கிழக்கு வானம் முஸ்தபா மௌஜுத் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
எனது பெயர் முஸ்தபா மௌஜூத். கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் என்னும் ஊரில் தற்பொழுது வசித்து வருகின்றேன். ஆசிரியராக, அதிபராக 36 வருடங்கள் கல்விப் புலத்தில் பணி செய்து வருகின்றேன். சிறுவயது முதல் இலக்கியத்தின் பால் எனக்கு அதிக ஆர்வமுண்டு. நான் கிழக்கு வானம் என்ற புனைப் பெயரிலும் ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளேன்.
உங்கள் பாடசாலை, மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?
ஆரம்பக் கல்வியை தோப்பூர் அல்-ஹம்றா மத்திய கல்லூரியில் கற்றேன். இடைநிலைக் கல்விக்காக 1977 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிராவில் சேர்ந்து கற்றேன். மீண்டும் ஊர் வந்து அல்-ஹம்றாவிலே 1980 இல் க.பொ.த. சாதாரண தரம் கற்று சித்தியடைந்தேன்.
பின்னர் உயர் தரத்தில் சித்தியடைந்து 1984 இல் எனது பாடசாலையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதலாவது மாணவன் நான்தான். 1985ஃ1986 கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று கலைப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன். பல்கலைக்கழக வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தந்தது. எனது கவிதைப் பயணம் அங்குதான் கிளைவிட்டு வளரத் தொடங்கியது. அந்த இயற்கைச் சூழலும், அழகும் புதிய நட்புகளும் கவிதையின் ஆர்வத்தை தூண்டியது.
உங்கள் தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
1987 இல் ஆசிரியப் போட்டிப் பரீட்சை எழுதி திருகோணமலை மாவட்டத்தில் ஆசிரியராக 1988.05.19 இல் நியமனம் பெற்று திஃமூஃஅல்-தாஜ் மகா வித்தியாலயத்தில் கற்பித்தேன். பின்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முடித்ததும் மீண்டும் அந்தப் பாடசாலையில் கற்பித்தேன். பின்பு சாஹிறா வித்தியாலயம், அதன் பின்பு அல்-ஹம்றா மத்திய கல்லூரி, பின்னர் அந்நூர் வித்தியாலயம், அதன் பின்னர் அல்ஸிபா வித்தியாலயம் என்று எனது கற்பித்தல் நடவடிக்கை தொடர்ந்தது.
பின்னர் புதிய பாடசாலை ஒன்றை உருவாக்கி அல்ஸாஹிர் வித்தியாலயம் எனப் பெயரிட்டு அதிபராக 05 வருடங்கள் கடமையாற்றினேன். பின்னர் சுயவிருப்பில் மீண்டும் ஆசிரியராக திஃமூஃஅல்-ஹம்றா மத்திய கல்லூரியில் கடமையாற்றினேன். தற்போது பாலத்தோப்பூர் ஸாஹிறா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருகின்றேன்.
தரம் 8 முதல் 13 ஆம் வகுப்புக்களுக்கு இஸ்லாம், தமிழ், சமூகக் கல்வி, இஸ்லாமிய நாகரிகம், அரசியல் போன்ற பாடங்களைக் கற்பித்துள்ளேன். 100 க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைகழகம் செல்ல மிகுந்த அர்ப்பணிப்போடு கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனது ஆசிரியர் பணி 35 வருடங்களைக் கடந்து செல்கிறது. ஆசிரியர்ப்பணி அறப் பணி. அர்ப்பணிப்பே முதற் பணி.
உங்களுக்கு இலக்கியத் துறையில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?
அது 1979 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன், அப்போதுகளில் எனது பள்ளியில் உள்ள சக நண்பர்கள் சிலர் கவிதை எழுதுவார்கள். அதைப் பார்த்துத்தான் நானும் கவிதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அத்துடன் பழைய சினிமாப் பாடல்களை நான் அதிகமாகக் கேட்பேன், அதன் ஒவ்வொரு வரிகளையும் மிகவும் உன்னிப்பாக இரசிப்பேன், குறிப்பாக கண்ணதாசன் பாடல்கள், வாலியின் பாடல்கள் என்னை வெகுவாகப் பாதித்தன. என் மானசீகக் கவிக் குருவாக கவியரசர் கண்ணதாசனை மகிழ்வோடு குறிப்பிடுவேன். அவரின் பாடல் வரிகள்தான் என்னைக் கவிதை உலகுக்கு வேகமாக வரத்துண்டியது.முதலாவது கவிதையை எழுதிய தருணத்தை நினைவுபடுத்தி கூற முடியுமா?
1979 ஆம் ஆண்டு தரம் 10 இல் கற்றுக்கொண்டிருக்கும் வேளை சக நண்பர்களுக்குப் போட்டியாக நானும் கவிதை எழுதினேன். நட்பு என்ற தலைப்பில் நான் எழுதிய முதற் கவிதை அது. அக்கவிதையின் நினைவிலுள்ள வரிகள் பின்வருமாறு:-
அன்று சொன்னாயே
நன்றென்று
அந்த வாழ்க்கையின்
நன்னாளை
அன்னாளை என்றென்றும்
நான் மறவேன்
என்னுயிர் உள்ளத்தில்உள்ளவரை
இதுதான் நான் எழுதிய முதற் கவிதை. இதை எழுதியதும் வகுப்பறையில் நான் வாசித்துக் காட்டினேன். வகுப்பறை ஒரே கலகலப்பாக இருந்தது. இதை என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றும் கூறலாம். இந்த சந்தர்ப்பத்தில் எனது சக நண்பன் ஏ.ஜே. பறக்காத் தொழிலதிபர் (கொழும்பு) துணையாக இருந்து, உற்சாகம் தந்தார். அந்தப் பயணம் இன்று வரை தொடர்கிறது.
புதுக்கவிதைகள் மீது இளைஞர்களுக்கு ஏன் இவ்வளவு மோகம்? நீங்கள் ரசித்த புதுக் கவிதைகளைச் சொல்ல முடியுமா?
புதுக்கவிதை இலகு நடையில் அழகு தமிழில் புனையப்படுவது. பாமரன் வரை புரிந்து கொள்ளக் கூடியதானது. வரம்புகள் இல்லாத காட்டாறு மாதிரி. பூமியைத் தழுவி நழுவி இலக்கியக் கடலில் சங்கமமாவது. ஆதலால்தான் புதுக் கவிதைகளை ஆசிர்வதிக்கிறார்கள். எண்ணங்கள் வண்ணங்களாக யாரும் எழுதலாம் என்பதால் இதற்கு ரசிகர்கள் அதிகம். கவிஞர் வைரமுத்துவின் மரம் பற்றிய புதுக் கவிதை என்னை வெகுவாகக் கவர்ந்தது.
எல்லாம் மரம்தான்..
மறந்தான் மறந்தான்
மனிதன் மறந்தான்..
மனிதா
மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா,
ஒவ்வொரு மரமும் போதிமரம்..
மற்றும் கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகள், கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இரசித்த இன்னுமொரு கவிதை,
காற்றில் அலக்கழிந்து
செல்கிறது
பட்டாம் பூச்சி
அதன் கால்களில் காடு
நீங்கள் இதுவரை வாசித்த நூல்களில் உங்களைக் கவர்ந்த நூல் எது?
நான் வாசித்த முதல் நூல் ஷஷஉமர் முக்தார்|| என்ற நூலாகும். சரித்திர நாவல் சிந்து நதிக் கரையினிலே, மஹ்ஜபீன், மேற்கு வானம், நபிமார்கள் சரிதம், வன வாசம், இப்பி பக்கீர், வந்தார்கள் வென்றார்கள், புனித பூமியிலே, சிலுவை யுத்தங்கள் இதில் மிகவும் பிடித்தவை "மேற்கு வானம்" என்ற நூலாகும். அத்துடன் வைரமுத்துவின் காவி நிறத்தில், வைகறை மேகங்கள் போன்ற கவிதைத் தொகுதிகள், கண்ணதாசன் கவிதைகள், சோலைக் கிளியின் அவணம் கவிதைத் தொகுதி போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
1987 இல் முத்திங்கள் (மூன்று மாதங்களுக்கொரு முறை) வெளியீடு கையெழுத்துப் பிரதியாக ஷஷநினைவாகும் நிஜங்கள்|| என்ற பெயரில் கவிதை இதழ்கள் இரண்டை வெளியீட்டேன். அடுத்து தோப்பூர் மண்ணில் முதலாவது வெளியாகிய எனது தனிப்பட்ட இலக்கியப் படைப்பு ஷஷகீழ்த்திசைக் காற்று|| என்ற கவிதை நூலாகும். எனது இந்தக் கவிதை நூல் 2022.02.20 இல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் 94 கவிதைகள் இடம்பிடித்துள்ளன.
உங்களது நூலான கீழ்த்திசைக் காற்றின் பேசுபொருள் குறித்துக் கூறுங்கள்?
கிழக்கின் விடியல் பக்கமாக எழும் காற்றையே இது குறித்து நிற்கிறது. விடியலுக்கான தூதாகவே இக்காற்று அமைகிறது. (எனது நூலும் அமைகிறது) மெல்லியதாய் வீசும் போது தென்றலாய், வருடலாய், இதமாய், கனிவாய், எம்மை மகிழ்வித்துச் செல்லும் தன்மை கொண்டது. காற்று வேகம் கொள்ளும் போது, கோபம் கொள்ளும் போது புயலாகி பெருஞ் சூறாவளியாய் உலகையே உசுப்பி விட்டுப் பாடம் சொல்லும். இந்த இரண்டு கருவையும் மையப்படுத்தியே எனது எழுத்துக்கள் பலருக்குத் தென்றலாகவும், பலருக்குப் புயலாகவும் வீசி அடித்துத் தாக்கும் வல்லமை கொண்டது. இதில் கிராமியம் மணக்கும். காதல் சிலிர்க்கும். ஏக்கம், தவிப்பு, ஏமாற்றம், வலி, துயரம், விடுதலை எல்லாம் தாங்கி சமாதனம், சமத்துவம் போதிக்கும்.
நூல் வெளியீடுகளில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?
இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதல் காப்பாற்பட்டது, வெற்றி கிட்டியது, வரவேற்பு பலமாக இருந்தது என்று சொல்வதைவிட இது மனத்திருப்திக்கான பயணம் என்றே சொல்ல முடியும். இதனால் நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.
புதுக்கவிதையென்பது மரபுக் கவிதையிலிருந்து தன்னை முழுமையாகத் துண்டித்துக் கொள்கின்றதா?
இல்லை. சந்தம், சீர், அணி, எதுகை, மோனை, இவைகள் கலந்த சுவைமிக்கதானதே புதுக் கவிதை. எழிய நடையில் இவைகளைக் கலந்து அழகு செய்ய வேண்டும். இல்லாது போனால் உப்பில்லாத பண்டம் போல் ஆகிவிடும்.
மரபுக் கவிதைகளை மனதில் நிறத்தி வைப்பது மாதிரி புதுக் கவிதைகளை நினைவில் நிறுத்திக் கொள்ள முடியுமா?
ஏன் முடியாது? இதற்கு சில உதாரணங்களைக் குறிப்பிட முடியும். சினிமாப் பாடல்கள் எல்லாம் புதுக்கவிதைகள்தான். அந்தவகையில் கண்ணதாசன், வைரமுத்து, வாலி, மு. மேத்தா, பேன்றவர்களின் பாடல்கள் மக்கள் மனதில் பதியவில்லையா? பேச முடியாத குழந்தையும் முணுமுணுப்பது இந்தப் பாடல்களைத்தானே. கடின சொற்களால் வடிக்கப்பட்ட கவிதைகளை மெத்தப் படித்தவர்கள் மட்டுமே வாசித்து இன்புற முடியும். அதாவது 20 வீதத்தினர் மட்டுமே. மிகுதி 80 வீதத்தினர்; புதுக் கவிதைகளின் சுவைகளைப் பருகியவர்கள் தான். இதுதான் நிதர்சனம். இன்று உலகை, தமிழை ஆட்சி செய்வதும் இதுதான்.
மரபுக் கவிதைகள் காலப்போக்கில் முற்றாக அழிந்துவிடும் என்று பரவலாகச் சொல்லப்படுகிறதே இதுபற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?
இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மரபுதான் புதுக் கவிதையின் பிறப்பிடம், அடித்தளம். அது இன்றி இது இல்லை. ஓரளவு மரபுகள் பேணி எழுதும் புதுக்கவிதையே காலங் கடந்தும் மணக்கும். வேரில்லாது கிளைகள் ஏது? மரபின் அலங்காரமே புதுக்கவிதையாகும்.
இலக்கணம் தெரியாதவர்கள் புதுக்கவிதை எழுதுகிறார்கள் என்கிறார்களே இதற்கு என்ன சொல்வீர்கள்?
கவிதையை யார் உருவாக்கியது? வரம்புகள் இட்டவர்கள் யார்? இது குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் உரித்தானதா? என்ற வினா இன்றும் எழுதுகிறது. புரியாத மொழியில், புரியாத வடிவில் இருந்தால் யாருக்கு இலாபம்? மண்ணில் புதைந்த மாணிக்கம் மாதிரித்தான்.
கவிதைகளின் தோற்றுவாய் படிக்காத ஏழை பாமரமக்களே, அவர்கள் முறையாக இலக்கணம் படிக்கவில்லை. இலக்கியம் வடிக்கவில்லை. ஆனால் எண்ணங்கள் வாழ்வியல் சோகங்களை, மறக்க நாட்டாரியலை உருகிப் பாடி மகிழ்ந்தார்கள். அவர்களை அறியாமலே மரபுகளும், ஓசைகளும், சந்தங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து சுவை தந்தன. வாழ்வில் அனைத்தையும் அவர்கள் அப்பாடல்களுக்குள்ளே கொண்டு வந்தார்கள். அவர்களின் அழகு நடைகளே காலப்போக்கில் மரபுகளாகவும், புதுக் கவிதைகளாகவும் தோற்றம் பெற்று வளர்ந்தது. படித்தவர்கள் பேர் பெறக் காரணமாயிற்று என்பதுதான் வரலாற்று உண்மை. இதை மறுப்பார் யாரும் இல்லை.
கருத்தாழம், அழகு, மென்மை, இனிமை சுருங்கச் சொல்லல், அவைகள் கலந்து வரும் அழகான அருவியே புதுக்கவிதை. இரண்டும் ஒரு தாய்ப் பிள்ளைகள்தான். முத்தவர், இளையவர் அவ்வளவுதான். ஆகவே இலக்கணம் ஒரு பொருட்டல்ல. இதில் மொழி வளமே முக்கியம் பெறுகின்றது.
பாரதியார் பெண்களை தமிழ் பாடல்களில் உயர்த்திப் பாடி "பாரதிகண்ட புதுமைப் பெண்" எனப் புரட்சி எழுப்பினார். உங்கள் கவிதைகளில் பெண்கள் எந்த இடம் வகிக்கின்றனர்?
நான் பெண்களை மதிப்பவன். என் எழுத்துக்கள் பெரும்பாலும் ஏழைகளையும், பெண்களையும் அவர்களின் வலிகளையும் பாடுவதாகவே அமையும். பெண்ணியம் போற்றுதற்குரியது பெண்மை மகத்துவமானது. பெண்மை அது தூய்மையின் உறைவிடம். பெண்களின் எழுச்சி சமூகத்தின் மறுமலர்ச்சியாகும்.
பிறமொழிக் கவிஞர்கள் பற்றி?
உருது கவிஞர் அல்லாமா இக்பால், உருது கவிஞர் உமர் கையாம் ஆகியோரின் கவிதைகள் கருத்தாளமும் புதுமையும் புரட்சியும் மிக்கவையாக உள்ளன. அதனால் அவற்றை விரும்பிப் படிப்பேன். அவர்களின் புரட்சி வரிகள் எனது கவிதைகளிலும் இழையோடிக் காணப்படும்.
நீங்கள் இதுவரை எழுதிய கவிதைகளில் கிராமிய மணம் பரப்பும் அழகிய கவிதை ஒன்றைக் குறிப்பிட முடியுமா?
ஒரு ஏழைக் கணவன் - மனைவியின் காதலும் ஊடலும் பற்றி பின்வரும் ஷஷகடலுக்குப் போனவக|| என்ற கவிதை மூலம் தருகிறேன்.
கடலுக்குப் போன மச்சான்
கருக்கலுக்க வாறீங்களா
காத்து நாகெடந்து
கருவாடாப் போகலாமா
கடலுக்க மீனுமில்லக்
கண்டலுக்க நண்டுமில்லக்
கடிநாயப் போலனாக்
கடலுக்க அலைஞ்சேன்டி
ஒன்ட நெனப்போட
ஒத்தயா நின்டேன்டி
ஓரா ஒன்னுரெண்டு
ஒனக்காகப் புடிச்சேன்டி
அதுக் கொண்ணும் அலுப்பில்ல
ஆசைக்கு வெக்கமில்ல
தொட்டிலில பச்சப் புள்ள
அஞ்சாவது வேணுமாக்கும்
அடியே கருவாச்சி
ஆசைக்கு அலுப்பில்ல
வக்கணயாப் பேசாத
வாடாத மல்லிகையே
பூசி மெழுகிப்
பேசினது போதும் மச்சான்
பூவான கையால
வெள்ளாணம் கேக்கு தாக்கும்
புளிய காச்சிருக்குப்
புளியங்கா கொண்டாங்க
தேங்காயும் திருவுங்க
தங்கத்துக்கு நாதறென்
காத்தும் அடிக்குதுகா
கருமேகம் சுத்துதுகா
மழைக்கு முன்னால
மல்லாந்து படுக்கனுங்கா
ஊரு பொம்பளைக்க
ஒசத்தி நீதான்டி
உசிரு கெடக்கும் வர
உசிரா இருப்பேன்டி
அடிப்போடும் மச்சானே
அதுக் கொண்ணும் கொறவில்ல
படுக்கப் பாயில்ல
பவுசுக்குப் பஞ்சமில்ல
சிரிப்பு வருவுதடி
சொன்னவொரு சொல்லால
கறுப்பு என்றாலும்
கட்டழகி நீதான்டி
அடுப்புல கறிகொதிக்க
அடிமனசும் கொதிக்குதுகா
கொடுஞ் சிரிப்பும் பறியுதுகா
நெனச்சுப் பாக்கயில
குருவிக் குஞ்சுகளப்
பசியாத்திப் படுக்கவையி
கைகால அலம்பிக்கிட்டு
அடுப்படிக்கு நாவாறன்
ஏழைங்க இல்லத்து
இதிகாசம் இதுதாங்க
மண்வீட்டு மாளிகையின்
மணிக் காதல் சுவைதாங்க
ஆசிரியராக, அதிபராக கடமையாற்றிய உங்களால் மாணவர்களிடையே காணப்படும் இலக்கிய ஆர்வம் பற்றி என்ன சொல் முடியும்?
இன்றைய கால கட்டத்தில் மாணவர்கள் இலக்கியத்தின்பால் மிகவும் ஈர்ப்பு இல்லாமலே காணப்படுகின்றார்கள். படிப்பதில், வாசிப்பதில் ஆர்வமின்மை, தேடல் மிகவும் குறைந்துள்ளது. தொலைபேசி பாவனை, சினிமா மோகம், நாகரீக மோகம் இவைகள் எல்லாம் இலக்கியம் மீதான பார்வையை மிகவும் வேகமாகப் பாதிக்கின்றன. இவர்களை மீட்டெடுக்க, கலை உணர்வை வளர்க்க வேண்டியது தலையாயக் கடமையாகும்.
இப்போதைய ஒரு சில மாணவர்களிடம் போதைப் பழக்கம் காணப்படுகிறது. மாணவர்களைப் போதையில் இருந்து மீட்க ஒரே வழி இலக்கியத் தாகத்தை அவர்களிடம் தூண்ட வேண்டும். அதன்பால் அவர்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் ஒரளவு மாற்றம் நிகழும் என்பது எனது கருத்தாகும்.
உங்கள இலக்கிய வாழ்வில் இதுவரையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை குறிப்பிடுங்கள்?
மறக்க முடியாத சம்பவம் என்றால் எனது நாற்பது வருடக் கனவான கீழ்த்திசைக் காற்று நூல் வெளியீடுதான். எனது நீண்ட காலக் கனவு நனவான சம்பவம், ஊர் கூடி மகிழ்ந்த தருணம், நான் அங்கீகரிக்ப்பட்ட நாள், இது எனது மண்ணின் சாதனையின் முதற்படி ஆகும். இந்த இலக்கியப் படைப்பை இந்த மண்ணில் உருவாக்கியவன் என்ற மனத்திருப்தியே இன்னும் படைக்க ஆர்வம் ஊட்டுகிறது.
இதுவரை நீங்கள் பெற்ற விருதுகளும் சான்றிதழ்களும் பற்றி நீங்கள் குறிப்பிட முடியுமா?
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளின் கலை இலக்கியக் குழுமங்களுக்குப் போட்டிக் கவிதை எழுதி 750 க்கும் மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களும் குழுமங்களிலிருந்து 40 க்கும் மேற்பட்ட விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றின் விபரங்களைத் தருகின்றேன்.
• 2019.09.09 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)
• 2019.10.07 - 08 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)
• 2020.08.06 - 09 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)
• 2020.10.22 கிராமியக் கவி விருது - கவியுலகப் பூஞ்சோலை கவிதைக் குழுமம் (இந்தியா)
• 2020.10.25 கவிக்குறல் விருது - கவியுலகப் பூஞ்சோலை கவிதைக் குழுமம் (இந்தியா)
• 2020 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை)
• 2021.06.18 கவியமுது விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)
• 2021.08.19 சிந்தனைச் சிற்பி விருது - கவிதைச் சரணாலயம் (இந்தியா)
• 2021.08.23 கவியருவி விருது - கவிதைச் சரணாலயம் (இந்தியா)
• 2021.09.11 கவிச்சுடர் விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)
• 2021.09.18 மகாத்மா விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)
• 2021.09.19 விடிவெள்ளி விருது - மகாகவி பாரதி கவிச்சுடர் குழுமம் (இந்தியா)
• 2022.12.27 கலை முத்து - மூதூர் பிரதேச செயலகம் (இலங்கை)
• 2021 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை)
உங்களது எதிர்கால எழுத்து முயற்சி பற்றி குறிப்பிடுங்கள்?
எதிர்காலத்தில் பின்வரும் 05 நூல்களை வெளியிடவுள்ளேன்.
1. தோப்பூர் வரலாறு
2. வெந்து தணிந்தது ஊரு (சிறுகதை நூல்)
3. மலர்வனம் (சிறுவர் பாடல் நூல்)
4. மண் வாசம் (கிராமியக் கவிதை நூல்)
5. பௌர்ணமி இரவு (கவிதை நூல்)
இவற்றையே எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக வெளியீடு செய்ய நினைத்துள்ளேன்.
வேற எதாவது செல்ல விரும்பினால்?
இதுவரை நான் பல குறும்படங்களில் நடித்துள்ளேன். அதாவது கொவிட் பாஸ், கிரிக்கட் வேணாங்க 1, 2, மூதூர் தயாரிப்பான புதையல் மற்றும் கூலி, விளைவு, கில்லர் ஆகிய குறும்படங்களில்; முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளேன். இவற்றை யூடியுப் இணையத் தளத்திலும் காணலாம்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்















No comments:
Post a Comment