எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராசா அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?
எனது இயற் பெயர் அம்பலவாணர் சிறீஸ்கந்தராசா, எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர் சிறீ சிறீஸ்கந்தராசா. இந்தப் பெயரிலேயே எனது ஆக்கங்களை எழுதி வருகின்றேன். என் முகத்தை மட்டுமல்ல எனது முகவரியையும் மறைத்துக்கொள்ளத்தான் எனக்கு விருப்பம். இருந்தபோதிலும் ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிவு செய்கிறேன். நான் இல. 419, கொழும்புத்துறை பிரதான வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் தற்போது வசித்து வருகின்றேன்.
உங்கள் ஊர், கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாமே?
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறத்தாழ 03 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொழும்புத்துறை என்ற கிராமமே எனது கிராமம் ஆகும். இப்பகுதியில் வீதிகள் விருத்தியாக முன்னர் யாழ்ப்பாணத்துக்கான பொருட்கள் கப்பல் மூலம் கொழும்பில் இருந்து வந்திறங்குவதால் கொழும்புத்துறை என்ற காரணப் பெயரைப் பெற்றது. இதன் எல்லைகளாக மேற்கில் பாண்டியன்தாழ்வு, கிழக்கே அரியாலையும், வடக்கே நல்லூரும், தெற்கே பாசையூரையும் கொண்டுள்ளது.
பிறப்பிடம் கொழும்புத்துறை என்ற போதும் காலச் சக்கரம் வீசிய சுழற்சி வேகத்தில் பூநகரி என்னும் இன்னொரு கிராமத்தில் எனது பெற்றோர்கள் கமத்தொழில் செய்வதற்காகக் குடிபெயர்ந்தார்கள். அதனால் நானும் அங்குதான் எனது ஆரம்பக் கல்வியை பூநகரி மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டேன். உயர் கல்வியை யாழ் மத்திய கல்லூரியில் பெற்றுக்கொண்டேன். உயர் தரம் கலைப் பிரிவில் தமிழையும் ஒரு பாடமாகக் கற்றுக்கொண்டேன்.காலச் சக்கரம் தொடர்ந்து சுழல்கின்றது. எனக்கு பல்கலைக்கழக அனுமதியும் கிடைக்கின்றது. அதேவேளை தொலைத்தொடர்புத் திணைக்களத்தில் வேலையும் கிடைக்கின்றது. அன்று எடுத்த முடிவுதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கின்றது. பட்டப் படிப்பினை எப்போதும் தொடரலாம். ஆனால் வேலை வாய்ப்பு எப்போது கிடைப்பதில்லை. கொழும்பில் தொலைத்தொடர்பு திணைக்களத்தில் நல்லதொரு வேலையில் அமர்ந்தேன்.1983 இல் நிகழ்ந்த இனக்கலவரம் என்னையும் யாழ்நகர் நோக்கிக் கப்பல் ஏற்றிவைத்தது. மீண்டும் ஒரு முடிவு எடுத்ததன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுக்குச் செல்வதற்கு வாய்ப்பும் வசதியும் கிடைத்தபோதும், முகாம் வாழ்க்கை, வதிவிட அனுமதி கிடைப்பதில் தாமதம் காரணமாகவும், உடனே கையில் காசு பார்க்க வேண்டிய ஆசையில் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு (சவூதி அரேபியா) பயணமானேன். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் குடும்ப உறவுகளோடு வாழும் சந்தோசமான வாழ்வைத் தொலைத்துவிட்டு இணைய முகாமையாளராகக் (Nநுவுறுழுசுமு யுனுஆஐNஐளுவுசுயுவுழுசு) கிழித்துக் குப்பை கொட்டிவிட்டு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தவறாமல் எடுத்துக்கொண்டேயிருக்க வேண்டிய நோய்களுடன் வீடு வந்து சேர்ந்தேன்.இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்த விடயம் என்ன?
அவ்வேளை எனக்குள்ளேயும் ஒரு கவிஞன், ஒரு விமர்சகன், ஒரு ஆய்வாளன் இருக்கின்றான் என்பதனை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை. வேலை நேரம் தவிர்ந்த வேளைகளில் கவிதைகள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள் போன்றவற்றை வாசிக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் கிடைத்தன.
கவிச்சக்கரவர்த்தி, பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், மு. மேத்தா, வைரமுத்து, காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் கனவில் வந்து ஆசி கூறி வாழ்த்திச் சென்றார்கள். கண்ணதாசன் மட்டும்தான் என் அருகிருந்து எழுத்தாணி தந்து என்விரல் பிடித்துக் கவிதை எழுதக் கற்றுத் தந்தார். குருவுக்கு என் முதல் வணக்கம்!
உங்களது முதற் படைப்பு எப்போது, எதில் வெளியானது?
1982 களில் இலங்கை வானொலி ஷஷமங்கையர் மஞ்சரி|| என்ற நிகழ்ச்சியில் கவிதைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கு திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அம்மையார் ஒரு தலைப்புத் தந்தார்.
தென்னை மரநிழலில் தென்றல் வீசுகையில்
கன்னம் குழிவிழவே காத்திருப்பாள் எனக்காக
என்ற எனது கன்னிக் கவிதை போட்டியில் முதலிடம் பெற்றமையால் அந்த நிகழ்ச்சியில் எனது கவிதை ஒலிபரப்பாகியது.
காத்திருப்பாள் எனக்காக!
செக்கல் சிவக்கையிலே செவ்வந்தி சோருகையில்
பக்கத் துணையின்றி பறவையினம் வாடுகையில்
கத்தும் கடலங்கே கரைமோதி மீளுகையில்
கன்னம் குழி விழவே காத்திருப்பாள் எனக்காக!
துள்ளும் மீனினமும் துடிக்குதம்மா துணையின்றி
மருளும் மானினமும் மயங்குதம்மா உறவின்றி!
தென்னை மரநிழலில் தென்றல் வீசுகையில்
கன்னம்குழி விழவே காத்திருப்பாள் எனக்காக!
நீள் துயில் நீங்காய்!
ஓமென ஒலித்தன உயிரினம் யாவும்
உயர் கிளைச் சேவல் ஊதின சங்கம்
மாநிலம் எங்கும் மகிழ்ந்தது பாராய்
மண்மிசை தென்றல் தவழ்ந்தது சீராய்!
தீயினில் வெந்த செந்தமிழ் ஈழம்
சிரித்திடும் காலை வந்தது காண்பாய்
புண்ணிய நிலமே புன்னகை புரிவாய்
பொன்னடி பணிந்தோம் பூந்துயில் நீங்காய்!
இந்தக் கவிதைகள் எல்லாம் எனது இன்னொரு கவிதைத் தொகுப்புக்காகக் காத்திருக்கின்றன.
அண்மையில் வெளிவந்த உங்களது தராசு முனைகள் நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?
2022.05.08 ஆம் திகதி தராசு முனைகள் நூல் வெளியாகியது. இந்த நூலின் நுழைவாயில் என்னும் பகுதியில் தராசு முனைகள் என்ற தலைப்பின் கீழ் இங்கே 20 நூல் மதிப்பீடுகள் பதிவாகி இருக்கின்றன. இவை பெரும்பாலும் காற்றுவெளி (இலண்டன்) என்னும் மின்னிதழில் அவ்வப்போது வெளியானவையாகும். இந்த நூல் தராசு முனைகள் என்று மகுடம் தரித்திருந்தாலும் கூரிய கத்தி முனையிலிருந்தே கடுந்தவம் செய்திருக்கிறேன். நான் காயம்பட்டாலும் நூலாசிரியர்கள் காயம்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக எடை போட்டிருக்கிறேன். தராசு முனைகள் என்றும் நீதி வழுவாத தீர்ப்புகளையே இங்கே வழங்கியிருக்கின்றது என்று என் சுயநினைவோடு இத்தால் உறுதி கூறுகிறேன்.கவிதை, சிறுகதை நூல்களையே எழுத்தாளர்கள் முதன் முதலாக வெளியிடுவது வழமை. இப்படியிருக்கும் போது நீங்கள் புத்தக விமர்சனங்கள் அடங்கிய நூலை வெளியிட விசேட காரணம் என்ன?
இது மிகவும் பெறுமதி மிக்க ஒரு கேள்வியாகும். 2022 இல் வெளிவந்த தராசு முனைகள் என்ற நூல் விமர்சனங்களடங்கிய தொகுதியே எனது முதலாவது நூல் வெளியீடாக அமைகிறது. இந்நூல் வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினரால் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் நிதி அனுசரணையோடு அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கிறது,
இருந்தாலும் கவிதைகள் என்ற வகையில் நூறு கவிதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று "என் சிறகுகளை விலை பேசாதீர்கள்" என்ற தலைப்பில் தேசிய கலாசாரப் பிரிவினரால் (செத்சிரிபாய) தெரிவு செய்யப்பட்டு பதிப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற தகவல் அறியக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
எனது நூல் விமர்சனங்கள் அடங்கிய இரண்டாவது தொகுப்பின் அச்சு வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதனையும் இவ்விடத்தில் பதிவு செய்வது மிகப்பொருத்தமானதாக அமையும் என்று நினைக்கின்றேன்.
நூல் விமர்சன ஈடுபாட்டுக்கு, வழிகாட்டியாக இருந்தவர்கள் குறித்துக் குறிப்பிடுங்கள்?
விமர்சனத் துறை என்று சொல்வதற்கில்லை. கவிதைகள், செய்யுள்கள் பற்றிய விபரிப்பு, விளக்கம், நயந்துரைத்தல் என்ற வகையில் கலைஞர் அவர்களின் சொல்லாட்சியில் எனக்கொரு கவர்ச்சி ஈடுபாடு இருந்தது உண்மை. ஒவ்வொரு நூலின் விமர்சனத்தையும் நான் எழுதும் போது இத்தகைய ஒருவித கவிதை நடையுடனான சொல்லாட்சியை நான் கையாண்டிருப்பதனை தராசு முனைகள் வாசிக்கும்போதே உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் நூல் விமர்சனங்களை எழுதும் போது கவனிக்கும் முக்கியமான விடயங்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?
ஒரு நூலைக் கையில் எடுத்தவுடன் அந்த நூலாசிரியரின் பெயரை மட்டுமல்ல அவரின் முகத்தையும் முற்றாக மறந்துவிடுவேன். அடுத்து, வடிவம், நடை (சொந்தப் பாணி) சொல்லாட்சி, பிறமொழிக் கலப்பு, இறுதியாக அந்த நூல் இந்த சமூகத்துக்குச் சொல்ல வந்த செய்தி என்ன? இத்தகைய எடுகோள்களை முன்னிறுத்தி எனது விமர்சனத்தை எழுத ஆரம்பிப்பேன்.
இதுவரை எத்தனை நூல்களுக்கான விமர்சனங்களை எழுதியுள்ளீர்கள்? அவை பற்றிப் பொதுவாகக் குறிப்பிடுங்கள்?
விமர்சனம் என்ற வகையில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட நூல்களுக்கு விமர்சனம், மதிப்பீடு, அணிந்துரை, ஆய்வுரை என்று எழுதியிருக்கிறேன். முதன் முதலில் நண்பர் இசாறுதீன் அவர்களின் மழை நதி கடல் என்ற கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துரை எழுதியிருக்கிறேன்.
வாசகர்களிடையே உங்களது நூல் விமர்சனங்களுக்கான வரவேற்பு எந்தளவில் உள்ளது?
இதற்கான பதிலை தங்களைப் போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. என் கவிதைகள் பற்றி ஒரு கவிதையில் நான் இப்படி எழுதியிருக்கிறேன்.
இன்னும்
இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னர்
என் வழித்தோன்றல் ஒருவன்
என் கவிதைகளைத் தோண்டி எடுப்பான்.
அவனுக்காக
இவற்றை ஆவணப்படுத்துகிறேன்..
இது எனது கவிதைகளுக்கு மட்டுமல்ல எனது விமர்சன நூல்களுக்கும் பொருந்தும்!
நூல் கண்ணோட்டம், மதிப்புரை, விமர்சனம், திறன் நோக்கு, நூலாய்வு இவ்வகையான சொற்றொடர்களிடையே ஏதாவது வித்தியாசத்தைக் காண்கின்றீர்களா?
என்னைப் பொறுத்தவரையில் மதிப்பீடு, விமர்சனம் ஒத்த கருத்தும் பொருளுமுள்ள சொற்கள்தான். ஆய்வு, திறனாய்வு என்பது இந்த வகைக்குள் அடங்குவன அல்ல. ஆனால் இவையிரண்டும் இன்னொரு பொருளும் அர்த்தமும் உள்ள சொற்கள் என்பது எனது கருத்தாகும்.
நூலாய்வு என்றால் அந்த நூலை பிச்சுப் பிடுங்கி, வெட்டிக் கிழித்து, சத்திர சிகிச்சை செய்வதற்கு ஒப்பானதாகும். இதன் விளைவு அந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைக் குறைத்துவிடும் என்பது எனது கருத்தாகும். நூலை மதிப்பீடு செய்யும்போது அந்த நூலைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டுமே என்ற ஆவல் மேலெழ வேண்டும்.
உங்கள் படைப்புகளுக்கு களம் தந்த ஊடகங்கள் பற்றி?
எனது படைப்புகளுக்கு களம் தந்ததோடல்லாமல் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த வளர்த்தெடுத்த பெருமை (அந்நாளைய) இலங்கை வானொலியையே சாரும். அத்துடன் மண் விடுதலை பற்றிய கவிதைகளுக்கு களம் தந்து, ஒலிபரப்பிய பெருமை பிலிப்பைன்ஸ் நாட்டின் குவிசோன் நகரில் இருந்து ஒலிபரப்பாகிய வெரித்தாஸ் வானொலியைச் சாரும். தொடர்ந்து ஏறக்குறைய 50 நூல்களுக்கு மேல் எழுதிய மதிப்பீடுகளை தனது மின்னிதழ்களில் பதிவு செய்து என்னை மேலும் ஊக்கப்படுத்திய பெருமை லண்டனில் இருந்து வெளியாகும் காற்றுவெளி மின்னிதழுக்கும் அதன் ஆசிரியர் தி. முல்லை அமுதன் அவர்களுக்கும் சாரும்.
விமர்சகர்கள் பக்கச் சார்பற்று நடுநிலையாக செயற்படுவதென்பது சாத்தியமாகுமா?
களத்துக்கு வந்த பின்னர் கருணை காட்டாதே. போற்றுவார் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும். போகட்டும் கண்ணனுக்கே. இதனைத்தான் எனது பாணியில் இப்படி எழுதுவேன். முகஸ்துதி பாட வேண்டுமென்பதோ அல்லது மட்டம் தட்ட வேண்டும் என்பதுவோ எமது நோக்கமன்று!
மொழிபெயர்ப்பு நூல்களையும் விமர்சனம் செய்துள்ளீர்களா? ஏனைய இலக்கிய நூல்களை விமர்சனம் செய்வதிலிருந்து மொழிபெயர்ப்பு நூல்களை விமர்சனம் செய்யும் போது உங்களது கண்ணோட்டம் எப்படி அமைகிறது?
என்றாவது ஒரு நாள் என்ற கீதா மதிவாணன் எழுதிய ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கு நான் எழுதிய மதிப்பீட்டில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன். மொழிபெயர்ப்பு என்பது பளிங்குத்தரையில் நடனமாடும் ஒரு விதக் கலையாகும். இதன் பொருள், தடுமாறிக் கீழே விழாமல் இருப்பதுடன் அழகாகவும் ஆடத்தெரிய வேண்டும் என்பதாம். மொழிபெயர்ப்பின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில கூறுகளை அறிவது அவசியம். மூலமொழியின் இயல்புக்கும் நடைக்கும் ஏற்ப மொழிபெயர்ப்பு மொழியாகிய பெறுமொழியின் இயல்பும் நடையும் அமைதல் வேண்டும். ஷஷமொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள்|| என்றும் வரையறை செய்கிறது ஒரு இத்தாலியப் பழமொழி. தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டாலும் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும்.
நூல்களை விமர்சனம் செய்யும் படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அனுபவச் செய்தி என்ன?
ஒரு நூலைக் கையில் எடுத்தவுடன் அந்த நூலாசிரியரின் பெயரை மட்டுமல்ல அவரின் முகத்தையும் முற்றாக மறந்து விடுங்கள் என்பதையே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் நீங்கள் ஈடுபாடு காட்டும் ஏனைய துறைகள் பற்றியும் குறிப்பிடலாமே?
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு, தமிழிசையின் தோற்றமும் வரலாறும், இலகு முறையில் யாப்பிலக்கணம் போன்ற துறைகளில் எனக்கு அதிகமான ஈடுபாடுகள் இருக்கிறது.
இலக்கியத் துறையில் பயணிக்கும் நீங்கள் சமகாலப் படைப்பாளிகளின் போக்குத் தொடர்பாகவும் இளந்தலை முறையினரின் படைப்புகள் தொடர்பாகவும் கூற விழைவது?
எல்லோரும் எழுதுங்கள். தரமனதாக எழுதுங்கள். உனக்குத் தெரிந்ததை மட்டும் எழுது. தெரியாத அமெரிக்காவைப் பற்றி எழுதாதே. மேலும் ஒன்று சொல்லுகிறேன். வெறும் புனைவுகளில் கவனம் செலுத்தாதீர்கள். எப்போதும் யதார்த்தமான படைப்புகளே நிரந்தரமாகும்.
இலக்கியத் துறையில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றிக் கூற முடியுமா?
அப்படி ஒன்றும் குறிப்பிடத்தக்களவில் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. எழுத்து உலகம் உடனேயே என்னை அங்கீகரிக்கவுமில்லை. எத்தனையோ தடவைகள் என்னை ஏமாற்றியது. மட்டம் தட்டியது. நான் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. தற்போதுவரை எனது பயணத்தை சீராகத் தொடர்ந்து செல்கிறேன்.
இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத விடயம் ஒன்று பற்றிக் குறிப்பிடுங்கள்?
2018 - 2019 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில், தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி பயின்றேன். தமிழிசையின் தற்காலச் செல்நெறி எனும் தலைப்பின்கீழ் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். அதனை மேலும் விரிவாக்கம் செய்து அடுத்த பதிப்பாகக் கொண்டுவர எண்ணியுள்ளேன்.
நிறைவாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
20 வருடங்கள் நான் செய்த தவமே தராசு முனைகள் என்ற நூலாக இன்று வரமாகக் கிடைத்திருக்கிறது. இந்த நூலில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தினையும் மிகவும் நுட்பமான உளிகொண்டு செதுக்கியிருக்கிறேன். செதுக்கலின்போது காயங்கள் பட்டிருக்கின்றேன். கல்லெறிகளும் வாங்கியிருக்கின்றேன். ஆனாலும் புறமுதுகு காட்டவில்லை. மாறாத தழும்புகளோடும் ஆறாத வடுக்களோடும் இன்றும் களத்தில் நிற்கின்றேன். என்னைப் புறந்தள்ளிய இந்த உலகத்தை நான் புறம்காண வேண்டும் என்ற வெறியில் வலிகளைத் தாங்கிக் கொண்டு எழுதுகிறேன். இது எனது முதல் முயற்சி. எனது எழுத்துக்கள் விமர்சன உலகில் தனக்கென்று ஒரு தடம் பதிக்கும் என்பதனை இவ்விடத்தில் மிகுந்த நம்பிக்கையோடு உறுதிபடக் கூறுகிறேன்!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்










































