வைத்திய கலாநிதி எம்.எம். நௌஷாத் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?
எம்.எம். நௌஷாத் என்ற பெயரில் சிறுகதைகளை எழுதி வருகின்றேன். மருத்துவராகப் பணிபுரியும் நான் தற்போது கல்முனைப் பிராந்திய மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் பொறுப்பாளராக இருக்கிறேன். மனைவி தைஹிபா ஆவார். என் முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர் அவர். எனக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். இருவர் பல்கலைக்கழகத்திலும் இருவர் உயர் தரமும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களது குடும்பப் பின்னணி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
ஆரம்பக் கல்வியை ஊவா மாகாணத்திலுள்ள அளுப்பொத்தை முஸ்லிம் வித்தியாலயம், பசறை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தொடர்ந்தேன். நான் மருத்துவராக வர வேண்டும் என்ற இலட்சியத்தில் இருந்த என் தந்தையார் உயர் கல்வியை தொடர வேண்டுமென்ற நோக்கத்திற்காக எனது பிறந்தகமான சம்மாந்துறைக்கு என்னை அனுப்பி வைத்தார். 1974 இல் இது நிகழ்ந்தது. இது என் வாழ்க்கையில் பாரிய திருப்பு முனையாக அமைந்தது. கல்வியில் இப்போதைய நிலையை அடைவதற்கும் இலக்கிய முனைப்பு ஏற்படுவதற்கும் இந்தப் புள்ளி முக்கியமானது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் என்னைச் செம்மைப்படுத்தியது. முக்கியமாக தமிழாசிரியராக இருந்த எனது தந்தை மர்ஹூம் யூ.எம் முஸ்தபா அவர்கள், மறைந்த வீ ஆனந்தன் அவர்கள், மேலும் மன்சூர் ஏ. காதர் அவர்களும் என்னுடைய சிற்றப்பா யூ செய்ன் அவர்களும் வழிகாட்டிகளாக இருந்தார்கள். இப்போதும் எனக்கு மனோபலத்தை தந்து கொண்டிருப்பவர் என் தாயே. அவர் ஆசிரியையாக இருந்தவர். ஜெமீலா டீச்சர் என்றால் யாருக்கும் தெரியும்.
உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எத்தனை ஆண்டுகளாக சிறுகதைகளை எழுதி வருகின்றீர்கள்?
ஆறாம் வகுப்பிலிருந்தே சின்னச் சின்ன ஆக்கங்களைப் படைத்து வந்திருக்கிறேன். 1978 அல்லது 1979 இல் நான் எழுதிய முதற் சிறுகதையான வெளிச்சத்திற்கு வருவோம் நீர்ப்பாசனத் திணைக்கள தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றது. இதன் பின்வந்த ஓரிரண்டு ஆண்டுகளில் மிகவும் வேகமாக சிறுகதைகளை எழுதினேன். கிட்டத்தட்ட எல்லா வார இதழ்களிலும் சஞ்சிகைகளிலும் என் கதைகள் வந்தன. மல்லிகை, சிரித்திரன், சுடர், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, வியூகம், தீபம் ஆகிய அவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு இவ்வேளை நான் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் எவ்வித முன் அறிமுகமுமின்றி அவர்கள் என் கதைகளைப் பிரசுரித்தனர். எனினும் அக்கதைகள் எனக்கு பூரண திருப்தியைத் தரவில்லை. அக்கதைகளை என்னுடைய சிறுகதைத் தொகுதிகளில் சேர்க்காததன் காரணமும் அதுவே.சுற்றி வாழும் மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும், அவர்களின் அனுபவங்களிலிருந்தும், என்னுடைய அனுபவங்களிலிருந்தும். என்றாலும் அவைகளை என் கதைகளில் நேரடியாக நான் விவரிப்பதில்லை என்பதால் பலர் என் கதைகளை வெறும் கட்டுக் கதை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் பூடகமாக நான் சொல்வதைப் புரிந்துகொள்ள நிச்சயம் ஆழ்ந்த வாசிப்பு அவசியம்.
அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. ஏனெனில் நான் அகில இலங்கை ரீதியில் முதல் பரிசு பெற்ற அதேசமயம் ஆறுதல் பரிசுகள் பெற்ற மற்றைய எழுத்தாளர்கள் அவ்வேளை பிரபல்யமானவர்களாக இருந்தார்கள். அக்கதை சுடர் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகிற்று.
இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
என்னுடைய சிறுகதைத் தொகுதியான சொர்க்கபுரிச் சங்கதி 2016 ஆம் ஆண்டிலும் பூச்செண்டு போல் ஒரு மனிதன் 2020 இவ்வருடமும் வெளிவந்தன. எனது பத்து சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் இஸிவர அஸப்புவ (ரிஷியின் ஆச்சிரமம்) என்ற தலைப்பில் கொடகே பிரசுமாக 2017 இல் வெளிவந்தது. சி.ஜி.எஸ். ஆனந்த அவர்களும் லரீனா அப்துல் ஹக் அவர்களும் கதைகளை மொழிபெயர்த்தார்கள்.2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசினால் வழங்கப்படுகின்ற சாகித்திய விருது, ஷஷசொர்க்கபுரிச் சங்கதி' என்ற உங்களது முதலாவது சிறுகதை நூலுக்கே கிடைத்துள்ளது. இதுபற்றிக் குறிப்பிடுங்கள்?
முன்னர் எழுதிய மரபு வழியான எழுத்துப் பாணி எனக்கு பிடிக்காததால் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் வித்தியாசமான பாணியில் சிறுகதைகளை எழுத முயற்சித்தேன். விருது பெற்ற அந்தத் தொகுதியும் முற்றிலும் அவ்வாறான கதைகளையே கொண்டிருந்தன. மொத்தம் முப்பத்தி மூன்று கதைகள். மேலும் ஓவியர் ருத்ரா அந்நூலுக்கு சிறப்பான முறையில் ஓவியங்களை வரைந்தார். எனவே எனது புதிய எழுத்திற்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாகவே இதனைக் கருதுகிறேன்.
2020 இல் வெளிவந்த 'பூச்செண்டுபோல் ஒரு மனிதன்' என்ற உங்களது இரண்டாவது சிறுகதை நூலின் கருப்பொருட்கள் பற்றிக் கூற முடியுமா? நூலின் தலைப்பாக இதனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
அனேகமான கதைகள் மனிதர்களின் ஆழ்மனதைச் சித்தரிக்கின்றன. எனவே வாசகர்களும் தீவிர சிந்தனையுடனான வாசிப்பு மூலமே இக்கதைகளைப் புரிந்து கொள்ள முடியும். எப்போதும் பூக்களின் மீது ஆழ்ந்த பிரேமை எனக்குண்டு. எனவே வியப்படைவதற்கு இத்தலைப்பில் ஒன்றுமில்லை. மேலும் இத்தலைப்பு கவர்ச்சியாக இருக்குமென்று நினைத்தேன்.
'வளர்ந்தோருக்கான தேவதைக் கதைகளை எழுத முடியுமா?' என்ற சிந்தனைதான் உங்களை எழுத வைத்தது என்று கூற முடியுமா? அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?
இது என்னுடைய சிந்தனைப் போக்கு அல்ல. மாய யதார்த்த பாணிக் கதைகள் போன்ற சொற்களால் இதனை விவரிக்கிறார்கள். தீவிர சமாச்சாரங்களை பூடகமாகச் சொல்வதற்கு. நான் நினைக்கிறேன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மிகவும் அதிகமாக இக்கோட்பாடு வழியே எழுதி இருக்கிறார்கள். ஏனைய அடக்குமுறை நிலவிய நாடுகளிலும் இப்பாணியைப் பின்பற்றி எழுதினார்கள். சர்வதேச ரீதியிலும் ஏன் தமிழிலும் கூட நிறைய எழுத்தாளர்கள் இந்தப் பாணியைப் பின்பற்றி எழுதுகிறார்கள். அதற்கு நான் பயன்படுத்திய எளிய பதம் தான் அது. வாசிப்பை வாசகமயப் படுத்துவதற்காக நானும் ஒரு முயற்சி செய்து பார்த்தேன். அவ்வளவே. அது சரியான பதமா என்று கேட்டால் எனக்குத் தெரியாது என்பதே விடையாகும்.
சிறுகதைகளின் வரையறைகள் பற்றிச் சொல்லுங்கள்? ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும்;?
சிறுகதைகளின் வரையறைகளை இப்போது நான் பேசுவது அறிவீனமானது. தட்டையான பாணியில் எழுதுவதும் பாடப் புத்தக சட்டகங்களைப் பின்பற்றி எழுதுவதும் வழக்கொழிந்து வருகிறது. இப்போது எவ்வாறெல்லாம் எழுத முடியுமோ அத்தனை முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கிறார்கள். மேலும் பின்நவீன எழுத்தின் கூறாக கட்டுடைத்தல் என்ற சொல் பிரபலமாகி வருகிறது. இது புதிய விஷயம் அல்ல. கட்டுடைத்தல் என்பது கதையை அசிங்கமாக்குவது அல்லது அலங்கோலப்படுத்துவது அல்லது ஒருவருக்கும் புரியாமல் எழுதுவது அல்ல. என்னுடைய புரிதல் என்னவென்றால் ஒழுங்கின்மையில் ஓரொழுங்கைத் தேடுவது. எந்தப் பாணியில் எழுதினாலும் கதையை ஒரு புள்ளியில் கட்டுக்குள் அல்லது மையத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அப்போதுதான் நல்ல கதையாக அது இருக்கும்.
ஏர்னஸ்ட் ஹெமிங்வே சிறுகதை எழுதுவது தொடர்பில் கூறியிருப்பது மிகவும் பொருத்தம் என்று நம்புகிறேன். எழுதுவது என்பது எப்போதும் பெரும் சட்டத்திட்டங்களை உள்ளடக்கி இருப்பதாய் நான் காணவில்லை. சிலபோது அது இலகுவாய் நேர்த்தியாய் வந்தமைந்து விடுகிறது. இன்னும் சில நேரங்களிலோ அது மலையைக் குடைந்து வெடித்துச் சிதற வைக்கும் பெரும் கைங்கரியமாயும் காரியச் சுமையாயும் ஆகிவிடுகிறது..
தற்கால சிறுகதைப் போக்குகள் பற்றிய உங்களது அவதானிப்புக்களைக் கூறுங்கள்?
தற்காலம் என்பது இறந்த காலத்தின் நீட்சி என்று நம்புபவன் நான். எனவே கடந்த கால புனைவுகளைக் கட்டாயம் வாசித்து கால மாற்றத்தால் கதை சொல்லுதலில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ளல் வேண்டும். உள்நாட்டிலும் தமிழ் மொழியிலும் சிறந்த கதைகள் நிறையவே உள்ளன. முதலில் அவற்றை வாசித்து அக்காலப் போக்கை அறிந்த பின்னரே தற்காலப் போக்குகளை ஆராய முடியும்.
இப்பொழுது நுண்கதைகள் (ளூழசவ குiஉவழைn), நுண் சித்தரிப்பு (ஆiஉசழ யேசசயவழைn), குடயளா குiஉவழைn போன்ற மிகவும் குறுகிய வடிவக் கதைகளில் கவனம் சென்றுள்ளது. ஆனால் நிறைய எழுத்தாளர்கள் அதனை பத்திரிகைகளில் நாளாந்தம் பிரசுரமாகும் குட்டிக் கதைகள் என்றோ சிறுகதைகளைச் சுருக்கி எழுதுவது என்றோ தவறாகப் புரிந்துள்ளனர். அடர்த்தியான எழுத்தாற்றல், நுட்பமான கற்பனை என்பன இருப்பின் இதற்குள் நுழையலாம். என்றாலும் நீண்ட கதைகள் என்று நீங்கள் நம்பும் சிறுகதைகளுக்கு இன்னும் மௌசு இருக்கிறதென்று நம்புகிறேன். மேலும் சிறுகதைகளின் உருவம், உள்ளடக்கம், மொழி, கதை சொல்லும் பாணி என்பவற்றில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் நிறைய அவ்வாறான கதைசொல்லிகள் உருவாகியிருக்கிறார்கள். எனவே இக்கால கட்டத்தில் எழுத்தாளனுக்கு கற்பனை மட்டும் போதாது. அதியுச்ச கற்பனையும் அறிவியல் அறிவும் பரந்து விரிந்த வாசிப்பும் தேவை.
நீங்கள் எழுதிய சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கதை அல்லது கதைகள் எது? ஏன்?
பூச்செண்டு போல் ஒரு மனிதன் தொகுதியில் உள்ள முதலாவது கதையைத் தவிர மற்ற ஏழு கதைகளும் எனக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பட்டாம்பூச்சி என்ற நிஜமும் மரத்துடன் பேசுதல் என்ற புனைவும், திடுக்குறச் செய்யும் இரட்டைத் தலைச் சர்ப்பம் ஆகிய கதைகள் மிகவும் பிடிக்கும். காரணம் இக்கதைகளுக்காக நான் கடினமான உழைப்பைச் செலுத்தியிருக்கிறேன்.
உங்களுக்கும் வாசகர்களுக்குமான தொடர்பு எவ்வாறுள்ளது? வாசகர்கள் உங்களது எவ்வகையான கதைகளை விரும்பி வாசிக்கின்றனர்?
என்னுடைய வாசகர்களை இரண்டு வகையறாவுக்குள் உள்ளடக்கலாம். அதில் அடங்கியுள்ள சுவாரஷ்யமான கதைக்காக வாசிப்போர் ஒரு ரகம். இவ்வகைக்குள் நிறைய மாணவர்களும், தீவிர வாசகர்களின் மனைவிமார்களும் அடங்குகிறார்கள். மற்றவர்கள் தீவிர வாசகர்கள். இவர்கள் விமர்சனப் பார்வையோடும், கதையின் பின்புலம், கருப்பொருள், ஆரம்பம், முடிவு, மொழிநடை, கதையின் பாணி போன்றவற்றை நுணுகி ஆராய்ந்தும் வாசிப்பவர்கள். என்னிடம் கேள்வி எழுப்புகின்ற அதீத ஆர்வம் உள்ள வாசகர்களும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும் நுனிப்புல் மேய்கின்ற அல்லது முன்னுரை அணிந்துரை மட்டுமே வாசிக்கின்ற சோம்பேறி வாசகர்களை நான் விரும்புவதில்லை.
உங்கள் சிறுகதைகளுக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?
நிறைய வரவேற்பு இருந்தாலும் அந்நிய மொழிநடை தொடர்பாகவும் பரிச்சயமற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் தொடர்பாகவும் பலர் என்னிடம் விவாதித்திருக்கிறார்கள். அது என்னுடைய பலவீனமாகக் கூட இருக்கலாம்.
எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறீர்கள்? ஏன்?
அனேகமாக தேர்வு செய்த நூல்களையும் என்னுடைய எழுத்தாள நண்பர்கள், முகநூல் நண்பர்கள் சிபாரிசு செய்யும் புத்தகங்களையும் வாசிக்கிறேன். இப்போது ஷோபா சக்தியின் இச்சாவை வாசிக்கிறேன் மற்றும் தந்தை கோரியோ, ஹாருகி முரகாமியின் கினோ தஸ்தாவஸ்கியின் அசடன் என்பவைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். கூடுதலாக மொழிபெயர்ப்பு நூல்களின் மீதுதான் எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. வட்டத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை மொழிபெயர்ப்புகள் எமக்குக் காட்டுகின்றன.
உங்களுடைய எழுத்தாள நண்பர்களாக யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?
எழுத்துகளுக்காகத் தங்களை அர்ப்பணித்து எழுதும் அனைத்து எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நான் நண்பர்களாகவே மதிக்கிறேன். இவ்விடத்தில் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும் விதத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களோடு பயணிக்கும் சிலர் இருக்கிறார்கள். பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், மன்சூர் ஏ. காதர், உமா வரதராஜன், ரியாஸ் குரானா, அனார் இஸ்ஸத் ரெஹானா போன்றவர்கள்.
ஒரு வைத்தியராக இருக்கும் நீங்கள், சிறுகதைகளை எந்தெந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?
பிரத்தியேக வைத்திய சிகிச்சை நிலையத்திலும், பிரயாணங்கள் செய்யும் வேளையிலும், இரவுகளிலும் சிறுகதைகளை எழுதுகின்றேன்.
தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
தற்போது கொரோனாவினைத் தொடர்புபடுத்தி 'அன்பியல், துன்பியல், கொரோனா' என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதுகிறேன்.
உங்களது இலக்கிய வாழ்வில் இதுவரை மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?
சொர்க்கபுரிச் சங்கதி சிறுகதைகள் தொடர்பில் நிறைய வாசகர்களும் எழுத்தாளர்களும் என்னைப் பாராட்டினார்கள். என்னுடைய கதைகளை ரசிப்பவர்களாக நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். எனினும் மொழிபெயர்ப்புத் தொகுதி தொடர்பில் என்னுடன் எவ்வித அறிமுகமுமின்றி கமல் பெரேரா என்ற எழுத்தாளர் பிரபல சிங்கள வார இதழான தினமினவில் எழுதிய கட்டுரையை மறக்க முடியாது. பத்திரிகையின் அரைப் பக்கத்தில் வர்ணப் படத்தோடு அது வெளியாகியது.
இதுவரை கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
என்னுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியான சொர்க்கபுரிச் சங்கதி நூலுக்கு 2017 இல் கிழக்கு மாகாண சபை விருது, அரச இலக்கிய விருது, கொடகே விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றேன்.
நிறைவாக இளைய தலைமுறைப் படைப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் என்ன சொல்லப் போகிறீர்கள்?
படைப்பாளிகளை இவ்வாறு வகைப்படுத்துவதை நான் வரவேற்பதில்லை. ஆழ்ந்த ஆய்வு இன்றியும் நூல்களை வாசிக்காமலும் நுனிப்புல் மேய்வது போல் எழுதுவதையும் மேலோட்டமாக வாசிப்பதையும் யாராக இருந்தாலும் நான் வெறுக்கிறேன். குறைந்த பட்சம் தமிழில் வெளிவந்த ஒரு சிறந்த சிறுகதைத் தொகுதியையோ கவிதைத் தொகுதியையோ வாசிக்காமல் நான் சிறப்பாக எழுதுகிறேன் என்று சொல்பவர்களின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதே. சிறந்த படைப்பாளிகள் எல்லா வயதிலும் சிறப்பாக எழுத முயற்சிப்பார்கள். சில எழுத்தாளர்கள் தமது முதல் படைப்பிலேயே உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். சிலருக்கு கால வளர்ச்சி தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு அடைமொழி தேவையில்லை. எழுத்தாளன், வாசகன் இருவருக்கும் உழைப்பு தேவைப்படுகிறது. வாசகர்களுக்கு அறிவுரை அவசியமில்லை. தேர்ந்த வாசகர்கள் எதை வாசிப்பது என்று அறிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கு நேரமில்லாதோர் பத்திரிகைச் செய்திகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்









No comments:
Post a Comment