2021.10.31 செந்தூரம் இதழில் வெளிவந்த நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
இலங்கையின் சிரேஷ்ட எழுத்தாளர்களில் ஒருவரான கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்
பீ.ரீ.அஸீஸ்:- எழுத்தாளர்கள் தமக்கான வாசகர்களை தக்கவைத்துக் கொள்வது அவசியமாகின்றது. அதற்கேற்ற வகையில் அவர்களின் எழுத்து நடை, கற்பனைத் திறன், யதார்த்த சிந்தனை, கருப்பொருள் என்பன சிறப்பாக அமைதல் அவசியமாகும்.
உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்?
பீ.ரீ. அஸீஸ் என்ற பெயரில் இலக்கிய உலகிற்கு நன்கு பரீட்சயமான நான், கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவைப் பூர்வீகமாகவும் பிறப்பிடமாகவும் கொண்டுள்ளேன். பெரிய கிண்ணியா, ஆண்கள் பாடசாலை, கிண்ணியா மத்திய கல்லூரி என்பவற்றில் கல்வி பயின்று, அதன்பின்னர் உயர் தரக் கல்விகள் கற்று தேர்ச்சி பெற்றேன். 1981 ஆம் ஆண்டு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தொழிநுட்பவியலாளர் சேவை பிரிவில் முதலாம் தர பொதுச் சுகாதார வெளியக உத்தியோகத்தராக பதவி வகித்தேன்.
எனது இளமைக் காலப்பகுதி இலக்கியத்தின்பால் பெரிதும் ஈர்ப்புக்கொள்ள வைத்தது. 1974 ஆம் ஆண்டில் 'பேசும் தெய்வம்' எனும் சிறுவர் பாடல் எனது முதலாவது படைப்பாக தினகரனில் வெளிவந்தது.
2012 இல் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் 'சிறுவர் பாடல்கள்' என்ற எனது நூலுக்கே கிடைத்தது. இதுவரை சுமார் 20 க்குக் கிட்டிய நூல்களை வெளியீடு செய்திருக்கின்றேன். இவற்றில் சில மாகாண சாகித்திய விருதுகள் பெற்றுள்ளதோடு, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதுடன் நூலகங்களுக்குப் பொருத்தமான நூல் என்ற தரச் சான்றிதழும் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்தோடு பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய விருதுகள் பலவும் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஈழத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, செழுமை என்பவற்றுக்கு என்னால் நிறையவே பங்களிப்புகள் செய்யப்பட்டுள்ளன. கவிதை, சிறுகதை, நாட்டாரியல், சிறுவர் படைப்புகள், சமய இலக்கியம், நூல் திறன் நோக்கு என்பன அவற்றில் சிலவாகும். ஒருவரது இலக்கியத்துக்கான பங்களிப்புகள் அதிகரித்துச் செல்லும் போது ஸ்தீரத் தன்மையும் வளர்ச்சிப் படிநிலையும் அதிகரித்துச் செல்லும்.
தாங்கள் எழுதும் கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல்கள் பற்றி..?
சுதந்திரத்துக்கு முந்திய காலப்பகுதியில் கிண்ணியாப் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்த கிராமியக் கவிகள், தாலாட்டுப் பாடல்கள் என்பன காலப்போக்கில் மங்கி மறையத் தொடங்கியது. இதனால் அவைகளைத் தேடிப் பெற்று ஆவணப்படுத்தும் முயற்சியில் 2011 ஆம் ஆண்டளவில் நான் ஈடுபட்டு வந்த போது வாய்மொழி மூலக் கிராமியக் கவிகள் போல் எழுத்துருவிலான கவிகளும் எழுத வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் துளிர்விட்டது.
ஆய்வாளர் அ. மார்க்ஸ் அவர்களின் கூற்று எனக்குள் ஒரு புதிய தோற்றப்பாட்டுக்கு காரணமாய் அமைந்தது. 'ஒரு சமூகம் எவ்வாறு பொருள் உற்பத்தி செய்யாதிருப்பது சாத்தியமில்லையோ அதேபோல் கலை இலக்கிய உற்பத்தி இல்லாமலும் இருக்க முடியாது' என்று அவர் குறிப்பிடுகிறார். இக்கூற்றினை நன்கு ஆராயும் போது வாய்மொழி நாட்டார் கவிகள் நிறைவு பெற்றுள்ளதென்றால் அதற்கு எழுத்துருவிலான புதிய வடிவம் கொடுப்பது அவசியமாகிறது. இதனடிப்படையிலேயே எனது நாட்டார் கவிகளும் தாலாட்டுப் பாடல்களும் தோற்றம் பெறத் தொடங்கின.
நான் இதுவரை பின்வரும் நூல்களை வெளியிட்டுள்ளேன்.
01.உணர்வூட்டும் முத்துக்கள் - 2011
02. சிறுவர் பாடல்கள் - 2011
03. அஸீஸ் கவிதைகள் - 2011
04. தாலாட்டுப் பாடல்கள் - 2012
05. நாட்டார் / கிராமியப் பாடல்கள் - 2012
06. உதயம் - 2012
07. மான்புறும் மாநபி - 2012
08. தென்றலே வீசி வா - 2014
09. சுட்ட பழமே சுவை அமுதே - 2014
10. மனசெல்லாம் மகிழ்கிறது - 2015
11. துணிந்து நில் - 2015
12. சின்னப் பாப்பா - 2016
13. நினைவொன்றே போதும் - 2014
14. செவ்வானச் சித்திரம் - 2017
15. நபிகள் நாயகம் - 2017 (தொகுப்பு நூல்)
16. மஞ்சள் குருவி - 2019
17. ஆரவுட்டுத் தேடுவதோ - 2020
போன்றனவாகும். இவைதவிர முதுமையில் விளைந்த புதுமைகள், நனவாகும் கனவுகள் போன்ற நூல்களும் விரைவில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருவரின் எழுத்தாற்றல் என்பது அவரின் அறிவு, ஆளுமை, புலமைத்துவம் என்பனவற்றை எடுத்துக் காட்டுவதாய் அமைகிறது. அந்தவகையில் தங்கள் எழுத்துக்களின் முக்கியத்துவம் எவ்வாறு அமைந்துள்ள?
ஒருவரின் படைப்புகளை வாசிக்கும் போது அவருக்குள் இருக்கும் ஆற்றலின் கனதியைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. யதார்த்தமாக அவை அமைகின்ற போது எழுத்துக்கள் ஜனரஞ்சகம் பெறுவதை உணரலாம். எனவே வாழும் தன்மையுடன் கூடிய சிறப்புக்குள்ளும் அவ்வெழுத்துக்கள் முக்கியத்தும் பெறத் தொடங்குகின்றன.
அந்தவகையில் எனது எழுத்தாற்றல் கனதியும் கருத்தாழமும் கொண்டதாக அமைவதை என்னால் உணர முடிகிறது. குறிப்பாக நின்று நிலைத்திருக்கும் எழுத்துக்கள் சமூக ஆரோக்கியத்துக்கும் நலனுக்கும் வழிவகுக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டே தற்போது எழுதி வருகின்றேன். உதாரணமாக 'முதுமையில் விளைந்த புதுமைகள்', 'நனவாகும் கனவுகள்' ஆகிய நூல்களில் உள்ள திறன் நோக்குகளை முகநூலில் பதிவு செய்த போது, அவை நல்ல வரவேற்பினையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்ததோடு வாசகர்கள் மத்தியில் பிரபல்யத்தையும் அறிமுகத்தையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாய் அமைந்தது. இந்நூல்கள் தற்போது அச்சிடப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தற்போதைய கால சூழல் கவிதைகளின் தோற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் காத்திரமானதாக அமைந்திருக்கிறது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், இனைய வழிகள் என கவிதைக்கான களமும் விரிந்து செல்கின்றது. இளம் தலைமுறைக் கவிஞர்கள் பெருமளவில் உருவாகியும் வருகின்றனர். அவர்களிடமிருந்து கனதியான படைப்புகள் உருவாக்கம் பெறுவதோடு, அவைகள் தேச, சர்வதேச ரீதியாக பேசப்படக் கூடியவையாகவும் இருக்கிறது. மூத்த எழுத்தாளர்கள் விட்டுச் சென்ற இலக்கிய இடைவெளியினை நிரப்புவதற்குரிய செயற்பாடுகள் இவர்களுடன் நிறைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
எனது இலக்கிய முயற்சிகள் இன, மத, குல வேறுபாடுகுளுக்கு அப்பாற்பட்ட விரிவு கொண்டவை. இன உறவுகளுக்கு என்றைக்குமே பக்கபலமாக இருப்பவை. நான் எழுதும் நூல் திறன் நோக்கிலும் முகநூலில் வெளிப்படுத்தும் ஆளுமைகளிலும் சகோதர சமூகத்தினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
இலக்கியவாதிகளைப் பொருத்தவரை நான் அறிந்தவரையில் இன உறவுக்கு குந்தகமானவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவு நல்ல குண இயல்புகளைக் கொண்டவர்கள் அவர்கள். இத்தகையவர்களுடன் இணைந்து எனது இலக்கியப் பணி தொடர்ந்து செல்கின்றபோது என்றைக்குமே இன உறவு பாதுகாக்கப்படும் என்று திடமாக நம்பலாம்.
சிறுவர் படைப்புகள் மீது உங்களுக்கு எவ்வாறு ஈடுபாடு வந்தது? சிறுவர் பாடல்கள் மற்றும் படைப்புகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் யாவை?
எனது தாயார் என்னை தூங்கச் செய்வதற்காக தாலாட்டும் போது அவை வந்ததாகக் கொள்ளலாம். ஏனெனில் தாயாரிடமிருந்து சிறுவர் பாடல்களையும் தாலாட்டையும் கற்றுக் கொண்டேன். இவைகள் காலப்போக்கில் எனது எழுத்து முயற்சிக்கு பெரிதும் துணைபுரிந்தன. சிறுவர் பாடல்கள் எழுதும்போது அவர்களின் மனோநிலை, செயற்பாடு மற்றும் விருப்பம் என்பன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அவர்கள் மீதான திணிப்புகள் இருக்கக் கூடாது. சிறுவர்கள் சுயமாக சிந்திப்பதற்கும் கற்பதற்கும் உரித்துடையவர்கள். இவற்றைக் கவனத்திற் கொண்டே சிறுவர் பாடல்கள் மற்றும் சிறுவர் படைப்புகள் அமைவது பொருத்தமானது.
தமிழில் சிறுவர் இலக்கியம் படைப்போர் குறைந்தளவிலே காணப்படுகின்றனர். இவர்களது எண்ணிக்கை 153 பேருடைய பெயர்கள் அடங்கிய பட்டியல் கலாநிதி ச. அருளானந்தம் எழுதிய 'ஈழத்தில் சிறுவர் இலக்கியம்' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர் என்போர் யார்? சிறுவர் இலக்கியம் எவ்வாறு அமைய வேண்டும்? அதன் போக்குகள், தனித்துவம் யாது? சிறுவர் இலக்கியம் படைப்போர் அறிந்திருக்க வேண்டிய திறன்கள், விடயதானங்கள் என்பது பற்றி சிறுவர் படைப்பிலக்கியவாதிகள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
சிறுவர் இலக்கியம் பற்றி போதிய அறிவும் தெளிவும் உள்ளவர்களால் எழுதப்படும் சிறுவர் இலக்கியங்கள் அதிக வரவேற்பினைப் பெறுவதை அவதானிக்கலாம். சிறுவர் வாழ்வியலை மையமாகக் கொண்டு இவைகள் எழுதப்படுவதால் அதில் அதிக கவனம் செலுத்தப்படல் வேண்டும். இது புலமையும், தேர்ச்சியும் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
ஈழத்து இலக்கியத்தின் இயங்கு நிலையும் நவீன இலக்கியத் திறனாய்வுப் போக்கும் வளர்ச்சிகளைக் காட்டுகிறதா?
ஈழத்து இலக்கிய இயங்கு நிலையின் வளர்ச்சிப் போக்கு நன்றாகவே இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இலக்கியத்தின் வளர்ச்சிப் படிநிலை அதிகரித்தே காணப்படுகிறது. ஆங்காங்கே தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள், வலைத்தளப் பதிவுகளை இதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். வாசகர் மத்தியில் இலக்கியத்தின் போக்கிற்கு மதிப்பும், ஆதரவும் இருக்கின்ற காரணத்தால்தான் இது சாத்தியமாகிறது.
இந்நிலையில் நவீன திறனாய்வுப் போக்கும் தற்போது வளர்ச்சி கண்டு வருவதை முகநூல் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது ஆராக்கியமானதொரு வளர்ச்சிப் பாதையாகும். இவை பெரும்பாலும் பாராட்டு முறை விமர்சனம், நயவுரை விமர்சனம் என்ற அடிப்படையில் அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இவைகளை வைத்து நோக்கும்போது நவீன இலக்கியத் திறனாய்வுப் போக்கு வளர்ச்சி கண்டு வருகிறது என்று துணிந்து கூறலாம்.
கொரோனாக் கால ஓய்வு நேரங்களை எவ்வகையான இலக்கிய முயற்சிகளுக்குப் பயன்படுத்தினீர்கள்?
கொரோனாக் கால ஓய்வு என்பது தொழிற் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு தருவதாக இருந்தாலும் மனதளவில் ஓய்வையோ, மகிழ்ச்சியையோ தருவதாக அமைந்திருக்கவில்லை. அதனால் பெருமளவில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் குறைவாகவே காணப்பட்டது. இருந்தும் பயமும் பீதியும் குறைந்திருந்த சிலவேளைகளில் நூல் திறனாய்வு, கிராமிய இலக்கிய ஆய்வு என்பன போன்ற இலக்கியப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் கிடைத்தது. அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதில் முதுமையில் விளைந்த புதுமைகள், நனவாகும் கனவுகள் போன்ற நூல்கள் அச்சிடுவதற்குத் தயாராக உள்ளது. கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதில் ஆய்வுகள் பற்றிய சரியான விளக்கங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது.
இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
1981 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இலக்கியத் துறையில் சிறப்புற்று விளங்கிய நான் பின்பு அதில் நின்று முற்றாக விழகியிருந்த போது சுமார் 30 வருடங்களின் பின்னர் 2011.06.04 ஆம் திகதி கிண்ணியா நகர சபையில் தனது பதவியேற்றல் வைபவத்தில் கவி பாடும் சந்தர்ப்பத்தை நகர பிதா டாக்டர். ஹில்மி மஃரூப் அவர்கள் எனக்கு வழங்கியிருந்தார். எதிர்பாராத அந்த சந்தர்ப்பம் காரணமாகவே எனது இலக்கிய உலக மீள் பிரவேசம் ஆரம்பமானது. அதிலிருந்து படிநிலை வளர்ச்சிகள் மேலோங்கி இன்று அனைவராலும் அறியப்பட்டதொரு எழுத்தாளராக விளங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இச்சம்பவம் என்னால் என்றைக்குமே மறக்க முடியாத ஒன்றாகும்.
இலக்கியத்தோடு சமூகப் பணிகளில் ஈடுபட்ட சந்தர்ப்பங்கள் பற்றி..?
இலக்கியத்தோடு மட்டும் நின்றுவிடாமல் சமூகப் பணிகளிலும் நிறையவே ஈடுபட்டிருக்கின்றேன். இளமைக் காலப்பகுதியில் முள்ளிப்பொத்தானையில் வாழ்ந்த சந்தர்ப்பத்தில் 1972 ஆம் ஆண்டு முற்போக்கு வாலிபர் மன்றம், முஹமதிய்யா கிராம அபிவிருத்திச் சங்கம் என்பவற்றில் தலைவராக இருந்து சிறப்பாக சமூக சேவைகள் பலவற்றைச் செய்துள்ளேன். மேலும் 1980, 1981 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வை.எம்.எம்.ஏ. இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக செயல்பட்டுள்ளதோடு, தற்போது சுமார் 10 வருட காலமாக விவசாய அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகின்றேன்.
2015 இல் முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பதவியேற்று இலக்கியப் பணியாற்றி வரும் நிலையில் மாணவர்கள் மத்தியில் எழுத்துப் பயிற்சி, சித்திரம் வரைதல், வாசிப்பு என்பவற்றில் ஊக்கமளித்து பரிசில்களும் வழங்கி அவர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளேன். இவைகளே எனது பொதுப் பணிகளின் செயற்பாடாக அமைந்துள்ளன. மேலும் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளேன்.
இலக்கியத்தைப் பொறுத்தளவில் உங்களது நினைவில் பதிந்துள்ள மிக முக்கியமான நிகழ்வுகள் ஏதும் இருப்பின்?
எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முகம்மத் எழுதிய 'விடியல்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் நானும் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு ரிம்ஸா முகம்மதின் இலக்கிய சேவைகளைக் கௌரவித்து பொன்னாடை போர்த்தி, "கலைமதி" பட்டம் வழங்கியமை, மேலும் எழுத்தாளர் பஸ்யால எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா எழுதிய 'இரண்டும் ஒன்று', 'புதையல் தேடி' ஆகிய நூல் வெளியீட்டு நிகழ்வு கல்எலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது இரு நூல் வெளியீட்டு நிகழ்வுகளிலும் கௌரவ அதிதியாக பங்கேற்று எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவுக்கு எனது தலைமையிலான முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தினால் மாலையிட்டு "கவியரசி" பட்டம் வழங்கியதோடு, பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பாவும் வாசித்த நிகழ்வுகள் என்னால் மறக்க முடியாத பதிவுகளாக இன்றும் மனத்திரையில் பதிந்திருக்கிறது.
உங்களது இலக்கிய வாழ்வில் இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுகள், பட்டங்கள், விருதுகள் யாவை?
எனது இலக்கிய வாழ்வில் பல்வேறு பட்டங்கள், பாராட்டுகள், விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவைகள் எனது எழுத்து முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமும் கௌரவமுமாகும். குறிப்பாக கலாபூஷணம், தேச கீர்த்தி, இலக்கிய வித்தகர், காவிய பிரதீபா, மக்கள் கவிஞர் போன்ற பல பட்டங்களும் அவற்றுக்கான விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், கலை இலக்கியப் போட்டி நிகழ்வுகள் பலவற்றில் முதலாம், இரண்டாம், மூன்றாம் படிநிலை வெற்றி வாய்ப்புகளும் பாராட்டுகளும் பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
அத்தோடு தேசிய மட்டத்தில் கவிதை, சிறுதை என்பவற்றுக்கு முதலாம், இரண்டாம் பரிசில்கள் கிடைத்ததுடன், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் நூலுருவாக்க வசதிகளும், நூலகங்களுக்குப் பொருத்தமான நூல் என்ற தரச் சான்றிதழ்களும் எனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தோடு மாகாண தேசிய மட்டங்களில் நூல் கொள்வனவும் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.
உங்களது பிரதேச இலக்கிய வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்?
எங்களது பிரதேசமான கிண்ணியாவில் 1950 களில் இருந்துதான் எழுத்தாளர்கள் தோற்றம் பெறத் தொடங்கினர். அதற்கு முன்னைய காலப்பகுதியில் எண், எழுத்தறிவு உள்ளவர்கள் போதியளவு இல்லாமையால் படைப்பிலக்கியங்கள் தோற்றம் பெறுவதில் மந்த நிலை காணப்பட்டது. ஆனாலும் வாய்மொழி மூலமான கிராமிய இலக்கியம் நிறையவே தோற்றம் பெற்றிருந்தது. அதில் பலரும் பெரிதும் ஆர்வம் காட்டியும் வந்துள்ளனர்.
தினபதி சிந்தாமணி எழுத்துப் பண்ணையானது பல்வேறு இலக்கியவாதிகள் உருவாகக் காரணமாக அமைந்தது. அத்துடன் தினகரன், வீரகேசரி பத்திரிகைகளின் பக்க பலமும் ஆதரவும் அவர்களுக்குத் தொடர்ந்தும் கிடைத்து வந்தது.
1972 - 1981 காலப் பகுதியில் நிறைய இலக்கியவாதிகள் தோற்றம் பெறத் தொடங்கினர். இது படிப்படியாக வளர்ச்சி கண்டு, இன்று கிண்ணியா பிரதேசம் இலக்கிய வளமும் செல்வாக்கும் உள்ள ஒரு பிரதேசமாக மிளிர்வதை அவதானிக்கலாம். இவர்களின் படைப்புகள் தேசிய, சர்வதேச மட்டங்களிலும் முக்கியத்துவம் பெற்று வருவதை அவதானிக்கும் போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.
இளம் தலைமுறைப் படைப்பாளிகளின் கலை இலக்கிய முயற்சிகளுக்கு நீங்கள் எவ்வகையான ஆலோசனைகளை முன்வைக்கிறீர்கள்?
இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு என்னைப் பொறுத்தவரை முன்வைக்கக்கூடிய ஆலோசனைகள் எதுவுமில்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் தமது பாட்டுக்கு இலக்கியம் படைத்துக் கொண்டு தமக்கான பாதையில் பயணிக்கின்றனர். அவர்கள் செல்வது புதிய இலக்கியப் பாதைப் பயணிப்பாகும். அதில் திருப்பங்கள் ஏற்படலாம். அதன் மூலம் இலக்கிய செழுமைக்கு வழிகள் திறக்கவும் படலாம். அவர்களின் நடை அவர்களுக்கானது.
இறுதியாக வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் செய்தி என்ன?
இலக்கியத்தைப் பொறுத்தவரையில் எழுத்தாளரைப் போல் வாசகர்களின் பங்களிப்பும் முக்கியமானது. மூத்த எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கான வாசகக் குழு இருந்தது. அதன் மூலமாக படைப்புகள் பிரபல்யம் பெறவும் பேசப்படவும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றன. இந்நிலையில் எழுத்தாளர்கள் தமக்கான வாசகர்களை தக்க வைத்துக் கொள்வது அவசியமாகின்றது. அதற்கேற்ற வகையில் அவர்களின் எழுத்து நடை, கற்பனைத் திறன், யதார்த்த சிந்தனை, கருப்பொருள் என்பன சிறப்பாக அமைதல் அவசியமாகும்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment