கவிஞர் மூதூர் கலைமேகம் (ஏ.எஸ். இப்றாகீம்) அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?
நான் மூதூர் கலைமேகம் எனும் பெயரில் எழுதும் ஏ.எஸ். இப்றாகீம், முத்துக் குளிக்கும் மூதூர் என்னும் கிராமத்தில் 1943.07.09 ஆம் திகதி பிறந்தேன். எனது சிறுபராயத்தில் என் தந்தை இறந்த பிறகு என் வளர்ப்புத் தாயின் அனுசரணையில் வளர்ந்தேன். மூதூர் அன்றைய முஸ்லிம் மகா வித்தியாலயம் இன்றைய தேசிய கல்லூரியில் ஆரம்பக் கல்வியை உயர்தரம் வரை கற்க முடியாத நிலையில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு, இடைநிலைக் கல்வியை 03 ஆண்டு காலம் வரை கொழும்பு றோகண வித்தியாலயத்தில் தபால் மூலம் கற்றேன். இப்படி கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற ரீதியில் எழுந்தே சீவியம் எழிமையே வாழ்க்கை என்றே தாரக மந்திரத்துடன் தற்போது வரை இயங்கிக்கொண்டிருக்கின்றேன்.தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான குடும்பப் பின்னணி, இளமைப் பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்?
எனது குடும்பப் பின்னனியை உற்று நோக்கும் போது எனது தந்தையின் தந்தை ஒரு புலவராகும். இவர் இந்திய நாட்டின் காயல் பட்டினத்ததில் பிறந்து வாழ்ந்தவரன்றாலும் மூதூரில் மறுதாரமாக எனது வாப்பும்மாவைத் திருமணம் செய்து இங்கும் வாழ்ந்திருக்கிறார். இவர் பெயர் கலிபா சாகிபு ஆகும். அந்தவகையில் புலவர் பரம்பரையில் தோன்றிய நானும் இன்று இலங்கையில் பேசப்படும் ஒரு கவிஞனாக மிளிர்கிறேன்.
உங்களது தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?
எனது தொழில் என்று பார்க்கும் போது அது பல்வேறு வகையான தொழில்களாகவே அமைந்தது. அதிலும் விவசாயம் மற்றும் வியாபாரம் போன்றவை குறிப்பிடடுச் சொல்லக் கூடியது.
உங்களது முதற்படைப்பு எப்போது எதில் வெளியானது? அந்தப் படைப்பு பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்?
எனது முதல் படைப்பு தினகரன் சிறுவர் மலர், இளைஞர் உலகம் போன்ற பகுதிகளில் 1962 ஆண்டுகளில் சிறுபடைப்பாக வெளிவந்தது. இதன் பிற்பாடு இலங்கை தேசிய பத்திரிகையான தினபதி கவிதா மண்டலப் பகுதியில் பிரபல கவிஞர் ஈழமேகம் அவர்களின் சிபாரிசில் பிரசுரம் பெற்றது. முதல் கவிதையான பைங்கிளியே என்ற தலைப்பில் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஏராளமான கவிதைகள் எழுத நேர்ந்தது. இப்படிப்பட்ட முதுகவிஞர்களின் வழிகாட்டல்கள்தான் என்போன்ற கவிஞர்கள் உதயமாவதற்குக் காரணமாக அமைந்தது. 1967 இல் பைங்கிளியே என்ற கவிதை எனது முதல் கன்னிப் படைப்பாகும்.'மூதூர் கலைமேகம்' இந்தப் புனைப் பெயரை எப்படித் தேர்வு செய்தீர்கள்? புனைப் பெயரின் பின்னணியை அறிந்துகொள்ளவே இதனைக் கேட்டேன்?
கலைமேகம் என்ற புனைப் பெயர் திருமலை வள்ளுவர் கலை வட்டம் 1969 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் மனித வாழ்க்கை என்ற தலைப்பில் முதலாம் இடத்தைப் பெற்றதையிட்டு கலைமேகம் என்ற விருது வழங்கப்பட்டது. இதன்பிறகு தொடர்ந்து எனது ஆக்கங்கள் யாவும் மூதூர் கலைமேகம் என்ற பேரில் இடம்பெற்று இன்று வரை நிலைத்து நிற்கின்றன எனலாம்.
நீங்கள் எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகிறீர்கள்?
நான் அனேகமாக கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆகிய முத்துறைகளும் என்னைக் கவர்ந்தனவாகும். ஆகவே தான் இந்த இலக்கியத் துறைகளைத் தேர்ந்தெடுத்தேன். இதுவரை 30 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஆயிரத்துக்கும் அதிகமான மரபுக் கவிதைகள் போன்றவற்றைப் படைத்துள்ளேன். அத்தோடு காவியம், நாடகம் எனவும் எழுதியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உங்களைக் கவிதை எழுதத் தூண்டிய சம்பவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
என்னைக் கவிதை எழுதத் தூண்டிய சம்பவம் அதாவது 1956 இல் எமது பகுதி 6 ஆம் வட்டாரத்தில் படித்த வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அமைத்த சங்கமானது சமூகசேவை, விளையாட்டு, வாசிகசாலை போன்ற பணிகளை ஆரம்பித்து இக்பால் சனசமூக நிலையம் என்ற பெயரிட்டு 25 வருட காலம் இயங்கியது. அதில் நானும் உறுப்பினராக இணைந்து நூலகர் பதவியை எடுத்து அதன் மூலம் பல வாசகர்களை உருவாக்கினேன். நானும் வாசிப்பை மேற்கொண்டு கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், நாவல்கள் என்று வார, மாத சஞ்சிகைகளை வாசித்து இன்று ஒரு கலை இலக்கியவாதியாக வளர்ந்துள்ளேன். வாசிப்பே உயிர் மூச்சு. அதன் நேசிப்பே எழுத்து வன்மை. இதுவே நான் என்னை எழுத்தாளராக ஆகுவதற்குக் காரணமாக அமைந்தது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள நீங்கள் ஒரு சிறந்த கவிதை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வீர்கள்?
பல கவிதைகளை எழுதிய நான் ஒரு சிறந்த கவிதை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்கும் போது அது முதலில் கவிதை கவிதையாகயிருக்க வேண்டும் என்றே கூறுகிறேன். அத்துடன் ஓசை, நயம், எதுகை, மோனை, அணிநடை என்ற அம்சங்கள் கவிதையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கவிதை உருவாகும். வாசிக்க ஆசை ஏற்படும். இத்தன்மை இல்லாத எந்தக் கவிதையும் கவிதையாக இருக்கவே முடியாது.
காதல் கவிதைகளை எண்ணிக்கையில் அதிகமாக எழுதியிருக்கிறீர்களே. இதற்கான காரணம் என்ன?
மனித வாழ்க்கையில் காதலும் ஒரு அம்சமாககத் திணிக்கப்பட்டுள்ளது. கல்யானத்துக்கு முன் காதல் புரிவதும் கல்யாணம் செய்த பின்னர் காதல் புரிவதும் கண்ணியமான முறை என அக்கால நடிகர் என் எஸ் கிருஸ்ணண் ஒரு முறை கூறியுள்ளார். ஆகவே காதலுக்கு முக்கியத்துவம் வழங்குவது தவறில்லை என்றே நான் கூறுவேன். இருமனம் கலந்தால் திருமணம் நிறைவேறும். எனவே காதலும் வளர வேண்டும் கண்ணியமும் நிறைய வேண்டும் என்பதே நான் கண்ட காரணமாகும்.
மரபுக் கவிதைகளை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்வது மாதிரி புதுக் கவிதைகளை நினைவில் நிறுத்திக்கொள்ள முடியுமா?
மரபுக் கவிதைகள் மனதில் நிச்சயம் பதியக் கூடியதாக இருக்கும். கவிஞர் கண்ணதாசன் பாரதியார் போன்றோரின் கவிதைகள், பாடல்கள், இன்றும் என்றும். மரபுதான் நினைவலையாக இருப்பதற்குச் சான்றாக அமைகிறது. இந்த அடிப்படையில்தான் நானும் ஏராளமான கவிதைகளை மரபு சார்ந்து எழுதுவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். தற்போதைய புதுக் கவிதைகளை மனதில் வைப்பது முடியாத காரியமாகும். என்னைப் பொறுத்தமட்டில் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் புதுக் கவிதை எனச்சொல்லி புது மொழிகள் சில வளர்கிறது. கவித்துவம் காணாதவர்கள் கூடிவிட்டார்கள் புதுக் கவிதையும் இதுபோல் பெருகிவிட்டது. எனவே இனிவரும் காலந்தான் மரபா புதுமையா? என்பதற்குப் பதில் சொல்லும். காத்திருப்போம்.
இதுவரை வெளிவந்த உங்களது நூல் அறுவடைகள் பற்றிச் சொல்லுங்கள்?
இதுவரை நான் வெளியிட்ட நூல்கள் இரண்டு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு காவியம் குறுந்தொகுப்பு நூல். இன்னும்மொன்று முத்துறை சார்ந்த ஒரு ஆவண நூல். அவையாவன:-
01. தங்கப் பாளம் - கவிதை (2003)
02. மகரந்தம் - கவிதை (2004)
03. வன்செயல் - காவியம் (2006)
04. கலைச்சரம் - ஆவண வகைத் தொகுப்பு (2022)
என்ற 04 நூல்களையே இதுவரை வெளியுட்டுள்ளேன். இதுவே எனது நூல் அறுவடைகளாகும்.
தங்கப் பாளம் கவிதை நூல் பற்றி விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?
தங்கப் பாளம் நூல் பற்றி நான் கூறுவதன்றால் அது ஒரு பெரிய கதையாகும். அதாவது 50, 60 செய்யுள்கள் இறைந்த கவிதைகளை சேகரித்து வைத்திருந்த நான் இதனை நூல் உருவாக்க எண்ணி முயர்ச்சித்த வேளை நிதி இன்மையினால் நூல் வெளியிடாத நிலையில் தத்தளித்தபோது என்னைப் பற்றி நவமணியில் உடதலவின்னையைச் சேர்ந்த புன்னியாமீன் அவர்கள் கலைஞர் அறிமுகம் பகுதியில் பிரசுரித்த வேளை அவர்கள் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க தங்கப் பாளம் நூலில் உள்ள கவிதைகளை அவரிடம் ஓப்படைத்தேன். சில மாதங்களின் பின் புன்னியாமீன் அவர்கள் தாமாக முன்வந்து எனது கவிதைகளை தங்கப் பாளம் என்ற கவிதை நூலாக அச்சிட்டு, எனக்கு 500 நூல் பிரதிகள் அவர் செலவில் அன்பளிப்பு செய்தார். அதனை அவரின் ஊரிலும் வெளியிட்டு பின்னர் நானும் எனது ஊரான மூதூரிலும் வெளியிட்டேன். இதன் மூலம் எனக்குப் பாரிய வரவேற்பும் கிடைத்தது. இந்த மகிழ்சியான நிகழ்வு 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்றது.
மகரந்தம் கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
மகரந்தம் கவிதை நூலில் உள்ள கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுவதன்றால் இன்னும் ஒரு நூல் தயாரிக்க வேண்டும். என்றாலும் சுருக்கமாகக் கூறின் அதில் வரும் அம்சங்கள், சமூக கண்னோட்டம், காதல், தமிழ் வளர்ச்சி கல்வி, கலாசாரம் போன்றவற்றை மையமாகக் கொண்டது.
உங்களது கவிதைகள் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலொன்று கலைச்சரம் என்ற பெயரில் அண்மையில் வெளியிடப்பட்டதாக அறிகின்றேன். இந்த நூல் பற்றியும் குறிப்பிடுங்கள்?
எனது இறுதியாக வெளிவந்த சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய நூலே கலைச்சரம் என்பதாகும். இந்த நூல் கடந்த 2022 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அன்று எமது குடும்ப நலநிதியம் மதார் நம்பிக்கை நிதியத்தின் மூலம் அதன் தற்போதைய தலைவர் எம்.எம். றபீக் அவர்களின் விடாமுயற்சின் காரணமாக என்னை கௌவரவிக்கும் நோக்கதில் என்னால் கடந்த காலங்களில் எழுதி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட சில ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து மேற்குறிப்பிட்ட கலைச்சரம் நூல் வெளியிடப்பட்டது. இக்குடும்ப நல உறவுகள் இணைந்த இந்நிதியம் சுமார் 15 வருடங்கள் நிறையுற்று இயங்குகிறது. இது ஒரு முத்துறை சார்ந்த புதுமைப் படைப்பாகும். இதுவே இதன் சரிதமாகும்.
உங்கள் நூல்களுக்குக் கிடைத்த விமர்சனங்களாக எவற்றை முன் வைப்பீர்கள்?
நான் வெளிட்ட நூல்களில் வாசகர்கள் மத்தியில் இருந்து பாராட்டு விமர்சனங்களே பெரிதும் கிடைத்தன. கீழ்த்தரமாக எவரும் எனது நூல் பற்றிக் குறிப்பிடவில்லை. எனது நூல்கள் பெரும்பாலும் இலக்கியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவையாகும். ஆகவே வாசகர்களால் எனது நூல்கள்பெரிதும் வரவேற்கப்பட்டன.
நவீன வாழ்க்கையில் இவ்வளவு மாற்றங்களுக்குப் பிறகும் ஒரு கவிஞனுக்கும் இயற்கைக்கும் (நிலா, கடல், மழை, மரம்) இருக்கும் அல்லது உருவாகும் உறவு என்பது மட்டும் ஏன் அப்படியே இன்னும் மாறாமல் இருக்கிறது ?
நவீன வாழ்க்கையில் ஒரு கவிஞனுக்கும் இயற்கைக்கும் உள்ள ஒற்றுமை விளக்கப் போனால் கடலும் வானமும் எப்படி இனையாதோ அதுபோலவே என்றும் மாறாது அது அப்படியே இன்றும் இருக்கும். கவிஞனும் இயற்கைக்கும் உள்ள உறவு என்றுமே நிலைத்திருக்கும். இதனால்த்தான் இன்றும் இவை இரண்டும் சேர்ந்து இருப்பதற்குக் காரணமாகின்றது.
இயற்கையை கவிஞர்கள் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார்கள் என்ற சலிப்பு வாசகனுக்கு வந்துவிட்டதாக நினைக்கின்றேன். இதுபற்றி என்ன சொல்வீர்கள்?
இயற்கையோடு கலந்தவன்தான் கவிஞன். சுருக்கமாகக் கூறின் சந்திரனும் வெள்ளியும் எப்படி இனைந்து ஒழி பகர்கிறதோ அதுபோலவே இயற்கையும் கவிஞனும் இனைந்து சலிப்படையா பல்லாயிரக் கணக்கான கவிதைகளைப் படைக்கிறான். அந்தவகையில் இயற்கையில்லாது கவிதை இல்லை என்ற முடிவு நிச்சயம் உருவாகும். எனவே வாசகன் வளர வேண்டுமென்றால் கவிஞனையும் இயற்கையையும் நம்பித்தான் ஆகவேண்டும். இதுவே எனது அபிப்பிராயமாகும்.
இப்போதும் பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதுண்டா?
நான் பத்திரிகைகளில் சுமார் ஒரு வருட காலமாக எனது சுகயீனம் காரணமாக எழுத முடியாத நிலையில் இருந்ததால் அதனைச் சற்று நிறுத்திக்கொண்டேன். என்றாலும் அவ்வப்போது பிறரின் உதவிகொண்டு ஆக்கங்களைத் தயாரித்து இடையிடையே பிரசுரத்திற்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறேன்.
நீங்கள் எழுதிய சிறுகதைகள் குறித்தும் குறிப்பிடுங்கள்? சிறுகதைகளுக்கான கருப்பொருட்களை எப்படித் தேர்ந்தெடுக்கின்றீர்கள்?
நான் அதிகமாக கவிதைகளையே எழுதியுள்ளேன். சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் கணிசமாகக் குறைவாகவே படைத்துள்ளேன். சிறுகதைகளில் எனக்குள்ள மோகம் தான் இந்த அளவாவது படைக்க முடிந்தது. இதன் கருப்பொருட்கள் மனித நடைமுறையில் ஏற்படும் சம்பவங்கள் மனதைத் தொடும் போது இதன் சாராம்சத்தை கற்பனை கொண்டு எழுத முற்படுகின்றேன். எந்த எழுத்தாளனும் கருவைத் தெளிவாக சிறுகதைகளில் பதிய வைக்கிறார். இது ஒரு அனுபவ ரீதியான தன்மையைக் குறிக்கும். இந்த அடிப்படையில்தான் ஒரு சில சிறுகதைகளை என்னால் படைக்க நேர்ந்தது.
உங்களது எழுத்துக்களின் படி நிலை வளர்ச்சி பற்றிக் கூறுங்கள்?
நான் சிறுவயதிலிருந்தே வாசித்து பழக்கப்பட்டேன். அந்தவகையில் பல நூல்களை நுகர்ந்த படியால் எழுதும் நிலைக்கு உந்தப்பட்டேன். காலவட்டத்தில் அது ஒரு கலையாக வளர்ந்து. இன்று என்னை ஆட்கொண்டுவிட்டது. இதற்கு நான் எடுத்த பெரும் முயற்சிதான் காரணம். அத்தோடு சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பொருந்தியதால்தான் எனது படிநிலை வளர்ச்சி கண்டது.
அக்காலங்களில் சமூக ஊடகங்களில் வெளிவருகின்ற கவிதைகளைப் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
அக்காலத்தில் வெளிவந்த ஏடுகள் இலக்கிய ரசம் மிகுந்தவைகளாக இருந்தது. நல்ல இலக்கியவாதிகளும் நிறைந்து காணப்பட்டதால் அக்காலத்தில் வெளிவந்த ஆக்கங்கள் எல்லோரையும் கவர்ந்தன. அத்தோடு சிறந்த கவிஞர்கள் படைத்த கவிதைகளும் மனதைத் தொட்டன. இதுவேதான் நானும் லயித்ததற்கு காரணமாகும். நல்ல மரபு சார்ந்த கவிதைகள் நிறைய வெளிவந்ததால் என்போன்ற வாசகர்கள் இன்று கவிஞர்களாகவும் திகழ நேர்ந்தது.
வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு தாங்கள் கூறும் செய்தி என்ன?
தற்போது வளர்ந்துவரும் இளம் படைப்பாளர்கள் பரந்து பெரிகிவிட்டன. கம்பெடுத்தவன் சண்டைக்காரன் போல் எவரையும் சரியாக இனங்கான முடியவில்லை. தற்போது வாசகர்கள் குறைவு. படைப்பாளிகள் அதிகம். எனவே இலக்கிய இரசனை இல்லாத ஆக்கம் உப்பில்லாப் பண்டம் போன்றது. இளம் படைப்பாளிகள் வளரவேண்டுமானால் இலக்கியம் சார்ந்த நூல்களையும் நிறைய வாசித்து எல்லோரையும் கவரும் வண்ணம் ஆக்கங்கள் படைக்க வேண்டும். இதுவே எனது அறிவுரையாகும்.
இலக்கிய உலகில் நீங்கள் கண்டறிந்த அல்லது உங்களுக்கு வெளிப்பட்ட உண்மையாக நீங்கள் கருதுவது எதை?
இலக்கிய உலகில் நான் கண்டறிந்த நன்மைகள் ஏராளம். அதாவது அறிவு ஆற்றல், எழுத்து வன்மை, ஒற்றுமை உறவு இப்படி நீண்ட அனுபவங்களைக் கண்டறிய வைத்தது எனலாம். இன்னும் இதன்மூலம் ஏராளம் அறியவேண்டி உள்ளது. இலக்கியம் என்பது இனிமை தரும் தோட்டமாகும். இதை பின்பற்றியவர்கள் ஒருக்காலும் சோடை போக மாட்டார்கள். இதை விவரிக்க எழுத்தால் முடியாது. இதற்குள் சென்றால்தான் உண்மை விளங்கும். இதைவிட வேறு எதையும் நான் கூறுவதற்கில்லை.
இலக்கியப் பங்களிப்புக்காக இதுவரை தாங்கள் பெற்ற கௌரவங்கள், பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்? (பட்டங்கள், விருதுகளைக் குறிப்பிடும் போது எந்த அமைப்பு எத்தனையாம் ஆண்டு தந்தது என்ற விபரத்தையும் கட்டாயம் சேருங்கள்)
இலக்கியத் துறையில் இதுவரை எனக்கு கிடைத்த விருதுகள் பற்றி கூறுவதென்றால்
01. கலைமேக விருது - திருகோணமலை வள்ளுவர் வட்டம் (1969)
02. பொற்கிழி - தேசிய மீலாத் விழா (2004)
03. கலாபூஷணம் - முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களம் (2007)
04. ஆளுனர் விருது - கிழக்கு மாகாண சபை (2007)
05. கலாசூரி - தினகரன் தினமின விழா (2007)
06. கலாதீபம் - திருகோணமலை நகர நூலக சபை (2008)
07. கலைமுரசு - மதார் நம்பிக்கை நிதியம் (2008)
08. கலைநேசன் விருது - மூதூர் மதார் நம்பிக்கை நிதியம் (2009)
இவைதவிர கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற ஹாசிம் உமர் நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும் இன்னும் பல கலை இலக்கியப் போட்டிகளிலும் கலந்து ஏராளமான பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.
இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீர்கள்?
இந்த நேர்காணலில் என்னை சக்கை போட்டு வாட்டிவிட்டீர்கள். (எனது வயது அப்படி அதனால்தான் இப்படிக் குறிப்பிட்டேன்). இதனால் நான் சளைக்கவில்லை. என்றாலும் தங்களின் கேள்விகளுக்கு என்னால் முடிந்தமட்டில் பதில் அளித்துள்ளேன். இதில் வரும் சம்பவங்களை முடிந்தவரை எனது ஞாபகத்தின்படி தந்துள்னே;. என்னையும் ஒரு ஆளுமையாக இணங்கண்டு நேர்காணல் செய்தமைக்காக எனது நன்றிகைளையும் எத்தி வைக்கிறேன். அத்துடன் பத்திரிகை நிறுவனத்தார்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்








No comments:
Post a Comment