எழுத்தாளர் சூசை எட்வேட் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகம், பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிய தகவல்களை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?
எனது சொந்தப் பெயரே சூசை எட்வேட் தான். சொந்த இடம் திருகோணமலை. விவாக சம்பந்தம் யாழ்ப்பாணம். அங்கும் சில காலம் வாழ்ந்திருக்கிறேன். திருமலை சென் சேவியர் பாடசாலையில் கல்வி கற்றேன். க.பொ.த. சாதாரண தரத்தில் திறமைச் சித்தியடைந்தேன். உயர் தரத்திலும் சேர்ந்து படித்தேன். மூன்று நான்கு புத்தகங்களையே உருப்போட்டுப் படிக்கும் கல்வி முறை எனக்கு அலுப்புத் தட்டியது. பின்னர் என் தந்தையாரின் சிகையலங்கரிப்பு நிலையத்தில் தொழில் பழகி நானுமொரு சிகையலங்கரிப்பாளன் ஆனேன்.
உங்களுக்கு இலக்கியத் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?
நான் சிறுவனாக இருந்தபோது அம்மாவின் சகோதரரங்களின் குடும்பங்களும் அங்கு இருந்தனர். படித்தவர்கள், நூல்களை வாசிப்பவர்களும் அங்கிருந்தார்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகள், அம்புலி மாமாவிலிருந்து ஆனந்த விகடன், கல்கி, குமுதம் என்று இலக்கிய இதழ்கள் வந்து குவியும். வாசிகசாலைக்குப் போயும் வாசிக்கும் பழக்கமும் எனக்கு இருந்தது. அந்த வாசிப்புகளின் மீதான ஈர்ப்பே எனது இலக்கிய ஆர்வத்துக்குக் காரணமாக அமைந்தது.
உங்களிடையே வாசிப்புப் பழக்கம்; எப்படித் தொடங்கியது?
எமக்குப் பிடித்த ஆசிரியர் தன் சுய முயற்சியால் நூல்களை சேகரித்து பாடசாலையில் நூல் நிலையத்தை சிறிதளவாக ஆரம்பித்தார். எம்மை வாசிக்கத் தூண்டினார். அவர் ஒரு நாள் படிப்பிக்கும் போது, ஒரு கதை சொன்னார். அப்போது அவர், ஷஷபேரறிஞர் பேர்னாட்ஷா இளம் பராயத்திலேயே நாளாந்தம் ஐந்து பக்கம் எழுதிவிட்டுத்தான் சாப்பிட, தூங்கப் போவாராம். அப்படி எழுதி எழுதி பயிற்சி பெற்றுத்தான் அவர் உலகமே போற்றும் பேரறிஞர் ஆனார்|| என்ற தகவலைச் சொன்னார். இது என் நெஞ்சில் தடம் பதித்தது. அவ்வாறே நானும் எழுதிப் பயன் பெற்று வந்தேன். அந்தப் பழக்கமே இந்தளவாவது என்னை உயர்த்திவிட்டது.
உங்களை இத்துறையில் ஊக்குவித்தவர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
படிப்பை கைவிட்ட பிறகு நான் திருமலை நூல் நிலையத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டேன். நூல் நிலையத்தில் அங்கத்தவராக சேர்ந்து, புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து வாசிப்பதிலும் ஆர்வமாயிருந்தேன். அப்போது திரு. அரியநாயகம் நூலகப் பொறுப்பாளராக இருந்தார். அந்தக் காலத்தில் அவரின் சிறுகதைகள் பத்திரிகைகளில் அடிக்கடி வரும். அவர் நன்கு பிரபலமாகியிருந்தார். நான் அடிக்கடி நூல் நிலையம் வருவதும் புத்தகங்கள் எடுப்பதும் படிப்பதுமாக இருப்பதால் என்னில் அவருக்கும், அவரில் எனக்கும் ஒரு ஈர்ப்பு, பிடிப்பு ஏற்பட்டு சினேகிதமாகியது. அவர்தான் எனக்கு நல்ல எழுத்தாளர்களை, கதாசிரியர்களை அறிமுகப்படுத்தி என்னை முதன் முதலில் ஊக்குவித்தார். என்னோடு பழகிய அனுபவத்தில் அவர் ஒரு நாள் என்னிடம், "நீயும் ஒரு நாள் பெரிய எழுத்தாளனாவாய்" என்று சொன்னார். அப்போது நான் கட்டைக் கால்ச் சட்டைதான் போட்டிருந்தேன்.
இலக்கிய நூல்களை தீவிர வாசிப்புக்கு உட்படுத்தி வரும் நீங்கள், உங்களை மிகவும் கவர்ந்த நூலாக எந்த நூலைக் குறிப்பிடுவீர்கள்? அந்த நூலைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
நான் சின்ன வயதிலிருந்து முதுமைப் பிராயத்திலும் நூல்களை வாசித்து வருபவன்தான். ஆனால் திருக்குறள், நாலடியார், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்று சித்தர் பாடவென்று நம் பழந்தமிழ் புலவர்கள் எழுதி வைத்தது போன்று நம் தலைமுறையில் எத்தனை எத்தனை வெளியீடுகள் செய்தாலும் அவைகளுக்கு கிட்ட நிற்க முடியாது. காலம் கடந்தும் வாழும் இலக்கியங்கள் அவைதாம்.
நான் வாசிக்கும் காலத்தில் கூடுதலாக டாக்டர். மு. வரதனாரின் கதைகளையே விரும்பி வாசிப்பேன். அவர் கருத்தில்லாமல் ஒரு கதையும் எழுத மாட்டார். நானும் கருத்தில்லாமல் ஒரு கதையும் எழுதுவதில்லை. அவருக்கு கருத்துப் பிரசாரம் செய்பவர் என்ற ஒரு குற்றச் சாட்டும் உண்டு.
நீங்கள் இதுவரை எழுதிய சிறுகதைகள் பற்றி பொதுவாகக் குறிப்பிடுங்கள்?
என்னைப் பொறுத்தவரையில் வெறும் பொழுது போக்குக்காக, உல்லாச சல்லாபங்களுக்காக ஒரு கதையும் எழுதமாட்டேன். மக்களின் நல் வாழ்வுக்கான கருத்துக்களை இருத்தியே கதைகளை எழுதி வருகிறேன். சுமார் 20 வருடங்களாக 200 சிறுகதைகளுக்கும் மேல் எழுதியிருக்கின்றேன். அத்தனையும் எங்கள் மக்களின் துயரங்களையும் பிரச்சினைகளையும் சொல்லி, அதற்கான காரணங்களையும் சொல்லி, எல்லாவற்றையும் தீர்க்கும் வழிமுறைகளையும் சொல்லியே எனது கதைகளை சித்தரித்து வருகிறேன். இதற்குமேலும், தான் எழுதிய சிறுகதைகளைப் பற்றி அந்தக் கதாசிரியரே சொல்வதைவிட வாசகர்களின் அபிப்பிராயத்துக்கே அதனை விட்டு விடுகிறேன்.
சிறுகதைகளை எழுதும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது, ஷஷஆண்டவா! மக்கள் நல் வாழ்வுக்காக நல்லதைச் சொல்ல எனக்கு அருள் தாரும்|| என்று வேண்டிக் கொண்டே எழுத ஆரம்பிப்பேன். ஷஷமனம் ஒரு நிலைப்படும்|| என்றும் உச்சரித்துக்கொள்வேன்.
இதுவரை வெளிவந்த உங்கள் நூல் அறுவடைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
'கருத்துக் கலசம்' (2010) இது ஈற்றிசை வெண்பாவில் (குறள் நடை) எழுதியது. இந்த நூலில் ஆயிரத்து நூறு பாக்கள் உள்ளன. வாழ்க்கை அனுபவத்தால் அவ்வப்போது தோன்றும் கருத்துக்களைக் குறித்து வைத்து எழுதியவை.
'இவன்தான் மனிதன்' (2013) என்னும் சிறுகதைத் தொகுதியையும் 'இங்கு வீசியது ஒரு சமாதான காற்று' (2019) எனும் தொகுதியையும் வெளியீடு செய்துள்ளேன். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த சிறுகதைகளே இந்த இரண்டு நூல்களிலும் இடம் பிடித்துள்ளன. இதுவரை நான் எழுதி வைத்துள்ள கதைகளில் கால் பகுதிக்கும் குறைவானவைதான் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. அப்படிப் பிரசுரமானவற்றில் கால் பகுதிக்கும் குறைவானவையே நூலுருப் பெற்றுள்ளன. அச்சிடப்பட்ட எனது நூல்களும் தேங்கிக் கிடக்கின்றன. இதுவே என் பலவீனமான நிலையாகும்.
'கருத்துக் கலசம்' நூல் பற்றி விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?
இந்த உலகத்திலே மக்கள் வாழ்வு நலன் சார்ந்த அறிவு பூர்வமான நல் கருத்துக்;களை ஏழு சொற்களில் எழுதி முதல் தரமான சாதனை படைத்தவர் திருவள்ளுவர் தான். எனக்குக் கிடைத்த அனுபவங்களாலும், கற்ற அறிவுரைகளாலும், பொன் மொழிகளாலும் பெறப்பட்ட கருத்துக்கள் என் சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றை அவ்வப்போது குறித்து வைப்பேன். அப்படிக் குறித்து வைத்தவை தான் \கருத்துக் கலசம்\ ஆக உருவானது. இந்த நூலில் உள்ள ஈற்றிசை வெண்பாக்கள் (குறள் நடை), ஷநீங்களும் எழுதலாம்| கவிதை இதழிலேதான் கூடுதலாக வெளிவந்துள்ளது. இதே பாணியில் இன்னும் எழுதி வருகிறேன். விரைவில் இதே பாணியில் இன்னொரு நூல் வெளியீடு வரும் என்று சொல்லலாம்.
"இவன்தான் மனிதன்'" என்ற சிறுகதை நூலில் உள்ளடக்கம் பெற்றுள்ள கதைக் கருக்கள் பற்றி சுருக்கமாகக் கூறுங்கள்?
நான் யாழ்ப்பாணத்தில் குடியிருந்த போது பெற்ற அனுபவங்களால் எழுந்த சிறுகதைகளே இதில் அதிகமாக இந்த நூலில் இடம் பிடித்துள்ளன. ஈழத் தமிழரின் கலாசார பூமி யாழ்ப்பாணம்தான். இது நன்கு படித்தவர்கள், பெரிய மனிதர்கள் உள்ள இடம். ஆனால் அங்குள்ளவர்கள் சாதிக் கொடுமையை ஒழிக்கவியலாமல் இன்னமும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவன்தான் மனிதன் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகளில் அனேகமானவை யாழ்ப்பாண சூழ்நிலையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும்.
"இங்கு வீசியது ஒரு சமாதானக் காற்று" சிறுகதைத் தொகுதி பற்றியும் குறிப்பிடுங்கள்?
நான் திருகோணமலை வந்த பின்னர் தான் எழுத்தாளனானேன். இந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளவை பெரும்பாலும் திருகோணமலைச் சூழலைச் சார்ந்தவையே. மூவின மக்களும் சேர்ந்து வாழும் இடம் திருகோணமலை. எனவே சமாதானம், ஐக்கியத்தை வலியுறுத்தி எழுதிய கதைகளையே, ஷஇங்கு வீசியது ஒரு சமாதானக் காற்று| என்ற இந்தச் சிறுகதை நூலில் சேர்த்துள்ளேன்.
சமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உங்கள் சிறுகதை முலம் குரல் கொடுப்பதாக அறிகின்றேன். அது பற்றியும் சொல்லலாமே?
இனவாத அரசுகளால் சிறுபான்மை இனங்கள் பாதிப்புறுகின்றன. அதற்காகக் கிளர்த்தெழும் இயக்கங்கள், கட்சிகள் தமக்குள் ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு அடிபட்டு பலவீனமாகின்றன. எந்தப் போராட்டமும் பயனின்றி போகின்றன. சமுகத்துக்கு விமோசனம் கிடைப்பதாயில்லை. எது எப்படி இருந்தாலும் சமுகத் தலைவர்களாயிருந்தாலென்ன, சாதாரண பொதுமகனாயிருந்தாலென்ன அவர்கள் ஒருவருக்கொருவர் நல்லெண்ணமாய், மனத் தூய்மையாய் இருந்தாலே போதும். இதனாலே மனிதர்கள் எல்லாம், சமூகங்கன் எல்லாம் சுவீட்சம் பெற முடியும். என் எழுத்தின் ஆதார சுருதியே இதுதான்.
உங்களுடைய படைப்புகள் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன? அது உங்களுக்குத் திருப்தி அளிக்கின்றதா?
எந்தப் படைப்பாளியும் தனது ஆக்கங்களைக் குறைவாக மதிப்பிடவே மாட்டான். குறை சொன்னால் சினப் படவும் செய்வான். இந்தப் பலவீனம் என்னிடமும் தொற்றிக்கொள்ளாமல் இல்லை. என்னை சுதாகரித்து மற்றவரின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பளித்து இன்னும் என்னை நான், புனர் நிர்மாணம் செய்துதான் வருகிறேன். இதுவரை எழுதி வெளியாகிய ஆக்கங்களைவிட சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே உள்ளேன். என்றாலும் நான் எழுதிக் குவித்தவற்றில் பெரும்பாலானவை இன்னும் பிரசுரிக்கப்படாமல், வெளியீடு செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் காலப்போக்கில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்து, வெளியீடு செய்து அறிமுகமாக்கினாலே போதும், எனக்கு ஆத்ம திருப்தி ஏற்பட்டுவிடும்.
ஒரு சிறுகதையின் மையக் கருவாக எவற்றையெல்லாம் நீங்கள் கருதுகிறீர்கள்?
நான் கட்சி கொள்கைக் கோட்பாட்டு ரீதியில் நின்று ஒரு பக்கச் சார்பாக எழுதுபவனல்ல. மக்களின் மேலான வாழ்வுக்காக எனக்குத் தெரிந்த சிறந்த கருத்துக்களை மையப்படுத்தியே ஆக்கங்களைப் படைக்கிறேன். அவற்றையே வாசகர்கள் எனது கதைகளில் காண முடியும்.
புற உணர்வுகளை விட அக உணர்வுகளை அதிகமாகப் பேசும் கதா பாத்திரங்களை உங்கள் சிறுகதைகளில் அதிகமாகக் காணலாமே. இதற்கான விசேட காரணம் என்ன?
சகல சீவராசிகளிலும் மனிதனுக்கு மட்டுமே மனம் உண்டு. ஒவ்வொரு மனிதனும் மனதாலேயே வாழ்கிறான். சிந்தனை இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரான். அனேகர் தம் எதிரிகளைப் போட்டி பொறாமையின் அடிப்படையில், கஷ்ட துன்பங்களின் அடிப்படையிலேயே நினைவுகளால் இழுபட்டு வாழ்கின்றனர். இந்த நினைவலைகளே மனம் போல வாழ்வென்று அவர்கள் வாழ்வை தீர்மானித்து குப்பைத் தொட்டியாக்கும். ஆகையால்தான் நற்சிந்தனையோடும் நல்ல அக உணர்வுகளோடும் இருந்தால்தான் சீராக வாழலாம். எனவே நான் அக உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை எழுதி வருகிறேன்.
அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள நீங்கள் நாவல்களையும் எழுதலாமே. இதுவரை ஏன் நாவல்கள் எழுதுவது பற்றி சிந்தித்துப் பார்க்கவில்லை?
ஒவ்வொரு சிறுகதைகளிலுமே பல்வேறு விதமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகள் மற்றும் நல்லாலோசனைகளையும் சொல்லி வருகிறேன். இதுவே எனக்குத் திருப்தியாகிறது. ஆகையால் நாவல் எழுதுவது பற்றி நான் இதுவரை சிந்திக்கவில்லை. இனிமேல்த்தான் அதில் கவனம் எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் பார்க்கலாம்.
இப்போதுள்ள சில இலக்கியக் குழுக்களின் செயற்பாடுகள் சமூக மாற்றத்திற்கு எந்தளவில் பங்களிப்புக்களைச் செய்து வருவதாக நினைக்கிறீர்கள்? இலக்கியக் குழுக்களின் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?
இப்போதுள்ள இலக்கியக் குழுக்களானது கட்சி மற்றும் கொள்கைக் கோட்பாட்டு ரீதியில்த்தான் இயங்கி வருகின்றன. அவை பெரும்பாலும் தங்களைச் சார்ந்தவர்களை மட்டுமே வளர்த்து, புகழடையச் செய்கின்றன. இலக்கியவாதியாக இருந்தாலென்ன, குழுவாக இருந்தாலென்ன, அவை நடுநிலமையில் நின்று இயங்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான இலக்கியச் சேவையாகும் என்பதே எனது கருத்து.
உங்களது தற்போதய இலக்கிய முயற்சி பற்றி?
எழுதிக் கொண்டே இருக்கின்றேன். ஆனால் எழுதிக் குவித்தவைகளை பிரசுரமாக்குவது, நூலுருவாக்குவது போன்ற விடயங்களில் பெரும் சிக்கலில், பலவீனத்தில் உள்ளேன். எந்தவிதமான இலக்கியக் குழுக்களிலும் எனக்கு உதவுவார் இல்லை.
இந்தக் கொரோனாக் காலத்தில் இலக்கிய நூல் பதிப்புச் செயற்பாடுகள் எப்படி உள்ளது?
கொரோனாத் தாக்கம் எந்த மனிதரையும் விட்டு வைக்கவில்லையே. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மட்டும் எப்படித் தப்ப முடியும்? எழுதிய பல சிறுகதைகளை பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் அனுப்பவே படாதபாடு படவேண்டி இருக்கிறது. அவைகளும் சிரமத்துக்குள்ளாகி மிகவும் தாமதித்தே பிரசுரிக்கிறார்கள். இப்போதெல்லாம் இலக்கிய ஆக்கங்கள் வெளிவருவதே அருமையாகிவிட்டது.
புத்தகக் கண்காட்சிகளும் அவ்வப்போது நடைபெற்று வருவதாகவே அறிகிறேன். இந்த கண்காட்சிகளில் புத்தகங்களும் விற்பனையாவது தெரிகிறது. வாசகர்களது இரசனை எந்த மட்டத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?
புத்தகக் கண்காட்சி பற்றி குறிப்பிட்டீர்கள். இவையெல்லாம் எனக்கு எட்டாக் கனியே ஆகும். வாசகர்களின் தற்போதைய இரசனையும் எம் போன்றவர்களைவிட்டு எட்டியே போய்விட்டன. இப்போதெல்லாம் தொலைக்காட்சி, இணையத்தளம், முகநூல். என்று இளைய தலைமுறையின் இரசனை அதற்குத் தாவிப் போய்விட்டது. ஒரு புத்தகத்தை எடுத்து பொறுமையாக இருந்து வாசிப்பார் இல்லை. இந்த நிலையில் ஆக்க இலக்கியப் படைப்பாளிகளின் நிலை சங்கடம்தான். ஆனாலும் ஷபுத்தகம்தான் காலம் கடந்தும் வாழும்| என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.
நீங்கள் ஆக்கங்களை எழுதுவது, புத்தகங்களை வாசிப்பது இவற்றையெல்லாம் உங்களது வீட்டார்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?
வயதான காலத்தில் நானும் மனைவியும் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறோம். என் மனைவி ஆக்கிப் படைத்து, வேளா வேளைக்கு சாப்பாடு தந்து போசிப்பா. நான் நிம்மதியாக இருந்து வாசிக்கிறேன்;, எழுதுகிறேன், இலக்கியப் பணி புரிகிறேன்.
மற்ற எழுத்தாளர்களோடு உங்களுக்குத் தோழமையான உறவுகள் இருக்கிறதா? அவர்களது படைப்புகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
மற்ற எழுத்தாளர்களோடும், படைப்பாளிகளோடும் எனக்குச் சுமூகமான உறவுண்டு. யாரையும் விரோதித்துக்கொள்ள நான் விரும்புவதில்லை. ஒரு படைப்பாளி எவ்வளவு பாடுபட்டு ஆக்கங்களை ஆக்கி அளிக்கிறான் என்று எனக்குத் தெரியும். குறை சொல்லி மனதைக் காயப்படுத்தலாகாது. ஓவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் எழுதுவார்கள். அதைக் குறை சொல்ல நமக்கென்ன தகுதி இருக்கிறது? நமக்கு மட்டும் எல்லாம் தெரிந்த மேதையென்ற நினைப்பா!
உங்கள் இலக்கிய நண்பர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?
'நீங்களும் எழுதலாம்' கவிதை இதழாசிரியரோடு பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நல்லுறவுண்டு. அவர் இதழை ஆரம்பித்ததிலிருந்கே ஷதெருக் குரல்| என்னும் தலைப்பில் என் ஈற்றிசை வெண்பாவை தவறாமல் வெளியீடு செய்து வருகிறார். அதுவே காலப்போக்கில் கருத்துக் கலசம் நூலாகியது. அவர்தான் என்னை முதல் முதலாக மேடையேற்றி கௌரவிப்புச் செய்திருக்கிறார். அடிக்கடி சந்தித்து கலந்துரையாடுவார்.
அடுத்ததாக கவிஞர் செ. ஞானராசாவைக் குறிப்பிட வேண்டும். அவர் அடிக்கடி என்னைத் தேடி வந்து இலக்கியம் பற்றியும் உலக நடப்புகள் பற்றியும் கலந்துரையாடிச் செல்வார். நல்லாலோசனைகளும் சொல்வார். அவரோடு சேர்ந்து நல்ல ஆராய்ச்சி நூல்கள் எழுதிய திரு. சரவணபவன் அவர்களும் வந்து கலந்துரையாடுவார். இந்த இருவரும் சேர்ந்து இங்கே அன்புவளிபுரம் வாசிகசாலையால் எனக்கு கௌரவிப்புச் செய்திருக்கிறார்கள்.
அத்துடன் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்கள் தனது மாத வெளியீடான ஞானம் இதழில் எனது அதிகமான சிறுகதைகளைப் பிரசுரமாக்கியிருக்கிறார். அட்டைப் பட அதிதியாக்கி என்னை கௌரவித்திருக்கிறார். தொலைபேசியின் ஊடாக நல்லாலோசனைகளைச் சொல்வார்.
அடுத்ததாக 'பூங்காவனம்' சஞ்சிகை ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் ஒவ்வொரு இதழிலும் எனது கதைகளைப் பிரசுரித்து, எனக்கு ஊக்கம் கொடுத்து வருகிறார். இப்போது இந்த நேர்காணலைச் செய்து என்னை வெளியுலகுக்கு அறிமுகமாக்கியிருக்கிறார். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
தற்காலத்தில் வெளிவரும் படைப்புகளின் தரம் பற்றி என்ன சொல்வீர்கள்?
தற்கால வாழ்க்கையே நவீன சாதனங்களால் மற்றும் கருவிகளால்த்தான் இயங்கி வருகின்றது. இளம் மட்டங்கள் உல்லாச சல்லாபங்களைத் தேடி வாழ்கின்றார்கள். தற்கால படைப்பாளிகளும் அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தே எழுதுகிறார்கள். காலத்துக்கேற்ற மாதிரியாகப் படைக்க வேண்டும்தான். ஆனால் நீதி, நியாயம், தர்மம் என்றும் வாழ வேண்டியது கட்டாயமான ஒரு விடயமாக இருக்கிறது. அதன் வழியில் நின்று பிசகாமல் எழுதவும் வேண்டும். நம் பழந் தமிழ் இலக்கியங்களின் வழிகாட்டலை மறக்காமல் இருக்க வேண்டும்.
கலை இலக்கியத் துறையில் இதுவரை உங்கள் படைப்புகளுக்குக் கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?
எனக்கு வித்தகர் விருது, முதல்வர் விருது, கலாபூஷணம் விருது போன்றவை கிடைத்துள்ளன. இவைதவிர கௌரவிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. விருதுகளைத் தேடி நான் ஒருபோதும் அலைவதில்லை. இலக்கிய உலகம் என்னை எங்கே வைக்குமோ அங்கே வைக்கட்டும்.
உங்களது அடுத்த நூல் வெளியீட்டை விரைவில் எதிர்பார்க்க முடியுமா?
நான் வயதான காலத்தில் தனித்திருந்து எழுதி வருகிறேன். எழுதியவற்றில் கால் பகுதி கூட ஊடகங்களில் பிரசுரமாகவில்லை. ஒரு கதையை பிரசுரமாக்கவே படாதபாடு படவேண்டியிருக்கிறது. இந்த இலட்சணத்தில் அடுத்த நூல் வெளியீட்டை இப்போது நினைத்துப் பார்க்கவியலாமல் இருக்கிறது. எதிர்காலத்தில் பார்க்கலாம்.
இன்றைய இனந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு கூற விரும்புவது?
அவர்கள் நவீன காலத்துக்குரிய முறையில் எழுதி வருகிறார்கள். ஆனால் பழந்தமிழ் எழுத்தாளர்களை; வழிகாட்டியாய் கொள்ள மறவாதீர்கள். நீதியின் பக்கம் தர்மத்தின் பக்கம் சார்ந்து நிற்கட்டும் அவர்களது படைப்பு. ஒரு கதையோ, கவிதையோ எழுதி அனுப்பி அது பிரசுரமான பின்னரே அடுத்ததை எழுதுவதாக இருந்தால் உங்கள் ஆற்றல் வளராது. அதற்கு நா'ளாந்தம் பயிற்சி வேண்டும். அப்போது தான் ஆற்றல் வளரும். இது சம்பந்தமாக 'கருத்துக் கலசத்தில்' இருக்கும் ஒரு கவிதையைத் தருகிறேன்.
'முயற்சி பயிற்சி அயர்ச்சியின்றி இருந்தால்
உயர்ச்சி உச்சத்தில் இருக்கும்'.
இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வெறும் புகழுக்காக அதையும் இதையும் எழுதக் கூடாது. மக்கள் வாழ்வு மேம்பட தர்மம் நீதியின் அடிப்படையில் நின்று எழுத வேண்டும். எழுத்தாளர்கள் உட்பட சாதாரண மக்கள் வரை ஷமனம் போல வாழ்வு| என்ற பழமொழியைப் பின்பற்றினாலே போதும், சுபீட்சம் பெறலாம்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்





No comments:
Post a Comment