ஆ. முல்லைதிவ்யன் உடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?
எனது பெயர் ஆனந்தமயில் முல்லைதிவ்யன். நான் முல்லைத்தீவின் செல்வபுரத்தில் பிறந்தேன். எழுத்தாளரான எனது தந்தையார் த. ஆனந்தமயில் அமரத்துவம் அடைந்துவிட்டார். அம்மா நகுலேஸ்வரி. ஐந்து அண்ணாக்கள், ஒரு தங்கச்சி. இதுதான் எனது குடும்பம். நான் தற்போது யாழ்ப்பாணத்தின் பொலிகண்டியில் வசித்து வருகின்றேன்.02. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?
முல்லைத்தீவின் செல்வபுரத்தில் பிறந்து தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் நான், எனது ஆரம்பக் கல்வியை யா/கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்திலும், இடைத் தரக் கல்வியை யா/விக்கினேஸ்வராக் கல்லூரியிலும், க.பொ.த. சாதாரண தரக் கல்வியை யாஃபொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும், க.பொ.த. உயர் தரத்தை யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றேன். பின்னர் திறந்த பல்கலைக் கழகத்தில் முகாமைத்துவ பட்டப் படிப்பை மேற்கொண்டேன்.
எனது தந்தையார் த. ஆனந்தமயில் (அமரர்) அவர்கள் ஈழத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளராக இருந்தமையால் வீட்டிலையே நிறையப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எனக்குக் கிடைத்தது. இதனைவிட எனது அப்பாவின் வழிகாட்டுதல்களும் பின்னூட்டல்களும் என்னை இலக்கியத் துறைக்குள் கால் பதிக்கச் செய்தது.
04. உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக எப்போது ஆரம்பித்தது? முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் எது?
பாடசாலைக் காலத்திலே எனது எழுத்து முயற்சி ஆரம்பமாகியது. யாஃவிக்கினேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது அங்கு நடை பெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றியிருந்தேன். அப்போது நான் எழுதிய ஷஷவிடிவை நோக்கி|| கவிதை முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது. அக்கவிதைக்கு எனது தமிழ் ஆசிரியர் திருமதி சிவராமலிங்கம் அவர்களுடையதும் அதிபர் அவர்களுடையதும் மாணவர்களது பாராட்டும் கிடைத்தது.
05. உங்கள் படைப்புகளுக்கு ஊடகங்கள் எந்தளவில் களம் அமைத்துத் தந்தது?
ஒரு கலைஞனின் வளர்ச்சியில் ஊடகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அந்தவகையில் எனது படைப்புகளை வெளிக்கொணர இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. இந்த நேரத்தில் என்னை வளர்த்து விட்டிருக்கின்ற ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
06. இதுவரை வெளிவந்த உங்களது நூல் அறுவடைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
1. நல்லதோர் கனவும் அந்தரிப்போரும் (கவிதை) - 2011
2. கவியின் ஏக்கம் (கவிதை) - 2012
3. அம்மா காத்திருக்கக் கூடும் (கவிதை) - 2013
4. அக்காவுக்கு எழுதிய கடிதம் (கவிதை) - 2014
5. தாய்நிலம் (சிறுகதை) - 2015
6. தாய்நிலம் (மொழிபெயர்ப்பு - தமிழ், ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு) - 2017
7. முல்லை நிலமும் நந்திகடலும் (கவிதை) - 2018
8. வள்ளிபுனத்து ஆலமரம் (கவிதை) - 2019
9. கொக்குத்தொடுவாய் கொக்குகளும் கூழாமுறிப்பு பாலைகளும் (கவிதை, கட்டுரை, சிறுகதை) - 2020
2016 ஆம் ஆண்டில் தாய்நிலம் என்ற சிறுகதை நூல் இரண்டாம் பதிப்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாக அமைகிறது.
07. நூல்களை வெளியிட ஊக்குவித்தவர்கள் யார்?
நான் இதுவரை ஒன்பது நூல்களையும் இணையத் தளத்தில் பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளேன். இதில் எனது எட்டு நூல்களையும் சொந்தக் காசிலையே வெளியிட்டுள்ளேன். நான் ஓர் எழுத்தாளராக இருந்த காரணத்தால் அம்மா எனது புத்தாக்க முயற்சிகளைத் தட்டிக் கொடுத்தார். ஒன்பதாவது நூலுக்கான அனுசரணையை பொலிகை இணையம் வழங்கியிருந்தது. பொலிகை இணையத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
08. உங்கள் "கொக்குத்தொடுவாய் கொக்குகளும் கூழாமுறிப்பு பாலைகளும்" என்ற நூலின் தலைப்பு பற்றிக் கூறுங்கள்?
எனது நூலுக்கு இந்தத் தலைப்பு இடப்படுவதற்கான காரணம் என்னவெனில் இந்தப் புத்தகத்திலே வன்னி மண் சார்ந்த பல விடையங்கள் காணப்படுகின்றன. இந்தப் புத்தகத்தின் உள்ளே ஷஷகொக்கு தொடுவாய் கொக்குகளும் கூழாமுறிப்பு பாலைகளும்|| என்ற கவிதை காணப்படுகின்றது. அதேபோல இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற சிறுகதை ஒன்றிலே கூழாமுறிப்பு பாலைகள் பற்றி வருகின்றது. ஆகவே இரண்டையும் சேர்த்து "கொக்குதொடுவாய் கொக்குகளும் கூழாமுறிப்பு பாலைகளும்" என்று பெயர் சூட்ட முடிவு செய்தேன். இதனைவிட மண் பற்றும் ஒரு காரணமாகும்.
09. மேற்படி நூலின் ஊடாக இலக்கிய உலகுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
இந்த புத்தகத்தில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆக்கமும் பல கருப்பொருட்களை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆக்கங்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக மாற்றியதன் பிரதான காரணம் வருங்கால சந்ததிக்கான ஆவணப்படுத்தலாகும்.
10. உங்களது நூல்களில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றி பொதுவாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?
எனது நூல்கள் பல கருப்பொருட்களைத் தாங்கியதாகவே வெளிவருகின்றன. குறிப்பாக இயற்கை மீதான ஈர்ப்புகள், போரின் அவலங்கள், மண்ணின் மாண்புகள், மொழி மற்றும் இனம் சார்ந்த பெருமைகள், தன்னம்பிக்கை ஊட்டும் உபதேசங்கள் என அவை விரிவு கொள்ளும்.
11. இதுவரை எழுதிய உங்களது சிறுகதைகள் குறித்து?
நான் இதுவரை இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன். அச் சிறுகதைகள் ஷஷதாய் நிலம்|| என்ற பெயரில் சிறுகதை நூலாக வெளிவந்தது. குறிப்பாக போரின் வடுக்களை, போருக்கு பின்னரான வாழ்வியலை பிரதிபலிக்கின்ற படைப்புகளாக இச் சிறுகதைகள் இருக்கின்றன. இதில் தாய்நிலம் என்ற சிறுகதை யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தினரால் தமிழ், ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. நான் எழுதிய சிறுகதைகள் கலாசார திணைக்களம் ஆண்டுதோறும் நடாத்துகின்ற இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவை.
12. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? அண்மையில் வாசித்த படைப்பு எது?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி, கவிஞர் தாமரை ஆகியோருடைய படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஈழத்தை பொறுத்தவரை எழுத்தாளர் தெணியான், எம்.ஏ நுஃமான், சோ. பத்மநாதன், துவாரகன், த. அஜந்தகுமார், எனது தந்தையார் த. ஆனந்தமயில் (அமரர்) ஆகியோரின் படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்தவை.
13. இளையவர்களிடையே இணையப் பாவனை அதிகரித்து நூல்களின் வாசிப்பு குறைந்து வரும் இக்கால கட்டத்தில் வாசிப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்?
இன்றைய உலகமயமாதலில் மூலை முடுக்கெல்லாம் தொழில்நுட்ப பாவனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே புத்தகங்களை வாசிப்பது குறைவடைந்து வருகின்றது. ஆகவே புத்தக வாசிப்பை மேம்படுத்த வேண்டுமாயின் நடமாடும் நூலகங்களை ஆரம்பித்து, அதனூடாக வார இறுதி நாட்களில் புத்தகங்களை வழங்கி, வாசிப்புத் திறனை ஊக்குவிக்கலாம். இதனைவிட புத்தங்களை மையப்படுத்தி வினா விடைப் போட்டிகளை பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தலாம். இவ்வகையான முயற்சிகளின் மூலமே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த முடியும்.
14. உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசியிருக்கிறதா?
ஆம்.. எனது தாய் நிலம் சிறுகதை நூலில் உள்ள ஷஷநட்சத்திரப் பூக்கள், சிகரம், பாரமில்லாக் கனவுகள்|| போன்ற சிறுகதைகள் பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியவை.
15. சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு மிகவும் கணிசமாகக் குறைந்து வருகின்றது. நாவல் துறையில் ஆர்வம் காட்டவில்லையா?
ஆம்.. தற்போதைய இலக்கிய வெளியில் நாவல்களின் வரவு குறைவடைந்துள்ளது. நான் சில நாவல்களை வாசித்துள்ளேன். குறிப்பாக சாகித்திய ரத்னா தெணியான் அவர்களின் ஷஷமரக்கொக்கு|| நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. சிறுகதை, கவிதை, பாடல், கட்டுரை என பலவற்றை எழுதியுள்ள எனக்கு நாவல் ஒன்றையாவது எழுதி, நூலாக்கம் செய்துவிட வேண்டும் என்ற கனவு இருக்கின்றது. எதிர்காலத்தில் நிச்சயமாக எனது ஒரு நாவல் புத்தக வடிவம் பெறும்.
16. உங்களைப் போன்று வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் விசேடமாகக் கூறும் செய்தி என்ன?
தேடலும், நிறைந்த வாசிப்புத் திறனும் இருக்குமானால் நல்ல படைப்புகளை படைக்க முடியும். கலை இலக்கிய போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்ற வேண்டும். அப்போதுதான் போட்டி போடும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்வதோடு, தரமான படைப்புகளையும் படைத்துக்கொள்ள முடியுமாகும். தனிய ஒரே இலக்கிய வடிவத்தில் நிற்காமல் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பாடல் ஆக்கம், நாட்டார் கலை எனப் பல இலக்கிய வடிவங்களில் தடம் பதிக்க வேண்டும். அப்போதுதான் எங்கள் தனித்துவத்தை நிலை நாட்ட முடியும்.
17. உங்கள் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுங்கள்?
யாழ் பிரெஞ்சு நட்புறவு கழகத்தால் எனது தாய்நிலம் சிறுகதை - ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது என்னால் மறக்க முடியாத நிகழ்வாக அமைகிறது.
18. உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது பத்தாவது புத்தகமான "லயத்தின் குடியிருப்புகள் பேசுகின்றன" என்ற புத்தகத்தை வெளியிடக் காத்திருக்கின்றேன். இதனைவிட எனது பிறந்த நாளை முன்னிட்டு நான் பிறந்த முல்லை மண் பற்றி எழுதிய பாடல் ஒன்றை வெளியிடவுள்ளேன். இவைதவிர பல படைப்புகளை எதிர்காலத்தில் படைப்பேன் என்ற நம்பிக்கை நிறையவே எனக்கு இருக்கின்றது.
19. கலை இலக்கியத் துறையில் உங்கள் படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுவார்களா?
கலாச்சார திணைக்களம் வருடா வருடம் நாடாத்துகின்ற தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் இதுவரை ஐம்பதிற்க்கு மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன். இதில் பிரதேச மட்டம், மாவட்ட மட்டம், தேசிய மட்டம் ஆகியன உள்ளங்கும்.
எனக்குக் கிடைத்த விருதுகள் என்று சொல்லும் போது:-
• 2019 ஆம் ஆண்டு வடமராட்சி பிரதேச செயலகம் வழங்கிய "கலைத்தளிர்" விருது
• 2019 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட கலை, கலாசாரப் பேரவை வழங்கிய "இளங்கலைஞர்" விருது
• 2020 ஆம் ஆண்டு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் இணைந்து வழங்கிய இளங்கலைஞர் விருது
போன்ற விருதுகள் இதுவரை கிடைத்துள்ளன. இதனைவிட வடமராட்சி வடக்கு கலாச்சார பேரவை, வல்வெட்டித்துறை கலாச்சார மையம், பொலிகை கலை இலக்கிய மன்றம், ஒளியரசி சஞ்சிகை, பொலிகை மக்கள் படிப்பகம் போன்ற என்னை கௌரவித்துள்ளன.
20. இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
இலக்கிய வெளியில் நாங்கள் பயணிப்பதோடு நிற்காமல் பாடசாலை மாணவர்களையும் இலக்கிய வெளியில் பயணிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு கிராமங்களில் கலை இலக்கியப் போட்டிகளை நடாத்தி சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு எழுத்தாளரும் சமூகத்தைப் பற்றி சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment