எழுத்தாளர் ஏ.எம். கஸ்புள்ளா அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் ஏ.எம். கஸ்புள்ளா. கிழக்கிலங்கையின்; திருகோணமலை மாவட்டத்தில் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாக அமைந்துள்ள கிண்ணியா என்னும் நகரத்தைச் சேர்ந்தவன். கிண்ணியாவில் ரகுமானியா நகரை பிறப்பிடமாகவும் கட்டையாறு வீதியை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளேன். எனது இளமைப் பருவத்தின் ஆரம்பம் தொட்டே இலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தேன். அவ்வாறு நான் இருப்பதற்குக் காரணம். எனது சகோதரரான ஆசிரியர் பணி புரியும் ஏ.எம்.ஏ. ரசூல் ஆவார். அவரே எனது இலக்கியத்தின் முன்னோடியாக இருக்கின்றார். மற்றும் ஆசிரியையான எனது இளைய சகோதரியும் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் நானும் இலக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதில் சந்தோஷமே. நான் வாழும் இக்காலத்திலே என்னை ஈன்றவர்களும் வாழ்வது மிகுந்த மன மகிழ்வைத் தருகின்றது. என்னை ஈன்றெடுத்த அந்த அன்பு உள்ளங்களான அப்துல் மனாபு - பாத்திமா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனான நான் தமிழ் இலக்கியத்தில் பட்டம் முடித்துள்ளதுடன் தற்போது திருகோணமலை டோக்கியோ சீமெந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்;.
உங்களது பாடசாலை காலத்தில் உங்களது இலக்கிய ஈடுபாட்டுக்கு உங்களது பாடசாலை எவ்வாறு களம் அமைத்துத் தந்தது?
கல்வி கற்ற முதல் பாடசாலையை யாராலும் மறக்க முடியாது. எப்போதாவது ஒரு தடவை பாடசாலைக் கனவுகளில் மிதக்கும்போது அது தருகின்ற இன்பம் எங்குமே கிடையாது. எனது ஆரம்பப் பருவத்தில் எனது எழுத்துக்களுக்கு சரியான களம் அமைத்துக் கொடுத்த இடம் பாடசாலையின் மாணவர் மன்ற நிகழ்ச்சியாகும். அங்குதான் எனது கவிதைகள் அரங்கேறின. கிண்ணியா அல் - அக்ஸா மகா வித்தியாலயத்திலேயே ஆரம்பம் முதல் சாதாரன தரம் வரை கற்று உயர் தரத்தை வெளிவாரியாக கற்றேன். பாடசாலையில் கற்றுக் கொண்டிருக்கின்ற காலப் பகுதியில் பாடசாலை சார்ந்த போட்டிகளில் பங்கு பற்றியிருக்கிறேன். நாடகம், கவிதை, சிறுகதை, கட்டுரை, விவாதம், பேச்சு என பல போட்டிகளில் கலந்து பல பரிசுகளும் பெற்றுள்ளேன்.
அதுமட்டுமன்றி பாடசாலையிலிருந்து வெளிவரும் 'விசாலம்' சஞ்சிகையிலும் தொடர்ந்து ஆக்கங்களை எழுதி வந்திருக்கிறேன். எனது இலக்கிய வாழ்க்கைக்குக் களம் அமைத்துத் தந்தது எனது கல்லூரியேயாகும்.
உங்களது முதலாவது எழுத்து முயற்சி பற்றிக் கூறுங்கள்? எத்தனை ஆண்டுகளாக எழுதி வருகின்றீர்கள்?
எனது முதலாவது கவிதை 1990 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் 'பூனைக் குட்டி' என்ற தலைப்பில் வெளியானது. அதைத் தொடர்ந்தே நான் பல பத்திரிகைகளிலும் தொடராக எழுதினேன். கவிதை, சிறுகதைகள் எழுதினாலும் கூட, சிறுவர் இலக்கியப் படைப்புக்களை உருவாக்குவதிலேயே எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஏனெனில் இளம் பராயத்தினரை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் உண்டு. அப்பணியை சரிவர நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. அவ்வகையிலேயே எனது நூல்களும் வெளிவந்தன. தற்போதும் எனது எழுத்துப் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கவி கஸ்புள்ளா என்ற புனைப் பெயரிலும் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எனது ஆக்கங்கள் பிரசுரமாகின்றன.
நான் இலக்கியத்துக்குள் என்னை ஈடுபடுத்தி இற்றைக்கு 27 வருடங்கள் கடந்து போய்விட்டன. இந்த 27 வருடங்களிலும் இலக்கியத்தில் எத்தனையோ விடயங்களை கற்றிருக்கின்றேன். கற்ற அந்த அனுபங்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இலக்கியம் என்பது பரந்த வெளியாக இருக்கின்றது. அந்த வெளியில் எனது தேடலின் முயற்சி என்றும் தொடர்ந்திருக்கும்.
புதுக் கவிதைகளுக்கும் பின்நவீனத்துவக் கவிதைகளுக்குமிடையில் எப்படியான வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?
கவிதை என்பது உண்மையில் பொதுவாக மரபுக் கவிதை, புதுக் கவிதை என்ற இருவகை பிரிவுகளே உள்ளன. அவை காலப்போக்கிலேயே எழுத்தின் அமைப்பை வைத்து மாற்றங்கள் காணத் தொடங்கின. அதுவே நீங்கள் சொல்கின்ற நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் என்ற மாற்றங்களாகும்.உங்களது வினாவின் பிரகாரம், புதுக்கவிதை என்பது இலக்கண வரம்பற்றதாகும். தமது எண்ணத்தில் அல்லது சிந்தனையில் தோன்றியதை அப்படியே எழுத்தில் வடிப்பதாகும். புதுக்கவிதைக்கான பாடுபொருள் இதுதான் என்ற வரம்பில்லை. எப்பொருளிலும் கவிதை படைக்கலாம். இருப்பினும் அழகு உணர்ச்சிகளால் எழுந்த அனுபவங்களை, சமுதாய நடப்புகளை, மனச்சிக்கல்களை, பிறநாட்டு கொள்கைகளை கருவாகக் கொண்டு எழுதுகின்ற ஒரு ஒழுங்கு முறை புதுக் கவிதையில் காணப்படுகின்றது. அது எல்லோருக்கும் புரிகின்ற வகையில் இலகுவாக அமையப் பெற்றது. பொதுவாக கவிதை என்பது கற்பனை, உணர்ச்சி என்பவற்றின் மொழியாகும் என்று சொல்லப்படுகிறது. கோல்ரிட்ஐpன் கருத்துப்படி அது அறிவியலின் மறுதலை ஆகும். அதன் நோக்கம் உடனடியான உண்மையைக் காட்டுவதன்று இன்பம் வழங்குவதேயாகும் எனவும் இன்னொருவர் கவிதை என்பது கற்பனையின் விளக்கம் எனவும் தனது ஆய்வில் கூறியுள்ளார்.
இன்று பின் நவினத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. பின்நவீனத்துவம் என்ற சொல்லில் உள்ள நவீனம் என்ற சொல் புதிது என்ற பொருளைத் தருவதாகும். எனவே அது புதிய சொற்களைக் கொண்டு தற்கால சொல்லாட்சி உணர்ச்சிகளின் மிகுதியுடன் இன்றைய இக்கட்டான சூழ்நிலைகள் என்பவற்றை உள்ளடக்கி அதனைப் பாடுபொருளாகக் கொண்டு எழுதப்படுகின்ற கவிதைகளை பின்நவீனத்துவம் என்று சொல்லாம். அல்லது அவர்கள் கையாண்ட எழுத்து நடையை வைத்து பின்நவீனத்துவம் என்று சொல்லலாம். ஏனென்றால் இதற்கு வடிவமோ ஓரு ஒழுங்கு முறையோ இருப்பதாகத் தெரியவில்லை. வாசகர்கள் பொருளை இலகுவில் கண்டு கொள்வதும் கடினமாக உள்ளது. சொற்களின் மாறுதல்களில் பொருள் எங்கோயோ இருக்கும்.
பின்நவீனத்துவம் சார்ந்த எழுத்தாளர்கள் இன்று வேகமாக வளரக்கூடியதாக அதனுடைய செயற்பாட்டாளர்கள் உலகம் முழுக்கத் தேன்றிவிட்டார்கள். இலக்கியத்தை எந்த வடிவத்தில் சொன்னாலும் மக்களுக்குப் புரியும் விதத்தில் சொன்னால் அந்த இலக்கியம் என்றும் வாழும். அதனால்தான் பாரதியாரும் ந. பிச்சை மூர்த்தியும் இன்றும் நமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான் இலக்கியத்தை எந்த விதத்தில் சென்னாலும் அது மக்களைச் சென்றடையக் கூடியதாக எழுத்துக்களின் புரிதல் வேண்டும். இறைவன் எமக்களித்த எழுத்து என்னும் அருட்கொடையால் நல்ல கருத்துக்களை விதைப்போம் அது விருட்சமாக ஓங்கி வளரட்டும்.
உங்கள் நூல் வெளியீடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் ஆரம்பத்தில் 'அண்ணல்' என்ற பெயரில் இருமாத இலக்கியச் சஞ்சிகையொன்றினை 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிட்டேன். எனினும் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றதன் காரணமாக அச் சஞ்சிகையை என்னால் தொடர்ந்து வெளியிட முடியாத நிலைக்கு ஆளானேன். கிண்ணியாவின் கவிதை இலக்கியத்தில் முன்னோடியான கவிஞர் அண்ணல் அவர்களை கௌரவிக்கும் நோக்கிலேயே எனது இச்சஞ்சிகைக்கு அண்ணல் என்ற பெயரைச் சூட்டினேன் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து காலப்போக்கில் எனது எழுத்துக்களை நூலுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை எனக்கிருந்தது. அவ்வகையில் எனது முதலாவது நூலாக 'கற்க கசடற' சிறுவர் கட்டுரைகள் தொகுதி 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து 2015 இல் 'நெஞ்சினிலே' கவிதைத் தொகுதியை வெளியிட்டேன். மூன்றாவதாக 'விடியும் பொழுதும் விலகிடும் இருளும்' கிராமியக் கவிதைகள் தொகுதி 2016 இலும் வெளியிடப்பட்டன. எனது இந்நூல்கள் யாவும் கலாசார திணைக்கள நூல் கொள்வனவில் தெரிவானமை குறிப்பிடத்தக்கது. மற்றும் எனது அடுத்த நூலாக சிறுவர் கதைகள் விரைவில் வெளிவருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தமட்டில் என்னதான் இணையம், தொழிநுட்ப வசதிகள் என்று காலம் முன்னேறிக் கொண்டு சென்றாலும் சமுகத்தில் நூல்களின் தேவை குறைந்தபாடில்லை. நூல் வெளியீடுகள் மிகவும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. இது இலக்கிய உலகிற்கும் அதே நேரம் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் ஒரு செயற்பாடாகவும் அமைந்திருக்கின்றது. சிறுகதைகள், நாவல்கள்;, கவிதைகள் எழுதும் எழுத்தாளர்களின் அதிகரிப்பு வாசிப்பின் தேவையினை எடுத்துக் காட்டுகின்றது.
இலக்கியவாதிகளிடையே அடிக்கடி முரண்பாடுகள் எழுவதுண்டு என்றொரு கருத்துள்ளது. ஏனைய எழுத்தாளர்களுடனான உங்களுடைய உறவுகள் எப்படியுள்ளது?
இலக்கியவாதிகளிடையே முரண்பாடுகள் என்பது எழுதும் எழுத்துக்களில் ஏற்பட்டால் அது ஆரோக்கியம் தரக்கூடிய விடயமாகும். ஏனென்றால் அதிலிருந்து படிப்பினை பெறக்கூடிய விடயங்கள் பல இருக்கும். அதுதவிர தனிப்பட்ட முரண்பாடுகள் அவர்களிடையே வருவது வரவேற்கத் தக்க விடயமல்ல. பல தேசத்தவரையும் இன, மத பேதமின்றி ஒன்றினைப்பது இலக்கியமாகும். எனவேதான் முரண்பாடுகளுக்கு முடிவு கட்டி அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நேசிக்கப்பட வேண்டியவை. சமுகத்திற்கு பயன் தரக் கூடியதாக எழுதும் எல்லா எழுத்தாளர்களையுமே பொதுவாக நான் மதிப்பவன். எழுத்தாளர்களின் இருப்பிடம் தூரமானாலும் எனது உறவுகள் அவர்களுடன் ஏதோ ஒருவகையில் நீடித்துச் செல்கின்றன. எழுத்தாளர்களை இணைக்கும் முகமாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அங்கிகாரத்துடன் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஒன்றை அமைத்துள்ளோம். அதனூடாக எமது இலக்கிய களம் விரிவடைந்து செல்கின்றன.
கவிதை, சிறுவர் இலக்கியம் தவிர்ந்த வேறு துறைகளிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?
எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் அவா மனித மனத்தின் இயல்பாகும். கல்விக்கு கரையில்லை என்பார்கள். எனவேதான் இலக்கிய தேடல்களுடன் மட்டும் நிற்காமல் ஏனைய நூல்களையும் விருப்பம் கொண்டு படித்து வருகிறேன். கவிதை, சிறுவர் இலக்கியம் தவிர்ந்த வரலாற்று கட்டுரைகளை எழுதுவதிலும் கவனம் செலுத்தியுள்ளேன். சிறுகதைகள், விமர்சனம், சமயம் சார்ந்த இலக்கியக் கட்டுரைகள் போன்றவைகளையும் எழுதி வருகிறேன்.
உங்களது படைப்புக்கு ஊடகங்கள் எந்தவகையில் உதவுகின்றன?
ஊடகங்கள் வெறும் செய்திகளை மட்டும் தராது. அன்றாடம் வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றப் போராடும் மனிதனுக்கு ஓய்வும் மகிழ்வும் புத்துணர்ச்சியும் பெறும் கலையம்சம் மிக்க விடயங்களையும் தருகிறது. எழுத்தாளர்களுக்கும் இடம் கொடுக்க அது தவறவில்லை. அந்த வகையில் எனது எழுத்துக்களை வெளிக் கொணர்வதில் அதிக பங்களிப்புச் செய்தது ஊடகங்களே. ஒரு எழுத்தாளனையோ, கவிஞனையோ இப்பரந்த பூமியில் அவனது எழுத்துக்களால் அவனை அடையாளம் காட்டுவது ஊடகங்களாகும். அவை எப்போதுமே போற்றத்தக்கவை.
தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, தமிழ்த்தந்தி, தினமுரசு, மித்திரன் வாரமலர் போன்ற பத்திரிகைகளிலும் இணையத்தளம், வானொலிகளில் எல்லாம் எனது ஆக்கங்கள் பிரசுரமாகியிருக்கின்றன, பிரசுரமாகின்றன. எனது எழுத்துப் பயணத்தில் ஊடகங்கள் என்னை ஊக்குவிக்கின்றன. மற்றும் ஊடகங்கள் சமுதாய நலன் கருதி பல பணிகளைப் புரிகிறது. அவற்றிட்கு எனது உள்ளத்தின் நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
யாருடைய எழுத்துக்களை நீங்கள் அதிகம் வாசிக்கின்றீர்கள்?
புதுமைப் பித்தன், சுஜாதா உட்பட பலருடைய சிறுகதைகளையும் இதர கட்டுரை கவிதைகளையும் நான் வாசிப்பதுண்டு. நகைச் சுவைகளையும், அறிவுபூர்வமான சிந்தனைகளையும் இவர்களுடைய எழுத்துக்களில் நான் அதிகமாக காண்கின்றேன்.
படைப்புக் கலையில் புதிய வடிவங்களையும். புதிய கருத்துக்களையும், அவற்றை எழுதுவதற்கான நடைமுறைகளையும், புதிய உத்திகளையும் ஏற்படுத்தி சிறுகதைகளுக்கு வழிசமைத்தவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள்.
மேலும் ஏனைய எல்லா எழுத்தாளர்களுடைய நூல்களையும் நான் பொதுவாகவும் படிப்பதுண்டு. அப்போதுதான் காலத்திற்கேற்ப ஏற்படுகின்ற மாற்றங்களையும், தோற்றப்பாடுகளையும் எம்மால் உணர்ந்து தற்கால இலக்கியத்தில் எம்மை நாம் இணைத்துக் கொண்டு செல்ல இயலுமானதாக இருக்கும்.
உங்களது எழுத்தாளர் நண்பர்களாக யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?
எல்லா எழுத்தாளர்களையும் பொதுவாகவே நான் நேசிக்கின்றேன். எல்லோருடைய எழுத்துக்களும் வித்தியாசமான பாணியில் எமக்கு படிப்பினைகளாக அமைபவை. அதுமட்டுமன்றி எல்லா எழுத்தாளர்களும் என்னோடு சராசரியாக பழகி, இலக்கியம் தொடர்பிலும் அதன் மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடுவார்கள்.
இவ்வாறான இலக்கிய கலந்துரையாடல்கள் மற்றும் கவியரங்குகள் மூலம் இலக்கியம் செழிப்படைய வாய்ப்பாக அமையும். பேசுகின்ற போது நிதானமும், பொருட் செறிவுமுள்ள விடயப் பரப்பைப் பேசினால் அதுவும் ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வாய்ப்புள்ளது.
இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
பனைமரம் பற்றி தினகரனில் வெளியான கவிதைக்கு பனை அபிவிருத்தி சபையால் முதல் பாராட்டுக் கடிதமும் பரிசில்களும் 1990 ஆம் ஆண்டு, முதல் தடவையாக எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து தமிழ் தினப் போட்டி தேசியமட்டத்தில் 1993 ஆம் ஆண்டு மூன்றாமிடமும், கவிதைப் போட்டியில் தேசிய விருதும் கிடைத்தது.
கரவாகு கலை இலக்கிய மன்ற சோலைக்கிளி விருது 2015 இல் கவிதைக்கான சிறப்புப் பாராட்டுச் சான்றிதழும் கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு கண்டி மலையக கலை கலாசார சங்கத்தால் சமூக சேவை மறு;றம் இலக்கியப் பங்களிப்புக்காக தேசாபிமானி பட்டம், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வக பொன் விழாவில் கௌரவமும், சான்றிதழும் 2016 இல் கிடைத்தது. பிரதேச சாகித்திய விழாவில் சிறுவர் கதை, நூல் விவரணத்திற்கான 2016 இல் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.
மட்டுமன்றி கவிதைத் துறைக்காக கவிநிலா விருது 2016 இல் எறும்புகள் பதிப்பகத்தினால் வழங்கப்பட்டது, அத்தோடு காத்தான்குடி பள்ளிவாயல்களின் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கலை கலாசாரப் பேரவை நடாத்திய நூல் தெரிவில் நெஞ்சினிலே நூலுக்கான பாராட்டுச் சான்றிதழ் 2017 இல் வழங்கப்பட்டது. திறன் மேம்பாடு மற்றும் வான்மை விருத்தி செயலமர்வில் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பங்கு பற்றியமைக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பாராட்டுச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டேன். வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிண்ணியா நகர சபை 2016 இல் நடாத்திய கவிதைப் போட்டியிலும்; கிண்ணியா பிரதேச செயலகம் நடாத்திய சாகித்திய விழாப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளேன்.
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நிறைவாக நீங்கள் என்னசொல்ல விரும்புகிறீர்கள்?
இலக்கிய கலையில் மிகப் பண்பட்ட வடிவமாக கவிதை உள்ளது. அதனை செம்மொழியாம் நம் தாய்த் தமிழ் மொழியில் வளர்த்து சங்கம் அமைத்துக் காத்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் காத்த இம் மொழியினை நாமும் அழியாது காத்திட வேண்டும். அதற்குத் தேவையானது நல்ல தேடல்களும் வாசிப்புமாகும். அதன் மூலமே சிறந்த இலக்கிய நூல்களை நாமும் படைக்கலாம். சிந்தனைப் புரட்சியின் ஆரம்பம் வாசிப்பு என்பார்கள். மனிதனை நெறிப்படுத்தும் நூல்களே அவனது வாழ்க்கைக்கான பாதையாகவும் இருக்கின்றன. எனவேதான் எழுத்துக்கள் என்பது இறைவனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள அரிய பொக்கிஷமாகும். அவற்றினுடாக வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் மாத்திரமன்றி ஒவ்வொருவரும் சமுகத்திற்கு பயன் தரக்கூடிய விடயங்களைச் செய்ய முன்வர வேண்டும். அதற்காக எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்!!!
நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்





No comments:
Post a Comment