கவிஞர் உரும்பையூர் து. திலக் (கிரி) அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தை சுருக்கமாகக் கூறுங்கள்?
யாழ்ப்பாண மாவட்டத்தின் உரும்பிராயை சொந்த ஊராகக் கொண்ட திரு. திருமதி. துரைராசா குணேஸ்வரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தேன். எனது இயற்பெயர் துரைராசா கிரிகேஸ்வரன் என்பதாகும். நான் ஆரம்பக் கல்வியை யாழ். உரும்பிராய் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலைவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும், உயர் தரத்தை கிளி/அக்கராயன் மகாவித்தியாலயத்திலும் பயின்றுள்ளேன்.1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் வன்னி பெருநிலப் பரப்பில் எனது கல்வியைத் தொடர்ந்து வந்துள்ளேன். அக்காலப் பகுதியில் கிளி/ அக்கராயன் தமிழொளி கலா மன்றத்தினூடாக அரங்க நாடகங்கள், தெருவழிக் கலையாற்றுகைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பான போட்டி நாடகங்களிலும் நான் பங்குபற்றி வந்துள்ளேன். அக்காலங்களில் நாடக ஆசிரியர்களாக திரு. ச.சக்திவேல் அவர்களும், திரு. பாலா அவர்களும் இருந்தனர். பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைந்து நடாத்திய நாடகத்தில் பாலா ஆசிரியர் அவர்களின் நெறியாழ்கையில் இடம்பெற்ற 'சூரியனைச் சுட்டெரிப்போம்' என்ற எமது நாடகம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஆசிரியர் திரு. சக்திவேல் அவர்களின் தயாரிப்பில் இடம்பெற்ற 'மீண்டும் வருவோம்' எனும் எமது சமூக விழிப்புணர்வு நாடகம் பல இடங்களில் அரங்கேற்றம் கண்டு வந்தது.1999 ஆம் ஆண்டு மூத்த கவிஞர் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் ஐயா அவர்களின் தலைமையிலான கவியரங்கில் நான் கலந்துகொண்டு வரவேற்பையும் பலரது பாராட்டுகளையும் பெற்றமை பசுமையான நினைவுகளாக இன்றும் என் மனதில் பதிந்துள்ளது. தொடர்ந்து கிராமங்கள் தோறுமான மக்கள் பணிகள், சமூக சேவைகள் என்பவற்றை வழங்கி வந்துள்ளேன். பின்னாட்களில் போர்க்காலப் பகுதியிலான இடர்காலப் பணிகள், மக்கள் சேவை என்பவற்றில் பணியாற்றி 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தடுப்பு முகாம் சென்று வவுனியா, பொலனறுவை, காலி, அனுராதபுரம், கொழும்பு போன்ற மாவட்டங்களில் நான்கு வருடங்களும் ஏழு மாதங்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அக்காலப் பகுதியில் தினக்குரல், வீரகேசரி, சுடரொளி, மித்திரன், உதயன், வலம்புரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்துள்ளேன்.மித்திரன் பத்திரிகையில் வெளிவந்த 'உயிர் வலித்த கணங்கள்' பகுதியில் எனது 'வலி சுமந்த உணர்வின் வரிகள்' என்ற தலைப்பில் அமைந்த தொடர் கட்டுரைகளும், உணர்வின் வலிகளும் எழுதப்பட்டதோடு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுங்கதைகள் என்பனவற்றையும் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளேன். சூரியன் வானொலியின் 'ரீங்காரம்' நிகழ்ச்சிக்கும் எனது பல ஆக்கங்களையும் வழங்கினேன். பின்னர் 2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்தடைந்தேன்.
2023 ஆம் ஆண்டு 'சிதறல்கள் - 100' எனும் எனது முதற் கவிதை நூலை 'ஜீவநதி' வெளியீட்டகமும், யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கமும் இணைந்து யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் வெளியீடு செய்தது. இதுவே எனது இலக்கியத் துறை சார்ந்த அறிமுகமாகும்.
உங்கள் பாடசாலை வாழ்க்கை, இலக்கிய ஈடுபாடு பற்றிக் குறிப்பிடுங்கள்?
இடைநிலைக் கல்வியைக் கற்ற உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இணை பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டுத் துறைகளில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது. அந்தவகையில் உடற்கல்வி அணியின் தலைமையாளனாகவும், பாடசாலை உதைப்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளனாகவும் இருந்து வந்துள்ளேன். அத்துடன் சமய நிகழ்;வுகள், பேச்சு, நகைச்சுவை செய்தி வாசித்தல் போன்றவற்றோடு 'காத்தவராயன்' கூத்தில் பாலகாத்தானாகவும் நடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒருதடவை நகைச்சுவை செய்தி வாசித்து அதே நாளில் அதனைச் சுட்டிக்காட்டி கணித பாட ஆசிரியரிடம் அடிவாங்கிய நினைவும் இருக்கிறது.
முதன் முதலாக எழுத்துத் துறைக்குள் வந்த அநுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?
நான் தொடர்ந்து பத்திரிகைகளை அதிகம் வாசிப்பதுண்டு. அதிலும் குறிப்பாக ஆசிரியர் தலையங்கத்தை முதன்மை அடிப்படையில் வாசித்துக்கொள்வேன். அத்தோடு மக்கள் மன்றம், குறைகேள் மன்றம், கட்டுரைகள் என்பனவற்றையும் அதிகமாக வாசிப்பேன். இதனூடாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள், பொது இடங்களில் சீர்செய்யப்பட வேண்டிய விடயங்கள் என்பற்றை எழுத வேண்டுமென்று என்னை அதிகமாகத் தூண்டியது என்னுடைய வாசிப்புப் பழக்கமே. இப்பொழுதும் மின்னிதழ்ப் பத்திரிகைகளில் முதலில் நான் வாசிக்க முனைப்புக் காட்டும் பகுதி அன்றைய நாளுக்கான ஆசிரியர் தலையங்கமே. நாட்டின் அரச, அரசியல், சமகால நிலைப்பாட்டை அன்றைய நாளுக்கான முதன்மைப்படுத்தலாக இருப்பது ஆசிரியர் தலையங்கம் ஆகும்.
முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் எப்படிப்பட்டது?
வலி நிறைந்த வாழ்வு, போர் நிறைந்த சூழல், பொருளாதார நெருக்கடி, மரண ஓலங்கள், தொற்று நோய்களின் தாக்கங்கள், பிறர் வாழ தம்முயிர் ஈய்தல், அளப்பரிய தியாகங்கள், பாரிய அர்ப்பணிப்புகள் இவ்வாறான நாளாந்த வாழ்வியல் பயணத்தில் காலக் கடிகாரம் ஓய்வின்றிச் சுழன்ற அந்த நெஞ்சை நெருடிய தருணங்கள், கண் கண்ட காட்சிகள், உள்ளெழுந்த உணர்வுகளை எழுத்துகளாக வடிக்கத் தூண்டியது. இவ் உணர்வுப் பிரவாகத்தின் கிறுக்கல்களே கவிதைகளாக, கட்டுரைகளாக, தொடர் கலை ஆற்றுகைகளாக என்னுள் வெளிப்படத் தோன்றியது.
உங்களது முதலாவது ஆக்கம் எப்போது எந்த ஊடகத்தில் வெளிவந்தது?
1997 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வன்னியில் அக்கராயனில் வாழ்ந்த காலத்தில் ஈழநாதம் பத்;திரிகையின் வார இதழான வெள்ளி நாதத்தில் 'படத்திற்கு மெருகூட்டுங்கள்' பகுதியில் ஒரு கல்லறையின் அருகே தாய் இருந்த அழுவதான காட்சி இருந்தது. அதனைப் பார்த்துவிட்டு,
கருவறையில் சுமந்தவள்
கல்லறை அருகிலிருந்து கதறுகிறாள்
அவன(ள)து நினைவுகள்
இன்னமும் நெஞ்சறையில்
பசுமையாய் இருப்பதனால்!
இதுவே எனது முதல் கவிதை வரியாக்கமாகும். இது பரிசுக்கான கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'அர்ச்சனா புகைப்படக் கலையகம்' இதற்கான நினைவுப் பரிசினை வழங்கியது.
வாசகர்கள் மத்தியில் உங்கள் கவிதைகளுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?
என் ஆரம்ப கால எழுத்துக்களை அங்கீகரித்து ஆதரவு தந்து இற்றைவரை உந்து சக்தியாக முன்னகர்த்திச் செல்வது வாசகர்களே என்று பேரன்போடு சொல்வேன். நெருக்கடி மிகுந்த சூழலில் ஒவ்வொரு இடமாக மாற்றப்படுகின்ற போதும் என் உணர்வுகளுக்கும், ஏட்டுக்கும், எழுத்தாணிக்கும் நான் கடிவாளமிட்டதேயில்லை. எனது, என் சார்ந்தவர்களின் வலிகளை, தாங்கொணா உணர்வுகளை வரிகளாக்கிய போது இதைப் பெருமனதுடன் ஏற்று எம் வலிக்கு ஒத்தடம் கொடுத்த அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர் குழுமங்களையும் இந்த நேரத்தில் நன்றியுணர்வுடன் நினைத்துப் பார்ப்பதோடு மித்திரன் வாரமலர், சுடரொளி வாரமலர், சூரியனின் ரீங்காரம், என் உணர்வுகளுக்கு அயராது களம் தந்த மற்றும் ஏனைய பத்திரிகைகளும் என் வலிகளுக்கு ஒத்தடம் போட்டதை இலக்கிய வாழ்வில் என்றும் மறந்திடலாகாது. மித்திரனின் 'பேசும் நெஞ்சங்கள்' பகுதியில் ஒவ்வொரு வாரமும் என் ஆக்கங்கள் பற்றிய கருத்தாடல்கள் வந்துகொண்டே இருக்கும்.
நீங்கள் இதுவரை எழுதிய பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு கவிதையைப் பற்றிச் சொல்லுங்கள்?
சிறகு!
வெட்டை வெளியில் நின்று என்
விழிகளை மூடி
கற்பனைச் சிறகுகளை விரித்தேன்..
உயர உயரப் பறக்கலானேன்..
இந்த உள்ளங்கை உலகத்தின்
உருவத்தை
மறந்து திளைத்தேன்!
உண்மை உலகத்தில்
மகிழ்ந்து சிரித்தேன்..
இறை தந்த இயற்கையை
ரசிக்கக் கற்றுக்கொண்டேன்..
அவன் கற்பனைகளை
ஆழமாக சுவைக்கவும்
பழகிக்கொண்டேன்!
பாழ்படுத்தும் நவீன யுகத்தில்
வேடிக்கை முலாம் பூசப்பட்ட
வினோத மனிதர்கள் மத்தியில்;
உண்டு கொழுத்து
வாழ்ந்து மடிவதை விடுத்து
தமிழை உண்டு குடித்து
உலகெலாம் சிறகு விரிக்கும்
ஒரு பேராசை எனக்குள்!
உலகத்தின் எண் திசையும்
என் மொழியைக் காவிச் சென்று
உலக மாந்தர் நாவுகளில்
உச்சரிப்பாய் உதிர்த்து வரவும்
ஒரு நப்பாசை எந்தனுக்குள்!
வன்மங்கள் விலகிய
வளமான மானிடராய்
உலக மாந்தர்கள் வலம் பெற்று
வாய் மொழியாய் வண்தமிழை
வாய் நிறைத்துப் புன்னகைக்கும்
பேரழகைக் காணவும் ஓர் பேராசை!!!
இவ்வரிகள் என் தாய் மொழி பற்றிய கவிதையாதலால்; அதிகம் இரசிப்பேன்.
உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யாவர்? உங்கள் எழுத்துக்களில் எந்தக் கவிஞர்கள் தாக்கம் காணப்படுகின்றது?
எனது ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணர் அவர்கள். அத்துடன் மூத்த கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் ஐயா, எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார், தாயகக் கவிஞர் கு.வீரா, கவிஞர் வேலணையூர் சுரேஸ்;, கவிஞர் வன்னியூர் வரன்;, கவிதாயினி ரிம்ஸா முஹம்மத், கவிஞர் யோ. புரட்சி;, இராமசாமி ரமேஸ்;, கவிதாயினி எச்.எப். ரிஸ்னா, மீசாலை பொன்னிலவன், மருதோடை நிலா, கவிஞர் ம. சுமன், சக்கர நாற்காலி தன்னம்பிக்கைக் கவிஞன் மன்னார் பெனில், கவிதாயினி கோபிகை (ஜெசிலா), கவிதாயினி யோ. வனிதா, கவிதாயினி ஜோ. ஜெயசுதா, கவிதாயினி பிறேமா எழில் இவ்வாறாக இன்னும் பலரது கவிப் படையல்கள் விழிப்புணர்வையும் சமூக நீரோட்டத்தையும் தொட்டு நிற்பதனால் அவர்களது அரங்கக் கவிதைகளையும் அச்சு இலத்திரனியல் வாயிலான கவிதைகளையும் விருப்பத்தோடு இரசித்துக்கொள்வேன்.
எனது கவிதை வரிகள் அதிகம் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே வெளிப்படுத்தப்படுகிறது. அவ்வப்போது ஏற்படுகின்ற உள்ளக, வெளியகத் தாக்கங்களையே உணர்வின் வெளிப்பாடாகப் படைத்து வருகிறேன். இங்கு புரட்சிக் கவிஞர்கள், விழிப்புணர்வுக் கவிஞர்களின் தாக்கங்களே என்னுள் பற்றி நிற்கிறது.
உங்களுடைய முதல் பிரசவமான 'சிதறல்கள் - 100' என்ற கவிதைத் தொகுதியின் தலைப்புப் பற்றிக் கூறுங்கள்?
'சிதறல்கள் - 100' என்பது ஒரு நூலுக்கான தலையங்கம் அல்ல. என் வாழ்நாளில் நான் எதிர்கொண்ட பல்வேறுபட்ட நெருக்கடியான சூழல்களின் எண்ணச் சிதறல்களை வரிகளாக்கி நின்றது. அந்த வரிகளினூடாக பல்வேறுபட்ட தலைப்புக்களில் அமைந்த என் வலிகளுக்கு நானே ஒத்தடம் கொடுத்து நின்றேன். அந்த வேளைகளில் எண்ணக் குவியல்களாகச் சிந்தப்பட்ட சிதறல்களுள் 100 ஆக்கங்களை தேர்ந்தெடுத்து 'சிதறல்கள் - 100' என்ற எனது முதலாவது காகிதப் பிரசவத்திற்கு பெயர் சூட்டி அகமகிழ்ந்தேன்.
உங்களது கவிதை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பொருட்கள் குறித்துக் கூறுங்கள்? இவற்றினூடாக நீங்கள் சொல்ல முனையும் விடயங்கள் என்ன?
எனது படைப்புக்கள் ஊடாக பெற்றோர்களை மதித்தல், மொழிச் சிதைவு, பண்பாட்டுப் பிறழ்வு, போதைப் பொருட்களுக்குள் அடிமையாதல், சமகாலத்தில் போலிகளின் தாக்கம், இன அழிப்பின் வலிகள், நிழ்கால ஏமாற்று அரசியல், வாழ வலுவற்று நிர்க்கதியான மனிதர்கள், வாழ்வாதாரத்திற்கான உதவி தேடல், தனவந்தர்கள், பரோபகாரிகள் ஆற்றவேண்டிய தார்மீகப் பொறுப்புக்கள் என்பவற்றைத் தலைப்புக்களாக்கி என்னால் இயன்றவரை சிதறவிட்டிருக்கிறேன்.
கால ஓட்டத்திற்குள் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை தொலைத்து அல்லது மறந்து பயணிக்கும் எதிர்காலச் சமூகம் அல்லது இளைய தலைமுறையினர் பண்டைய எமது வாழ்வியல் முறைகளை, பண்பாட்டு விழுமியங்களை வாசித்தறியும் வகையில் படைக்க வேண்டுமென்கின்ற எழுத்தாளர்களின் பெரு விருப்பத்தில் நானும் ஒருவனாக பங்காற்றுவதனூடாக இந்த சமூகத்திற்கு என்னாலான செய்திகளைச் சொல்லியிருக்கிறேன்.
உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?
ஆம், நிச்சயமாக. நாம் அனுபவித்தவற்றை, எமது வாழ்வியல் முறைமைகளை, எமது மூதாதைகள் கட்டுக் கோப்புடன் பாதுகாத்து வந்த பண்பாட்டு விழுமியங்களை இளைய தலைமுறைக்கு தொட்டு நிற்பதன் ஊடாக அல்லது கலை வடிவங்களாக வெளிப்படுத்துவதன் பிரதிபலிப்பாக கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை சமூகத்தின் மத்தியில் வெறுப்புக்குரிய தன்மையை ஏற்படுத்தும். அவ்வாறன நிலை தோற்றுவிக்கப்படின் ஒரு கட்டுக் கோப்பான சமூகம் நிலை தடுமாறாது நின்று நிலைத்து வாழும் என்ற நம்பிக்கையோடே கலை வடிவங்கள் சமூகப் பொதுவெளியில் படைக்கப்படுகின்றுது. அதில் எனக்கும் அசையாத நம்பிக்கை உண்டு.
இதுவரை சுமார் எத்தனை கவிதைகளை எழுதியுள்ளீர்கள்?
1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 நடப்பாண்டு வரை எனது எழுத்துப் பணியை தொடர்ந்த வண்ணமே வருகிறேன். சமூக வலைத்தளங்கள், அச்ச இலத்திரனியல் ஊடகங்கள் என அவ்வப்போது எண்ணக் கருவில் தோன்றுபவற்றை வெளிப்படுத்தி வருகிறேன். அதற்குள் 100 ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்தே கவிதை நூலாகத் தொகுத்துள்ளேன். இன்னும் பலநூறு படைப்புகள்; என் கைவசம் சேமிப்பில் உள்ளது. அவற்றைக் காலம் வருகின்ற போது நூலாக்கம் செய்வேன். ஆனால் அவற்றின் எண்ணிக்கையினை என்னால்; குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது.
நீங்கள் அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளீர்கள். இலக்கியத்தின் ஏனைய துறைகளில் ஈடுபாடு காட்டும் அக்கறையில்லையா?
இது ஒரு நல்ல கேள்வி. இலக்கியப் பரப்பில் பத்திரிகைகளுக்கு கட்டுரையாக, குறுங்கதையாக, 'வலி சுமந்த உணர்வின் வரிகள்' என்ற தலைப்பில் வாரத் தொடராக, சிறுகதை, பத்திரிகை வாயிலான விவாத மேடைகள் போன்றவற்றை தொடர்ந்து எழுதியதுடன் இலைமறை காயாக இருக்கின்ற கலை இலக்கியவாதிகள், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், அரசியல்வாதிகளை வாரப் பத்திரிகைகளுக்கு நேர்காணலும் செய்திருக்கிறேன். அவற்றைக் காணலை (வீடியோ) வடிவமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறேன். அத்துடன் விழிப்புணர்வு சார்ந்த எனது கவிதை வரிகளை ஒலி வடிவமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளேன்;. பத்திரிகைகளுக்கு செய்திகள் சேகரிக்கும் பணிகளிலிலும் ஈடுபட்டுள்ளேன். இதுவரை மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன். இன்னும் இலக்கியப் பரப்பில் இரண்டறக் கலந்து பயணிக்கும் ஆவலில் உள்ளேன்.
இதுவரை நீங்கள் எழுதிய உங்களது சிறுகதைப் படைப்புகள் பற்றிக் கூற விளைவது?
நான் எழுதிய சிறுகதைகளுள் 'நடமாடும் தெய்வங்கள்' இது வைத்தியர்கள், தாதியர்களின் சேவை குறித்ததான சிறுகதையாக அமைந்துள்ளது. 'பொய்க்கால்' போரினால் காலை இழந்த ஒருவர் பேருந்தில் பயணிக்கின்ற பொழுது ஏற்படுகின்ற அசௌகரியங்களைக் குறித்ததான ஒரு சிறுகதையாக இருக்கிறது. 'பட்டாசு வேண்டாம்' இது யுத்தத்தில் தந்தையை இழந்த சிறுவர்கள் பண்டிகை நாளில் கொழுத்தப்படுகின்ற பட்டாசின் சத்தத்தைக் கேட்டு அச்சப்படுவதான சிறுகதையாகும். 'ஓட்டக் குடை' இது ஒரு குறுங்கதையாகும். எழுதிய பல சிறுகதைகளுக்குள் இந்த மேலே சொல்லப்பட்ட தலைப்பிலமைந்த சிறுகதைகள் என் நேரடி அனுபவத்தில் சாதக பாதகங்களை ஏற்படுத்தியமையால் இந்தக் கதைகளின் தலைப்புகள் இன்றும் என் நினைவில் உள்ளது.
உங்களுக்குள் சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றது? சிறுகதைகளுக்கான உங்களது பாத்திரப்படைப்பு எப்படிப்பட்டது?
என்னைப் பொறுத்தவரையில் எனது படைப்புகள் கற்பனைக்கு அப்பால் அனுபவ ரீதியான அல்லது கண்டுணர்ந்த பட்டறிவுகளையே படைத்து வருகிறேன். அதற்கான கதாபாத்திரங்களை புனைப் பெயரில் சித்தரித்து வருகிறேன். அத்தனை கருக்களும் சமூகத்திற்கு அல்லது எனது கடந்து வந்த வாழ்வியல் பயணத்தில் பட்டுத்தெறித்த விம்பங்களேயாகும். ஆதங்கப் படைப்பாக மட்டுமன்றி ஒரு விழிப்புணர்வுப் படைப்பாகவே இதனை நான் படைத்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாதவர்கள் யாவர்?
எனது இலக்கியப் பயணத்தில் சக எழுத்தாளர்கள் ஆரம்பம் முதல் தற்போது வரை போட்டி பொறாமைகள் அற்ற நல்ல இலக்கிய வாதிகளாக இருந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஒவ்வொரு ஒவ்வொரு இடங்களில் இருந்தவாறே அச்சு ஊடகங்களின் ஊடாக எங்கள் உணர்வு வரிகளைக் கிறுக்கி வந்தோம். அவ்வாறான வேளையிலெல்லாம் எங்களது ஆக்கங்கள் பிரசுரமாகின்ற போது தபால் மூலமாக அந்த ஆக்கங்களின் பிரதிகளை அனுப்பிப் பகிர்ந்து, ஒவ்வொருவரைப் பற்றி ஒவ்வொருவரும் பேசும் களங்களில் உற்சாகப்படுத்தி குறிப்பாக வாசகர்கள் மத்தியிலும் ஒர் இளவட்டமாகப் பெரு வரவேற்பைப் பெற்றுவந்துள்ளோம். இதற்குப் பெரிதும் களம் தந்தது பத்திரிகைகளே.
அந்தக் காலத்து எழுத்தாளர்கள் பலர் இன்றும் மறக்க முடியாத நட்புக்களில் இருந்து வருகின்றமை தொடரும் இலக்கியப் பயணத்தில் ஒரு ஊன்றுகோலாகவே அமைகின்றது. இவர்களுள் குறிப்பாக மித்திரன் வாரமலர் ஆசிரியராக இருந்த திருமதி. பொன்மலர் சுமன் அவர்கள், சூரியன் வானொலி 'ரீங்காரம்' நிகழ்வின் தொகுப்பாளர் திரு. ரி.எஸ். முகுந்தன் அவர்கள், சுடரொளியில் பணியாற்றிய இராமசாமி ரமேஸ் அவர்கள் இன்னும் பலர் நினைவில் கொள்ளத்தக்கவர்கள்.
உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?
ஒரு நெருக்கடியான சூழலில் இருந்தவாறு பத்திரிகைகளுக்கு எழுதிய காலத்தில் பத்திரிகைகளைப் பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி இருந்தேன். ஆனாலும் எழுதிய ஆக்கங்களை எப்படியாவது பத்திரிகைப் பிரசுரமாகப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு மேலெழுந்து நிற்கும். அதனைப் பெறுவதற்கு பலவழிகளில் முயற்சித்திருக்கிறேன். இன்றும் அதை நினைத்தால் அது ஒரு கசப்பான அனுபவமாக இருக்கிறது. ஆனாலும் விடா முயற்சியோடு அந்தப் பிரசுரங்களைப் பார்க்கின்ற துடிப்பின் பயனாக உறவினர்கள், நண்பர்களின் ஆதரவோடு உணவுப் பார்சலில் அந்தப் பத்திரிகைப் பிரசுரங்களை எடுத்து வாசித்த அந்த மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் இலக்கியப் பரப்பில் மட்டுமன்றி வாழ்வியல் பயணத்திலும் மறக்க முடியாதவையே. இது வலி நிறைந்த அனுபவமாகும்.
எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது எழுத்துலகப் பயணத்தின் நீண்ட கால அவா, எனது முதல் காகிதப் பிரசவத்தோடு 2023.12.16 இல் ஒரு அத்திவாரத்தை ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்தும் என்னிடம் இருக்கிற பல்வேறுபட்ட இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்தி இலக்கியப் பரப்பிற்கு நிறைவான ஒரு ஆக்கத் திறனைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல திடம் கொண்டிருக்கிறேன். அதற்கான காலம் கனிவாகும் என்று நம்புகிறேன்.
உங்களது படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது படைப்புகள் முழுமையும் அச்சு இலத்திரனியல் சமூகப் பொது வெளிகளிலேயே பகிரப்பட்டு வந்துள்ளது. அன்று தொட்டு இன்றுவரை அதற்கான அங்கீகாரத்தை வாசகர்கள், இரசிகர்கள் நான் பாவித்த அதன் ஊடக வாயிலாகவே எனக்கான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பகிர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வந்துள்ளனர். அதன் பிரதிபலனாகவே இன்றுவரை இலக்கியத்தோடு இரண்டறக் கலந்த நிலையில் நிற்கிறேன். அதனால் உங்கள் கேள்விக்கு ஏற்ற பதிலை என்னால் பகிர முடியவில்லை. ஆனால் இந்த வாசகர்களும் இரசிகர்களும், நட்பு உறவுகளுமே என்னை இன்னும் இன்னும் முழு வீச்சுடன் படைக்கத் தூண்டுகின்றன என்பதே வெளிப்படையாகும்.
நீங்கள் செய்து வரும் தொடர் பணியில் 'ஏர் நிலம்' சமூக சேவைகள் குறித்து குறிப்பிட முடியுமா?
ஆம். இருப்பதைக் கொடுத்து வாழ்வதால் ஒருவகை ஆத்ம திருப்தியே. 2015 ஆம் ஆண்டு 'ஏர் நிலம்' என்கின்ற சமூக அமைப்பை நிறுவி தாயகத்தின் வடகிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளுக்கு வாழ்வாதார, கல்வி, பொருளாதார பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை அந்தந்த சூழலின் தன்மைக்கேற்ப தேவையுடையோரின் வேண்டுகையின் அடிப்படையில் வழங்கி வருகின்றோம். இப் பெரும்பணிக்கு அல்லது இந்த மனித நேய தார்மீக உரிமைக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற தனவந்தர்கள், பரோபகாரிகள் தங்கள் வாழ்வியல் சுமைகளோடு இவ்வாறான பணிகளையும் பெரு விருப்போடு முன்னெடுத்து வருகின்றனர்.
ஏர் நிலத்தின் நிறுவுனராக சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்தவாறு நானும், ஆரம்ப காலத்தில் தாயகத்தில் ஏர் நிலப் பணிகளை கவிஞர் யோ. புரட்சி அவர்களும் முன்னெடுத்து வந்தோம். தற்போது கள, புல இணைப்பாளராக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திரு. தனம் நித்தி அவர்களும், மாவட்ட ரீதியான செயலாற்றுனர்களாக மன்னார் மாவட்டம் கவிஞர் மன்னார் பெனில், முல்லைத்தீவு மாவட்டம் கவிஞர் ஜே. லக்சிதரன், கிளிநொச்சி மாவட்டம் கவிஞர் தே. பிரியன், மகளிர் செயற்பாட்டாளர் சமூக சேவகி ர.வதனா, யாழ். மாவட்டம் சமூக சேவகர் திரு. த.லதன், திருகோணமலை மாவட்டம் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடாகவும், வடிவமைப்பாளர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஜெயா சஞ்ஜீவன், சமூக ஆர்வலர் திரு. ப.கரிகரன் ஆகியோருடன் ஆலோசகர் திருமதி கலாநிதி இ. சூரியகுமாரி அதிபர் கிளிஃ முரசுமோட்டை மகா வித்தியாலயம் ஆகியோருடன் சமூகப் பொருளாதார அபிவிருத்தி, முன்பள்ளிகள் அமைத்தல், பாடசாலை வகுப்பறைகள் அமைத்தல், இல்லிடம் அமைத்தல், குடிநீர் வசதி, விவசாயம் எனப் பல்வேறுபட்ட சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அத்துடன் 'அமுதம்' கல்வித் திட்டம் நிறுவப்பட்டு வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கு மாத அடிப்படையில் கற்றல் ஊக்குவிப்பு நிதி நான்கு வருடங்களாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இவ் அமுதம் கல்வித் திட்டமானது ஆரம்ப காலத்தில் 15 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 35 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இவ்வருட நடுப் பகுதியில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாடுகள் மக்களால் மக்களுக்காகவே முன்னெடுக்கப்படுகின்ற ஒர் ஆத்ம திருப்தியான பணியாகும்.
சக இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் ஆலோசனை என்ன?
படைப்புக்கள் என்பது வெறுமனே வாசித்துவிட்டு கடந்து போவதற்கானதாக அல்லாமல் ஒரு காலத்தின் அல்லது ஒரு சமூகத்தின் சீர்திருத்தத்தை அறிந்து கொள்வதற்கு ஏற்றால்போல் உயிரோட்டம் நிறைந்ததாக ஓரளவேனும் ஆழ்மனதில் மாற்றங்களை உண்டு பண்ணக்கூடியதாக, அதற்கும் மேலாக சிந்தனா சக்தியை விழிப்படையச் செய்வதாக, நாளாந்த வாழ்விற்கு உரமேற்றக் கூடியதாக அமைதல் வேண்டும். கற்பனைகளுக்கு அப்பால் எம்மவரின் படைப்புகளுக்குள் வலியும் வேதனையும் வாழ்வியலில் நிறைந்திருப்பதனால் எமது படைப்புகள் ஆத்ம உயிரோட்டம் உள்ளது என்பதை இளைய படைப்பாளர்கள் நன்குணர்ந்து படைத்தல் நன்று.
முடிவாகப் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் கூற விரும்புவது என்ன?
படைப்பாளர்களே! நீங்கள் ஒரு காலத்தின் கண்ணாடி. உள்ளதை உள்ளபடியும் வெளிப்படைத் தன்மையோடும் எழுதுகின்ற, பேசுகின்ற ஒரு கருத்துச் சுதந்திரவெளி முடக்கப்படுவதென்பது படைப்புக்களுக்கான பாய்ச்சலை பெரிதும் பாதிக்கும் என்பதே வெளிப்படையானது. இருந்தாலும் ஒரு அசாத்திய துணிச்சலோடு, ஒர் இலக்கிய வெறியோடு, சமூகப் பற்றோடு தன்னார்வப் படைப்பாளர்களாக பல படைப்பாளர்கள் தங்களை சமூகவெளியில் கட்டுடைத்து வெளிப்படுத்தி நிற்கிறார்கள்.
காலத்தை, அதன் கனதியை, எமது வாழ்வியலை, எமது வலிகளை, நாங்களே படைக்க வேண்டும் என்ற ஓர்மத்தோடு ஒவ்வொரு படைப்பாளர்களும் இலக்கியத் தரப்பில் புதுயுகம் படைக்கத் தயாராக வேண்டும் என்பதோடு, பெண் படைப்பாளர்கள் தமக்கான அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து அதற்கெதிராக படைப்புகளை அதிகம் வெளிப்படுத்தி நிற்க வேண்டும். இவை அனைத்திற்கும் வாசகர்கள் பெரும் களம் தந்து தொடர் பயணத்திற்கு பாலம் அமைத்து ஒரு எழுத்தாளன் சமூகத்தில் எழுத்துக்களால் புரட்சி செய்ய அல்லது மாற்றத்தை ஏற்படுத்த தகுந்த முறையில் வரவேற்பினையும் உற்சாகத்தினையும் தாங்கி நிற்க வேண்டிய தார்மீகப் பொறுப்பினை வாசகர்களே கொண்டிருக்க வேண்டும்.
ஓர் இலக்கியப் படைப்பாளி தொடர்ந்தும் பயணிக்க தாங்கு தூண்களாக வாசகர்களே பெருந் துணை புரிய வேண்டும். இதற்கு வாசகர்கள் அதிகம் வாசிப்பு மற்றும் கலை நாட்டங்களில் தீவிர போக்கைக் கடைப் பிடிப்பதே சாலவும் நன்றாகும். இச் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கிய நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் ஊடகவியளலாளர், கவிதாயினி, அன்புச் சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் பத்திரிகை ஆசிரியர், நிர்வாகக் குழுவினர் பெருமதிப்பிற்குரிய வாசக நெஞ்சத்தினர், இலக்கிய உலகத்தினர் அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகும் என்று கூறி; நிறைவு செய்கிறேன்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:
Post a Comment