கவிஞர் மருதூர் ஜமால்தீன் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களை வாசகர்கள் எப்படியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்?
எம்.எம். ஜமால்தீன் என்ற இயற் பெயரைக் கொண்டவன் நான். தான் சார்ந்த சமூகத்தின் விழிப்புணர்வுக்கான படைப்புகளை தேவையான சந்தரப்பங்களில் சிறந்த கவிதைகளையும், சிறுகதைகளையும் தரும் ஓர் எழுத்தாளனாக, மருதூர் ஜமால்தீன் என்ற எனது நாமத்தையே இன்றுவரை இலக்கிய உலகில் சிறப்பாகப் பதித்து வருகிறேன். இதுவே எனக்கு மனநிறைவு தரும் அறிமுகமாக அமைகிறது.
உங்களுடைய குடும்பப் பின்னனி குறித்து?
அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது எனும் கிராமத்தில் அப்துர் ரஹ்மான் மீரா முகையதீன் இஸ்மா லெவ்வை - உம்மு குல்தூம் ஆகிய பெற்றோரின் ஐந்து பிள்ளைகளில் மூன்றாவதாக நான் பிறந்தேன். ஏறாவூரில் திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளின் தந்தையாக (இருவர் பட்டதாரிகள்) வாழ்ந்து வருகின்றேன்.
உங்களுடைய கல்லூரி வாழ்க்கை பற்றியும், தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?
எனது ஆரம்பக் கல்வி கஃமு சாந்தமருது றியாளுள் ஜன்னாஹ் வித்தியாலயத்திலும் ஆறாம் வகுப்பு தொடக்கம் க.பொ.த. உயர் தரம் வரை கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும் பின்னர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியிலும் கற்று மௌலவியாக வெளியேறினேன்.
ஏறாவூரில் திருமணத்தின் பின் மட்/ ஏறாவூர் அல்அக்ஷா வித்தியாலயத்தில் (தற்போது மாக்கான் மார்க்கார் வித்தியாலயம்) தொண்டர் ஆசிரியராக சில வருடங்கள் கற்பித்து, அதன்பின்னர் ஏறாவூர் அஞ்சல் திணைக்களத்திலும்; எட்டு வருடங்கள் கடமை புரிந்;தேன். பின்னர் தற்போதுவரை ஏறாவூர் வாளியப்பா ஜும்ஆ மஸ்ஜிதில் சுமார் 27 வருடங்களாக இமாமாகக் கடமைபுரிந்து வருகிறேன்.
உங்களுக்குள் இலக்கிய ஆர்வம் எப்படி வந்தது?
வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு என்பதை உலக நியதியாக ஏற்படுத்தி மனிதனை அளவிடும் தீப்பண்புகள் புரையோடிப் போயுள்ள சமூக அமைப்பில் கல்நெஞ்சர்களால் உள்ளத்தாலும், உணர்வாலும், செயலாலும் சிறுவயது முதல் அதிகம் பாதிக்கப்பட்டேன். படித்தவர்கள் முதல், பாமரர் வரை படர்ந்துள்ள இந்நோய்க்கு விடை காண முடியாத நிலையில் நிறைய நூல்கள், இலக்கியம், நாவல்கள் என வாசிக்க ஆரம்பித்தேன். அவற்றின் மூலம் சமூகத்தில் படர்ந்துள்ள இந்தத் தீய பண்புகளைக் களைந்திட முதலில் கவிதைத் துறையைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் பல நல்ல உள்ளங்களையாவது சிந்திக்க வைக்கலாமென்று எண்ணினேன். இறைவனும் அந்த ஆற்றலை எனக்குத் தந்தான். எனது கவிதைகள் அநேக உள்ளங்களைத் தொட்டிருக்கின்றன. எனக்குக் கிடைக்கின்ற வாழ்த்துக்களை இறைவன் எனக்களித்த வெற்றியாகக் கருதுகிறேன்.
எனது சிந்தனையோடு உடன்பாடு கொண்ட சில நண்பர்களின் ஒன்று கூடலும் ஊக்குவிப்பும் கையெழுத்து, றோணியோ சஞ்சிகை வெளியீடுகளும் எனக்கு சிறந்த வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தன என்பேன்.
நீங்கள் முதன் முதலில் கவிதை எழுதிய அனுபவம் பற்றிக் குறிப்பிட முடியுமா?
1983 ஆம் ஆண்டு அது. இந்த இளமைப் பருவக் காலத்தில், சமூக சிந்தனையும், வேட்கையும், அறிவுபூர்வமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, 'சாய்ந்தமருது இஸ்லாமிய இலக்கிய வட்டம்' என்னும் பெயரில் ஓர் இலக்கிய அமைப்பை ஆரம்பித்து, அதனூடாக முதற் கட்டமாக 'அல்ஹுதா' என்ற கையெழுத்துப் பத்திரிகையை மர்ஹும் பன்னூலாசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு ஆரம்பித்தோம். அந்தச் சஞ்சிகையில் நான் எழுதிய 'இஸ்லாத்தின் வழி வாழ்வோம்' என்ற கவிதையினூடாக எனது இலக்கியப் பயணம் ஆரம்பித்தது. அப்பத்திரிகையினூடாக எழுதிய சிலர் இன்று சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்வதனை எமது இலக்கியப் பயணத்திற்கு இறைவன் தந்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? (நூலின் பெயர், வகை, வெளிவந்த ஆண்டு உட்பட)
01. தடயங்கள் - 2008 (கவிதை, புரவலர் புத்தகப் பூங்கா)02. ரமழான் ஸலவாத் - 2010
03. கிழக்கின் பெருவெள்ளக் காவியம் - 2010
04. முஹம்மது (ஸல்) புகழ் மாலை - 2011
05. இஸ்லாமிய கீதங்கள் - 2012
06. தாலாட்டு - 2015
07. பத்ர் யுத்தம் - 2016 (கவிதை)
08. வலிகள் சுமந்த தேசம் - 2017 (கவிதை)
09. தீ நிலம் - 2018 (கவிதை)
10. வல்லூறின் வானம் - 2019 (கவிதை)
11. மனிதம் வாழும் - 2019 (கவிதை, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்)
12. கொறொனா குறுங்காவியம் - 2019
13. திருப்பம் - 2024 (சிறுகதை)
ஆரம்ப காலங்களில் மரபுக் கவிதைகள் மீது இருந்த தீவிரம் இப்போது இருப்பதாகக் கருதுகிறீர்களா?
என்னை ஒரு சிறந்த கவிஞனாக சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியது மரபுக் கவிதைகள்தான். அதனை எழுதுமாறு ஊக்கப்படுத்திப் பாராட்டியவர்களில் குறிப்பாக எனது ஆசான்களான மர்ஹும்களான கலாபூஷணம் யூ.எல். ஆதம்பாவா சேர், கவிச்சுடர் அன்பு முகையதீன் சேர் ஆகியோர்களாவார். மரபுக் கவிதைகளில் இருக்கும் பற்று என்றும் அழியாது. ஆனாலும் நான் புதுக் கவிதைகளையும் அதிகமாக எழுதியுள்ளேன். பொதுவாக நான் கவிதைகள் அதிகம் எழுதிவிட்டேன். தற்போது குறிப்பிட்ட சில சஞ்சிகைகளுக்கு மட்டுமே தொடர்ந்து எழுதுகிறேன்.
உங்களுடைய 'கொறோனா குறுங்காவியம்' பற்றி முக்கியமாக என்ன குறிப்பிட முடியும்?
'கொறோனா' என்னும் புயலில் சிக்குண்டு தத்தளித்தவன் நான். உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு அயலவர்களாலும் ஒதுக்கப்பட்டதன் விளைவே எனது கொறோனா குறுங்காவியம். இந்தப் புத்தகம் நிச்சயம் இலக்கிய வரலாற்றில் இடம் பிடிக்கும்.
உங்களுக்கு சிறுகதைகள் எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?
வாழ்வில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வேதனையான சம்பவங்களையும் கூற முனையும் அதேவேளை, என் போன்ற பாதிப்புக்களைச் சந்தித்தோருக்கும் எனது கருத்துக்களை முன்வைத்து சமுகமயப்படுத்த சிறந்த ஊடகம் சிறுகதைகளாக அமைந்ததனாலேயே இந்தச் சிறுகதை எனது தாகத்தை ஓரளவு தீர்த்தது.
சிறுகதை எழுதும் போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவம் உண்டா?
பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் திறந்த வெளிப் போட்டிகளில் கலந்துகொண்டு மாகாண மட்டம், மாவட்ட மட்டங்களில் பல விருதுகள், சான்றிதழ்கள், பரிசுகளையும் பெற்றுள்ளேன்.
கவிதைகள் எழுதும் போது இருக்கின்ற மனநிலைக்கும் சிறுகதைகள் எழுதும்போது இருக்கின்ற மனநிலைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் ஒரே மனோநிலைதான். 'சுருங்கக் கூறி விளங்க வைத்தல்' கவிதையாகும். நாம் எடுக்கும் தலைப்பில் குறிப்பிட்ட விடயத்தை முடிக்கலாம். சிறுகதைகளை எழுதும் போது எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பில் சற்று விரிவாக்கி சாதாரண வாசகர்களும் விளங்கிக் கொள்ளும் உணர்வுடன் எழுதப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும்.
கடைசியாக வெளிவந்த உங்களது 'திருப்பம்' சிறுகதை நூல் பற்றியும் அத்தொகுதியில் உள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
இறுதியாக வெளிவந்த 'திருப்பம்' சிறுகதைத் தொகுதி எனது நீண்டகால முயற்சியாகும். பல்வேறு கால கட்டங்களில் நான் எழுதி, பல சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பாகவே இந்தச் சிறுகதைத் தொகுதி அமைந்துள்ளது. இந்தத் தொகுதியின் கருப்பொருட்கள் எனது வாழ்வில் நான் சந்தித்த அனுபவங்களும் கசப்பான உண்மைச் சம்பவங்களுமாகவே அமைந்துள்ளன என்ற உண்மையையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். ஒரு எழுத்தாளனின் அனுபவங்கள்தானே சிறுகதைகளாகவும் அமைகின்றன.
சிறுகதைகள் வெளிக்காட்டும் சமூகச் சிக்கல்களுள் தனிமனித சிக்கல்களே முதலிடம் பெறுகின்றன. இதுபற்றி நீங்கள் என்ன சொல்வீரகள்?
உண்மையும் அதுதான். தனிமனிதர்கள் இணைந்துதானே ஒரு சமூகம் உருவாகிறது. அந்தவகையில் சமூகத்திற்கான படைப்புகளாக வலம் வருவது தனிமனிதச் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.
உங்களைக் கவர்ந்த சிறுகதை, சிறுகதையாசிரியர்கள் யாவர்?
பலரது சிறுகதைகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. இன்னாரது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது சங்கடமாகவுள்ளது. அதிகமான சிறுகதைத் தொகுதிகளை வாசித்திருக்கிறேன். அதில் பல கதைகள் என்னைக் கவர்ந்ததுண்டு. எல்லாச் சிறுகதையாசிரியர்களும் என்னைக் கவர்ந்தவர்கள்தான். என்றாலும் திக்குவல்லைக் கமால், தீரன் ஆர்.எம். நௌஷாத், திக்குவல்லை ஸப்வான் எனது ஆரம்ப ஆசான்களான மர்ஹும் யூ.எல். ஆதம்பாவா, ஏ. பீர் முஹம்மது, மு. சடாட்சரன், மர்ஹும் வை. அஹமத் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.
இலக்கிய உலகில் நீங்கள் எப்படி அறியப்பட வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?
எழுத்துப் பணியென்பது இறைவன் தந்த அமானிதம். இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்த அமானிதத்தை உரியமுறையில் பாதுகாத்து ஒப்படைப்பதன் மூலமே இறையின் பரிசு கிடைக்கும். இந்த எண்ணத்துடனேயே எழுத ஆரம்பித்தேன். இதில் பாராட்டுகள் தேடி வந்தாலும் அதில் பெருமையடைந்துவிடக் கூடாது. எனது படைப்புகள் சமுதாயத்தில் உள்ள சிலரது உள்ளங்களையாவது தொட்டு இருக்கும். அதுவே பிரார்த்தனையாக மாறி, நன்மைகளாக வந்து சேரட்டும். என்னைப் பொறுத்தவரை ஆன்மீக ஈடேற்றம் நோக்கிய இலட்சியப் பயணமாகவே இது அமையும்.
பல எழுத்தாளர்கள் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பது போலவே சில எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு எதிராக மட்டுமே குரல் எழுப்புகின்றனர். இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
ஏனைய எழுத்தாளர்களின் நோக்கும் போக்கும் இலட்சியமும் வேறுபட்டதாக இருக்கலாம். நான் எனக்கென்று ஒரு பாதையை வகுத்து இலக்கிய உலகில் பயணிக்கிறேன். எனது இலக்கு வேறு. எனவே நான் இதுவரை எந்த எழுத்தாளர்களைப் பற்றியும் கருத்துச் சொல்லி விமர்சித்ததில்லை.
பத்திரிகைகள் மற்றும் இதர ஊடகங்கள் உங்கள் படைப்புகளுக்கு எந்தளவுக்கு களம் தருவதாக நினைக்கின்றீர்கள்?
கடந்த காலங்களில் எனது சகல படைப்புகளுக்கும் பத்திரிகைகள் களம் தந்தன. இன்று களம் தருவது குறைவு. எனவே அவற்றுக்கு நான் எழுதுவதும் குறைவு. ஆனால் சஞ்சிகைகள் தொடர்ந்து களம் தருகின்றன. எனவே அவற்றில் தொடர்ந்து எழுதியும் வருகிறேன்.
தற்காலத்தில் நாவல் வகையான இலக்கியங்கள் அதிகமாக வெளிவருவதில்லை இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஒரு எழுத்தாளன் தனது படைப்புகளை வெளியீடு செய்வதற்கான அதிகரித்த செலவுகள் ஒரு புறம் இருக்க, அத்தகைய வெளியீடுகளை மிகவும் சிரமப்பட்டு வெளியீடு செய்தாலும் அவற்றை ஊக்குவித்து வாசிக்கும் நிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை என்று மொத்தமாகச் சொல்வதைவிட மிகக் குறைந்துவிட்டனர் என்றே சொல்ல முடியும். இந்த நிலையே நாவல் இலக்கியங்கள் வெளிவராமைக்கான பிரதான காரணமாகும்.
உங்களை, உங்கள் படைப்புகளை எப்படி வரையறுக்க விரும்புகின்றீர்கள்?
எனது படைப்புகள் சிறிதும் பெரிதுமான அளவில் பல வகையான படைப்புகளாக அதாவது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் அநேகமானவை சமகாலப் பிரச்சினைகளில் எமது சமூகத்தின் பாதிப்பினை எதிர்கால சந்ததிக்கு அறிமுகம் செய்கின்றன. அதிலும் விசேடமாக எமது முன்னோர்கள் எமக்களித்த கவிதை பாடல்களின் 'மாலை' வகைகளையொட்டிய கவிதை வகைகளை (உதாரணமாக ஸலவாத்து மாலை) தற்கால இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் நூல்களை வெளியிடுவதற்கு எண்ணியுள்ளேன்.
இப்போதைக்கு உங்களது இலக்கிய செயற்பாடுகள் என்னவாக இருக்கிறது?
அதிகமாக இல்லாவிட்டாலும் முடிந்த வகையில் சேகரிப்பில் கிடக்கும் எனது ஆக்கங்கள் பலவற்றையும் திரட்டித் தொகுத்து நூலாக்குவதற்கு ஏற்றாற் போல் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கே நான் முயற்சிக்கிறேன்.
இன்றைய காலங்களில் புத்தகப் பதிப்புச் சூழல் எப்படி உள்ளது?
பொதுவாக இப்போதைய காலங்களில் அதிகமான நூல்கள் பதிப்புச் செய்து வெளியிடப்படுகின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவை காத்திரமான படைப்புகளாக வெளிவருதில் அதிகமான இளையோர் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
நிறைவாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?
எழுத்துலகில் புதியவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அந்தவகையில் அவர்கள் நல்ல நூல்களைத் தெரிவு செய்து அதிகம் வாசிப்பதுடன், தான் எழுதும் ஆக்கங்கள் பிற்கால சமூகத்திற்கு விட்டுச் செல்லும் பணியென்பதை நினைவில் வைத்து, தன் படைப்புகள் சிறப்பாக வெளிவருவதில் கவனம் செலுத்தி எழுதுங்கள் என அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்








No comments:
Post a Comment