Sunday, June 26, 2022

42. கவிஞர் வி. மைக்கல் கொலின் அவர்களுடனான நேர்காணல்

 கவிஞர் வி. மைக்கல் கொலின் அவர்களுடனான நேர்காணல்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்? 

முதற்கண் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும். என்னைப் பற்றிய அறிமுகம் கேட்கிறீர்கள். தமிழகத்தில் அண்மையில் வெளிவந்த  ஷஷகாக்கை வன கவிஞர்கள்' தொகுப்பில் என்னைப் பற்றி வெளிவந்துள்ள சிறு குறிப்பையே எனது அறிமுகமாகத் தருகிறேன். 

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் வி. மைக்கல் கொலின் தனது மாணவப் பருவத்தில் (14 வயது) இருந்தே படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், குறும்படம், பத்திரிகைத் துறை, சஞ்சிகை வெளியீடு, நூல் வெளியீடு என பல்துறை ஈடுபாடுடைய இவரது முதல் புதுக்கவிதைத்தொகுப்பு 

"என் பிரிய ராஜகுமாரிக்கு" 1992 இல் வெளிவந்தது. 2018 இல் இவரது "பரசுராம பூமி" என்ற சிறுகதைத் தொகுப்பும் 2019 இல் "சிலுவைகளே சிறகுகளாய்" என்ற கவிதை நூலும் 2021 இல் "வீணையடி நீ எனக்கு" என்ற நாவலும் மூன்றாவது கவிதை நூலான "இவனைச் சிலுவையில் அறையுங்கள்" என்ற நூலும் நான்காவது கவிதை நூலான "எழுதித் தீரா பிரியங்களும்" வெளிவந்துள்ளது. 

1985 - 1995 வரை திருகோணமலையில் "தாகம்" என்ற கலை இலக்கிய இதழை வெளியிட்டு வந்த இவர், 1995 இல் மட்டக்களப்பபில் "ஃபீனிக்ஸ்" நவீன தமிழ் கவிதா இதழையும் வெளியிட்டார். இவர் 2012 தொடக்கம் மட்டக்களப்பில் 'மகுடம்' என்ற  கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலாண்டிதழின் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வருகிறார். 

இவர் 1998 இலும் - 2000 இலும் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த முதல் வாரப் பத்திரிகையான 'தினக்கதிர்' வாரமலர், 'தினக்கதிர்' நாளிதழ் ஆகியவற்றின் பிரதம, இணை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவரது "பரசுராம பூமி" சிறுகதை நூல் 2018 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் மகுடம் பதிப்பகத்தின் மூலம் இதுவரை 60 நூல்களையும், தாகம் பதிப்பகத்தின் மூலம் 06 நூல்களையும் பதிப்பித்துள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழக வியாபார நிர்வாகமாணி (BBA) பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் கூறுங்கள்? 

நான் திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்டவன். எனது முதலாம் வகுப்பு தொடக்கம் உயர் தரம் வரை திருமலையின் புகழ் பூத்த பழம் பெரும் வரலாற்றைக் கொண்ட புனித சூசையப்பர் கல்லூரியில்தான் கல்வி கற்றேன். உயர் தரத்தில் வர்த்தக பிரிவில் கல்வி கற்ற நான், முகாமைத்துவ கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டு கிழக்குப் பல்கலையில் எனது உயர் கல்வியைக் கற்றேன். 

எனது தொழில் அனுபவம் மூன்று வகையானது. எனது பல்கலைக் கழகக் கல்வி முடிந்து வெளியேறியதும் மட்டக்களப்பின் முதல் வார வெளியீடாக வெளிவந்த தினக்கதிர் ஆசிரிய பீடத்தில் வேலை கிடைத்தது. அதன்பின்னர் 2004 ல் மட்டக்களப்பில் இயங்கிய நோர்வே நாட்டு நிதியில் இயங்கிய வேலைத் திட்டத்தில் சமூக உணர்வூட்டலாளராக ஒரு வருடம் கடமையாற்றினேன். 2005 இல் பட்டதாரிகளுக்கான அரச சேவையில் இணைந்து இன்றுவரை மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணிபுரிகிறேன்.


கலை இலக்கியத் துறைக்குள் எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்? இத்துறையில் உங்களை ஊக்குவித்தவர்கள் பற்றி?

எனது பாடசாலை காலங்களிலேயே நான் எழுதத் தொடங்கிவிட்டேன். எனது எட்டாம் வகுப்பில் எமது தமிழ்ப் பாட ஆசிரியை திருமதி. கந்தையா அவர்களின் தூண்டுதலால் சிறுவர் வைரம் எனும் கை எழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியாக தாகம் என்ற பெயரில் ஒரு இலக்கிய இதழை ரோணியோ அச்சில் வெளிக்கொணர்ந்தேன். பின்னர் தாகம் அச்சிதழாக வெளிவந்தது. இக் காலங்களில் எனது இலக்கிய ஆர்வத்தை எனது தமிழ் ஆசிரியர் திருமலை நவம் அவர்களும் தூண்டிவிட்டார்.


இற்றை வரைக்கும் எவ்வாறான ஆக்கங்களை எழுதியுள்ளீர்கள்?

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என இலக்கியத்தின் பல வடிவங்களையும் தொட்டுள்ளேன்.


முதன் முதலாகக் கவிதை எழுதிய தருணம் எது?


ஆரம்ப காலங்களில் நான் கட்டுரையும், சிறுகதைகளும் எழுதிய காலத்தில் எனது தமிழ் ஆசிரியை திருமதி கந்தையா அவர்களின் தூண்டுதலால் கவிதை எழுதினேன். எனது முதல் கவிதை ஈழத்தில் இன்று மிக முக்கியமான பெண் கவிஞராக அறியப்படும் பாலையூற்று அஷ்ரபா நூர்டீன் அவர்களின் தினகரன் கவிதைச் சோலைப் பகுதியில் 1984.07.26 இல் வெளிவந்த 'மஜ்னூக்கள்' என்ற கவிதைக்கு பதில் கவிதையாக 'லைலாக்கள்' என்ற தலைப்பில் எழுதினேன். இந்தக் கவிதையே நான் எழுதிய முதலாவது கவிதை. இது தினகரன் பத்திரிகையின் கவிதைச் சோலைப் பகுதியில் 1984.08.09 இல் வெளியாகியிருந்தது. அத்துடன் இதுவே எனது முதல் கவிதைப் பிரசுரமாகவும் அமைந்தது. 


இதுவரை வெளிவந்த உங்களது நூல் அறுவடைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை வெளியிட்ட நூல்களாக பின்வரும் 06 நூல்களையும் குறிப்பிடலாம்.


01. என் பிரிய ராஜகுமாரிக்கு - கவிதை (1992)

02. பரசுராம பூமி - சிறுகதை (2018)

03. சிலுவைகளே சிறகுகளாய் - கவிதை (2019)

04. வீணையடி நீ எனக்கு - நாவல் (2021)

05. இவனைச் சிலுவையில் அறையுங்கள் - கவிதை (2021)

06. எழுதித் தீரா பிரியங்கள் - கவிதை (2021)

எனது முதலாவது நூல் வெளியீடும் கவிதை நூலுமான 'என் பிரிய ராஜகுமாரிக்கு' என்ற நூல் 1992 இல் வெளிவந்தது. அக்காலத்தில்தான் தமிழில் கணனி எழுத்துக்கள் அறிமுகமாகி, வீரகேசரி பத்திரிகையின் வார வெளியீடு கணனி மயப்படுத்தலோடு வெளிவந்தது. எனது கவிதை நூலின் அட்டையும் கணனி மூலமான வடிவமைப்பில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இது கணனி மூலமான அச்சில் வெளிவந்த முதல் கவிதை நூலானது. இதன் முன் பின் அட்டைப் படத்தினை நண்பர் கவிஞர் ஜபார் வடிவமைத்திருந்தார். பின் அட்டையில் என்னைப் பற்றிய குறிப்பினை நண்பரும் கலைஞருமான அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா தனது அழகிய கையெழுத்தில் கவிதை வடிவில் எழுதியிருந்தார். முன் பின் அட்டைகள் இரு கவிஞர்களின் கை வண்ணத்தில் பெறுமதி சுமந்த இத்தொகுப்பு தாகம் பதிப்பகத்தின் ஐந்தாவது வெளியீடாக வெளிவந்தது. 

எனது இரண்டாவது கவிதை நூல் 'சிலுவைகளே சிறகுகளாய்' 2019 இல் கிட்டத்தட்ட 27 வருடங்களின் பின்னர் மகுடம் பதிப்பகத்தினால் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது. இந்த நூலானது பேராசிரியர் செ. யோகராசாவின் அணிந்துரையுடனும் எழுத்தாளர் நந்தினிசேவியரின் பின்னுரையுடனும் வெளிவந்தது. மேலும் எனது சிலுவைகளே சிறகுகளாய் கவிதை நூல் 2000 ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று நூல்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அந்த ஆண்டில் இந்திய திருப்பூர் இலக்கிய விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டது.

2021 ஆரம்ப காலத்தில் எனது 'வீணையடி நீ எனக்கு' என்ற நாவல் வெளியானது. 2021 இன் இறுதியில் எனது மூன்றாவது கவிதை நூலான 'இவனைச் சிலுவையில் அறையுங்கள்' என்ற நூல் தமிழகப் பேராசிரியர் அ. ராமசாமி, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட் பணி அகுஸ்தின் நவரெட்ணம் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்தது. இதேகாலப் பகுதியில் எனது நான்காவது கவிதை நூலான 'எழுதித் தீரா பிரியங்கள்' வெளியானது குறிப்பிடத்தக்கது. 


நீங்கள் வெளியிட்ட "பரசுராம பூமி" சிறுகதை நூல் பற்றி?

பரசுராம பூமி 2018 இல் வெளிவந்த எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பாகும். அது வெளிவந்த ஆண்டுக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருதைப் பெற்றுக்கொண்டது. பரசுராம பூமியின் சிறுகதைகள் அனைத்தும் மறுவாசிப்புக் கதைகள் ஆகும். முழுக்க முழுக்க தொன்மங்களையும், இதிகாச, புராண, மறை நூல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் தமிழின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற பிரகடனத்துடன் வெளிவந்த இந்தத் தொகுதி ஒன்பது சிறுகதைகளைக் கொண்டது. பேராசிரியர் சி. மௌனகுரு, பேராசிரியர் செ. யோகராசா, கவிஞர் ஜிப்ரி ஹசன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்த இந்த நூலின் வெளியீடு மட்டக்களப்பிலும், அறிமுக நிகழ்வுகள் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றது.


உங்கள் "சிலுவைகளே சிறகுகளாய்" கவிதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? இந்த நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

சிலுவைகளே சிறகுகளாய் எனது இரண்டாவது கவிதை நூலாகும். முப்பது வருடகாலமாக எமது மண்ணிலே நடைபெற்ற போராட்டம் தொடர்பான, அதன் இழப்புகள், வலிகள், வேதனைகள்  பற்றி நிறையவே பேசிய தொகுப்பு. தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று நூல்களில் (2019) முதல் நூல் இதுவாகும். இது இந்திய திருப்பூர் இலக்கிய விருதும் பெற்றது.


சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு கணிசமாக குறைந்து வருகின்றது. அந்தவகையில் உங்களின் முதல் நாவலின் தனித்துவம் பற்றிக் குறிப்பிட முடியுமா?

"வீணையடி நீ எனக்கு" (2021) என்ற எனது முதல் நாவல் கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை பேசும் முதல் நாவலும் ஈழத்தில் முழுக்க முழுக்க பல்கலைக்கழக வாழ்வியலைப் பேசி வெளிவந்த மூன்றாவது நாவலுமாகும். இதுவும் காதலையும், அரசியலையும் இணைத்த வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு என்ற இரு பிரதேசங்களையும் வைத்து எழுதப்பட்டதாகும்.


"வீணையடி நீ எனக்கு" நாவலின் மூலம் சமூகத்துக்குச் சொல்ல விரும்பும் விசேட செய்தி என்ன?

நான் எனது எழுத்துக்கள் மூலம் போதனை செய்வதில்லை. சமூகத்தில் இருந்து பெற்றதை, எடுத்ததை சமூகத்திற்கே திருப்பிக் கொடுக்கின்றேன். அந்தவகையில் "வீணையடி நீ எனக்கு" என்ற நாவல் எனது பல்கலைக்கழக வாழ்வின் அனுபவங்கள். அங்கு நான் பெற்றதையும், எடுத்ததம் எனது நாவலில் திருப்பிக் கொடுத்துள்ளேன்.


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

நிறையவே பேசி இருக்கின்றது. "வீணையடி நீ எனக்கு" நாவலே முழுக்க முழுக்க பெண்களின் வாழ்வியலுடன் தொடர்புபட்ட அவர்களது பிரச்சனைகளைச் சொல்லும் நாவலாகவும்  கொள்ளலாம். இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் கதையாகவும் கொள்ளலாம். மேலும் இதுவரை யாருமே எழுதாத ஊர்மிளையைப் பற்றி எனது ஓர்மம் சிறுகதையில் பேசியுள்ளேன். 

ஊர்மிளை ராமாயணத்தில் இலக்குவனனின் மனைவி. 14 வருடங்கள் கட்டில் வசித்த அண்ணன் ராமனுக்கு துணையாக இலக்குவன் சென்றுவிடுகிறான். காட்டில் ராமன் சீதையுடன் இணைந்தே இருந்தான். ஆனால் 14 வருடங்கள் இலக்குவனனும், ஊர்மிளையும் பிரிந்தே வாழ்ந்தனர். யாருமே ஊர்மிளையைப் பற்றிப் பேசுவதில்லை. பலருக்கு ஊர்மிளையின் பெயரே தெரியாது. 14 வருடங்கள் கணவனைப் பிரிந்து வாழ்ந்த அவளது மன உணர்வுகளை எனது ஓர்மம் கதையில் சொல்கிறேன்.

இன்னும் யாருமே அணுகாத புதிய பார்வையில் அகலிகையை வைத்து எழுதிய வரம் என்ற சிறுகதை முக்கியமானது. இப்படி இன்னும் பல கதைகளைக் கூறலாம்.


ஒரு சஞ்சிகையாசிரியராக "மகுடம்" சஞ்சிகையின் வரவு பற்றி என்ன சொல்வீர்கள்?

முதன் முதலாக மகுடம் சஞ்சிகை 2012 இல் வெளிவந்தது. மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலாண்டிதழாக இன்றுவரை தொடர்ந்து வெளிவருகிறது. இதுவரை 13 சஞ்சிகைகள் காலாண்டு இதழ்களாக வெளிவந்துள்ளது. எமது மகுடம் சஞ்சிகை பழமைக்கும் நவீனத்துவத்துக்குமான ஒரு பாலமாக, தொன்மங்களுக்கூடான எம் வரலாற்றைப் பேசும் இலக்கிய முயற்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது. அண்மையில் ஞானம் சஞ்சிகை ஆசிரியரின் பவள விழாப் நிகழ்வில் சஞ்சிகைக்களுக்கிடையிலான போட்டியில் மகுடம் சஞ்சிகை தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்று 15,000 ரூபாய் பரிசினைப் பெற்றுக்கொண்டது


"மகுடம்" சஞ்சிகையின் சிறப்பம்சங்கள் குறித்தும் அதன் சமூகப் பயன்பாடுகள் குறித்தும் கூறுங்கள்?

மகுடம் ஏனைய கலை இலக்கிய சஞ்சிகைகளிலிருந்து வேறுபடுவதற்கு காரணம் அது தனது ஒவ்வொரு இதழையும் சிறப்பிதழாக வெளியிடுவதாகும். இதுவரை மகுடம், தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ் சிறுகதைச் சிறப்பிதழ், பிரமிள் சிறப்பிதழ் எஸ்.பொ. சிறப்பிதழ், கனடா சிறப்பிதழ், பேராசிரியர் மௌனகுரு இரட்டைச் சிறப்பிதழ், மருதூர்க் கொத்தன் சிறப்பிதழ், என பல சிறப்பிதழ்களை அதுவும் மலையகத்துக்கு எந்தவொரு சஞ்சிகையும் செய்யாத விடயமாக இரண்டு முறை (04 ஆவது, 08 ஆவது) சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. மேலும் மகுடம் கலை இலக்கிய வட்டத்தினை ஆரம்பித்து இதுவரை 42 நிகழ்வுக்கும் மேலான பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுகளை நடாத்தியுள்ளது.

மகுடம் 09 ஆவது இதழ் ஈழத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் புகழ்பெற்ற கவிஞர் பிரமிள் என்கிற தர்மு சிவராமுவுக்கு சிறப்பிதழ் வெளியிட்டது. இதன் 50 பிரதிகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த பிரதிகள் போதாமையின் காரணமாக மகுடம் பிரமிள் சிறப்பிதழ் தமிழ் நாட்டில் மறுபதிப்பு  (Reprint) செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் சிற்றிதழ் ஒன்று தமிழகத்தில் விற்பனைக்கு சென்றதும், அங்கு மறுபதிப்பு செய்யப்பட்டதும் சிற்றிதழ் வரலாற்றில் இது ஓர் சரித்திர நிகழ்வாகும். ஈழத்து இதழிற்கு கிடைத்த பெறுமையாகும்.

மகுடம் பதிப்பகம் மூலம் இதுவரை 60 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. இன்றைய கொரோனா பேரிடர் காலத்திலும் 2021 இல் 20 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. 2022 இல் இதுவரை 12 நூல்களை வெளியிட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் இது 20 நூல்களாகும். 

புலம் பெயர் படைப்பாளிகள் பலர் தாயகத்தில் தமது நூல்கள் வெளிவர வேண்டும் என்றும், அவர்கள் இல்லாவிட்டாலும் அதற்கான விழாக்கள், அங்கு நடைபெற வேண்டும் என்றும் விரும்புகின்றனர். மகுடம் அதற்கான ஏற்பாடுகளை செய்வதனாலும், அச்சுத் தொழில் நுட்பம், வடிவமைப்பு போன்றவற்றில் மகுடம் ஒரு வித்தியாசத்தைக் கடைப் பிடிப்பதினாலும் மகுடம் மூலம் தமது நூல்களை வெளிக்கொணர அவர்கள் விரும்புகின்றனர். மகுடம் கடந்த ஆண்டு வெளியிட்ட 20 நூல்களில் 10 நூல்கள் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளர்களது நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலும் தாயகத்தில் அதிக தமிழ் நூல்களை வெளியிட்டது மகுடமாகத்தான் இருக்கும் என்பதை மிகுந்த மன நிறைவோடு குறிப்பிடுகின்றேன்.


இணையப் பாவணை அதிகரித்துள்ள தற்காலத்தில் சஞ்சிகைக்கான வாசகர்கள் போதியளவு காணப்படுகின்றார்களா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் எழுத்தை கண்களால் தடவி அச்சு வாசனையை நுகர்ந்தபடி கையில் சஞ்சிகையை வைத்து வாசிக்கும் அந்த உணர்வு இணையத்தில் இல்லை. அந்த உணர்வு உள்ளவரை சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கும்.


சஞ்சிகைகளைத் தொடர்ந்து வெளியீடு செய்வது சிரமமான பணியாகத் தோன்றவில்லையா?

இன்றைய அச்சகப் பொருட்களின் விலை ஏற்றம் சஞ்சிகைகளை மட்டுமல்ல நூல்கள் வெளியிடுவதையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.


எழுத்துத் துறையில் உங்களை வியப்பில் ஆழ்த்தியவர்கள் யார்? ஏன்?

பலர் உண்டு. தொடர்ச்சியான அவர்களது எழுத்தால் பிரமித்து போய் உள்ளேன்.


நீங்கள் அண்மையில் வாசித்த படைப்புகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஒரு படைப்பு பற்றிச் சொல்வீர்களா?

1992 - 1993 காலப் பகுதி எனது பல்கலைக்கழக வாழ்வியலின் முதலாம் வருடம். இக்காலப் பகுதியில் கண்டி சத்தியோதய நிறுவனத்தின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடாத்திய தமிழ் மொழி மூலத் தொலைக்காட்சிப் பாடநெறியில் கிழக்கில் இருந்து நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். மூன்று மாத காலம் நடைபெற்ற இந்த டிப்ளோமாப் பயிற்சி நெறியில் இயக்கம் - திரைக் கதை எழுதல் ஆகிய துறைகளில் நான் பயிற்சி பெற்றேன். பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர்கள் பலர் இப்பயிற்சி நெறியின் வளவாளராகக் கலந்து கொண்டனர். 

இக்காலப் பகுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய தொலைக்காட்சி நாடகப் பிரதியாக்கல் போட்டியில் தேசிய ரீதியாக பரிசு பெற்ற 'மரபை மீறும் மானுடம்' என்ற தொலைக்காட்சி நாடகப் பிரதியை எனது தொலைக்காட்சி பயிற்சி நெறி முடிந்தவுடன் திருகோணமலையில் குறும்படமாக எடுத்தேன். அதில் திருமலையைச் சேர்ந்த எனது  பல்கலைக்கழக நுண்கலைத் துறை மாணவி கதாநாயகியாக நடித்ததும், தென்றலும் புயலும் திரைப்படப் புகழ் பிரபல திருமலை நாடக நடிகர் அமரர் சித்தி அமரசிங்கம் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் நான் அதிகம் கலை இலக்கிய ரீதியாக செயற்பட்டதும், வெளியீட்டு முயற்சிகளில் இறங்கியதும் குறும்பட முயற்சிகளில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்திவிட்டது.


நீங்கள் மிகப் பெரிய பலமாக எதனைக் கருதுகின்றீர்கள்?

நான் எதனையும் சவாலாக எடுப்பதில்லை. தடைக் கற்களையும் படிக் கட்டுக்களாக மாற்றியபடி எனது பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பதவி, பட்டங்கள் என நின்று நிதானித்தாலே சில சிக்கல்களும் மன அவஸ்தைகளும் ஏற்படும். நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். இயங்குவேன். அதுவே நான். இயங்குதலே எனது வெற்றி. கலைப் பணி என்னைப் பொறுத்தவரை ஒரு தவம். இது வரங்களை எதிர்பார்த்த தவம் அல்ல. வரங்களை வழங்கும் தவம். இதுவே எனது பலம்.


படைப்புகளை நீங்கள் பார்க்கும் பார்வை திறனாய்வா அல்லது விமர்சனமா?

இரண்டும் இல்லை. ஒரு வாசகனாக குறித்த படைப்பாளி தனது படைப்பின் மூலம் என்ன சொல்ல வருகின்றான் என்பதையே பார்க்கிறேன். விமர்சன, திறனாய்வு பார்வைகளால் பார்த்தால் படைப்பை ருசித்து அனுபவிக்க முடியாது.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

1988 காலப் பகுதியில் உயர் தரம் படித்துக்கொண்டிருந்தேன். இக்காலத்தில் தாகம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தேன். எமது மண்ணிலே இந்திய ராணுவம் குடி கொண்டிருந்த காலம் அது. தாகத்தில் வெளிவந்த எனது ஆட்டாமா ரொட்டியும் ஆட்டிறைச்சி கறியும் என்ற கவிதைக்காக இந்திய ராணுவம் கைது செய்து ஒரு வாரம் வைத்திருந்தார்கள். எனது கவிதை இந்திய வல்லாதிக்கத்தையே அசைத்ததை என்னால் இன்றும் மறக்க முடியாது


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

2022 ஜுன் மாதம் 26 ஆம் திகதி எனது ஏழாவது நூலும் ஐந்தாவது கவிதை நூலுமான "என் இனிய பட்டாம் பூச்சிக்கு" கவிதை நூல் வெளிவருகிறது. எனது காதல் மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு தினம் ஒரு கவிதையாக எழுதிய 44 கவிதைகளின் தொகுதியாகவே இந்த நூல் அமைகிறது. இது வெறும் காதல் கவிதைகள் அல்ல. காதலுக்கூடாக எமது மண்ணைப் பற்றியும், எமது பெருமை பற்றியும், எமது தொன்மம் பற்றியும் பேசும் நூலாகும். அத்துடன் 2023 இல் எனது "அன்பின் முத்தங்கள்" என்ற கவிதை நூலும் 'பொஞ்சியூ பிலாத்து" என்ற குறுநாவலும் வெளிவரும்.


கலை இலக்கியத் துறையில் உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த பாராட்டுக்கள், கௌரவங்கள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

பல கலை இலக்கியப் போட்டிகளில் பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களிலும் விருதுகள் பெற்றுள்ளேன். பாடசாலை காலத்தில் இருந்து விருதுகளை வரிசைப் படுத்தினால் இந்த நேர்காணலைப் போல் அது இன்னுமொரு நேர்காணலாக நீண்டுவிடும். ஆனாலும் ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன். 

1) 2014 இல் கதிரவன் கலைக் கழகம் லண்டன் அம்மா நிறுவனத்துடன் நடாத்திய விருது விழாவில் இயக்குனர் பாரதி ராஜாவினால் விருது வழங்கப்பட்டது.

2) 2015 இல் தடாகம் பன்னாட்டு நிறுவனம், மலேசியா தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், கனடா  படைப்பாளிகள் நிறுவனம் இணைந்து நடாத்திய விழாவில் "தமிழ்மணி" விருது வழங்கப்பட்டது.

3) 2019 இல் எனது பரசுராம பூமி சிறுகதைத் தொகுப்புக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருது

4) 2019 இல் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம், மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் மனோ கணேசன் வழங்கிய 'கலைச்சுடர்" விருது.

எனக்கு கிடைத்த முக்கியமான விருதுகளை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளேன். கலை இலக்கியப் போட்டிகளில் பெற்ற பரிசில்களைக் குறிப்பிடவில்லை. பொதுவாக பல கலை இலக்கிய போட்டிகளில் பரிசில்களைப் பெற்றுள்ளேன். அவற்றை முழுமையாகக் குறிப்பிட இந்த நேர்காணல் பக்கங்கள் இடம் தராது என்று நினைக்கின்றேன்.


இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீகள்?

கலை இலக்கிய உலகில் அறிவுரைகள் தேவையில்லை. தேடலே முக்கியம். நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கும் மாணவனே. கலை இலக்கியம் மட்டுமல்ல எந்தத் துறையிலும் தொடர்ந்து இயங்குதலே முக்கியம். விமர்சனங்களை புறந்தள்ளி தொடர்ந்து இயங்குதல் முக்கியமானது. இங்கும் தக்கன பிழைக்கும் தகாதன மறையும்.  


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment