திரு. சூசை எட்வேட் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன், என் சொந்த இடம் திருகோணமலைதான். என்னை உருவாக்கிய இடமும் அதுதான். திருமண சம்பந்தம் யாழ்ப்பாணம். அங்குதான் என் நான்கு பிள்ளைகளும் பிறந்து வளர்ந்தார்கள். என் வாழ்வின் பெரும் பகுதி அங்குதான் கழிந்தது. இடப்பெயர்வு காரணமாக வன்னியிலும் சில காலம் வாழ்ந்திருக்கின்றேன். இப்போது போர் ஓய்வு (தீர்வு இல்லை) பிள்ளைகள் கரைசேர்ந்து குடும்பப் பாரம் நீங்கிவிட்ட நிலையில், மீண்டும் சொந்த இடம் திருமலை வந்து மனைவியும் நானுமாக அமைதியாக வாழ்ந்து வருகிறோம். இந்த அமைதியான சூழலில் தான் என் எழுத்துப் பணியும் சீராக நடந்து வருகின்றது.
02. பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே?
திருகோணமலையில் அர்ச் பிரான்சீஸ் சவேரியார் (சென் சேவியர்) பாடசாலையில்தான் படித்தேன். அரிவரி வகுப்பில் இருந்து எஸ்.எஸ்.ஸி. வகுப்புவரை அங்குதான் கல்வி கற்றேன். கற்கும் போது அது ஓலைப் பள்ளியாகவே இருந்தது. படிக்கும் காலத்தில் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிகளில் மாவட்ட ரீதியாக கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். பாடசாலையில் பொது விடங்களில் நடந்த நாடகங்களிலும் நடித்திருக்கின்றேன்.
எஸ்.எஸ்.ஸி. இறுதித் தேர்வில் திறமைச் சித்தியுடன் தேறினேன். பதினைந்து மாணவ மாணவியர் அப் பாடசாலையில் இருந்து கலந்து கொண்டனர். நான் மட்டும் தேறினேன். மேல் படிப்புக்காக இந்துக் கல்லூரியில் சேர்ந்து எச்.எச்.ஸி. படித்தேன். ஒருவருடம் படித்தேன். ஏனோ மேற்கொண்டு படிக்க மனம் ஈடுபாடு காட்டவில்லை. மூன்று நான்கு புத்தகங்களையே திரும்பத் திரும்ப உடுப்போட்டு படித்து பட்டம் பெற்ற பின் மறந்துவிடும் கல்வி முறை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனது படிப்பைத் தொடரவில்லை. ஆனால் அறிவின் தேடல் தொடர்ந்தது. பொது நூலகத்தில் அங்கத்தவராகச் சேர்ந்து புத்தகங்களை வீPட்டுக்குக் கொண்டு வாசிப்பதிலேயே பொழுதைப் போக்கினேன். அது எதிர்கால வளர்ச்சிக்கு வித்தாகியது. தந்தையாருக்கும் வயதாகிவிட்டது. கலியாண ஆசையும் வந்துவிட்டது. எல்லாவற்றையும் நிறைவேற்ற அவசரமாக ஒரு தொழில் வேண்டும். தந்தையாரின் சிகையலங்கரிப்பு தொழிலையே பழகி நானும் ஒரு தொழிலாளியாகிவிட்டேன். பத்திரிக்கைகள் சஞ்சிகைகள் இல்லாத சலூனே இல்லை என்று சொல்லலாம். பலகுணபேதமானவர்கள், புத்திசாலிகள், மோடர்;கள், சாமர்த்தியசாலிகள் என்று பல விதமானவர்களும் வருவார்கள். தலையைத் தடவியே மண்டையில் மனதில் இருப்பவற்றையெல்லாம் கறந்;து விடுவேன். இந்தத் தொழிலையும் எழுத்துக்கு உதவியாக்கிக்கொண்டேன்.
03. நீங்கள் இலக்கியத் துறைக்குள் பிரவேசித்த அந்தத் தருணத்தைப் பற்றி குறிப்பிடுங்கள்?
நான் மேல் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு ஆசிரியர் வகுப்புக்கு வந்தால் பாடப் புத்தகத்தோடு பொது விசயங்களைப் பற்றியும் பேசுவார். வேறுவேறு நூல்களில் படித்ததில் பிடித்தவற்றையும் சொல்வார். ஒரு நாள் இப்படிச் சொன்னார். "பேரறிஞர் பெர்னாட்ஷா, பள்ளிப் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரன் இல்லைதான். ஆனால் அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. ஒரு நாளைக்கு ஜந்து பக்கம் எழுதிவிட்டுதான் சாப்பிடுவார், படுப்பார். ஏதோ இடைஞ்சல் காரணமாக ஒரு நாளைக்கு எழுத முடியாமல் போனால் மறுநாள் பத்துப் பக்கம் எழுதுவாராம். இந்த நாளாந்த பழக்கமே அவரை உலகம் வியக்கும் பேரறிஞராக்கியது" என்றார். இந்த வசனங்கள் என் மனதில் ஆழவேரோடிவிட்டது. நானும் எழுதுவதை நாளாந்த பழக்கமாக்கிக் கொண்டேன். அப்படி எழுதத் தொடங்கிய பின்னர் சிந்தனை, கற்பனை வெள்ளத்தில் மிதந்து எங்கெங்கோ சென்றேன். சொந்த வாழ்வின் கவலைகளை மறந்தேன். இன்னுமொன்றையும் குறிப்பிட வேண்டும். திருகோணமலை பொது நூலகத்துக்கு அடிக்கடி போய் வரும் போது அங்கே நூலகராக பணியாற்றியவரோடு எனக்கு மிகுந்த பழக்கம் ஏற்பட்டு பெரிய நட்பாகவே வளர்ந்துவிட்டது. அவருக்கு என்னைவிட பத்தோ பன்னிரெண்டோ வயது அதிகம்தான். என்றாலும் உவப்பான நண்பராகிவிட்டார். அவர்தான் எனக்கு நல்ல தரமான நூல்களை, நாவல்களை, சிறுகதைகளை, எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். நல்ல மேடைப் பேச்சாளன். அவருடைய பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாகிக் கொண்டிருந்தது. அவருடைய பெயர் தி. அரியநாயகம் அவர் ஒருநாள் என்னை நோக்கிச் சொன்ன வார்த்தைகளே என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது எனலாம். ஷஷநீ பேசுவதொல்லாம் இலக்கியமடா. நீ எழுத முற்பட்டால் சிறந்த எதிர்காலம் உன்னைச் சேரும்'
04. உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வெளி வந்தது?
எனது முதலாவது சிறுகதை மட்டுமாநாகரில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஷதமிழ் அலை| என்னும் வாரப் பத்திரிகையிலேயே வெளிவந்தது. கதையின் பெயர் "மனசுக்கு வயசில்ல'| என்பதாகும். 2007 ஆம் ஆண்டில் வெளியான கதையிது. தொடக்க காலத்தில் தேசிய பத்திரிகைகளில் ஆக்கங்கள் பிரசுரமாக அரும்பாடு பட்டிருக்கிறேன். ஒரு நண்பரின் உதவியால் இந்தப் பத்திரிக்கையிலாவது பிரசுரமாகிவிட்டது. அதன் பிறகு மிகுந்த சிரமப்பட்டுத்தான் தேசிய பத்திரிகைகளில் வெளியீடு செய்யும் வாய்புக் கிட்டியது.
05. எழுத்து என்பது தவம் என்கிறார்களே இது பற்றி என்ன சொல்வீர்கள்?
தவயோகம் பக்தியோகம் கர்மயோகம் என்று இருக்கிறது. வேறு சிந்தனை ஏதுமில்லாது இறை சிந்தனையோடிருப்பது தவமாகும். தன் கடமையில் முழு மனதையும் செலுத்தி ஈடுபட்டு வருவது கர்ம யோகமாகும். தன்னிலை மறந்து எழுத்துலகில் கற்பனாலோகத்தில் சஞ்சரிக்கும் இலக்கிய கர்த்தாவும், அவன் முயற்சியும் ஒரு தவம்தான். அவனே உண்மையான இலக்கிய கர்த்தாவாகி சாதனை படைப்பான். வெறும் சுயநல ஆசைக்காக பிரபலத்துக்காக பொழுதுபோக்காக எழுதுபவன் தவம் அல்லன் அவம் ஆவான்.
06. இதுவரை நீங்கள் எழுதிவெளியிட்டுள்ள நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
2010ம் ஆண்டு "கருத்துக் கலசம்" என்று ஒரு கவிதை நூல் வெளியீடு செய்தேன். ஈற்றிசை வெண்பாவில் (திருக்குறள் நடை) ஆயிரத்து முந்நூறு பாக்களை யாத்து வெளியிட்ட நூலது. இதில் அடங்கிய ஒரே ஒரு பாவை மட்டும் இட்டு காட்டுகிறேன்.
"நிலத்துக்கு வேலிபோட்டு தனியுடமைக்கு வித்திட்டவனே
உலகத்தின் முதல் குற்றவாளி"
என் சிந்தனையில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது ஈரடியில் எழுதுவது சுலபமாகிவிட்டது. இப்படி இப்போதும் எழுதியவை ஈராயிரத்தையும் தாண்டிவிட்டது. "இவர் தான் மனிதன்" என்று பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி 2013 ஆம் ஆண்டளவில் ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்டிருக்கிறேன். இன்றைவரையில் நூறு கதைகளுக்குமேல் வெளியாகிவிட்டன. பத்திரிக்கை, சஞ்சிகைகளில் இன்னும் நூறு கதைகள் பிரசுரத்துக்காக காத்திருக்கின்றன. நாடகங்களும் எழுதியுள்ளேன். இவை தேசிய சேவையில் ஒலிபரப்பாகியுள்ளது. புத்தக வெளியீட்டால் கையைச் சுட்டதுதான் மிச்சம். பார்க்கலாம்.
07. சிறுகதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்?
நான் எழுதுவதற்கான சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பதில்லை. எழுதுவது எனது நாளாந்தப் பழக்கமாகிவிட்டது. எழுதாத நாளௌ;ளாம் வாழாத நாளென்றே ஆகிவிட்டது. என் இதயத்தில் இதை எழுது, அதை எழுது என்று முட்டி மோதிக் கொண்டே இருக்கும்.
08. உங்கள் சிறுகதைகளில் ஆழப்பொதிந்துள்ள விடயங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
"மனம் போல வாழ்வு", "கடவுளை நம்பினோர். கைவிடப்படார்" இந்தப் பொன்மொழிகளே என் தாரக மந்திரமாகும். என் வாழ்வின் வெற்றியின் இரகசியமுமாகும். எல்லோருக்கும் இதனை ஆதாரமாகக் கொண்டு வாழ்வில் வெற்றிபெற எழுதுவதே என் ஆக்கங்களின் ஆதார சுருதியாகும்.
09. உங்களது சிறுகதைகளில் எந்த ஆளுமையாளர்களின் தாக்கம் காணப்படுகின்றது?
நான் இளமைக் காலத்தில் பல நாவல்கள், சிறுகதைகள் வாசிக்கும் காலத்தில், டாக்டர் மு. வரதராசனாரின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை அழகாக ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். மிகவும் விரும்பி வாசிப்பேன். அவரை என் ஆதர்ச குருவாகவும் கொண்டிருக்கிறேன். அதே பாணியில் ஆரம்ப காலத்தில் எழுதி வந்தேன். ஆனால் அவர் பேராசிரியராக நின்று மாணவர்களுக்கு உபதேசம் செய்யும் பாங்கு இல்லாதவாறு என்னை உருவாக்கிக் கொண்டேன்.
10. சிறுகதை தவிர்த்து வேறு எந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்கின்றது?
சிறுகதை, கவிதை இலக்கிய சேவைதான் என் முழு மூச்சான ஆர்வமாகும். மற்றவெல்லாவற்றுடனும் பட்டும் படாமலும் வாழ்ந்து வருகிறேன்.
11. ஈழத்து இலக்கியத் துறைக்கு நீண்ட காலமாக காத்திரமான பங்களிப்பை நல்கிவரும் உங்களின் தற்போதைய முயற்சிகள என்ன?
நான் என் வாழ்வில் கண்டுணர்ந்தவைகளை, கற்றுணர்ந்தவைகளை எம் மக்களின் நல்வாழ்வு வேண்டி எழுதிக்கொண்டே இருப்பேன். அவற்றை நூலுருவாக்க முயற்சிக்கின்றேன்.
12. இலங்கையில் நாவல்களின் வரவு குறைந்தமைக்கான காரணம் என்ன?
இப்போது கைபேசி, முகநூல், இணையதளம் என்று குறுந்தகவல்கள் மூலம் குறுகிய நேரத்தில் பலதையும் அறிந்துவிடும் நவீன சாதனங்களின் ஆளுகைக்குள் இளைய சமுதாயம் வீறு நடை போடுகின்றது. இந்நிலையில் எத்தனையோ பக்கங்களை, எத்தனையோ நாளாக பொறுமையாக வாசிக்கும் மனநிலையில் பெரும்பாலோர் இல்லை. மேலும் நிதானமாக, பொறுமையாக, ஒரே சிந்தனையாக இருந்து பல நாட்களோ மாதங்களோ வருடங்களோ இருந்து எழுதிக் கொண்டிருக்கும் மன வல்லமை, ஆளுமை இப்போதெல்லாம் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சிறுகதைகளே கொஞ்சம் பக்கங்கள் கூடிவிட்டால் காணும் பிரசுரிக்க பின்னடிக்கிறார்கள். வாசிக்க எத்தனிப்பாரும் முகம் சுளிக்கின்றார்கள். இந்த அவலட்சணங்கள் தான் நாவல்கள் அருகிவரக் காரணமாகும். பழந்தமிழ் காவியங்கள் தான் அழியாவரம் பெற்று தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றன என்பது மறுக்க வொண்ணா உண்மையாகும். இப்படியே தழிழுலகம் போய்க்கொண்டிருந்தால் "மெல்லத் தமிழினிச்சாகும்" எனது உண்மையாகிவிடும்.
13. படைப்புகளுக்கு முன்வைக்கப்படும் விமர்சனங்கள், வழங்கப்படும் விருதுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
கட்சி கொள்கை கோட்பாடு அரசியல் செல்வாக்கு இவைகளின் ஆளுமையில்தான் இவையெல்லாம் நடந்தேறி வருகிறது. என்று வெளியில் இருந்து பார்க்கும் போதே வடிவாகத் தெரிகிறது. கட்சி கொள்கை கோட்பாட்டில் நின்று எழுதி வருபவர் பக்கம் சார்ந்து ஒரு தலைப்பட்சமாக எழுதிவந்தால் அவர் மட்ட ரகமானவராக இருந்தாலும் திறனாக விமர்சித்து பட்டங்கள் பட்டயங்கள் எல்லாம் பெற்றுக்கொடுத்து விடுவார்கள். பக்கம் சாராமல் நடுநிலையில் நின்று உண்மையை உண்மையாய் எழுதுவார் நிலை கேள்விக்குறிதான்.
14. புலம்பெயர் இலக்கியம் பற்றிய உங்கள் கருத்து எப்படி?
உள்ளூரில் இருந்து கதை எழுதும் நாம் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டுபவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் தெரிந்த ஊர்மனைகளையும், கோவில் குளம் ஆற்றங்கறை கடற்கரை என்று ஒரே விதமான தளக் காட்சிகளில் நின்று ஒரே விதமான வாழ்க்கை முறையையும் பிரச்சினைகளையும் தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். வாசிப்பவர்களுக்கும் சுவாரஷ்யம் இல்லாது போய்விடும். ஆனால் புலம் பெயர் ஆக்கங்கள் எல்லாமே புதுமையாகவே இருக்கின்றன. அவை புதுவுலகு அழைத்துச் செல்கின்றன. புதுமையான காட்சிகள் புதுவிதமான மனிதர்கள் வித்தியாசமான குணபேதங்கள் பண்பாடு கலாச்சாரம் வாழ்க்கை முறை என்று வாசகர்களுக்குப் புது உலகைக் காட்டுகிறார். சுருக்கமாகச் சொன்னால் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அடுத்த படியேறி போய்க்கொண்டிருக்கிறார்கள்.
15. கலையிலக்கியத் தடங்களில் நீங்கள் பெற்ற விருதுகள் பற்றிக் கூறுவீர்களா?
கிழக்கு மாகாண சபையால் இலக்கிய வித்தகர் விருது கிடைத்தது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் என் சிறுகதைகளுக்கு பரிசுகளும் பாராட்டுப் பத்திரங்களும் கிடைத்திருக்கின்றன. விருதுகளும் புகழ்களும் நம்மைத்தேடி வர வேண்டுமே அல்லாது நாம் தேடிப் போகக் கூடாது என்று தற்போது அமைதியாக இருந்து எழுதி வருகின்றேன்.
16. இலக்கியத் துறைசார்ந்த உங்களது எதிர்பார்ப்புகள் அல்லது இலட்சியங்கள் யாவை?
நம் தமிழ்ப்பெரும் புலவர்கள் மகத்துவமான அற்புதமான கவிதைகளால் காவியங்களால் தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள். நீதிநெறிகளை நல்ல கருத்துக்களைச் சொல்லி தமிழரை அறநெறியில் வாழச்செய்தார்கள். தமிழினத்தின் தனித்துவத்தை காலமும் நிலைநிறுத்தியே வந்தார்கள்.. அந்த வழியில் இந்தச் சிறியோனும் தழிழுக்குப் பெருமை சேர்க்கவும், தமிழர் வாழ்வு நலன் பெறவும் எழுதி வருகிறேன். இராமர் பாலம் கட்ட ஒரு அணிலும் உதவியதாம், என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.
17. இளம் எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூறவிரும்புவது என்ன?
கவிதை, சிறுகதைகளை எழுதி அனுப்புவதனால் மிகக் குறுகிய காலத்தில் சுலபமாக பிரபலமாகிவிடலாம் என்பதாலேயே இளையவர்கள் ஏதோ மனம் போன போக்கில் அதையும் இதையும் எழுதித் தள்ளுகிறார்கள் என்றே தோன்றுகிறது. நெஞ்சில் நேர்மைக் கொள்கையோ மனித நேயமோ இருப்பதாகத் தெரியவில்லை. நான் இளம் எழுத்தாளர்களுக்கு சொல்லவேண்டியது: நிறைய வாசியுங்கள், நாளாந்தம் உங்களுக்குத் தோன்றுவனவற்றை எல்லாம் எழுதி, எழுதிப் பயிற்சி பெற்று உங்கள் ஆற்றலை அபிவிருத்தி செய்யுங்கள். அதன் பிறகே உங்கள் ஆக்கங்களை வெளியீடு செய்ய வேண்டும். எழுதியதையெல்லாம் அனுப்பாதீர்கள். சிலகாலம் சென்றபின் அவை தரக்குறைவானவை என்று உங்களுக்கே தோன்றும். நல்லதே நினைத்து வாழ்பவார்க்கு வாழ்வில் நல்லதே நடக்கும் கண்டீர்!!!
நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



No comments:
Post a Comment