Sunday, March 29, 2020

17. பன்னூலாசிரியர் நூருல் ஹக் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.07.21

பன்னூலாசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக்கின் நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


பன்னூலாசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர், ஆய்வாளர், விமர்சகர் என்ற பன்முகத்தன்மையை தமது ஆளுமையாகக்கொண்டு தமது எழுத்துப் பணியில் சுமார் (39) முப்பத்தொன்பதாவது வருடத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல் ஹக்கின் கருத்தாடல் தினக்குரல் வாசகர்களுக்காக முன்வைக்கப்படுகின்றது.



நீங்கள் எழுத்துத் துறைக்குள் வந்த சந்தர்ப்பம் எப்படியானது? உங்களை இத்துறைக்குள் ஊக்குவித்தவர்கள் யார்?

எனது எழுத்துலக பிரவேசமென்பது எனக்குள் திடீரென உதித்ததென்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில், 1979களிலிருந்து நூல்கள், பத்திரிகைகள் வாசிப்போடு தொடர்புபட்டிருந்தேன். அந்தவகையில் 1981 ஆம் ஆண்டு தினபதி நாழிதளில் பிரதி வெள்ளிதோறும் வெளிவந்த இஸ்லாமிய பூங்கா பகுதியில் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயங்கள் வெளிவருவது அதிலும் குறிப்பாக சில விடயங்கள் குறித்தான பிரதிவாதங்கள் இடம்பெறுவதுண்டு. அதில் ஒன்றாக ஜும்ஆ தொழுகைக்கு ஊர்வாசிகள் 40 பேர் வேண்டுமா? அல்லது 4 பேர் இருந்தால் போதுமா? என்கின்ற தலைப்பிலான விவாதக் களத்தில் ஊர்வாசிகள் 40 பேர் வேண்டும் என்கின்ற அணியில் எனது கருத்தை பதிவிட்டிருந்தேன். அது கடந்த 1981 மே 15 ஆம் திகதி பிரசுரமாகியிருந்தது.
அதனை அடுத்து, தொடர்ந்து எழுதும் எண்ணம் எனக்குள் மேலிட்டது. யாரும் என்னை தொடர்ந்து  எழுதுங்கள் என்று ஊக்குவித்தவர்கள் என்று குறிப்பிட்டுச்சொல்லும் அளவில் இல்லாத போதிலும் எனது படைப்புக்களுக்கு இடம் வழங்கிய ஊடகவியலாளர்கள் என்ற வகையில் சிலரை இங்கு குறிப்பிட முடியும்.

 அமரர்களான எஸ்.டீ.சிவநாயகம், ஆர்.சிவகுருநாதன், எஸ்.அருளானந்தன், சிவஞானம்,  ஆர்.இரத்தினசிங்கம், கே.விஜயன், என்.நடராஜா, லீலா ராமையா, சிவா சுப்பிரமணியம்,  எஸ்.தில்லைநாதன் மற்றும் என்.எம்.அமீன், ஏ.ஜே.எம்.தாஜுதீன், ஏ.எச்.ஏ.சித்தீக் காரியப்பர், எம்.ஏ.எம்.நிலாம், ஆர்.சிவநேசச்செல்வன், தனபாலசிங்கம், ஆர்.பாரதி, என்.வித்தியாதரன்,  க.குணராசா, எம்.பி.எம்.பைறோஸ்,  சுகுமார், றம்ஸி குத்தூஸ், ஆர்.ரவிவர்மா, வாசுகி சிவகுமார், சிவ கணேஷன்,  என்.சரவணன், ஜீவா சதாசிவம், ராதா மேத்தா மேலும் மர்ஹூம்களான எம்.பி.எம்.அஸ்ஹர், எப்.எம்.பைரூஸ், புயல் ஹமீத், எஸ்.எம். மன்ஸூர்  இவர்களுள் தினகரனின் பிரதம ஆசிரியராக இருந்த ஆர்.சிவகுருநாதன் ஐயாவை மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், சட்டத்தரணி மர்ஹூம். எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் 1981களில் எனக்கு அறிமுகப்படுத்தித் தந்தார்கள்.


இதுவரை வெளிவந்த உங்கள் நூல் அறுவடைகள் யாவை?

01. வலிமார்களும் வஸீலா தேடல்களும் (இஸ்லாமிய ஆய்வு - 1988 பெப்ரவரி)
02. ஈதுல் பித்ர் சிறப்பு மலர் (இஸ்லாமியம் - 1993 மார்ச்)
03. ஈதுல் அழ்ஹா சிறப்பிதழ் (இஸ்லாமியம் - 1993 ஜூன்)
04. தெரிந்த விடைகளுக்கான கேள்விகள் (அரசியல் - 1996 டிசம்பர்)
05. தீவும் தீர்வுகளும் (அரசியலும், வரலாறும் - 1998 மார்ச்)
06. சிறுபான்மையினர் சில அவதானங்கள் (அரசியலும் வரலாறும் - 2002 மே 27)
07. முஸ்லிம் பூர்வீகம் (அரசியலும் வரலாறும் - 2006 ஆகஸ்ட் 27)
08. ஈமானியப் பேரொளிகள் (இஸ்லாமிய ஆய்வு - 2009 ஜனவரி 18)
09. அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும் (அரசியலும் வரலாறும் - 2011 ஆகஸ்ட் 27)
10. முஸ்லிம் அரசியலின் இயலாமை (அரசியலும் வரலாறும் - 2016 ஏப்ரல் 27)
11. யார் துரோகிகள்? - சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை (அரசியல் - 2017 ஒக்டோபர் 15)


இப்படியாகப் பல நூல்களை வெளியிடுவதில் நீங்கள் சிரமங்களை எதிர்நோக்கவில்லையா?

நூல்களை வெளியிடுகின்றபோது பொதுவாக இரண்டு பிரச்சினைகளை ஒரு படைப்பாளி எதிர்கொள்கின்றான். ஒன்று, நூலாக்க முயற்சியில் தேவைப்படுகின்ற கணனி மயப்படுத்தலும், அட்டைப் படத்தை தீர்மானிப்பதும் அதனை செய்தெடுப்பதும் நூலைப் பதிப்பித்துத் தருகின்ற அச்சகக்காரர்களின் காலதாமதம் என்பனவற்றைக் கடந்து வருகின்ற அழுத்தங்களிலிருந்து இலகுவாக நூலாக்கி எடுப்பதில் உள்ள சிரமங்களை பெரும்பாலான எழுத்தாளர்கள் எதிர்கொள்வதை தவிர்க்க இயலாத ஒரு பொதுவான பண்பாகவே காணப்படுகின்றன. அத்தகைய சிரமத்திலிருந்து நானும் விடுபடவில்லைதான். மற்றொன்றான நூலை வெளியிடுவதற்கு ஏற்படுகின்ற செலவீனங்களை நூலை விற்பதன் ஊடாக சரிசெய்து கொள்வதென்பதில் பல சிரமங்களை எதிர்கொண்டாலும், சிலர் அதில் வெற்றியடைவதுண்டு. அந்தவகையில், நூல்களினூடாக இலாபங்களை திரட்டாவிட்டாலும் முதலுக்கு பங்கம் வராமல் பாதுகாப்பு பெற்றிருக்கிறேன்.


உங்கள் படைப்புகளை எந்த வகையான வாசகர்களை இலக்காக வைத்து எழுதி வருகிறீர்கள்?

ஆன்மிகம், அரசியல், இலக்கியம் என்ற அடிப்படையில் எனது எழுத்தாக்க முயற்சிகள் காணப்பட்டபோதிலும் இவற்றில் இலக்கியம் தவிர்ந்த ஏனைய இரண்டு வகைகளும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் முன்னேற்றகரமான வாழ்வு முறைமைக்கும் பொருத்தமான அரசியல் நகர்வுகளுக்கும் ஈடுகொடுக்கப்பட்டவைகளாக இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் அதிகமாக எழுதப்பட்டவைகளாகும். அதிலும் முஸ்லிம் மக்களுக்குள் காணப்படும் தனித்த அரசியல் கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் சார்புநிலை சாராது பொதுவாக முஸ்லிம் மக்களின் நலன் குறித்த இலக்கை வைத்து எழுதுவதில் பிறழ்வுக்குள் சிக்கிவிடாது எழுதுகின்ற பண்பினைக் கடைப்பிடித்து வருகின்றேன்.

தேச அரசியல் களத்துக்கேற்ற மாற்றங்கள் நிகழ்கின்றபோது பொதுவாக எல்லா மக்களையும் விழிப்பூட்டும் வகையிலான படைப்புக்களையும் படைத்திருக்கின்றேன். இதுவே எனது படைப்பின் நுகர்வாளர்களாக முஸ்லிம் சமூகத்தைக் கட்டி வைப்பதில் அதிகமும், தேசிய அரசியலை தெளிவாக விளங்கிக்கொள்வதற்கு முனைப்புக்கொண்டு இருப்பவர்களையும் எனது படைப்புக்கள் விரும்பப்படக்கூடியதாக மாறியிருக்கின்றன என நம்புகின்றேன்.

இலக்கியத்தைப் பொறுத்தவரை எனது எழுத்துப் பயணத்தின் ஆரம்ப காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கவிதைகளை யார்த்திருந்த போதிலும் அதில் வெகுவாக வாசகர்களை சுவீகரித்துக்கொள்ள முடியவில்லை. ஆயினும், படைப்புகளை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்ட விமர்சனங்களும், படைப்பாளிகளை இனம்காட்டும் வகையில் என்னால் காணப்பட்ட செவ்விகளும் சிலரிடமாவது சிலாகிக்கப்பட்டு, அம்பாறை மாவட்ட எழுத்தாளர் பட்டியலில் விமர்சகர் என்ற வகையில் எனது பெயரும் குறிப்பிடப்படுவது மகிழ்வே.


ஆன்மீகம், அரசியல் தவிர்ந்த இலக்கிய நூல்களை வெளியிடாமைக்கு என்ன காரணம்?

என்னைப்பொறுத்தவரை இலக்கியம் என்றால் விமர்சனம் சார்ந்த நூலையே நான் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடுவதன் ஊடாக ஏற்படக்கூடிய செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் நூல் வெளியீட்டு விழாக்களைச் செய்து அதனை எட்டிக்கொள்ளும் வகையிலான வாசகர்கள் என்னிடம் இல்லாமைதான் இத்துறை சார்ந்த நூலை வெளியிடுவதில் நான் தயக்கம்காட்டி வருகின்றேன்.



நூல் விமர்சனங்களை எழுதும்போது ஒரு எழுத்தாளன் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் யாவை?

ஆரோக்கியமான நூல் விமர்சனங்கள் நிகழ்த்துவது என்பது நமது நாட்டைப் பொறுத்தவரை எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது.  ஏனெனில், விமர்சகர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டவர்களில் பலர் குறித்த சில அடிப்படைகளுக்குள் நின்றுகொண்டு தமது பார்வைகளை செலுத்தி அதிலிருந்து தமது விமர்சனங்களை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால், நூல் வெளியீட்டு விழாக்களுக்குக் கூட யாரை விமர்சகர்களாக அழைப்பது என்பதில் எழுத்தாளர்கள் பயப்பட்ட ஒரு காலமும் எம்மைக் கடந்து சென்றிருக்கின்றது. இன்றும் அதனுடைய தாக்கமான விமர்சகர்கள் நம் மத்தியில் இல்லாமலும் இல்லை. இதன் ஒரு வெளிப்பாடாக பின்வரும் கருத்தை எடுத்து நோக்குவதின் ஊடாக இதனுடைய பயங்கரம் எளிதாக துலங்க முடியும்.

இன்று நம்மத்தியில் மூத்த எழுத்தாளர்களாகக் காணப்படுபவர்களை நோக்கி இன்றைய இளைய விமர்சகர்களில் சிலர் ஷஷஅவர்கள் படைத்ததெல்லாம் இலக்கியமே இல்லை என்றும், அவர்கள் இலக்கியத்திற்கு எதைப் பங்களித்துவிட்டார்கள் என்று உச்சத்தில் வைத்து பேசப்படுகிறார்களோ தெரியவில்லை||. என்று நையப்புடைக்கும் வாசகங்களினால் இனம்காட்டி நிற்பதைக் குறிப்பிட முடியும். பொதுவாக அந்தந்தக் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த படைப்பாளிகள் இன்றும் நல்ல படைப்பாளிகளாகவே அடையாளப்படுத்தப்படுவதுதான் முறையாகும். ஏனெனில், ஒவ்வொரு படைப்பாளியும் அவரவர் வாழ்ந்த காலத்தில் பேசப்படுபவர்களாக மிளிர்ந்தார்கள் என்றால், அது அவர்களின் ஆளுமையான ஒன்றென்றே கருதப்படல் வேண்டும். இதுதான் தொடர்ந்தேர்ச்சியான அணுகுமுறைகளாகப் பின்பற்றப்படுவதுதான் ஆரோக்கியமான விமர்சனக் களத்திற்கு உந்துசக்தி என்பேன்.

என்னைப்பொறுத்தவரை இவைகள் சரியா, பிழையா என்று விவாதிப்பதற்கு அப்பால், ஒரு படைப்பாளி தனது படைப்பை எந்த அடிப்படையில் நின்று கருத்துரைத்திருக்கின்றான் என்பதையும் அது மக்களை எவ்வளவு தூரம் சென்றடையக் கூடியதாக தமது மொழிப் பயன்பாட்டை பிரயோகித்திருக்கின்றான் என்பதையும் அவதானித்து அதனூடாக சொல்லப்படுகின்ற விடயம், மக்கள் களத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பது குறித்து கோடிட்டுக் காட்டக்கூடியதாக எமது விமர்சனப் போக்குகள் அமைய வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இதற்கு இசைவானவர்களையே நான் ஆதரிப்பவனாகவும் இருக்கின்றேன்.


உள்நாட்டு எழுத்தாளர்களுக்கு ஈழத்து புத்தக நிறுவனங்கள் ஆதரவு தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே. அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

இதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தான் செய்வேன். ஏனென்றால், நமது நாட்டிலிருக்கின்ற புத்தக நிறுவனங்கள் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றது. ஒன்று நூல்களை விற்பனை செய்யும் மையத்தை மட்டும் முன்னிறுத்தியதாகும். மற்றொன்று நூல்களை பதிப்பித்தலையும், விற்பனையையும் ஒருங்கிணைத்ததாகவும் சில பதிப்பகங்கள் காணப்படுகின்றன. இவற்றில் நூல்களை விற்பனைக்கு மாத்திரம் கொள்வனவு செய்கின்றபோது நமது நாட்டின் படைப்பாளிகளின் புத்தகங்களை குறித்த விலைக் கழிவுடன் பெற்றுக்கொள்வதோடு, அவைகள் விற்பனையாகிய பின்னரே அவற்றுக்கான கொடுப்பனவுகளை வழங்குகின்றனர். அதேநேரம், குறிப்பாக இந்தியாவிலிருந்து வரக்கூடிய படைப்பிலக்கிய நூல்களுக்கு விலைக் கழிவுடன்கூடிய முழுத் தொகையையும் முன்கூட்டி செலுத்திய பின்பே தமது நூல் நிலையத்தின் ஊடாக விற்பனைக்கு விடுகின்றனர்.

படைப்பிலக்கியங்களை வெளியிட்டுக் கொடுக்கின்ற நூல் நிறுவனங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஆக்க இலக்கிய வெளிப்பாடு கொண்ட நூலாசிரியர்களிடமிருந்து பதிப்பிப்பதற்கான குறித்ததொரு பணத் தொகையினைப் பெற்றுக்கொண்டு அதற்கு பகரமாக பதிப்பிற்கும் நூல்களின் ஒரு பகுதியை அவர்களுக்கு கையளித்தும் விடுகின்றனர். மேற்சுட்டிக்காட்டிய இந்த இரண்டு வகையிலும் நமது நாட்டுப் படைப்பாளிகளுக்கு நமது புத்தக நிறுவனங்கள் சரியாக பங்களிப்புகளை நல்கி படைப்பாளிகளை நிலைநிறுத்துவதற்கு உதவுவதில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும்.


படைப்பாளர்களுடனான உங்கள் தொடர்பை எப்படி தக்கவைத்துக் கொள்கிறீர்கள்?

எனது எழுத்துலக பிரவேசத்திற்கு முற்பட்டவர்களும், பிற்பட்டவர்களும் என்னோடு இன்றுவரை தொடர்பிலிருக்கின்றனர். அதுவே நான் கால இடைவெளி மாற்றத்திற்கு அப்பால் எல்லோருடனும் பயணிக்கும் வகையில் எனது எழுத்தும், போக்கும் அமைந்திருக்கின்றது என்பதைக் காட்டப் போதுமானது. இந்தப் பண்பே படைப்பாளர்களுடனான எனது தொடர்பை நெருக்கமாக வைத்திருக்க உதவுகின்றது என்று நம்புகின்றேன்.


விருதுகள் தகுதியானவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றனவா? சில படைப்புக்கள் நடுவர் குழுக்கே போவதில்லை. இதுபற்றி என்ன சொல்வீர்கள்?

விருதுகளுக்கு தகுதியான படைப்புகளுக்குத்தான் விருதுகள் வழங்கப்படுகின்றன என்று சொல்வதைவிட படைப்புக்களைப் பார்வையிடுகின்ற நடுவர் குழுக்களுக்கு தகுதியானவை என காணப்படுகின்ற படைப்பே விருதை அடைந்துகொள்கின்றது. ஒவ்வொரு படைப்பாளியும் தமது படைப்பை விருதுக்கு உரித்தானது என்று கருதித்தான் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அது அந்த படைப்பாளிக்கு உரித்தான எண்ணமாகும். எனதொரு அனுபவத்தை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
2006 ஆம் ஆண்டு வெளியிட்ட "முஸ்லிம் பூர்வீகம்" என்ற நூலுக்கு விருது கிடைக்கும் என்று நான் முழுமையாக நம்பியிருந்தேன். ஆனால், கிடைக்கவில்லை. நானே விருது பெறும் என நினைத்திராத ஷஷஅரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்|| என்ற நூலுக்கு (2011) கிழக்கு மாகாண சபையின் விருது கிடைத்தது. விருது என்பது நடுவர் குழுவின் பார்வையில் தங்கியிருக்கின்ற ஒன்றேயன்றி வேறில்லை. ஆயினும், விருதுபெற்ற படைப்புகள்தான் உன்னதமானது என்றும் விருது பெறாதவை உயர்ந்தது அல்ல என்ற பாகுபாடும் நமக்குத் தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு.

சில படைப்புக்கள் நடுவர் குழுக்கே போவதில்லை என்பதைப் பார்க்கும் போது சிலருக்கும் இவ்வாறான அனுபவம் அமைந்திருக்கவும் கூடும். இதனைத் தவிர்ப்பதற்கு சிறந்த வழி என்னவென்றால், விருதுகளுக்காக நூல்களை வெளிப்படையாக கோருவதுபோன்று போட்டிக்கான இறுதித் திகதிக்கு பின்னரும் நடுவர்களுக்கு நூல்களை கையளிப்பதற்கு முன்னரும் கிடைத்த நூல்களின் முழு விபரங்களையும் பகிரங்கப்படுத்துவதின் ஊடாக, அனுப்பி வைத்த எழுத்தாளர்கள் தமது நூல்கள் சென்றடைந்திருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வர். அல்லது விண்ணப்பம் கோருகின்ற ஸ்தாபனங்கள் நூல்களை அனுப்பி வைக்கின்ற போட்டியாளர்களுக்கு நூல்கள் கிடைத்தமை பற்றியான அறிவித்தலையும் போட்டியில் சேர்க்கப்பட்டதா? சேர்க்கப்படவில்லையா? என்பது குறித்தான விபரத்தையும் நடுவர் குழுவினருக்கு கையளிப்பதற்கு முதல் தெரியப்படுத்துவதன் ஊடாகவும் தமது நூல் போட்டிக்கு சென்றடைந்திருக்கின்றதா என்பது குறித்து திட்டவட்டமாக அறிந்துகொள்வதற்கு வாய்ப்பிருப்பதுடன் இவ்வாறான தவறுகள் நிகழாமல் விடுவதற்கு வழி ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.


சமவெளி வலைத்தளம் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? அச்சு ஊடகங்களை விட வலைத்தளங்கள் இலக்கியத் துறைக்கு பங்களிப்புக்களைச் செய்கின்றதா? விளக்கமாக சொல்லவும்.

வலைத்தளங்கள், அச்சு ஊடகங்களைப் பொறுத்தவரை இவை ஒவ்வொன்றின் பரிமாணங்களும், பெறுமானங்களும் வேறுபட்டவைகளாகும். அச்சு ஊடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்கள் முந்திக்கொண்டு தமது பரப்புரைகளை செய்கின்ற வாய்ப்பு இருக்கின்றது. இதில் செய்தியைக் குறித்தான பார்வையில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இலக்கிய கருத்துக்களை முந்திக்கொண்டு பிரசுரிப்பதினால் பிணக்குகள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இந்த யுகத்தைப் பொறுத்தவரை அச்சு ஊடக வாசிப்பு குறைந்து இலத்திரனியல் ஊடகம் பார்க்கப்படுவது அதிகரித்து இருக்கின்றது. இதில் எதுவென்றாலும் இலக்கியத்தை இரசிப்பதற்கும், படிப்பதற்கும் தனியொரு விருப்பம் தேவைப்படுகின்றது. அந்த விருப்புக்கூட்டம் இலத்திரனியலிலிருக்கின்றதா? அல்லது அச்சு ஊடகத்தில் இருக்கின்றதா என்பதை ஒரு கருத்துக் கணிப்பின் ஊடாகத்தான் வெளிப்படுத்த முடியும். எழுந்தமாகச் சொல்ல முடியாது.
ஆனால், அச்சு ஊடகங்கள் கவிஞர்களை அடையாளம் காட்டித்தந்த அளவை விட இன்று எண்ணிக்கையில் அதிகமானவர்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக படைக்கப்படுவதிலும் அவற்றின் ஊடாக போட்டிகள் நடாத்தி பரிசுகள் வழங்குவதுமாக பல கவிதையாளர்களை நமக்கு அதிகளவான எண்ணிக்கையில் அடையாளப்படுத்தித் தந்திருக்கின்றது என்றுதான் குறிப்பிட வேண்டும். என்றாலும், ஆரோக்கியமான படைப்புக்கள் இவர்களின் ஊடாக வெளிப்பட்டிருக்கின்றதா என்பது ஒரு நீண்ட கருத்தாடலை எதிர்பார்த்து நிற்பதையும் அவதானிக்கலாம்.

உங்கள் எழுத்து முயற்சிகளுக்கு கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

• வெற்றி மாத சஞ்சிகையின் ஞாபகர்த்த விருது (2002)
• தென்கிழக்கு ஆய்வு அமையம் இஸ்லாமிய ஆராய்ச்சி மன்றம் இணைந்து வழங்கிய இளம் இலக்கியவாதிக்கான விருது (2002)
• அபாபீல்கள் கவிதாவட்டம் ஹாதிபுல் ஹுதா - நேரிய எழுத்தாளர் பட்டமளித்து கௌரவித்தல் (2006)
• வார உரைகல் பொன்மலர் பதக்கம் அணிவித்து கௌரவித்தல் (2007)
• சாய்ந்தமருது பிளைங்ஹோஸ் விளையாட்டுக் கழகத்தின் வெள்ளி விழா நினைவு விருது (2007)
• இலக்கிய நூல் பரிசுச் சான்று கிழக்கு மாகாண சபை (2011)
• விமர்சன எழுத்து பணிக்கும், ஊடகப் பணிக்குமான நினைவு விருது, மருதம் கலைக்கூடல் மன்றம் (2015)
• உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, இலக்கிய பங்களிப்பை கௌரவித்து வழங்கப்பட்ட விருது (2016)
• சுவதம் பாராட்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் (2017)

சக எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

எழுத்தாளர்கள் பல வகைப்படுவார்கள். அவர்கள் கால்பதிக்கும் துறையைப் பொறுத்து அவர்களின் ஆளுமை வெளிப்படுவதுண்டு. ஆதலால், நான் இருப்பதுபோல்தான் அடுத்தவரும் இருக்க வேண்டுமென கட்டளை இடுவது முறையல்ல. பொதுவாக அவரவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட படைப்பின் வடிவத்தில் அக்கறை கொள்வதும் தமது கருத்துக்கள் மக்களிடம் தாம் எழுதிய இலக்கில் சென்றடைய வேண்டும் அல்லது புரியப்படல் வேண்டும் என்ற உணர்வு மிக முக்கியமானது.

பன்மைத்துவ வாசிப்புக்காக படைப்பது என்ற கோட்பாட்டில் எழுதுவதிலும் படைத்தபின் படைப்பாளி செத்து விடுகின்றான் என்ற கோட்பாட்டை சரிகாண்பதிலும் எனக்கு பிடிமானம் குறைவு. கருத்து திணிப்பின்றி படைப்பாளிகள் அவரவர் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தில் தரித்து கொள்வது தவறான போக்கல்ல என்பதே எனது தீர்மானம்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

16.வெலிமடை ரபீக் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.03.31

வெலிமடை ரபீக் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்

01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை தினக்குரல் வாசகர்களுக்கு கூறுங்கள்?

நான் எஸ்.எச். மொகமட் ரபீக். மர்ஹும் எம்.எஸ். சாஹுல் ஹமீட், சவுருவான் பீபி தம்பதிகளின் மூத்த ஆண் மகன். குடும்பத்தில் நாங்கள் ஐந்து பிள்ளைகள். நான் இரண்டாவது. எனக்கு இரண்டு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர். மூத்த சகோதரியைத் தவிர மற்றைய எல்லோரும் ஆசிரிய சேவையில் உள்ளனர். எனதும், என் இரண்டு சகோதரர்களின் மனைவிமாரும் ஆசிரியைகளாக உள்ளனர். காலஞ்சென்ற எனது தந்தைக்கு இவ்விடயம் என்றைக்குமே மகிழ்ச்சியை தரக்கூடிய விடயமாகவே இருந்து வந்துள்ளது.

நான் திருமணம் முடித்து உள்ளேன். முனைவி ஏ.டப்ளியு சகீனா. வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியையாக சேவையாற்றுகிறார். எனக்கு ரிஹாம், ரிஸ்லான், சஹ்லான் என மூன்று ஆண் பிள்ளைகள். மூவரும் மனைவியின் அதே பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள்.

நான் வெலிமடை வலயக் கல்விக் காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக சேவையாற்றுகிறேன். தற்சமயம் மருத்துவ விடுமுறையில் உள்ளேன்.


02. ஆசிரிய ஆலோசகராக தற்சமயம் கடமையாற்றும் நீங்கள் கலை, இலக்கியத் துறைக்குள் எவ்வாறு வந்தீர்கள்?

தீராத வாசிப்பும், தீவிர தேடலுமே என்னை கலை இலக்கியத் துறைக்கு இழுத்தெடுத்து வந்தது. 1980 களுக்கு பிற்பட்ட காலம் இலங்கை கலை, இலக்கியத் துறையில் புதுக்கவிதை எழுச்சி பெறத் தொடங்கிய காலக்கட்டம் ஆகும். தேசியப் பத்திரிகைகள் நாளாந்தம், வாராந்தம் புதுக்கவிதைகளுக்கு என்றே தனியிடம் ஒதுக்கித் தந்தன. கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் கவிதைக்கு என்றே நிறைய சிறு சஞ்சிகைகள் வரத் தொடங்கின. அவற்றில் பெரும்பாலானவை கல்லச்சிலேயே வெளிவந்தன. வாசிப்பின் மீதான ஆர்வம் என்னை எழுதச் செய்தது.

1980 களில் வெலிமடையை இலக்கிய உலகில் அறிமுகம் செய்யும் போது வெலிமடையை அக்காலத்தில் இலக்கியப் பாலைவனம் என்றார்கள். அப்போது என் மனது மிகவும் வலித்தது. வெலிமடையின் நாமத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டுப் போக விரும்பினேன். ஆதனால் வெலிமடை ரபீக் என்ற பெயரிலேயே எழுதினேன். இன்றுவரை, அதே பெயரில் எழுதி வருகிறேன். இணையம், முகநூல் போன்றவற்றின் வருகையால் எனது நோக்கம் நிறைவேறி உள்ளதையிட்டு உள்ளம் மகிழ்கிறேன்.


03. உங்களது முதலாவது எழுத்து முயற்சி எப்போது, எதனூடாக ஆரம்பமானது?

எனது ஞாபகங்கள் சரியென்றால் 1982 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். 'வீதியில் விழுந்த விலாசம்' என்ற பெயரில் தினகரன் கவிதைச் சோலையில் பிரசுரமானது. வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு தினகரன் வாரமஞ்சரியின் கவிதைச் சோலை, கவிதை சாகரம் பி;ற்பட்ட காலங்களில் செந்தூரம் என்பன தாராளமாக களம் தந்தன. அந்தவகையில் சித்தீக் காரியப்பர், வீ. ஜெகதீஸன், ரிஸ்கி ஷரீப் ஆகியோர் இன்றுவரை என்னால் மறக்கப்பட இயலாதவர்கள்.

நான் எழுதத் தொடங்கிய ஆரம்பக் காலங்களில் எனக்கு நிரந்தர முகவரி இருக்கவில்லை. அதாவது 'கூலி வீட்டு' வாழ்வே நமது விதி. அடிக்கடி வீடு மாறிக்கொண்டே இருந்தது. இதனால் என் ஆரம்பக் கால கவிதைகளை என்னால் பாதுகாக்க முடியவில்லை. எனது முதலாவது கவிதைத் தொகுதி வெளியீடு இலக்கியப் புரவலர், இனிய கொடை வள்ளல் ஹாசிம் உமர் அவர்களின் புத்தகப் பூங்கா நிறுவனத்தினூடாக 2009 இல் ஷமேக வாழ்வு| என்ற மகுடத்தில் வெளிவந்தது.

04. எத்தனை ஆண்டுகளாக கவிதைகளை எழுதி வருகின்றீர்கள்?

ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். இலக்கிய உலகில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களின் காரணமாக எழுதாமல் சில காலம் விட்டு வைத்தேன். இனிமேல் எழுதுவது இல்லை என்றும் நினைத்திருந்தேன். ஆனால், நான் என் பூக்காலத்தில் சொன்னது போல வைராக்கியம் எல்லாம் கையில் இறுகிப் பிடித்த கடல் மண்ணாயிற்று. எழுதிப் பழகிய என் கை விரல்களால் எழுதாமல் இருக்க முடியவில்லை. இன்றுவரை எழுதி வருகிறேன்.


05. புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் என்ன வேறுபாட்டை காணுகிறீர்கள்?

மரபு கவிதைக்குரிய யாப்பிலக்கணம் உடைத்தெறிந்து எழுதப்படுகின்ற எல்லாக் கவிதைகளும் புதுக்கவிதைகளாகவே கருதுகிறேன். ஆனால், கால வேறுபாடு, கவிதையின் உள்ளடக்கம், வெளிப்பாட்டு உத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு இன்றெழுதப்படும் கவிதைகளை, கவிதை இலக்கிய ஆய்வாளர்களால் நவீன கவிதைகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஆரம்பக்கால புதுக்கவிதைகள் அலங்கார சொற்களின் ஊர்வலங்களாகவும், சொற்களால் கட்டப்பட்ட தோரணங்களாகவும், படிமக் குவியல்களாகவும் இருந்து வந்துள்ளன. கவிஞரால் எழுதப்பட்ட கவிதைகளின் பொருளை சில நேரங்களில் கவிஞரிடமே கேட்டறிய வேண்டிய    நிலைகூட இருந்துள்ளது.

பாடுபொருளில் நவீன கவிதைகள் உச்சம் தொட்டுள்ளன. மானுட வாழ்வில் கொட்டிக் கிடக்கின்ற எல்லா அம்சங்களையும் அவை உரத்துப் பேசுகின்றன. நம் நாட்டு பல கவிஞர்களின் நவீன கவிதைகள் சிங்கள, ஆங்கில மொழிகளில் கூட மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இணையம், முகநூல் எல்லாம் இதற்கு கைக்கொடுத்து உதவி வருகின்றன. தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவுதல் வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் பெருங்கனவு இன்று நிறைவேறி உள்ளதனை நினைத்து எல்லோரும் பேரானந்தம் அடைய முடியும்.


06. இதுவரை நீங்கள் வெளியிட்ட கவிதை நூல்கள் பற்றி குறிப்பிட முடியுமா?

ஏறக்குறைய முப்பந்தைந்து வருடங்களுக்கும் மேலாக எழுதினாலும் கூட மேக வாழ்வு, பூக்காலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளை மாத்திரமே இதுவரை என்னால் வெளியிட்டுக் கொள்ள முடிந்துள்ளது. அவைதவிர, ரூம் டூ ரீட் என்ற அரச சார்பற்ற அமைப்பு நோன்பு என்ற பெயரில் எனது சிறுவர் கதையொன்றை வெளியிட்டுள்ளது. பூஞ்சிறகுகள் என்ற பெயரில் சிறுவர் பாடல் தொகுதி ஒன்றையும் வெளியிட்டேன்.

நூடில்ஸ் அவித்து பரிமாறுவது போல் என்னால் நொடிக்குள் நூறு கவிதைகளை எழுத முடியாதுள்ளது. ஒரு கவிதைக்கும் மறு கவிதைக்கும் இடையே நிறைய இடைவெளியை எடுத்துக் கொள்கின்றேன். என்னைப் பாதிக்கின்ற எல்லா விடயங்களையும் நான் கவிதையாக்குகின்றேன்.

கவிஞன் சமூகத்தின் கண். உடம்பில் எங்கு காயம் பட்டாலும் கண் அழுகிறது என மகாகவி அல்லாமா இக்பால் குறிப்பிட்டுள்ளார். நான் சமூகத்தின் உயிர். உலகில் யாருக்கு, எங்கு அடிப்பட்டாலும் ஆறாத நோவுகளின் வேதனையால் கவிதை கொட்டி அழுது விடுகிறேன்.

நான் வாழும் சூழல், கல்வியறிவில் இன்னும் பின்தங்கிய பிரதேசம் ஆகும். இங்கு வாசிப்பறிவு மிகக் குறைவு. தமிழ் பாடம் கற்பிக்கும் ஒருசில ஆசிரியர்களைத்தவிர ஏனையோர் புத்தகங்களை வாங்கிப் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பாடப் புத்தகங்களில் உள்ள விடயங்களோடு மட்டும் மாணவர்களும் நின்று விடுகிறார்கள். தேடல் ஆர்வம் கவலைப்படும் விதத்தில் அருகி வருகிறது. சரியான வழிகாட்டல் மாணவர்களுக்கில்லை. இந்தப் பின்னணியில் சொந்தக் காசில் தொடர்ந்து நூல் வெளியிட்டு நட்டமடைய முடியாது. எழுதுவது ஆத்ம திருப்திக்காக என்றால் எனது எழுத்துக்களை நூலாக்குவதும் ஆத்ம திருப்திக்காகத்தான். என் வாழ்வுக் காலத்திற்குள் பத்து நூல்களையாவது வெளியிட்டாக வேண்டும். இதுவரையான என் வாழ்வின் வலிகளை 'ஒரு நானும் இன்னொரு நானும்' என்ற தலைப்பில் தொகுத்தெழுதி வருகின்றேன். என் ஆசிரியத்துவ வாழ்வின் அனுபவங்களை 'கரும்பலகை' என்ற பெயரில் தொகுத்து வருகிறேன். என் கால நூற்றாண்டுக்கு மேற்பட்ட கவிதை அனுபவங்களை நானும் நானும் என்ற பெயரில் தொகுத்தெழுதி வருகிறேன். இவை எல்லாம் எப்போது நூலாகும் என என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால், இந்த வருடக் கடைசியில் ஒரு கவிதைத் தொகுதி வெளியிடும் எண்ணமுண்டு. அநேகமாக நெருப்புத் தின்றவள் என்பது அதன் தலைப்பாக இருக்கலாம்.


07. உங்களது முதலாவது கவிதை எவ்வாறான சூழ்நிலையில் உருவானது?

1980 களின் பிற்பட்ட காலப்பகுதியில் எனது முதலாவது கவிதை பிரசுரமானது என முன்னமே குறிப்பிட்டேன். அக்காலப்பகுதியில் காதல் தோல்விக் கவிதைகளே பிரபலமாக இருந்தன. எனது வாசிப்பின் மீதான ஆர்வத்தாலும் ஈடுபாட்டாலும் வீதியில் தொலைந்த விலாசம் எனும் தலைப்பில் நானும் எழுதினேன். தினகரன் வாரமஞ்சரியின் கவிதைச்சோலைப் பகுதியில் அது பிரசுரமானது.


08. மேக வாழ்வு கவிதைத் தொகுதி குறித்தும் இந்தப் பெயரை தெரிவு செய்தமைக்கான காரணம் குறித்தும் சொல்ல முடியுமா?

மேக வாழ்வு கவிதைத் தொகுதி எனது முதலாவது கவிதைத் தொகுதி. அக்காலப்பகுதியில் ஏறக்குறைய முப்பது வருடகால கவிதானுபவம் எனக்கிருந்தாலும் மேக வாழ்வே எனது முதலாவது கவிதைத் தொகுதி.

போதுமான பொருளாதார வசதி இன்மை பிரதான காரணியாக இருந்தாலும், இன்னும் பிற காரணிகளாலும் எனது கவிதை தொகுதி வெளியீடு தாமதமானது. சகோதரிகளின் திருமணத்தை நிறைவேற்றி வைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு எனக்கிருந்தது. எனவே கவிதைத் தொகுதி வெளியீட்டை விட சகோதரிகளின் திருமணம் குறித்தே அதீத கவனம் செலுத்தினேன். காசு தாருங்கள் இந்தியாவில் கவிதைத் தொகுதி அச்சிட்டுக் கொண்டு வந்து தருகிறேன் என்று என்னை நாடியவர்களும் உண்டு. நான் ஒரு சிரிப்பை அவர்களுக்கு பதிலாய்க் கொடுத்துவிட்டு மௌனமாய் இருந்திருக்கிறேன். இக்காலப் பகுதியில் என் கவிதைகளின் அபிமானி சிறுகதை எழுத்தாளர் சகோதரர் பலாங்கொடை ஜுனைதீன் அவர்கள் எனது கவிதைகளை அச்சிட்டுத் தருவதாகக் கூறி எடுத்துப் போனார். அவருக்கு தெரிந்த அச்சகத்தை மூடிவிட்டதாகக் கூறி இடையில் வருத்தத்துடன் அறிவித்தார்.

சிறிது காலத்தின் பின்னர் புரவலர், புத்தகப் பூங்கா தனது நூல் வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்திருந்தது. அப்போது காலாண்டுக்கு ஒரு நூல் வெளியீடு என அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். சகோதரர் ஜுனைதீன் அவர்களே எனது கையெழுத்துப் பிரதியை புரவலர் புத்தகப் பூங்காவிடம் ஒப்படைத்தார். ஞானம் ஆசிரியர் கௌரவ டாக்டர் தி. ஞானசேகரம் தலைமையிலான குழுவினர், எனது தொகுதியின் தரம் கண்டு வெளியீட்டுக்கு தேர்வு செய்து, பிரசுரித்தனர்.

நான் எனது கவிதைத் தொகுதிக்கு சொல்வதெல்லாம் உண்மை என்றே தலைப்பிட்டேன். மானுட வாழ்வின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என் கவிதைகள் என்பதால் அவ்வாறு தலைப்பு இட்டேன். ஆனால், தலைப்பு ஒரு பிரகடனம் போல் இருக்கின்றது. கவித்துவம் இல்லை என்ற காரணத்தால் மேக வாழ்வானது.

நான் மெல்லிய மேகங்களைப் போல மென்மையானவன். உண்மையானவன். விலங்குகளற்ற சுதந்திரத்தை விரும்புபவன். பிறருக்கு தாராளமாய் உதவ விரும்புபவன். எனது நற்குணம் கவிதைத் தலைப்போடு ஒத்துப் போவதால் மேக வாழ்வு என்பதை தலைப்பாக்க ஒப்புதல் வழங்கினேன்.


09. நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுத தூண்டப்பட்ட சம்பவங்கள் பற்றி குறப்பிடுகள்?

'காலம் உதிரம் வடிங்கும் போது கவிதை அமுதம் குடிக்க முடியாது' என நான் சொல்வதுண்டு. தொண்ணூறுகளில் தொடங்கி இன்றுவரை இலங்கையிலிருந்து உலகம் வரை கொடிய போர் நிலவிய காலக்கட்டம். போரும் அகதி வாழ்வும் என்னை பெரிதும் பாதித்திருக்கின்றன. தொண்ணூறுகளின் காலக்கட்டத்தில் நான் ஆசிரியர் பயிற்சி நெறிக்காக கிழக்கில் வாழ்ந்திருக்கிறேன். போரின் காயங்களையும், வலிகளையும் நேரடியாக அனுபவித்திருக்கிறேன். ஆகவே நான் போரின் எதிரி, சமாதானத்தின் நண்பன். போரின் முகத்தில் எச்சில் உமிழ்பவன். சமாதானத்தின் முகத்தில் பன்னீர் தெளிப்பவன். சகோதரத்துவ வாழ்வுக்கான ஏக்கங்களும், சமாதான வாழ்விற்கான தாகங்களும் எனது கவிதைகளில் உரத்து ஒலிக்கத் தொடங்கின. அதன் காரணமாகவே போரும் சமாதானமும் பற்றிய பாடுபொருளில் நிறையக் கவிதைகளை எழுதத் தொடங்கினேன். எனது முதலாவது கவிதைத் தொகுதியான மேக வாழ்வில் மொத்தம் இருபத்தெட்டுக் கவிதைகள் உள்ளன. அவற்றில் பதினெட்டு கவிதைகள் போரும் சமாதானமும் பற்றியவை.

நான் வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். வறுமையின் கடைசி சொட்டையும் பருகியவன். வறுமை பற்றியும் நிறைய எழுதலானேன். நான் மலையகத்தில் பிறந்து வளர்ந்தவன். மலையகப் பாடசாலைக்கு எனது முதலாவது ஆசிரியர் நியமனத்தைப் பெற்றவன். மலையக மக்களின் துயரம் நிறைந்த வாழ்வை நேரடியாக கண்டு துயருற்றவன். ஆகவே, மலையக மக்களின் வாழ்வியல் பற்றியும் நிறையவே எழுதலானேன். ஆரம்பக் காலங்களில் என்னை மலையகக் கவிஞனாகவே அடையாளம் கண்டனர்.

எனது 'ஒரு அம்மாவின் கல்லறையில்' என்ற கவிதை இன்றுவரை பேசப்படுகின்ற ஒரு கவிதையாக இருக்கிறது. பெருந்தோட்டப் பிரதேசப் பாடசாலை காரியாலயங்களில் காட்சிப்படுத்தி வைத்து இருக்கிறார்கள். ஆசிரியர் பயிற்சி நெறிகளின் போது முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்கள். எனது கவிதைகளுக்கு கிடைக்கின்ற கௌரவம் அவை.

பிற்பட்ட காலங்களில் பல்வேறு பாடுபொருளில் எழுதலானேன். வேர்விட்டு வாழ்ந்த தாய் நிலம் அபகரிக்கப்பட்டு உலக வீதிகளில் அகதிகளாக அலைக்கழிக்கப்படுகின்ற பலஸ்தீன மக்களின் வாழ்வின் துயரத்தை என் ஷதாய் மண்| கவிதையில் பதிவு செய்தேன். அக்கவிதை தாய் மண்ணுக்காக போராடும் உலகின் எல்லா மக்களுக்குமான பொதுவான குறியீடு.

நான் பட்டப்பின் படிப்பு பயின்ற காலம் எனது பாடநெறி முடிந்து ஊர் திரும்பக் காத்திருந்த நேரம். ஒரு ஏழைச் சிறுவன் பிச்சைக் கேட்டு பயணிகளின் காலை தொட்ட வண்ணமே இருந்தான். இந்த துயர நிகழ்வு ஆறேழு நாட்களாக என்னை தூங்கவிடவில்லை. இதையே வறுமையின் ஒப்பாரியாக்கினேன்.

சமகாலத்தில் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட வாழ்க்கைச் சக்கரம் கவிதை பலராலும் பாராட்டப்பட்ட கவிதை பன்னூலாசிரியர் என் பெருமதிப்புக்குறிய அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் தான் தொகுத்து வழங்கும் இலக்கிய மஞ்சரி வானொலி நிகழ்ச்சியில் இருமுறை ஒலிபரப்பினார். பொதுவாக என்னைப் பாதிக்கின்ற எல்லா விடயங்களையும் கவிதையாக்கி விடுகின்றேன்.


10. உங்களது பூக்காலம் கவிதை நூலின் ஊடாக வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் செய்திகள் யாவை? 

எனது மேக வாழ்வு கவிதைத் தொகுதி வெளியாகி ஏழு வருடங்களின் பின்னர் எனது பூக்காலம் கவிதைத் தொகுதி வெளியாயிற்று. கால இடைவெளி அதிகம் என்றாலும் கூட அதுவே விதியாயிற்று.

இலங்கையில் இடம்பெற்ற முப்பது வருட போரின் பின்னரான இலங்கை மக்களின் சமூக வாழ்வியலை எனது பூக்காலத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றேன். கடந்த காலத்தில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் நிறையப் பேர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். அவை பற்றிய விஸ்வரூப வினாக்களுக்கு இப்போதுதான் விடை கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பின்னணியைத்தான் 'காணாமல் போனவன்' கவிதை பேசுகிறது. அது ஒரு காதல் மனைவியின் கண்ணீர் வரிகள். அதில் இழப்பின் வலியை இறுக்கமாகப் பேசியிருக்கிறேன். அரசியல்வாதிகளால் நாங்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்பதனையும் சூசகமாகப் பேசியிருக்கிறேன். இதே மையக் கருத்தில் காயங்கள் என்றொரு இன்னொரு கவிதையையும் எழுதியிருந்தேன். கடத்தப்பட்டு காணாமல் போன தனது மகனின் துயரத்தால் வேதனையுறும் ஒரு தாயைப் பாடி இருக்கிறேன்.

இலங்கையின் யுத்த சூழ்நிலையில் இருந்து உயிர் தப்ப, நிறைய இளைஞர்கள் கடல் மார்க்கமாக களவாக ஐரோப்பிய நாடுகளுக்கு பாய்ந்தோடத் தொடங்கினார்கள். நுpறையப் பேர் படகுடைந்து கடலுக்கு இரையான பெரும் துயரம் நிகழ்ந்தது. இவ்வாறு மகனை இழந்த ஒரு தாயின் இதய வேதனைகளை காயங்கள் காட்டமாகப் பேசுகிறது.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டு மூன்று தசாப்தங்கள் ஆகின்றன. அவர்களின் துயரம் மிக்க அகதி வாழ்வு நீள்கிறது. அரசியல் தலைமைகள் மாறி மாறி வந்த போதும் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வும், நிம்மதியும் இன்னும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அழகிய வாக்குறுதிகளால் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதனையே அகதி வாழ்வில் பேசியிருக்கிறேன்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்தப் போவதாக மாண்புமிகு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக செய்திகள் கசிந்தன. புலமைப் பரிசில் பரீட்சையால் மாணவர் படுகின்ற உள நெருக்கீடுகளை விடுதலை என்ற கவிதையில் உரத்துப் பேசியிருக்கிறேன். கல்விப் புலத்தில் நிறையப் பேரின் கவனத்தை ஈர்த்த கவிதையது.

நீண்ட நெடுங்காலமாக எங்கள் பிரதேசத்தில் குடிநீரின்றி சிரமப்பட்டோம். பதவிக்கு வந்த எல்லா அரசியல்வாதிகளாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்தோம். இதனையே அவர்கள் வந்தார்கள் கவிதையில் ஆக்ரோசமாகப் பேசினேன்.

ஆழ வேர்விட்டு அழகாய் உயிர் வாழ்ந்த தாய்நிலத்தை அபகரிப்பது என்பது வெந்துச் சாகும் வேதனையின் மொத்தம் இலங்கையிலிருந்து உலகம் வரை இதன் துயர வரலாறு நீள்கிறது. இதனையே என் தாய் மண்ணில் பேசியிருக்கிறேன்.

என் தந்தையை இழந்த தீராத வலியை 'அவர் ஓர் அழகிய கவிதை'யில் பேசியிருக்கிறேன்.

மேக வாழ்வுக்குப் பிறகு வெளிவரும் பூக்காலம் அவரது கவிதா மனதைப் பிசைந்து தருகிறது. சமூகத்தின் உயிர் அடிபடும் பேதெல்லாம் வெடித்து விழும் வேதனைகளிலும், துடித்தெழும் உணர்ச்சிப் பிரவாகத்திலும் தன் கவிதைகளை பூவில் தோய்த்து வருடச் செய்கிறார். இந்த வருடங்களில் சுகத்துக்கு அப்பால் வாசக மனசை பிராண்டிச் சுடும் கவிதைக் கனல் கொதிக்கிறது என வெளியீட்டுரையில் சொற் சிற்பக் கவிஞர் முல்லை முஸ்ரிபா (சொற்சிற்பி) குறிப்பிட்டிருந்ததை நினைவூட்ட விரும்புகிறேன். பூக்காலத்தின் உள்ளடக்கம் வெறும் சொல்லடக்கம் அல்ல. அதனால் தான் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய சாஹித்திய விழாவின் இறுதிச் சுற்றுக்கு தேர்வான மூன்று தொகுதிகளில் ஒன்றாக இடம் பிடித்தது. இவ்வாறு நிறைய சொல்லலாம்.


11. கவியரங்குகளில் கலந்துக் கொண்ட அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்? 

எங்கள் பிரதேசங்களில் இலக்கியம் மீதான ஈடுபாடு மிக மிகக் குறைவு. அறவே இல்லை என்றே கூறலாம். கவிதை மீது ஆர்வம் கொண்டவர்களை கண்டறிவது சிரமம். எனவே கவியரங்குகளுக்கு உரிய வாய்ப்பே இல்லை. பாடசாலை இலக்கிய மன்றங்கள் கூட மாணவர்களுக்கு கவியரங்க வாசலைத் திறந்து வைப்பதில்லை. தமிழ் மொழித்தினப் போட்டிகளுக்குக் கவிதை எழுத வைப்பதோடு கவிதானுபவம் முடிவடைந்து விடுகிறது. இந்தப் பின்னணியில் எனக்கும் கவியரங்க அனுபவம் இல்லை. மேடையில் கவிதைப்பாட கொழும்புக்கு அல்லது கிழக்கு மாகாணத்துக்குப் பயணிக்க வேண்டும். இதற்கும் சாத்தியம் குறைவு.


12. சமகாலத்தில் கவிதை நூல்களின் வரவு கணிசமாக அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் உங்களின் கவிதை நூல்களின் தனித்துவம் பற்றிக் குறிப்பிட முடியுமா?

எல்லா நூலாசிரியர்களும் பேண விரும்புகின்ற அதே நூதனங்களைத்தான் நான் எனது கவிதை நூல்களிலும் பேணிக் காக்க விரும்புகிறேன். அவற்றுக்குப் புறம்பாக வெலிமடை ரபீக் என்பதுதான் என் கவிதை நூல்களின் தனித்துவம். குறைந்தளவான வார்த்தைகளையே எனது கவிதைகளில் கையாள விரும்புகிறேன்.


13. சிறுவர் இலக்கியங்களைப் படைக்கும் போது எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் யாவை?

சிறுவர் உளவியலை கற்றிருப்பது சிறப்பு. அவர்களது விருப்பு, இயல்பு, கனவு, நடத்தை என்பவற்றை மனதில் கொள்ள வேண்டும். வெறும் போதனைகளை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் விரும்புகின்ற ருசியில் சிறுவர் இலக்கியங்கள் இருக்க வேண்டும். மென்மையான சொற்களைக் கையாள வேண்டும்.


14. உங்கள் நூலுக்கு எவ்வகையான விமர்சனத்தை வாசகர்கள் முன்வைத்தார்கள்?

பாராட்டும், வாழ்த்துக்களுமாக வந்து சேர்ந்தன. எனது மேக வாழ்வு வெளிவந்த காலம். போர்ச் சூழலில் வாழாத ஒருவர் எப்படி இப்படி ஆழமாய் போரின் காயங்களை வெளிப்படுத்துகிறார் என்று அதிசயித்தார்கள். தென்னிந்திய பல்கலைக்கழக மாணவர்கள் கூட எனது கவிதைகளை படித்துப் பாராட்டினார்கள். பன்னூலாசிரியர் என் பெருமதிப்புக்குரிய கவிஞர் எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் கூட நண்பர் மரபுக் கவிதை மன்னர் கிண்ணியா அமீரலி அவர்களிடம் என் பூக்காலத்தை கேட்டெடுத்து அவரது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவெழுதினார். ஒரு தரமான படைப்பைத் தாமதமாகத் தேடியெடுத்து விமர்சித்தெழுதும் பண்பு நம்மில் அரிது. அது அவரது பெரிய மனது. அதன் பின்பே நிறையப் பேர் என் பூக்காலத்தை தேடத் தொடங்கினார்கள். மதிப்புக்குரிய கவிஞர் நவீன சிறுகதை ஆசிரியர், அல் அஸுமத், மதிப்புக்குரிய எழுத்தாளர், தேசிய மொழி பெயர்ப்பாளர், எம்.எச்.எம். யாக்கூத் சேர் எல்லோரும் என்னைப் பாராட்டாமல் இருந்ததில்லை. இவைதான் மறுபடியும் மறுபடியும் எழுதத் தூண்டுகிற ஊட்டச் சத்து.


15. கவிஞராக இருக்கும் நீங்கள் சக கவிஞர்களில் கவிதைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தேடல் ஆர்வம் மிக்க ஒரு வாசகனாகவே பார்க்கிறேன். நல்ல கவிதைகளைப் படிக்கக் கிடைக்கின்ற போது என் மனக்கோப்பை நிரம்பி வழிகிறது. கைத்தேர்ந்த ஒரு சிற்பி கலைநுட்பம் நிறைந்த ஒரு சிற்பத்தைக் கண்டு அதிசயித்து நிற்பது போல கவிநுட்பம் நிறைந்த சில கவிதைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். நான் எல்லோரையும் அவர்கள் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு தூக்கிவிட விரும்புபவன். முடிந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கவிஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்க முயற்சிக்கிறேன்.


16. உங்கள் கவிதைகளின் வாசகர்கள் யாராக இருக்கின்றார்கள்?

கவிதை இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட பலர் என்னினிய வாசகர்களாக என்னோடு வாழ்கிறார்கள். முகநூலின் வருகைக்குப் பின்னே அது சர்வதேசம் வரை வியாபித்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் கூட தங்கள் வருட இறுதி கற்கை ஆய்வுக்காக எனது கவிதைகளை தேர்ந்தெடுக்கின்றார்கள்.


17. நீங்கள் இதுவரை எழுதியுள்ள கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கவிதை எது? என்ன காரணம்?

என் சொந்தக் குழந்தைகளில் எந்தக் குழந்தையை உங்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று கேட்டால் எனக்கு பதிலளிப்பது கடினம். ஆனால், உங்களின் கேள்விக்கு நான் ஏதாவதொரு கவிதையை முதன்மைப்படுத்த வேண்டியது முக்கியமாகிறது. என்னுடைய தந்தையின் மறைவின் பின்னரான வலிகளை வைத்தெழுதிய ஷஅவர் ஒரு அழகிய கவிதை|யைச் சொல்லாம். வாழ்வில் மாபெரும் கஷ்டங்களோடு அவர் எங்களை வளர்த்தெடுத்தார். சில ரூபாய்களை உழைத்து எங்கள் பசியை ஆற்றுவதற்காக தோளில் பாரம் சுமந்து ஊர் ஊராக அலைந்தார். நிரப்பப்பட முடியாத அவரின் வெற்றிடம் நிரந்தரமானது. என் ஒவ்வொரு கவிதையிலும் என் உயிரின் ஒவ்வொரு சொட்டு இருக்கிறது. எல்லாக் கவிதையுமே எனக்குப் பிடிக்கும்.


18. கவிதை, சிறுவர் இலக்கியத்துறை தவிர ஏனைய துறைகளில் நீங்கள் அக்கறை காட்டாமைக்கான காரணம் என்ன?

நவீன சிறுகதைகள் மீது எனக்கு அதீத ஆர்வம் இருக்கிறது. நான் எழுதிய ஓரிரு சிறுகதைகள் தேசிய பத்திரிகைகளில் களம் கண்டும் உள்ளன. மலையக நாட்டார் இலக்கியம் தொடர்பாகவும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். கல்வியியல் தொடர்பான கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். வரும் நாட்களில் இந்நிலைமை மாறும் என நம்புகின்றேன். எல்லாவற்றையும்விட கவிதை மீதெழுந்த காதல் அதிகம்.


19. உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள், வரவேற்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலங்கை இலக்கிய உலகம் சிலவேளைகளில், விசித்திரமானதாகவும் விரும்பத் தகாததாகவும் இருந்திருக்கிறது. விமர்சனங்களையும், விருதுகளையும் சிலவேளைகளில் தேடிப் போக வேண்டி இருக்கிறது. அதாவது விண்ணப்பிக்க வேண்டி இருக்கிறது. நான் கவிதைகளை எழுதி முடிப்பதோடு பெரும்பாலும் என்னையும் என் பேனாவையும் மூடி வைத்து விடுகிறேன்.

நல்ல படைப்புக்களைத் தேடியெடுத்து ஆய்ந்தெழுதும் பண்பு ஒரு சில நல்ல உள்ளங்களின் உயிரில் ஒட்டிக் கிடக்கிறது. கவிஞர் சொற்சிப்பி முல்லை முஸ்ரிபா, பன்னூலாசிரியர் மதிப்பிற்குரிய அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் என் கவிதைகள் குறித்தெழுதிய விமர்சனங்கள் என்றென்றும் மதிக்கத்தக்கவை. கவிதைகள் வெளியான பின்னர் குறுஞ் செய்திகளாகவும், முகநூல் பதிவுகளாகவும் வரும் கருத்துரைகளை பெரிதும் கௌரவிக்கின்றேன். விருதுகளை விட அவை விருப்பமானவை.

1994 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் என் கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்திய உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இளம் படைப்பாளிக்குரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். செவ்வந்தி கலை இலக்கிய வட்டம் 2008 ஆம் ஆண்டு ஊவா மாகாணத்தில் நடாத்திய சாஹித்ய விழாவில் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். 2009 ஆம் ஆண்டு இலக்கியப் போஷகர் புரவலர் புத்தகப் பூங்கா ஸ்தாபகர் ஹாசிம் உமர் அவர்களால் மனிதத்திற்கு மகுடம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். 2013 ஆம் ஆண்டு சிங்கள கவி சமாஜய என்ற அமைப்பினால் கவிச்சுடர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இன்றுவரை, எந்த இடத்திலும் நானதைப் பயன்படுத்தவில்லை.

2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண தமிழ் சாஹித்திய விழாவுக்கு அனுசரணையாக வெலிமடை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சாஹித்திய விழாவில் நானும் வெலிமடையின் மூத்தக் கவிஞர் தேடல் மிக்க ஆய்வாளர் கவிஞர் ஈழக்கவி அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டோம். அதற்கு முன்னர் ஏறக்குறைய பத்து சாஹித்திய விழாக்கள் மட்டும் நடைபெற்றிருக்கின்றன. ஒன்றின் பார்வைகூட என் மீதோ கவிஞர் ஈழக்கவியின் மீதோ விழவில்லை. மாலைகளுக்கும் கிரீடங்களுக்கும் நிறைய தலைகள் குனிந்து நிற்கின்ற உலகமிது.


20. நூல்களை வெளியிடுவதில் எழுத்தாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக எவற்றை முன்வைப்பீர்கள்?

நூல் வெளியீட்டுச் செலவு நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நம்மவர்களிடையே வாசிப்பு ஆர்வமும் குறைவு. பெரும்பாலானவர்கள் தன்னை இற்றைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு ஐம்பது பேரை திரட்டிக் கொள்வதும், அபூர்வமாக இருக்கிறது.

முன்நூறு புத்தகங்கள் அச்சிட்டு விற்றுத் தீர்ப்பதற்குள் மூச்சு வாங்குகிறது. தனக்குத் தெரிந்த வட்டத்துக்குள் உள்ளவரை தவிர்ந்த ஏனையவர்களின் நூல்களுக்கு விமர்சனத்தை, ஆய்வுரையை தானாகத் தேடி எழுதுவோர் குறைவு. இதனால் நல்ல நூல்கள் வாசகர்களை சென்று சேர்வதில்லை. சொந்தக் காசில் நூல் வெளியிட்டு நட்டமடைபவர்கள் அதிகம். புத்தகக் கடைகளுக்குப் போடுகின்ற புத்தகங்களுக்கு ஒரு வருடம் கடந்தும் காசு கிடைப்பதில்லை. காசுக்காக நாவைத் தொங்கவிட்டு நாயாய் அலைய வேண்டியிருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் இலவசமாகவே போய் விடுகின்றன. சொந்தக் காசில் நூல் வெளியிட்டு நட்டம் அடைந்தவர்கள் நம்மில் அதிகம். ஒன்றிரண்டு நூல்களை வெளியிட்டு ஏழை எழுத்தாளர்கள் உடைந்து விடுகிறார்கள். நல்ல பல கையெழுத்துப் பிரதிகள் அச்சு வரமின்றி எழுத்தாளர்களின் வீட்டு மூலைகளின் தூசுகளில் புதைந்திருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும்.


21. வளர்ந்துவரும் இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இலக்கியத் துறையில் வளர்ந்துவிட்டதாக என்னை நான் கருதுவதில்லை. ஒரு நல்ல விடயத்தை சிறு குழந்தை சொல்லித் தந்தால் கூட ஏற்றுக்கொள்வேன்.

ஆழமாகச் சிந்தியுங்கள். அற்புதமாக வெளியிடுங்கள். கவிதையில் உங்கள் கையொப்பம் இருக்கின்றதா என்று கவனியுங்கள் என காலஞ்சென்ற கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் சொல்லி வைத்துச் சென்றதைச் சொல்லி வைக்க விரும்புகிறேன்.


22. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக கவிதை இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டி வந்தாலும் இதுதான்; எனது முதலாவது பேட்டி. பேட்டி காணும் உங்களுக்கும் அதனை வெளியிடும் தினக்குரல் பிரதம ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பீடத்துக்கும் என் கவிதைகளுக்கு களம் தந்துதவி வரும் எல்லோருக்கும், என் இலக்கிய அபிமானிகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.


நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்

15. அனஸ் அப்பாஸ் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.03.10

அனஸ் அப்பாஸ் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் ஐ.ஏ. அனஸ். நீர்கொழும்பு, போருதோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட பாத்திமா நஸ்லீமா - இபுனு அப்பாஸ் தம்பதிகளின் மூத்த புதல்வன். எனக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள்.
மூத்த சகோதரன் குவைத் நாட்டில் அரச பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார். மூத்த சகோதரி கலைப் பிரிவில் பட்டப் படிப்பை தற்போது ஆரம்பித்துள்ளார். ஏனைய இருவரும் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். நான் தற்போது இங்கிலாந்தின் வணிக பகுப்பாய்வு முதுமாணிப் பட்டத்தை (Msc. in Business Analystics) கொழும்பில் உள்ள வை கல்வி நிறுவனத்தில் தொடர்ந்து வருகின்றேன்.


02. உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான்கு பாடசாலைகளில் கற்ற அழகான அனுபவம் எனக்கு இருக்கின்றது. தரம் 01 முதல் தரம் 06 வரை எமது ஊரிலேயே உள்ள நீர்/ அல் பலாஹ் மகா வித்தியாலயத்திலும், தரம் 07 முதல் தரம் 09 வரை மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியிலும், தரம் 10 முதல் - தரம் 11 க.பொ.த சாதாரண தர பரீட்சை வரை நீர்/ விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியிலும், இறுதியாக, உயர்தரத்தை நீர்/ அல் ஹிலால் மத்திய கல்லூரியிலும் கற்றேன். பாடசாலைக் காலத்தில் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி, மீலாத்தின போட்டி, விளையாட்டுப் போட்டி என பல போட்டிகளில் பங்கு பற்றியிருக்கிறேன். வகுப்புத் தலைவராக (ClassMonitor) ஊடகத் துறைத் தலைவராக (Media President), மாணவத் தலைவராக (Prefect) பதவிகள் வகித்திருக்கின்றேன். நான்கு வித்தியாசமான சூழலில், வித்தியாசமான நூற்றுக்கணக்கான நண்பர்களுடன் பழகிய அனுபவம் இன்றும் எனது தொழில் வாழ்க்கைக்குப் பல வழிகளில் உதவுகின்றது. நான்கு பாடசாலைகளினது பழைய மாணவராக இருக்கின்ற அங்கீகாரமும் கிடைப்பதற்கரியதே.


03. தேசிய ஊடக மத்திய நிலையத்தில் கடமையாற்றுவது குறித்து..?

2016 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, அண்மையில் மேதகு ஜனாதிபதி அவர்களால் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய ஊடக மத்திய நிலையத்தில் தகவல் உத்தியோகத்தராகக் கடமையாற்றுவது, ஒரு த்ரில்லான அனுபவம். ஊடகத் துறையில் அனுபவம் இருந்த நிலையில் இங்கு பணியாற்றுவது மிகவும் இலகுவாகவும், சுமூகமாகவும் இருக்கின்றது. என் சக அலுவலக நண்பர்கள் பட்டதாரிகளாகவும், ஊடகத் துறையில் (தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, இதர) அனுபவமும், முதிர்ச்சியும் உள்ளவர்களாக இருப்பது தேடல் சார்ந்த விடயங்களில் என்னைத் தொடர்ந்தும் உத்வேகப்படுத்தும் ஒரு சக்தியாகவும் இருக்கின்றது.


04. இந்நிலையத்தினூடாக நீங்கள் மேற்கொள்ளும் பணி?

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் சார்ந்த விடயங்கள், ஊடக ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ளவே 2016 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக தேசிய ஊடக மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது. உலகின் அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான், இந்தியா, மேற்கு நாடுகள், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட அரபு நாடுகள் பலவற்றிலும் இந்நிலையம் காணப்படுவதாக இந்நிலையத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர மாக்கார் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம் ஆகிய மூன்று தூண்களை இணைத்து, சுயாதீனமாக இந்நிலையம் தொழிற்பட்டு வந்தது. அண்மைய அரசியல் நெருக்கடியின் பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களத்தையும், பிரதமர் அலுவலகத்துடன் இணைத்திருந்த தேசிய ஊடக மத்திய நிலையத்தையும், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்கள் தனது கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பட்டியலிட்டுள்ளார். இதன் பிரகாரம் தற்போது ஜனாதிபதிக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.


05. எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?

2012 ஆம் ஆண்டு உயர்தரப் பரிட்சை முடிந்ததும் கொழும்பிலுள்ள அக்வைனாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிநுட்ப பட்டப் படிப்பை (I.T Degree) ஆரம்பித்தேன். ஏக காலத்தில் மீள்பார்வை பத்திரிகை அலுவலகத்தில் பகுதிநேர சந்தாதாரராக இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாட்கள் நகர்ந்தன. சமூக வலைதளங்களில் எனக்கிருந்த ஆக்க ரீதியான ஈடுபாட்டைக் கண்டு பிரதம ஆசிரியர் பியாஸ் முகம்மத் அவர்கள் மீள்பார்வை இணையத்தள ஆசிரியராக என்னை நியமித்தார். அதன் சமூக ஊடகப் பக்கங்களையும், வீடியோ ஆவண செயற்பாடுகளையும் மகிழ்வுடன் பொறுப்பேற்று நடாத்தக் கோரினார். இதுவே எனது எழுத்துத் துறைப் பிரவேசம் எனலாம். இணையத்தள கட்டுரையாளராக, வீடியோ ஆவணச் செய்தியாளராக, பத்தி எழுத்தாளராக முன்னேறி மீள்பார்வை பத்திரிகை ஆசிரியர் குழுமத்திலும் இடம்பிடித்தேன். அல்ஹம்துலில்லாஹ். எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட காரண கர்த்தா எனும்போது, எனக்கு சமூக உணர்வை ஊட்டிய தந்தையையும், அடிப்படை அறிவைப் போதித்த தாயையும், எனக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களையும், குறிப்பாக எழுதுவதற்கு வாய்ப்பை வழங்கிய பியாஸ் முஹம்மத் அவர்களையுமே குறிப்பிட வேண்டும்.


06. உங்களது முதலாவது படைப்பு எதில், எப்போது வெளிவந்தது?

எனது முதலாவது படைப்பாக "தேசிய சாதனை மடல்" என்ற நூல் கடந்த ஆண்டு (2018) இல் Focus Media (Pvt) Ltd நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மீள்பார்வை பத்திரிகையில் நான் தொடராக எழுதிவந்த முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேசிய ரீதியில், சர்வதேச ரீதியில் அரிய சாதனையை மேற்கொண்டவர்களின் நேர்காணல் பத்திகளின் தொகுப்பாகவே அது வெளிவந்தது. அதில் 30 நபர்கள் கௌரவிக்கப்பட்டனர். நான் தொடர்ந்து எழுதிவரும் பத்திகளை பிரதி வருடமும் நூலாக வெளியிட மீள்பார்வை பத்திரிகை நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. இதன்படி இரண்டாவது நூலுக்கான மூன்றில் ஒரு பகுதி நேர்காணல்களை இதுவரை நிறைவு செய்துள்ளேன்.


07. எத்தனை ஆண்டுகளாக எழுதி வருகின்றீர்கள்?

2012 ஆம் ஆண்டளவில் சுய ஆர்வ உந்துதலால் எழுத ஆரம்பித்தேன். அதுவும் சமூக வலைதளங்களில். பல முகநூல் பக்கங்களின் Admin ஆக செயற்பட்ட அக்காலப் பகுதியில் நிறையவே எழுதினேன். குறிப்பாக இந்தியாவை மையமாகக் கொண்டு நான் தொடங்கிய சமூக நல முகநூல் பக்கமொன்று இலட்சக் கணக்கான விருப்பங்களையும், பாரிய வரவேற்பையும் பெற்றதே என்னைத் தொடர்ந்தும் எழுத ஊக்கப்படுத்தியது. இதன்பின்னர் இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளின் போதுதான் ஊடகவியல் குறித்தான ஆர்வம் என்னைத் தொற்றியது.


08. பத்திரிகைத் துறையில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது? அந்த அனுபவம் பற்றியும் கூறுங்கள்?

எந்தவொரு கட்டத்திலும் ஒரு ஊடகவியலாளராக, பத்திரிகையாளராக வருவேன் என்று நான் எண்ணியது கிடையாது. முன்னர் நான் குறிப்பிட்டது போன்று மீள்பார்வை பத்திரிகையே என்னை ஊடகத்துறைக்குள் ஈர்த்தது. அதையும் ஒரு தற்காலிக முடிவாகவே நான் எடுத்தேன். ஆனால், இறைவனின் நியதி, நான் என்னை அதற்காக அர்ப்பணிக்கும் நிலைக்கு ஆக்கியது.

நான்கு சுவர்களால் அடைக்கப்பட்ட அறைக்குள் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதை மனதால் எண்ணிப் பார்த்து, அதனை வெறுக்க ஆரம்பித்ததே தொடர்ந்தும் என்னை ஊடகத் துறையில் முன்னேற்றியது எனலாம். புதிய உலகை இதனால் பார்க்கக் கிடைத்தது. நலிவடைந்தவர்கள், அநீதியிழைக்கப்பட்டவர்கள், குரலற்றவர்கள், பெரும் அரசியல்வாதிகள், அதிகாரமுள்ளோர், சாதனை செய்தோர் என சமூகத்தில் உள்ள சகல விதமான மக்களைச் சந்திக்கவும், அவர்களுடன் பழகவும், அவர்களது உணர்வுகளை புரியவும், அலசவும் இது ஒரு கிடைப்பதற்கரிய வாய்ப்பாகவே இருந்தது.
பெரும் பணம் செலவு செய்தும் கிடைக்க முடியாத நபர்களின் சந்திப்பைப் பத்திரிகைத்துறை சாத்தியப்படுத்தி இருக்கின்றது. பத்திரிகைப் பணிக்காக மேற்கொண்ட பயணங்களில் பலரது கண்ணீர் எனது வாழ்வை சீரமைக்க உதவியிருக்கின்றது. அவர்களது கண்ணீருக்குப் பின்னர் மனதார மேற்கொண்ட பிரார்த்தனைகளை எனது வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றகரமான, அதி உன்னத பொழுதுகளிலும் நன்றியுடன் எண்ணிப் பார்ப்பேன்.

பிரார்த்தனைகள் அதிசக்தி வாய்ந்தவை. அதிலும், அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள்வீராக, ஏனெனில் அவரின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் எத்தகைய திரையும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பத்திரிகைத்துறை சோறு போடாது என்பார்கள். ஆம், அது உண்மை. 05 வருடங்கள் மிகச் சொற்ப சம்பளத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அது ஒரு மன நிறைவானதும் சுவாரஷ்யமானதுமான தொழிலாகும்.


9. இலக்கிய வகைப்பாட்டுக்குள் நீங்கள் அதிகம் விரும்பும்துறை? ஏன்?

ஊடகப் பணியில் ஈடுபட ஆரம்பித்த பின்னரே இலக்கியத் துறையில் முன்னரைவிட அதிக நாட்டம் ஏற்பட்டது எனலாம். துரமான கவிதை, சிறுகதை, நாவல், பாடல், நூல் விமர்சனம் ஆகியவற்றின் மேல் என்றும் ஒரு தீராப் பசி இருக்கின்றது. மிகவும் விரும்பும் வகை என்று இதில் எதனையும் என்னால் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை. எமது ஊரில் நிறைய கவிஞர்கள் இருக்கின்றார்கள். பலபோது வட்சப் குழுமங்களில்கூட கவிச் சமர்களை மேற்கொள்வர். இதுவும் சுவாரஷ்யமாக இருக்கும். கவிதைகளை எழுத முயற்சிக்கவும் தூண்டும். சிறுகதை, நாவல்களை வாசிப்பதில் முன்னர் கடும் ஆர்வம் இருந்தது. ஆனால் தற்போது அது குறைவு.


10. நீங்கள் வெளியிட்ட "தேசிய சாதனை மடல்" குறித்து..?

இலக்குகளை வகுத்துக் கொண்டு செயல்படுபவர்கள் தங்கள் காலடிச் சுவடுகளை எவருமே பயணித்திராத ஒரு இடத்தில் பதித்து புதிய பாதைகளை உருவாக்குகிறார்கள். அப்படி தமக்கான பாதையில் உச்சம் தொட்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேசிய, சர்வதேச ரீதியில் சாதனை புரிந்துவிட்டு தனது அடுத்த சாதனைக்கு முயற்சித்துவரும், வாழும் சில உதாரணங்களையே ஷஷதேசிய சாதனை மடல்|| தாங்கி வந்தது. இலங்கையில் சிறுபான்மை சமூகமொன்றாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து தேசத்துக்கு பெருமை சேர்க்கும் சாதனையாளர்களை, கௌரவிக்கும் ஒரு செயற்பாடாகவும், ஆவணமாக்கும் ஒரு முயற்சியாகவும் இதனை குறிப்பிடலாம். இதில் கண்டு பிடிப்பாளர்கள், விளையாட்டுத் துறை உள்ளிட்ட பலதேசிய, சர்வதேச அரிய சாதனை நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். மீள்பார்வைப் பத்திரிகைக்கு தொடராக நான் எழுதிவரும் இப்பத்திகளை ஒவ்வொரு வருடமும் தொகுத்து வெளியிட Focus Media நிறுவனம் முன்வந்தமைக்கு எனது நன்றிகள்.


11. அடுத்து எவ்வகையான நூல்களை வெளியிட உத்தேசம்?

"தேசிய சாதனை மடல்" நூல் எனக்கு ஏற்படுத்தித் தந்த அங்கீகாரத்தையும், சந்தோசத்தையும் சொற்களால் வர்ணிக்க முடியாது. பத்திரிகைக்கு எழுதும்போது கிடைத்த வரவேற்பைவிட நூலாக வெளிவரும்போது கிடைத்த வரவேற்பு அலாதியானது. நூல் வெளியீட்டு நிகழ்வை முழு ஊருமே கொண்டாடித் தீர்த்தது. அரங்கம் நிறைந்தமை, வெளியீட்டாளர்களையும், ஏற்பாட்டாளர்களையும் (பலகத்துறை கலை இலக்கிய வட்டம்), விசேடமாக பங்களித்த SMFC குழுமத்தையும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அடுத்த நூல், அதே வரவேற்புடன் அல்லது அதைவிட அதிகமாக சமூகம் எதிர்பார்க்கும் விதமாக அமைய, தரமாக பத்திகளை எழுத கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொருவருடமும் புதிய பல முகங்களை சமூகத்துக்கு ஆவணப்படுத்திக் கொடுக்க வெளியீட்டாளர்களதும், சமூகத்தினதும் பங்களிப்பு தொடர்ந்து அவசியம். வேறு நூல்களை வெளியிட தற்போதைக்கு எவ்வித உத்தேசமுமில்லை.


12. ஏனைய எழுத்தாளர்களுடனான உறவு எப்படியுள்ளது?

இறைவன் அருளால் பல நாடுகளைச் சேர்ந்த பல வகையான எழுத்தாளர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றேன். அவர்களுடைய பதிவுகளை வாசிக்கின்றேன். அவர்களும் என்னை பல வழிகளில் ஊக்கப்படுத்துகின்றார்கள். நூல் வெளியீடுகள், விழாக்களின்போது பல புதிய எழுத்தாளர்களுடன் அறிமுகம் ஏற்படுகின்றது. உயிரோட்டமிக்க எழுத்துக்கள் வேண்டுமாயின், அதிகமதிகம் வாசிக்க வேண்டும். தொழிநுட்ப முன்னேற்றத்தின் பயனாக இன்று அவர்களது ஆக்கங்களை உடனுக்குடன் வாசிக்கவும், கருத்துக்கள்ளைப் பகிரவும் சந்தர்ப்பம் அதிகமாகி இருக்கின்றது.


13. உங்கள் படைப்புகளுக்கு ஊடகங்கள் எவ்வகையில் உதவுகின்றன?

சமூக வலைதளங்கள் சிறந்த எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் ஒரு சிறந்த ஊடகம். நிறைய எழுதவும், மீள் வாசிக்கவும் எனக்கு உதவுகின்றது. கடந்த 05 ஆண்டுகளில் நிறைய ஊடகத்துறை நண்பர்களைப் பெற்றிருக்கின்றேன். அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களில் எனது ஆக்கங்களுக்கு நிறையவே இடம் தந்திருக்கின்றார்கள். இணையத்தள நிர்வாகிகளாக இருக்கும் நண்பர்களும் சிறந்த ஆதரவைத் தொடராக தருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.


14. யாருடைய எழுத்துக்களை அதிகம் வாசிக்கின்றீர்கள்?

பாரபட்சமின்றி இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்களை அதிகம் வாசிக்கின்றேன். ஒவ்வொரு எழுத்தாளர்களும் கையாளும் விஷேட உத்திகளை இதன் மூலம் ரசித்து உள்வாங்க முடிகின்றது.
எழுதுவதற்கான எரிபொருளாக பல்வகை எழுத்தாளர்களின் ஷஷவித்தியாசமான மொழிநடைகள்|| உதவுகின்றன. முகநூலிலும் நிறைய எழுத்தாளர்கள் உருப்பெற்றிருக்கின்றார்கள். ஏக காலத்தில் பேசு பொருளாக உள்ள வசனங்களை சுவாரஷ்யத்துக்காக இவர்கள் உள்நுழைத்து எழுதுகின்றமை வாசகர்களைக் கவர்ந்து வருகின்றன. தவிரவும் ஒரு விடயத்தை புள்ளியுடனான கவனக் குவிப்பு (குறிப்பாக ட்விட்டர்) எழுத்துக்களும் பாரிய அடைவுகளுக்கு வழியமைக்கின்றன.


15. எழுத்துக்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

புகழனைத்தும் இறைவனுக்கே! நிறையவே பாராட்டுக்களை எனது எழுத்துக்கள் பெற்றிருக்கின்றன. முதல் அங்கீகாரம் சமூக வலைத்தளங்கள். பின்னர் பத்திரிகை. இறுதியாக "தேசிய சாதனை மடல்" நூல். இவைதவிர மேலும் பல பரிசுகளும் கிடைத்திருக்கின்றன.

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்

14. திக்குவல்லை கமால் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.09.30

திக்குவல்லை கமால் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

அறிமுகம்: தென்னிலங்கையைச் சேர்ந்த திக்குவல்லை கமால், நீண்டகாலமாக எழுதி வருபவர். ஆரம்ப காலம் முதலே மாற்றுச் சிந்தனை கொண்டவராக இயங்கி வருகிறார். ஆசிரியராக ஆரம்பித்து பிரதிக் கல்விப் பணிப்பாளர் வரை உயர்ந்து, தற்போது ஓய்வு நிலையில் உள்ளார். புனைகதை, கவிதை, ஒலி நாடகம், மொழிபெயர்ப்பு என்று கணிசமான ஆக்கங்களையும் 50 க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளிக் கொணர்ந்துள்ளார். சாதனை விருதுகளையும் இலக்கியக் கௌரவங்களையும் நிறையவே பெற்று வருபவர். மொழி வேலி கடந்து இலக்கிய சஞ்சாரம் செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எழுத்தாக்கத் துறையில் ஆர்வம் ஏற்படக் காரணமென்ன?

இலக்கியம் இரத்தத்தில் இருக்க வேண்டுமென்று சொல்வார்கள். பிறப்புரிமையாய் இலக்கிய உணர்வு வந்து வாய்க்க வேண்டுமென்பதே இதன் அர்த்தம். அப்படி இருக்கும் பட்சத்தில்தான் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படும். இவ்வாறாகவே எனக்கும் எழுத்துத் துறையில் ஆர்வம் மேலிட்டிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் எழுத்தாளர் ஆனவர்களையும் ஆக்கப்பட்டவர்களையும் நாம் காண்கிறோம். இவர்கள் அடித்தளமில்லாத கட்டிடம் போல் காலப்போக்கில் சரிந்து காணாமல் போய்விடுகிறார்கள்.


உங்கள் முதலாவது படைப்பு எவ்வாறு, எப்போது உருப்பெற்றது? அதனை வெளியீடு செய்வதில் எவ்வகையான சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?

எனது முதலாவது படைப்பு ஒரு சிறுகதை. 'தண்டனை' என்ற இக்கதை 1968 இல் 'ராதா' பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது நான் மேல் வகுப்பு மாணவனாக இருந்தேன். அக்கதையை வெளியீடு செய்வதில் நான் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை. ஒரு பத்திரிகைக்கு எவ்வாறு ஒரு ஆக்கத்தை அனுப்புவதென்பதை நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஏ.இக்பால், இ. சந்திரசேகரன் போன்ற இலக்கியவாதிகள் எனது ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் எல்லா வகையிலும் என்னை நெறிப்படுத்தினர்.


ஒரு படைப்பாளன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

என்னைப் போன்ற, கிராமத்துக்காரனான ஒரு சாதாரண இலங்கைப் படைப்பாளி எப்படி இருக்க வேண்டுமென்பதே எனது பதிலாக இருக்கும். இலக்கியத்தினூடாக சமூக விமர்சனம் செய்யும் படைப்பாளி, அந்த சமூகத்தில் மோசமாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர், பணிப்பாளர், செயலாளர்கள், டாக்டர்கள், சட்டத்தரணிகள், இப்படியெல்லாம் பலதரப்பட்ட படைப்பாளிகள் இருக்கின்றனர். உத்தியோகம் வேறு இலக்கியம் வேறு என்று சொல்ல முடியாது. கடந்த காலங்களில் மோசமான விமர்சனத்துக்குள்ளான படைப்பாளிகளைப் பற்றி நாமறிவோம். தனிப்பட்ட நடத்தைகள், குடும்ப வாழ்வு, கொடுக்கல் வாங்கல், சக மனிதருடனான ஊடாட்டம் இப்படி எல்லா வகையிலும் ஒரு படைப்பாளி முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

படைப்பு வேறு, படைப்பாளி வேறு, யார் என்பது முக்கியமல்ல, என்ன சொல்லப்படுகிறதென்பதே முக்கியம் என்றெல்லாம் தத்துவார்த்தம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படிச் சொல்லித் தப்பிக் கொள்ள சமகாலச் சமூகம் இடம்தரப் போவதுமில்லை.


எவ்வாறான படைப்புக்களை வெளியிடுகிறீர்கள்?

எனது சுய ஆக்கங்களை அதிகமாக வெளியிட வேண்டுமென்றே விரும்புகிறேன். அதற்கு நிறையப் பணம் தேவை அல்லது வெளியீட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும். இரண்டுமே சாத்தியமில்லை. தனிநபர்களிடம் கையேந்தி, வெளியீட்டு விழா நடாத்தி பணம் சேகரிப்பது போன்ற 'புத்தி| எனக்கில்லை. சகோதர மொழிகளுக்கிடையிலான இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள் காலத்தின் தேவை. இதனை விளங்கிக் கொண்ட பெரும்பான்மைச் சமூகத்து சில வெளியீட்டு நிறுவனங்கள் அதற்கு முன்வந்துள்ளன.

இனநல்லுறவை மேம்படுத்தும், உள்ளடக்கம் கொண்ட படைப்புக்களைத் தெரிவு செய்து, அதைச் சிறப்பாக இலக்கு மொழிக்கு கொண்டுவரும் ஆற்றல் உள்ளவர்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வாய்ப்பு எனக்கும் கிட்டியுள்ளது.


பதிப்பகங்களினூடாக புத்தகங்களை வெளியிடும் போது புத்தகத்தின் விலையைத் தீர்மானிப்பதில் குறிப்பிட்ட பதிப்பகமே தீர்வை எடுத்துக் கொள்கிறது. எழுத்தாளனின் தீர்மானத்துக்கு இங்கு இடமில்லையே ஏன்?

தனிப்பட்ட முறையில் நூல் வெளியிடும் போது நூலாசிரியர் தாம் விரும்பியபடி விலை போட்டுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. பதிப்பகங்கள் பொறுப்பெடுத்து வெளியிடும் போது நிலைமை வேறு. பதிப்பித்தல், விநியோகம், விற்பனை போன்ற சகல விடயங்களையும் அவர்களே மேற்கொள்கின்றனர். அது மட்டுமன்றி நூலின் விலை, பிரதிகளின் எண்ணிக்கைக்குமேற்ப ஆசிரியர் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. அதனால் விலை நிர்ணயித்தலில் ஆசிரியர் தலையிட முடியாது. பதிப்பகங்களில் விலையை தீர்மானிப்பதற்கென்று தனியான அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வானொலி நாடகங்களுக்கு கூடுதலான பங்களிப்பு செய்துள்ள தாங்கள் அதுபற்றிக் கொஞ்சம் சொல்வீர்களா?

1970-80 களில் வானொலி நாடகம் கொடி கட்டிப் பறந்த காலம். முஸ்லிம் சேவை நாடகங்கள் முஸ்லிம் அல்லாதவர் மத்தியிலும் தமிழ் நாட்டிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தொண்ணூறுகளிலிருந்து தொலைக்காட்சியின் வரவால் மாத்திரமன்றி உள்நிலைக் காரணங்களாலும் வீழ்ச்சி கண்டதென்றே சொல்ல வேண்டும். இன்றும் நேயர்கள் மத்தியில் அதற்கான வரவேற்புண்டு. புகையில் கருகிய பூ (2001), நிராசை (2005) ஆகிய எனது இரண்டு நாடகப் பிரதித் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.

நிறைய ஒளிபரப்பான நாடகப் பிரதிகள் கைவசமுண்டு. 'மண்ணில் விழுந்த நிலவு' என்ற தொடர் நாடகம் ஒலிபரப்பாகியது. அப்பொழுது வானொலி நாடகப் பிரதிக்கும் நடிகர்களுக்கும் சன்மானம் கொடுத்தார்கள். இன்று நிலைமை அவ்வாறில்லை. ஏனைய நிகழ்ச்சிகளின் நிலையும் அதுதான். பெயருக்காகவோ, புகழுக்காகவோ, நல்லெண்ணத்துடனோ விரும்பியவர்கள் வந்து இலவசமாக செய்துவிட்டுப் போகலாமென்ற நிலை. சமூகத்துக்கு நல்ல செய்திகளைச் சொல்வதற்கு ஒலி நாடகம் நல்லதொரு ஊடகம். அந்த வாய்ப்பு அற்றுப்போனது கவலைதான்.


மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, பின் நவீனத்துவக் கவிதை பற்றிய உங்களது பார்வை என்ன? 

காலத்தின் தேவையை ஒட்டிக் கவிதை தனக்கான பெயர்களைப் புனைந்து கொள்கிறது. எனது கவிதை வாசிப்பில் நான் கவிதைகளை மூன்று விதமாகப் பார்க்கிறேன். அவை விளங்கும் கவிதை, விளங்கியும் விளங்காததுமான கவிதை, விளங்காத கவிதை. ஒரு கவிதை விளங்குகிறது என்பதற்காக அது நல்ல கவிதை என்ற அர்த்தமல்ல. புதுக்கவிதை தமிழில் அறிமுகமான போது அதன் உள்ளடக்கம் உள் மன ஓலங்கள், விரக்தி, விரசம் கொண்டதாகவுமே இருந்தது.

புதுக்கவிதையின் உருவத்தை வரவேற்ற பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் வானமாமலை போன்றவர்கள் மானுட உள்ளடக்கம் கொண்டதாகக் கவிதைகள் அமைய வேண்டுமென வலியுறுத்தினர். ஷவானம்பாடி'கள் மானுடம் பாடத் தொடங்கினர். மீரா, கங்கைகொண்டான், தமிழன்பன், அரங்கநாதன், அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஞானக்கூத்தன், இன்குலாப் இப்படியொரு பட்டாளமே வெளிப்பட்டது. 'உங்கள் கவிதை விளங்குதில்லையே' என்று சொன்னால் அதை கௌரவமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்.

'கவிதை எல்லோருக்கும் விளங்கவேண்டுமென்ற அவசியமில்லையே' என்பாரும் உளர். பல்லாயிரம் கவிதைகள் எழுதப்படுகின்றன. எல்லாம் நின்று நிலைக்கவா போகின்றன. இப்படியான சந்தர்ப்பங்களில் எனக்கு சில்லையூர் செல்வராசனை ஞாபகம் வரும். அவர் சொல்வார் இப்படி.. 'வல்லன வாழும்'.


இலக்கியத்தின் சகல துறைகளிலும் பங்களிப்பை நல்கியுள்ள நீங்கள் எப்பேர்ப்பட்டவைகளை எழுத முடியவில்லையே என ஆதங்கப்படுகிறீர்கள்? 

ஒரு படைப்பை வெளிக்கொணர முனையும் போது அதற்குப் பொருத்தமான கலை உருவத்தை தெரிவு செய்கிறோம். அந்தக் கலை உருவத்துக்கான வெளியீட்டு வாய்ப்பு இருக்கின்றதா என்றும் பார்த்துக் கொள்கிறோம். வெளியீட்டு வாய்ப்பில்லாத போது எழுதிப் பயனில்லை. அதனால் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதுபோக, இன்று இன-மத முறுகல்கள் மலிந்து காணப்படுகின்றன. எழுத வேண்டிய விடயங்கள் ஏராளம். பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதன் காரணமாக எழுத வேண்டிய பல சமூகப் பிரச்சினைகளை எழுத முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்குண்டு.


அளவுக்கதிகமாக பதிவிடப்படும் முகநூல் கவிதைகள் பற்றி யாது நினைக்கிறீர்கள்? 

முகநூல் கவிதைகள் பிரசவ வேதனை இல்லாத பிரசவங்கள். இடைத்தடை இல்லாத வெளிப்பாடுகள். தாங்கள் கவிதைகள் என்று நினைத்து எதையோ எழுதுகிறார்கள். கவிதைகள் என்று நினைத்து 'லைக்கும், பின்னூட்டலும்' செய்கிறார்கள். மனதில் பட்டதை கொட்டித் தீர்ப்பதற்காக, மனப்பிரமைகளை வெளிப்படுத்துவதாக, தன்நிலை சார்ந்ததாகவே எழுதுகிறார்கள். புத்தகம் போடவும் துணிந்துவிடுகிறார்கள்.

முகநூலை ஒரு பழகுதனமாகக் கருதி, பின்னர் பத்திரிகை சஞ்சிகைகளிலும் எழுதி அதிலிருந்து தொகுப்பு முயற்சிகளுக்கு செல்லும் போது பக்குவமான கவிஞர்களாக வெளிப்படலாம். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் முகநூல் மூலமாகவும் சில நல்ல கவிஞர்கள் வெளிப்பட்டுமிருக்கிறார்கள்.


சமகால இலக்கியத்தின் இன்றைய தேவை என்ன?

ஒரு தேசத்தின் புத்திரர்களாய் கைகோர்த்து வாழ வேண்டிய நாம் வேறுபட்டுக் கூறுபட்டுப் போயிருக்கிறோம். அரசியல் தேவைக்காக இனவாதம் எல்லாப் பக்கமும் எல்லா வகையிலும் பரப்புரை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் எல்லாமும் பெற்று வாழவும், பன்முகப் பண்பாட்டைப் புரிந்து கொள்ளச் செய்யவும், மனித நேயத்தைவிட மகத்தானது வேறொன்றில்லை என்பதை உணர்த்தவும் மிகப் பெரும் பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதில் இலக்கியத்தின் பங்கு மிக முக்கியமானது. இதுதான் இன்றைய தேவையும் கூட.


புலம்பெயர் இலக்கியங்கள் குறித்து உங்கள் கணிப்பு யாது? 

யுத்தம், சுதந்திரமாக வாழ்தல், பொருளீட்டல் இப்படிப் பல நோக்கங்களோடு இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்கின்றனர். இவர்களுள் இலக்கியவாதிகளும் அடங்குவர். யுத்த சூழலுக்கு முகம் கொடுத்தவர்கள் தமது அனுபவங்களை இலக்கியமாக்கி வருகின்றனர். எந்தத் துப்பாக்கிகளதும் பயமுறுத்தலற்ற சுதந்திரப் படைப்புக்களாக அவை வெளிப்படுகின்றன. அவர்கள் எல்லோருமே ஏக பார்வையும் நோக்கும் கொண்டவர்களென்று சொல்வதற்கில்லை.

இதற்கு அப்பால், பெயருக்காக ஏதாவது எழுதினால்தான் கௌரவம் என்பதற்காக, இலங்கை வரும்போது கையில் ஒரு புத்தகத்தோடு வந்து ஒரு 'சோ'| காட்டிவிட வேண்டும் என்பதற்காகவெல்லாம் புத்தகம் எழுதப்படுகின்றன. பொதுவாக யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து, யுத்த அவலங்களையும் அனுபவங்களையும் எழுதுவதே 'புலம்பெயர் இலக்கியமாக' கருதப்படுகின்றன. இத்தகைய நிறைய ஆக்க இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் முப்பது வருட கால யுத்தப் பதிவுகளாகவும் அதேவேளை இலக்கியப் பெறுமானம் கொண்டதுமான கணிசமான பிரதிகள் கிடைக்கப் பெற்றுமுள்ளன.


இக்காலத்தில் வாசகர்களை விட கவிஞர்கள் அதிகமாகிவிட்டார்களா? 

அப்படிச் சொல்லத் தோன்றுகிறதுதான்தான். கவிதை அமைப்பில், மிகக் குறைந்த சொற்களில் எவராலும், எழுதிவிடக் கூடிய வசதி இருப்பதால் எல்லோருமே கவிஞர்களாகிவிடலாம். இடைத்தடங்கலற்ற எழுது களங்கள் இப்பொழுதெல்லாம் தாராளமாக இருப்பது இன்னொரு வசதி. ஒரு நல்ல வாசகனால்தான் ஒரு நல்ல இலக்கியவாதியாகலாம் என்பார்கள். இன்று அப்படியில்லை. பேராசிரியர் கா. சிவத்தம்பி 'கவிஞர்கள் தோன்றிய அளவுக்கு கவிதைகள் தோன்றவில்லை' என்பார். அது எவ்வளவு உண்மை.


ஈழத்து இலக்கியத் துறைக்கு நீண்ட காலமாக காத்திரமான பங்களிப்பை நல்கிவிரும் உங்களின் தற்போதைய எழுத்து முயற்சிகள் என்ன? 

புதிதாகவோ பெரிதாகவோ ஒன்றுமில்லை. இதேபோக்கில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதுதான் சாத்தியம். எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான நேரம், ஆரோக்கியம் கருதி வரவரக் குறைந்து செல்வது தவிர்க்க முடியாததே. எழுதிய பல விடயங்களைத் தொகுத்து நூலாக்க வேண்டுமென்று விரும்பினாலும் அதற்கான வசதி வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொதுவான கவலைதான்.

'ஓர் எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் எவ்வளவு புத்தகங்கள் போட முடியுமோ அவ்வளவு புத்தகங்களைப் போட்டுவிட வேண்டும். அவனுக்குப் பிறகு அதை யாரும் செய்யமாட்டார்கள்' என்று எஸ்.எச்.எம். ஜெமீல் அடிக்கடி சொல்வார். அந்தப் பொன்னான வார்த்தைகள் அடிக்கடி மனதில் வந்து மோதிக் கொண்டே இருக்கிறது.


மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றி? 

ஆண்டுதோறும் நமது நாட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், மொழிபெயர்ப்பு நாவல்களே அதிகம் விற்பனையாவதாகப் பதிவாகி வருகிறது. சர்வதேச மொழிகளிலிருந்து படைப்பிலக்கிய மொழிபெயர்ப்பு முயற்சிகள் இங்கு மிகச் சொற்பமாகவே நடைபெற்று வருகிறது. நீங்கள் தமிழ் - சிங்கள் மொழிபெயர்ப்பு சம்பந்தமாகக் கேட்பது புரிகின்றது. கடந்த பத்தாண்டுகளாக நடைபெறும் இத்தகைய முயற்சிகளை ஒரு தேசியத் தேவையின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும்.

நீண்டகாலமாக நாட்டில் நிலவிய விரும்பத் தகாத மோதல்கள் இனிமேலும் தொடரக் கூடாது. அதற்காக இலக்கியத்தை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டுமென பல்லினப் படைப்பாளர்கள் கூடிக் கலந்துரையாடினர். அதன் ஒரு அம்சமாகவே சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு சில வெளியீட்டு நிறுவனங்கள் இதற்குக் கைகொடுத்தன. அது இன்றுவரை தொடர்கிறது. எதிர்பார்த்தது போல் அரச மட்டத்தில் இதற்கான ஒத்துழைப்புக் கிட்டவில்லை. எல்லாப் படைப்பாளிகளுமே தங்களது நூல்கள், படைப்புக்கள் மொழிபெயர்ப்பாக வெளிவரவேண்டுமென விரும்புகின்றனர். அந்த ஆர்வம் பல கோளாறுகளை ஏற்படுத்தி வருகிறது. நல்ல படைப்புக்கள் இலக்கு மொழிக்கு செல்வதிலும் சிக்கல்கள் உண்டு.


தற்பொழுது கிடைக்கும் அங்கீகாரங்கள் பற்றிக் கூற முடியுமா? 

படைப்பாளிகளுக்கு அவ்வப்போது அங்கீகாரங்கள் கிடைக்கும்போதுதான், அவர்கள் மேலும் ஊக்கமடைவர். இதை தேவையில்லாத ஒன்றென ஒதுக்கிவிட முடியாது. எனக்கும் நூல் விருது, இலக்கிய கௌரவங்கள், பட்டங்கள் என்று கிடைத்து வருகின்றன.

கொடுக்கும் நிறுவனங்களுக்கும் தகுதி வேண்டும். எடுக்கும் கைகளுக்கும் தகுதி வேண்டும். இவை இரண்டும் சரியாக அமையாத பட்சத்தில் அங்கீகாரம் அர்த்தமற்றுப் போகும்.

தனிப்பட்ட இலக்கிய நிறுவனங்கள், தாம் விரும்பியவர்களுக்கு விருது வழங்குவதில் தவறில்லை. அதைப் பொதுமைப்படுத்த முயற்சிக்கும் போதே பிரச்சினை ஏற்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தெளிவான விதிமுறைகளும் சரியான ஒழுக்கங்களும் தேவை. அங்கீகாரத்துக்காக அலைபவர்களை நாங்கள் பார்க்கிறோம். அதேவேளை அங்கீகாரத்தை எந்த வகையிலும் விரும்பாதவர்களையும் காண்கிறோம்.


இளவயது எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அனுபவ மொழிகள் யாவை?

பயிலுநர் எழுத்தாளராக இருந்த காலத்தில் கையெழுத்து சஞ்சிகைகள் நடாத்தினோம். பாடசாலையிலும் வெளியிலும் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து குழுவாகச் செயற்பட்டோம். ஊர் மட்டத்தில் எமக்கு முன் எழுதியவர்களுடன் சம்பந்தப்பட்டு வழிகாட்டல் பெற்றோம். இலக்கிய ஈடுபாடு கொண்ட ஆசிரியர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டோம். புத்தகம் வாசிப்பவர்களை நாடிச் சென்று அவர்களிடம் இரவலாகப் பெற்று வாசித்தோம். எமக்குக் கிடைக்கும் புத்தகம் சஞ்சிகைகளை சக நண்பர்களோடு பரிமாறிக் கொண்டோம். பத்திரிகை – சஞ்சிகைகளில் வெளிவரும் எமது ஆக்கங்களைப் பற்றி, அவ்வப்போது கூடிக் கருத்துப் பரிமாற்றம் செய்தோம். சமகால வெளியூர் நண்பர்களோடு கடிதத் தொடர்பு கொண்டோம். மூத்த எழுத்தாளர்களின் முகவரிகளைப் பெற்று எமது ஆக்கங்களை அனுப்பி திருத்தங்களையும் அபிப்பிராயங்களையும் பெற்றோம். அவ்வப்போது நடைபெறும் இலக்கியப் பிரதிப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கு கொண்டோம்.

இப்படி இன்னும் சொல்லலாம். இலக்கியச் செயற்பாடுகளுக்குள் நுழைய நுழையத்தான் எங்களுக்குத் தெரிந்தது மிகச் சொற்பமென்பதை உணர்ந்தோம். வரும் காலத்தில் பெயர் பெற வேண்டுமென்ற வேட்கையுடன் வளர்ந்தோம். இன்று வசதி வாய்ப்புக்கள் அதிகம். மேற்சொன்னவற்றில் சிலவற்றையாவது மேற்கொள்ள இளம் எழுத்தாளர்களின் மனம் இடம் கொடுக்குமாயின் அவர்களும் முன்னேற வாய்ப்புண்டு.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

13. சூசை எட்வேட் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.06.10

திரு. சூசை எட்வேட் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்




01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன், என் சொந்த இடம் திருகோணமலைதான். என்னை உருவாக்கிய இடமும் அதுதான். திருமண சம்பந்தம் யாழ்ப்பாணம். அங்குதான் என் நான்கு பிள்ளைகளும் பிறந்து வளர்ந்தார்கள். என் வாழ்வின் பெரும் பகுதி அங்குதான் கழிந்தது. இடப்பெயர்வு காரணமாக வன்னியிலும் சில காலம் வாழ்ந்திருக்கின்றேன். இப்போது போர் ஓய்வு (தீர்வு இல்லை) பிள்ளைகள் கரைசேர்ந்து குடும்பப் பாரம் நீங்கிவிட்ட நிலையில், மீண்டும் சொந்த இடம் திருமலை வந்து மனைவியும் நானுமாக அமைதியாக வாழ்ந்து வருகிறோம். இந்த அமைதியான சூழலில் தான் என் எழுத்துப் பணியும் சீராக நடந்து வருகின்றது.


02. பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே?

திருகோணமலையில் அர்ச் பிரான்சீஸ் சவேரியார் (சென் சேவியர்) பாடசாலையில்தான் படித்தேன். அரிவரி வகுப்பில் இருந்து எஸ்.எஸ்.ஸி. வகுப்புவரை அங்குதான் கல்வி கற்றேன். கற்கும் போது அது ஓலைப் பள்ளியாகவே இருந்தது. படிக்கும் காலத்தில் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிகளில் மாவட்ட ரீதியாக கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். பாடசாலையில் பொது விடங்களில் நடந்த நாடகங்களிலும் நடித்திருக்கின்றேன்.

எஸ்.எஸ்.ஸி. இறுதித் தேர்வில் திறமைச் சித்தியுடன் தேறினேன். பதினைந்து மாணவ மாணவியர் அப் பாடசாலையில் இருந்து கலந்து கொண்டனர். நான் மட்டும் தேறினேன். மேல் படிப்புக்காக  இந்துக் கல்லூரியில் சேர்ந்து எச்.எச்.ஸி. படித்தேன். ஒருவருடம் படித்தேன். ஏனோ மேற்கொண்டு படிக்க மனம் ஈடுபாடு காட்டவில்லை. மூன்று நான்கு புத்தகங்களையே திரும்பத் திரும்ப உடுப்போட்டு படித்து பட்டம் பெற்ற பின் மறந்துவிடும் கல்வி முறை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனது படிப்பைத் தொடரவில்லை. ஆனால் அறிவின் தேடல் தொடர்ந்தது. பொது நூலகத்தில் அங்கத்தவராகச் சேர்ந்து புத்தகங்களை வீPட்டுக்குக் கொண்டு வாசிப்பதிலேயே பொழுதைப் போக்கினேன். அது எதிர்கால வளர்ச்சிக்கு வித்தாகியது. தந்தையாருக்கும் வயதாகிவிட்டது. கலியாண ஆசையும் வந்துவிட்டது. எல்லாவற்றையும் நிறைவேற்ற அவசரமாக ஒரு தொழில் வேண்டும். தந்தையாரின் சிகையலங்கரிப்பு தொழிலையே பழகி நானும் ஒரு தொழிலாளியாகிவிட்டேன். பத்திரிக்கைகள் சஞ்சிகைகள் இல்லாத சலூனே இல்லை என்று சொல்லலாம். பலகுணபேதமானவர்கள், புத்திசாலிகள், மோடர்;கள், சாமர்த்தியசாலிகள்  என்று பல விதமானவர்களும் வருவார்கள். தலையைத் தடவியே மண்டையில் மனதில் இருப்பவற்றையெல்லாம் கறந்;து விடுவேன்.  இந்தத் தொழிலையும் எழுத்துக்கு உதவியாக்கிக்கொண்டேன்.


03. நீங்கள் இலக்கியத் துறைக்குள் பிரவேசித்த அந்தத் தருணத்தைப் பற்றி குறிப்பிடுங்கள்?

நான் மேல் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு ஆசிரியர் வகுப்புக்கு வந்தால் பாடப் புத்தகத்தோடு பொது விசயங்களைப் பற்றியும் பேசுவார். வேறுவேறு நூல்களில் படித்ததில் பிடித்தவற்றையும் சொல்வார். ஒரு நாள் இப்படிச் சொன்னார். "பேரறிஞர் பெர்னாட்ஷா, பள்ளிப் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரன் இல்லைதான். ஆனால் அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. ஒரு நாளைக்கு ஜந்து பக்கம் எழுதிவிட்டுதான் சாப்பிடுவார், படுப்பார். ஏதோ இடைஞ்சல் காரணமாக ஒரு நாளைக்கு எழுத முடியாமல் போனால் மறுநாள் பத்துப் பக்கம் எழுதுவாராம். இந்த நாளாந்த பழக்கமே அவரை உலகம் வியக்கும் பேரறிஞராக்கியது" என்றார். இந்த வசனங்கள் என் மனதில் ஆழவேரோடிவிட்டது. நானும் எழுதுவதை நாளாந்த பழக்கமாக்கிக் கொண்டேன். அப்படி எழுதத் தொடங்கிய பின்னர் சிந்தனை, கற்பனை வெள்ளத்தில் மிதந்து எங்கெங்கோ சென்றேன். சொந்த வாழ்வின் கவலைகளை மறந்தேன். இன்னுமொன்றையும் குறிப்பிட வேண்டும். திருகோணமலை பொது நூலகத்துக்கு அடிக்கடி போய் வரும் போது அங்கே நூலகராக பணியாற்றியவரோடு எனக்கு மிகுந்த பழக்கம் ஏற்பட்டு பெரிய நட்பாகவே வளர்ந்துவிட்டது. அவருக்கு என்னைவிட பத்தோ பன்னிரெண்டோ வயது அதிகம்தான். என்றாலும் உவப்பான நண்பராகிவிட்டார். அவர்தான் எனக்கு நல்ல தரமான நூல்களை, நாவல்களை, சிறுகதைகளை, எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். நல்ல மேடைப் பேச்சாளன். அவருடைய பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாகிக் கொண்டிருந்தது. அவருடைய பெயர் தி. அரியநாயகம் அவர் ஒருநாள் என்னை நோக்கிச் சொன்ன வார்த்தைகளே என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது எனலாம். ஷஷநீ பேசுவதொல்லாம் இலக்கியமடா. நீ எழுத முற்பட்டால் சிறந்த எதிர்காலம் உன்னைச் சேரும்'


04. உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வெளி வந்தது?

எனது முதலாவது சிறுகதை மட்டுமாநாகரில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஷதமிழ் அலை| என்னும் வாரப் பத்திரிகையிலேயே வெளிவந்தது. கதையின் பெயர் "மனசுக்கு வயசில்ல'| என்பதாகும். 2007 ஆம் ஆண்டில் வெளியான கதையிது. தொடக்க காலத்தில் தேசிய பத்திரிகைகளில் ஆக்கங்கள் பிரசுரமாக அரும்பாடு பட்டிருக்கிறேன். ஒரு நண்பரின் உதவியால் இந்தப் பத்திரிக்கையிலாவது பிரசுரமாகிவிட்டது. அதன் பிறகு மிகுந்த சிரமப்பட்டுத்தான் தேசிய பத்திரிகைகளில் வெளியீடு செய்யும் வாய்புக் கிட்டியது.

05. எழுத்து என்பது தவம் என்கிறார்களே இது பற்றி என்ன சொல்வீர்கள்?

தவயோகம் பக்தியோகம் கர்மயோகம் என்று இருக்கிறது. வேறு சிந்தனை ஏதுமில்லாது இறை சிந்தனையோடிருப்பது தவமாகும். தன் கடமையில் முழு மனதையும் செலுத்தி ஈடுபட்டு வருவது கர்ம யோகமாகும். தன்னிலை மறந்து எழுத்துலகில் கற்பனாலோகத்தில் சஞ்சரிக்கும் இலக்கிய கர்த்தாவும், அவன் முயற்சியும் ஒரு தவம்தான். அவனே உண்மையான இலக்கிய கர்த்தாவாகி சாதனை படைப்பான். வெறும் சுயநல ஆசைக்காக பிரபலத்துக்காக பொழுதுபோக்காக எழுதுபவன் தவம் அல்லன் அவம் ஆவான்.


06. இதுவரை நீங்கள் எழுதிவெளியிட்டுள்ள நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

2010ம் ஆண்டு "கருத்துக் கலசம்" என்று ஒரு கவிதை நூல் வெளியீடு செய்தேன். ஈற்றிசை வெண்பாவில் (திருக்குறள் நடை) ஆயிரத்து முந்நூறு பாக்களை யாத்து வெளியிட்ட நூலது. இதில் அடங்கிய ஒரே ஒரு பாவை மட்டும் இட்டு காட்டுகிறேன்.

"நிலத்துக்கு வேலிபோட்டு தனியுடமைக்கு வித்திட்டவனே
உலகத்தின் முதல் குற்றவாளி"

என் சிந்தனையில் தோன்றும் எண்ணங்களை அவ்வப்போது ஈரடியில் எழுதுவது சுலபமாகிவிட்டது. இப்படி இப்போதும் எழுதியவை ஈராயிரத்தையும் தாண்டிவிட்டது. "இவர் தான் மனிதன்" என்று பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி 2013 ஆம் ஆண்டளவில் ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்டிருக்கிறேன். இன்றைவரையில் நூறு கதைகளுக்குமேல் வெளியாகிவிட்டன. பத்திரிக்கை, சஞ்சிகைகளில் இன்னும் நூறு கதைகள் பிரசுரத்துக்காக காத்திருக்கின்றன. நாடகங்களும் எழுதியுள்ளேன். இவை தேசிய சேவையில் ஒலிபரப்பாகியுள்ளது.  புத்தக வெளியீட்டால் கையைச் சுட்டதுதான் மிச்சம். பார்க்கலாம்.


07. சிறுகதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்?

நான் எழுதுவதற்கான சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பதில்லை. எழுதுவது எனது நாளாந்தப் பழக்கமாகிவிட்டது. எழுதாத நாளௌ;ளாம் வாழாத நாளென்றே ஆகிவிட்டது. என் இதயத்தில் இதை எழுது, அதை எழுது என்று முட்டி மோதிக் கொண்டே இருக்கும்.


08. உங்கள் சிறுகதைகளில் ஆழப்பொதிந்துள்ள விடயங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

"மனம் போல வாழ்வு", "கடவுளை நம்பினோர். கைவிடப்படார்" இந்தப் பொன்மொழிகளே என் தாரக மந்திரமாகும். என் வாழ்வின் வெற்றியின் இரகசியமுமாகும். எல்லோருக்கும் இதனை ஆதாரமாகக் கொண்டு வாழ்வில் வெற்றிபெற எழுதுவதே என் ஆக்கங்களின் ஆதார சுருதியாகும்.


09. உங்களது சிறுகதைகளில் எந்த ஆளுமையாளர்களின் தாக்கம் காணப்படுகின்றது?

நான் இளமைக் காலத்தில் பல நாவல்கள், சிறுகதைகள் வாசிக்கும் காலத்தில், டாக்டர் மு. வரதராசனாரின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை அழகாக ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். மிகவும் விரும்பி வாசிப்பேன். அவரை என் ஆதர்ச குருவாகவும் கொண்டிருக்கிறேன். அதே பாணியில் ஆரம்ப காலத்தில் எழுதி வந்தேன். ஆனால் அவர் பேராசிரியராக நின்று மாணவர்களுக்கு உபதேசம் செய்யும் பாங்கு இல்லாதவாறு என்னை உருவாக்கிக் கொண்டேன்.


10. சிறுகதை தவிர்த்து வேறு எந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்கின்றது?

சிறுகதை, கவிதை இலக்கிய சேவைதான் என் முழு மூச்சான ஆர்வமாகும்.  மற்றவெல்லாவற்றுடனும் பட்டும் படாமலும் வாழ்ந்து வருகிறேன்.


11. ஈழத்து இலக்கியத் துறைக்கு நீண்ட காலமாக காத்திரமான பங்களிப்பை நல்கிவரும் உங்களின் தற்போதைய முயற்சிகள என்ன?

நான் என் வாழ்வில் கண்டுணர்ந்தவைகளை, கற்றுணர்ந்தவைகளை எம் மக்களின் நல்வாழ்வு வேண்டி எழுதிக்கொண்டே இருப்பேன். அவற்றை நூலுருவாக்க முயற்சிக்கின்றேன்.


12. இலங்கையில் நாவல்களின் வரவு குறைந்தமைக்கான காரணம் என்ன?

இப்போது கைபேசி, முகநூல், இணையதளம் என்று குறுந்தகவல்கள் மூலம் குறுகிய நேரத்தில் பலதையும் அறிந்துவிடும் நவீன சாதனங்களின் ஆளுகைக்குள் இளைய சமுதாயம் வீறு நடை போடுகின்றது. இந்நிலையில் எத்தனையோ பக்கங்களை, எத்தனையோ நாளாக பொறுமையாக வாசிக்கும் மனநிலையில் பெரும்பாலோர் இல்லை. மேலும் நிதானமாக, பொறுமையாக, ஒரே சிந்தனையாக இருந்து பல நாட்களோ மாதங்களோ வருடங்களோ இருந்து எழுதிக் கொண்டிருக்கும் மன வல்லமை, ஆளுமை இப்போதெல்லாம் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சிறுகதைகளே கொஞ்சம் பக்கங்கள் கூடிவிட்டால் காணும் பிரசுரிக்க பின்னடிக்கிறார்கள். வாசிக்க எத்தனிப்பாரும் முகம் சுளிக்கின்றார்கள். இந்த அவலட்சணங்கள் தான் நாவல்கள் அருகிவரக் காரணமாகும். பழந்தமிழ் காவியங்கள் தான் அழியாவரம் பெற்று தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றன என்பது மறுக்க வொண்ணா உண்மையாகும். இப்படியே தழிழுலகம் போய்க்கொண்டிருந்தால் "மெல்லத் தமிழினிச்சாகும்" எனது உண்மையாகிவிடும்.


13. படைப்புகளுக்கு முன்வைக்கப்படும் விமர்சனங்கள், வழங்கப்படும் விருதுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

கட்சி கொள்கை கோட்பாடு அரசியல் செல்வாக்கு இவைகளின் ஆளுமையில்தான் இவையெல்லாம் நடந்தேறி வருகிறது. என்று வெளியில் இருந்து பார்க்கும் போதே வடிவாகத் தெரிகிறது. கட்சி கொள்கை கோட்பாட்டில் நின்று எழுதி வருபவர் பக்கம் சார்ந்து ஒரு தலைப்பட்சமாக எழுதிவந்தால் அவர் மட்ட ரகமானவராக இருந்தாலும் திறனாக விமர்சித்து பட்டங்கள் பட்டயங்கள் எல்லாம் பெற்றுக்கொடுத்து விடுவார்கள். பக்கம் சாராமல் நடுநிலையில் நின்று உண்மையை உண்மையாய் எழுதுவார் நிலை கேள்விக்குறிதான்.


14. புலம்பெயர் இலக்கியம் பற்றிய உங்கள் கருத்து எப்படி?

உள்ளூரில் இருந்து கதை எழுதும் நாம் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டுபவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் தெரிந்த ஊர்மனைகளையும், கோவில் குளம் ஆற்றங்கறை கடற்கரை என்று ஒரே விதமான தளக் காட்சிகளில் நின்று ஒரே விதமான வாழ்க்கை முறையையும் பிரச்சினைகளையும் தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். வாசிப்பவர்களுக்கும் சுவாரஷ்யம் இல்லாது போய்விடும். ஆனால் புலம் பெயர் ஆக்கங்கள் எல்லாமே புதுமையாகவே இருக்கின்றன. அவை புதுவுலகு அழைத்துச் செல்கின்றன. புதுமையான காட்சிகள் புதுவிதமான மனிதர்கள் வித்தியாசமான குணபேதங்கள் பண்பாடு கலாச்சாரம் வாழ்க்கை முறை என்று வாசகர்களுக்குப் புது உலகைக் காட்டுகிறார். சுருக்கமாகச் சொன்னால் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அடுத்த படியேறி போய்க்கொண்டிருக்கிறார்கள்.


15. கலையிலக்கியத் தடங்களில் நீங்கள் பெற்ற விருதுகள் பற்றிக் கூறுவீர்களா?

கிழக்கு மாகாண சபையால் இலக்கிய வித்தகர் விருது கிடைத்தது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் என் சிறுகதைகளுக்கு பரிசுகளும் பாராட்டுப் பத்திரங்களும் கிடைத்திருக்கின்றன. விருதுகளும் புகழ்களும் நம்மைத்தேடி வர வேண்டுமே அல்லாது நாம் தேடிப் போகக் கூடாது என்று தற்போது அமைதியாக இருந்து எழுதி வருகின்றேன்.


16. இலக்கியத் துறைசார்ந்த உங்களது எதிர்பார்ப்புகள் அல்லது இலட்சியங்கள் யாவை?

நம் தமிழ்ப்பெரும் புலவர்கள் மகத்துவமான அற்புதமான கவிதைகளால் காவியங்களால் தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள். நீதிநெறிகளை நல்ல கருத்துக்களைச் சொல்லி தமிழரை அறநெறியில் வாழச்செய்தார்கள். தமிழினத்தின் தனித்துவத்தை காலமும் நிலைநிறுத்தியே வந்தார்கள்.. அந்த வழியில் இந்தச் சிறியோனும் தழிழுக்குப் பெருமை சேர்க்கவும், தமிழர் வாழ்வு நலன் பெறவும் எழுதி வருகிறேன். இராமர் பாலம் கட்ட ஒரு அணிலும் உதவியதாம், என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.


17. இளம் எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூறவிரும்புவது என்ன?

கவிதை, சிறுகதைகளை எழுதி அனுப்புவதனால் மிகக் குறுகிய காலத்தில் சுலபமாக பிரபலமாகிவிடலாம் என்பதாலேயே இளையவர்கள் ஏதோ மனம் போன போக்கில் அதையும் இதையும் எழுதித் தள்ளுகிறார்கள் என்றே தோன்றுகிறது. நெஞ்சில் நேர்மைக் கொள்கையோ மனித நேயமோ இருப்பதாகத் தெரியவில்லை. நான் இளம் எழுத்தாளர்களுக்கு சொல்லவேண்டியது: நிறைய வாசியுங்கள், நாளாந்தம் உங்களுக்குத் தோன்றுவனவற்றை எல்லாம் எழுதி, எழுதிப் பயிற்சி பெற்று உங்கள் ஆற்றலை அபிவிருத்தி செய்யுங்கள். அதன் பிறகே உங்கள் ஆக்கங்களை வெளியீடு செய்ய வேண்டும். எழுதியதையெல்லாம் அனுப்பாதீர்கள். சிலகாலம் சென்றபின் அவை தரக்குறைவானவை என்று உங்களுக்கே தோன்றும். நல்லதே நினைத்து வாழ்பவார்க்கு வாழ்வில் நல்லதே நடக்கும் கண்டீர்!!!


நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்