முறையூர் மங்கேஷ்வரன் உடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்குக் கூறுங்கள்?
என்னைப் பற்றிக் கூறுவதென்றால் எனது பிறப்பிடம் மட்டக்களப்பு முறக்கொட்டன்சேனை. எனது குடும்பம் சற்றுப் பெரிய குடும்பம். அம்மா அப்பா, இவர்களோடு ஆறு பெண் சகோதரிகள், (அக்காமார்) இரண்டு சகோதர்கள் (அண்ணாமார்) குடும்பத்தில் இளையவன் நானே. அப்பா ஓய்வு பெற்ற ஒர் அரசாங்க அதிபர். அவர் காலமாகி பல வருடங்களாகின்றது. பொதுவாக எங்களது குடும்பம் ஆசிரியர் குடும்பம். படிக்கின்ற காலங்களிலிருந்தே வானொலி, பத்திரிகைகளோடு நிறையவே தொடர்பினைப் பேணி வந்தேன். சிறுவயதிலிருந்தே இந்த எழுத்துத் துறையில் எனக்கு ஏற்பட்ட தாகம் அது இன்று வரை என்னோடு பயணிக்கிறது. படிக்கின்ற காலங்களில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் இவற்றோடு மட்டுமன்றி இலங்கை வானொலி போன்ற ஊடகங்களில் முழு நிலா என்ற புனைப் பெயரோடு அந்தக் காலங்களிலிருந்தே எழுத ஆரம்பித்தேன். அதிகமாக ஓய்வு நேரங்களில் எழுதுகிறேன். என் எழுத்துக்களுக்கு முதல் ரசிகன் நானேதான்.கால மாற்றத்தாலோ என்னவோ திடீரென புலம்பெயர்ந்து இலண்டன் மாநகரிலே பல வருடங்களாக மகன், மனைவி என்ற இணைபிரியாத பந்தங்களோடு வாழ்ந்து வருகிறேன். நட்பு மீது நல்ல நம்பிக்கை இருக்கிறது. இந்த நட்பு என்ற நந்தவனத்தில் நிறம் மாறாத பூக்களையே என்றும் நேசித்து அதன் வாசனையை சுவாசிக்கின்றேன். இயந்திரமயமான வாழ்வியலிலும், இதயத்தில் கருணையையும், காதலையும் தாங்கி கடன்கள் ஏதுமில்லாமலே கண்ணியமாக களிப்போடு நகர்கிறது எனக்கான நாழிகைகள்.
உங்கள் ஊர், பாடசாலை வாழ்வு மற்றும் தொழில் அநுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலுள்ள முறக்கொட்டான்சேனை எனது பிறப்பிடம். எனது சாதாரண தரம் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்திலும், உயர் தரம் செங்கலடி மத்திய கல்லூரியிலும், வெளிவாரிப் பட்டப் படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றேன். அதன் பின்னர் லண்டனிலுள்ள University of Sunderland இல் Bachelor of Arts Business Management பட்டப் படிப்பைக் கற்றேன். அதனைத் தொடர்ந்து, University of Northampton இல் Bachelor of Arts in Business & Management final year கற்றேன். தொடர்ந்து HND Diploma கற்கை நெறியினையும் கற்றேன்.
இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்படக் காலாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?
இலக்கியத் துறை ஆர்வம் என்பது எனது பாடசாலைக் காலத்திலே உருவாக ஆரம்பித்தது. படிப்புத் தவிர்ந்த ஏனைய ஓய்வு நேரங்களை பத்திரிகை, சஞ்சிகைகள் வாசிப்பதிலும் மற்றும் இலங்கை வானொலி கேட்டலோடும் இணைத்துக் கொண்டேன். இதன் பிரதிபலிப்பே எனக்குள் எழுதுகின்ற ஆர்வமும், ஆற்றலும் உண்டானது. எழுத வேண்டும் என்கின்ற ஒரு சூழலை எனக்கு இலங்கை வானொலிதான் ஏற்படுத்தியது என்பதை இந்த இடத்தில் பெருமையோடும், நன்றியோடும் கூறிக்கொள்கிறேன்.
உங்களது முதற் படைப்பு எப்போது, எதில் வெளியானது?
எனது முதற் படைப்பு இலங்கை வானொலியிலேதான் முதன் முதலாக ஒலித்தது. அதனைத் தொடர்ந்தே ஏனைய ஊடகங்களில் உலா வரத் தொடங்கியது. இப்போது அது எந்த ஆண்டில் ஒலிபரப்பானது என்று சரியாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சியிலே எனது கவிதை நான் ஆண்டு 9 இல் கல்வி கற்கும்போது (1991, 1992 காலப் பகுதிகளில் என நினைக்கிறேன்) ஒலிபரப்பானது என்று தான் நினைவிலிருக்கிறது. அதன் பிறகே மித்திரன் வாரமலர், தினமுரசு, ஜனனி.. முதலான அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எனது சிறுகதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் களம் கண்டன.
உங்களை கவிதை எழுதத் தூண்டியது எது?
பொதுவாகக் காதலில் தோற்றவர்களும், காதலிப்பவர்களுமே இந்தக் கவிதை எழுதுவார்கள் என்கின்ற ஒர் எண்ணம் எம்மில் இன்றுவரை பலருக்குண்டு. காலங்கள் மாறினாலும் அந்த மனநிலை மட்டும் எப்போதுமே மாறாத ஒன்றாகவே இன்றுவரை காணப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதக் காரணம் காதலோ அல்லது கண்ணீரோ அல்ல. மாறாக இளவயதில் என்னில் காணப்பட்ட வாசிப்பும், வளமான சிந்தனையுமே கவிதை எழுதத் தூண்டியது என்று சொல்லலாம்.
ஊக்கம் அது எனக்குள்ளே ஊன்றி வளர்ந்த ஒன்றாக இருந்தது. அந்தக் காலங்களில் இலங்கை வானொலியில் இசையும் கதையும், தேர்ந்த இசை, விமர்சகர் விருப்பம், ஆடவர் அரங்கம், அந்தி நேரச் சிந்துகள் முதலான நிகழ்ச்சிகளில் எனது பிரதிகள் அதிகம் ஒலிபரப்பாகின. அப்போது இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலவிதமான கலையுலக நண்பர்கள் என்னுடன் இணைந்து கொண்டார்கள். அவர்களின் ஊக்கமும், பாராட்டுமே இன்று நான் வளர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்பேன். ஒலிப்பான ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் எங்கோ ஓர் மூலையிலிருந்து முகம் தெரியாமல் அவர்கள் கொடுத்த உற்சாகம்தான் இதற்கு ஊன்றுகோலாய் அமைந்தது. அதுமட்டுமன்றி இலங்கை வானொலியில் கடமையாற்றிய பல அன்பு அறிவிப்பாளர்களின் ஊக்கமும் காரணம் என்பேன்.
நீங்கள் வாசித்த பல கவிதைகளில் அதிகமாக இரசித்து, வாசித்த கவிதை ஒன்றைப் பற்றிச் சொல்ல முடியுமா?
பல கவிஞர்களுடைய பல கவிதைகளையும் படிப்பேன். ஒவ்வொரு கவிஞர்களினதும் ஒவ்வொரு கவிதை வரிகளும் ஏதோ ஒரு காரணத்திற்காக என் மனதில் இடம்பிடித்திருக்கும். பல கவிதை வரிகள் மனதை ஆசுவாசப்படுத்தி, ஆழ்மனதிலே சில அதிர்வுகளை உண்டாக்கும். அப்படிப்பட்ட பல கவிஞர்களின் கவிதை வரிகளால் கட்டுண்டு போயிருக்கிறேன். இதில் எந்தக் கவிதையை, எப்படிச் சொல்வது? குறிப்பாக இந்தக் கவிஞரின் கவிதை வரிகள்தான் என்றில்லை. பல கவிஞர்களின் பலநூறு கவிவரிகள் என் ஆழ்மனதில் ஆலோலமிசைக்கின்ற ஆரோகணங்களே. குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்று இரண்டல்ல, பலநூறு கவிஞர்களின் கவிதை வரிகள் உள்ளன.
இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?
பொதுவாக எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் என்கின்ற அந்தஸ்தினைக் கொடுப்பது அவர்கள் வெளியீடு செய்கின்ற நூல்கள்தான். அது அவர்களுக்கு ஒருவித மன ஆனந்தத்தைக் கொடுத்து, சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தையும் கொடுத்துவிடுகிறது. அந்தவகையில் எனது இரு கன்னி நூல்களை அண்மையில்தான் இலங்கையிலே வெளியீடு செய்திருந்தேன். ஷஷமனதோடு பேசும் மௌனங்கள்' என்கின்ற புதுக்கவிதை நூலையும் மற்றும் ஷஷமகிழம் பூக்கள்' என்ற ஹைக்கூ கவி நூலையும் அண்மையில் வெளியீடு செய்திருந்தேன். இவை இரண்டும் எனது கன்னிக்கவி நூல்கள் ஆகும்.
உங்களது முதலாவது கவிதைத் தொகுதியான "மனதோடு பேசும் மௌனங்கள்" குறித்துக் கூற வருவது?
நாம் ஏதோவொன்றைச் செய்கின்ற போதோ அல்லது செயற்படுத்துகின்ற போதோ அதிலிருந்து மற்றவர்கள் ஏதாவது ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பெற்றுக்கொள்வதால் நமக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கின்றதோ இல்லையேர் மனமகிழ்ச்சி நிச்சயமாக உண்டாகும். இந்த மனதோடு பேசும் மௌனங்கள் என்கின்ற எனது கவிதைத் தொகுதியானது காதலை மட்டுமன்றி பல இன்னோரன்ன விடயங்களைச் சொல்கின்ற, அதேவேளை இலகுவான மொழிநடையில் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைக் கோர்ப்புக்களால் வளம் சேர்ந்திருக்கும் ஒரு கவிதைத் தொகுதியாக அமைந்துள்ளது.
கவிதை என்றால் என்ன என்று புரியாத, அறியாத எவருக்கும் இதில் இணைக்கப்பட்டிருக்கும் எனது கவிதைகள் இலகுவில் அவர்களின் இதயத்திற்குள் புகுந்து இன்னிசையை மீட்டும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. இலகுவான வார்த்தைகள், உவமான உவமேயங்கள் படிப்பவர் மனங்களில் பதிந்திடக் கூடியனவாகவே உள்ளன. இலகுவான மொழிநடையோடு எல்லோருக்கும் புரியும் படியான கவிதைகளே மனதோடு பேசும் மௌனங்களில் மலர்ந்த கவி மலர்கள். அகராதி எடுத்து எவரும் அரும்பதங்களைத் தேட வேண்டிய அவசியம் எனது கவிதை நூலில் கிடையாது. அத்தனை கவிதைகளும் யதார்த்தமான வார்த்தைகளால் வண்ணங்களாகியிருக்கிறது. இது எனது கவிதை தொகுதியைப் படித்த அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.நல்லதொரு கேள்வி. எனது கவிதை நூல் எனது பெயரின் முதலெழுத்தோடு ஆரம்பமானால் நன்றாய் இருக்கும் என்று எண்ணினேன். அதனால் ஷம| என்று ஆரம்பிக்கும் எல்லா விதமான தலைப்புகளையும் ஆர்வத்தோடு ஆராய ஆரம்பித்தேன். அந்த ஆராய்விலே எனக்கு லண்டனில் வானொலி ஒன்றில் நான் அறிவிப்பாளராய் கடமையாற்றிய வேளை, மனதோடு பேசுங்கள் என்ற ஒரு இரவு நேரக் கவிதை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தேன். அந்த நிகழ்ச்சி அந்த வானொலியில் அதிக வரவேற்பையும் அபிமானத்தையும் வென்ற நிகழ்ச்சியாக இருந்தது. சற்று சிந்தித்தேன்.. ஏன் இந்த நிகழ்ச்சியின் தலைப்போடு இணைந்த மாதிரியான ஒரு பெயரை எனது கவிதை நூலுக்கு வைக்கக்கூடாது என்று என் மனம் நினைத்தபோதுதான், இந்த மனதோடு பேசும் மௌனங்கள் என்ற தலைப்பு என் மனதோடும் பேசியது. அத்துடன் நான் விரும்பி ரசித்து வழங்கிய அந்த வானொலி நிகழ்ச்சியை மறக்கக் கூடாது என்பதற்காகவும் எனது கவிதைத் தொகுப்பிற்கு இந்தப் பெயர் சூட்டினேன். இத்தலைப்பை எனது கவிதை நூலுக்குச் சூட்டியதில் மனம் முழுவதும் நிரம்பிய ஒரு ஆத்ம திருப்தி; எனக்குக் கிடைத்தது.
உங்களது கவிதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
உண்மையில் இவ்வளவு ஆதரவு எனது கவிதைகளுக்குக் கிடைக்குமா என்று நான் எண்ணவில்லை. வெறுமனே பெயருக்கு புகழ்ந்து பேசுபவர்கள் பெருகிக்கொண்டுவரும் இந்தக் கால கட்டத்திலும், வாசிக்கின்ற பழக்கமும், வழக்கமும் அருகிக்கொண்டுவரும் இந்தக் காலத்திலும் கவிதைகளைப் படித்து அதனை உள்வாங்கி உணர்விலே உலாவரவிட்டு தங்கள் உணர்வுகளை உண்மையாகச் சொல்கின்ற பலர் எனது கவிதைகளால் கட்டுப்பட்டு கதை கதையாய்ச் சொன்ன நாட்களும் உண்டு. அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட எனக்கு, அட நமது எழுத்துக்களிலும் வாசம் மட்டுமல்ல வர்ணமும் உண்டு என்பதை உண்மையாய் என்னால் உணர முடிந்தது. வயது வேறுபாடின்றி வாசித்தவர்கள் அனேகரும் அவ்வப்போது தங்கள் கருத்துக்களை எனக்குப் பாராட்டாகவும், பாமாலையாகவும் புகழ் சேர்த்தது, எனக்குப் பூரிப்பையே ஏற்படுத்தியது. அது எனக்கு மனம் நிறைந்த மகிழ்வினையும் தந்தது. என்றும் மறக்க முடியாத ஒரு மகிழ்வான தருணமாக அமைந்தது.
உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். எதுவானாலும் எழுத்துக்களுக்கு எப்போதும் வலிமையும் வேகமும் அதிகம். ஆனால் இந்தக் காலச் சமூகம் என்பது சற்று வித்தியாசமானது. காலங்கள் மாற மாற சமூகத்திலுள்ள சடங்குகள் மட்டுமல்ல சம்பிரதாயங்களும் மாறிக்கொண்டே போகின்றன.
சமூகத்தில் மாற்றம் வர எனது எழுத்துக்கள் அப்படி எதையுமே போதிக்கவில்லை. மாற்றம் ஏற்படவேண்டுமாயின் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை முதலில் உணர வேண்டும். மாற்றம் என்பதை அவர்களிடத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு தனி மனிதனில் மாற்றம் வருவதே மாயமானதாக இருக்கும் போது சமூகத்தில் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்த முடியும். சமூகத்தில் மாற்றங்கள் வரவேண்டும்தான் அதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் நிச்சயம் பலவகைகளிலும் போராடினாலே சமூகத்தில் மாற்றம் ஏற்படும். எனது எழுத்துக்கள் சமூகம் சார்ந்த கருத்துக்களை ஆங்காங்கே கூறியிருந்தாலும் நிச்சயம் அவற்றால் சமூகத்தில் மாற்றம் ஏற்பட மாட்டாது என்பதுதான் உண்மை.
உங்களது "மகிழும் பூக்கள்" ஹைக்கூ நூல் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்?
முன்பு இருந்த காலம் போலல்ல இன்றைய காலம். விஞ்ஞானத்தின் விந்தைகளால் விஸ்த்தீரணமாக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் இலகுவில் கிடைத்துவிடுகிறது. இன்று பலராலும் கவிதைகள் எழுதப்பட்டு வந்தாலும், இந்த ஹைக்கூ என்கின்ற கவிதைகளை எழுதுகின்ற கவிஞர்கள் நம் நாட்டிலே அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு ஹைக்கூ கவிதைகள் எழுதுவதிலும் அவற்றைப் படிப்பதிலும் அலாதிப் பிரியம் உண்டு. அதனாலே ஹைக்கூ கவிதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட நினைத்து அதனை வெளியீடு செய்தேன். புதுக் கவிதை, மரபுக் கவிதை வகைகளிலிருந்து மொத்தமாக மாறுபட்ட இந்த ஹைக்கூ கவிதைகள் சமூகத்தில் இடம்பெறுகின்ற அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதோடு, இயற்கை சார்ந்த இயல்பு நிலைகளையும் சொல்லி இருக்கிறது. ஏற்கனவே கூறியதைப்போல் சமூகத்தில் இடம்பெறுகின்ற சம்பிரதாயங்கள், விழாக்கள், பண்டிகைகள், குடும்பங்களில் நிகழ்கின்ற சம்பவங்கள், சமூகம் சார்ந்த விடயங்கள் ,இயற்கை அதனோடு இணைந்த பல இன்னொரன்ன விடயங்கள் எனப் பலவற்றை இந்த மகிழும் பூக்கள் ஹைக்கூக்கள் பேசி நிற்கின்றன.
ஹைக்கூ எழுதுபவர்களுக்கு விசேடமாகக் கூற விரும்புவது என்ன?
ஹைக்கூ என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற வரையறைகளையும், விதிமுறைகளையும் தாண்டி இன்று பலரும் பலவாறு எழுதிவருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணியில் எழுதி வந்தாலும் ஒருசிலருடைய ஹைக்கூக்களே கண்ணில்பட்டு அவை கருத்தையும் கவர்ந்து கொள்கிறது. ஹைக்கூ கவிதைகளில் நான் ஒன்றும் கரை காணவில்லை. இப்போதுதான் எழுதிக்கொண்டு வருகின்ற இளையவன். எழுத்துத் துறையைப் பொறுத்தவரையில் நான் இன்னும் தவழ்கின்ற குழந்தைதான். ஆகவே கண்டவற்றை கண்டவாறு எழுதிவிட்டு அதற்கு ஹைக்கூ கவிதை என்று நாமம் சூட்டுபவர்களும் நம்மிடையே இல்லாமலும் இல்லை. வரையறைகளையும், வரம்புகளையும் மீறாத எதுவும் வாகை சூடும். ஆகவே அவற்றைக் கடைப்பிடித்தாலே போதுமானதுதான்.
இதுவரை வெளிவந்த உங்களது படைப்புகள் தொடர்பாகப் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்?
அனுபவமே ஆசான் என்னைப் பொறுத்த மட்டில் நல்ல ஆக்கபூர்வமான அனுபவங்களைத்தான் பெற்றுக் கொண்டுள்ளேன். என்னை மட்டுமல்ல என் எழுத்துக்களையும் மேம்படுத்தவும், மெருகேற்றவும் அவை எனக்கு ஆணிவேராக அமைந்தது கண்டு ஆனந்தம் கொள்கிறேன். மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என்கின்ற ஆவலையும், ஆர்வத்தையுமே அவை என்னில் விதைத்தன. சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லாவிட்டாலும் சகித்துக்கொண்டு சகலரையும் வெற்றிகொள்ள வேண்டும் என்கின்ற வேட்கையினை அவை எனக்குத் தந்தன.ஊடகங்களில் இதுவரை வெளிவந்துள்ள உங்களின் படைப்புகள் பற்றிப் பொதுவாகக் குறிப்பிடுங்கள்?
கண்டங்கள் தாண்டி வந்த பிற்பாடு ஊடகங்கள் என்ற வகையில் இலங்கை வானொலியே அன்றுதொட்டு இன்றுவரை என்னோடு இணைந்திருப்பது. எழுத வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தாலும் நேரம் என்பது பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது. கிடைக்கின்ற நேரங்களில் எழுதியவைகள் பல மின்னிதழ்களிலும், முகநூல் பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளன.
கவிதைத் துறை தவிர வேறு எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகிறீர்கள்?
கவிதை எழுதுவதோடு, சிறுகதைகளையும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். எனது பல சிறுகதைகள், கட்டுரைகள் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலில் வெளியாகியுள்ளன. இதைவிட வானொலி அறிவிப்பிலும் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு.
உங்களது எழுத்துகளின் படி நிலை வளர்ச்சி பற்றிக் கூறுங்கள்?
ஆரம்ப காலங்களில் இருந்த எழுத்துக்களோடு இப்போது ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. ஆம்பத்தில் தவறுகளோடு தவழ்ந்த எழுத்துக்கள் இன்று வீறுநடையோடு வித்தியாசப்படுகிறது. ஆரம்பத்தில் எழுதிய சாயல்களே இன்றும் சாயம் போகாமல் இருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இன்று சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் பலபேருடைய பார்வை பலமாக இருக்கிறது. படிநிலைகள் என்று எனக்கு வித்தியாங்கள் ஏதுமில்லை ஆனால் படிநிலை வளர்ச்சியையும் மீறிய ஒரு வனப்பு எனது எழுத்துக்களில் மிளிர்வதை என்னால் இனங்கான முடிகிறது. இது எழுதுகின்ற, என் எழுத்துக்களை நேசிக்கின்ற எனக்கே இனங்காண முடிகிறது.
புலம் பெயர்ந்து வாழும் நீங்கள் அங்கிருந்து எவ்வகையான, யாருடைய படைப்புகளை ஓய்வு நேரங்களில் அதிகமாக வாசிக்கிறீர்கள்?
குடும்பம், வேலை என்ற வட்டத்துக்குள் இருப்பதனாலோ என்னவோ ஒய்வு நேரம் என்பது இங்கு கிடைப்பதென்பது அரிதிலும் அரிது. இயந்திரமயமாகிப் போன இந்த இலண்டன் வாழ்வியலில் ஓய்வு நேரத்தை என்னால் ஒதுக்க முடிவதில்லை என்பதுதான் உண்மையான விடயம். வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மிகவும் இருந்தாலும் அதற்குரிய சந்தர்ப்பம் இல்லாமலே போய்விடும். கிடைக்கின்ற சில மணித்துளிகளை குடும்பத்தோடு செலவு செய்வதால், வாசிப்பதற்கு வாய்ப்புக்கள் அரிதுதான். இதுதான் உண்மையும் கூட. அவ்வப்போது இணையத் தளங்களில் சென்று வாசிப்பதோடு சரி.
இலக்கிய உலகில் மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டா?
மறக்காத நிகழ்வுகள் மனதை என்றும் மயிலிறகாய் எப்போதும் வருடிக்கொண்டே இருக்கும். எனக்கும் இந்த இலக்கிய உலகில் இனிக்கின்ற நிகழ்வுகள் ஏராளம் உண்டு. அவற்றலே ஒன்றை குறிப்பிட விளைகிறேன். நான் லண்டனில் தமிழ் வானொலி ஒன்றிலே பகுதிநேர அறிவிப்பாளராய் கடமையாற்றிபோது இந்த வானொலி ஊடாக ஜெர்மனி நாட்டுக்கு ஒரு மேடை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, அந்த வானொலி சக அறிவிப்பாளர்களோடு சென்றிருந்தேன். ஜெர்மனியிலே டோர்ட்மன்ட் (னுழசவஅரனெ) என்கிற சிற்றியிலே இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கைக் கலைஞர் காலஞ்சென்ற திருமதி. ரேலங்கி செல்வராஜா அவர்களோடு நானும் இணைந்து அந்த மேடை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது உண்மையில் எனக்குப் பெருமையாகவும், மறக்க முடியாத ஒரு தருணமாகவும் இருந்தது. எனது பல ஆக்கங்களுக்கு இலங்கை வானொலியில் குரல் கொடுத்த அந்த அபிமான அறிவிப்பாளரோடு நிகழ்ச்சியை மேடையில் தொகுத்தளித்தது வாழ்வில் என்றும், இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
இலக்கியத் துறை சார்ந்து இதுவரை உங்களுக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றிக் கூற முடியுமா?
வரவேற்புகள் என்பதை விடவும் எனது எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம். அந்தவகையில் பல முகநூல் குழுமங்கள் மூலம் உலகளாவிய ரீதியிலே நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பல நூறு வெற்றிச் சான்றிதழ்களையும் ஒரு சில பட்டங்கள் மற்றும் விருதுகளையும் பெற்றுள்ளேன். அப்படி இதுவரை பெற்ற சில விருதுகள் பற்றிய விபரங்களைக் கீழே தருகின்றேன்.
• 2018 - கவி இளவல் விருது (முத்தமிழ் களம், கம்பன் கவிக்;கூடம், திருச்சி)
• 2019 - கவிமுகில் விருது (ஊ...ல...ழ...ள கவிக் குழுமம், இந்தியா)
• 2019 - நம்மாழ்வார் விருது (கவியுலகப் பூஞ்சோலை கவிக் குழுமம், தஞ்சாவூர்)
• 2018 - கவிச்சிகரம் விருது (கவியுலகப் பூஞ்சோலை, இந்தியா)
• 2019 - கவிஅனலி விருது (தேடல் கலை இலக்கிய மன்றம், இலங்கை)
• 2019 - கவித் தேனீ விருது (தேனீ கலை இலக்கிய மன்றம், இலங்கை)
• 2020 - நுட்ப விருது (நுட்பம் கவிக் குழுமம் இலங்கை)
• 2021 - கவித் தேன் விருது (தேனீ கலை இலக்கிய மன்றம், இலங்கை)
• 2021 - கவிக்கேசரி விருது (தேடல் கலை இலக்கிய மன்றம், இலங்கை)
• 2022 - திறமைக்கான தேடல் விருது (லக்ஸ்டோ மீடியா நிறுவனம், இலங்கை)
• 2022 - கவிக்கோ விருது (கவிதைச் சாரல் சங்கமம் மற்றும் கவிக் குழுமம், இந்தியா)
இவை மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற பல கவிதைப் போட்டிகளிலும் நடுவராகப் பயணித்துள்ளேன்.
உங்களைப் போன்ற சமகால இளந்தலைமுறைப் படைப்பாளர்களுக்கு கூற விரும்புவது?
மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் இன்றைய படைப்பாளர்களின் மனோநிலையைப் பார்க்கின்ற போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது. படைப்பாளிகள் என்ற அடைமொழிக்குள் அடக்கப்பட்டவர்கள் ஆணவமும் நான் என்கின்ற அகங்காரமும் கொண்டவர்களாக இருப்பது கண்டு வேதனைப்படுவதா அல்லது வெட்கப்படுவதா என்று எனக்குப் புரியவில்லை. படைப்பாளர்கள் முதலில் ஒருவரை ஒருவர் பாராட்டி, வாழ்த்தும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மற்றவர்களைப் பாராட்டும் மனப்பாங்கு பலபேரிடம் இருப்பதில்லை. முதலில் ஒருவரை ஒருவர் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். படைப்பாளர்களுக்கு பரவசம் தருவது பாராட்டும், கைதட்டல்களுமே ஆகும். ஆனால் இவை இன்றைய தலைமுறையினரிடம் இல்லாமல் இருப்பது கவலையே.
இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீகள்?
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அந்தக் கனவுகள் பலித்திட பலவற்றைத் தியாகம் செய்ய வேண்டும், பல கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும். முடிந்தவரை அந்தக் கனவு பலித்திட அயராது உழையுங்கள். அடுத்தவர்களது நிலையை உணராமல் உண்மைபோல் ஊர்வம்பு பேசாதீர்கள். உங்களை முதலில் நேசியுங்கள். கூடவே உங்களை நேசிக்கின்றவர்களையும் ஒருகணம் யோசியுங்கள். மற்றவர்களை உங்களோடு ஒப்பீடு செய்து வாழாதீர்கள். முடிந்தவரை எந்தத் துறையில் இருந்தாலும் நேர்மையோடும், அடுத்தவரை நேசித்தும் வாழப் பழகிக் கொள்ளுங்கள். பொய்யாகப் பழகாதீர்கள் அது காதலாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரியே. தோழமையோடு பழகுங்கள். மற்றவர்களுக்கு ஒரு போதும் துரோகம் ஒன்றும் செய்யாதீர்கள். வாழ்க்கை வசந்தமாகும்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
















No comments:
Post a Comment