Saturday, January 30, 2021

26. எழுத்தாளர் டீன் கபூர் அவர்களுடனான நேர்காணல்

 எழுத்தாளர் டீன் கபூர் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, குடும்பப் பின்னணி பற்றி எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் கல்வி, கலை, இலக்கியம், நெசவு ஆகியவற்றால் செழித்து விளங்கும் ஓர் அழகிய கிராமமான மருதமுனையில் சாதாரணமான ஒரு குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவன் நான். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் தரம் வரை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலேயே கற்றேன். கற்றுக் கொண்டிருக்கின்ற காலங்களிலேயே இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு ஆசிரியர்களால் உந்தப்பட்டேன். குறிப்பாக, உயர் தரத்தில் பயின்று கொண்டிருந்த நாட்களில் நண்பர்களோடு இணைந்து இலக்கியம் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திரிந்த அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. 


உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக எப்போது ஆரம்பித்தது?

ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கின்ற காலத்திலேயே எனக்குள் எழுதுவதற்கான ஆர்வம் குடிகொண்டுவிட்டது. அப்பொழுதெல்லாம் எங்களுரில் உள்ள பொது நூலகத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. இளவயதிலேயே வாசிப்புப்; பழக்கத்தையும், எழுதும் ஆர்வத்தையும் என்னிடம் ஏற்படுத்திய நூலகம் அது. அன்றைய நாட்களில் மின்னல், தூரிகை, காற்று எனும் பெயர்களில் கையெழுத்துச் சஞ்சிகைகளை நானே உருவாக்கி, யாருக்கும் தெரியாமல் நூலக மேசைகளில் வைத்துவிடுவேன். பின் தூரத்தே நின்று எத்தனை பேர் அவற்றை வாசிக்கின்றார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பேன்.


1979 இல் தினபதிப் பத்திரிகையானது கையெழுத்துச் சஞ்சிகைகளுக்கான போட்டி ஒன்றை நடாத்தியருந்தது. அச்சமயம் எங்களது பாடசாலையில் 'கலங்கரை' எனும் சஞ்சிகையை உருவாக்கும் முயற்சியில் உயர் தர வகுப்புக் குழுவினருடன் நானும் இணைந்து செயற்பட்டேன். எனது கையெழுத்து மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதாகக் கூறி அவர்கள் என்னையும் இணைத்துக் கொண்டார்கள். அப்போதே மனம் எழுதுவதற்கு உந்திக் கொண்டிருந்தாலும், 1987 இலேயே தேசிய பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை எழுதும் வாய்ப்புக் கிட்டியது. 


இலக்கியத் துறைக்குள் நுழைவதற்கான முதற் காரணி எது?

வாசிப்பதற்கான சூழல் மற்றும் தொடர் வாசிப்பு ஆகியவையே காரணமாகும்.


உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

இலக்கிய ஈடுபாடு என்பது வாசித்தல், புனைதல் என்ற இரண்டு விடயங்களோடும் தொடர்புபட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால் எனது குடும்பத்தைச் சேர்ந்த பலர் புனைதலிலும் பார்க்க படைப்புக்களை வாசிப்பதில் ஈடுபாடு காட்டவே செய்கின்றனர். ஆம் - இல்லை ஆகியவற்றில் ஒன்றைப் பதிலாக முன்வைக்க முடியாமைக்கு மன்னிக்கவும்.



இலக்கியத் துறையில் இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றி குறிப்பிடுங்கள்? நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

''குரோட்டன் அழகி'' (1994), ''திண்ணைக் கவிதைகள்'' (2007) இல் ''சொற்களில் சுழலும் பிரபஞ்சம்'' (2019) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. நூல் வெளியீட்டு முயற்சியில் வெற்றி பெற்றீர்களா? என்று மற்றுமொரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். பொதுவாக, வெற்றி - தோல்வி ஆகிய எதிர்வு நிலைகளுக்குள்ளால் நகர்த்தப்படும் கேள்விகளில் நான் அதிகம் உடன்படுவதில்லை. இலக்கியச் செயற்பாடு என்பது அப்படியான ஒரு போட்டி நிகழ்வும் அல்ல. இலக்கியச் செயற்பாடுகளில் வெற்றி என்பதை எதனைக் கொண்டு தீர்மானிப்பது? என்றொரு கேள்வியைக் கேட்டால் அது நீண்ட நெடிய விவாதங்களைத் திறந்துவிடும். ஆகையால், இரண்டு வகையான பொருள்கோடலின் அடிப்படையில் இக்கேள்வியை அணுகுகிறேன். ஒன்று, வெளியீட்டு நிகழ்வுக்கு வருகை தருவோர் மற்றும் நூல் விற்பனையாகும் வீதம் பற்றியது. இரண்டு, வாசகர்கள் நூல்களை வாசிப்பதும், அதுபற்றி எழுதி உரையாடுவதும் பற்றியது. இவ்விரண்டு விடயங்களையும் நான் எனது எழுத்து முயற்சிகளுக்கான உந்துதல்களாகவே பார்க்கின்றேன். அத்தகைய உந்துதல்கள் எல்லா நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. அதே சமயம், எனது எழுத்துச் செயற்பாடுகள் எனக்கான சுதந்திர வெளியில் கடிவாளங்களற்றுப் பயணித்துக் கொண்டிருக்கும் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்களைப் பற்றிக் கூறுங்கள்?

நீண்ட பட்டியல் உள்ளது. ஒவ்வொருவருடனான அனுபவங்களுடன் கூறுவதாக இருந்தால் பல நேர்காணல்கள் தேவைப்படும். மிக நெருக்கமானவர்களை மாத்திரம் குறிப்பிடுகிறேன். 

''குரோட்டன் அழகி'' (1994) எனும் எனது முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரிதும் துணை நின்றவர் எனது ஆசிரியர் காலம் சென்ற எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் மருதூர் பாரி அவர்கள். அன்று முனைப்பு எனும் சஞ்சிகையில் எனது எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்ததோடு மாத்திரமன்றி, எனது முதற் தொகுதியை முனைப்பு அச்சகத்தில் அச்சிட்டு, முனைப்பு வெளியீடாகவே கொண்டு வருவதில் ஈடபாட்டுடன் செயற்பட்டவர் அவர். அதேபோன்று, எனது முதற் தொகுதியினை வாசித்து, அதற்கு அணிந்துரை எழுதி, என்னை ஊக்கப்படுத்திய எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்களும் இன்றும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கவர். 

''திண்ணைக் கவிதைகள்'' (2007) நூலை வெளியிடுவதற்கு மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்ட நண்பர்கள் பக்கபலமாக நின்றனர். இதில் எழுத்தாளர்களான அம்ரிதா ஏயெம், ஜமீல் ஆகியோர் எனப் பலரையும் குறிப்பிடலாம். 


மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களின் வெளியீடுகளையும் தொடர்ந்து சுமார் 12 வருடங்களின் பின்னர் ''சொற்களில் சுழலும் பிரபஞ்சம்''  (2019) கவிதைத் தொகுதி ''கிடுகு'' கலை இலக்கிய அமைப்பின் செயற்பாட்டாளரும் இளம் இலக்கிய விமர்சகருமான அப்துல் ஆபித், கவிஞரும் தேர்ந்த விமர்சகருமான இமாம் அத்னான் ஆகியோரி;ன் ஊக்கப்படுத்தலுடன் வெளிவந்தது. இத்தொகுதி வெளியீட்டின் போது, மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்ட நண்பர்களும், கிடுகு கலை இலக்கிய அமைப்பினரும் மாத்திரமன்றி அக்கரைப்பற்றைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் றஸாக் அவர்களும் பலவகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்கினர். 


''குரோட்டன் அழகி'' நூல் பற்றி நீங்கள் விசேடமாகக் கூற விரும்புவது என்ன?

எனது எழுத்தின் முதல் அடையாளம் குரோட்டன் அழகிதான். எனது ஊர் கிராமமாக இருந்த காலத்தில் எழுதப்பட கவிதைகள் அவை. இப்போது எனது கிராமத்தின் அதிகமான அடையாளங்கள் மாறிப்போயிற்று. இன்று இத்தொகுதியில் உள்ள கவிதைகளை வாசிக்கும் சிலர் 30 வருடங்கள் முன்னுள்ள மருதமுனைக்குத் தம்மை அழைத்துச் செல்வதாக அடிக்கடி கூறுவதுண்டு. இத் தொகுதிக்கு எழுத்தாளர் நண்பர் உமா வரதராஜன் அவர்கள் எழுதிய உரையில் ''இளம் பராயத்து நினைவின் சுகங்களை மீட்டல், இயற்கை அழகின் லயிப்பு, மனதில் பதிந்த சில மாந்தர்கள், பிராணிகள், பறவைகள் என இவரது கவியுலகின் பயணம் நகர்கிறது. மரம், செடி, கொடி, ஆறு, கடல், வயல், வரப்பு, மழை, வெயில் என அலைகின்ற உள்ளம் அவருக்கு உரியது. மேடு, பள்ளம், சரிவு, சுழி என அவருடைய நதி ஓடிக்கொண்டிருக்கிறது'' என்று சொல்வதை இங்கு ஞாபகமூட்டுவது பொருத்தம் என நினைக்கின்றேன். 


உங்களது கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவு, அல்லது வரவேற்புக்கள் பற்றிக் கூறமுடியுமா?

வாசகர்களில் இரு வகையினர் உள்ளனர். முதலாவது வகையினர் கவிதைகளை மேலாட்டமாக வாசித்து ரசிப்பவர்கள். அதாவது, தாம் கருதும் கவிதைக் கூறுகளையோ, தமக்கு நெருக்கமான கருத்தியல்களையோ தேடுபவர்கள். இரண்டாவது வகையினர் கவிதைகளுக்குள் நுழைந்து கேள்விகள் கேட்டு இடையீடு செய்பவர்கள். இவர்களைத் திறனாய்வு செய்பவர்கள் என்றும் சொல்லலாம். முதலாவது வகை வாசகர்களிடமிருந்து கிடைக்கக் கூடிய ஆதரவு சிறியளவு ஊக்கமளித்தாலும், இரண்டாவது வகையினரிடமிருந்து கிடைக்கக் கூடிய சுதந்திரமானதும் ஆக்கபூர்வமானதுமான விமர்சனங்களையே எனது கவிதைகளுக்குக் கிடைக்கும் ஆதரவாக எடுத்துக் கொள்கிறேன். வெறுமனே 'அற்புதமானது', 'கனதியானது', 'ஆழமானது' போன்ற பாராட்டுக்களை மாத்திரம் வைத்துக் கொண்டு கவிதைச் செயல்களில் அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள முடியாது என்பதனை ஆழமாக நம்புபவன் நான். எனவேதான் விமர்சனங்களை, திறனாய்வுகளை எல்லாம் எனது எழுத்துக்களுக்கான உந்துதல்களாக எடுத்துக் கொள்கிறேன். 


திண்ணைக் கவிதைகள் பற்றியும் குறிப்பிடுங்களேன்?

2007 இல் வெளிவந்தது. 'திண்ணை' எனும் இணையத்தளத்தில் வெளியான எனது கவிதைகளின் தொகுப்பு அது. தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் பரீட்சார்த்த முயற்சிகள்தான். குரோட்டன் அழகியிலுள்ள கவிதைகளிலிருந்து வடிவம், எடுத்துரைப்பு முறைகள் சார்ந்து அதிகமான மாற்றங்களை அதில் காணலாம். இத்தொகுதிக்கு அணிந்துரை எழுதிய எழுத்தாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அம்ரிதா ஏயெம் அவர்கள் இக்கவிதைகள் பற்றிக் கூறும்போது, கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உணர்வுகள் வெளிப்பட்ட மன நிலையில் புனையப்பட்டவைகள் என்றும், குறித்த கவிதைகளில் சர்ரியலிச, மெஜிகல் ரியலிசப் போக்குகளை அவதானிக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டிருந்தமையினை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 


இறுதியாக வெளிவந்த உங்களது ''சொற்களில் சுழலும் பிரபஞ்சம்'' கவிதை நூலின் தனித்துவம் பற்றிக் குறிப்பிட முடியுமா? இந்த நூலில் உள்ளடக்கியுள்ள கருப் பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

மொழி என்பது மனித வாழ்வியலோடு, பண்பாட்டோடு இறுக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது. தனிமனித, சமூக உளவியலிற்குப் பின்னாலும் மொழி முக்கிய பாத்திரத்தை ஏற்றிருக்கிறது. மொழியினைப் பயன்படுத்தும் விதத்தினால் பெரும் வன்முறைகள், ஒடுக்குமுறைகள் என்பன நிகழவும் வாய்ப்புண்டு. பல்வேறு கஷ்டங்களுடனும் துன்பங்களுடனும் உலவும் உள்ளங்கள் ஆறுதல் பெறவும் வாய்ப்புண்டு. இன்று நாம் பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்குப் பின்னால் எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன. நம்மை அறியாமல் அவை 'நான்' அல்லாதவைகள் மீது வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இங்கு தூஷண வார்த்தைகளை பிரதானப்படுத்திக் குறிப்பிடவில்லை (அவையும்தான்). மாறாக, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பற்றித்தான் சொல்கிறேன். உதாரணமாக, ''சிறுபிள்ளைத்தனமாக நடக்க வேண்டாம்'' என்ற வார்த்தைப் பிரயோகத்தை எடுத்துக் கொள்வோம். இதனை சாதாரணமாக நோக்கும் போது, ''ஒரு செயலை இந்த விதமாகச் செய்யக் கூடாது'' என்று அர்த்தம் கொண்டாலும் மறைமுகமாக அது ஒரு வன்முறையைச் செய்கிறது. ''சிறு பிள்ளைகள் அல்லது குழந்தைகளது செயல்கள் வெறுக்கத்தக்கவை'' எனும் பொதுவான ஒரு பார்வையை மீள உருவாக்கி விடுகிறது. குறித்த வார்த்தைப் பிரயோகத்தை ''நீங்கள் செய்யும் செயலில் இப்படியான தவறுகள் இருக்கின்றன'' என்றும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், குறித்த வார்த்தையில் குழந்தைகளுடைய செயல்பாடுகள் மதிப்பற்றவையாக, பெறுமதியற்றவையாக மாற்றப்படுகின்றன. குழந்தைகளின் உலகை மதிக்கும் யாவரும் இதனைப் புரிந்து கொள்வர். இன்னும் இதுபோன்ற பல உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். 

இதனை நான் கூறியமைக்கு முக்கிய காரணம், கவிதை என்பதும் மொழியின் ஒரு விளைவுதான். பல சொற்களின் கூட்டு அது. கவிதை வடிவமைக்கும் போது கவிதைக்கான சொற்களை, வார்த்தைகளைத் தெரிவு செய்வதில் காட்டும் அசிரத்தை நம்மை அறியாமல் வன்முறைக் கூறாகவும் மாறிவிடும். எனது முன்னைய கவிதைகளிலும் பார்க்க இத்தொகுதியில் உள்ள கவிதைகளை வடிவமைக்கும் போது அவற்றிற்கான சொற்களில் அதிக கரிசனை எடுத்திருக்கிறேன். மனிதர்கள் மீது மாத்திரமல்ல, மனிதர் அல்லாத உயிரிகள் மீதும் நான் தேர்வு செய்யும் சொற்கள் மறைமுகமாக வன்முறை புரியக்கூடாது என்பதில் முடிந்தளவு அக்கறை செலுத்தியிருக்கிறேன். இவைதவிர, மீபுனைவு (Metafiction), ஊடிழைப் பிரதி (Intertext) போன்ற உத்திகளையும் இக்கவிதைகளில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறேன். 


கருப்பொருட்கள் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இத்தொகுதியில் உள்ள பல கவிதைகளை வடிவமைக்கும் போதே வாசகரின் சுதந்திரத்தையும் கருத்திற்கொண்டு, அக்கவிதைகளில் அவர்கள் சிந்தித்தல் எனும் உழைப்பைச் செலவளிக்கும் வகையிலே உத்திகளையும் கையாண்டிருக்கிறேன். ஆதலால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைவிட வாசகர் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் எனது தற்போதைய கவிதைச் செயற்பாட்டின் முக்கியமான அரசியல். 


இதுவரை நீங்கள் எழுதியவற்றில் எந்தப் படைப்பை அதிகமாக நேசிக்கின்றீர்கள்?

ஓவ்வொரு கவிதைகளையும் நான் மிகவும் நேசித்தே எழுதுகிறேன். ஆனாலும், நமது சிந்தனை என்பது காலத்திற்குக் காலம் வளர்ச்சியடைய, வளர்ச்சியடைய நமது எழுத்துக்களில் உள்ள போதாமையினையும் அது உணர்த்திச் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? அந்தவகையில் சமகாலத்தில் நான் எழுதிய, எழுதுகின்ற கவிதைகளையே அதிகம் நேசிக்கின்றேன். ஆனாலும், இவ்விடயத்தில் வாசகரின் நிலைப்பாடுகள் என்பது வேறானவையாக இருக்கலாம். 


எதிர்காலத்தில் உங்கள் படைப்புக்கள் எப்படி அமைய வேண்டுமென்று நினைக்கின்றீர்கள்? 

கவிதைச் சூழலில் சுதந்திரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கவிதையினை வடிவமைக்கும் போதும் ஏதாவது புதிய கூறினை, உத்தியினைக் கையாளவே முயற்சிக்கிறேன். நிபந்தனைகளை முன்னாயத்தமாக வைத்துக்கொண்டு கவிதைகளைப் படைப்பதைவிட, கவிதைக்கான அரசியல் கதையாடலை முன்வைக்கத் தேவையான புனைவு உத்திகளைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பரிசோதனை செய்து பார்ப்பதிலும் கரிசனை கொள்ள விரும்புகிறேன். உங்கள் கேள்விக்குப் பொதுவாக, ஒரு பதிலைச்; சொல்வதானால், வன்முறைகளற்ற பிரதிகளாக எனது படைப்புகள் அமையவேண்டும் என நினைக்கிறேன். 

 

எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றியும் குறிப்பிடுங்கள்.?

இது காலவரையில் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட எனது கவிதைகளைத் தொகுதியாக்கும் எண்ணம் உள்ளது.


நீங்கள் ஓர் ஆசிரியர் என்ற வகையில் இன்றைய மாணவர்களின் இலக்கியம் மீதான ஈடுபாடு, எழுத்துத் துறை நாட்டம் பற்றிக் கூற முடியுமா?

மிகவும் குறைவு. மாணவர்களிடம் சுதந்திரமான வாசிப்புப் பழக்கம் உருவாகும் போது மாத்திரமே இவ்விரண்டும் சாத்தியம். வாசிப்புக்கான வாய்ப்பும் சூழலும் ஊக்கப்படுத்தலும் பாடசாலைச் சூழலில் உருவாகும் போது, மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கமும் ஏற்பட்டுவிடும்.


உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? 

பலர் உள்ளனர். புதுமைப் பித்தன், சண்முகம் சிவலிங்கம், மருதூர்க்கொத்தன், உமா வரதராஜன், எம்.ஏ. நுஃமான், எம்.ஐ.எம். றவூப், றியாஸ் குரானா, அம்ரிதா, குட்டி ரேவதி, இமாம் அத்னான்.. என்று இப்பட்டியல் நீண்டு செல்லும். எழுத்தாளர்கள் என்பதற்கும் அப்பால் இவர்களது எழுத்துக்களே என்னைக் கவர்ந்தன. 


இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி, வாசிப்பை அதிகரிக்கச் செய்கின்றது என்று குறிப்பிட முடியுமா? 

இலத்திரனியல் ஊடகங்கள் வாசிப்பை அதிகரிக்கின்றனவா? ஏன்பதைவிட வாசிப்பை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு அதில் நிறையவே வழிகளும், சிறப்பம்சங்களும்  இருக்கின்றன என உறுதியாகக் கூற முடியும். எந்தவொரு ஊடகமும் அதனைப் பயன்படுத்தும் விதத்திலேயே தங்கியுள்ளதல்லவா?


இலக்கியத் துறையில் உங்களால் இன்னும் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்.?

பல சம்பவங்கள் இருக்கின்றன. நீங்கள் கேட்டதற்கிணங்க ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். 2010 ஆம் ஆண்டளவில் நடைபெற்றது. எங்களது பிரதேச ஆளுமை, கவிஞரும் எழுத்தாளருமான சண்முகம் சிவலிங்கம் அவர்கள் ஆங்கிலத் தட்டச்சு வேலைக்காக அவ்வப்போது என்னை நாடுவதுண்டு. ஒரு நாள் என்னிடமிருந்து குரோட்டன் அழகி, திண்ணைக் கவிதைகள் ஆகிய இரு தொகுதிகளையும் பெற்று வீடு சென்றவர் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் என்னிடம் வந்தார். இரண்டு தொகுதிகளிலுமிருந்து 34 கவிதைகளை அடையாளப்படுத்தி, அவற்றை ஒரு தொகுதியாக்கும் படியும், அதற்குரிய முன்னுரையைத் தான் எழுதித் தருவதாகவும் கூறியிருந்தார். அன்று எனக்கு ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் அம்முயற்சி பின்தள்ளிப் போனது. பின் 2012 அளவில் அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாமா? என்று யோசித்தக் கொண்டிருக்கையில் அவரின் மரணச் செய்தி காதுகளை வந்தடைந்தது. பெரும் வேதனையளித்தது. அவருடன் பேசிய அனுபவங்களை இன்றும் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. 


இலக்கியத் துறையில் உங்களுக்கும் உங்கள் படைப்புக்களுக்கும் கிடைத்த வரவேற்புக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் கூற முடியுமா?

இவை எவற்றையும் இலக்காக வைத்து நான் கவிதைப் படைப்பாக்கத்தில் ஈடுபடுவதில்லை. நான் முன்னர் கூறியது போன்று எனது கவிதைகள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மீதே நான் அக்கறை கொள்கிறேன். விமர்சனங்கள் சிலபோது பாராட்டுதல்களாகவும் அமையும். சிலபோது சிக்கல்களைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமையும். இரண்டையும் நேரிய கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறேன். இன்னும் ஒருவகையில் சொல்வதானால் எனது கவிதைகள் திறனாய்வுகளுக்கு உட்படுவதையும், பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதையும், வாசகர்கள் அதுபற்றிப் பேசுவதையும் எனது படைப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்புகளாக, பரிசுகளாக, பட்டங்களாக, விருதுகளாக எடுத்துக் கொள்கிறேன். அதே சமயம் அவ்வப்போது என்னையும், எனது எழுத்து முயற்சிகளையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் நினைவுச் சின்னங்களை, சான்றிதழ்களை நான் புறக்கணிப்பதுமில்லை. அவையும் ஒரு வகை உந்துதல்தானே. ஆனால், அவையே எனது இலக்கல்ல. 


வளர்ந்து வரும் கவிஞர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

வளர்ச்சியடைந்த கவிஞர்கள், வளர்ந்து வரும் கவிஞர்கள் என்று எதனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பது? என்றொரு கேள்வி நீண்ட காலமாக இலக்கிய வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. வயதை, அனுபவத்தை அடிப்படையாக வைத்து அதனைத் தீர்மானிப்பதா? எழுத்தாற்றலை வைத்துத் தீர்மானிப்பதா? இதுவும் இலக்கிய வெளியில் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுள் ஒன்றுதான். ஷவளர்ந்து வரும் கவிஞர்| என்று பொதுவாக அடையாளப்படுத்தப்படும் ஒருவர் மிக நீண்ட காலமாக கவிதை எழுதி வரும், வயதில் முதிர்ந்த ஒரு கவிஞரைவிட கனதியான கவிதைகளையும் எழுதக்கூடும். அப்படி எழுதுபவர்கள் பலர் உள்ளனர். வளர்ந்து வரும் கவிஞர்கள் என்பதைவிட, அண்மைக் காலத்தில் இலக்கிய வெளிக்குள் நுழைந்து தீவிரமாக இயங்கி வருவோர் என இமாம் அத்னான், தணிஸ்கரன், முர்ஷித், நப்லா, சாஜித் அஹமட், ஜெம்சித் சமான், சுந்தர் நிதர்சன், நஸீஹா முகைதீன், அன்வர் புஹாரி எனச் சிலரை அடையாளப்படுத்த முடியும். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் இன்னும் பலர் உள்ளனர்.


இறுதியாக நீங்கள் வாசகர்களுக்குச் சொல்ல விரும்புவது?

ஒரு படைப்பு என்பது வாசகருடைய இடைவினையுடன்தான் இயங்குகிறது. அர்த்தம் பெறுகிறது. எனவே, தயவு செய்து இலக்கிய எழுத்துக்களையும் நேரமொதுக்கி வாசியுங்கள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Tuesday, November 10, 2020

25. வைத்திய கலாநிதி எம்.எம். நௌஷாத் அவர்களுடனான நேர்காணல்

வைத்திய கலாநிதி எம்.எம். நௌஷாத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

எம்.எம். நௌஷாத் என்ற பெயரில் சிறுகதைகளை எழுதி வருகின்றேன். மருத்துவராகப் பணிபுரியும் நான் தற்போது கல்முனைப் பிராந்திய மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் பொறுப்பாளராக இருக்கிறேன். மனைவி தைஹிபா ஆவார். என் முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர் அவர். எனக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். இருவர் பல்கலைக்கழகத்திலும் இருவர் உயர் தரமும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 


உங்களது குடும்பப் பின்னணி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை ஊவா மாகாணத்திலுள்ள அளுப்பொத்தை முஸ்லிம் வித்தியாலயம், பசறை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தொடர்ந்தேன்.  நான் மருத்துவராக வர வேண்டும் என்ற இலட்சியத்தில் இருந்த என் தந்தையார் உயர் கல்வியை தொடர வேண்டுமென்ற நோக்கத்திற்காக எனது  பிறந்தகமான சம்மாந்துறைக்கு என்னை அனுப்பி வைத்தார். 1974 இல் இது நிகழ்ந்தது. இது என் வாழ்க்கையில் பாரிய திருப்பு முனையாக அமைந்தது. கல்வியில் இப்போதைய நிலையை அடைவதற்கும் இலக்கிய முனைப்பு ஏற்படுவதற்கும் இந்தப் புள்ளி முக்கியமானது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் என்னைச் செம்மைப்படுத்தியது. முக்கியமாக தமிழாசிரியராக இருந்த எனது தந்தை மர்ஹூம் யூ.எம் முஸ்தபா அவர்கள், மறைந்த வீ ஆனந்தன் அவர்கள், மேலும் மன்சூர் ஏ. காதர் அவர்களும் என்னுடைய சிற்றப்பா யூ செய்ன் அவர்களும் வழிகாட்டிகளாக இருந்தார்கள். இப்போதும் எனக்கு மனோபலத்தை தந்து கொண்டிருப்பவர் என் தாயே. அவர் ஆசிரியையாக இருந்தவர். ஜெமீலா டீச்சர் என்றால் யாருக்கும் தெரியும். 


1981 இல் நான் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். அதன் பின்னான 2005 ஆம் ஆண்டு வரையான சுமார் 25 வருடங்கள் என் இலக்கிய வாழ்க்கையில் தேக்கமுற்ற காலமாகக் கழிந்தன. மருத்துவக் கல்லூரியில் கற்ற காலமும் தொழில் நெருக்கடிகள் நிலவிய காலமுமே அது. 


உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எத்தனை ஆண்டுகளாக சிறுகதைகளை எழுதி வருகின்றீர்கள்?

ஆறாம் வகுப்பிலிருந்தே சின்னச் சின்ன ஆக்கங்களைப் படைத்து வந்திருக்கிறேன். 1978 அல்லது 1979 இல் நான் எழுதிய முதற் சிறுகதையான வெளிச்சத்திற்கு வருவோம் நீர்ப்பாசனத் திணைக்கள தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றது. இதன் பின்வந்த ஓரிரண்டு ஆண்டுகளில் மிகவும் வேகமாக சிறுகதைகளை எழுதினேன். கிட்டத்தட்ட எல்லா வார இதழ்களிலும் சஞ்சிகைகளிலும் என் கதைகள் வந்தன. மல்லிகை, சிரித்திரன், சுடர், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, வியூகம், தீபம் ஆகிய அவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு இவ்வேளை நான் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் எவ்வித முன் அறிமுகமுமின்றி அவர்கள் என் கதைகளைப் பிரசுரித்தனர். எனினும் அக்கதைகள் எனக்கு பூரண திருப்தியைத் தரவில்லை. அக்கதைகளை என்னுடைய சிறுகதைத் தொகுதிகளில் சேர்க்காததன் காரணமும் அதுவே. 


உங்கள் சிறுகதைக்கான கதைக் கருக்களை எப்படிப் பெற்றுக்கொள்கிறீர்கள்?

சுற்றி வாழும் மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும், அவர்களின் அனுபவங்களிலிருந்தும், என்னுடைய அனுபவங்களிலிருந்தும். என்றாலும் அவைகளை என் கதைகளில் நேரடியாக நான் விவரிப்பதில்லை என்பதால் பலர் என் கதைகளை வெறும் கட்டுக் கதை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் பூடகமாக நான் சொல்வதைப் புரிந்துகொள்ள நிச்சயம் ஆழ்ந்த வாசிப்பு அவசியம். 


"வெளிச்சத்திற்கு வருவோம்" என்ற உங்களது முதலாவது சிறுகதைக்கு பரிசு கிடைத்தது பற்றி என்ன சொல்வீர்கள்?

அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. ஏனெனில் நான் அகில இலங்கை ரீதியில் முதல் பரிசு பெற்ற அதேசமயம் ஆறுதல் பரிசுகள் பெற்ற மற்றைய எழுத்தாளர்கள் அவ்வேளை பிரபல்யமானவர்களாக இருந்தார்கள். அக்கதை சுடர் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகிற்று. 


இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய சிறுகதைத் தொகுதியான சொர்க்கபுரிச் சங்கதி 2016 ஆம் ஆண்டிலும் பூச்செண்டு போல் ஒரு மனிதன் 2020 இவ்வருடமும் வெளிவந்தன. எனது பத்து சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் இஸிவர அஸப்புவ (ரிஷியின் ஆச்சிரமம்) என்ற தலைப்பில் கொடகே பிரசுமாக 2017 இல் வெளிவந்தது. சி.ஜி.எஸ். ஆனந்த அவர்களும் லரீனா அப்துல் ஹக் அவர்களும் கதைகளை மொழிபெயர்த்தார்கள். 


2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசினால் வழங்கப்படுகின்ற சாகித்திய விருது, ஷஷசொர்க்கபுரிச் சங்கதி' என்ற உங்களது முதலாவது சிறுகதை நூலுக்கே கிடைத்துள்ளது. இதுபற்றிக் குறிப்பிடுங்கள்?  

முன்னர் எழுதிய மரபு வழியான எழுத்துப் பாணி எனக்கு பிடிக்காததால் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் வித்தியாசமான பாணியில் சிறுகதைகளை எழுத முயற்சித்தேன். விருது பெற்ற அந்தத் தொகுதியும் முற்றிலும் அவ்வாறான கதைகளையே கொண்டிருந்தன. மொத்தம் முப்பத்தி மூன்று கதைகள். மேலும் ஓவியர் ருத்ரா அந்நூலுக்கு சிறப்பான முறையில் ஓவியங்களை வரைந்தார். எனவே எனது புதிய எழுத்திற்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாகவே இதனைக் கருதுகிறேன். 


2020 இல் வெளிவந்த 'பூச்செண்டுபோல் ஒரு மனிதன்' என்ற உங்களது இரண்டாவது சிறுகதை நூலின் கருப்பொருட்கள் பற்றிக் கூற முடியுமா? நூலின் தலைப்பாக இதனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

அனேகமான கதைகள் மனிதர்களின் ஆழ்மனதைச் சித்தரிக்கின்றன. எனவே வாசகர்களும் தீவிர சிந்தனையுடனான வாசிப்பு மூலமே இக்கதைகளைப் புரிந்து கொள்ள முடியும். எப்போதும் பூக்களின் மீது ஆழ்ந்த பிரேமை எனக்குண்டு. எனவே வியப்படைவதற்கு இத்தலைப்பில் ஒன்றுமில்லை. மேலும் இத்தலைப்பு கவர்ச்சியாக இருக்குமென்று நினைத்தேன். 


'வளர்ந்தோருக்கான தேவதைக் கதைகளை எழுத முடியுமா?' என்ற சிந்தனைதான் உங்களை எழுத வைத்தது என்று கூற முடியுமா? அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

இது என்னுடைய சிந்தனைப் போக்கு அல்ல. மாய யதார்த்த பாணிக் கதைகள் போன்ற சொற்களால் இதனை விவரிக்கிறார்கள். தீவிர சமாச்சாரங்களை பூடகமாகச் சொல்வதற்கு. நான் நினைக்கிறேன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மிகவும் அதிகமாக இக்கோட்பாடு  வழியே எழுதி இருக்கிறார்கள். ஏனைய அடக்குமுறை நிலவிய நாடுகளிலும் இப்பாணியைப் பின்பற்றி எழுதினார்கள். சர்வதேச ரீதியிலும் ஏன் தமிழிலும் கூட நிறைய எழுத்தாளர்கள் இந்தப் பாணியைப் பின்பற்றி எழுதுகிறார்கள். அதற்கு நான் பயன்படுத்திய எளிய பதம் தான் அது. வாசிப்பை வாசகமயப் படுத்துவதற்காக நானும் ஒரு முயற்சி செய்து பார்த்தேன். அவ்வளவே. அது சரியான பதமா என்று கேட்டால் எனக்குத் தெரியாது என்பதே விடையாகும். 


சிறுகதைகளின் வரையறைகள் பற்றிச் சொல்லுங்கள்? ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும்;?

சிறுகதைகளின் வரையறைகளை இப்போது நான் பேசுவது அறிவீனமானது. தட்டையான பாணியில் எழுதுவதும் பாடப் புத்தக சட்டகங்களைப் பின்பற்றி எழுதுவதும் வழக்கொழிந்து வருகிறது. இப்போது எவ்வாறெல்லாம் எழுத முடியுமோ அத்தனை முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கிறார்கள். மேலும் பின்நவீன எழுத்தின் கூறாக கட்டுடைத்தல் என்ற சொல் பிரபலமாகி வருகிறது. இது புதிய விஷயம் அல்ல. கட்டுடைத்தல் என்பது கதையை அசிங்கமாக்குவது அல்லது அலங்கோலப்படுத்துவது அல்லது ஒருவருக்கும் புரியாமல் எழுதுவது அல்ல. என்னுடைய புரிதல் என்னவென்றால் ஒழுங்கின்மையில் ஓரொழுங்கைத் தேடுவது. எந்தப் பாணியில் எழுதினாலும் கதையை ஒரு புள்ளியில் கட்டுக்குள் அல்லது மையத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அப்போதுதான் நல்ல கதையாக அது இருக்கும்.

ஏர்னஸ்ட் ஹெமிங்வே சிறுகதை எழுதுவது தொடர்பில் கூறியிருப்பது மிகவும் பொருத்தம் என்று நம்புகிறேன். எழுதுவது என்பது எப்போதும் பெரும் சட்டத்திட்டங்களை உள்ளடக்கி இருப்பதாய் நான் காணவில்லை. சிலபோது அது இலகுவாய் நேர்த்தியாய் வந்தமைந்து விடுகிறது. இன்னும் சில நேரங்களிலோ அது மலையைக் குடைந்து வெடித்துச் சிதற வைக்கும் பெரும் கைங்கரியமாயும் காரியச் சுமையாயும் ஆகிவிடுகிறது..


தற்கால சிறுகதைப் போக்குகள் பற்றிய உங்களது அவதானிப்புக்களைக் கூறுங்கள்?

தற்காலம் என்பது இறந்த காலத்தின் நீட்சி என்று நம்புபவன் நான். எனவே கடந்த கால புனைவுகளைக் கட்டாயம் வாசித்து கால மாற்றத்தால் கதை சொல்லுதலில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ளல் வேண்டும். உள்நாட்டிலும் தமிழ் மொழியிலும் சிறந்த கதைகள் நிறையவே உள்ளன. முதலில் அவற்றை வாசித்து அக்காலப் போக்கை அறிந்த பின்னரே தற்காலப் போக்குகளை ஆராய முடியும். 

இப்பொழுது நுண்கதைகள் (ளூழசவ குiஉவழைn), நுண் சித்தரிப்பு (ஆiஉசழ யேசசயவழைn), குடயளா குiஉவழைn போன்ற மிகவும் குறுகிய வடிவக் கதைகளில் கவனம் சென்றுள்ளது. ஆனால் நிறைய எழுத்தாளர்கள் அதனை பத்திரிகைகளில் நாளாந்தம் பிரசுரமாகும் குட்டிக் கதைகள் என்றோ சிறுகதைகளைச் சுருக்கி எழுதுவது என்றோ தவறாகப் புரிந்துள்ளனர். அடர்த்தியான எழுத்தாற்றல், நுட்பமான கற்பனை என்பன இருப்பின் இதற்குள் நுழையலாம். என்றாலும் நீண்ட கதைகள் என்று நீங்கள் நம்பும் சிறுகதைகளுக்கு இன்னும் மௌசு இருக்கிறதென்று நம்புகிறேன். மேலும் சிறுகதைகளின் உருவம், உள்ளடக்கம், மொழி, கதை சொல்லும் பாணி என்பவற்றில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் நிறைய அவ்வாறான கதைசொல்லிகள் உருவாகியிருக்கிறார்கள். எனவே இக்கால கட்டத்தில் எழுத்தாளனுக்கு கற்பனை மட்டும் போதாது. அதியுச்ச கற்பனையும் அறிவியல் அறிவும் பரந்து விரிந்த வாசிப்பும் தேவை. 


நீங்கள் எழுதிய சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கதை அல்லது கதைகள் எது? ஏன்?

பூச்செண்டு போல் ஒரு மனிதன் தொகுதியில் உள்ள முதலாவது கதையைத் தவிர மற்ற ஏழு கதைகளும் எனக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பட்டாம்பூச்சி என்ற நிஜமும் மரத்துடன் பேசுதல் என்ற புனைவும், திடுக்குறச் செய்யும் இரட்டைத் தலைச் சர்ப்பம் ஆகிய கதைகள் மிகவும் பிடிக்கும். காரணம் இக்கதைகளுக்காக நான் கடினமான உழைப்பைச் செலுத்தியிருக்கிறேன். 


உங்களுக்கும் வாசகர்களுக்குமான தொடர்பு எவ்வாறுள்ளது? வாசகர்கள் உங்களது எவ்வகையான கதைகளை விரும்பி வாசிக்கின்றனர்?

என்னுடைய வாசகர்களை இரண்டு வகையறாவுக்குள் உள்ளடக்கலாம். அதில் அடங்கியுள்ள சுவாரஷ்யமான கதைக்காக வாசிப்போர் ஒரு ரகம். இவ்வகைக்குள் நிறைய மாணவர்களும், தீவிர வாசகர்களின் மனைவிமார்களும் அடங்குகிறார்கள். மற்றவர்கள் தீவிர வாசகர்கள். இவர்கள் விமர்சனப் பார்வையோடும், கதையின் பின்புலம், கருப்பொருள், ஆரம்பம், முடிவு, மொழிநடை, கதையின் பாணி போன்றவற்றை நுணுகி ஆராய்ந்தும் வாசிப்பவர்கள். என்னிடம் கேள்வி எழுப்புகின்ற அதீத ஆர்வம் உள்ள வாசகர்களும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும் நுனிப்புல் மேய்கின்ற அல்லது முன்னுரை அணிந்துரை மட்டுமே வாசிக்கின்ற சோம்பேறி வாசகர்களை நான் விரும்புவதில்லை. 


உங்கள் சிறுகதைகளுக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

நிறைய வரவேற்பு இருந்தாலும் அந்நிய மொழிநடை தொடர்பாகவும் பரிச்சயமற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் தொடர்பாகவும் பலர் என்னிடம் விவாதித்திருக்கிறார்கள். அது என்னுடைய பலவீனமாகக் கூட இருக்கலாம். 


எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறீர்கள்? ஏன்?

அனேகமாக தேர்வு செய்த நூல்களையும் என்னுடைய எழுத்தாள நண்பர்கள், முகநூல் நண்பர்கள் சிபாரிசு செய்யும் புத்தகங்களையும் வாசிக்கிறேன். இப்போது ஷோபா சக்தியின் இச்சாவை வாசிக்கிறேன் மற்றும் தந்தை கோரியோ, ஹாருகி முரகாமியின் கினோ தஸ்தாவஸ்கியின் அசடன் என்பவைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். கூடுதலாக மொழிபெயர்ப்பு நூல்களின் மீதுதான் எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. வட்டத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை மொழிபெயர்ப்புகள் எமக்குக் காட்டுகின்றன. 


உங்களுடைய எழுத்தாள நண்பர்களாக யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?

எழுத்துகளுக்காகத் தங்களை அர்ப்பணித்து எழுதும் அனைத்து எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நான் நண்பர்களாகவே மதிக்கிறேன். இவ்விடத்தில் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும் விதத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களோடு பயணிக்கும் சிலர் இருக்கிறார்கள். பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், மன்சூர் ஏ. காதர், உமா வரதராஜன், ரியாஸ் குரானா, அனார் இஸ்ஸத் ரெஹானா போன்றவர்கள். 


ஒரு வைத்தியராக இருக்கும் நீங்கள், சிறுகதைகளை எந்தெந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

பிரத்தியேக வைத்திய சிகிச்சை நிலையத்திலும், பிரயாணங்கள் செய்யும் வேளையிலும், இரவுகளிலும் சிறுகதைகளை எழுதுகின்றேன்.


தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

தற்போது கொரோனாவினைத் தொடர்புபடுத்தி 'அன்பியல், துன்பியல், கொரோனா' என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதுகிறேன். 


உங்களது இலக்கிய வாழ்வில் இதுவரை மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

சொர்க்கபுரிச் சங்கதி சிறுகதைகள் தொடர்பில் நிறைய வாசகர்களும் எழுத்தாளர்களும் என்னைப் பாராட்டினார்கள். என்னுடைய கதைகளை ரசிப்பவர்களாக நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். எனினும் மொழிபெயர்ப்புத் தொகுதி தொடர்பில் என்னுடன் எவ்வித அறிமுகமுமின்றி கமல் பெரேரா என்ற எழுத்தாளர் பிரபல சிங்கள வார இதழான தினமினவில் எழுதிய கட்டுரையை மறக்க முடியாது. பத்திரிகையின் அரைப் பக்கத்தில் வர்ணப் படத்தோடு அது வெளியாகியது. 


இதுவரை கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியான சொர்க்கபுரிச் சங்கதி நூலுக்கு 2017 இல் கிழக்கு மாகாண சபை விருது, அரச இலக்கிய விருது, கொடகே விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றேன். 


நிறைவாக இளைய தலைமுறைப் படைப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் என்ன சொல்லப் போகிறீர்கள்?

படைப்பாளிகளை இவ்வாறு வகைப்படுத்துவதை நான் வரவேற்பதில்லை. ஆழ்ந்த ஆய்வு இன்றியும் நூல்களை வாசிக்காமலும் நுனிப்புல் மேய்வது போல் எழுதுவதையும் மேலோட்டமாக வாசிப்பதையும் யாராக இருந்தாலும் நான் வெறுக்கிறேன். குறைந்த பட்சம் தமிழில் வெளிவந்த ஒரு சிறந்த சிறுகதைத் தொகுதியையோ கவிதைத் தொகுதியையோ வாசிக்காமல் நான் சிறப்பாக எழுதுகிறேன் என்று சொல்பவர்களின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதே. சிறந்த படைப்பாளிகள் எல்லா வயதிலும் சிறப்பாக எழுத முயற்சிப்பார்கள். சில எழுத்தாளர்கள் தமது முதல் படைப்பிலேயே உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். சிலருக்கு கால வளர்ச்சி தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு அடைமொழி தேவையில்லை. எழுத்தாளன், வாசகன் இருவருக்கும் உழைப்பு தேவைப்படுகிறது. வாசகர்களுக்கு அறிவுரை அவசியமில்லை. தேர்ந்த வாசகர்கள் எதை வாசிப்பது என்று அறிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கு நேரமில்லாதோர் பத்திரிகைச் செய்திகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Monday, October 19, 2020

24. மூத்த ஆளுமை கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களுடனான நேர்காணல்

50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் மூத்த ஆளுமை கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தினைக் கூறுங்கள். உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?

மூதூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன். பாடசாலையில் கல்வி பயிலும் காலத்திலிருந்தே எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகின்றேன். க.பொ.த. சாதாரண தரம் வரை மூதூர் மகா வித்தியாலயத்திலும் உயர் வகுப்பை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் கற்றேன். 1971 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்தது. பின்னர் 1973 ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலையில் கணிதப் பிரிவில் பயின்று கணித ஆசிரியராகவும் 1989 ஆம் ஆண்டு அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று 2011 இல் ஓய்வு பெறும் வரை அதிபராகவும் கடமையாற்றியுள்ளேன்;.


ஆசிரியர் தொழில் என்பதனால் எனக்கு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் போதிய அவகாசம் இருந்தது. எனது பணிக்காலத்தில் மாணவர்களின் கலை இலக்கிய முயற்சிக்கு முடிந்தளவு உதவிகளைப் புரிந்துள்ளேன். மேலும் அவர்களை எழுத்துத் துறையில் ஆர்வமூட்டுவதற்காக பல கையெழுத்துப் பிரதிகளையும் ரோணியே சஞ்சிகைகளையும் உருவாக்கி வெளியீடு செய்வதற்கு வழிகாட்டியுள்ளேன்.


நீங்கள் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைத்த அந்தக் காலம் எப்படியிருந்தது? 

அக்காலப் பகுதிகளில் அதாவது 1970 களில் இந்திய சஞ்சிகைகள் இலங்கை வாசகர்களிடம் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தன. அவைகளின் வரவு எல்லா ஊர்களிலும் மிகைத்துக் காணப்பட்டதென்றே கூறவேண்டும். இதில் எனது ஊரும் விதிவிலக்கல்ல. இவற்றில் கல்கி, ஆனந்த விகடன், தினமணிக் கதிர், குமுதம், கல்கண்டு, அம்புலி மாமா, தீபம், கலைமகள் போன்ற ஜனரஞ்சக சஞ்சிகைகளுடன், ஈழத்தில் வெளிவந்த கதம்பம், மல்லிகை, நிலா குமரன் போன்றவற்றையும் ஆர்வமாக வாசிப்பேன். நல்ல வேளையாக எனது வீட்டிற்கு பக்கத்தில் அப்போது இக்பால் சனசமூக நிலையம் என்ற பெயரில் ஒரு நூலகம் இயங்கி வந்தது. இதுவே எனது வாசிப்புப் பசிக்கு தீனிபோட்டதோடு எழுத்து முயற்சிக்கும் அத்திவாரமிட்டது.

மேலும் இன்று போலில்லாமல் பத்திரிகை சஞ்சிகைகளை பணம் கொடுத்து வாசிப்பவர்களின் எண்ணிக்கை அப்போது மிகவும் அதிகம். இதன் காரணமாக குறிப்பிட்ட சில சஞ்சிகைகளை முற்பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலமையும் இருந்தது. இதனால் எழுத்து துறையில் ஈடுபட்டவர்களுக்கு தங்கள் நூல்களை சந்தைப்படுத்துவதில் அதிக சிரமமிருக்கவில்லை. எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை வாங்கி நூலாக்கம் செய்வதற்கு பல நிறுவணங்கள் அக்காலப் பகுதியில் இயங்கி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

உங்களது முதலாவது படைப்பை எந்த ஊடகத்தில் கண்டு அகங்குளிர்ந்தீர்கள். அந்த ஆக்கம் பற்றியும் செல்லுங்கள்?

1970 களில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தினபதி தினசரியில் 'தினமொரு சிறுகதை' திட்டத்தை செயல்படுத்தியிருந்தனர். அதில் எனது முதலாவது படைப்பான சிறுகதை 1969 ஆம் ஆண்டு அமரர் திரு. அருள் செல்வநாயகம் அவர்களின் சிபார்சுடன் 'தியாகிகள் வரிசையில்' என்ற மகுடத்தில் பிரசுரமானது. இக்கதையின் மத்தியில் எனது பெயருடனான முகவரியை முதன் முதலில் பெரிய எழுத்தில் பார்த்து அகம் குளிர்ந்த நினைவு இன்னும் என் நினைவில் பசுமையாய் உள்ளது.

அந்த ஆக்கம் பாடசாலை மாணவர் குழு ஒன்று சமூக நோக்கத்திற்கான சீர் திருத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிர் துறக்கும் ஓரு புரட்சிகர தோழனின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.


அப்போது செ. கணேசலிங்கம், கே. டானியல், இளங்கீரன் போன்றோரின் கதைகளை விரும்பி வாசிப்பேன். இதன் தாக்கமே இக்கதையை எழுதுவதற்கான ஒரு காரணியாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதுகின்றேன்.


உங்களுடைய நூல் பிரவசங்கள் பற்றிக் கூற முடியுமா?

என்னுடைய முதலாவது நூல் 'முத்து' என்ற புதுக் கவிதை தொகுப்பாகும். இது 1976 ஆம் அண்டு வெளியிடப்பட்டது. சுமார் பதினெட்டுப் பக்கங்களை மட்டும் கொண்ட சிறிய தொகுப்பாகும். இலங்கையின் முதலாவது புதுக் கவிதை தொகுப்பு திக்குவல்லை கமால் அவர்களின் 'எலிக் கூடு' ஆகும். அதனைத் தொடர்ந்து செந்தீரன், பூநகர் மரியதாஸ், போன்ற வேறு பலரும் இதே மாதிரியான அளவில்தான் தாங்கள் கவிதைத் தொகுப்புக்களை அக்காலப் பகுதியில் வெளியிட்டிருந்தனர். அதே பாணியில் நானும் முத்துவை வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து 'பிட்டும் தேங்காய்ப் பூவும்' (1997), 'இழந்து விட்ட இன்பங்கள்' (2003), 'ஒரு காலம் இருந்தது' (2011), 'ஒரு வானில் இரு நிலவுகள்' (2018) ஆகிய கவிதை நூல்களையும் 2005 இல் ஆசிரியர் பணியை அழகுறச் செய்வோம் என்ற கட்டுரைத் தொகுதியையும், 2015 இல் 'அபோதம்' என்ற உருவாக்கக் கதை தொகுதியையும் வெளியிட்டுள்ளேன்.

உங்களது அதிகமான படைப்புக்கள் இன ஒற்றுமையைப் பற்றி பேசியிருக்கின்றதே இது பற்றி..?

எனது கட்டிளமைப் பருவத்திலிருந்து நான் வாழ்ந்த அதிகமான காலம் யுத்தம், இனமுறுகல், வன்முறை மலிந்த சூழலிலே கழிந்துள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எல்லோரையும் போலவே நானும் பாதிக்கப்பட்டிருந்தேன். இது என் மன உணர்வுகளைப் பெரிதும் பாதிப்படைய செய்தது. இதன் வெளிப்பாடாகவே இந் நிகழ்வுகளை எழுத்திலும் கொண்டுவரும் முயற்சியில் அக்கறை காட்டினேன். எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் ஒரு சாமான்யன் என்ற வகையில் மனித நேயத்தை கட்டி எழுப்புவதை ஒரு தார்மீகக் கடமையாகக் கருதியே இன நல்லுறவை வலியுறுத்தும் ஆக்கங்களை அதிகம் எழுதுவதில் ஆர்வம் காட்டினேன்.


உங்கள் படைப்புக்களின் பேசு பொருட்களை எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள்?

இலக்கியத்தில் கற்பனை வளம், அழகியல் சார்ந்த விடயங்கள் முக்கிய இடம் வகித்தாலும் யதார்த்தங்களை கூறும் படைப்பிலக்கியங்களையே நான் பெரிதும் நேசிக்கின்றேன். இதன் காரணமாக எனது வாழ்வியல் அனுபவத்தில் நான் தரிசித்த விடயங்களையும், விளிம்பு நிலை மாந்தர்களின்  அவலங்களையும் பகைப்புலனாகக் கொண்ட ஆக்கங்களையும் அதிகமாக எழுதியள்ளேன். இவற்றினூடாக வறுமை, வர்க்க முரண்பாடு, விடுதலை, அடிமைத்தனம் என்பவைகளைப் போசுப் பொருளாகக் கொண்ட ஆக்கங்களையே பெரும்பாலும் எழுதியுள்ளேன்.


'ஒரு வானில் இரு நிலவுகள்' இந்த நூலைப் பற்றி தாங்கள் குறிப்பிடுவது என்ன? ஏன் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தீர்கள்?

இந்நூல் ஒரு நூலாக்கப் போட்டிக்காக எழுதப்பட்டது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2018 ஆம் ஆண்டு ஆக்க இலக்கிய நூல்களை தெரிவு செய்வதற்காக கையெழுத்துப் பிரதிகளை கோரியிருந்தனர். இதில் நானும் கவிதை நூலுக்காக ஒரு புதிய யுக்தியை கையாள வேண்டும் எனக் கருதி ஒரே தலைப்பில் ஓரு கருத்தை பிரதிபலிக்கக் கூடியதாக மரபும் புதிதுமாக இரு கவிதைகள் வீதம் பதினெட்டுத் தலைப்புக்களில் முப்பத்தாறு கவிதைகளை எழுதி அனுப்பியிருந்தேன். இதனாலேயே இத் தொகுப்பிற்கு 'ஒருவானில் இரு நிலவுகள்' என்ற மகுடத்தை வைத்தேன். இதில் எனது பிரதியும் தெரிவு செய்யப்பட்டு அவர்களினால் நூலாக்கி வெளியிடப்பட்டது. மகழ்ச்சிக்குரிய  விடயமாகும்.


கவிதையை எழுதத் தொடங்கும் ஆரம்ப ஆர்வலர்களுக்கு கவிதை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நான் முறைப்படி கவிதை இலக்கணத்தைக் கற்று கவிதைத் துறையில் காலடி எடுத்து வைத்தவனல்ல. இதில் ஈடுபட முன்னர் பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே கவிதை நூல்களையும், காவியங்கள் மற்றும் நாவல்களையும் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த வாசிக்கும் ஆர்வமே கவிதை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது. சில விடயங்களை மூத்தவர்களிடமும் எனது ஊர் கவிஞர்களிடமும் கேட்டு, மேலும் என்னை செம்மைப்படுத்திக் கொண்டேன். இது எனது சொந்த அனுபவம். இத் துறையில் புதிதாக கால் பதிக்க நினைப்பவர்கள் பழங்கால, தற்கால கவிதைகளை நன்கு வாசித்து அதன் அமைப்பை விளங்கி கவிதை எழுத முன்வருவது பயன் தரும் என்பதே எனது கருத்தாகும்.


இலக்கியங்களில் இலங்கை முஸ்லீம்களின் வகிபாகம் எவ்வாறு உள்ளது?

இதற்கு பதில் கூறுவதாயின் அது மிக நீண்டதாக இருக்கும். புலவர் அப்துல் காதர் லெப்பை, அறிஞர் சித்திலெப்பை போன்றேர்களின் காலத்திற்கு முன்பிலிருந்தே தமிழ் இலக்கியத்திற்கு தொண்டாற்றிய முஸ்லீம்கள் பலரின் வரலாறு பலவற்றை நாமறிவோம். அவையாவும் பல்வேறு அறிஞர்களால் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. அதனை விடுத்து சமகாலத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை ஆய்வு செய்து பார்த்தால் 1960 இற்கு பிற்பாடு இலக்கியத் துறையில் ஈடுபடும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதை மறுக்க முடியாது. இதில் எத்தனை பேர் தரம் வாய்ந்த இலக்கியங்களைப் படைக்கின்றனர் என்ற வாதத்தை புறந்தள்ளி பொதுவாகக் கருதுமிடத்து இக்காலப் பகுதியில் வெளிந்த முஸ்லிம் இலக்கியவாதிகளின் படைப்புக்கள் பல்வேறு துறைகளில் விருதுகளையும் பராட்டுக்களையும், சாதனைகளையும் புரிந்துள்ளதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இத்தகைய தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியவாதிகள் இக்காலப் பகுதியில்  எம்மத்தியில் உருவாகியுள்ளமை நாம் பெருமைப்படத்தக்க விடயமாகும். நாவல், கவிதை, சிறுகதை, காவியம், ஆய்வு என இவர்களின் இலக்கியப் பங்களிப்பு பல்வோறு துறைகளிலும் இன்று வியாபித்துக் காணப்படுகின்றன.


நீங்கள் வெளியிட்ட 'ஓசை' காலாண்டு கவிதைச் சிற்றிதழ் பற்றி...?

'மனிதநேயம் மண்ணில் மலர ஒலிக்கும் ஓசை' என்ற மகுட வாசகத்தைத் தாங்கி 2005 ஆம் ஆண்டில் 'ஓசை' முதலாவது கவிதைச் சிற்றிதழ் வெளியிடப்பட்டது. எமது பிரதேசத்தில் வாழும் இளம் கவிஞர்களின் கவி ஆற்றலை வளர்க்கும் நோக்குடனேயே இச்சிற்றிதழ் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது இதழ் வெளிவந்ததன் பின்னர் இங்கு ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக மக்களின் இடப்பெயர்வினால் சில வருடங்கள் இதனை வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை 27 இதழ்கள் வெளிவந்தன. எமது பிரதேச எழுத்தாளர்களை மையப்படுத்தி 'ஓசை' வெளியிடப்பட்டாலும் இலங்கையின் சகல பாகங்களுக்கும் ஓசை சென்றடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கவிஞர்களும் இதில் தங்கள் கவிதையை எழுதி உற்சாகமளித்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


ஓர் ஆசிரியராக, அதிபராகக் கடமையாற்றிய நீங்கள் மாணவர்களுக்கிடையே காணப்படும் இலக்கிய ஆர்வம் பற்றி என்ன சொல்வீர்கள்?

நான் கடமையாற்றிய பாடசாலைகள் பலவற்றில் மாணவர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிப்பதற்காக கையெழுத்து சஞ்சிகைகள், காலாண்டு பாடசாலை சஞ்சிகைககள் மற்றும் இலக்கியப் போட்டிகளை நடாத்தி அவர்களை கலை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டும் வகையில் கூடிய கவனமெடுத்தேன். மாணவர்களின் ஆர்வம் இத்துறையில் அதிகம் ஈடுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. இதற்குரிய முக்கிய காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட அதிகூடிய கற்றல் அழுத்தம் என்பதேயாகும். இதற்கு விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில மாணவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டு இன்று இளம் எழுத்தாளராக இலக்கிய வானில் ஒளிவீசுகின்றமை மகிழ்ச்சியைத் தருகின்றது.


இஸ்லாமிய பெண் படைப்பாளிகளின் வருகைப்பற்றி என்ன செல்வீர்கள்?

ஒரு காலத்தில் முஸ்லீம் பெண்கள் கல்வி கற்பதும் உத்தியோகம் பார்ப்பதும் தவறாக பார்க்கப்பட்டடது. இந்நிலையில் அவர்கள் நூல் வாசிப்பதென்பது மிகவும் அரிதான செயலாகவே இருந்து வந்தது. ஆனால் பெண்களி;ன கல்வி கற்கும் வீதம் ஆண்களை விடவும் உயர்ந்த நிலையில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் இதற்குச் சமாந்தரமாக  பெண் எழுத்தாளர்களும் அதிகம் உருவாகியுள்ளனர். சமகாலத்தில் முஸ்லீம் பெண்கள் பலர் நாவல், சிறுகதை, கவிதை போன்ற ஆக்க இலக்கிய நூல்களை அதிகமாக வெளியீடு செய்துவரும் செய்திகளை நாம் நாளாந்தம் கேள்வியுற்று வருகின்றோம். அத்தோடு தற்காலத்தில் ஆய்வு நூல்கள், நுண்கலைகள், சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகத் துறைகளில் முஸ்லீம் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.


உங்களை கவர்ந்த எழுத்தாளர் யார்?

இதில் ஒருவர் என்று யாரையும் குறிப்பிட்டுக் கூறமுடியாது. மக்களின் யதார்த்த வாழ்வைப் பிரதிபலித்து அவர்களின் வாழ்வை வளம்படுத்த எழுத்தை ஆயுதமாக பயன்படுத்தும் அனைவரும் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களே.


இளம் எழுத்தாளர்களை வளர்தெடுப்பதற்காக மூத்த எழுத்தாளர் என்ற வகையில் எவ்வகையான பணிகளை நீங்கள் முன்னெடுத்து வருகின்றீர்கள்?

மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் என்ற பெயரில் 1980 ஆம் ஆண்டு ஓர் அமைப்பை உருவாக்கி பல இளம் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வந்துள்ளோம். இலக்கிய கருத்தரங்குகள், நூல் அறிமுகங்கள், கவிதை, சிறுகதைப் பட்டறைகள், போன்ற நிகழ்வுகளை கடந்த காலங்களில் குறிப்பாக போர்காலச் சூழலிலும்கூட நடாத்தியுள்ளோம். மேலும் அகில இலங்கை ரீதியாக கவிதைப் போட்டி சிறுகதைப் போட்டிகளை நடாத்தி பரிசுகளை வழங்கியுள்ளளோம். இதன் மூலம் பல புதிய இலக்கியவாதிகள் உருவாவதற்கு நாம் வழிசமைத்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.


உங்களது படைப்புக்கள் பற்றிய ஆய்வு நூலாக கொழும்பு பல்கலைகழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 'விடியல்' நூல் பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எனது கவிதைகளை ஆய்வு செய்து ஒரு நூலினை யாராவது வெளியிடுவார்கள் என்பதை உண்மையில் நான் எப்போதும் எதிர்பார்க்கவில்லை. தனது பல்கலைகழக படிப்பிற்கு 'ஊடகத்தின் வாயிலாக இன ஒற்றுமைக்கான பாலம்' என்பதை அடிப்படையாக வைத்து எனது கவிதைகளை ஆய்வு செய்து 'விடியல்' என்ற பெயரில் நூலாக்கமாக வெளியிட்ட வெலிகம ரிம்ஸா முஹம்மது அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டவன். இந்நூல் மூலம் என்னையும் எனது கவிதைகளையும் இலக்கிய உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய கவிதாயினி ரிம்ஸா முஹம்மத் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடாத்தி என்னையும் அதில் அதிதியாக கௌரவித்தமை என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.


இன்றைய இலத்திரணியல் ஊடகங்களின் வளர்ச்சி வாசிப்பை மட்டுப்படுத்திவிட்டது என்று குறிப்பிட முடியுமா? ஏன்?

நிச்சயமாக. எமது நாட்டைப் பெறுத்தவரைக்கும் முதன் முதலில் தொலைக்காட்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்துதான் இதன் தாக்கம் கூடுதலாக அதிகரித்து வந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் தொலைகாட்சியிலும் கணினி, கைபேசியிலும் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இவ் ஊடகங்கள் இளம் வயதினரை கவரும் விதத்தில் பல்வேறு விடயங்களை வெளிக்கொணர்வதனால் இதிலே தங்களின் காலத்தை அதிகமானோர் செலவிட்டு வருகின்றனர். இந்த காரணத்தினாலேயே நூல்களை வாசிக்கும் ஆர்வம் அவர்களிடத்தில் குறைவடைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.


வேறு எவ்வகையான இலக்கியங்களை எதிர்காலத்தில் படைக்க உத்தேசித்துள்ளீர்கள்?

என்னால் எழுதப்பட்ட ஒரு மெல்லிசைப் பாடல் தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது. சிறுவர் இலக்கிய நூலும், நாவலும் எழுதும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றேன்.


இதுவரை உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?

தேசிய ரீதியாக வழங்கப்பட்ட பரிசுகள் விருதுகள், பட்டங்கள் பல இருந்தாலும் அவற்றை என்றுமே நான் பயன்படுத்தியதில்லை. வேண்டுமானால் இது பற்றிய ழுழு விபரங்களையும் வெலிகம ரிம்ஸா முஹம்மதினால் எழுதி வெளியிடப்பட்ட ''விடியல்'' நூலின் மூலம் தெளிவாகவும் விளக்கமாகவும் அறிந்து கொள்ள முடியும்.


உங்களது இலக்கிய வாழ்வில் இன்றும் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை குறிப்பிடுங்கள்?

1973 ஆம் ஆண்டு நான் பலாலி ஆசிரியர் கல்லூரிக்கு பயிற்சிக்காக பிரவேசித்தபோது எதிர்பாராத விதமாக அன்று எழுத்துலகில் புகழ்பெற்றிருந்த திக்குவல்லைக் கமால், அன்பு ஜவஹர்ஷா ஆகியோரும் பயிற்சி பெறுவதற்கு வந்திருந்தனர். இவர்களின் நட்பால் யாழ் குடா நாட்டின் பல சிரேஷ்ட எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. 

அப்போது தென்னிந்தியாவிலிருந்து வெளிவந்த வானம்பாடி, ஏன் போன்ற கவிதைச் சிற்றேடுகளை எனக்கு பெற்றுத் தந்து புதுக் கவிதையின்பால் ஆர்வத்தை வளர்த்தவர்களும் இவர்களே. இலக்கியம் பற்றிய தேசியம் கடந்த பார்வையையும் கவிதை மீதான பிரங்ஞையையும் உருவாக்கி கவிதை வானில் சிறகடித்துப் பறக்க தூண்டுகோலாக இருந்த இவர்களின் நட்பை என்றும் என்னால் மறக்க முடியாது. இறையருளால் அது இன்றுவரை நீடித்து வருகின்றது. மேலும் கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார் போன்றேருடன் வேறு பல இலக்கியவாதிகளும் சமகாலத்தில் பலாலி ஆசிரியர் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தமை எனது அதிர்ஷ்டமே. நாங்கள் அனைவரும் அங்கு ஒரு நட்பு வட்டமாகவே இயங்கினோம். இதனால்தான் எங்களை ஏனைய நண்பர்கள் 'பலாலி பஞ்ச பாண்டவர்கள்' எனப் பட்டம் சூட்டி அழைத்தனர். இதைப் பற்றி கலைவாதி கலீல் அவர்கள் தற்போதும் கூட பத்திரிகைகளில் எழுதி வருவது பழைய நினைவுகளை மீட்டி மகிழ்சியூட்டச் செய்கின்றது. 


இறுதியாகப் பகிர்ந்து கொள்ள விரும்புவது என்ன?

இலக்கியம் என்பது காலத்தின் தேவைக்கேற்ப மக்களின் வாழ்வியலை முதன்மைப்படுத்தி  படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது காலத்தால் அழியாத இலக்கியமாக வாழும்.  இதையே எனது இலக்கிய நோக்காகக் கொண்டு பயணிக்கின்றேன். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு நோக்கு இருக்கலாம். அதன் மூலம் பலர் பயனடைபவர்களாயின் அது வரவேற்கத்தக்கதே. இலக்கியமும் அவ்வாறே தங்கள் படைப்புக்கள் எதுவாக இருப்பினும் அது மனித வர்க்கத்தின் விடிவுக்காக ஆக்கப்படும்போது மக்கள் இலக்கியமாக இப்புவியில் சிரஞ்சீவியாக நிலைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!!!

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

23. கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்

மூத்த ஆளுமை கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



திருகோணமலை மாவட்டத்தின் தென் கிழக்கே அமைந்துள்ள கிண்ணியாவைச் சேர்ந்த கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் பன்முக ஆளுமையுள்ள ஒரு எழுத்தாளர், பன்னூலாசிரியர். நீண்ட காலமாக இலக்கியப் பணி செய்து வருகின்ற இவர் 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய விருதுகள் பலவும் பெற்று, இன்று ஈழத்து இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்ற அவருடனான ஒரு நேர்காணலை தினக்குரல் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். 


உங்களது பூர்வீகம், பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

திருகோணமலை மாவட்டத்தின் தென் கிழக்கே அமைந்துள்ள கிண்ணியாவை 
பூர்வீகமாகக் கொண்ட எனது தந்தை ஒரு விவசாயி. நான் சிறு வயதாக இருக்கும் போதே அவர் காலஞ் சென்றுவிட்டார். தாய் கிராமியக் கவித் துறையிலே பெயர் பெற்றவர். சிறந்த கதை சொல்லியும் கூட. 

முள்ளிப்பொத்தானை அல்-ஹிஜ்ரா தேசிய பாடசாலை, பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை, கிண்ணியா மத்திய கல்லூரி என்பவற்றில் கல்வி கற்று சமூக விஞ்ஞானம் டிப்ளோமா பெற்றதோடு, இலங்கை தொழிநுட்பவியலாளர் சேவை பரீட்சையிலும் தேறினேன். 1992 இல் குருணாகல் தாதிய பயிற்சிக் கல்லூரியில் நேசிங் பயிற்சி நெறியினை குறிப்பிட்ட ஒரு காலம் பெற்றுள்ளேன். கொழும்பு உலகலாவிய தொற்று நோய்த் தடுப்பு நிலையம் (புகுயுவுஆ) வேலைத் திட்டத்திலும் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளேன். நெல் சந்தைப்படுத்தும் சபை கூட்டுறவு முகாமையாளர் பொதுக் சுகாதார வெளியக உத்தியோகத்தராக கடமையாற்றி தற்போது ஓய்வு நிலையிலுள்ளேன்.


உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக ஆரம்பமானது?

எனது முதலாவது எழுத்து முயற்சி 1974 ஆம் ஆண்டு நான் சிறுவனாக 
இருக்கும்போது தினகரன் பத்திரிகை மூலமாக தொடங்கப்பட்டது. 'பேசும் தெய்வம்' என்ற சிறுவர் பாடலே எனது முதலாவது எழுத்து முயற்சியாக அமைந்தது. படிப்படியாக இது வீரகேசரி, ராதா, மித்திரன், தினபதி, சிந்தாமணி, தினக்குரல், நவமணி, விடிவெள்ளி என விரிவுபட்டுச் சென்றது. இன்றைக்கும் இப்பத்திரிகைகளே கை கொடுத்து நிற்கின்றன. அவைகளுக்கு என்றைக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகும். 


நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதத் தூண்டப்பட்ட சவம்பவங்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

இலக்கியத்தில் பல்வேறு வகைப்பட்ட பிரிவுகள் இருக்கும்போது ஒரு சில வகையில் மட்டும் கட்டுப்பட்டு நிற்க, மனசு இடம் தராததினாலும், பன்முக ஆளுமை எனக்குள் நிறையவே இருந்ததினாலும் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதத் தொடங்கி அதில் பெயரும் பெற்று வெற்றியும் கண்டேன். 


படைப்புகளுக்கான கருப்பொருளை எவ்வாறு பெறுகிறீர்கள்?

படைப்புகளுக்கான கருப்பொருளை ஒரு போதும் தேடியலைவதில்லை. 
அன்றாடம் வாழ்வில் நடப்பவை. பிறரிடம் காண்பவை, படித்துணர்வது போன்ற அனுபவப் பகிர்வுகளே இந்த கருவூலங்களைப் பெற்றுக் கொடுக்கின்றன. இவைகள் நல்ல படைப்பாக்கத்திற்கு பெரிதும் துணை புரிகின்றன. 


கவிதைகள் எவ்வாறு படைக்கப்படல் வேண்டும்? ஒரு சிறந்த கவிதை எதனைப் பிரதிபலிக்க வேண்டும்?

கவிதைகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்றொரு விதிமுறை தொன்றுதொட்டு இருந்து வந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அவை இல்லாமற் செய்யப்பட்டு, புதுப்புனலாக கவி வண்ணம் ஊற்றெடுத்து பாயத் தொடங்கியுள்ளதால் கவிதையின் வளர்ச்சிப் போக்கில் காத்திரமான மாற்றங்கள் ஏற்படுவதில் ஈழத்துப் படைப்பாளிகளிடமிருந்து சிறந்த படைப்புகள் வெளிவரத் தொடங்கி இருப்பதானது மிகுந்த சந்தோசமளிக்கிறது. மேலும் கவிதை புதிய உயிரோட்டத்தோடு நவீன பாதையில் பயணிக்கவும் தொடங்கியுள்ளது. சிறந்த கவிதை எதைப் பிரதிபலிக்க வேண்டுமெனில் அது வாசகர் மனங்களைத் தொட்டு நின்று தன் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். 


நீங்கள் மெல்லிசைப் பாடல்களும் எழுதியுள்ளீர்கள். இதுவரை எத்தனை 
பாடல்கள் எழுதியுள்ளீர்கள்?

ஆம், நான் பல்வேறு மெல்லிசைப் பாடல்களும் எழுதியுள்ளேன். அதில் அநேகமானமை இஸ்லாமிய பாடல்கள். சுமார் 25 வரையான பாடல்கள்களை இதுவரை எழுதியுள்ளேன். இதில் ஒரு பாடல் 2019 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலைப் பெருவிழாவில் மேடையேற்றப்பட்டு பணப் பரிசு, பாராட்டு, சான்றிதழ் என்பன பெற்று பிரபல்யம் பெற்றது குறிப்பிடத்தக்கது. எமது முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் மாணவர்களால் இப்பாடல் அரங்கேற்றப்பட்டது.


கவிதைக்கும் பாடலுக்கும் இடையில் எந்த மாதிரியான வித்தியாசமுள்ளது?

கவிதை வேறு. பாடல் வேறு. இரண்டும் ஒன்று போல் இருந்தாலும் இவற்றுக்கிடையே நிறைய வித்தியாசங்களைக் காணலாம். பாடல் ஒரே சீரான இசை நயத்திற்கும், தாளத்திற்கும் ஏற்ப தன்னை சீரமைத்துக் கொள்ளும். கவிதை அதன் வடிவில் நின்று தன் கருத்துக்களை எடுத்துச் சொல்லும். 


இதுவரை எத்தனை நூல்களை எழுதியுள்ளீர்கள்?

இதுவரை 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியீடு செய்துள்ளேன். கவிதை நூல், சிறுவர் படைப்புக்கள், கிராமிய நூல்கள் உட்பட சமய நூல்களும், தொகுப்பு நூலும் இதில் உள்ளடக்கம் பெறுகிறது. 2011 மே மாதத்திலிருந்து தொடங்கிய நூல் வெளியீடு இதுவரை எதுவித தடங்களுமின்றி சென்று கொண்டிருப்பது சந்தோசமளிக்கிறது. மேலும், 'முத்துக்கள்' எனும் பெயரில் கையெழுத்துப் பிரதியும் 'அலையோசை', 'கவிச்சரம்' போன்ற தட்டச்சு சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளேன். 


உங்கள் ''உணர்வூட்டும் முத்துக்கள்'' கவிதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? இந்த நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

இது எனது முதலாவது நூலாகும். இதனோடு, 'சிறுவர் பாடல்கள்', 'அஸீஸ் கவிதைகள்' ஆகிய நூல்களையும் ஒரே தடவையில் எழுதி முடித்து ஒன்றாகவே வெளியீடு செய்தேன். இதில் 'உணர்வூட்டும் முத்துக்கள்' சிறந்த வரவேற்பினையும், இலக்கிய உலகில் பல நட்புறவுகளையும் பெற்றுத் தந்தது. இந்நூல் வாழ்வியல் சார்ந்த கருப்பொருட்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. வாழ்விலேற்படும் இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள் என பல அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலோடு வெளியிடப்பட்ட சிறுவர் பாடல்கள் நூல் 2011 இல் மாகாண சாகித்திய விருது பெற்றது. 


நூல்கள் வெளியீடு செய்யும்போது பல்வேறு வகையான சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளீர்களா?

நூல்களை வெளியீடு வெய்வதில் சிரமங்கள் எதனையும் எதிர் கொள்ளவில்லை. தட்டச்சு வடிவமைப்பு, ஒப்பு நோக்கு போன்றவற்றில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. தற்Nhது அவைகளை நானே மேற்கொள்வதால் இப்பணி மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. 



சில தொகுப்பு நூல்களையும் வெளியிட்டதாக அறிகிறேன். அவ்வகையான நூலை வெளியிடுவதற்கு யார் யாரெல்லம் உந்து சக்தியாக இருந்தார்கள்?

தொகுப்பு நூல் வெளியீடு செய்வதற்கு எனது தலைமையில் இயங்கும் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தினர் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினர். அவர்கள் அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த நன்றியோடு நினைவுகூறுகிறேன். 


பல சிறுகதைகளை எழுதியுள்ள தாங்கள் இதுவரை சிறுகதை நூலொன்றை வெளியிடாமைக்கான காரணம்?

நிறைய சிறுகதைகளை எழுதியுள்ளேன். அவைகளில் குறிப்பிட்ட சிலவற்றை தேர்ந்தெடுத்து கூடிய விரைவில் சிறுகதை நூலொன்றினை வெளியீடு செய்ய உத்தேசித்துள்ளேன். இது கால தாமதமானதற்கு விசேட காரணங்கள் எதுவுமில்லை. 



சிறுகதைகள், கவிதைகள் எப்படியான சந்தர்ப்பத்தில் எழுதுகிறீர்கள்?

ஓய்வு நிலை உத்தியோகத்தரான நான் சிறுகதை, கவிதைகளை மற்றும் இலக்கியப் படைப்புகளை எனது ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தியே எழுதி வருகின்றேன். குறிப்பாக பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணி வரையிலான காலப் பகுதி எனக்கு மிகவும் பொருந்தி வருவதோடு அந்த நேரத்தில் எழுதும் எண்ணமும் புது உற்சாகமும் ஏற்படுகின்றது. சிந்தனை வளமும் சிறந்த கருத்துக்களும் கூட அப்போதுதான் கூடியளவில் தோற்றம் பெறுகிறது. 


பொதுவாக கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் பேசப்படுவார்கள். ஆனால் அவர்களது நிஜ வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருக்கும். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

ஆம், இவர்களது வாழ்க்கை மேலோட்டமாக சந்தோசம் நிறைந்ததாக இருந்தாலும் அவர்களது மனங்களில் நிறையவே கவலைகளும் சோகங்களும் அப்பிக் கிடக்கின்றன. வாழ்க்கையின் இன்ப துயரங்களை உள்ளத்தில் புதைத்துக் கொண்டே இவர்கள் வாழ்கிறார்கள். நானும் அப்படித்தான். 40 வருடங்களுக்கும் மேலாக என்னோடு ஒன்றித்து ஒன்றாயிருந்து உறவாகி உயிராகி வாழ்ந்த என் வாழ்க்கை துணையாள் காலஞ் சென்று உடலால் எனைப் பிரிந்ததை இன்றுவரை என்னால் மறக்கவே முடியவில்லை. பெருந்துயர் என்னை ஆட்கொண்டேயிருக்கிறது. 



சிறுவர் இலக்கியத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டி வரும் தாங்கள் அதிக சிறுவர் நூல்களையும் வெளியிட்டுள்ளீர்கள். அவ்வாறு நூல்களை எழுதும் போது எவ்வாறான விடயங்களை மனதிற் கொள்வீர்கள்?

சிறுவர் இலக்கியங்களைப் படைக்கும் போது இவை சிறுவர்களின் மனங்களில், அவர்கள் நற்பிரஜையாக வாழக்கூடிய மனோ நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றே நினைத்துக் கொள்வேன். சிறுவர் சமூகம் நல்லவர்களாக இருந்தால்தான் எதிர் காலமும் நாடும் சிறக்கும். வளங்கள் பெருகும் நல்ல வழியும் பிறக்கும். 


சம காலத்தில் நாவல் இலக்கியங்களின் வரவு வெகுவாகப் குறைந்துள்ளதே, ஏன் நீங்கள் இத்துறையில் ஈடுபடவில்லை?

நீங்கள் சொல்வது உண்மைதான். இதுவரை நாவல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. முயன்றால் முடியாது ஒன்றுமில்லை. உங்களது வேண்டுகோளின்படி சில மாதங்களில் நாவலுருவாக்கத்திற்கு முயற்சிப்பேன். 


இலக்கியத்தின் மூலம் இன ஒற்றுமையைக் கட்டி எழுப்ப எந்த வகையான 
முயற்சிகளை முன்னெடுத்து வருகிறீர்கள்?

இலக்கியத்தின் மூலமாக இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது சிரமமான பணிதான். ஆனாலும் கலைஞர்கள், இலக்கியவாதிகள் என்போர் எப்போதுமே ஐக்கியம் சகோதரத்துவம் சகவாழ்வு போன்றவற்றை நேசிப்பவர்கள். நல்ல உள்ளம் கொண்டவர்கள்.


இவர்களோடு நல்லுறவை பேணுதல், கலை நிழக்வுகளை நடத்துதல், கலாசார பாரம்பரியங்களை பரிமாறிக் கொள்ளுதல், சகோதர சமூகத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகள் மூலமாக இன நல்லுறவினை ஓரளவேனும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்தவகையில் இதற்கான முயற்சிகள் என்னால் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது.


 பல தசாப்த இலக்கிய வாழ்வில் நீங்கள் பெற்றுக் கொண்ட பட்டங்கள், விருதுகள் யாவை?

இலக்கிய வாழ்வில் எனது எழுத்து முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக 
பல்வேறு பட்டங்கள், விருதுகள் கிடைக்கப் பெற்றன. இவைகள் ஆள்பலம், பணபலம் என்பவற்றால் பெறப்பட்டவையல்ல. கலாபூஷணம், இலக்கிய வித்தகர், தேச கீர்த்தி, கலைநிலா போன்ற இன்னும் பல பட்டங்களும், பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய மட்ட விருதுகள் பலவும் கிடைக்கப் பெற்றுள்ளது. எழுத்துக்களின் ஆளுமையை உறுதிப்படுத்துகின்ற இவ்விருதுகளால் எனது மனம் ரொம்பவுமே சந்தோசமடைகின்றது.


இலங்கை தமிழ் பேசும் மக்களுக்காக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் இலக்கியத்தில், கலையில் பெரிதும் நாட்டம் கொண்டவர்கள். கலை இலக்கிய கண்ணோட்டத்தோடு இவர்களது செயற்பாடுகள் அமைவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. கலையுள்ளமும், நற்பண்புகளும் நிறைந்த அவர்களுக்கு என்றைக்குமே எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும் இருந்து கொண்டிருக்கும். 


இறுதியாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

கலையும் இலக்கியமும் மனித வாழ்வியலை நெறிப்படுத்தும் நோக்கில் உருவானவை. மனித நேய வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாகவும் துணையாகவும் இருப்பவை. எனவே கலை இலக்கியத்தை நேசிப்பதன் மூலம் முழு மனித குலத்தையும் தன்பால் ஈர்த்துக்கொள்ள முடியும். பேதங்கள் பிரிவினைகளற்ற வாழ்வியல் முறைமை பிறப்பாக்கம் பெறுவதற்கு கலை இலக்கியம் தொன்றுதொட்டு ஆற்றி வருகின்ற பணிகள் என்றைக்குமே பாராட்டப்படக் கூடியவை என்பதுதான் நான் கூறக்கூடிய செய்தியாக அமைகின்றது. 

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Sunday, March 29, 2020

22. சுப்ரமண்ய செல்வா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2020.02.16

சுப்ரமண்ய செல்வா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் செல்வரத்தினம். நான் மலையகத்தை சேர்ந்தவன். எனது தந்தை தேயிலைத் தோட்டங்களில் தலைமை எழுதுனராகப் பணியாற்றினார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதோடு மட்டும் நின்றுகொள்ளாமல் நான் மணவளக்கலை தொடர்பாகவும் அதிகம் பேசியிருக்கிறேன். இது தொடர்பில் நிறையக் கலந்துரையாடல்கள் செய்துள்ளேன். வாழ்வியலோடு தொடர்புபட்ட பல விடயங்களை அலசி ஆராய்ந்துள்ளேன்.

எனது படைப்புக்களின் மூலம் எனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை. நான் சொல்லுகின்ற விடயங்கள் சக மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவோ அல்லது ஆறுதலாகவோ இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். மனிதப் பண்புகளிலே மிகச் சிறந்த பண்பு ஈகை. முகநூலில் நான் பார்த்த ஒரு சிறிய விடயம் அல்லது கருத்து ''பெறுவதும் இன்பம்.. கொடுப்பதும் இன்பம்..'' பெற்றுக் கொள்பவர்கள் இன்பம் அடைகிறார்கள் அதுபோல கொடுப்பவர்கள் கொடுத்த திருப்தியில் நிம்மதியாக உறங்குகின்றார்கள். இங்கு நான் எனது சிந்தனைகளைக் கவிதையாகக் கொடுக்கிறேன் அவ்வளவே.



உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் கண்டி அசோகா வித்தியாலயத்திலும், புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் கல்வி கற்றேன். கண்டி அசோகா வித்தியாலயம் என் வாழ்க்கையில் ஒரு அற்புதமான அடித்தளமாக அமைந்தது. அங்கு கல்வியில் மட்டுமன்றி கலை, இலக்கியம், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் எங்களுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்தார்கள். நிறைய வாசிக்கத் தூண்டினார்கள். வாசிக்கக் கட்டாயப்படுத்தினார்கள் என்றே சொல்லலாம்.


உங்கள் தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடலாமே?

எனது உயர்தர படிப்புக்குப் பிறகு கொழும்பில் ஒரு இந்திய கட்டிட நிர்மாண நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்று தொழில் செய்தேன். எப்பொழுதுமே கவிஞர்கள், படைப்பாளிகள் ஏழ்மையாக இருப்பது கண்கூடு. இதிலிருந்து ஒரு மாற்றத்தைப் பெறவே நான் இடைக்காலத்தில் அதாவது சுமார் இரண்டு தசாப்தத்துக்கும் மேலான காலம் கவிதைகள் எழுதுவதை விட்டுவிட்டு தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்று சவுதி அரேபியாவில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். 1995 ஆம் வருடம் நாடு திரும்பி ''செல்கோ'' என்ற எனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து, கடந்த 23 வருடங்களாக அதனை நடத்தி வருகிறேன். இடைப்பட்ட 20 வருடங்களாக எனது எழுத்துத் துறைக்கு நீண்டதொரு தடை ஏற்பட்டுவிட்டது.

எந்த ஒரு கலைஞனுக்கும், எழுத்தாளனுக்கும் பொருளாதாரச் சுதந்திரம் நிச்சயமாக அவசியம். அப்பொழுதுதான் அவன் பொருளாதாரச் சுமை பற்றிய கவலைகள் அற்று தனது படைப்புக்கள் மீது உண்மையான கவனத்தைச் செலுத்த முடியும். நான் ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்த பிறகே கடந்த 05 வருடங்களாகவே மீண்டும் எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டி வருகின்றேன். தமிழிலும் இலக்கியத் துறையிலும் அதாவது கவிதைத் துறையிலும், சிறுகதைத் துறையிலும் ஏனைய துறைகளிலும் அக்கரையோடு எழுதி வருகின்றேன்.


கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளில் நீங்கள் இலக்கியம் படைக்கிறீர்கள். இலக்கியத்தின் மீது ஈடுபாடு காட்ட உங்களைத் தூண்டியவர்கள் யார்?

கண்டி அசோகா வித்தியாலயம் பள்ளியின் அதிபராக இருந்த அமரர் சொல்லின் செல்வர் செ. நடராஜா அவர்கள்தான். இவர் ஒரு தமிழ் ஆர்வலர். மிகச் சிறந்த பேச்சாளர். அவர் மூலம் எனக்கு தமிழ் ஆர்வமும் வாசிப்பு பழக்கமும் ஏற்பட்டது. அன்று தொடங்கிய வாசிப்பு பழக்கம் இன்றும் தொடர்கிறது. பாடசாலைக் காலங்களில்; ஒவ்வொரு வாரமும் ஒரு நூலையாவது வாசிக்க கட்டாயப்படுத்தியிருந்தார்கள். பரந்துபட்ட வாசிப்பு என்னை படைப்பாளியாக்கியது. 17 ஆவது வயதிலேயே எனது படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரமாகத் தொடங்கின. தற்போது ஷசுப்ரமண்ய செல்வா| என்ற புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது தந்தையின் பெயர் சுப்பிரமணியம். அவரது பெயரையும் எனது பெயரில் முற்பகுதியையும் இணைத்து இந்தப் புனைப் பெயரை உருவாக்கினேன். இதற்கு இன்னொரு ஆழமான காரணம் மகாகவி பாரதி மீது நான் கொண்ட பெரும் பற்றுத்தான். மகாகவி பாரதியாரை நான் அதிகம் நேசிக்கின்றேன். அவர் மீதும் அவருடைய வாழ்க்கை மீதும், அவருடைய கவிதைள் மீதும் நிறையப் பற்றுக் கொண்டுள்ளேன். மட்டுல்லாமல் அவரை நான் அதிகம் நேசிப்பதால் நிறைய விடயங்களைப் பெற்றுக்கொண்டுள்ளேன். நான் மட்டுமல்ல எல்லாக் கவிஞர்களும் தமிழ்க் கலைஞர்களும் எல்லாத் தமிழர்களும் நிறையவே பெற்றுக்கொண்டுள்ளார்கள். உண்மையிலே தமிழின் மறுமலர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் என்று மகாகவி பாரதியாரை நிச்சயமாகச் சொல்லலாம்.


எத்தனை ஆண்டுகளாக கவிதை எழுதி வருகின்றீர்கள்?

கடந்த 38 வருடங்களாக கவிதை எழுதி வருகின்றேன். அதாவது 1981 இல் தொடர்ந்த எனது கவிதைப் பயணம் இன்றுவரை தொடர்கிறது. ஆனால் இடையில் ஒரு 20 வருடங்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதாலும், நாடு திரும்பிய பிறகு என்னை நிலைநாட்டிக்கொள்ள போராட வேண்டியிருந்ததாலும் எழுத்துப் பயணம் தடைப்பட்டது. பின்னர் மீண்டும் தொடர்ந்த என் எழுத்துப் பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


தமிழ்மீது கொண்ட பற்றுத் தான் உங்களை எழுத்துத் துறையில் ஈடுபட வைத்ததா?

ஆமாம். நிச்சயமாக. முன்பு எப்படி தமிழ் இருந்தது? ஒரு காலத்தில் தமிழ் எழுதுகின்ற புலவர்கள் எல்லாம் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். ஒரு மன்னன் புலவனிடம் சென்று பொற்கிளியைக் கொடுக்கும் போது அவர் அதனை மன்னரின் கைகளினால்ப் பெற்றுக்கொள்ளாமல், ஷநீ அதனை ஒரு தட்டிலே வைத்துவிடு, நான் அதனை எடுத்துக் கொள்கின்றேன்| எனக் கூறியதாக ஒரு வரலாற்றுக் கதை உள்ளது. பின்னரான காலத்தில் பிறமொழிக் கலவை காரணமாக குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை பிற நாட்டுப் படையெடுப்புகள் மூலம் தமிழுடைய செழுமை மங்கிப் போனது என்று சொல்லலாம். ஆங்கிலேயரின் படையெடுப்புக் காரணமாக தமிழுடன் ஆங்கிலமும் கலந்துவிட்டது. பின்னர் தமிழை மறுமலர்ச்சிப் பாதையிலே கொண்டு வந்தது, தமிழை தமிழுக்குண்டான பெருமையை எடுத்துச் சொன்னது, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்றும் எல்லா மொழிகளிலுமே சிறந்த மொழி தமிழ் மொழி என்றும் கூறி பலரும் தமிழின் புகழ் பாடினர்.

இதனை சொல்லக் கூடிய யோக்கியதை சுப்ரமண்ய பாரதியாருக்குத்தான் இருந்தது. ஏன் என்றால் பல மொழிகளையும் தெரிந்து வைத்திருந்த போதிலும் சுப்ரமண்ய பாரதியாரே தமிழின் புகழை அதிகம் பாடினார். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் கவிஞனது பெயரில் ஒரு பகுதியை எனது புனைப் பெயராகக் கொண்டதில் நான் மிகவும் மகிழ்வடைகின்றேன். எனது எழுத்துப் பயணத்தைத் தொடர்கின்றேன்.

உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எந்த ஊடகத்தில் வெளிவந்தது?
நான் எனது 17 ஆவது வயதில் பேனா பிடித்து, கவிதை எழுத ஆரம்பித்தவன். 1981 இல் தினகரன் வாரமஞ்சரியில் எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. எனது 17 - 18 வயது காலங்களில்த்தான் பத்திரிகைகளில் நிறையக் கவிதைகளை எழுதியுள்ளேன். தினகரன் வாரமஞ்சரி, தினமுரசு வார மலர், மித்திரன் வார மலர், ஞாயிறு தினக்குரல் ஆகியவற்றில் எனது பல ஆக்கங்கள் களம் கண்டுள்ளன.


புதுக் கவிதைக்கும், நவீன கவிதைக்கும் என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?

இறுக்கமான கட்டுக்கோப்புகளோடு பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவில் இருந்த தமிழ் கவிதைகள் யாப்பிலக்கண மரபிலிருந்து மாறி புதுவடிவம் பெற்றதுதான் புதுக்கவிதை. இதன் முன்னோடி மகாகவி சுப்பிரமணிய பாரதியார். உள்ளடக்கத்தில் மாற்றம் இருந்தாலும் அங்கு வடிவ மாற்றமே முதன்மையானது. நவீன கவிதையின் உள்ளடக்கமே முதன்மை பெறுகிறது. அத்தோடு படைப்பாளியின் அனுபவங்களை வாசகனுக்கு நேரடியாகக் கடத்தாமல், வரையறையற்ற வாசிப்பு அனுபவங்களை அவனுக்குத் தருகிறது. 


''தொடுதூரத்தில் விடிவானம்'' என்ற உங்கள் நூல் பற்றி யாது கூறுவீர்கள்? இந்த நூலின் கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

கடந்த 35 வருடங்களாக நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ''தொடுதூரத்தில் விடிவானம்'' என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளேன். கவிதைகளை எழுதும்போது குறிப்பிட்ட எந்தக் கருப்பொருளையும் கருத்தில் கொண்டு நான் எழுதுவதில்லை. ஆனால் நான் எழுதிய கவிதைகள், காதல், ஊடல், இல்லற வாழ்வு, சமூகச் சீரழிவுகள், தனிமனித அவலங்கள், போரின் வலி, அறிவியல் முன்னேற்றம் என்னும் பெயரில் இயந்திரமயமாகிப் போன வாழ்க்கை, நேர்மறை சிந்தனைகள், சுயமுன்னேற்றக் கருத்துக்கள் என பலவிதமான கருப்பொருட்களில் வெளிவந்துள்ளன.

தொடுதூரத்தில் விடிவானம் என்ற மகுடக் கவிதையில் (பக்கம் 57) நல்ல சிந்தனையை வாசகர்களுக்கு முன்வைத்துள்ளேன். இந்தக் கவிதையானது ஒரு சுய முன்னேற்றக் கவிதை என்றும் குறிப்பிடலாம். ''தொடுதூரத்தில் விடிவானம்'' என்ற எனது நூலின் தலைப்பின் மூலம் சோம்பிக் கிடக்கின்ற ஒருவனைத் தட்டியெழுப்பி, விடிவானம் வெகு தூரத்தில் இல்லை, தொடுதூரத்தில் தான் இருக்கிறது என்று சொல்லி நிற்கின்றேன். நீ அடைய முயற்சிக்கும் குறிக்கோள் உனக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. எழுந்து நின்று நீ முயற்சித்தால் நிச்சயமாக உன்னால் அதனை அடைய முடியும். உன்னால் அடைய முடியாது என்று நீ நினைத்துக்கொண்டிருப்பது நீயாக நினைத்துக் கட்டிக்கொண்டுள்ள ஒரு சிறை. அந்தச்  சிறையில் வெளியே தாழ்ப்பான்கள் இல்லை. உள்ளே நீயே போற்றுக்கொண்டுள்ள தாழ்ப்பான்களை உடைத்துக்கொண்டு நீயேதான் வெளியே வர வேண்டும். வெளியே வாய்ப்புக்கள் விரவிக் காணப்படுவதை நீயே அவதானிக்கலாம். அந்த வாய்ப்புக்களை பற்றிக்கொண்டு நிச்சயமாக உனது நோக்கத்தை அடைய முடியும் என்றே நான் குறிப்பிடுகின்றேன். அதாவது பல சம்பவங்களை மேற்கோள்காட்டி தைரியப்படுத்தி வந்து, கவிதையின் கடைசிப் பகுதிகளில் கூட உற்சாகமூட்டும் வார்த்தைகளை எழுதியுள்ளேன். மூடிய கதவை முழுநேரம் வெறிக்கிறாய்.. திறந்திருக்கும் கதவுகளை திரும்பிப் பார்க்க மறுக்கிறாய்..

இழந்த வாய்ப்புக்களுக்காக கவலைப்படுவதை விடுத்து பறந்து கிடக்கும் நிறைய வாய்ப்புக்களை உற்று நோக்கி பயன்படுத்தலாம் என்பதே எனது சிந்தனையாக இருக்கிறது. சோர்ந்து போகாமல் நாம் பல புதிய, புதிய வாய்ப்புக்களைத் தேட வேண்டும்.

இந்த நூலிலுள்ள காத்திருப்புகள் (பக்கம் 23) என்ற கவிதையும் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாகும். போதிவனம் பதிப்பகத்தினூடாக 119 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலில் 56 கவிதைகளும், குறுங்கவிதைகள் சிலவும் காணப்படுகின்றன.


இளம் தலைமுறைக் கவிஞர்களின் ஆரம்பக் கவிதைத் தொகுப்பு போல் உங்களது முதலாவது கவிதைத் தொகுப்பில் காதல் கவிதைகளைக் காணவில்லையே ஏன்? 

என்னுடைய 50 வயதுக்குப் பிறகு வெளிவரும் கவிதைத் தொகுதியே ''தொடுதூரத்தில் விடிவானம்'' என்ற இந்தக் கவிதைத் தொகுதி. வாழ்க்கையில் நெடு தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் நான் நிறைய அறிவுகளைப் பெற்றுள்ளேன். அப்படியே பல அனுபவங்களையும் பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த அறிவும், அனுபவமும் எனக்கு வழங்கியுள்ள முதிர்ச்சித் தன்மையே எனது சொற்களிலும் செயல்களிலும் அதிகூடிய தாக்கம் செலுத்தியுள்ளன. இப்படியான வாழ்க்கை அனுபவங்கள் காரணமாகவே நான் ஆரம்பக் கவிஞர்கள் போல் காதல் கவிதைகளை அதிகம் எழுதவில்லை. அது தவிர்ந்த நல்ல கருத்துக்களை எனது கவிதைகளினூடாக முன்வைத்துள்ளேன். நான் பாரதியாரைப் பின்பற்றியவன் என்பதன் காரணமாகவே இப்படியான ஒரு தணித்துவமான சிந்தனை என்னில் குடிகொண்டுள்ளது என்றும் சொல்லலாம்.


பத்திரிகைகள், சஞ்சிகைகள் தவிர வேறு எந்த ஊடகங்கங்களில் உங்கள் ஆக்கங்கள் வெளிவருகின்றன?

'அகவரிகள்' என்னும் எனது வலைப்பதிவில் எனது எல்லாப் படைப்புகளையும் பதிவிடுகிறேன். முகநூலிலும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை பகிர்கின்றேன். அவ்வப்போது தொலைக்காட்சி நேர்காணல்களிலும் பங்குபற்றுவதுண்டு.


சிறுகதைகள் மீதான உங்களது ஈடுபாடு எந்தளவில் உள்ளது?

மிகுந்த ஈடுபாடு உள்ளது. ஆரம்ப காலத்தில் சில சிறுகதைகள் எழுதி உள்ளேன். மல்லிகை, நவ உதயம் போன்ற சஞ்சிகைகளில் அவை வெளிவந்துள்ளன. கவிதைகளைப் போலவே சிறுகதைகள் எழுதுவதும் இடையிலே தடைப்பட்டுவிட்டது. இப்பொழுது மீண்டும் எழுதத் தொடங்கி இருக்கிறேன். அண்மையில் 'சாய்வு நாற்காலி' என்கிற எனது சிறுகதை ஒரு ஞாயிறு தினகரன் வாரப் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து எழுத ஆவல் கொண்டுள்ளேன்.


படைப்பாளிகள் எவ்வாறு உருவாக வேண்டும்?

ஒரு நல்ல படைப்பாளி முதலில் ஒரு நல்ல வாசகனாக இருக்க வேண்டும். அத்தகைய வாசிப்பு அனுபவம் அவனுள் ஏற்படுத்தும் மாற்றங்களையும், அவனது அன்றாட வாழ்வின் அனுபவங்களையும் அவனது படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்.


சில சம்பவங்கள் மனதை ரணப்படுத்தும். அதன் பின்னணியில் பல ஆங்கங்கள் தோன்றும். அப்படி உங்களை மிகவும் பாதித்து, நீங்கள் எழுதிய படைப்புக்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா? 

2001 ஆம் ஆண்டு வடக்கில் சில தமிழ்ப் பெண்கள் படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. அதன் தாக்கத்தில் நான் எழுதிய கவிதை அந்தக் காலப் பகுதியில் ஞாயிறு தினக்குரலில் பிரசுரமானது. அதேபோல் குஜராத் இனக் கலவரம், வடக்கில் இறுதி யுத்தத்தில் நடந்த பேரழிவுகள், சிரிய நாட்டு யுத்தத்தில் மரணித்த சிறு குழந்தைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் நடத்தும் தொடர் போராட்டம் போன்றவை என்னுள் ஏற்படுத்தும் வலிகளை அந்தந்தக் காலங்களில் கவிதைகளாக படைத்துள்ளேன். அத்தோடு நான் அறிந்த மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவலங்களையும் கவிதை ஆக்கியுள்ளேன்.


அதிகமதிகம் எவ்வகையான நூல்களை வாசிக்கின்றீர்கள்?

தமிழ், ஆங்கில மொழிகளில் எல்லாவிதமான நூல்களையும் வாசிப்பதுண்டு. சுயசரிதைகள், சுயமுன்னேற்ற நூல்கள், வணிக மேலாண்மை நூல்கள், நாவல், சிறுகதை, கவிதை என எனது வாசிப்பு பரந்துபட்டது. ஒரே காலப்பகுதியில் ஏறக்குறைய ஐந்து புத்தகங்கள் வாசிப்பதுண்டு.


எதிர்காலத்தில் எவ்வகையான நூல்களை வெளியிட உத்தேசம்? 
எதிர்காலத்தில் வேறு என்ன துறைகளில் உங்களது அவதானிப்புக்களைச் செலுத்துவீர்கள்?

தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னொரு கவிதைத் தொகுதி வெளியிடும் எண்ணம் உண்டு. அத்தோடு வாழ்வியல் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவற்றையும் தொகுத்து புத்தக உருவில் கொண்டுவர விரும்புகிறேன். மற்றும் சிறுகதை, சிறுவர் இலக்கியம் ஆகியவற்றிலும் ஈடுபடும் உத்தேசம் உண்டு.


முழு நேரத் தொழிலதிபராக வியாபார நிறுவனத்தை நடாத்தி வரும் நீங்கள் இந்தக் கலைத் துறைக்கு உங்களது நேரத்தை எப்படி ஒதுக்கிக் கொள்கின்றீர்கள்?

எனக்குத் தமிழ் மொழி மீதும் கவிதைகளிலும், சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆர்வம் உண்டு. வீட்டிலே எனது தந்தையார் ஓய்வாக இருக்கும் நேரமெல்லாம் எதையாவது வாசித்துக்கொண்டிருப்பார். இந்தச் சூழலே எனக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியது. தொடர் வாசிப்பே என்னை எழுதத் தூண்டியது. இதனை என்னால் விட்டுவிட முடியவில்லை.

லௌகீக வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கட்டாயம் ஒரு தொழில் செய்வது போல எனது ஆத்ம திருப்திக்காக தமிழையும் கவிதைகளையும் நேசிக்கின்றேன். எனவே இதற்காகவும் எனது நேரத்தை ஒதுக்குகின்றேன். தொழிலையும், தமிழையும் கவனிக்கத் திட்டமிடல் மூலம் நேர முகாமைத்துவத்தைக் கடைபிடிக்கிறேன். பொதுவாக ஷதிட்டமிடலுக்காக செலவளிக்கின்ற ஒரு 10 நிமிடம் அதை செயல்படுத்துவதற்காக செலவளிக்கின்ற 50 நிமிடத்தை சேமிக்கும்| என்று சொல்வார்கள். எதையுமே திட்டமிட்டால் நிறைய நேரம் கிடைக்கும். அந்த அடிப்படையிலேயே எனக்கு எழுதவும் நேரம் கிடைக்கின்றது.


வாழ்வியலோடு தொடர்புபட்ட விடயங்களையும் கருத்துக்களையும் நீங்கள் முன்வைப்பது இந்தக் கால கட்டத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிடுவீர்களா?

நிறைய வாசிக்கும் போது வாழ்வியலோடு தொடர்புபட்ட நிறைய விடயங்கள் எனக்குக் கிடைக்கின்றன. இந்த வாசிப்பில் கிடைத்த அறிவு மேலும் பல நல்ல சிந்தனைகளைத் தூண்டி நிற்கின்றன. ஏனையவர்களோடு உரையாடும் போது கூட, சில கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் உரிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் சொன்ன கருத்தக்களுக்கு மதிப்பளித்து உரிய செயற்பாடுகள் சீராக நடைபெறும். பொதுவாக சிறிய, சிறிய விடயங்களை நான் பெரிதுபடுத்துவதில்லை.

'வார்த்தைகள் வடிவமைக்கின்றன வாழ்க்கையை' என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரையைப் பத்திரிகையில் எழுதினேன். இந்தக் கட்டுரையில் வாழ்வியலோடு தொடர்புபட்ட பல விடயங்களையும் குறிப்பிட்டுள்ளேன். இதனை வாசிப்பதிலிருந்து வாழ்வியலோடு தொடர்புபட்ட கருத்துக்கள் இந்தக் கால கட்டத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றித் தெளிவாகக் கண்டுகொள்ள முடியும். இந்தக் கட்டுரையை வாசித்த பலரும் மிகவும் சிலாகித்து எனது சிந்தனையைப் பாராட்டடி தனது கருத்துக்களை முன்வைத்தார்கள் என்பது மறக்க முடியாது.


இறுதியாக இளந்தலைமுறைப் படைப்பாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

நிறைய வாசியுங்கள். பரந்துபட்ட வாசிப்பானது மொழி மீதான உங்களது ஆளுமையை அதிகரிக்கும்;, சிந்தனையைத் தூண்டும்;. அத்துடன் மனிதர்கள் மீதான, சூழல் மீதான உங்களது பார்வையை ஆழப்படுத்தும். அது உங்கள் படைப்பை மேலும் செம்மைப்படுத்தும். எனவே நிறைய வாசியுங்கள்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்