50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் மூத்த ஆளுமை கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தினைக் கூறுங்கள். உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?
மூதூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன். பாடசாலையில் கல்வி பயிலும் காலத்திலிருந்தே எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகின்றேன். க.பொ.த. சாதாரண தரம் வரை மூதூர் மகா வித்தியாலயத்திலும் உயர் வகுப்பை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் கற்றேன். 1971 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்தது. பின்னர் 1973 ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலையில் கணிதப் பிரிவில் பயின்று கணித ஆசிரியராகவும் 1989 ஆம் ஆண்டு அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று 2011 இல் ஓய்வு பெறும் வரை அதிபராகவும் கடமையாற்றியுள்ளேன்;.
ஆசிரியர் தொழில் என்பதனால் எனக்கு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் போதிய அவகாசம் இருந்தது. எனது பணிக்காலத்தில் மாணவர்களின் கலை இலக்கிய முயற்சிக்கு முடிந்தளவு உதவிகளைப் புரிந்துள்ளேன். மேலும் அவர்களை எழுத்துத் துறையில் ஆர்வமூட்டுவதற்காக பல கையெழுத்துப் பிரதிகளையும் ரோணியே சஞ்சிகைகளையும் உருவாக்கி வெளியீடு செய்வதற்கு வழிகாட்டியுள்ளேன்.
நீங்கள் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைத்த அந்தக் காலம் எப்படியிருந்தது?
அக்காலப் பகுதிகளில் அதாவது 1970 களில் இந்திய சஞ்சிகைகள் இலங்கை வாசகர்களிடம் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தன. அவைகளின் வரவு எல்லா ஊர்களிலும் மிகைத்துக் காணப்பட்டதென்றே கூறவேண்டும். இதில் எனது ஊரும் விதிவிலக்கல்ல. இவற்றில் கல்கி, ஆனந்த விகடன், தினமணிக் கதிர், குமுதம், கல்கண்டு, அம்புலி மாமா, தீபம், கலைமகள் போன்ற ஜனரஞ்சக சஞ்சிகைகளுடன், ஈழத்தில் வெளிவந்த கதம்பம், மல்லிகை, நிலா குமரன் போன்றவற்றையும் ஆர்வமாக வாசிப்பேன். நல்ல வேளையாக எனது வீட்டிற்கு பக்கத்தில் அப்போது இக்பால் சனசமூக நிலையம் என்ற பெயரில் ஒரு நூலகம் இயங்கி வந்தது. இதுவே எனது வாசிப்புப் பசிக்கு தீனிபோட்டதோடு எழுத்து முயற்சிக்கும் அத்திவாரமிட்டது.
மேலும் இன்று போலில்லாமல் பத்திரிகை சஞ்சிகைகளை பணம் கொடுத்து வாசிப்பவர்களின் எண்ணிக்கை அப்போது மிகவும் அதிகம். இதன் காரணமாக குறிப்பிட்ட சில சஞ்சிகைகளை முற்பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலமையும் இருந்தது. இதனால் எழுத்து துறையில் ஈடுபட்டவர்களுக்கு தங்கள் நூல்களை சந்தைப்படுத்துவதில் அதிக சிரமமிருக்கவில்லை. எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை வாங்கி நூலாக்கம் செய்வதற்கு பல நிறுவணங்கள் அக்காலப் பகுதியில் இயங்கி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.உங்களது முதலாவது படைப்பை எந்த ஊடகத்தில் கண்டு அகங்குளிர்ந்தீர்கள். அந்த ஆக்கம் பற்றியும் செல்லுங்கள்?
1970 களில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தினபதி தினசரியில் 'தினமொரு சிறுகதை' திட்டத்தை செயல்படுத்தியிருந்தனர். அதில் எனது முதலாவது படைப்பான சிறுகதை 1969 ஆம் ஆண்டு அமரர் திரு. அருள் செல்வநாயகம் அவர்களின் சிபார்சுடன் 'தியாகிகள் வரிசையில்' என்ற மகுடத்தில் பிரசுரமானது. இக்கதையின் மத்தியில் எனது பெயருடனான முகவரியை முதன் முதலில் பெரிய எழுத்தில் பார்த்து அகம் குளிர்ந்த நினைவு இன்னும் என் நினைவில் பசுமையாய் உள்ளது.
அந்த ஆக்கம் பாடசாலை மாணவர் குழு ஒன்று சமூக நோக்கத்திற்கான சீர் திருத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிர் துறக்கும் ஓரு புரட்சிகர தோழனின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
அப்போது செ. கணேசலிங்கம், கே. டானியல், இளங்கீரன் போன்றோரின் கதைகளை விரும்பி வாசிப்பேன். இதன் தாக்கமே இக்கதையை எழுதுவதற்கான ஒரு காரணியாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதுகின்றேன்.
உங்களுடைய நூல் பிரவசங்கள் பற்றிக் கூற முடியுமா?
என்னுடைய முதலாவது நூல் 'முத்து' என்ற புதுக் கவிதை தொகுப்பாகும். இது 1976 ஆம் அண்டு வெளியிடப்பட்டது. சுமார் பதினெட்டுப் பக்கங்களை மட்டும் கொண்ட சிறிய தொகுப்பாகும். இலங்கையின் முதலாவது புதுக் கவிதை தொகுப்பு திக்குவல்லை கமால் அவர்களின் 'எலிக் கூடு' ஆகும். அதனைத் தொடர்ந்து செந்தீரன், பூநகர் மரியதாஸ், போன்ற வேறு பலரும் இதே மாதிரியான அளவில்தான் தாங்கள் கவிதைத் தொகுப்புக்களை அக்காலப் பகுதியில் வெளியிட்டிருந்தனர். அதே பாணியில் நானும் முத்துவை வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து 'பிட்டும் தேங்காய்ப் பூவும்' (1997), 'இழந்து விட்ட இன்பங்கள்' (2003), 'ஒரு காலம் இருந்தது' (2011), 'ஒரு வானில் இரு நிலவுகள்' (2018) ஆகிய கவிதை நூல்களையும் 2005 இல் ஆசிரியர் பணியை அழகுறச் செய்வோம் என்ற கட்டுரைத் தொகுதியையும், 2015 இல் 'அபோதம்' என்ற உருவாக்கக் கதை தொகுதியையும் வெளியிட்டுள்ளேன்.
உங்களது அதிகமான படைப்புக்கள் இன ஒற்றுமையைப் பற்றி பேசியிருக்கின்றதே இது பற்றி..?
எனது கட்டிளமைப் பருவத்திலிருந்து நான் வாழ்ந்த அதிகமான காலம் யுத்தம், இனமுறுகல், வன்முறை மலிந்த சூழலிலே கழிந்துள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எல்லோரையும் போலவே நானும் பாதிக்கப்பட்டிருந்தேன். இது என் மன உணர்வுகளைப் பெரிதும் பாதிப்படைய செய்தது. இதன் வெளிப்பாடாகவே இந் நிகழ்வுகளை எழுத்திலும் கொண்டுவரும் முயற்சியில் அக்கறை காட்டினேன். எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் ஒரு சாமான்யன் என்ற வகையில் மனித நேயத்தை கட்டி எழுப்புவதை ஒரு தார்மீகக் கடமையாகக் கருதியே இன நல்லுறவை வலியுறுத்தும் ஆக்கங்களை அதிகம் எழுதுவதில் ஆர்வம் காட்டினேன்.
உங்கள் படைப்புக்களின் பேசு பொருட்களை எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள்?
இலக்கியத்தில் கற்பனை வளம், அழகியல் சார்ந்த விடயங்கள் முக்கிய இடம் வகித்தாலும் யதார்த்தங்களை கூறும் படைப்பிலக்கியங்களையே நான் பெரிதும் நேசிக்கின்றேன். இதன் காரணமாக எனது வாழ்வியல் அனுபவத்தில் நான் தரிசித்த விடயங்களையும், விளிம்பு நிலை மாந்தர்களின் அவலங்களையும் பகைப்புலனாகக் கொண்ட ஆக்கங்களையும் அதிகமாக எழுதியள்ளேன். இவற்றினூடாக வறுமை, வர்க்க முரண்பாடு, விடுதலை, அடிமைத்தனம் என்பவைகளைப் போசுப் பொருளாகக் கொண்ட ஆக்கங்களையே பெரும்பாலும் எழுதியுள்ளேன்.
'ஒரு வானில் இரு நிலவுகள்' இந்த நூலைப் பற்றி தாங்கள் குறிப்பிடுவது என்ன? ஏன் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தீர்கள்?
இந்நூல் ஒரு நூலாக்கப் போட்டிக்காக எழுதப்பட்டது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2018 ஆம் ஆண்டு ஆக்க இலக்கிய நூல்களை தெரிவு செய்வதற்காக கையெழுத்துப் பிரதிகளை கோரியிருந்தனர். இதில் நானும் கவிதை நூலுக்காக ஒரு புதிய யுக்தியை கையாள வேண்டும் எனக் கருதி ஒரே தலைப்பில் ஓரு கருத்தை பிரதிபலிக்கக் கூடியதாக மரபும் புதிதுமாக இரு கவிதைகள் வீதம் பதினெட்டுத் தலைப்புக்களில் முப்பத்தாறு கவிதைகளை எழுதி அனுப்பியிருந்தேன். இதனாலேயே இத் தொகுப்பிற்கு 'ஒருவானில் இரு நிலவுகள்' என்ற மகுடத்தை வைத்தேன். இதில் எனது பிரதியும் தெரிவு செய்யப்பட்டு அவர்களினால் நூலாக்கி வெளியிடப்பட்டது. மகழ்ச்சிக்குரிய விடயமாகும்.
கவிதையை எழுதத் தொடங்கும் ஆரம்ப ஆர்வலர்களுக்கு கவிதை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் முறைப்படி கவிதை இலக்கணத்தைக் கற்று கவிதைத் துறையில் காலடி எடுத்து வைத்தவனல்ல. இதில் ஈடுபட முன்னர் பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே கவிதை நூல்களையும், காவியங்கள் மற்றும் நாவல்களையும் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த வாசிக்கும் ஆர்வமே கவிதை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது. சில விடயங்களை மூத்தவர்களிடமும் எனது ஊர் கவிஞர்களிடமும் கேட்டு, மேலும் என்னை செம்மைப்படுத்திக் கொண்டேன். இது எனது சொந்த அனுபவம். இத் துறையில் புதிதாக கால் பதிக்க நினைப்பவர்கள் பழங்கால, தற்கால கவிதைகளை நன்கு வாசித்து அதன் அமைப்பை விளங்கி கவிதை எழுத முன்வருவது பயன் தரும் என்பதே எனது கருத்தாகும்.
இலக்கியங்களில் இலங்கை முஸ்லீம்களின் வகிபாகம் எவ்வாறு உள்ளது?
இதற்கு பதில் கூறுவதாயின் அது மிக நீண்டதாக இருக்கும். புலவர் அப்துல் காதர் லெப்பை, அறிஞர் சித்திலெப்பை போன்றேர்களின் காலத்திற்கு முன்பிலிருந்தே தமிழ் இலக்கியத்திற்கு தொண்டாற்றிய முஸ்லீம்கள் பலரின் வரலாறு பலவற்றை நாமறிவோம். அவையாவும் பல்வேறு அறிஞர்களால் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. அதனை விடுத்து சமகாலத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை ஆய்வு செய்து பார்த்தால் 1960 இற்கு பிற்பாடு இலக்கியத் துறையில் ஈடுபடும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதை மறுக்க முடியாது. இதில் எத்தனை பேர் தரம் வாய்ந்த இலக்கியங்களைப் படைக்கின்றனர் என்ற வாதத்தை புறந்தள்ளி பொதுவாகக் கருதுமிடத்து இக்காலப் பகுதியில் வெளிந்த முஸ்லிம் இலக்கியவாதிகளின் படைப்புக்கள் பல்வேறு துறைகளில் விருதுகளையும் பராட்டுக்களையும், சாதனைகளையும் புரிந்துள்ளதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இத்தகைய தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியவாதிகள் இக்காலப் பகுதியில் எம்மத்தியில் உருவாகியுள்ளமை நாம் பெருமைப்படத்தக்க விடயமாகும். நாவல், கவிதை, சிறுகதை, காவியம், ஆய்வு என இவர்களின் இலக்கியப் பங்களிப்பு பல்வோறு துறைகளிலும் இன்று வியாபித்துக் காணப்படுகின்றன.
நீங்கள் வெளியிட்ட 'ஓசை' காலாண்டு கவிதைச் சிற்றிதழ் பற்றி...?
'மனிதநேயம் மண்ணில் மலர ஒலிக்கும் ஓசை' என்ற மகுட வாசகத்தைத் தாங்கி 2005 ஆம் ஆண்டில் 'ஓசை' முதலாவது கவிதைச் சிற்றிதழ் வெளியிடப்பட்டது. எமது பிரதேசத்தில் வாழும் இளம் கவிஞர்களின் கவி ஆற்றலை வளர்க்கும் நோக்குடனேயே இச்சிற்றிதழ் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது இதழ் வெளிவந்ததன் பின்னர் இங்கு ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக மக்களின் இடப்பெயர்வினால் சில வருடங்கள் இதனை வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை 27 இதழ்கள் வெளிவந்தன. எமது பிரதேச எழுத்தாளர்களை மையப்படுத்தி 'ஓசை' வெளியிடப்பட்டாலும் இலங்கையின் சகல பாகங்களுக்கும் ஓசை சென்றடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கவிஞர்களும் இதில் தங்கள் கவிதையை எழுதி உற்சாகமளித்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஓர் ஆசிரியராக, அதிபராகக் கடமையாற்றிய நீங்கள் மாணவர்களுக்கிடையே காணப்படும் இலக்கிய ஆர்வம் பற்றி என்ன சொல்வீர்கள்?
நான் கடமையாற்றிய பாடசாலைகள் பலவற்றில் மாணவர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிப்பதற்காக கையெழுத்து சஞ்சிகைகள், காலாண்டு பாடசாலை சஞ்சிகைககள் மற்றும் இலக்கியப் போட்டிகளை நடாத்தி அவர்களை கலை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டும் வகையில் கூடிய கவனமெடுத்தேன். மாணவர்களின் ஆர்வம் இத்துறையில் அதிகம் ஈடுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. இதற்குரிய முக்கிய காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட அதிகூடிய கற்றல் அழுத்தம் என்பதேயாகும். இதற்கு விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில மாணவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டு இன்று இளம் எழுத்தாளராக இலக்கிய வானில் ஒளிவீசுகின்றமை மகிழ்ச்சியைத் தருகின்றது.
இஸ்லாமிய பெண் படைப்பாளிகளின் வருகைப்பற்றி என்ன செல்வீர்கள்?
ஒரு காலத்தில் முஸ்லீம் பெண்கள் கல்வி கற்பதும் உத்தியோகம் பார்ப்பதும் தவறாக பார்க்கப்பட்டடது. இந்நிலையில் அவர்கள் நூல் வாசிப்பதென்பது மிகவும் அரிதான செயலாகவே இருந்து வந்தது. ஆனால் பெண்களி;ன கல்வி கற்கும் வீதம் ஆண்களை விடவும் உயர்ந்த நிலையில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் இதற்குச் சமாந்தரமாக பெண் எழுத்தாளர்களும் அதிகம் உருவாகியுள்ளனர். சமகாலத்தில் முஸ்லீம் பெண்கள் பலர் நாவல், சிறுகதை, கவிதை போன்ற ஆக்க இலக்கிய நூல்களை அதிகமாக வெளியீடு செய்துவரும் செய்திகளை நாம் நாளாந்தம் கேள்வியுற்று வருகின்றோம். அத்தோடு தற்காலத்தில் ஆய்வு நூல்கள், நுண்கலைகள், சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகத் துறைகளில் முஸ்லீம் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
உங்களை கவர்ந்த எழுத்தாளர் யார்?
இதில் ஒருவர் என்று யாரையும் குறிப்பிட்டுக் கூறமுடியாது. மக்களின் யதார்த்த வாழ்வைப் பிரதிபலித்து அவர்களின் வாழ்வை வளம்படுத்த எழுத்தை ஆயுதமாக பயன்படுத்தும் அனைவரும் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களே.
இளம் எழுத்தாளர்களை வளர்தெடுப்பதற்காக மூத்த எழுத்தாளர் என்ற வகையில் எவ்வகையான பணிகளை நீங்கள் முன்னெடுத்து வருகின்றீர்கள்?
மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் என்ற பெயரில் 1980 ஆம் ஆண்டு ஓர் அமைப்பை உருவாக்கி பல இளம் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வந்துள்ளோம். இலக்கிய கருத்தரங்குகள், நூல் அறிமுகங்கள், கவிதை, சிறுகதைப் பட்டறைகள், போன்ற நிகழ்வுகளை கடந்த காலங்களில் குறிப்பாக போர்காலச் சூழலிலும்கூட நடாத்தியுள்ளோம். மேலும் அகில இலங்கை ரீதியாக கவிதைப் போட்டி சிறுகதைப் போட்டிகளை நடாத்தி பரிசுகளை வழங்கியுள்ளளோம். இதன் மூலம் பல புதிய இலக்கியவாதிகள் உருவாவதற்கு நாம் வழிசமைத்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
உங்களது படைப்புக்கள் பற்றிய ஆய்வு நூலாக கொழும்பு பல்கலைகழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 'விடியல்' நூல் பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
எனது கவிதைகளை ஆய்வு செய்து ஒரு நூலினை யாராவது வெளியிடுவார்கள் என்பதை உண்மையில் நான் எப்போதும் எதிர்பார்க்கவில்லை. தனது பல்கலைகழக படிப்பிற்கு 'ஊடகத்தின் வாயிலாக இன ஒற்றுமைக்கான பாலம்' என்பதை அடிப்படையாக வைத்து எனது கவிதைகளை ஆய்வு செய்து 'விடியல்' என்ற பெயரில் நூலாக்கமாக வெளியிட்ட வெலிகம ரிம்ஸா முஹம்மது அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டவன். இந்நூல் மூலம் என்னையும் எனது கவிதைகளையும் இலக்கிய உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய கவிதாயினி ரிம்ஸா முஹம்மத் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடாத்தி என்னையும் அதில் அதிதியாக கௌரவித்தமை என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
இன்றைய இலத்திரணியல் ஊடகங்களின் வளர்ச்சி வாசிப்பை மட்டுப்படுத்திவிட்டது என்று குறிப்பிட முடியுமா? ஏன்?
நிச்சயமாக. எமது நாட்டைப் பெறுத்தவரைக்கும் முதன் முதலில் தொலைக்காட்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்துதான் இதன் தாக்கம் கூடுதலாக அதிகரித்து வந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் தொலைகாட்சியிலும் கணினி, கைபேசியிலும் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இவ் ஊடகங்கள் இளம் வயதினரை கவரும் விதத்தில் பல்வேறு விடயங்களை வெளிக்கொணர்வதனால் இதிலே தங்களின் காலத்தை அதிகமானோர் செலவிட்டு வருகின்றனர். இந்த காரணத்தினாலேயே நூல்களை வாசிக்கும் ஆர்வம் அவர்களிடத்தில் குறைவடைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
வேறு எவ்வகையான இலக்கியங்களை எதிர்காலத்தில் படைக்க உத்தேசித்துள்ளீர்கள்?
என்னால் எழுதப்பட்ட ஒரு மெல்லிசைப் பாடல் தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது. சிறுவர் இலக்கிய நூலும், நாவலும் எழுதும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றேன்.
இதுவரை உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?
தேசிய ரீதியாக வழங்கப்பட்ட பரிசுகள் விருதுகள், பட்டங்கள் பல இருந்தாலும் அவற்றை என்றுமே நான் பயன்படுத்தியதில்லை. வேண்டுமானால் இது பற்றிய ழுழு விபரங்களையும் வெலிகம ரிம்ஸா முஹம்மதினால் எழுதி வெளியிடப்பட்ட ''விடியல்'' நூலின் மூலம் தெளிவாகவும் விளக்கமாகவும் அறிந்து கொள்ள முடியும்.
உங்களது இலக்கிய வாழ்வில் இன்றும் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை குறிப்பிடுங்கள்?
1973 ஆம் ஆண்டு நான் பலாலி ஆசிரியர் கல்லூரிக்கு பயிற்சிக்காக பிரவேசித்தபோது எதிர்பாராத விதமாக அன்று எழுத்துலகில் புகழ்பெற்றிருந்த திக்குவல்லைக் கமால், அன்பு ஜவஹர்ஷா ஆகியோரும் பயிற்சி பெறுவதற்கு வந்திருந்தனர். இவர்களின் நட்பால் யாழ் குடா நாட்டின் பல சிரேஷ்ட எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அப்போது தென்னிந்தியாவிலிருந்து வெளிவந்த வானம்பாடி, ஏன் போன்ற கவிதைச் சிற்றேடுகளை எனக்கு பெற்றுத் தந்து புதுக் கவிதையின்பால் ஆர்வத்தை வளர்த்தவர்களும் இவர்களே. இலக்கியம் பற்றிய தேசியம் கடந்த பார்வையையும் கவிதை மீதான பிரங்ஞையையும் உருவாக்கி கவிதை வானில் சிறகடித்துப் பறக்க தூண்டுகோலாக இருந்த இவர்களின் நட்பை என்றும் என்னால் மறக்க முடியாது. இறையருளால் அது இன்றுவரை நீடித்து வருகின்றது. மேலும் கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார் போன்றேருடன் வேறு பல இலக்கியவாதிகளும் சமகாலத்தில் பலாலி ஆசிரியர் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தமை எனது அதிர்ஷ்டமே. நாங்கள் அனைவரும் அங்கு ஒரு நட்பு வட்டமாகவே இயங்கினோம். இதனால்தான் எங்களை ஏனைய நண்பர்கள் 'பலாலி பஞ்ச பாண்டவர்கள்' எனப் பட்டம் சூட்டி அழைத்தனர். இதைப் பற்றி கலைவாதி கலீல் அவர்கள் தற்போதும் கூட பத்திரிகைகளில் எழுதி வருவது பழைய நினைவுகளை மீட்டி மகிழ்சியூட்டச் செய்கின்றது.
இறுதியாகப் பகிர்ந்து கொள்ள விரும்புவது என்ன?
இலக்கியம் என்பது காலத்தின் தேவைக்கேற்ப மக்களின் வாழ்வியலை முதன்மைப்படுத்தி படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது காலத்தால் அழியாத இலக்கியமாக வாழும். இதையே எனது இலக்கிய நோக்காகக் கொண்டு பயணிக்கின்றேன். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு நோக்கு இருக்கலாம். அதன் மூலம் பலர் பயனடைபவர்களாயின் அது வரவேற்கத்தக்கதே. இலக்கியமும் அவ்வாறே தங்கள் படைப்புக்கள் எதுவாக இருப்பினும் அது மனித வர்க்கத்தின் விடிவுக்காக ஆக்கப்படும்போது மக்கள் இலக்கியமாக இப்புவியில் சிரஞ்சீவியாக நிலைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!!!
நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்









No comments:
Post a Comment