Sunday, September 14, 2025

48. கிழக்கு வானம் முஸ்தபா மௌஜுத் அவர்களுடனான நேர்காணல்

கிழக்கு வானம் முஸ்தபா மௌஜுத் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் முஸ்தபா மௌஜூத். கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் என்னும் ஊரில் தற்பொழுது வசித்து வருகின்றேன். ஆசிரியராக, அதிபராக 36 வருடங்கள் கல்விப் புலத்தில் பணி செய்து வருகின்றேன். சிறுவயது முதல் இலக்கியத்தின் பால் எனக்கு அதிக ஆர்வமுண்டு. நான் கிழக்கு வானம் என்ற புனைப் பெயரிலும் ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளேன்.


உங்கள் பாடசாலை, மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?


ஆரம்பக் கல்வியை தோப்பூர் அல்-ஹம்றா மத்திய கல்லூரியில் கற்றேன். இடைநிலைக் கல்விக்காக 1977 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிராவில் சேர்ந்து கற்றேன். மீண்டும் ஊர் வந்து அல்-ஹம்றாவிலே 1980 இல் க.பொ.த. சாதாரண தரம் கற்று சித்தியடைந்தேன். 

பின்னர் உயர் தரத்தில் சித்தியடைந்து 1984 இல் எனது பாடசாலையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதலாவது மாணவன் நான்தான். 1985ஃ1986 கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று கலைப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன். பல்கலைக்கழக வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தந்தது. எனது கவிதைப் பயணம் அங்குதான் கிளைவிட்டு வளரத் தொடங்கியது. அந்த இயற்கைச் சூழலும், அழகும் புதிய நட்புகளும் கவிதையின் ஆர்வத்தை தூண்டியது.


உங்கள் தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1987 இல் ஆசிரியப் போட்டிப் பரீட்சை எழுதி திருகோணமலை மாவட்டத்தில் ஆசிரியராக 1988.05.19 இல் நியமனம் பெற்று திஃமூஃஅல்-தாஜ் மகா வித்தியாலயத்தில் கற்பித்தேன். பின்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முடித்ததும் மீண்டும் அந்தப் பாடசாலையில் கற்பித்தேன். பின்பு சாஹிறா வித்தியாலயம், அதன் பின்பு அல்-ஹம்றா மத்திய கல்லூரி, பின்னர் அந்நூர் வித்தியாலயம், அதன் பின்னர் அல்ஸிபா வித்தியாலயம் என்று எனது கற்பித்தல் நடவடிக்கை தொடர்ந்தது. 


பின்னர் புதிய பாடசாலை ஒன்றை உருவாக்கி அல்ஸாஹிர் வித்தியாலயம் எனப் பெயரிட்டு அதிபராக 05 வருடங்கள் கடமையாற்றினேன். பின்னர் சுயவிருப்பில் மீண்டும் ஆசிரியராக திஃமூஃஅல்-ஹம்றா மத்திய கல்லூரியில் கடமையாற்றினேன். தற்போது பாலத்தோப்பூர் ஸாஹிறா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருகின்றேன். 

தரம் 8 முதல் 13 ஆம் வகுப்புக்களுக்கு இஸ்லாம், தமிழ், சமூகக் கல்வி, இஸ்லாமிய நாகரிகம், அரசியல் போன்ற பாடங்களைக் கற்பித்துள்ளேன். 100 க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைகழகம் செல்ல மிகுந்த அர்ப்பணிப்போடு கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனது ஆசிரியர் பணி 35 வருடங்களைக் கடந்து செல்கிறது. ஆசிரியர்ப்பணி அறப் பணி. அர்ப்பணிப்பே முதற் பணி.


உங்களுக்கு இலக்கியத் துறையில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

அது 1979 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன், அப்போதுகளில் எனது பள்ளியில் உள்ள சக நண்பர்கள் சிலர் கவிதை எழுதுவார்கள். அதைப் பார்த்துத்தான் நானும் கவிதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அத்துடன் பழைய சினிமாப் பாடல்களை நான் அதிகமாகக் கேட்பேன், அதன் ஒவ்வொரு வரிகளையும் மிகவும் உன்னிப்பாக இரசிப்பேன், குறிப்பாக கண்ணதாசன் பாடல்கள், வாலியின் பாடல்கள் என்னை வெகுவாகப் பாதித்தன. என் மானசீகக் கவிக் குருவாக கவியரசர் கண்ணதாசனை மகிழ்வோடு குறிப்பிடுவேன். அவரின் பாடல் வரிகள்தான் என்னைக் கவிதை உலகுக்கு வேகமாக வரத்துண்டியது. 


முதலாவது கவிதையை எழுதிய தருணத்தை நினைவுபடுத்தி கூற முடியுமா?

1979 ஆம் ஆண்டு தரம் 10 இல் கற்றுக்கொண்டிருக்கும் வேளை சக நண்பர்களுக்குப் போட்டியாக நானும் கவிதை எழுதினேன். நட்பு என்ற தலைப்பில் நான் எழுதிய முதற் கவிதை அது. அக்கவிதையின் நினைவிலுள்ள வரிகள் பின்வருமாறு:-


அன்று சொன்னாயே

நன்றென்று

அந்த வாழ்க்கையின் 

நன்னாளை 

அன்னாளை என்றென்றும்

நான் மறவேன்

என்னுயிர் உள்ளத்தில்

உள்ளவரை


இதுதான் நான் எழுதிய முதற் கவிதை. இதை எழுதியதும் வகுப்பறையில் நான் வாசித்துக் காட்டினேன். வகுப்பறை ஒரே கலகலப்பாக இருந்தது. இதை என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றும் கூறலாம். இந்த சந்தர்ப்பத்தில் எனது சக நண்பன் ஏ.ஜே. பறக்காத் தொழிலதிபர் (கொழும்பு) துணையாக இருந்து, உற்சாகம் தந்தார். அந்தப் பயணம் இன்று வரை தொடர்கிறது.


புதுக்கவிதைகள் மீது இளைஞர்களுக்கு ஏன் இவ்வளவு மோகம்? நீங்கள் ரசித்த புதுக் கவிதைகளைச் சொல்ல முடியுமா?


புதுக்கவிதை இலகு நடையில் அழகு தமிழில் புனையப்படுவது. பாமரன் வரை புரிந்து கொள்ளக் கூடியதானது. வரம்புகள் இல்லாத காட்டாறு மாதிரி. பூமியைத் தழுவி நழுவி இலக்கியக் கடலில் சங்கமமாவது. ஆதலால்தான் புதுக் கவிதைகளை ஆசிர்வதிக்கிறார்கள். எண்ணங்கள் வண்ணங்களாக யாரும் எழுதலாம் என்பதால் இதற்கு ரசிகர்கள் அதிகம். கவிஞர் வைரமுத்துவின் மரம் பற்றிய புதுக் கவிதை என்னை வெகுவாகக் கவர்ந்தது.


மரம்தான் மரம்தான்

எல்லாம் மரம்தான்..

மறந்தான் மறந்தான்

மனிதன் மறந்தான்..


மனிதா

மனிதனாக வேண்டுமா

மரத்திடம் வா,

ஒவ்வொரு மரமும் போதிமரம்..


மற்றும் கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகள், கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இரசித்த இன்னுமொரு கவிதை,


காற்றில் அலக்கழிந்து

செல்கிறது

பட்டாம் பூச்சி

அதன் கால்களில் காடு


இந்தக் கவிதையை எழுதிய கவிஞரின் பெயர் ஞாபகத்தில் இல்லை. இவ்வாறு நான் இரசித்த கவிதைகள் நிறைய உண்டு. அனைத்தையும் இங்கு எழுத முடியாதுள்ளது.


நீங்கள் இதுவரை வாசித்த நூல்களில் உங்களைக் கவர்ந்த நூல் எது?

நான் வாசித்த முதல் நூல் ஷஷஉமர் முக்தார்|| என்ற நூலாகும். சரித்திர நாவல் சிந்து நதிக் கரையினிலே, மஹ்ஜபீன், மேற்கு வானம், நபிமார்கள் சரிதம், வன வாசம், இப்பி பக்கீர், வந்தார்கள் வென்றார்கள், புனித பூமியிலே, சிலுவை யுத்தங்கள் இதில் மிகவும் பிடித்தவை "மேற்கு வானம்" என்ற நூலாகும். அத்துடன் வைரமுத்துவின் காவி நிறத்தில், வைகறை மேகங்கள் போன்ற கவிதைத் தொகுதிகள், கண்ணதாசன் கவிதைகள், சோலைக் கிளியின் அவணம் கவிதைத் தொகுதி போன்றவற்றையும் குறிப்பிடலாம்.


நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

1987 இல் முத்திங்கள் (மூன்று மாதங்களுக்கொரு முறை) வெளியீடு கையெழுத்துப் பிரதியாக ஷஷநினைவாகும் நிஜங்கள்|| என்ற பெயரில் கவிதை இதழ்கள் இரண்டை வெளியீட்டேன். அடுத்து தோப்பூர் மண்ணில் முதலாவது வெளியாகிய எனது தனிப்பட்ட இலக்கியப் படைப்பு ஷஷகீழ்த்திசைக் காற்று|| என்ற கவிதை நூலாகும். எனது இந்தக் கவிதை நூல் 2022.02.20 இல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் 94 கவிதைகள் இடம்பிடித்துள்ளன.


உங்களது நூலான கீழ்த்திசைக் காற்றின் பேசுபொருள் குறித்துக் கூறுங்கள்?

கிழக்கின் விடியல் பக்கமாக எழும் காற்றையே இது குறித்து நிற்கிறது. விடியலுக்கான தூதாகவே இக்காற்று அமைகிறது. (எனது நூலும் அமைகிறது) மெல்லியதாய் வீசும் போது தென்றலாய், வருடலாய், இதமாய், கனிவாய், எம்மை மகிழ்வித்துச் செல்லும் தன்மை கொண்டது. காற்று வேகம் கொள்ளும் போது, கோபம் கொள்ளும் போது புயலாகி பெருஞ் சூறாவளியாய் உலகையே உசுப்பி விட்டுப் பாடம் சொல்லும். இந்த இரண்டு கருவையும் மையப்படுத்தியே எனது எழுத்துக்கள் பலருக்குத் தென்றலாகவும், பலருக்குப் புயலாகவும் வீசி அடித்துத் தாக்கும் வல்லமை கொண்டது. இதில் கிராமியம் மணக்கும். காதல் சிலிர்க்கும். ஏக்கம், தவிப்பு, ஏமாற்றம், வலி, துயரம், விடுதலை எல்லாம் தாங்கி சமாதனம், சமத்துவம் போதிக்கும்.


நூல் வெளியீடுகளில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதல் காப்பாற்பட்டது, வெற்றி கிட்டியது, வரவேற்பு பலமாக இருந்தது என்று சொல்வதைவிட இது மனத்திருப்திக்கான பயணம் என்றே சொல்ல முடியும். இதனால் நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. 


புதுக்கவிதையென்பது மரபுக் கவிதையிலிருந்து தன்னை முழுமையாகத் துண்டித்துக் கொள்கின்றதா? 

இல்லை. சந்தம், சீர், அணி, எதுகை, மோனை, இவைகள் கலந்த சுவைமிக்கதானதே புதுக் கவிதை. எழிய நடையில் இவைகளைக் கலந்து அழகு செய்ய வேண்டும். இல்லாது போனால் உப்பில்லாத பண்டம் போல் ஆகிவிடும்.


மரபுக் கவிதைகளை மனதில் நிறத்தி வைப்பது மாதிரி புதுக் கவிதைகளை நினைவில் நிறுத்திக் கொள்ள முடியுமா?

ஏன் முடியாது? இதற்கு சில உதாரணங்களைக் குறிப்பிட முடியும். சினிமாப் பாடல்கள் எல்லாம் புதுக்கவிதைகள்தான். அந்தவகையில் கண்ணதாசன், வைரமுத்து, வாலி, மு. மேத்தா, பேன்றவர்களின் பாடல்கள் மக்கள் மனதில் பதியவில்லையா? பேச முடியாத குழந்தையும் முணுமுணுப்பது இந்தப் பாடல்களைத்தானே. கடின சொற்களால் வடிக்கப்பட்ட கவிதைகளை மெத்தப் படித்தவர்கள் மட்டுமே வாசித்து இன்புற முடியும்.  அதாவது 20 வீதத்தினர் மட்டுமே. மிகுதி 80 வீதத்தினர்; புதுக் கவிதைகளின் சுவைகளைப் பருகியவர்கள் தான். இதுதான்  நிதர்சனம். இன்று உலகை, தமிழை ஆட்சி செய்வதும் இதுதான்.


மரபுக் கவிதைகள் காலப்போக்கில் முற்றாக அழிந்துவிடும் என்று பரவலாகச் சொல்லப்படுகிறதே இதுபற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மரபுதான் புதுக் கவிதையின் பிறப்பிடம், அடித்தளம். அது இன்றி இது இல்லை. ஓரளவு மரபுகள் பேணி எழுதும் புதுக்கவிதையே காலங் கடந்தும் மணக்கும். வேரில்லாது கிளைகள் ஏது? மரபின் அலங்காரமே புதுக்கவிதையாகும்.


இலக்கணம் தெரியாதவர்கள் புதுக்கவிதை எழுதுகிறார்கள் என்கிறார்களே இதற்கு என்ன சொல்வீர்கள்?


கவிதையை யார் உருவாக்கியது? வரம்புகள் இட்டவர்கள் யார்? இது குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் உரித்தானதா? என்ற வினா இன்றும் எழுதுகிறது. புரியாத மொழியில், புரியாத வடிவில் இருந்தால் யாருக்கு இலாபம்? மண்ணில் புதைந்த மாணிக்கம் மாதிரித்தான். 

கவிதைகளின் தோற்றுவாய் படிக்காத ஏழை பாமரமக்களே, அவர்கள் முறையாக இலக்கணம் படிக்கவில்லை. இலக்கியம் வடிக்கவில்லை. ஆனால் எண்ணங்கள் வாழ்வியல் சோகங்களை, மறக்க நாட்டாரியலை உருகிப் பாடி மகிழ்ந்தார்கள். அவர்களை அறியாமலே மரபுகளும், ஓசைகளும், சந்தங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து சுவை தந்தன. வாழ்வில் அனைத்தையும் அவர்கள் அப்பாடல்களுக்குள்ளே கொண்டு வந்தார்கள். அவர்களின் அழகு நடைகளே காலப்போக்கில் மரபுகளாகவும், புதுக் கவிதைகளாகவும் தோற்றம் பெற்று வளர்ந்தது. படித்தவர்கள் பேர் பெறக் காரணமாயிற்று என்பதுதான் வரலாற்று உண்மை. இதை மறுப்பார் யாரும் இல்லை.

கருத்தாழம், அழகு, மென்மை, இனிமை சுருங்கச் சொல்லல், அவைகள் கலந்து வரும் அழகான அருவியே புதுக்கவிதை. இரண்டும் ஒரு தாய்ப் பிள்ளைகள்தான். முத்தவர், இளையவர் அவ்வளவுதான். ஆகவே இலக்கணம் ஒரு பொருட்டல்ல. இதில் மொழி வளமே முக்கியம் பெறுகின்றது.


பாரதியார் பெண்களை தமிழ் பாடல்களில் உயர்த்திப் பாடி "பாரதிகண்ட புதுமைப் பெண்" எனப் புரட்சி எழுப்பினார். உங்கள் கவிதைகளில் பெண்கள் எந்த இடம் வகிக்கின்றனர்?

நான் பெண்களை மதிப்பவன். என் எழுத்துக்கள் பெரும்பாலும் ஏழைகளையும், பெண்களையும் அவர்களின் வலிகளையும் பாடுவதாகவே அமையும். பெண்ணியம் போற்றுதற்குரியது பெண்மை மகத்துவமானது. பெண்மை அது தூய்மையின் உறைவிடம். பெண்களின் எழுச்சி சமூகத்தின் மறுமலர்ச்சியாகும்.

 

பிறமொழிக் கவிஞர்கள் பற்றி?

உருது கவிஞர் அல்லாமா இக்பால், உருது கவிஞர் உமர் கையாம் ஆகியோரின் கவிதைகள் கருத்தாளமும் புதுமையும் புரட்சியும் மிக்கவையாக உள்ளன. அதனால் அவற்றை விரும்பிப் படிப்பேன். அவர்களின் புரட்சி வரிகள் எனது கவிதைகளிலும் இழையோடிக் காணப்படும்.


நீங்கள் இதுவரை எழுதிய கவிதைகளில் கிராமிய மணம் பரப்பும் அழகிய கவிதை ஒன்றைக் குறிப்பிட முடியுமா?

ஒரு ஏழைக் கணவன் - மனைவியின் காதலும் ஊடலும் பற்றி பின்வரும் ஷஷகடலுக்குப் போனவக|| என்ற கவிதை மூலம் தருகிறேன்.


கடலுக்குப் போன மச்சான்

கருக்கலுக்க வாறீங்களா

காத்து நாகெடந்து

கருவாடாப் போகலாமா


கடலுக்க மீனுமில்லக்

கண்டலுக்க நண்டுமில்லக்

கடிநாயப் போலனாக்

கடலுக்க அலைஞ்சேன்டி


ஒன்ட நெனப்போட

ஒத்தயா நின்டேன்டி

ஓரா ஒன்னுரெண்டு

ஒனக்காகப் புடிச்சேன்டி


அதுக் கொண்ணும் அலுப்பில்ல

ஆசைக்கு வெக்கமில்ல

தொட்டிலில பச்சப் புள்ள

அஞ்சாவது வேணுமாக்கும்


அடியே கருவாச்சி

ஆசைக்கு அலுப்பில்ல

வக்கணயாப் பேசாத

வாடாத மல்லிகையே 


பூசி மெழுகிப்

பேசினது போதும் மச்சான்

பூவான கையால

வெள்ளாணம் கேக்கு தாக்கும்


புளிய காச்சிருக்குப்

புளியங்கா கொண்டாங்க

தேங்காயும் திருவுங்க

தங்கத்துக்கு நாதறென்


காத்தும் அடிக்குதுகா

கருமேகம் சுத்துதுகா

மழைக்கு முன்னால

மல்லாந்து படுக்கனுங்கா


ஊரு பொம்பளைக்க

ஒசத்தி நீதான்டி

உசிரு கெடக்கும் வர

உசிரா இருப்பேன்டி


அடிப்போடும் மச்சானே

அதுக் கொண்ணும் கொறவில்ல

படுக்கப் பாயில்ல

பவுசுக்குப் பஞ்சமில்ல


சிரிப்பு வருவுதடி

சொன்னவொரு சொல்லால

கறுப்பு என்றாலும்

கட்டழகி நீதான்டி


அடுப்புல கறிகொதிக்க

அடிமனசும் கொதிக்குதுகா

கொடுஞ் சிரிப்பும் பறியுதுகா

நெனச்சுப் பாக்கயில


குருவிக் குஞ்சுகளப்

பசியாத்திப் படுக்கவையி

கைகால அலம்பிக்கிட்டு

அடுப்படிக்கு நாவாறன்


ஏழைங்க இல்லத்து

இதிகாசம் இதுதாங்க

மண்வீட்டு மாளிகையின்

மணிக் காதல் சுவைதாங்க


ஆசிரியராக, அதிபராக கடமையாற்றிய உங்களால் மாணவர்களிடையே காணப்படும் இலக்கிய ஆர்வம் பற்றி என்ன சொல் முடியும்?

இன்றைய கால கட்டத்தில் மாணவர்கள் இலக்கியத்தின்பால் மிகவும் ஈர்ப்பு இல்லாமலே காணப்படுகின்றார்கள். படிப்பதில், வாசிப்பதில் ஆர்வமின்மை, தேடல் மிகவும் குறைந்துள்ளது. தொலைபேசி பாவனை, சினிமா மோகம், நாகரீக மோகம் இவைகள் எல்லாம் இலக்கியம் மீதான பார்வையை மிகவும் வேகமாகப் பாதிக்கின்றன. இவர்களை மீட்டெடுக்க, கலை உணர்வை வளர்க்க வேண்டியது தலையாயக் கடமையாகும். 


இப்போதைய ஒரு சில மாணவர்களிடம் போதைப் பழக்கம் காணப்படுகிறது. மாணவர்களைப் போதையில் இருந்து மீட்க ஒரே வழி இலக்கியத் தாகத்தை அவர்களிடம் தூண்ட வேண்டும். அதன்பால் அவர்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் ஒரளவு மாற்றம் நிகழும் என்பது எனது கருத்தாகும்.


உங்கள இலக்கிய வாழ்வில் இதுவரையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவம் என்றால் எனது நாற்பது வருடக் கனவான கீழ்த்திசைக் காற்று நூல் வெளியீடுதான். எனது நீண்ட காலக் கனவு நனவான சம்பவம், ஊர் கூடி மகிழ்ந்த தருணம், நான் அங்கீகரிக்ப்பட்ட நாள், இது எனது மண்ணின் சாதனையின் முதற்படி ஆகும். இந்த இலக்கியப் படைப்பை இந்த மண்ணில் உருவாக்கியவன் என்ற மனத்திருப்தியே இன்னும் படைக்க ஆர்வம் ஊட்டுகிறது.


இதுவரை நீங்கள் பெற்ற விருதுகளும் சான்றிதழ்களும் பற்றி நீங்கள் குறிப்பிட முடியுமா? 

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளின் கலை இலக்கியக் குழுமங்களுக்குப் போட்டிக் கவிதை எழுதி 750 க்கும் மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களும்  குழுமங்களிலிருந்து 40 க்கும் மேற்பட்ட விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றின் விபரங்களைத் தருகின்றேன்.

• 2019.09.09 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2019.10.07 - 08 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2020.08.06 - 09 கவிமணி விருது - சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2020.10.22 கிராமியக் கவி விருது - கவியுலகப் பூஞ்சோலை கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2020.10.25 கவிக்குறல் விருது - கவியுலகப் பூஞ்சோலை கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2020 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை)

• 2021.06.18 கவியமுது விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2021.08.19 சிந்தனைச் சிற்பி விருது - கவிதைச் சரணாலயம் (இந்தியா)

• 2021.08.23 கவியருவி விருது - கவிதைச் சரணாலயம் (இந்தியா)

• 2021.09.11 கவிச்சுடர் விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2021.09.18 மகாத்மா விருது - தனலெட்சுமியின் ரோசாக் கூட்டம் கவிதைக் குழுமம் (இந்தியா)

• 2021.09.19 விடிவெள்ளி விருது - மகாகவி பாரதி கவிச்சுடர் குழுமம் (இந்தியா)

• 2022.12.27 கலை முத்து - மூதூர் பிரதேச செயலகம் (இலங்கை)

• 2021 கவித்தேன் விருது - தேனீ கலை இலக்கிய மன்றம் (இலங்கை)


உங்களது எதிர்கால எழுத்து முயற்சி பற்றி குறிப்பிடுங்கள்?

எதிர்காலத்தில் பின்வரும் 05 நூல்களை வெளியிடவுள்ளேன். 


1. தோப்பூர் வரலாறு

2. வெந்து தணிந்தது ஊரு (சிறுகதை நூல்)

3. மலர்வனம் (சிறுவர் பாடல் நூல்)

4. மண் வாசம் (கிராமியக் கவிதை நூல்)

5. பௌர்ணமி இரவு (கவிதை நூல்)


இவற்றையே எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக வெளியீடு செய்ய நினைத்துள்ளேன்.


வேற எதாவது செல்ல விரும்பினால்?

இதுவரை நான் பல குறும்படங்களில் நடித்துள்ளேன். அதாவது கொவிட் பாஸ், கிரிக்கட் வேணாங்க 1, 2, மூதூர் தயாரிப்பான புதையல் மற்றும் கூலி, விளைவு, கில்லர் ஆகிய குறும்படங்களில்; முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளேன். இவற்றை யூடியுப் இணையத் தளத்திலும் காணலாம்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



47. முறையூர் மங்கேஷ்வரன் உடனான நேர்காணல்

முறையூர் மங்கேஷ்வரன் உடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்குக் கூறுங்கள்?

என்னைப் பற்றிக் கூறுவதென்றால் எனது பிறப்பிடம் மட்டக்களப்பு முறக்கொட்டன்சேனை. எனது குடும்பம் சற்றுப் பெரிய குடும்பம். அம்மா அப்பா, இவர்களோடு ஆறு பெண் சகோதரிகள், (அக்காமார்) இரண்டு சகோதர்கள் (அண்ணாமார்) குடும்பத்தில் இளையவன் நானே. அப்பா ஓய்வு பெற்ற ஒர் அரசாங்க அதிபர். அவர் காலமாகி பல வருடங்களாகின்றது. பொதுவாக எங்களது குடும்பம் ஆசிரியர் குடும்பம். படிக்கின்ற காலங்களிலிருந்தே வானொலி, பத்திரிகைகளோடு நிறையவே தொடர்பினைப் பேணி வந்தேன். சிறுவயதிலிருந்தே இந்த எழுத்துத் துறையில் எனக்கு ஏற்பட்ட தாகம் அது இன்று வரை என்னோடு பயணிக்கிறது. படிக்கின்ற காலங்களில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் இவற்றோடு மட்டுமன்றி இலங்கை வானொலி போன்ற ஊடகங்களில் முழு நிலா என்ற புனைப் பெயரோடு அந்தக் காலங்களிலிருந்தே எழுத ஆரம்பித்தேன். அதிகமாக ஓய்வு நேரங்களில் எழுதுகிறேன். என் எழுத்துக்களுக்கு முதல் ரசிகன் நானேதான். 


கால மாற்றத்தாலோ என்னவோ திடீரென புலம்பெயர்ந்து இலண்டன் மாநகரிலே பல வருடங்களாக மகன், மனைவி என்ற இணைபிரியாத பந்தங்களோடு வாழ்ந்து வருகிறேன். நட்பு மீது நல்ல நம்பிக்கை இருக்கிறது. இந்த நட்பு என்ற நந்தவனத்தில் நிறம் மாறாத பூக்களையே என்றும் நேசித்து அதன் வாசனையை சுவாசிக்கின்றேன். இயந்திரமயமான வாழ்வியலிலும், இதயத்தில் கருணையையும், காதலையும் தாங்கி கடன்கள் ஏதுமில்லாமலே கண்ணியமாக களிப்போடு நகர்கிறது எனக்கான நாழிகைகள்.


உங்கள் ஊர், பாடசாலை வாழ்வு மற்றும் தொழில் அநுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?


கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலுள்ள முறக்கொட்டான்சேனை எனது பிறப்பிடம். எனது சாதாரண தரம் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்திலும், உயர் தரம் செங்கலடி மத்திய கல்லூரியிலும், வெளிவாரிப் பட்டப் படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றேன். அதன் பின்னர் லண்டனிலுள்ள University of Sunderland இல் Bachelor of Arts Business Management பட்டப் படிப்பைக் கற்றேன். அதனைத் தொடர்ந்து, University of Northampton  இல் Bachelor of Arts  in Business & Management final year கற்றேன். தொடர்ந்து HND Diploma கற்கை நெறியினையும் கற்றேன்.


இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்படக் காலாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?

இலக்கியத் துறை ஆர்வம் என்பது எனது பாடசாலைக் காலத்திலே உருவாக ஆரம்பித்தது. படிப்புத் தவிர்ந்த ஏனைய ஓய்வு நேரங்களை பத்திரிகை, சஞ்சிகைகள் வாசிப்பதிலும் மற்றும் இலங்கை வானொலி கேட்டலோடும் இணைத்துக் கொண்டேன். இதன் பிரதிபலிப்பே எனக்குள் எழுதுகின்ற  ஆர்வமும், ஆற்றலும் உண்டானது. எழுத வேண்டும் என்கின்ற ஒரு சூழலை எனக்கு இலங்கை வானொலிதான் ஏற்படுத்தியது என்பதை இந்த இடத்தில் பெருமையோடும், நன்றியோடும் கூறிக்கொள்கிறேன்.


உங்களது முதற் படைப்பு எப்போது, எதில் வெளியானது?

எனது முதற் படைப்பு இலங்கை வானொலியிலேதான் முதன் முதலாக ஒலித்தது. அதனைத் தொடர்ந்தே ஏனைய ஊடகங்களில் உலா வரத் தொடங்கியது. இப்போது அது எந்த ஆண்டில் ஒலிபரப்பானது என்று சரியாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சியிலே எனது கவிதை நான் ஆண்டு 9 இல் கல்வி கற்கும்போது (1991, 1992 காலப் பகுதிகளில் என நினைக்கிறேன்) ஒலிபரப்பானது என்று தான் நினைவிலிருக்கிறது. அதன் பிறகே மித்திரன் வாரமலர், தினமுரசு, ஜனனி.. முதலான அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எனது சிறுகதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் களம் கண்டன.


உங்களை கவிதை எழுதத் தூண்டியது எது?

பொதுவாகக் காதலில் தோற்றவர்களும், காதலிப்பவர்களுமே இந்தக் கவிதை எழுதுவார்கள் என்கின்ற ஒர் எண்ணம் எம்மில் இன்றுவரை பலருக்குண்டு. காலங்கள் மாறினாலும் அந்த மனநிலை மட்டும் எப்போதுமே மாறாத ஒன்றாகவே இன்றுவரை காணப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதக் காரணம் காதலோ அல்லது கண்ணீரோ அல்ல. மாறாக இளவயதில் என்னில் காணப்பட்ட வாசிப்பும், வளமான சிந்தனையுமே கவிதை எழுதத் தூண்டியது என்று சொல்லலாம்.



உங்களை எழுத ஊக்கப்படுத்தியவர்கள் யார்?

ஊக்கம் அது எனக்குள்ளே ஊன்றி வளர்ந்த ஒன்றாக இருந்தது. அந்தக் காலங்களில் இலங்கை வானொலியில் இசையும் கதையும், தேர்ந்த இசை, விமர்சகர் விருப்பம், ஆடவர் அரங்கம், அந்தி நேரச் சிந்துகள் முதலான நிகழ்ச்சிகளில் எனது பிரதிகள் அதிகம் ஒலிபரப்பாகின. அப்போது இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலவிதமான கலையுலக நண்பர்கள் என்னுடன் இணைந்து கொண்டார்கள். அவர்களின் ஊக்கமும், பாராட்டுமே இன்று நான் வளர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்பேன். ஒலிப்பான ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் எங்கோ ஓர் மூலையிலிருந்து முகம் தெரியாமல் அவர்கள் கொடுத்த உற்சாகம்தான் இதற்கு ஊன்றுகோலாய் அமைந்தது. அதுமட்டுமன்றி இலங்கை வானொலியில் கடமையாற்றிய பல அன்பு அறிவிப்பாளர்களின் ஊக்கமும் காரணம் என்பேன்.


நீங்கள் வாசித்த பல கவிதைகளில் அதிகமாக இரசித்து, வாசித்த கவிதை ஒன்றைப் பற்றிச் சொல்ல முடியுமா?

பல கவிஞர்களுடைய பல கவிதைகளையும் படிப்பேன். ஒவ்வொரு கவிஞர்களினதும் ஒவ்வொரு கவிதை வரிகளும் ஏதோ ஒரு காரணத்திற்காக என் மனதில் இடம்பிடித்திருக்கும். பல கவிதை வரிகள் மனதை ஆசுவாசப்படுத்தி, ஆழ்மனதிலே சில அதிர்வுகளை உண்டாக்கும். அப்படிப்பட்ட பல கவிஞர்களின் கவிதை வரிகளால் கட்டுண்டு போயிருக்கிறேன். இதில் எந்தக் கவிதையை, எப்படிச் சொல்வது? குறிப்பாக இந்தக் கவிஞரின் கவிதை வரிகள்தான் என்றில்லை. பல கவிஞர்களின் பலநூறு கவிவரிகள் என் ஆழ்மனதில் ஆலோலமிசைக்கின்ற ஆரோகணங்களே. குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்று இரண்டல்ல, பலநூறு கவிஞர்களின் கவிதை வரிகள் உள்ளன.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

பொதுவாக எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் என்கின்ற அந்தஸ்தினைக் கொடுப்பது அவர்கள் வெளியீடு செய்கின்ற நூல்கள்தான். அது அவர்களுக்கு ஒருவித மன ஆனந்தத்தைக் கொடுத்து, சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தையும் கொடுத்துவிடுகிறது. அந்தவகையில் எனது இரு கன்னி நூல்களை அண்மையில்தான் இலங்கையிலே வெளியீடு செய்திருந்தேன். ஷஷமனதோடு பேசும் மௌனங்கள்' என்கின்ற புதுக்கவிதை நூலையும் மற்றும் ஷஷமகிழம் பூக்கள்' என்ற ஹைக்கூ கவி நூலையும் அண்மையில் வெளியீடு செய்திருந்தேன். இவை இரண்டும் எனது கன்னிக்கவி நூல்கள் ஆகும்.


உங்களது முதலாவது கவிதைத் தொகுதியான "மனதோடு பேசும் மௌனங்கள்" குறித்துக் கூற வருவது?

நாம் ஏதோவொன்றைச் செய்கின்ற போதோ அல்லது செயற்படுத்துகின்ற போதோ அதிலிருந்து மற்றவர்கள் ஏதாவது ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பெற்றுக்கொள்வதால் நமக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கின்றதோ இல்லையேர் மனமகிழ்ச்சி நிச்சயமாக உண்டாகும். இந்த மனதோடு பேசும் மௌனங்கள் என்கின்ற எனது கவிதைத் தொகுதியானது காதலை மட்டுமன்றி பல இன்னோரன்ன விடயங்களைச் சொல்கின்ற, அதேவேளை இலகுவான மொழிநடையில் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைக் கோர்ப்புக்களால் வளம் சேர்ந்திருக்கும் ஒரு கவிதைத் தொகுதியாக அமைந்துள்ளது. 

கவிதை என்றால் என்ன என்று புரியாத, அறியாத எவருக்கும் இதில் இணைக்கப்பட்டிருக்கும் எனது கவிதைகள் இலகுவில் அவர்களின் இதயத்திற்குள் புகுந்து இன்னிசையை மீட்டும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. இலகுவான வார்த்தைகள், உவமான உவமேயங்கள் படிப்பவர் மனங்களில் பதிந்திடக் கூடியனவாகவே உள்ளன. இலகுவான மொழிநடையோடு எல்லோருக்கும் புரியும் படியான கவிதைகளே மனதோடு பேசும் மௌனங்களில் மலர்ந்த கவி மலர்கள். அகராதி எடுத்து எவரும் அரும்பதங்களைத் தேட வேண்டிய அவசியம் எனது கவிதை நூலில் கிடையாது. அத்தனை கவிதைகளும் யதார்த்தமான வார்த்தைகளால் வண்ணங்களாகியிருக்கிறது. இது எனது கவிதை தொகுதியைப் படித்த அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.


உங்களது கவிதைத் தொகுதிக்கு "'மனதோடு பேசும் மௌனங்கள்" என்ற நாமத்தினை ஏன் வைத்தீர்கள்?

நல்லதொரு கேள்வி. எனது கவிதை நூல் எனது பெயரின் முதலெழுத்தோடு ஆரம்பமானால் நன்றாய் இருக்கும் என்று எண்ணினேன். அதனால் ஷம| என்று ஆரம்பிக்கும் எல்லா விதமான தலைப்புகளையும் ஆர்வத்தோடு ஆராய ஆரம்பித்தேன். அந்த ஆராய்விலே எனக்கு லண்டனில் வானொலி ஒன்றில் நான் அறிவிப்பாளராய் கடமையாற்றிய வேளை, மனதோடு பேசுங்கள் என்ற ஒரு இரவு நேரக் கவிதை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தேன். அந்த நிகழ்ச்சி அந்த வானொலியில் அதிக வரவேற்பையும் அபிமானத்தையும் வென்ற நிகழ்ச்சியாக இருந்தது. சற்று சிந்தித்தேன்.. ஏன் இந்த நிகழ்ச்சியின் தலைப்போடு இணைந்த மாதிரியான ஒரு பெயரை எனது கவிதை நூலுக்கு வைக்கக்கூடாது என்று என் மனம் நினைத்தபோதுதான், இந்த மனதோடு பேசும் மௌனங்கள் என்ற தலைப்பு என் மனதோடும் பேசியது. அத்துடன் நான் விரும்பி ரசித்து வழங்கிய அந்த வானொலி நிகழ்ச்சியை மறக்கக் கூடாது என்பதற்காகவும் எனது கவிதைத் தொகுப்பிற்கு இந்தப் பெயர் சூட்டினேன். இத்தலைப்பை எனது கவிதை நூலுக்குச் சூட்டியதில் மனம் முழுவதும் நிரம்பிய ஒரு ஆத்ம திருப்தி; எனக்குக் கிடைத்தது.


உங்களது கவிதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

உண்மையில் இவ்வளவு ஆதரவு எனது கவிதைகளுக்குக் கிடைக்குமா என்று நான் எண்ணவில்லை. வெறுமனே பெயருக்கு புகழ்ந்து பேசுபவர்கள் பெருகிக்கொண்டுவரும் இந்தக் கால கட்டத்திலும், வாசிக்கின்ற பழக்கமும், வழக்கமும்  அருகிக்கொண்டுவரும் இந்தக் காலத்திலும் கவிதைகளைப் படித்து அதனை உள்வாங்கி உணர்விலே உலாவரவிட்டு தங்கள் உணர்வுகளை உண்மையாகச் சொல்கின்ற பலர் எனது கவிதைகளால் கட்டுப்பட்டு கதை கதையாய்ச் சொன்ன நாட்களும் உண்டு. அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட எனக்கு, அட நமது எழுத்துக்களிலும் வாசம் மட்டுமல்ல வர்ணமும் உண்டு என்பதை உண்மையாய் என்னால் உணர முடிந்தது. வயது வேறுபாடின்றி வாசித்தவர்கள் அனேகரும் அவ்வப்போது தங்கள் கருத்துக்களை எனக்குப் பாராட்டாகவும், பாமாலையாகவும் புகழ் சேர்த்தது, எனக்குப் பூரிப்பையே ஏற்படுத்தியது. அது எனக்கு மனம் நிறைந்த மகிழ்வினையும் தந்தது. என்றும் மறக்க முடியாத ஒரு மகிழ்வான தருணமாக அமைந்தது.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். எதுவானாலும் எழுத்துக்களுக்கு எப்போதும் வலிமையும் வேகமும் அதிகம். ஆனால் இந்தக் காலச் சமூகம் என்பது சற்று வித்தியாசமானது. காலங்கள் மாற மாற சமூகத்திலுள்ள சடங்குகள் மட்டுமல்ல சம்பிரதாயங்களும் மாறிக்கொண்டே போகின்றன. 

சமூகத்தில் மாற்றம் வர எனது எழுத்துக்கள் அப்படி எதையுமே போதிக்கவில்லை. மாற்றம் ஏற்படவேண்டுமாயின் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை முதலில் உணர வேண்டும். மாற்றம் என்பதை அவர்களிடத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு தனி மனிதனில் மாற்றம் வருவதே மாயமானதாக இருக்கும் போது சமூகத்தில் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்த முடியும். சமூகத்தில் மாற்றங்கள் வரவேண்டும்தான் அதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் நிச்சயம் பலவகைகளிலும் போராடினாலே சமூகத்தில் மாற்றம் ஏற்படும். எனது எழுத்துக்கள் சமூகம் சார்ந்த கருத்துக்களை ஆங்காங்கே கூறியிருந்தாலும் நிச்சயம் அவற்றால் சமூகத்தில் மாற்றம் ஏற்பட மாட்டாது என்பதுதான் உண்மை.


உங்களது "மகிழும் பூக்கள்" ஹைக்கூ நூல் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்?

முன்பு இருந்த காலம் போலல்ல இன்றைய காலம். விஞ்ஞானத்தின் விந்தைகளால் விஸ்த்தீரணமாக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் இலகுவில் கிடைத்துவிடுகிறது. இன்று பலராலும் கவிதைகள் எழுதப்பட்டு வந்தாலும், இந்த ஹைக்கூ என்கின்ற கவிதைகளை எழுதுகின்ற கவிஞர்கள் நம் நாட்டிலே அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு ஹைக்கூ கவிதைகள் எழுதுவதிலும் அவற்றைப் படிப்பதிலும் அலாதிப் பிரியம் உண்டு. அதனாலே ஹைக்கூ கவிதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட நினைத்து அதனை வெளியீடு செய்தேன். புதுக் கவிதை, மரபுக் கவிதை வகைகளிலிருந்து மொத்தமாக மாறுபட்ட இந்த ஹைக்கூ கவிதைகள் சமூகத்தில் இடம்பெறுகின்ற அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதோடு, இயற்கை சார்ந்த இயல்பு நிலைகளையும் சொல்லி இருக்கிறது. ஏற்கனவே கூறியதைப்போல் சமூகத்தில் இடம்பெறுகின்ற சம்பிரதாயங்கள், விழாக்கள், பண்டிகைகள், குடும்பங்களில் நிகழ்கின்ற சம்பவங்கள், சமூகம் சார்ந்த விடயங்கள் ,இயற்கை அதனோடு இணைந்த பல இன்னொரன்ன விடயங்கள் எனப் பலவற்றை இந்த மகிழும் பூக்கள் ஹைக்கூக்கள் பேசி நிற்கின்றன.



ஹைக்கூ எழுதுபவர்களுக்கு விசேடமாகக் கூற விரும்புவது என்ன?

ஹைக்கூ என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற வரையறைகளையும், விதிமுறைகளையும் தாண்டி இன்று பலரும் பலவாறு எழுதிவருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணியில் எழுதி வந்தாலும் ஒருசிலருடைய ஹைக்கூக்களே கண்ணில்பட்டு அவை கருத்தையும் கவர்ந்து கொள்கிறது. ஹைக்கூ கவிதைகளில் நான் ஒன்றும் கரை காணவில்லை. இப்போதுதான் எழுதிக்கொண்டு வருகின்ற இளையவன். எழுத்துத் துறையைப் பொறுத்தவரையில் நான் இன்னும் தவழ்கின்ற குழந்தைதான். ஆகவே கண்டவற்றை கண்டவாறு எழுதிவிட்டு அதற்கு ஹைக்கூ கவிதை என்று நாமம் சூட்டுபவர்களும் நம்மிடையே இல்லாமலும் இல்லை. வரையறைகளையும், வரம்புகளையும் மீறாத எதுவும் வாகை சூடும். ஆகவே அவற்றைக் கடைப்பிடித்தாலே போதுமானதுதான்.


இதுவரை வெளிவந்த உங்களது படைப்புகள் தொடர்பாகப் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்?

அனுபவமே ஆசான்  என்னைப் பொறுத்த மட்டில் நல்ல ஆக்கபூர்வமான அனுபவங்களைத்தான் பெற்றுக் கொண்டுள்ளேன். என்னை மட்டுமல்ல என் எழுத்துக்களையும் மேம்படுத்தவும், மெருகேற்றவும் அவை எனக்கு ஆணிவேராக அமைந்தது கண்டு ஆனந்தம் கொள்கிறேன். மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என்கின்ற ஆவலையும், ஆர்வத்தையுமே அவை என்னில் விதைத்தன.  சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லாவிட்டாலும் சகித்துக்கொண்டு சகலரையும் வெற்றிகொள்ள வேண்டும் என்கின்ற வேட்கையினை அவை எனக்குத் தந்தன.


ஊடகங்களில் இதுவரை வெளிவந்துள்ள உங்களின் படைப்புகள் பற்றிப் பொதுவாகக் குறிப்பிடுங்கள்?

கண்டங்கள் தாண்டி வந்த பிற்பாடு ஊடகங்கள் என்ற வகையில் இலங்கை வானொலியே அன்றுதொட்டு இன்றுவரை என்னோடு இணைந்திருப்பது. எழுத வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தாலும்  நேரம் என்பது பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது. கிடைக்கின்ற நேரங்களில் எழுதியவைகள் பல மின்னிதழ்களிலும், முகநூல் பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளன.


கவிதைத் துறை தவிர வேறு எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகிறீர்கள்?

கவிதை எழுதுவதோடு, சிறுகதைகளையும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். எனது பல சிறுகதைகள், கட்டுரைகள் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலில் வெளியாகியுள்ளன. இதைவிட வானொலி அறிவிப்பிலும் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு.


உங்களது எழுத்துகளின் படி நிலை வளர்ச்சி பற்றிக் கூறுங்கள்?

ஆரம்ப காலங்களில் இருந்த எழுத்துக்களோடு இப்போது ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. ஆம்பத்தில் தவறுகளோடு தவழ்ந்த எழுத்துக்கள் இன்று வீறுநடையோடு வித்தியாசப்படுகிறது. ஆரம்பத்தில் எழுதிய சாயல்களே இன்றும் சாயம் போகாமல் இருக்கிறது.  ஏற்கனவே குறிப்பிட்டது போல இன்று சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் பலபேருடைய பார்வை பலமாக இருக்கிறது. படிநிலைகள் என்று எனக்கு வித்தியாங்கள் ஏதுமில்லை ஆனால் படிநிலை வளர்ச்சியையும் மீறிய ஒரு வனப்பு எனது எழுத்துக்களில் மிளிர்வதை என்னால் இனங்கான முடிகிறது. இது எழுதுகின்ற, என் எழுத்துக்களை நேசிக்கின்ற எனக்கே இனங்காண முடிகிறது.


புலம் பெயர்ந்து வாழும் நீங்கள் அங்கிருந்து எவ்வகையான, யாருடைய படைப்புகளை ஓய்வு நேரங்களில் அதிகமாக வாசிக்கிறீர்கள்?

குடும்பம், வேலை என்ற வட்டத்துக்குள் இருப்பதனாலோ என்னவோ ஒய்வு நேரம் என்பது இங்கு கிடைப்பதென்பது அரிதிலும் அரிது. இயந்திரமயமாகிப் போன இந்த இலண்டன் வாழ்வியலில் ஓய்வு நேரத்தை என்னால் ஒதுக்க முடிவதில்லை என்பதுதான் உண்மையான விடயம். வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மிகவும் இருந்தாலும் அதற்குரிய சந்தர்ப்பம் இல்லாமலே போய்விடும். கிடைக்கின்ற சில மணித்துளிகளை குடும்பத்தோடு செலவு செய்வதால், வாசிப்பதற்கு வாய்ப்புக்கள் அரிதுதான். இதுதான் உண்மையும் கூட. அவ்வப்போது இணையத் தளங்களில் சென்று வாசிப்பதோடு சரி.


இலக்கிய உலகில் மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டா?

மறக்காத நிகழ்வுகள் மனதை என்றும் மயிலிறகாய் எப்போதும் வருடிக்கொண்டே இருக்கும். எனக்கும் இந்த இலக்கிய உலகில் இனிக்கின்ற நிகழ்வுகள் ஏராளம் உண்டு. அவற்றலே ஒன்றை குறிப்பிட விளைகிறேன். நான் லண்டனில் தமிழ் வானொலி ஒன்றிலே பகுதிநேர அறிவிப்பாளராய் கடமையாற்றிபோது இந்த வானொலி ஊடாக ஜெர்மனி நாட்டுக்கு ஒரு மேடை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, அந்த வானொலி சக அறிவிப்பாளர்களோடு சென்றிருந்தேன். ஜெர்மனியிலே டோர்ட்மன்ட் (னுழசவஅரனெ) என்கிற சிற்றியிலே இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கைக் கலைஞர் காலஞ்சென்ற திருமதி. ரேலங்கி செல்வராஜா அவர்களோடு நானும் இணைந்து அந்த  மேடை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது உண்மையில் எனக்குப் பெருமையாகவும், மறக்க முடியாத ஒரு தருணமாகவும் இருந்தது. எனது பல ஆக்கங்களுக்கு இலங்கை வானொலியில் குரல் கொடுத்த அந்த அபிமான அறிவிப்பாளரோடு நிகழ்ச்சியை மேடையில் தொகுத்தளித்தது வாழ்வில் என்றும், இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.


இலக்கியத் துறை சார்ந்து இதுவரை உங்களுக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றிக் கூற முடியுமா?

வரவேற்புகள் என்பதை விடவும் எனது எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம். அந்தவகையில் பல முகநூல் குழுமங்கள் மூலம் உலகளாவிய ரீதியிலே நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பல நூறு வெற்றிச் சான்றிதழ்களையும் ஒரு சில பட்டங்கள் மற்றும் விருதுகளையும் பெற்றுள்ளேன். அப்படி இதுவரை பெற்ற சில விருதுகள் பற்றிய விபரங்களைக் கீழே தருகின்றேன்.


• 2018 - கவி இளவல் விருது (முத்தமிழ் களம், கம்பன் கவிக்;கூடம், திருச்சி)

• 2019 - கவிமுகில் விருது (ஊ...ல...ழ...ள கவிக் குழுமம், இந்தியா)

• 2019 - நம்மாழ்வார் விருது (கவியுலகப் பூஞ்சோலை கவிக் குழுமம், தஞ்சாவூர்) 

• 2018 - கவிச்சிகரம் விருது (கவியுலகப் பூஞ்சோலை, இந்தியா)

• 2019 - கவிஅனலி விருது (தேடல் கலை இலக்கிய மன்றம், இலங்கை) 

• 2019 - கவித் தேனீ விருது (தேனீ கலை இலக்கிய மன்றம், இலங்கை)

• 2020 - நுட்ப விருது (நுட்பம் கவிக் குழுமம் இலங்கை) 

• 2021 - கவித் தேன் விருது (தேனீ கலை இலக்கிய மன்றம், இலங்கை)

• 2021 - கவிக்கேசரி விருது (தேடல் கலை இலக்கிய மன்றம், இலங்கை)

• 2022 - திறமைக்கான தேடல் விருது (லக்ஸ்டோ மீடியா நிறுவனம், இலங்கை)

• 2022 - கவிக்கோ விருது (கவிதைச் சாரல் சங்கமம் மற்றும் கவிக் குழுமம், இந்தியா)


இவை மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற பல கவிதைப் போட்டிகளிலும் நடுவராகப் பயணித்துள்ளேன்.


உங்களைப் போன்ற சமகால இளந்தலைமுறைப் படைப்பாளர்களுக்கு கூற விரும்புவது?

மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் இன்றைய படைப்பாளர்களின் மனோநிலையைப் பார்க்கின்ற போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது. படைப்பாளிகள் என்ற அடைமொழிக்குள் அடக்கப்பட்டவர்கள் ஆணவமும் நான் என்கின்ற அகங்காரமும் கொண்டவர்களாக இருப்பது கண்டு வேதனைப்படுவதா அல்லது வெட்கப்படுவதா என்று எனக்குப் புரியவில்லை.  படைப்பாளர்கள் முதலில் ஒருவரை ஒருவர் பாராட்டி, வாழ்த்தும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மற்றவர்களைப் பாராட்டும் மனப்பாங்கு பலபேரிடம் இருப்பதில்லை. முதலில் ஒருவரை ஒருவர் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். படைப்பாளர்களுக்கு பரவசம் தருவது பாராட்டும், கைதட்டல்களுமே ஆகும். ஆனால் இவை இன்றைய தலைமுறையினரிடம் இல்லாமல் இருப்பது கவலையே.


இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீகள்? 

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அந்தக் கனவுகள் பலித்திட பலவற்றைத் தியாகம் செய்ய வேண்டும், பல கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும். முடிந்தவரை அந்தக் கனவு பலித்திட அயராது உழையுங்கள். அடுத்தவர்களது நிலையை உணராமல் உண்மைபோல் ஊர்வம்பு  பேசாதீர்கள். உங்களை முதலில் நேசியுங்கள். கூடவே உங்களை நேசிக்கின்றவர்களையும் ஒருகணம் யோசியுங்கள். மற்றவர்களை உங்களோடு ஒப்பீடு செய்து வாழாதீர்கள். முடிந்தவரை எந்தத் துறையில் இருந்தாலும் நேர்மையோடும், அடுத்தவரை நேசித்தும் வாழப் பழகிக் கொள்ளுங்கள். பொய்யாகப் பழகாதீர்கள் அது காதலாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரியே. தோழமையோடு பழகுங்கள். மற்றவர்களுக்கு ஒரு போதும் துரோகம் ஒன்றும் செய்யாதீர்கள். வாழ்க்கை வசந்தமாகும்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



Sunday, November 6, 2022

46. கவிஞர் அ.மு. முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்

 கவிஞர் அ.மு. முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்கு கூறுங்கள்?

நான் சம்மாந்துறை 4 ஆம் குறிச்சியைச் சேர்ந்த மர்ஹும்களான மீராசாஹிப் அலியார், சுலைமா லெப்பை அவ்வா உம்மா தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தேன். தற்போது சம்மாந்துறை விளினையடி - 01, மலயார் வீதியில் ஹாஜியானி ஆதம்பாவா சபூரியத்தும்மா என்பவரை மணமுடித்து அங்கே குடிபதியாய் வாழ்ந்து வருகிறேன். 

1970 இல் ஊற்று எனும் கையெழுத்துப் பத்திரிகையில் எழுத ஆரம்பித்த என் இலக்கியப் பயணம் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தநாளில் வெளிவந்து கொண்டிருந்த தினபதி, சிந்தாமணி எனும் பத்திரிகைகளில் என் கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தப் பத்திரிகைகளில் கவிதை வரவேண்டுமெனில் அந்நாட்களில் பிரபல்யமான கவிஞர்களான நீலாவணன், பாண்டியூரான், எம்.ஏ. நுஃமான், அண்ணல், ஈழமேகம், பக்கீர்த்தம்பி ஆசிரியர் போன்றோர்களது சிபாரிசுடன் தினபதி கவிதா மண்டல கூப்பனையும் இணைத்து அனுப்பி வைத்தால் மட்டுமே கவிதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகும். இன்றைய நிலையோ வேறு.


உங்களது கல்லூரிக் காலம் மற்றும் தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?

சம்மாந்துறை வீரமுனை - 1 மெதடிஸ்த மிசன் தற்போது தாருல் உலூம் என்று அழைக்கப்படும் பாடசாலையில் ஆரம்பித்த எனது கல்விப் பயணம் சம்மாந்துறை அரசினர் தேசிய பாடசாலையில் முற்றுப்பெற்றது. தந்தை மரணித்ததன் காரணமாக மேற்கொண்டு தனது கல்விப் பயணத்தைத் தொடர முடியவில்லை, குடும்பக் கஷ்டம் காரணமாக சிறு வியாபாரம் செய்தேன், அந்தநேரம் கிழக்கிலங்கை கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனம் கொள்வனவுக் கிளை சம்மாந்துறையில் ஆரம்பித்து இயங்கிக்கொண்டிருந்தது, அதில் உதவிக் கழஞ்சியப் பொறுப்பாளராக சுமார் 16 வருடங்கள் பணி புரிந்தேன், அந்தநேரம் கிழக்கிலங்கையில் யுத்த மேகம் சூழ்ந்தது. அதனால் அப்பணியிலிருந்து விலகிவிட்டேன். அதன்காரணமாக ஒரு தொகைப் பணம் கிடைத்தது அதைக்கொண்டு விவசாயம் செய்தேன். தற்போது ஓய்வு நிலையிலுள்ளேன்.


இலக்கியத் துறை அதிலும் கவிதைத் துறையில் உங்களுக்கு நாட்டம் ஏற்படக் காரணம் என்ன?

நான் மாணவனாய் இருக்கும் போது எங்கள் வகுப்புப் பாடப் புத்தகத்தில் பாரதியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றோரின் கவிதைகள் எங்கள் பாடல் புத்தகத்தில் இருக்கும். அவற்றை சிறப்பாகப் படிப்பித்து தருவார்கள். நானும் சுவைத்துப் படிப்பேன். அந்தச் சுவையின் உந்துதலின் காரணமாக கலை மன்றங்கள், பள்ளிக்கூட கலை நிகழ்ச்சிகளில் கவிதைகளை எழுதி வாசிப்பேன். நண்பர்கள் என்னை உற்சாகப்படுத்துவார்கள். எங்கள் வகுப்பு ஆசிரியை சுந்தரி என்னை தட்டிக்கொடுத்துப் பாராட்டுவார். அதிலிருந்து கையெழுத்துப் பத்திரிகைகள், மாதாந்த சஞ்சிகைகளில் ஆரம்பித்த என் இலக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என் ஓய்வு நேரங்களை புத்தகம் வாசிப்பதிலும், எழுதுவதிலும் பயன்படுத்துவேன்.


உங்களது கவிதைத் துறை ஈடுபாட்டுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் குறித்து?

ஈழமேகம் பக்கீர்த்தம்பி ஆசிரியர், கலாபூஷணம் சம்மாந்துறை அஸீஸ், இறையருட் கவிஞர் இப்றாகீம் போன்றோரின் உற்சாகம்தான் என்னைக் கவிதைத் துறையில் ஈடுபட வைத்தது. அத்துடன் நான் வாழ்க்கையில் கண்டு, அனுபவித்த விடயங்களை வெளிக்கொணரும் வேட்கையின் வெளிப்பாடாகவே மேற்சொன்ன கவிஞர்களின் ஆசீர்வாதத்தினால் கவி சொல்லக் களம் புகுந்தேன்.


உங்களுக்குள் கவிதைகள் மற்றும் படைப்புகள் எவ்வாறு கருக்கொண்டு உருப்பெருகின்றன?

கவிதைகள் தாமாக உருவாவதில்லை, அவை கவிஞனின் உள்ளத்தில் ஊற்றெடுத்து வெள்ளமென பீறிட்டுப் பாய்வனவாகும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அவை கருக்கட்டி, வளர்ந்து, பிரசவிக்கும். கண் எதிரில் காணும் காட்சிகள் மனதில் பதியும். அவையே கவிதைக்கு கருவாக அமையும். அதை விடுத்து கவிதை என்று கூறிக்கொன்று வசனங்களை துண்டாடி, நிரல் நிரலாக்கி, பொறுக்கி எடுத்து, கவிதையா? வசனமா? என்று கணிக்க முடியாத அளவிற்கு இன்றைய தமிழிலக்கியம் சென்று கொண்டிருப்பதை கண்ணுற்று, என் கவிதைகள் மூலம் மனநிறைவோடு இலக்கியத் தொண்டாற்றி இன்புறுகிறேன்.


உங்களது முதலாவது நூல் வெளியீடான "புனல் தாயின் பயணம்" கவிதை நூல் பற்றியும் அதில் உள்ள கருப்பொருட்கள் பற்றியும் என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?


பொதுவாக எனது கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்களை நோக்குமிடத்து ஆன்மீகக் கவிதைகள், அகம் சார்ந்த கவிதைகள், சமூகம் சார்ந்த கவிதைகள், சமூகத்தில் மலிந்து கிடக்கும் அனாச்சாரங்களை வெளிக்கொணரும் கவிதைகள், வித்தைகளை இச்சமூகம் நோக்கும் விதம், முதுமையடைந்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் யுக புரிசர்களைப் பற்றியதான சாடல் கவிதைகள் எனப் பல்வேறுபட்ட சமூக பிரக்ஞையுடனான கவிதைகளை சுவாரசியமாகவும், விழிப்புணர்வூட்டும் விதமாகவும் படைத்துள்ளேன். நான் விரிவாக இதுபற்றிக் கூறுவதைவிட வாசகர்கள் அவர்களாக எனது புனல் தாயின் பயணம் என்ற எனது கவிதை நூலை நுகர்ந்து இன்புறுவதே கூடுதல் சிறப்பு என நினைக்கின்றேன்.


உங்களது முதலாவது கவிதைப் படைப்பான நூலுக்கு "புனல் தாயின் பயணம்" என்கின்ற தலைப்பினை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?

கால நேர சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நூலின் தலைப்பை உருவாக்கியுள்ளேன், 1970 களில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை எங்களது கிராமத்தில் உள் நுழையவில்லை. ஆகவே 3 அல்லது 4 மைல்களுக்கு அப்பால் சென்று "பூவலில்" இருந்து தண்ணீர் சுமந்து வரவேண்டும், மழை பெய்தால் செழிப்பையும் அன்றேல் பொட்டல் நிலமாய் கானல் நீரும் எங்களூரில் தெரியும், ஐம்பெரும் பூதங்களில் ஒன்றுதான் நீர். அது இன்றேல் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது என்பது யதார்த்தம். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் நீரிலிருந்தே உற்பத்தியாகின்றது என்பதும் உண்மை. ஆகவே இப்பிரபஞ்சமானது புனல் (நீர்) என்கின்ற தாயுடன் பின்னிப் பிணைந்து பயணிப்பதால் "புனல் தாயின் பயணம்" எனப் பெயரிட்டு விரவிக் கிடக்கும் என் அனுபவங்களைக் கவிதைகளாக வடித்துள்ளேன்.


கொரோனா இடர் காலங்களில் நீங்கள் எழுதிய கவிதைகள் எப்படி இருந்தது?

கொரோனா பேரிடர் காலங்களில் மற்றைய நாட்களைவிட மனக் கொந்தளிப்பு, பதற்றம் என்பன உச்சத்தைக் கொண்டிருந்தது. காரணம், கொடிய தொற்று நோய் எமக்கோ அல்லது எம்மவருக்கோ என்கின்ற பதட்டம் உயர்ந்து செல்லும். பொருள் விலைவாசி, பொருள் தட்டுப்பாடு போன்றவற்றினால் செய்வதறியாது துடி துடித்துப் போனதினால் ஏற்பட்ட வெளிப்பாடாக பல கவிதைகளை வடிக்க முடிந்தது. மேலும் கொரோனா பேரிடரானது அலை அலையாக மக்களை காவுகொண்டு சென்றது. முதலாவது அலையைவிட இரண்டாவது அலையினால் அதிகூடுதலான மனித இறப்பு பேரவலமாகக் காணப்பட்டதின் விளைவாக மன அழுத்தத்தினால் சாதாரண காலங்களைவிட இந்த பேரிடர் காலங்களில் அதிகமான மனக் கிடக்கைகளை கவிதைகளாக வெளிக்கொணர்ந்து பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். அப்பத்திரிகைகளும் எனது ஆக்கங்களைப் பிரசுரித்திருந்தன.


உங்கள் நூல் வெளியீட்டிற்கு ஊக்கமாய் இருந்து உதவியவர்களைப் பற்றிக் கூறுங்கள்?

எனது நூலினை நூலுருவாக்கம் செய்ய பலதரப்பட்டவர்கள் பல வழிகளில் உதவினர். அதில் குறிப்பாக சொல்லும் போது எனது பாரியார் சபூரியத்தும்மா அவர்களுடன் சம்மாந்துறை மண்பதியின் கவிஞர் சந்தக்கவி அச்சி முகம்மட், எனது மகன்களான ஜுனைதீன், சலாஹுத்தீன், நஜிமுத்தீன், ஜலாலுத்தீன், இமாமுத்தீன், சிறாஜுத்தீன் போன்றோருடன் பேரன் அஸ்றிப், சந்தக்கவி அச்சி முகம்மட் அவர்களின் பாரியார் இர்பானா பானு, எனது மகள் சித்தி றைஹானா போன்றோரை இந்த நேரத்தில் நன்றியுடண் நினைவுகூராமல் கடந்து செல்ல முடியாது.


கவியரங்குகளில் கலந்து கொண்ட அனுபவங்கள் உண்டா? கவியரங்கம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பல கவியரங்குகளில் கலந்து கொண்டுள்ளேன், அதில் கலந்து கொள்வதால் கவித்துவம் மெருகேறும். கவிஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும். களக்கூடங்கள், இலக்கிய உலகம் மிக விசாலமானதும், ஆழம்மிக்கதும், இரசனையுள்ளதுமாகும். எவ்வளவு அள்ளினாலும் தாகம் தணியாது இவையனைத்தும் கவியரங்குகளில் கலந்துகொள்வதால் ஏற்படும் சிறப்புக்களாகும். மேலும் கவியரங்குகளில் கவிபாடுவதன் மூலம் தனது கருத்துக்களையும், மனக் கிடக்கைகளுக்கு புடம் போட்டு வெளிக்கொணருவதன் மூலம் பல சான்றோர்கள், மூத்த கவிஞர்களின் பாராட்டினையும், எனது கவித்துவத்தில் உள்ள குறை நிறைகளையும் இனங்காண வாய்ப்புக் கிடைக்கிறது. இவ்வாறு இன்னும் எத்தனையோ நன்மைகள் உள்ளன. விரிவஞ்சி சுருங்கக்கூறி இருக்குறேன்.


பல்வேறு சிக்கல்களோடும் பிரச்சினைகளோடும் அல்லல்படும் தற்கால சமுதாயத்தினர் பற்றி உங்கள் கவிதைகள் பேசியிருக்கிறதா?

விலைவாசி அதிகரித்து துன்பியலில் மக்கள் துயரடையும் போது, பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு பொட்டிக் கடைகளிலும் பலசரக்குக் கடைகளிலும், டொபி என்ற பெயரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கயவர்களைப் பற்றியும், ஊக்கமருந்தென்று அருந்தி பேயாட்டம் ஆடி ஏழு வயதும் தெரியாது எழுபது வயதும் புரியாது பெண்களைத் துன்புறுத்தும் பிணந்தின்னிகளைப் பற்றியும், குடும்பஸ்தவராயிருந்தும் கோர மனம் கொண்டவர்களைப் பற்றியும் எனது கவிதை வரிகள் மூலம் சாட்டையடி வழங்கியுள்ளேன்.


இன்று உலகம் புதுக்கவிதைக்கு மாறிக்கொண்டிருக்கிறதே.. இதுகுறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்?

உலகின் உணர்வூறும் இடமெல்லாம் தமிழின் அமுதூற கவிதோய்த்து மொழிகொண்டு படைப்பவன் எவனாயிருந்தாலும் அவனை மதிப்பவன் நான். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் எனும் இடைவெளிக்குள் கவிதையை பகுத்துக் பார்க்க விருப்பமற்றவன். இரண்டுமே தரமுள்ளவைகள்தான். மனங்களைத் தடவுகின்ற எந்தக் கவிதையுமே என் பாராட்டுக்கு உரியவைகள்தான்.


தமிழ் இலக்கியப் பரப்பில் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தேவை உணரப்படுகிறதா?

தமிழ் இலக்கியப் பரப்பு என்பது பரந்து, விரிந்த ஓர் பூங்காவனம் போன்றது. அந்தப் பூங்காவனத்தில் ஓர் அங்கமான கவிதை என்கின்ற ஓர் பூஞ்செடிக்கு, மொழிபெயர்ப்புக் கவிதைகளான பிறமொழிக் கவிதைகள் உரமாக, ஊக்கமாக அமையும் எனில் அதனை ஆதரித்து அங்கீகரிப்பதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். மேலும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் அந்தக் கவித்துவத்திலுள்ள நுணுக்கங்களை உள்வாங்கி தமிழ் இலக்கியப் பரப்பை செம்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எமது இலக்கியங்களை பிற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வதன் மூலம் சிறந்த உலகத்தரமான இலக்கியங்களை குறிப்பாக கவிதைகளை உருவாக்குவதன் மூலம் கவிச் சுவையினைக் கரை கடந்து சுவைக்க முடியும் என்பது எனது திண்ணமாகும்.


உங்களது கவிதைகளில் பெண்களின் பிரச்சினைகள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

கூட்டுக் கிளிகள் போல் வாழும் பெண்கள் சீதனக் கொடுமையால் உழைக்க வெளிநாடு செல்கிறார்களே! புது உலகம் படைப்போம் என்பார்கள். படிக்கும் போது, படித்து முடித்து உத்தியோகம் கிடைத்துவிட்டால் கல்யாணச் சந்தையில் சீதனம் எனும் அடிமைச் சாசனம் பெற்று சென்றுவிடுவார்கள். விண்ணில் மனிதன் செல்வதைக் கண்டு ஆச்சரியம் அடையும் மனிதன், மண்ணில் மாதர் எனும் மாணிக்கங்கள் முதுமையடைந்து மூலையில் முடங்குவது ஆச்சரியமில்லையா? விதவைக்கு வாழ்வில்லையா? கணவன் மரணித்துவிட்டால் அவள் வாழ்வு கருகி விட்டதா?  போன்ற கேள்விக் கணைகளுடன் பல கவிதைகள் வடித்துள்ளேன்.


கவிதைத் துறை தவிர்த்து உங்களது ஏனைய கலையிலக்கியப் பங்களிப்புகள் தொடர்பாகக் கூற முடியுமா?

தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகை சஞ்சிகைகளில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்தன, |முதலாளி', "தப்பியவர்கள்" எனும் தலைப்பில் எனது சிறுகதைகளும் தினகரனில் யுத்த காலச் சூழலில் அகதிகள், விடிவைத் தேடி என்ற சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள் அனுப்பியுள்ளேன். அவற்றில் பத்திரிகைகள் பிரசுரித்து, எனது பார்வைக்கு எட்டி வாசிக்கக் கிடைத்தது இவைகள்தான்.


இலக்கிய உலகில் ஏற்பட்ட மறக்க முடியாத ஏதாவது அனுபவம் குறித்து?

சம்மாந்துறை அப்துல் மஜீத்  மண்டபத்தில் 2019.03.09 அன்று நாவலர் ஈழமேகம் பக்கீர் தம்பி ஞாபகார்த்த கவியரங்கம் தமிழா ஊடக வலையமைப்பினால் நடைபெற்றது. அக்கவியரங்கில் என் இலக்கியச் செயற்பாட்டிற்காக கவிவேந்தர் வித்தியாசாகர் அவர்களால் "இலக்கிய முரசு" எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டேன். அது எனது மறக்க முடியாத அனுபவமாகக் கருதுகிறேன்.


உங்களது கலை இலக்கிய மற்றும் கவிதைத் திறமைகளுக்கு இதுவரை கிடைத்த வெற்றிகளையும், பாராட்டுகளையும், விருதுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

• 2017.12.28 அன்று சம்மாந்துறை பிரதேச செயலக, கலாசார அதிகார சபையினால் "கலைஞர் சுவதம்" எனும் விருது கிடைத்தது, 

• 2018.04.21 அன்று லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் சிறிலங்கா, இமயம் கலைக்கூட மன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடாத்திய திறமைகளுக்கான தேடல் விருது விழாவில் "சமூகதீபம்", "சமூகஜோதி", "கலைமுத்து", "கலைத்தீபம்" பட்டமும், "சமூகமாமணி" எனும் விருதும் கிடைத்தது. 

• 2019.03.09 இல் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி நடாத்திய கவியரங்கத்தில் கலந்து கவிதை வாசித்ததற்காக தமிழா ஊடக வலையமைப்பினால் கவிவேந்தர் வித்தியாசாகர் அவர்களால் "இலக்கிய முரசு" எனும் பட்டமும், விருதும் கிடைத்தது.

இவற்றுடன் இன்னும் பல விருதுகள் எனக்குக் கிடைத்துள்ளன.


எதிர்காலத்தில் வெளிவரவுள்ள உங்கள் நூல்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

"இரட்சிக்கும் இரு துளிகள்" எனும் ஆன்மீகக் கவிதைத் தொகுதி ஒன்று அச்சேறும் தருவாயில் இருந்தும், நாளுக்கு நாள் உச்சமாகும் விலைவாசியின் காரணமாகத் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது வெளியானதும் "உதிரும் நாள் வரை" எனும் சமூகக் கவிதைத் தொகுதியொன்றையும் வெளியாக்க எண்ணியுள்ளேன்.


இந்த நேர்காணலின் நிறைவாக எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஒரு படைப்பாளி என்பவன் முதலில் சமூக அக்கறையும், பொது மனிதர்கள் ஏற்கத்தக்க பண்பான அரிய குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். இந்த உலகம் ஒரு பூங்கா. அங்கே நதிகளெல்லாம் சங்கமித்து ஒற்றுமையைக் காட்டி மகிழ்கின்றன, இவைகளுக்கு மத்தியில்தான் நீர், நிலம், காற்று, வெளிச்சத்தை உடுத்தியவனாக ஒரு கவிஞன் ஆழப் பார்வையோடு அலைந்து திரிந்து அத்தனை அசைவுகளையும் படம்பிடித்து ஒரு கவிதைக்குள் அடக்கி வைக்கின்றான் கவிஞன். எனவே அதிகபட்சமான மனித நேயத்துடன் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எல்லோரும் சிறந்த முறையில் தனது பங்களிப்பு
க்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் என்னை இந்த நேர்காணலில் இணைத்துக்கொண்ட உங்களுக்கும், செந்தூரம் இதழாசிரியர் மற்றும் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும், கலைஞர்களுக்கும், அன்பான வாசகர்களுக்கும் இதயப்பூர்வமாக அகம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!

                                           

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Saturday, October 8, 2022

45. கவிஞர் கிசோகுமார் உடனான நேர்காணல்

கவிஞர் கிசோகுமார் உடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக மிகவும் சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் கோவிந்தசாமி கிசோகுமார். மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை எனும் நகரத்தை அண்டி அமைந்துள்ள பெரியமண்வெட்டியூர் (டிறைட்டன் என்று அழைப்பார்கள்) என்ற தோட்டத்தினை வசிப்பிடமாகக் கொண்டுள்ளேன். வீட்டில் அம்மா, அப்பா, மனைவி மற்றும் இவர்களுடன் வசிக்கும் எனக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறாள். அத்துடன் என் அக்காவும் தம்பியும் ஆசிரியர்களாக பணிபுரிகின்றார்கள். நானும் ஒரு அரசாங்கப் பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாட ஆசிரியராக 10 வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றேன்.


உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாமே?

நான் 2008 ஆம் ஆண்டு பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாட கற்பித்தலில் டிப்ளோமா (னுip ஐn வுநயஉhiபெ ஐஊவு) கற்கை நெறியில் இணைந்து கொண்டேன். அங்கு ஆங்கில மொழி மூலமான கற்றல் என்றாலும் தமிழ் கலாசார கலைத் துறைகளிலேயே என்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டேன். சிறுவர், சமூக வரலாற்று நாடகங்களில் மிகுந்த ஆர்வமாக பங்கேற்ற நினைவுகளை இப்போது மீட்டிப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அத்துடன் எனக்கு நாடகம், வில்லுபாட்டு, தாளலயம் போன்ற துறைகளில் அதிக நாட்டம் இருந்தது. அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாட ஆசிரியராக நியமனம் பெற்ற பிறகும். தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாடத்தினை கற்பித்தலோடு மட்டும் நிற்காமல் மாணவர்களின் நாடக ஆற்றுகை, கலைத்துறை, இலக்கியத் துறை சார்ந்த முயற்சிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் வழங்கி அவர்களின் முயற்சிகளில் பங்கேற்பதுமாய் கடமையாற்றும் எனக்கு தொழில் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது.


நீங்கள் எப்போது, எந்த வயதில் எழுத்துத் துறைக்குள் நுழைந்தீர்கள்?

கல்லூரிக் காலத்தில் நூலகத்தில் நிறைய, நிறையக் கற்றலோடு தொடர்புபட்ட புத்தகங்கள் இருந்தபோதும் கவிஞர் வைரமுத்து கவிதை நூல்கள் மற்றும் எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே வாசிக்க ஆரம்பித்தேன். தபுசங்கரின் காதல் கவிதையிலும் மயங்கியிருந்து மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்தேன். அவையே எனக்கு கவிதையாயின.


நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதத் தூண்டப்பட்ட சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பத்தில் நண்பர்களோடு சேர்ந்து நானும் விளையாட்டாகக் காதல் கவிதைகளை எழுத ஆரம்பித்திருந்தாலும். ஆசிரியராகி சமூகத்திற்குள் நுழைந்தபோது எம் சமூகத்தில் இலையாடும் அவலங்களே சமூகம் சார்ந்த கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் தூண்டின. அத்துடன் மலையக மக்கள் கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக இன்றுவரை எதிர்நோக்கும் இன்னல்கள், அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், அவர்களின் அறியாமை மற்றும் அவர்களின் எதிர்மறையான சிந்தனைகள் போன்றவை என்னை அதிகமாக யோசிக்கவும் எழுதவும் நிர்ப்பந்தித்தன என்று சொல்லலாம்.


எத்தனை ஆண்டுகளாகக் கவிதைகளை எழுதி வருகின்றீர்கள்? கவிதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்?

பத்து வருட காலமாகத்தான் எழுதி வருகின்றேன். எப்போதாவது ஏதோ ஒரு நிகழ்வு, ஒரு சம்பவம் அல்லது ஒருவகையான சிந்தனை என்னைப் போட்டு சுழற்றிக்கொண்டும் ஏதேதோ எண்ண ஓட்டங்களை என்னுள் ஓடவிட்டுக் கொண்டும் இருக்கும். அதன் விளைவாக ஏதாவது ஒரு கவிதை அல்லது கவிதைக்கான அடி மனதில் வரைய ஆரம்பிக்கும். அதை மனதிலே வடித்துக் கொண்டே இருப்பேன். நான் திருப்தியடைவது போல் அதற்கான உருவம் கிடைத்தால் உடனே ஏட்டில் எழுதி வைத்துவிடுவேன். அல்லது தற்காலங்களில் திறன்பேசியின் நோட்ஸ் எப்பில் குறித்துக் கொள்வேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை வாசித்துவிட்டு ஏதேனும் மாற்றம் தோன்றினால் அதனையும் திருத்தம் செய்து கொள்வேன்.


புதுக் கவிதைக்கும், நவீன கவிதைக்கும் இடையே என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?

மரபுக் கவிதைகளில் இருந்து அமைப்பு ரீதியாக தன்னை விடுவித்துக் கொண்டதுதான் புதுக் கவிதை என்று சொல்லலாம். ஆரம்ப நிலைக் கவிதை வாசகர்களுக்கு புதுக் கவிதைகள் மீதான வாசிப்பே அவர்களை ஈர்க்கச் செய்யும். பொதுவாக புதுக் கவிதைகள், எதுகை மோனைகளிலான மொழி அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் வாசகர்கர்களோடு நெருக்கமான மொழி நடையிலும் இலகுத் தன்மையோடும் எழுதப்படுவதாகவே உணர்கிறேன்.


அதன் பின் வந்த நவீன கவிதைகள் புதுக் கவிதைகளைவிட சற்று வேறுபட்டு உருவகங்கள், படிமங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரவலாக எழுதப்படுதாகவே அறிகின்றேன். நவீன கவிதைகள் அதி உணர்ச்சி மிக்கதாகவும் வீச்சு மிக்கதாகவும் எழுதப்படுகின்றன. ஆழமான வாசிப்பின் ஊடாகவே பின் வந்த நவீன கவிதைகளை ஒரு வாசகரால் இலகுவாக உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று திடமாக நம்புகின்றீர்களா?

கவிதைகளால் எத்தனையோ மாற்றங்களும் புரட்சிகளும் நிகழ்ந்த இந்தப் பூமியில் நமது கவிதைகளும் என்றாவது ஒரு நாள் யாரிடமாவது ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்றுதான் ஒவ்வொரு கவிஞனும் முயல்கின்றான். நானும் அதற்கு விதிவிலக்கானவன் அல்ல.


உங்களைக் கவர்ந்த கவிஞர் யார்? அவரது எந்தப் படைப்பு உங்களை மிகவும் கவர்ந்தது?


முதல் வாசிப்பில் வைரமுத்துவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு பின்நாட்களிலில் பாரதியின் கவிதைகள் வாசிப்பால் வியக்கப்பட்டு, பாதிக்கப்பட்டு கவிதை உலகத்திற்குள் நானும் உள்வாங்கப்பட்டேன். பாரதியின் அத்தனை கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தவிர வைரமுத்துவின் இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, மு. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் போன்ற நூல்கள் குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியன. மேலும் மனுஷபுத்திரன், நா. முத்துகுமார், கலீல் ஜிப்ரான், ஈழத்து கவிஞர்களில் சிவசேகரம் ஐயா ஆகியோரின் கவிதைகள் மிகவும் பிடித்தமானவை.


கவிதைகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும்? ஒரு சிறந்த கவிதை எவற்றைப் பிரதிபலிக்க வேண்டும்?

என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் கவிதை என்பதை ஒரு புதினமான ஒரு அழகியலுடனான எண்ண வெளிப்பாடாகவே உணர்கிறேன். ஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு உணர்வு, ஒரு அனுபவம் போன்றவை கவிதை ஒன்றை எமக்குக்குள் ஊற்றெடுக்க வைக்கும் போது அது வாசகர்களை ஈர்க்கச் செய்ய வேண்டும். ஒரு நுணுக்கமான மொழியாடலால் பிணைக்கப்பட்டு தேவை ஏற்படின் தேவையான அளவான படிமங்களோடு வாசிப்பவர் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக வடிக்கப்படும் கவிதைகளே சிறந்த கவிதைகளாக அறியப்படுகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


கவிஞராக இருக்கும் நீங்கள் சக கவிஞர்களின் கவிதைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

சக கவிஞர்களின் கவிதைகளை எனக்கு உசாத்துணையாகவே எடுத்துக் கொள்கிறேன். அவர்களுடைய கற்பனை, பார்வை, தளம் பற்றி அறிந்து கொண்டு காலத்திற்க்கு ஏற்றாற் போல எனது எழுத்துக்களையும் சீர் செய்து கொள்கிறேன்.


நீங்கள் இதுவரை எழுதியுள்ள கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கவிதை எது? என்ன காரணம்?

நான் எழுதிய பல கவிதைகளில் மழை பற்றிய கவிதை ஒன்றையே எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை ஒன்றாக முன்வைக்க விரும்புகின்றேன்.


மழை!



இடி கலந்த அடை மழை

அனுப்பி விட்டேன்

பிள்ளைகளை மழை ரசிக்க..


ஒரு பிள்ளை மட்டும்

தனிப் பிள்ளையாய்

ஏதோ கலக்கத்தில்

ஒதுங்கி நிற்க..


விழித்தேன்..

விரைந்தேன்..

வினவினேன்..



விடை கிடைத்ததும்

என் கண்கள் இரண்டிலுமே 

கண்ணீர்..


"அம்மா தலைக்கி 

ஒன்னுமே கொண்டு 

போகல சேர்"..


மலையப் பிரதேசங்களில் தேயிலை கொழுந்து பறிக்கச் செல்லும் எம் அம்மாக்களுக்கு மழை, வெயில், காற்று, வெள்ளம் என எந்த தயவு தாட்சனையும் கிடையாது. வேலைக்குச் சென்றே ஆக வேண்டும். மழைக் காலங்களில் ஈரம், குளிர் வாடையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பொலிதீன் விரிப்புகளை உடலில் சுற்றிகொண்டும், தலைக்கு போர்த்திக் கொண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். அப்படி ஒரு மழைக் காலத்தில் சின்ன வயதில் என்னுடைய அக்கா சொன்னார். "அம்மா தலைக்கு ஒன்னுமே கொண்டு போகல" என்று. அதனை கவிதையாகப் பதிவு செய்யும் போதும் நினைக்கும் போதும் எனது கண்கள் ஈரமாகும்.


இலக்கிய இரசனையுள்ளவர்கள் நூல்களை வெளியிடுவது வழமை. அந்தவகையில் நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

"மூங்கில் கூடை" என்ற மகுடத்தில் அமைந்த ஒரே ஒரு கவிதை நூலைத்தான் நான் இதுவரை வெளியிட்டிருக்கிறேன். இந்தக் கவிதை நூல் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கான அணிந்துரையை மூத்த எழுத்தாளர் கல்வியியலாளர் மொழிவரதன் அவர்கள் எழுதியுள்ளார்கள். வாழ்த்துக் கவிதையை தலவாக்கலை தமிழ்ச் சங்கத் தலைவர் சு. சுரேஷ் அவர்கள் வழங்கியுள்ளார். 78 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 59 சிறியதும் பெரியதுமான கவிதைகள் இடம்பிடித்துள்ளன.


நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது? உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிதை எழுத ஆரம்பித்ததுமே நூலொன்றாக வெளியிட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே இருப்பேன். அதன்படி ஒரு பெரிய பிரயத்தனத்தோடு என் கவிதைகள் ஷஷமூங்கில் கூடை' என்ற கவிதை நூலானது. அதற்குப் பக்க பலமாக மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மற்றும் தலவாக்கலை தமிழ் சங்கத்தினர் பெறும் துணை நின்றார்கள்.


உங்கள் "மூங்கில் கூடை" கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கருப்பொருட்கள் என்று பார்த்தால் எம் மலையக மண் சார்ந்த அவலங்களைத்தான் ஷஷமூங்கில் கூடை' கவிதை நூலில் பரவலாக கவிதையாக்கி வாசகர்களுக்கு முன்வைத்துள்ளேன். இன்னும் ஒரு வகையில் கூறுவதாயின் எம் மண்ணின் மீதும் மண்ணின் மைந்தர்கள் மீதும் கொண்ட அதீத அன்பே எனது கவிதைகளின் பாடுபொருள்களாகியது என்றும் சொல்லலாம்.


உங்கள் நூலினூடாக இலக்கிய உலகுக்கு குறிப்பாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

அப்படி ஒன்றும் பெரிதாக நினைத்து எழுதவில்லை. எனக்குள் தோன்றும் கற்பனை அலைகளை எனக்கு வருவது போல் சுதந்திரமாகவே எழுதியுள்ளேன்.


நீங்கள் எழுதியுள்ள சிறுகதைகள் பற்றியும் சொல்லாமே? சிறுகதைகளுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?

எனக்கு சிறுகதை வாசிப்பதில் அதீத ஆர்வம் எப்போதுமே உண்டு. கவிதையினால் சொல்லி முடிக்க முடியாத சிந்தனைகளை எனக்கு தெரிந்த மொழி நடைகளைப் பயன்படுத்தி அதற்கொரு கதை வடிவம் கொடுக்க முயல்கின்றேன் என்று சொல்லலாம். அது ஒரு முழுமையான சிறுகதைக் கட்டமைப்பைக் கொண்டு நகர்கிறதா என்ற ஐயம் எனக்குள் அடிக்கடி தோன்றும். ஆனாலும் வாசகர்கள் ஏதாவது ஒரு சட்டகத்தினைப் பொருத்தி அதனை ஏற்றுக்கொள்வார்கள்  என்ற நம்பிகையுடனே தொடர்ந்தும் எழுதுகின்றேன்.

சிறுகதைகளுக்கான கருப்பொருட்கள் அனைத்துமே நமது அன்றாட வாழ்கை ஓட்டத்தில் எதிர்படுகின்ற, கடந்து போகின்ற சம்பவங்களில் இருந்தே உருவி எடுத்து தேவைக்கு ஏற்ற கற்பனைகளோடு சொல்ல நினைக்கின்றேன்.


சஞ்சிகைகளில் உங்களது படைப்புகளின் பங்களிப்புக்கள் எப்படி இருக்கிறது?

முன்பு ஒரு சில சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தேன். தற்போது முகநூல் போன்ற டிஜிட்டல் தளங்களின் மேலான ஈர்ப்பு வாசகர்கள் மத்தியில் பிரபல்யமடைந்திருப்பதால் அவ்வாறான தளங்களிலேயே என்னுடை எழுத்துகளைப் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டுவிட்டேன்.


கவிதை, சிறுகதைத் துறை தவிர வேறு எந்தத் துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறீர்கள்?

மேடை நாடங்களில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. மலையகத்தின் முதன்மையான நாடக கலைஞர் திரு. மு.காளிதாஸ் அவர்களின் களரி அரங்க நிதியத்துடன் இனணந்து அவருடைய ஆற்றுகைகளின் அவ்வப்போது இணைந்துகொள்வேன். கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அவரின் பல்வேறு மேடை நாடகங்களில் பங்காற்றி இருக்கிறேன்.


உங்கள் நூல்களுக்கு எவ்வகையான விமர்சனத்தை வாசகர்கள் முன்வைத்தார்கள்?

வளர்ந்து வரும் கவிஞராக என்னை வாசகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நம்புகிறேன். அத்துடன் என் கதைகளுக்கும் கூட  ஓரளவு அங்கிகாரத்தினை வழங்கி இருக்கிறார்கள் என்று அவர்கள் வழங்கிய கவிதை பற்றிய கருத்துப் பகிர்வுகள் வாயிலாக அறிந்துகொண்டேன்.


ஆசிரியர் என்ற வகையில் மாணவர்களிடையே காணப்படும் வாசிப்பு ஆர்வம் எந்த நிலையில் உள்ளதாக நினைக்கிறீர்கள்?

தற்கால மாணவர்களிடையே இலக்கிய வாசிப்பானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகிறது என்ற துர்ப்;பாக்கிய நிலையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மாணவர்களிடையே பாட நூல் வாசிப்பில் கூட மந்த நிலைதான் காணப்படுகிறது. இதற்கு நவீன ஊடகங்களின் செல்வாக்கே பிரதான காரணியாகும். பரீட்சைக்கான படிப்பு என்று அவர்களின் தேடலும் மட்டுப்படுத்தப்படுவதால் அவர்களின் பரந்துபட்ட வாசிப்புக்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அதனை மாற்றி அமைப்பதற்கான முயற்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பே இன்று அதிகம் தேவையான ஒன்றாக அமைந்துள்ளது.


உங்களுக்கு அல்லது உங்களது கவிதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

நான் ஏற்கனவே கூறியது போல சமூக வலைதளங்களையே என்னுடைய எழுத்துக்கான தளமாக மாற்றி எழுதிக் கொண்டிருப்பதால் அங்கு பல்வேறு வகையான வாசகர் மட்டங்களில் இருந்து உடனுக்குடன் ஆரோக்கியமான பின்னூட்டல்கள், ஆதரவுகள், வரவேற்புகள் என்ற வகையிலான பதிவுகள் அவ்வப்போது கிடைக்கும். ஒரு சிலர் நேரிலோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ கருத்துக்களையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பார்கள். அவை மேலும் இயங்குவதற்கான  பிரயத்தனத்தினை எனக்குள் ஏற்படுத்தும்.


நிறைவாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

வாசிப்பு இன்றிய எழுத்துக்கள் ஒரு போதும் அனைவராலும்  வாசிக்கப்பட மாட்டாது. முதலில் ஆழமான வாசகனாக என்னை உருவாக்கிக்கொள்ளவே விரும்புகிறேன். நிறைவாக என்னைப் போன்ற புதிய இலக்கிய முயற்சியாளர்களை இணங்கண்டு அவர்களுக்கு இவ்வாறானதொரு செவ்வியின் ஊடாக களம் தந்து அடையாளப்படுத்தும் உங்களின் பணி மிக்க வரவேற்கத்தக்கது. இந்த நேர்காணலைப் பிரசுரிக்கும் தினகரன் பத்திரிகையின் செந்தூரம் இதழுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிகள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்