Sunday, September 14, 2025

51. தேசிய கலைஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜாவுடனான நேர்காணல்

தேசிய கலைஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜாவுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

 

உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

நான் 'காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா' என்ற பெயரில் எழுதி வரும் ஓர் எழுத்தாளர். ஊவா மாகாணத்தில் நமுனுகுல அடிவாரத்தில் அமைந்துள்ள கோணக்கலை பசறை காவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான், குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. எனது தகப்பனார் காலஞ்சென்ற வேலு பழனியாண்டி, தாயார் கருப்பையா தங்கம்மா ஆவார். எனது குடும்பத்தில் மனைவி, மகன், மகள் என நாம் இருவர், நமக்கு இருவராய் வாழ்ந்து வருகின்றோம். சமாதான நீதவானாகவும், தேசிய கலைஞராகவும் செயற்படுவதோடு இலக்கியத் துறையில் முழுமையான ஆர்வத்துடன் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றேன். ஓய்வு நேரங்களில் அதிகமான நேரத்தை இலக்கியத் துறைக்காகவே அர்ப்பணித்து, கல்விச்சாலைகளில் இலவசமாக கவிதைப் பட்டறைகளையும் நடாத்தி வருகின்றேன்.


உங்களது பாடசாலைக் காலம், தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை முதலாம் தரம் தொடக்கம் சாதாரணம் தரம் வரை (1985 - 1995) பதினொரு ஆண்டுகள் கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும், ஈராண்டுகள் உயர்தர கற்கையை (1996 - 1998) பதுளை பாரதி கல்லூரியிலும் பயின்றேன். 1998 ஆம் ஆண்டு முதல் நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்தில் இணைந்து கனவரெல்ல தொழிற்சாலையில் தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தருக்கான பயிற்சியைப் பெற்று தொடர்ந்து கோணக்கலை, கினளன் போன்ற தோட்டங்களில் பணிபுரிந்து பிறகு பலாங்கொட பெருந்தோட்ட நிறுவனத்தில் இணைந்து தெளிவத்தை தோட்டத்தில் எட்டு வருடங்களும் சுமார் மூன்றரை வருடங்களாக தற்போது ஸ்பிறிங்வெளி தோட்டத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றேன். அத்தோடு பல சவால்களுக்கு மத்தியில் எதற்கும் துணிந்தவனாக தொழிலையும் செய்துகொண்டு எழுத்து எனும் ஆயுதத்தால் எல்லோர் மனங்களையும் வென்று வெற்றிநடை போட்டு வருகின்றேன்.


உங்களிடம் வாசிப்புப் பழக்கம் எப்போதிருந்து ஆரம்பித்தது? கவிதைத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

வாசிப்பு பழக்கமானது பாடசாலைக் காலத்திலே ஆரம்பமானது. கல்லூரியில் நடைபெறுகின்ற  போட்டிகளான கவிதை கட்டுரை, சிறுகதை, வில்லுப்பாட்டு, வினாவிடை, அறிவிப்பு என எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிக்கனி சுவைக்க வாசிப்பு ஒரு உந்துசக்தியாக அமைந்தது. அத்தோடு பாடசாலையின் இலக்கிய மன்றத் தலைவராகவும், மாணவத் தலைவராகவும் செயற்பட்டதன் காரணத்தால் எல்லா விதமான பொது அறிவு விடயங்களையும் தேடிப் படிக்க வேண்டிய ஆர்வமும் கடப்பாடும் எனக்கிருந்தது. 


உயர் தரம் கலைப் பிரிவில் கற்றபோது திறந்த கவிதைப் போட்டியில் பங்கெடுத்து மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு சிலகாலம் தொழில் நிமித்தமாக கவிதை எழுத நேரம் கிடைக்காததால் காலங்கள் கடந்தோடின. ஒருநாள் எதேச்சையாக சூரியன் வானொலிக்கு அந்தநாள் ஞாபகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவிதை வாசித்தபோது உங்களுக்கு கவிநயமும், கவிதை எழுதுகின்ற ஆற்றலும் இருக்கிறது என்ற விடயத்தை வலியுறுத்திய முகுந்தன் சுந்தரலிங்கம் அவர்கள் எனது கவித் திறமையை வெளிக்கொணர்ந்தார்.

அன்று முதல் கவிதை எனும் அழகிய மலரின் நறுமணத்தை சுவாசிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து மடுல்சீமை சதாசிவம் அவர்கள், கவிஞர் நீலாபாலனின் 'கடலோரத் தென்னை மரம்' என்ற நூல் அறிமுக விழாவில் வாழ்த்துப்பா பாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். இதுவும் எனக்குள் இருந்த கவிதை எழுதுகின்ற ஆற்றலை மெருகேற்றிக்கொள்ள நல்லவொரு சந்தர்ப்பமாக அமைந்தது.


ஆரம்பத்தில் உங்களை ஈர்த்த படைப்புகள் எவையெவை? எழுத்தாளர்கள் யார், யார்?

மடுல்சீமை சதாசிவம் அவர்கள் எழுதி, ஆடித்திருவிழா கலை விழாவில் வாசித்த ஆன்மீகக் கவிதை, கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'அர்த்தமுள்ள இந்துமதம்', கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல', கவிஞர் மதன் சதாசிவம் வெளியிட்ட 'கவிஞன்' காலாண்டிதழ், மறைந்த கவிஞர் நீலாபாலன் எழுதிய 'கடலோரத் தென்னை மரம்', கவிஞர் நா. ஜெயபாலன் எழுதிய 'வெளிச்சம் காணாத விழிகள்', மூதூர் அருந்தமிழ் ஆசான் திரு. என். வஸ்தியான் நீக்கொலாஸ் அவர்கள் பாரதியாரைப் பற்றி எழுதிய 'நான் கண்ட பாரதி', காளமேகப்புலவர் எழுதிய சிலேடைக் கவிதைகள், கவிஞர் மலையரசன் கோவிந்தராஜன் எழுதிய 'மரபுத்தேன்' போன்றவை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


உங்களது கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

'டெங்குவை ஒழிப்போம்' என்ற தலைப்பில் என்னால் எழுதப்பட்ட கவிதை நல்ல வரவேற்பைப் பெற்றது. பட்டித்தொட்டியெல்லாம் பாடல்களைக் கேட்பது போல இந்த டெங்கு கவிதைக்கு அத்தனை வரவேற்பு. அத்தோடு ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் என்ற பெரு நூலிலும், உதய சூரியன் பத்திரிகையிலும், உயர்நாடு மற்றும் கவிஞன் காலாண்டிதழிலும், பிரசுரமாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு 'எனது ஊர்' என்ற தலைப்பில் எழுதிய கவிதையும் 'எரிந்தது நூலகமா இல்லை தாயகம்' என்ற தலைப்பில் எழுதிய கவிதையும் கவித்தேனி விருதைப் பெற்றுத் தந்தது. 'புதுக்கவிதை' என்ற தலைப்பிலான கவிதையும் இன்னும் பல கவிதைகளும் சிறியவர் முதியவர், பாமரர் பண்டிதர் என எல்லோரது மனதையும் ஈர்த்தது. தமிழகம், அவுஸ்த்திரேலியா, ஜேர்மனி, பிரான்சு, போன்ற நாட்டுப் படைப்பாளிகளின் ஆதரவுகளும், வாழ்த்துகளும், வரவேற்புகளும் என்று எனக்குக் கிடைத்தவை எண்ணிலடங்காதவையாகும்.


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துகள் உங்களை அதிகமாக கவர்;ந்ததாகக் கருதுகின்றீர்கள்?

ஆம். வாசிப்பதுண்டு. எப்போதுமே காளமேகப்புலவரின் சிலேடைக் கவிதைகளையே அதிகம் வாசிப்பது எனது வழக்கம். அத்தோடு கவிஞர்களான பாரதியார், மு. மேத்தா, கண்ணதாசன், வைரமுத்து, வாலி, யுகபாரதி, பிறைசூடன், அப்துல் ரகுமான், தாமரை, நா. முத்துக்குமார், சிநேகன் மற்றும் ஏனைய எல்லா நாட்டு முகநூல் கவிஞர்களது கவிதைகளையும் வாசிப்பேன்.


நீங்கள் வெளியிட்ட 'எண்ணங்களின் வண்ணங்கள்' கவிதை நூல் வெளியீடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற வள்ளுவனின் வாக்கினைப் போலவும், அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழியைப் போலவும் நான் கண்ட இலட்சியக் கனவு நிறைவேற பதினொரு ஆண்டுகள் தேவைப்பட்டன.

எனது அக்காவான கிருஷ்ண லீலாவின் பிறந்தநாளில் புத்தகத்தை வெளியீடு செய்ததில் அளவற்ற பேரானந்தம். எனது பரம்பரையில் பிறந்த முதல் கவிக் குழந்தையே 'எண்ணங்களின் வண்ணங்கள்' எனும் கவிதைத் தொகுதி. இப்பனுவலானது அன்னையின் அகங்குளிர தமிழ் ஆர்வலர்கள், கல்விமான்கள், கலையுறவுகள், அதிபர்கள், மாணவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வர்த்தக பிரமுகர்கள், நலன் விரும்பிகள், சான்றோர்கள் கூடிய பசறை நூலக கேட்போர் கூடத்தில் 2023.08.26 அன்று எனது மற்றும் தாயின் திருகரங்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அரவிந்தகுமார் ஐயா அவர்களும், விசேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், கௌரவ அதிதிகள், விசேட அதிதிகள், சமாதான நீதவான்கள், சகபாடிகள், பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் காவத்தையூர், மடுல்சீமையூர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்தோடு இந்நிகழ்வானது மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, அறிமுகவுரை, குழுநடனம், பாடல், பிரதம அதிதியுரை, சிறப்புரை, வாழ்த்துரை, நூலாசிரியருரை, நன்றியுரை என விழா மேடையை அலங்கரித்தன.


இந்தத் தலைப்பைச் சூட்டி, உங்கள் கவிதை நூலை அழகுபடுத்தக் காரணம் என்ன?

உண்மையிலே சூழலின் பிரதிபலிப்பே உண்மைக் கவிஞனின் படைப்பாகும். அதற்கமைய எந்தவொரு மனிதனதும் எண்ணத்திலே தோன்றுகின்ற இயற்கையியல் வாழ்வியலோடு கலந்த சந்தோச மற்றும் கவலை என பலதரப்பட்ட, தாக்கங்கள் உணர்வுகளால் மட்டுமே கவிதை எனும் அழகிய கரு உருவாகிறது. எனவே அதனை பிரதிபலிக்கும் முகமாகவே 'எண்ணங்களின் வண்ணங்கள்' எனும் அழகிய தலைப்பை இந்நூலுக்கு சூட்டிடக் காரணமாக அமைந்தது. எண்ணத்திலே தோன்றுகின்ற சிந்தனைகளே பல வடிவில் எழுத்துகளாக உயிர் பெற்று  கவிதைகளாக மலர்கின்றன.


இந்தக் கவிதை நூலில் பொதிந்துள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடலாமே?

பொதுவாக எல்லா விடயங்களும் சார்ந்த கருப்பொருட்கள் இந்நூலிலே வலம் வருகின்றன. இயற்கை, அன்பு, நட்பு, காதல், எழுச்சி, மலையக மாந்தரின் மனக்குமுறல், அன்னை, தந்தை பாசம், ஆசிரியர்கள் பணி, குடும்ப உறவுகளின் பாசம், பிறந்து வாழ்ந்த எனது ஊர், தொழிலாளர் நிலை, பூக்கள் தூது விடுதல், நிலவு, மனிதம், நாடு, மொழி, நிறம் மாறும் மனிதர்கள், உலக இயல்பு, மதம், ஆன்மீகம், மனித நேயம், உரிமைகோரல் என்று இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கிய வகையிலான கருப்பொருட்களைக் கொண்டே எனது 'எண்ணங்களின் வண்ணங்கள்' என்ற இந்தக் கன்னிக் கவிதை நூலில் உள்ள கவிதைகள் யாவும் அமைந்துள்ளன.



உங்களது அண்மைய வெளியீடான அருகம்புல்லில் பனித்துளிகள் என்ற ஹைக்கூ நூல் குறித்துக் கூறுங்கள்?

தமிழகத்தில் அச்சிடப்பட்ட எனது இரண்டாவது நூலான 'அருகம்புல்லில் பனித்துளிகள்' என்ற ஹைக்கூ நூல் சர்வதேச ஹைக்கூ தினத்தை முன்னிட்டு 2025 மே மாதம் 11 ஆம் திகதி இனிய நந்தவனம் மாத இதழ் மற்றும் தமிழ் ஹைக்கூ கவிதையாளர்;கள் இயக்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்து, இந்தியாவிலிருந்து வருகை தந்த இலக்கிய அதிதிகளுக்கு மத்தியில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பிரம்மாண்டமாக வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூலின் முதற்பிரதியை ஆயிரம் முதற் பிரதிகளுக்கும் மேலாகப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பெற்று சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நீங்கள் கவிதை எழுதுவதற்கான சந்தர்ப்பங்களை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றீர்கள்?

ஒரு தனிமனித வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் இந்த கேள்விக்கான விடை பெரும் அதிர்ச்சியையும் அடைவு மட்டத்தை அடைய மேற்கொள்கின்ற முயற்சியையும் திறமையையும் திரும்பிப் பார்க்கும் என்றால் மிகையாகாது.

பல இயந்திர சத்தங்களுக்கும், நிர்வாக வேலைப் பழுவுக்கும், பாமர மக்கள் வாழும் சமூகத்திற்கும், மத்தியில் கவிதை படைப்பதென்பது ஒரு கடினமான காரியமென்பது யாவரும் அறிந்ததே. அத்தோடு என்னிடம் இதுபற்றி வினா தொடுத்தவர்களுமுண்டு. இரவுப் பணி முடித்து வீடு திரும்பியதும் கொஞ்ச நேரம் விழிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கவிதைகளை எழுதுவேன். பகல் நேர வேலை முடிந்த பின்னர் சுணங்கிச் சயனித்து வைகறையில் எழுந்து கவிதைகளை எழுதுவது, ஓய்வு நேரங்களில் அல்லது உந்துருளி, பேருந்துகளில் பயணம் செய்யும்போது காட்சிகளைக் கண்டதும் மன ஏட்டிலே கவிதைகளைப் பதித்துகொள்வது, என எந்த நேரத்தில் என்றாலும் கவிதைகளை எழுதுவது, புத்தகங்கள் வாசிப்பது என தமிழ் சுவாசக் காற்று வியாபித்து நகர்கிறது.


ஒரு கவிதையின் மொழியானது எப்படியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

எண்ணத்திலே தோன்றிய எழுத்துகளை மூளையின் வழியே ஒத்திகைப் பார்த்து, மானுடம் புரியும்படி வடிப்பதே பான்மைமிகு படைப்பாகும். பாமர மற்றும் பண்டிதர்கள் எல்லோரும் எளிய, இனிய முறையில் விளங்கும் வண்ணம் மொழியினைக் கையாண்டு படைப்புகளை வெளிக்கொணர வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.


நீங்கள் எதற்காக எழுதுகின்றீர்கள்? எழுதுவது தொடர்பில் விசேட நோக்கமொன்று உள்ளதா?

எழுதுவதன் மூலம் நமக்கு நல்ல மூளை வளர்ச்சி, அறிவாற்றல், நற்சிந்தனை, அறிவுத் திறன் போன்றவை வளர்ச்சியடைவதோடு புதிய விடயங்களைக் கற்கவும் பல பன்முக அனுகூலங்களை பெற்றுக்கொள்ளவும் முடிகிறது. அத்தோடு எழுதுவதன் விசேட நோக்கமென்று சொல்வதைக் காட்டிலும் சமூகவியல் மாற்றத்தை கொண்டு வர முடியுமென்பது எனது உறுதியான நம்பிக்கை.

எழுதுவதோடு மட்டுமல்லாது அதனை மாணவச் செல்வங்களுக்கு கவிதைப் பட்டறைகள், மேடைப் பேச்சுகள் மூலம் ஊட்டும் போது அம்மாணவர்களுக்கு முதலில் எழுதுவதற்காக சிந்தனை நரம்புகள் தூண்டப்படுகிறது. அதன்மூலம் அவர்களிடையே சிந்திக்கும் ஆற்றலும் ஆர்வமும் கூடுகிறது. அத்தோடு நல்ல சிந்தனையாளர்களாக மாறி நல்ல படைப்புகளை மக்களுக்கும் வழங்க வேண்டுமென்ற ஆணிவேர் ஊன்றத் தொடங்குகிறது.


பல்வகையான இலக்கியப் போக்குகள் குறித்து காலத்துக் காலம் தர்க்கங்கள் அல்லது சாடல்கள் எழுவது வழக்கம். அவை பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

தேவையற்ற தர்க்கங்கள் செய்வதைத் தவறான நகர்வாகவே பார்க்கிறேன். இல்லாத ஒன்றுக்காக இருப்பதைப் போல விதண்டாவாதம் செய்வது ஒருவனது இயலாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை விடுத்து, தட்டிக்கொடுத்துத் தவறுகளை மனதார ஏற்று திருத்துவதற்கான ஆற்றுப்படுத்தலைக் கையாள்வதே சிறப்பு. இப்படியான தர்க்கங்கள் அல்லது சாடல்கள், தோன்றி மறையும் நீர்க்குமிழியைப் போன்றது. அதனைப் பொருட்படுத்தாது தத்தமது படைப்பாற்றல்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஓடையில் ஒதுங்கும் சருகுகளாய் ஒதுக்க்கி நோக்கம் என்ற ஆழியை அடைவதே தலையாய கடமையாகுமெனக் கருதுகின்றேன்.

ஒரு சிலர் மூத்த இலக்கியவாதிகள் என்ற பெயரில் தமிழை விற்று கௌரவ யாசகம் பெறும் இக்கால கட்டத்தில் தமிழின் வளர்ச்சிக்காகவும் தன்னின முன்னேற்றத்திற்காவும் பாடுபட்டு உழைத்து தூங்கிக்கொண்டிருந்த அருகம்புல்லை விடாமுயற்சி எனும் மழையைப் பொழிந்து துளிர்விட காரணமான உள்ளங்களை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி வீழ்த்த நினைக்கும் மானிட நரிகள் திருந்தும் காலம் வெகு சீக்கிரத்தில் மலர வேண்டும். அசுழத்தின் (நாய்க்) குணத்தை அகமதில் நிறுத்திவிட்டு, ஆறறிவு - பகுத்தறிவு உடையவர்களாய் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.


இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில் வாசிப்பு மட்டம் எந்தளவில் இருக்கின்றது என்று நினைக்கின்றீர்கள்?

வாசிப்பு மட்டம் தற்போது குறைவாகத்தான் இருக்கிறது. புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டும், தூண்டுதல் சுரப்பியே ஆகுலத்தில் (கவலையில்) அசதியாக மௌனம் காக்கிறது. எனவே வாசிப்பைத் தூண்டும் படியான செயலமர்வுகள், விழிப்புணர்வுமிக்க நாடகங்கள், பாடல்கள், கவிதைகள் என பலதரப்பட்ட கலைகளுடாக செயற்படுத்த வேண்டும். முகநூல் மற்றும் பற்றியம் (மெசெஞ்ஜர்), புலனம் (வட்ஸ்அப்), வலையொலி (யூடியூப்) ஆகியன மூலமாகவும் வாசிப்பைத் தொடர்கிறார்கள் என்பது கணிப்புகளின் வெளிப்படுத்திய தரவுகளாகும். இலத்திரனியல் வளர்ச்சியின் காரணமாகவே எல்லோரது கவனமும் இதன் பக்கம் திரும்பியுள்ளது.


உங்கள் இலக்கிய வாழ்வில் இதுவரை மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய உள்ளன. அவற்றில் இந்திய வம்சாவளி மக்களாக வாழுகின்ற நாம் தமிழகத்தின் சென்னை இக்சா மையத்தில் உலக ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் நடாத்திய கவியரங்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காக பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கி கௌரவித்த தருணத்தையும் அந்நிகழ்வில் உ. மாதவன் அவர்களின் 'சுகமூட்டிய அந்த நிழல்' என்ற நூலை வெளியீடு செய்து வைத்தமையும் என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாகக் கருதுகின்றேன்.


கவிதைத் துறை தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகின்றீர்கள்?

பாடல்கள் எழுதுவது, இலக்கியம் சார்ந்த நூல்களை வாசிப்பது, தமிழ்த் தின விழா, பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டி போன்றவைகளுக்கு நடுவராகப் பணியாற்றுவது, அறிவிப்பு செய்வது, முக்கிய நிகழ்வுகளுக்கு அதிதியாகச் சென்று சிறப்புரை ஆற்றுவது, இசைக் கச்சேரிகளில் பாடுவது, கவிதைப் பட்டறை நடாத்துவது, விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட சொற்பெருக்காற்றலை வழங்குவது, தமிழ் இலக்கிய மன்றங்களில் செயலராகக் கடைமையாற்றுவது, சமூக நற்பணி மன்றங்களோடு பங்கெடுத்து ஆலோசனை வழங்குவது, புத்தகங்கள் வெளியிடுவோருக்கு பணம் மற்றும் உடல், உள ரீதியாக உதவுவது என்று பல தரப்பட்ட செயற்பாடுகளில் இயங்கி வருகின்றேன்.


நீங்கள் அண்மையில் வாசித்து இரசித்த நூல் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட முடியுமா?

ஆம். தமிழ்மணி மானா மக்கீன் ஐயா அவர்கள் எழுதி, கண்டி கெப்பட்டிபொல நினைவு மண்டத்தில் வெளியீடு செய்த 'பதுளை துங்கிந்த சாரலில் ஒரு ஜில்' என்ற ஆய்வு நூலே நான் கடைசியாக வாசித்த ஆய்வு நூலாகும். இந்நூலுக்கு முதன்முதலில் பதுளை மண்ணிலிருந்து விமர்சனத்தை எழுதி, நூலாசிரியரின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நல்லாசிகளையும் பெற்றதோடு தேசிய கலைஞராக நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கெடுத்தமை என் மனதை நிறைத்த சந்தோசமாக உணர்கின்றேன். இந்த நூல் வெளியீட்டுக்குச் செல்லக் காரணமாக அமைந்தவர் நண்பி, எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஆவார் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.


உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பல தரப்பட்ட கவிதை மற்றும் சிறுகதை நூல்களை வெளியிட வேண்டுமென்ற பெரிய அவா இருக்கிறது. அத்துடன் கவிதைப் பட்டறைகளினூடாக புதிய எழுத்தாளர்களை உருவாக்கி நல்லதொரு சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் சமுதாய, இலக்கிய வட்டத்திற்குத் தந்து கல்விச்சாலையில் மாணவர்களது ஆக்கங்களை நூலாக்கி ஆவணமாக வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.


இதுவரை உங்கள் எண்ணங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டீர்கள். எமது வாசகர்களுக்கும், சக எழுத்தாளர்களுக்கும் விசேடமாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

என் மீது அன்பும் அளவற்ற நேசமும் கொண்ட வாசகர்களே எனது நேர்காணலை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தமைக்கு நன்றியும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும். வாழ்ந்தால் புகழோடு வாழ்க என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க சமூகத்தில் இளைய தலைமுறையினரிடையே காணப்படுகின்ற தீய பழக்கங்களை அகற்றி, வாசிப்புத் திறனை அதிகரித்து நேர்மறை சிந்தனைகள் வழியே பயணிக்க சிறந்த படைப்புகளைத் தருவதோடு காலத்தின் தேவை கருதி புத்தம் புதிய படைப்புகளை வழங்க வேண்டுமென எழுத்தாளர்களாகிய உங்களிடம் விசேடமாகவும் வினயமாகவும் கேட்டுக்கொள்கின்றேன்.


நீங்கள் இதுவரை படித்த படைப்புகள் பலவற்றில் உங்களை மிகவும் பாதித்த படைப்பு எது? ஏன்?

தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இலக்கியத் துறையானது இன்று போல் அன்றும் தடம் பதித்து வந்துள்ளது. இருந்தும் ஒரு சில தவறான குதர்க்க செயற்பாடுகளால் என்னவோ சற்று சரிவை கண்டும் இருக்கிறது. இருந்தும் பதுளை மண்ணில் ஜில் சுல்தான் என்ற ஒரு இலக்கியவாதி 1905 - 1979  ஆம் ஆண்டளவில் வாழ்ந்துள்ளார். அவரைப் பற்றி நம் தமிழ் சமூகம் இதுவரை காலமும் தெரிந்தும் தெரியாததுபோல் அசமந்த போக்கில் வாழ்ந்திருப்பது என் மனதை மிகவும் பாதித்துள்ளது. மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். மதமென்பது அவனவது பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை தொடர்ந்து கொண்டுசெல்ல அன்புநெறி ஆற்றுப்படுத்தல் அவ்வளவே. எனவே இவற்றையெல்லாம் நாம் கடந்து பயணிக்க வேண்டுமென்ற கட்டாயத்திற்கு நிர்ப்பந்தபட்டிருக்கிறோம். எல்லா மத இனத்தவர்களின் இலக்கிய கர்த்தாக்களை மதித்து மனிதநேய மாண்புடன் செயற்படுவோம்.


இறுதியாக வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்..?

எனது நூல் வெளியீட்டின்போது கலந்துகொண்டு சிறப்புப் பிரதிகளை பெற்றுக்கொண்ட இலக்கியவாதிகள், சகபாடிகள், கலைஞர்கள், வர்த்தக பிரமுகர்கள், நண்பர்கள், பெற்றோர், அரசியல்வாதிகள், நலன் விரும்பிகள், மனைவி, குழந்தைகள், எழுத்தாளர்கள், ஆரம்பம் முதல் உயர் தரம் வரை கற்பித்த  ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உற்றார் உறவினர்கள், எல்லோருக்கும் இதயமலர் தூவி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எல்லோரும் அதிகதிகமாக  வாசியுங்கள். எழுதுங்கள். நீங்களும்  ஒருநாள் தூவலைக் கொண்டு எழுத்துகளை தூவும் கவிப்போராளியாக மிளிரலாம். சாதிக்க வேண்டுமென்ற எண்ணமானது ஊற்றெடுத்தாலே சாதனை என்ற  இமயத்தை அடைய முடியும்.

எனது இந்த நேர்காணல் வெளிவரக் காரணமான பன்னூல் மற்றும் பூங்காவனம் சஞ்சிகை ஆசிரியருமாகிய இலக்கியப் போராளியான ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு எனது நன்றிகளைக்  குறிப்பிட்டேயாக வேண்டும். அத்துடன் இந்த நேர்காணலைப் பிரசுரித்து களமமைத்துத் தந்த செந்தூரம் இதழாசிரியருக்கும் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment