Sunday, June 12, 2022

38. விவேகானந்தனூர் சதீஸ் அவர்களுடனான நேர்காணல்

விவேகானந்தனூர் சதீஸ் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

என்னைப் பற்றி கூறுவதானால்; வடக்கிலங்கை மாவட்டத்தின் விவேகானந்த நகர் என்ற நகர்ப்புறத்தை  வாழ்விடமாகக் கொண்டவன். செல்லையா - பவளவள்ளி இணையரின் இளைய மகன். மனைவி, மகள் என சிறியதொரு குடும்பத்தின் தலை மகன். கிளிநொச்சி சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் நோயாளர் காவு ஊர்தி ஓட்டுநராகக் கடைமையாற்றி வந்த நான், சுயாதீன ஊடகவியலில் கரிசனை கொண்டவன் என்று சுருக்கமாகக் கூறலாம். 


உங்கள் பாடசாலை வாழ்க்கை, இலக்கிய ஆர்வம் பற்றியும் குறிப்பிடுங்கள்?

'ஆதவன் முன்பள்ளி' தொடங்கி ஆரம்பக் கல்வியூட்டிய அயலகப் பள்ளியாம் கனகாம்பிகைக்குளம் அ.த.க. பாடசாலையில் இடைநிலை பயின்றேன். கிளி. இந்துக் கல்லூரி; இறுதியாக கிளி. மத்திய கல்லூரி என நான்கு நிலை அறிவுச் சாலைகளையும் நன்றியோடு நினைவில் கொள்கின்றேன். போர் நிலத்தில் வாழ விதிக்கப்பட்டிருந்த எமது மாணவப் பருவங்கள் இயல்பு நிலைக்கு அப்பாற்பட்டிருந்த காலங்கள் அவை. அதற்காக எமது அன்றாடங்களை நாம் அடகு வைத்திருக்கவில்லை. பாடப் புத்தகங்களின்றியும் பதுங்கு குழி வாழ்க்கையுமாக கடந்து கொண்டிருந்த அந்நாட்களிலும் கல்விச்சாலைகள் தொடர்ந்தன. அநேகமாக நான் பேச்சு, விவாதம், வில்லிசை போன்ற கலை நிகழ்வுகளில் பங்குபற்றுவதுண்டு. தவிர உதைப்பந்தாட்ட விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். 


உங்களை எழுத்தாளராக வளர்த்த பின்னணி என்ன? இத்துறையில் வளர வழிவகுத்தவர்கள் யார்?

என்னை ஒரு எழுத்தாளன் என்று பறைசாற்றிக் கொள்ளும் அளவுக்கான பக்குவத்தை இன்னும் அடையவில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் என் எழுத்து முயற்சிகளுக்கான பின்னணியை 'காலச் சூழலிடம்' கையளிக்க கடமைப்படுகிறேன். எனதிந்த படைப்பிலக்கியப் பயணத்தில் தொடர்ந்தும் நடை பயில்வதற்கு எனது ஆக்கங்களுக்கு களம் தந்துவரும் அச்சு ஊடகங்களும் சஞ்சிகைகளும் முதன்மைக் காரணமெனக் காண்கிறேன். தவிர எனது படைப்புகளின் முதல் வாசகியாக மட்டுமின்றி உந்துசக்தியாக செயற்பட்டுவரும் எனது அம்மா பவளவள்ளி மிக முக்கியமானவர்.


நீங்கள் எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகிறீர்கள்?

'ஆசைக்கு ஒரு கவிதை எழுதிப் பார்ப்போம்' எனத் தொடங்கிய என் எழுத்தார்வம் சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து,  விமர்சனம், குறுநாவல் என முன்நகர்ந்து தற்போது நாவலில் காலடி வைத்திருக்கிறது. 


உங்களது முதலாவது படைப்பை பத்திரிகையில் பார்த்தவுடன் உங்களது மனநிலை எப்படி இருந்தது? 

1999 இல் தினமுரசு பத்திரிகையின் 'கருத்தோவியத்திற்கான நான்கு வரிகள்' பக்கத்திற்காக சிறிய கவிதை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த வாரம் அது எனது பெயர், முகவரியுடன் பாராட்டுக் கவிதையாக அச்சேறி வந்திருந்தது. அதனைக் கண்டு ஆனந்தமடைந்தது மட்டுமல்ல, ஓடி ஓடி அந்தப் பத்திரிகைப் பக்கத்தை அனைவருக்கும் காண்பித்து பெருமை கொண்டேன் என்ற உண்மையையும் சொல்ல வேண்டும்.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

01. 'இரும்புக் கதவுக்குள்ளிருந்து...' (கவிதை) 2012 கலை இலக்கியப் பேரவை வெளியீடு

02. 'விடியலைத் தேடும் இரவுகள்...' (கவிதை) 2016 படைப்பாளிகள் உலகம் வெளியீடு

03. 'சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு...' (கவிதை) 2017 படைப்பாளிகள் உலகம் வெளியீடு

04. 'மனச்சிறையிலிருந்து...' (கவிதை) 2017 காவியாலயா வெளியீடு

05. 'வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்...' (சிறுகதை) 2021 ஜீவநதி வெளியீடு

'துருவேறும் கைவிலங்கு' என்ற கட்டுரைத் தொகுதி பாதி முடிந்த நிலையில் பதிப்பகத்தில் இருக்கிறது. எங்கட புத்தகங்கள் வெளியீட்டு அமைப்பு இதனை வெகு விரைவில் வெளியீடு செய்ய இருக்கிறது. பெரும்பாலும் இவ்வருடம் இந்த நூலினை வெளியிடலாம் என்றே நினைக்கின்றேன்.


நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது? 

அந்த மகிழ்ச்சியை மற்றும் மனநிறைவை, கருச்சிதைவுகளை மாத்திரமே கண்டு நொந்திருந்த தாயொருத்தி முதற் குழந்தையை பிரசவித்த போது ஏற்படக்கூடிய ஆனந்தத்திற்கு ஒப்பிடுகிறேன்.


'இரும்புக் கதவுக்குள் இருந்து...' என்ற உங்களது முதலாவது கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

'சிறைக்கூடத்தில் இருந்து, பண்டிட் ஜவகர்லால் நேரு தன்னுடைய மகள் இந்திராவுக்கு 'என் பிரியமான பிரியதர்ஷினிக்கு...' என்று எழுதிய கடிதங்களின் தொகுப்பு பின் நாளில் நூலாக வெளியானது. அது வெறும் கடிதங்களைக் கொண்ட நூல் மாத்திரமல்ல. உணர்வு, ஒழுங்கு, வாழ்வின் இலட்சியம், தூரநோக்கு எனப் பல நல்லவற்றை உள்ளடக்கிய நூல். அதேபோல என்னுடைய கன்னிக் கவிதைகளும் நல்ல பல கருத்துக்களையும் கருப்பொருட்களையும் கொண்டனவாக அமைந்துள்ளன என்று போராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் இந்த நூலுக்கான அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.


'உங்கள் விடியலைத் தேடும் இரவுகள்...' கவிதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்?


'தேசத்திற்கு ஒளிகொண்டு பாய்ச்சும் வலிமை நூல்களுக்கே அதிகமாக உள்ளது' என்பதற்கிசைய அடக்குமுறை அக்கினியில் அவித்தெடுக்கப்படுகின்ற சமுதாயத்தின் துன்ப துயரங்களில் சிலவற்றை கிள்ளியெடுத்து கவிதைப் புள்ளியிட்டு வாசகர் தம் கட்புலனில் அனுபவிக்கத் தந்துள்ளேன். இவை சில மனங்களையேனும் தொட்டு, மாற்றங்களை விளைவிக்க வேண்டுமென ஆவல் கொண்டதன் உப விளைவே 'விடியலைத் தேடும் இரவுகள்' என்ற நூல். 


உங்கள் சிறுகதை நூலின் தலைப்பு குறித்தும் கருப்பொருட்கள் குறித்தும் என்ன சொல்லப் போகிறீர்கள்? 

போரினால் பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டியின் வாழ்வாதாரத்திற்குத் துணையாக இருந்துவந்த பழமையான வேப்ப மரமொன்றை வீதி அகழிப்பு என்ற அபிவிருத்தியின் பெயரால் தறிக்க முற்படுவதும் இறுதியில் அதைத் தடுத்து நிறுத்தப் போராடிய மூதாட்டி, தன் குடும்பத்தை வாழ வைத்த மரத்தோடு சேர்ந்து தானும் மடிவதுமான சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாகியது. ஷவேப்ப மரமும் பவளம் ஆச்சியும்| என்ற இந்த சிறுகதைத் தொகுதி தாங்கி வந்துள்ள கதைக் கருக்களாக நமது சமுதாயக் குடிகள் சந்தித்து வருகின்ற ஏக்கம், தாக்கம், தவிப்பு, நட்பு - பிரிவு, உறவு, விழிப்பு எனப் பல்வேறுபட்ட சங்கதிகளைச் சொல்லி நிற்கிறது. 


ஒரு நூல் பிரசுரம் என்பது ஒரு பிரசவத்திற்கு ஒப்பானது என்கிறார்களே! இதுபற்றி என்ன சொல்வீர்கள்?

இது முற்றிலும் மெய்யான கூற்றென்பதை அனுபவ வாயிலாகக் கண்டவன் நான். உழைப்பதைவிட சேமிப்பது கடினம் என்பார்கள். அதேபோன்றுதான் ஒரு படைப்பை ஆக்குவதைவிட அதை செப்பமான நூலாக வெளிக் காணச் செய்வது மிகக் கடினம். எமது தேசத்தில் எழுதுபவர்களுக்கான ஊக்குவிப்பு மந்த கதியிலிருந்து மாறுவதாக இல்லை. ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதன் செலவுப் பெறுமதியைத் தன்னும் மீட்டெடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில்தான் எமது உள்நாட்டு புத்தகங்களின் விற்பனை விகிதம் காணப்படுகிறது. திறன், தொழிநுட்பத்தின் அதிகரித்த ஆக்கிரமிப்பு மற்றும் அநேகமான வாசகர்கள் அயலுறவு தேசத்தின் கவர்ச்சி மிகுந்த (அமைப்பு, தலைப்பு, கரு) நூல்களை வாசிப்பதில் ஆர்வத்தைக் காட்டுவதால் உள்ளூர் படைப்புகள் புறக்கணிப்புக்குள்ளாகின்றன.


உங்கள் மனதை வசீகரித்த கவிதைகள் அல்லது கவிதை வரிகள் பற்றிக் கூறுங்கள்? 

இதற்குப் பொதுவாகவே பதிலளிக்கிறேன். மரபென்று பரையொலித்துக் கொண்டு கடைநிலை மாந்தரை  சென்றடையாத எந்தப் படைப்புகள் மீதும் எனக்கு நாட்டமில்லை. படைப்புகள் எப்போதும் சமூக நலன் சார்ந்து நிற்க வேண்டுமென நினைக்கிறேன். அந்தவகையில் குரலற்ற மனிதர்களின் குரலாக ஒலிக்கின்ற வரிகள் பொதுவாக என்னை வசீகரிப்பதுண்டு.



ஆரம்ப காலங்களில் உங்கள் படைப்புகளுக்கு களம் தந்த ஊடகங்கள் பற்றி?


வலி சுமக்கும் என் வரிகளுக்கு களம் தருவதில் அநேகமான ஊடகங்கள் பின்நின்றதில்லை. குறிப்பாக தினமுரசு, தினகரன், உதயன், சுடர் ஒளி, தமிழ் தந்தி, வீரகேசரி, தினக்குரல், வலம்புரி, காலைக்கதிர், மலை முரசு போன்ற தேசிய பிராந்திய பத்திரிகைகளை குறிப்பிட முடியும். சஞ்சிகைகள் வரிசையில்; இருக்கிறம், ஞானம், பூங்காவனம், கவிஞன், தளவாசல், ஜீவநதி, எங்கட புத்தகங்கள், கலைமுகம், கரை எழில் போன்றவற்றை குறிப்பிடுவேன். தவிர, சில மின் இதழ்களையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனாலும் சில முதன்மை சஞ்சிகைகள் தமக்கென்று முகமறிந்த வாடிக்கைப் படைப்பாளிகள் சிலரைத் தொடர்ந்து திருப்திப்படுத்தியாக வேண்டும் என்று கருதுவதால் வளர்ந்து வரும் புதுமுக எழுத்தாளர்கள் ஊக்கப் படுத்தப்படாமல் ஏமாற்றமடைந்து எழுத்துலகிலிருந்து கரைந்து காணாமல் போய்விடுகிறார்கள். 


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் நீங்கள் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துகள் உங்களை அதிகமாகக் கவர்ந்ததாக நினைக்கிறீர்கள்? 

ஆரம்ப நாட்களில் அனைத்தையும் வாசித்தேன். பின் நாட்களில் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். கைதேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை கோடிட்டுக் காட்டுவதால் புதுமுக எழுத்தாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுவார்களோ என அஞ்சுகிறேன். எனவே பெயர்ப் பட்டியலைக் கூற விரும்பவில்லை. ஆதலால் வாசகர் தாமே வாசித்து தீர்மானித்துக் கொள்வார்களாக. இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும், எழுத்துக்களின் வாய்மையினை வாழ்க்கையில் கொண்டவர்களாக எல்லா எழுத்தாளர்களும் இருந்துவிடமாட்டார்கள். பலருடைய படைப்புகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. பொதுநலன் பற்றி எழுதி விருதுகளை வாங்கி வீட்டில் அடுக்கிக் கொண்டு கழுவித் துடைத்த சுயநலமிகளை நான் சந்தித்திருக்கிறேன்.


படைப்பைப் போலவே படைப்பாளிகளும் இருப்பார்கள் என்றெண்ணி அது பொய்த்துப்போன சம்பவங்களை நீங்கள் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி?

நிச்சயமாக. சாகித்திய விருது பெற்ற ஒரு எழுத்தாளரின் நாவலைப் படித்துவிட்டு அவருடன் நேசம் கொண்டிருந்தேன். ஒருநாள் குறித்த நேசரை அணுகி எனது சிறுகதையொன்றைப் பற்றிக் கூறிவிட்டு 'இவ்வாறு சொல்லிச் சென்றால் நன்றாக இருக்குமா?' என்று சிநேக பூர்வமான ஆலோசனையொன்றை கேட்டேன். அதற்கவர் 'நீங்கள் எழுதக் கூடியவர் தானே. எழுதிப் பல பரிசுகள் வென்றிருக்கிறீர்கள். நீங்கள் எழுதினால் அது சரியாகத்தான் இருக்கும்..' என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டார். 'நான் போட்டியில் பங்கு பற்றியிருந்தால் உங்களது சிறுகதைக்கு பரிசு கிடைத்திருக்காது' என்று அந்த 'விருதெழுத்தாளர்' முன்பொருநாள் கூறியது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. அன்று தொடக்கம் அவரிடம் எந்த ஆலோசனைகளையும் நான் கேட்பதில்லை. ஆனாலும் அவரது படைப்புகளை நான் வளர்வதற்காக இன்னும் அதிகமாக விரும்பி வாசிக்கிறேன்.


இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தமட்டில் தகவல்களை மிக வேகமாக மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கின்றன. ஆனபோதிலும் அவற்றின் நம்பகத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்பன கேள்விக்குறியாகவே நோக்கப்படுகிறது.


உங்களது எழுத்துக்களின் நோக்கம் என்ன? உங்களது படைப்புகளுக்கு அல்லது உங்களுக்கு கிடைத்த ஆதரவுகள், வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

படைப்பிலக்கியம் என்பது பிரச்சாரம் அல்ல. வெறும் பொழுது போக்குப் பணியுமல்ல. பெயருக்கும் புகழுக்குமான வேலையும் அல்ல. மனிதர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள், அதில் உள்ள செருகல்கள், விரிசல்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், குமுறல்கள், உள் மன ஏக்கங்கள் என அனைத்தையும் ஊடுருவி நோக்கி கலை நயத்துடன் படைப்பதே படைப்பு ஆகும். 

விழிப்புணர்வு மற்றும் ஆவணப்படுத்தலுக்கான படைப்புகளுக்கு அப்பால் சில படைப்பாளிகள் சந்தை நிலவரங்களை அறிந்து சரக்குகளை தேடி எழுதும் விருதுக்கான படைப்பாளிகளாக எழுத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் தற்போது வரை விழிப்புணர்வு மற்றும் ஆவணமாக்களை நோக்காகக் கொண்டே எழுதி வருகிறேன். அந்தவகையில் ஆதரவுகளும் வரவேற்புகளும் நிறையவே கிடைக்கின்றன. தவிர இதுவரை சிறுகதைகளுக்காக பல பரிசுகளும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன. இவைதவிர எனது நான்கு கவிதைத் தொகுதிகளும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவரால், 2017 ஆம் வருடத்தில் ஷஷஅரங்காற்றுகை ஆய்வு|| இற்கு உட்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


உங்களது படைப்புகளால் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

என்னால் நாட்டின் தேசிய பத்திரிகைகளுக்கு எழுதப்பட்ட கட்டுரைப் படைப்புகள் சிலவற்றின் மூலம் சில உடனடி மாற்றங்கள் நிகழ்ந்ததை அவதானித்து ஆச்சரியமடைந்திருக்கிறேன். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு எவராலுமே கண்டுகொள்ளப்படாதிருந்த யாழ். குடாநாட்டை மையப்படுத்திய அரச சேவை நிறுவனம் ஒன்றின் ஒட்டுமொத்த குறைபாடுகளையும் ஊடுருவி நோக்கி, அவற்றை கோடிட்டுக் காட்டி கட்டுரை ஒன்றை வரைந்து பல பத்திரிகைகளுக்கு அனுப்பியிருந்தேன். அந்தக் கட்டுரை அடுத்த வாரம் வெளிவந்த ஆறு பத்திரிகைகளிலும் அதுவும் விசேடமாக ஒரே நாளில் முழுப் பக்கக் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டது. ஆகையினால், குறித்த நிறுவனம் தாமதிக்காமல் குறிப்பிடத்தக்களவு குறைநிரப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தமையை ஒரு மாற்றமாகவே பார்க்க முடிகின்றது. இது எனக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது. இத்தகைய அனுபவங்கள் மறக்கவியலாதவை.


உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றி குறிப்பிடுங்கள்? 

கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், குறுநாவல் என்பனவற்றைக் கடந்து எதிர்காலத்தில்  காத்திரமான நாவல்களைப் படைத்து எனது ஆவணப்படுத்தலை அகலிக்க வேண்டுமென விருப்பங்கொள்கிறேன்.


இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?

இலத்திரணியல் நூல்களை வாசிப்பதிலும் பார்க்க முடிந்தவரை அச்சு நூல்களை வாசிப்போம்;.. சேமிப்போம்;.. பகிர்ந்து கொள்வோம். பிரதேசத்தில் இடம்பெறும் நூல் வெளியீடுகளுக்கு அழையா விருந்தாளியாக என்றாலும் சென்று கலந்து கொண்டு, பணம் செலுத்தி புத்தகங்களைப் பெற்றுக் கொள்வோம். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment