Sunday, November 6, 2022

46. கவிஞர் அ.மு. முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்

 கவிஞர் அ.மு. முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்கு கூறுங்கள்?

நான் சம்மாந்துறை 4 ஆம் குறிச்சியைச் சேர்ந்த மர்ஹும்களான மீராசாஹிப் அலியார், சுலைமா லெப்பை அவ்வா உம்மா தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தேன். தற்போது சம்மாந்துறை விளினையடி - 01, மலயார் வீதியில் ஹாஜியானி ஆதம்பாவா சபூரியத்தும்மா என்பவரை மணமுடித்து அங்கே குடிபதியாய் வாழ்ந்து வருகிறேன். 

1970 இல் ஊற்று எனும் கையெழுத்துப் பத்திரிகையில் எழுத ஆரம்பித்த என் இலக்கியப் பயணம் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தநாளில் வெளிவந்து கொண்டிருந்த தினபதி, சிந்தாமணி எனும் பத்திரிகைகளில் என் கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தப் பத்திரிகைகளில் கவிதை வரவேண்டுமெனில் அந்நாட்களில் பிரபல்யமான கவிஞர்களான நீலாவணன், பாண்டியூரான், எம்.ஏ. நுஃமான், அண்ணல், ஈழமேகம், பக்கீர்த்தம்பி ஆசிரியர் போன்றோர்களது சிபாரிசுடன் தினபதி கவிதா மண்டல கூப்பனையும் இணைத்து அனுப்பி வைத்தால் மட்டுமே கவிதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகும். இன்றைய நிலையோ வேறு.


உங்களது கல்லூரிக் காலம் மற்றும் தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?

சம்மாந்துறை வீரமுனை - 1 மெதடிஸ்த மிசன் தற்போது தாருல் உலூம் என்று அழைக்கப்படும் பாடசாலையில் ஆரம்பித்த எனது கல்விப் பயணம் சம்மாந்துறை அரசினர் தேசிய பாடசாலையில் முற்றுப்பெற்றது. தந்தை மரணித்ததன் காரணமாக மேற்கொண்டு தனது கல்விப் பயணத்தைத் தொடர முடியவில்லை, குடும்பக் கஷ்டம் காரணமாக சிறு வியாபாரம் செய்தேன், அந்தநேரம் கிழக்கிலங்கை கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனம் கொள்வனவுக் கிளை சம்மாந்துறையில் ஆரம்பித்து இயங்கிக்கொண்டிருந்தது, அதில் உதவிக் கழஞ்சியப் பொறுப்பாளராக சுமார் 16 வருடங்கள் பணி புரிந்தேன், அந்தநேரம் கிழக்கிலங்கையில் யுத்த மேகம் சூழ்ந்தது. அதனால் அப்பணியிலிருந்து விலகிவிட்டேன். அதன்காரணமாக ஒரு தொகைப் பணம் கிடைத்தது அதைக்கொண்டு விவசாயம் செய்தேன். தற்போது ஓய்வு நிலையிலுள்ளேன்.


இலக்கியத் துறை அதிலும் கவிதைத் துறையில் உங்களுக்கு நாட்டம் ஏற்படக் காரணம் என்ன?

நான் மாணவனாய் இருக்கும் போது எங்கள் வகுப்புப் பாடப் புத்தகத்தில் பாரதியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோரின் கவிதைகள் எங்கள் பாடல் புத்தகத்தில் இருக்கும். அவற்றை சிறப்பாகப் படிப்பித்து தருவார்கள். நானும் சுவைத்துப் படிப்பேன். அந்தச் சுவையின் உந்துதலின் காரணமாக கலை மன்றங்கள், பள்ளிக்கூட கலை நிகழ்ச்சிகளில் கவிதைகளை எழுதி வாசிப்பேன். நண்பர்கள் என்னை உற்சாகப்படுத்துவார்கள். எங்கள் வகுப்பு ஆசிரியை சுந்தரி என்னை தட்டிக்கொடுத்துப் பாராட்டுவார். அதிலிருந்து கையெழுத்துப் பத்திரிகைகள், மாதாந்த சஞ்சிகைகளில் ஆரம்பித்த என் இலக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என் ஓய்வு நேரங்களை புத்தகம் வாசிப்பதிலும், எழுதுவதிலும் பயன்படுத்துவேன்.


உங்களது கவிதைத் துறை ஈடுபாட்டுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் குறித்து?

ஈழமேகம் பக்கீர்த்தம்பி ஆசிரியர், கலாபூஷணம் சம்மாந்துறை அஸீஸ், இறையருட் கவிஞர் இப்றாகீம் போன்றோரின் உற்சாகம்தான் என்னைக் கவிதைத் துறையில் ஈடுபட வைத்தது. அத்துடன் நான் வாழ்க்கையில் கண்டு, அனுபவித்த விடயங்களை வெளிக்கொணரும் வேட்கையின் வெளிப்பாடாகவே மேற்சொன்ன கவிஞர்களின் ஆசீர்வாதத்தினால் கவி சொல்லக் களம் புகுந்தேன்.


உங்களுக்குள் கவிதைகள் மற்றும் படைப்புகள் எவ்வாறு கருக்கொண்டு உருப்பெருகின்றன?

கவிதைகள் தாமாக உருவாவதில்லை, அவை கவிஞனின் உள்ளத்தில் ஊற்றெடுத்து வெள்ளமென பீறிட்டுப் பாய்வனவாகும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அவை கருக்கட்டி, வளர்ந்து, பிரசவிக்கும். கண் எதிரில் காணும் காட்சிகள் மனதில் பதியும். அவையே கவிதைக்கு கருவாக அமையும். அதை விடுத்து கவிதை என்று கூறிக்கொன்று வசனங்களை துண்டாடி, நிரல் நிரலாக்கி, பொறுக்கி எடுத்து, கவிதையா? வசனமா? என்று கணிக்க முடியாத அளவிற்கு இன்றைய தமிழிலக்கியம் சென்று கொண்டிருப்பதை கண்ணுற்று, என் கவிதைகள் மூலம் மனநிறைவோடு இலக்கியத் தொண்டாற்றி இன்புறுகிறேன்.


உங்களது முதலாவது நூல் வெளியீடான "புனல் தாயின் பயணம்" கவிதை நூல் பற்றியும் அதில் உள்ள கருப்பொருட்கள் பற்றியும் என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?


பொதுவாக எனது கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்களை நோக்குமிடத்து ஆன்மீகக் கவிதைகள், அகம் சார்ந்த கவிதைகள், சமூகம் சார்ந்த கவிதைகள், சமூகத்தில் மலிந்து கிடக்கும் அனாச்சாரங்களை வெளிக்கொணரும் கவிதைகள், வித்தைகளை இச்சமூகம் நோக்கும் விதம், முதுமையடைந்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் யுக புரிசர்களைப் பற்றியதான சாடல் கவிதைகள் எனப் பல்வேறுபட்ட சமூக பிரக்ஞையுடனான கவிதைகளை சுவாரசியமாகவும், விழிப்புணர்வூட்டும் விதமாகவும் படைத்துள்ளேன். நான் விரிவாக இதுபற்றிக் கூறுவதைவிட வாசகர்கள் அவர்களாக எனது புனல் தாயின் பயணம் என்ற எனது கவிதை நூலை நுகர்ந்து இன்புறுவதே கூடுதல் சிறப்பு என நினைக்கின்றேன்.


உங்களது முதலாவது கவிதைப் படைப்பான நூலுக்கு "புனல் தாயின் பயணம்" என்கின்ற தலைப்பினை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?

கால நேர சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நூலின் தலைப்பை உருவாக்கியுள்ளேன், 1970 களில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை எங்களது கிராமத்தில் உள் நுழையவில்லை. ஆகவே 3 அல்லது 4 மைல்களுக்கு அப்பால் சென்று "பூவலில்" இருந்து தண்ணீர் சுமந்து வரவேண்டும், மழை பெய்தால் செழிப்பையும் அன்றேல் பொட்டல் நிலமாய் கானல் நீரும் எங்களூரில் தெரியும், ஐம்பெரும் பூதங்களில் ஒன்றுதான் நீர். அது இன்றேல் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது என்பது யதார்த்தம். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் நீரிலிருந்தே உற்பத்தியாகின்றது என்பதும் உண்மை. ஆகவே இப்பிரபஞ்சமானது புனல் (நீர்) என்கின்ற தாயுடன் பின்னிப் பிணைந்து பயணிப்பதால் "புனல் தாயின் பயணம்" எனப் பெயரிட்டு விரவிக் கிடக்கும் என் அனுபவங்களைக் கவிதைகளாக வடித்துள்ளேன்.


கொரோனா இடர் காலங்களில் நீங்கள் எழுதிய கவிதைகள் எப்படி இருந்தது?

கொரோனா பேரிடர் காலங்களில் மற்றைய நாட்களைவிட மனக் கொந்தளிப்பு, பதற்றம் என்பன உச்சத்தைக் கொண்டிருந்தது. காரணம், கொடிய தொற்று நோய் எமக்கோ அல்லது எம்மவருக்கோ என்கின்ற பதட்டம் உயர்ந்து செல்லும். பொருள் விலைவாசி, பொருள் தட்டுப்பாடு போன்றவற்றினால் செய்வதறியாது துடி துடித்துப் போனதினால் ஏற்பட்ட வெளிப்பாடாக பல கவிதைகளை வடிக்க முடிந்தது. மேலும் கொரோனா பேரிடரானது அலை அலையாக மக்களை காவுகொண்டு சென்றது. முதலாவது அலையைவிட இரண்டாவது அலையினால் அதிகூடுதலான மனித இறப்பு பேரவலமாகக் காணப்பட்டதின் விளைவாக மன அழுத்தத்தினால் சாதாரண காலங்களைவிட இந்த பேரிடர் காலங்களில் அதிகமான மனக் கிடக்கைகளை கவிதைகளாக வெளிக்கொணர்ந்து பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். அப்பத்திரிகைகளும் எனது ஆக்கங்களைப் பிரசுரித்திருந்தன.


உங்கள் நூல் வெளியீட்டிற்கு ஊக்கமாய் இருந்து உதவியவர்களைப் பற்றிக் கூறுங்கள்?

எனது நூலினை நூலுருவாக்கம் செய்ய பலதரப்பட்டவர்கள் பல வழிகளில் உதவினர். அதில் குறிப்பாக சொல்லும் போது எனது பாரியார் சபூரியத்தும்மா அவர்களுடன் சம்மாந்துறை மண்பதியின் கவிஞர் சந்தக்கவி அச்சி முகம்மட், எனது மகன்களான ஜுனைதீன், சலாஹுத்தீன், நஜிமுத்தீன், ஜலாலுத்தீன், இமாமுத்தீன், சிறாஜுத்தீன் போன்றோருடன் பேரன் அஸ்றிப், சந்தக்கவி அச்சி முகம்மட் அவர்களின் பாரியார் இர்பானா பானு, எனது மகள் சித்தி றைஹானா போன்றோரை இந்த நேரத்தில் நன்றியுடண் நினைவுகூராமல் கடந்து செல்ல முடியாது.


கவியரங்குகளில் கலந்து கொண்ட அனுபவங்கள் உண்டா? கவியரங்கம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பல கவியரங்குகளில் கலந்து கொண்டுள்ளேன், அதில் கலந்து கொள்வதால் கவித்துவம் மெருகேறும். கவிஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும். களக்கூடங்கள், இலக்கிய உலகம் மிக விசாலமானதும், ஆழம்மிக்கதும், இரசனையுள்ளதுமாகும். எவ்வளவு அள்ளினாலும் தாகம் தணியாது இவையனைத்தும் கவியரங்குகளில் கலந்துகொள்வதால் ஏற்படும் சிறப்புக்களாகும். மேலும் கவியரங்குகளில் கவிபாடுவதன் மூலம் தனது கருத்துக்களையும், மனக் கிடக்கைகளுக்கு புடம் போட்டு வெளிக்கொணருவதன் மூலம் பல சான்றோர்கள், மூத்த கவிஞர்களின் பாராட்டினையும், எனது கவித்துவத்தில் உள்ள குறை நிறைகளையும் இனங்காண வாய்ப்புக் கிடைக்கிறது. இவ்வாறு இன்னும் எத்தனையோ நன்மைகள் உள்ளன. விரிவஞ்சி சுருங்கக்கூறி இருக்குறேன்.


பல்வேறு சிக்கல்களோடும் பிரச்சினைகளோடும் அல்லல்படும் தற்கால சமுதாயத்தினர் பற்றி உங்கள் கவிதைகள் பேசியிருக்கிறதா?

விலைவாசி அதிகரித்து துன்பியலில் மக்கள் துயரடையும் போது, பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு பொட்டிக் கடைகளிலும் பலசரக்குக் கடைகளிலும், டொபி என்ற பெயரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கயவர்களைப் பற்றியும், ஊக்கமருந்தென்று அருந்தி பேயாட்டம் ஆடி ஏழு வயதும் தெரியாது எழுபது வயதும் புரியாது பெண்களைத் துன்புறுத்தும் பிணந்தின்னிகளைப் பற்றியும், குடும்பஸ்தவராயிருந்தும் கோர மனம் கொண்டவர்களைப் பற்றியும் எனது கவிதை வரிகள் மூலம் சாட்டையடி வழங்கியுள்ளேன்.


இன்று உலகம் புதுக்கவிதைக்கு மாறிக்கொண்டிருக்கிறதே.. இதுகுறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்?

உலகின் உணர்வூறும் இடமெல்லாம் தமிழின் அமுதூற கவிதோய்த்து மொழிகொண்டு படைப்பவன் எவனாயிருந்தாலும் அவனை மதிப்பவன் நான். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் எனும் இடைவெளிக்குள் கவிதையை பகுத்துக் பார்க்க விருப்பமற்றவன். இரண்டுமே தரமுள்ளவைகள்தான். மனங்களைத் தடவுகின்ற எந்தக் கவிதையுமே என் பாராட்டுக்கு உரியவைகள்தான்.


தமிழ் இலக்கியப் பரப்பில் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தேவை உணரப்படுகிறதா?

தமிழ் இலக்கியப் பரப்பு என்பது பரந்து, விரிந்த ஓர் பூங்காவனம் போன்றது. அந்தப் பூங்காவனத்தில் ஓர் அங்கமான கவிதை என்கின்ற ஓர் பூஞ்செடிக்கு, மொழிபெயர்ப்புக் கவிதைகளான பிறமொழிக் கவிதைகள் உரமாக, ஊக்கமாக அமையும் எனில் அதனை ஆதரித்து அங்கீகரிப்பதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். மேலும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் அந்தக் கவித்துவத்திலுள்ள நுணுக்கங்களை உள்வாங்கி தமிழ் இலக்கியப் பரப்பை செம்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எமது இலக்கியங்களை பிற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வதன் மூலம் சிறந்த உலகத்தரமான இலக்கியங்களை குறிப்பாக கவிதைகளை உருவாக்குவதன் மூலம் கவிச் சுவையினைக் கரை கடந்து சுவைக்க முடியும் என்பது எனது திண்ணமாகும்.


உங்களது கவிதைகளில் பெண்களின் பிரச்சினைகள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

கூட்டுக் கிளிகள் போல் வாழும் பெண்கள் சீதனக் கொடுமையால் உழைக்க வெளிநாடு செல்கிறார்களே! புது உலகம் படைப்போம் என்பார்கள். படிக்கும் போது, படித்து முடித்து உத்தியோகம் கிடைத்துவிட்டால் கல்யாணச் சந்தையில் சீதனம் எனும் அடிமைச் சாசனம் பெற்று சென்றுவிடுவார்கள். விண்ணில் மனிதன் செல்வதைக் கண்டு ஆச்சரியம் அடையும் மனிதன், மண்ணில் மாதர் எனும் மாணிக்கங்கள் முதுமையடைந்து மூலையில் முடங்குவது ஆச்சரியமில்லையா? விதவைக்கு வாழ்வில்லையா? கணவன் மரணித்துவிட்டால் அவள் வாழ்வு கருகி விட்டதா?  போன்ற கேள்விக் கணைகளுடன் பல கவிதைகள் வடித்துள்ளேன்.


கவிதைத் துறை தவிர்த்து உங்களது ஏனைய கலையிலக்கியப் பங்களிப்புகள் தொடர்பாகக் கூற முடியுமா?

தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகை சஞ்சிகைகளில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்தன, |முதலாளி', "தப்பியவர்கள்" எனும் தலைப்பில் எனது சிறுகதைகளும் தினகரனில் யுத்த காலச் சூழலில் அகதிகள், விடிவைத் தேடி என்ற சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள் அனுப்பியுள்ளேன். அவற்றில் பத்திரிகைகள் பிரசுரித்து, எனது பார்வைக்கு எட்டி வாசிக்கக் கிடைத்தது இவைகள்தான்.


இலக்கிய உலகில் ஏற்பட்ட மறக்க முடியாத ஏதாவது அனுபவம் குறித்து?

சம்மாந்துறை அப்துல் மஜீத்  மண்டபத்தில் 2019.03.09 அன்று நாவலர் ஈழமேகம் பக்கீர் தம்பி ஞாபகார்த்த கவியரங்கம் தமிழா ஊடக வலையமைப்பினால் நடைபெற்றது. அக்கவியரங்கில் என் இலக்கியச் செயற்பாட்டிற்காக கவிவேந்தர் வித்தியாசாகர் அவர்களால் "இலக்கிய முரசு" எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டேன். அது எனது மறக்க முடியாத அனுபவமாகக் கருதுகிறேன்.


உங்களது கலை இலக்கிய மற்றும் கவிதைத் திறமைகளுக்கு இதுவரை கிடைத்த வெற்றிகளையும், பாராட்டுகளையும், விருதுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

• 2017.12.28 அன்று சம்மாந்துறை பிரதேச செயலக, கலாசார அதிகார சபையினால் "கலைஞர் சுவதம்" எனும் விருது கிடைத்தது, 

• 2018.04.21 அன்று லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் சிறிலங்கா, இமயம் கலைக்கூட மன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடாத்திய திறமைகளுக்கான தேடல் விருது விழாவில் "சமூகதீபம்", "சமூகஜோதி", "கலைமுத்து", "கலைத்தீபம்" பட்டமும், "சமூகமாமணி" எனும் விருதும் கிடைத்தது. 

• 2019.03.09 இல் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி நடாத்திய கவியரங்கத்தில் கலந்து கவிதை வாசித்ததற்காக தமிழா ஊடக வலையமைப்பினால் கவிவேந்தர் வித்தியாசாகர் அவர்களால் "இலக்கிய முரசு" எனும் பட்டமும், விருதும் கிடைத்தது.

இவற்றுடன் இன்னும் பல விருதுகள் எனக்குக் கிடைத்துள்ளன.


எதிர்காலத்தில் வெளிவரவுள்ள உங்கள் நூல்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

"இரட்சிக்கும் இரு துளிகள்" எனும் ஆன்மீகக் கவிதைத் தொகுதி ஒன்று அச்சேறும் தருவாயில் இருந்தும், நாளுக்கு நாள் உச்சமாகும் விலைவாசியின் காரணமாகத் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது வெளியானதும் "உதிரும் நாள் வரை" எனும் சமூகக் கவிதைத் தொகுதியொன்றையும் வெளியாக்க எண்ணியுள்ளேன்.


இந்த நேர்காணலின் நிறைவாக எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஒரு படைப்பாளி என்பவன் முதலில் சமூக அக்கறையும், பொது மனிதர்கள் ஏற்கத்தக்க பண்பான அரிய குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். இந்த உலகம் ஒரு பூங்கா. அங்கே நதிகளெல்லாம் சங்கமித்து ஒற்றுமையைக் காட்டி மகிழ்கின்றன, இவைகளுக்கு மத்தியில்தான் நீர், நிலம், காற்று, வெளிச்சத்தை உடுத்தியவனாக ஒரு கவிஞன் ஆழப் பார்வையோடு அலைந்து திரிந்து அத்தனை அசைவுகளையும் படம்பிடித்து ஒரு கவிதைக்குள் அடக்கி வைக்கின்றான் கவிஞன். எனவே அதிகபட்சமான மனித நேயத்துடன் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எல்லோரும் சிறந்த முறையில் தனது பங்களிப்பு
க்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் என்னை இந்த நேர்காணலில் இணைத்துக்கொண்ட உங்களுக்கும், செந்தூரம் இதழாசிரியர் மற்றும் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும், கலைஞர்களுக்கும், அன்பான வாசகர்களுக்கும் இதயப்பூர்வமாக அகம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!

                                           

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment