போல் சுதந்திரமாகவே எழுதியுள்ளேன்.
நீங்கள் எழுதியுள்ள சிறுகதைகள் பற்றியும் சொல்லாமே? சிறுகதைகளுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?
எனக்கு சிறுகதை வாசிப்பதில் அதீத ஆர்வம் எப்போதுமே உண்டு. கவிதையினால் சொல்லி முடிக்க முடியாத சிந்தனைகளை எனக்கு தெரிந்த மொழி நடைகளைப் பயன்படுத்தி அதற்கொரு கதை வடிவம் கொடுக்க முயல்கின்றேன் என்று சொல்லலாம். அது ஒரு முழுமையான சிறுகதைக் கட்டமைப்பைக் கொண்டு நகர்கிறதா என்ற ஐயம் எனக்குள் அடிக்கடி தோன்றும். ஆனாலும் வாசகர்கள் ஏதாவது ஒரு சட்டகத்தினைப் பொருத்தி அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிகையுடனே தொடர்ந்தும் எழுதுகின்றேன்.
சிறுகதைகளுக்கான கருப்பொருட்கள் அனைத்துமே நமது அன்றாட வாழ்கை ஓட்டத்தில் எதிர்படுகின்ற, கடந்து போகின்ற சம்பவங்களில் இருந்தே உருவி எடுத்து தேவைக்கு ஏற்ற கற்பனைகளோடு சொல்ல நினைக்கின்றேன்.
சஞ்சிகைகளில் உங்களது படைப்புகளின் பங்களிப்புக்கள் எப்படி இருக்கிறது?
முன்பு ஒரு சில சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தேன். தற்போது முகநூல் போன்ற டிஜிட்டல் தளங்களின் மேலான ஈர்ப்பு வாசகர்கள் மத்தியில் பிரபல்யமடைந்திருப்பதால் அவ்வாறான தளங்களிலேயே என்னுடை எழுத்துகளைப் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டுவிட்டேன்.
கவிதை, சிறுகதைத் துறை தவிர வேறு எந்தத் துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறீர்கள்?
மேடை நாடங்களில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. மலையகத்தின் முதன்மையான நாடக கலைஞர் திரு. மு.காளிதாஸ் அவர்களின் களரி அரங்க நிதியத்துடன் இனணந்து அவருடைய ஆற்றுகைகளின் அவ்வப்போது இணைந்துகொள்வேன். கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அவரின் பல்வேறு மேடை நாடகங்களில் பங்காற்றி இருக்கிறேன்.
உங்கள் நூல்களுக்கு எவ்வகையான விமர்சனத்தை வாசகர்கள் முன்வைத்தார்கள்?
வளர்ந்து வரும் கவிஞராக என்னை வாசகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நம்புகிறேன். அத்துடன் என் கதைகளுக்கும் கூட ஓரளவு அங்கிகாரத்தினை வழங்கி இருக்கிறார்கள் என்று அவர்கள் வழங்கிய கவிதை பற்றிய கருத்துப் பகிர்வுகள் வாயிலாக அறிந்துகொண்டேன்.
ஆசிரியர் என்ற வகையில் மாணவர்களிடையே காணப்படும் வாசிப்பு ஆர்வம் எந்த நிலையில் உள்ளதாக நினைக்கிறீர்கள்?
தற்கால மாணவர்களிடையே இலக்கிய வாசிப்பானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகிறது என்ற துர்ப்;பாக்கிய நிலையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மாணவர்களிடையே பாட நூல் வாசிப்பில் கூட மந்த நிலைதான் காணப்படுகிறது. இதற்கு நவீன ஊடகங்களின் செல்வாக்கே பிரதான காரணியாகும். பரீட்சைக்கான படிப்பு என்று அவர்களின் தேடலும் மட்டுப்படுத்தப்படுவதால் அவர்களின் பரந்துபட்ட வாசிப்புக்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அதனை மாற்றி அமைப்பதற்கான முயற்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பே இன்று அதிகம் தேவையான ஒன்றாக அமைந்துள்ளது.
உங்களுக்கு அல்லது உங்களது கவிதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
நான் ஏற்கனவே கூறியது போல சமூக வலைதளங்களையே என்னுடைய எழுத்துக்கான தளமாக மாற்றி எழுதிக் கொண்டிருப்பதால் அங்கு பல்வேறு வகையான வாசகர் மட்டங்களில் இருந்து உடனுக்குடன் ஆரோக்கியமான பின்னூட்டல்கள், ஆதரவுகள், வரவேற்புகள் என்ற வகையிலான பதிவுகள் அவ்வப்போது கிடைக்கும். ஒரு சிலர் நேரிலோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ கருத்துக்களையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பார்கள். அவை மேலும் இயங்குவதற்கான பிரயத்தனத்தினை எனக்குள் ஏற்படுத்தும்.
நிறைவாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
வாசிப்பு இன்றிய எழுத்துக்கள் ஒரு போதும் அனைவராலும் வாசிக்கப்பட மாட்டாது. முதலில் ஆழமான வாசகனாக என்னை உருவாக்கிக்கொள்ளவே விரும்புகிறேன். நிறைவாக என்னைப் போன்ற புதிய இலக்கிய முயற்சியாளர்களை இணங்கண்டு அவர்களுக்கு இவ்வாறானதொரு செவ்வியின் ஊடாக களம் தந்து அடையாளப்படுத்தும் உங்களின் பணி மிக்க வரவேற்கத்தக்கது. இந்த நேர்காணலைப் பிரசுரிக்கும் தினகரன் பத்திரிகையின் செந்தூரம் இதழுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிகள்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


















