கவிஞர் ஏ.எச்.ஏ. ழாஹிர் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?
எனது பெயர் அப்துல் ஹமீது அப்துல் ழாஹிர். நான் அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மருதமுனையில் பிறந்தேன்.
உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது ஆரம்பக் கல்வி மருதமுனை அல் ஹம்றா வித்தியாலயாலயத்திலும். பின்னர் க.பொ.த. சாதாரண தரம் வரை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலும், க.பொ.த. உயர் தரத்தினை கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். 1978 ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்து கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றினேன். 2016 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்.
உங்களை கவிஞராக வளர்த்த பின்னணி என்ன? இத்துறையில் வளர வழிவகுத்தவர்கள் யார்?
கவிஞராக வேண்டும் எனும் எண்ணமெல்லாம் இளமைக் காலத்தில் இருக்கவில்லை. சமூகத்தில் நடக்கும் மக்கள் விரோத செயற்பாடுகள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற ஆசை எனக்குள் வெகுவாக இருந்தது. அதன் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை கற்றதும், நண்பர்களின் உந்துதலுமே கவிதை எழுதக் காரணமாக அமைந்தது.
தங்களது முதற் படைப்பு எப்போது, எதில் வெளியானது? எந்தெந்தப் பத்திரிகைகளில் எழுதி வருகின்றீர்கள்?
எனது முதற் கவிதை 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரி பத்திரிகையில் ஷஷமுக்காட்டு முகம்|| எனும் பெயரில் வெளியானது. அனேகமான பத்திரிகைகளில் எனது கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.
சுமார் எத்தனை வருடங்களாக கவிதை எழுதி வருகின்றீர்கள்?
சுமார் இருபது வருடங்களாகக் கவிதை எழுதி வருகின்றேன். அத்துடன், நான் கல்முனை பிரதேச செயலகத்தில் தலைமைப்பீட கிராம உத்தியோகத்தராகவும் பின் நிர்வாக கிராம உத்தியோகத்தராகவும் கடமை செய்துகொண்டிருந்த வேளையில் பிரதேச செயலகத்தில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறும். அந்நிகழ்வுகளில் கலையோடு சம்பந்தமான நிகழ்ச்சிகளில் எனக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். அதுவே பின்னாட்களில் மும்முரமாக எழுத வேண்டும் எனும் எண்ணம் வரக் காரணமாக அமைந்தது.
நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களை ஏழுதத் தூண்டிய சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
அவ்வப்போது சமூகத்திற்குள்ளும் வெளியேயும் நிகழும் சமூக ஒத்திசைவற்ற கருமங்கள் பொதுவாகவும் தனிப்பட்ட ரீதியிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அக் கருப்பொருளை மையப்படுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்த எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போதெல்லாம் கவிதைகளை எழுதுவேன்.
உங்களுடைய முதல் பிரசவம் "நாணிய நடுக்காடு" எனும் தலைப்பு குறித்தும், நூலின் வரவு பற்றியும் என்ன குறிப்பிடுவீர்கள்?
நாகரீகம் என்பது என்னவென்று தெரியாத காலத்தில் மக்கள் நடுக் காடுகளில் அலைந்து குகைகளில் உறங்கினர். அவர்கள் தங்களது உடல்களை இலை, பட்டை, மிருகங்களின் தோல்களால் மறைத்து வாழ்ந்து வந்தனர். காட்டை விட்டு நதிக்கரைகளுக்கு இடம் பெயர்ந்து சிறுசிறு கூட்டங்கள் சமூகங்களாகி விவசாயம் என்று நாகரீகம் ஆரம்பமாகி ஆயிரமாயிரம் வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்போது உடலோவியம் (டீழனல Pயiவெiபெ) என்ற பெயரில் துண்டுதுணி கூட இல்லாமல் வண்ணப் பூச்சுக்களால் உடலை மறைத்து நாகரிகம் எனக் காட்டுகின்றனர். இச் செயற்பாடுகளைக் கண்டு நடுக் காட்டு மரங்கள் வெட்கித் தலைகுனிகின்றன. இப்படி ஒரு கவிதை எனது கவிதைத் தொகுதியில் உள்ளது. அதனையே நூலின் தலைப்பாக ஷஷநாணிய நடுக்காடு|| எனப் பெயரிட்டேன்.
இது எனது முதலாவது கவிதைத் தொகுதி. இதனை எனது சமர்ப்பணமாக வாசகர்களுக்கு முன்வைத்துள்ளளேன். ஏனெனில் புத்தகம் ஒன்றினை சிலர் முழுமையாக வாசிப்பதும் அனேகர் சிறிது பார்த்துவிட்டு அப்படியே கிடப்பில் போட்டு விடுவதும் வழக்கம். புத்தகங்களை வாசிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே வாசகர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளளேன்.
உங்கள் "நாணிய நடுக்காடு" கவிதை நூலில் உள்ளடக்கியுள்ள கருப்பொருள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
எனது கவிதைத் தொகுதியில் தனியே ஒரு கருப்பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் தாய்மை, நட்பு, காதல், வீரம், வறுமை போன்ற பெரும்பாலான குணாதிசயங்களை உள்ளடக்கியே வெளியிட்டுள்ளேன். எழுத்து என்பதனை வெறுமனே பொழுதுபோக்காக மட்டும் நோக்காது படிப்பினையாகவும் வாசகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஓர் எழுத்தினை வாசகர்களிடையே கொண்டு செல்வது இலகுவான காரியமல்ல.
உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என நம்புகின்றீர்களா?
ஒவ்வொரு முயற்சியும் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. அதேபோல எழுத்தாளர்களும் தங்களின் எழுத்து மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றார்கள். தவிரவும், எவரும் புதிதாக கருத்தினைத் தெரிவிப்பதில்லை. பழைய விடயங்களை புதுப்புது சொல்லாட்சிகளின் கீழ் வெளிப்படுத்துகின்றனர். ஆனாலும் பாரதியின் காலத்தினைப் போல தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக் குறியே.
கவிதைகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டு;ம்? ஒரு சிறந்த கவிதை எவற்றைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
கவிதைகள் உயிரோட்டமுள்ளதாகவும், படிப்பினைகளை தரக்கூடியதாகவும் இருத்தல் அவசியம். சமூகத்தில் நிகழும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் பிரவேசித்து கவிதைகளை விழிப்புணர்வூட்டும் வகையில் எழுதும் போது சிறிய தாக்கத்தினை அல்லது மாற்றத்தினை ஏற்படுத்தினாலும் அது பெரும் வெற்றியே.
சக எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
ஆலோசனை கூறுமளவிற்கு நான் பெரும் எழுத்தாளன் அல்ல. இருப்பினும் நான் படித்த அல்லது அவதானித்த வகையில் சிலரின் எழுத்துக்களின் வாக்கியத்தின் ஒழுங்கீனம் கரணமாக என்ன சொல்ல வருகின்றார் என்பது முடிவில் தெளிவில்லாமல் போகின்றன. எனவே, சொற்றொடர்களை அமைக்கும் போது பலமுறை அவதானித்து எழுதுவது சிறப்பாக அமையும் எனக் கருதுகின்றேன்.
ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துகள் உங்களை அதிகமாகக் கவர்ந்ததாக கருதுகின்றீர்கள்?
ஆம். வாசித்தேன், வாசிக்கின்றேன். அதற்காக நேரசூசி போட்டு வாசிப்பது கிடையாது. நேரம் கிடைக்கும் போது வாசிப்பதுண்டு. அவர் இவர் என்று வகைப்படுத்தி வாசிப்பதில்லை. அந்தக் காலத்தில் இரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி), சாண்டில்யன், ஜெயகாந்தன், சுஜாதா என்பவர்களைக் குறிப்பிடலாம்.
கவிதைத் துறை தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகின்றீர்கள்?
கவிதை தவிரவும் சிறுகதைகள் எழுதுவதிலும் ஆர்வம் இருக்கின்றது. எழுதியும் இருக்கின்றேன். மேலும் எழுதத் தூண்டும் அளவிற்கான களம் அமையாததால் அதன்பால் செலுத்தப்படும் அவதானம் குறைந்துளள்ளது. காலத் தேவைக்கேற்றவாறு தொடர எண்ணியுள்ளேன்.
இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில் வாசிப்பு மட்டம் எந்தளவில் இருக்கின்றது என்று நினைக்கின்றீர்கள்?
இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்ததன் காரணமாக வாசிப்பு மட்டத்தில் சிறு தளர்வு ஏற்பட்டாலும் வாசிப்பு பாதிப்புக்குள்ளாகும் நிலைக்குச் செல்லவில்லை என்பது யதார்த்தம். ஏனெனில் இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப அச்சு ஊடகங்களும் அதிகரித்திருப்பது கண் கூடு.
மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றி பொதுவாக என்ன சொல்வீர்கள்?
தாய் மொழிக் (தமிழ்) கவிதைகள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இலைமறை காய்களாய் இருக்கும் நம் கவிஞர்களின் பெயர்கள் வியந்து பேசப்படு;ம் நிலை உருவாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.
உங்கள் இலக்கிய வாழ்வில் இதுவரை உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?
யார் வாழ்வில் தான் மறக்க முடியாத சம்பவம் இல்லை. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்தவர்களிடமும் போட்டி உள்ளது. அப் போட்டி இலக்கியவாதிகளையும் விட்டு வைக்கவில்லை. போட்டி என்று வந்தால் அதன் விளைவு என்ன என்பது யாவரும் அறிவர். அப்படியான சம்பவங்கள் பல உள்ளன. அவைகளைக் கூறி யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.
இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
நேர்காணல் மூலம் பதிலுரைப்பவர்கள் தங்களது கருத்துகளை நிதானமாக அச்சு ஊடகம் ஊடாக பகிர்ந்துகொள்வதால் இதனை வாசிப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படுகின்றது.
உங்களது கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
ஆதரவுகள் நிறையவே கிடைத்தன. நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே ஆதரவுகளும் வரவேற்புகளும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும், வெளியூர்களில் எனது கவிதைகளுக்கு எப்படியான வரவேற்பு இருக்கிறது என்று தெரியாது. காரணம் வேறு பிரதேச வாசகர்களுக்கு எனது கவிதைத் தொகுதி இன்னும் பெரிதாகச் சென்றடையவில்லை. அதன் பின்னரே அதுபற்றிக் குறிப்பிட முடியும்.
உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
கவிதைகளோடு சிறுகதையும் எழுதியிருக்கின்றேன். கூடுதல் நேரம் சிறுகதை எழுதுவதில் கழிக்க எண்ணியுள்ளேன். அதுதவிர கவிதைகளை சிங்கள மொழிக்கு, மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்ற விருப்பமும் இருக்கின்றது.
வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்..?
வரையறைக்குள் நிற்பதனால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஒரு விடயத்தினை மட்டும் கவிஞர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். விரசமாக கவிதை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கின்றேன்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment