ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா அவர்களுடனான நேர்காணல்
(ஜமாலியா செய்யத் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா)
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?
ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா (ஜமாலியா செய்யத் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா) என்பது எனது பெயர். இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள, வெலிகமயிலிருந்து இரண்டு மைல்கள் தூரத்திலுள்ள வெலிப்பிட்டி எனும் சிற்றூரில் 1937 டிசம்பர் திகதி 20 இல் பிறந்தேன். எனது வயது ஐந்தாகும் போது ஆங்குள்ள சிறு பள்ளிக்கூடத்தில் என்னைக் கல்வி கற்பதற்காகச் சேர்த்தார்கள். ஆங்கு மூன்றாம் ஆண்டுவரை என் தாய் மொழியைக் கற்றேன். அங்கு அதற்குமேல் வகுப்புகள் அங்கு இருக்கவில்லை.
பின்னர் என் மதிப்பிற்குரிய தந்தையவர்கள் என்னை வெலிகாமத்திலுள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் ஆண்டில் சேர்த்தார்கள். அதில் ஒரு வருடம் படித்த பின்பு அதன் பக்கத்தில் உள்ள ஒரு கனிஷ்டப் பாடசாலையில் ஆண்டு ஆறிலிருந்து ஆங்கிலக் கல்வி கற்றேன். அங்கு படித்து அரசுப் பரீட்சையில் சிரேஷ்ட வகுப்பில் சித்தியடைந்தேன். இதுவரை தமிழில் ஒவ்வொரு பாடங்களே படித்திருந்தேன்.
எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர் ஒவ்வொருவரும் சிறந்த தமிழ் அறிவுள்ளவர்கள். எமது மதிப்பிற்குரிய தந்தையவர்களும் தமிழிலும், அரபி, ஆங்கிலம் முதலான ஏனைய கலைகளையும் நன்கு கற்றவர்கள். மதிப்பிற்குரிய தகப்பனார் அவர்கள் அறபியில் மிகத் தேர்ந்தவர். ஆதலால் அவர்களிடம் கசடறக் கற்கும் திறனையும் பெற்றேன்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் எஸ்.எஸ்.ஸி. சித்தியடைந்தேன். எனவே நம்மூர்ப் பக்கத்திலே உள்ள அகுரஸ்ஸை எனும் ஊரில் உள்ள போர்வை எனும் கிராமத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பதவியேற்றேன். அங்கு மூன்று வருடங்கள் கடமை புரிந்து, காலியில் இருந்த அரசினர் தமிழ் ஆசிரியர்ப் பயிற்சிக் கலாசாலை ஒன்றில் பயிற்சி பெற்றேன். இரண்டு வருடங்கள் கற்று முடிந்ததும் வெலிகாமத்தில் உள்ள அறபா பாடசாலையில் கற்பித்தேன். அதன்பின் எனக்கு ஓர் இடமாற்றம் கிடைத்தது. அது குருநாகலிலுள்ள பண்டார கொஸ்வத்தை எனும் ஊரில் உள்ள தமிழ்ப் பாடசாலையாகும். அங்கு தலைமையாசிரியராகக் (அதிபராக) கடமை புரிந்தேன். அங்கு ஒரு வருடமே எனக்குக் கடமையாற்றக் கிடைத்தது. அதற்குப்பின் எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அங்கிருந்து சிலாபத்திலுள்ள கல்விப் பணிப்பகம் சென்றேன். நான் அங்கு வட்டாரக் கல்வி அதிகாரியாக ஐந்து வருடங்கள் பணி புரிந்தேன். அதன்பின் அநுராதபுரத்திலுள்ள கல்வி பணிப்பகத்திற்கு மாற்றம் பெற்றேன். அங்கும் பதினொரு வருடங்கள் பணி புரிந்தும் எனக்கு மாற்றம் கிடைக்காததால், அத்தொழிலை எறிந்து என் தொழில் தமிழ் தாய்க்கு பணி செய்து கிடப்பதே எனும் உயர் நோக்கில் தாயில்லம் வந்து சேர்ந்தேன்.

எமது தமிழ்ப் பணி எட்டாம் வகுப்பிலிருந்து ஆரம்பமாகத் தொடங்கிற்று. எல்லாருக்கும் உள்ள இயற்கைக் குணமென்னும் பொறாமை உறவினருக்குள்ளும் இருந்ததனால் யான் எதிர் நீச்சல் போட்டேன். கடவுள் நம்முடனிருந்தார். அக்காலத்தில் பத்திரிகைக்கு எழுதிய ஒரிரண்டு பாக்களே பிரசுரிக்கப்பட்டன. மற்றவை உறவினர்கள் திருவிளையாட்டுக்குள் மறைந்தன.
நீங்கள் எப்போது, எந்த வயதில் எழுத்துத் துறைக்குள் நுழைந்தீர்கள்? உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?
என் வயது ஏழிலிருந்து என் இக்கைங்கரியத்தை கடவுள் ஆரம்பித்து தந்தார். எனது பாடசாலைத் தொழிலில் நான் பெற்ற அனுபவம் தொழிலைத்தீரச் செய்தல் என்பதாகும். பாடசாலையில் சக மாணாக்கரோடு ஒன்று கூடிப் பழகுவதில் பல அனுபவங்கள் உண்டாகின. ஒருவரின் குணம் மற்றவரின் குணத்திற்கும் பெரிதும் மாறுபட்டதாயிருந்தது. எவரெவருக்கு எவரெவர் பிடித்தமாயிருப்பாரோ அவர் குணத்திற்கேற்ப நண்பர்களைப் பிடித்துக்கொள்வர், உறவாடுவர். இந்தவகையில் புதுப் புது நட்புக்களைப் பிடித்துக்கொள்வதிலும், அவர்களுடன் படித்த பாடங்களை மீட்டிக்கொள்வதிலும் ஓர் அலாதியான இன்பம் உண்டாகிறது. இல்லத்தில் அடைந்து கிடப்பதைவிட பள்ளிக்குச் செல்வதில் மிகச் சந்தோஷமுண்டு. பாடசாலையில் படித்து வந்து பின்னர் ஆசிரியராகத் தொழில் கிடைத்ததும் ஒரு புது அநுபவம் உண்டாகியது. மாணாக்கர் மனதிற்கு ஏற்றபடி கற்பித்து மாணாக்கர் வெற்றியடையச் செய்வதில் பெரும் பெரும் அநுபவமுண்டானது.
ஆசிரியராக பல்வேறு ஆண்டுகள் சேவை புரிந்த நீங்கள் மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்ததா?மாணாக்கர் மிகச் சிலரிடத்தே இலக்கிய ஆர்வம் காணப்பட்டது. ஆசிரியராக பணிபுரிந்து வந்த காலத்தில் பலதரப்பட்ட மாணாக்கர் பயிலும் பள்ளியில் அவர்களின் குண, பழக்க வழக்கங்கள் மிக மிக வேறுபாடடைந்திருக்கும். இவர்களின் ஒரு பகுதியினர் கல்விக் கேள்விகளில் மிக விருப்பமுடையோராய்க் காண்பர். இப்படிப்பட்ட மாணாக்கர் சித்திரம் வரைதல், பாடல்கள் பாடல் முதலியனவற்றில் மிக்கச் சிறப்புடையோராய் காணப்படுவர். ஆசிரியர் மாணாக்கர் பலவகையிலும் முன்னேற்றமடைய இலக்கியத் திறன் வாய்ந்த ஆசிரியர்களும் காரணமாவர். ஆசிரியர்களில் மதிப்புக் கொண்ட மாணாக்கர் இலக்கியம் முதலான இன்பக் கலைகளில் முன்னேறுவர். இந்தவகையில் யானும் ஒருவராய் இருந்தமையால் என்னிடம் கற்றவர்கள், நல்ல இலக்கியப் பாடல்களைப் பாடுவதிலும் எழுதுவதிலும் சிறப்புற்றுத் தோன்றினர்.
எத்தனை ஆண்டுகளாக கவிதைகளை எழுதி வருகின்றீர்கள்? மரபுக் கவிதைகள் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?பல்லாண்டுகளாக தமிழ்க் கவிதைகள் எழுதி வருகிறேன். அளவிட்டுச் சொல்ல முடியாது. மரபுக் கவிதைகள் கற்பாரிடத்து உயர் நோக்கங்களையும், மொழியில் உயர்ச்சியையும் உண்டு பண்ணும். மரபுக் கவிதைகள் சட்டதிட்டங்களையும் அதனை உறுதியாகக் கடைபிடிக்கும் ஒரு நெறியையும் வாழ்க்கையில் உண்டு பண்ணும். மொழியறிவு விரிவடையும், பாட்டெழுத வேண்டும்; என்பதற்காக சிலர் கரடுமுரடாகவும் எழுதுவார்கள்.
மரபுக் கவிதைகளை நீங்கள் எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்? இத்துறையில் நீங்கள் ஈடுபட வழிகாட்டியவர்கள் யாவர்?எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் புதுக் கவிதைகளை உபயோகிப்பதில்லை. அதுவும் வேண்டின், பாரதியார் எழுதிய கிளிப் பாட்டு போல் இலக்கண வழுவின்றி எழுதுவேன். பாக்கள் வாழ்த்துகளாயினும் சரியே, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நான் மரபுக் கவிதைகளையே எழுதுகிறேன். புராணங்கள் கவிதைகள் முதலான இவை யாவும் யாப்பிலக்கண அமைவோடு அமைவதையே நான் விரும்புகிறேன். சிறப்புமிக்கச் சங்க கால நூல்களும் சிறப்புமிக்க அவற்றின் உரைகளும் எனக்கு மிகவும் வழிகாட்டின.
இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்?புது வகைக் கவிதைகள் (பாரதியார் எழுதிய கவிதைகளைப் பின்பற்றியும்) நூல்கள் எழுதியுள்ளேன். உமர் (ரலி) புராணம் எனும் பெயருடன் ஒரு புராணம் எழுதியுள்ளேன். ஓரிலக்கண நூலும் எழுதியுள்ளேன். யாப்பிலும் ஒரு விளக்க நூல் எழுதியுள்ளேன். அந்தவகையில் இதுவரை இருபது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளேன். நான் வெளியிட்ட பல நூல்களுள், குறிஞ்சிச் சுவை, ஐங்குறுநூறு வரிசையில் பாலைவனம், நாயகர் பன்னிரு பாடல், ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர், மஹானந்தலங்கார மாலை, அண்ணல் நபிகள் அற்புத அகில நாதர், இறையருட்பா, தாகி பிரபம், பாத்திமா நாயகியார் மாலை, உமர் (ரலி) புராணம் ஆகியவை இவற்றுள் சிலவாகும். எதிர்காலத்தில் இன்னும் பல நூல்கள் அச்சிடற்குள்ளன.
மரபுக் கவிதைகளை எழுதுவதில் பாண்டித்தியம் பெற்ற நீங்கள் புதுக் கவிதைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?மரபுக் கவிதைகள் இலக்கண எல்லைகளுடன் அமைந்தவை. யாப்பிலக்கணம் தவறினால் அதனைப் பாவென்றே கூற முடியாது. எதுகையிருக்க வேண்டும், மோனையிருக்க வேண்டும். எதுகைக் கேற்ற மோனை வரவில்லையானால் அதிற் பாவிலக்கணப் பிழைப்பட்டுவிடும். இதில் ஓர் ஒழுங்கு முறையுண்டு. ஆனால் இன்று உலவும் புதுக் கவிதைகளில் எழுத்து, அசை, சீர், பந்தம், அடி தொடை முதலியன ஒழுங்கு முறையில் அமைந்ததாக இல்லை. அவைகளில் ஓர் ஒழுங்கு முறை காணப்படவில்லை. ஆதலால் புதுப்புது முறைகளை உண்டு பண்ணாமல் உள்ள யாப்பிலக்கணத்தையே கடைபிடித்து வருதல்தான் அவசியமாகிறது.
அக்காலங்களில் கவிஞர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் எழுதும் பாக்கள் யாவும் சிறப்புடையனவாயும் யாப்பிலக்கண அமைதியுடனும் இருந்தன. அவர்களுக்குத்தான் கவிஞர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள் என்ரெல்லாம் பட்டங்கள் வழங்கினர். இன்றோ இதைக் காண்பது அரிதிலுமரிது. அக்காலத்தில் பிழையாகப் பாடியவர்களின் காதுகள் துண்டிக்கப்பட்டன.
கவிதைக்கு யாப்பிலக்கணம் இருத்தல் வேண்டும். அல்லாதன சொல்லாகவும் சீரற்ற சீராகவும் அமைந்திருப்பதும், அவர்களுக்குப் பெருங்கவிஞர் பட்டங்கள் அளிப்பதும், விந்தையாகவுள்ளது. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, முதலானவற்றைப் படித்து அறிந்து கொள்ளலாம். புதுக்கவிதைகள் என்பனவற்றை யான் பொருந்தவில்லை.
'மரபுக் கவிதைகள் காலப்போக்கில் முற்றாக அழிந்துவிடும்' எனப் பரவலாகச் சொல்லப்படுகிறதே. இதுபற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?மரபுக் கவிதைகள் பல்லாண்டுகளுக்கு முன்னேயே உற்பத்தியாயின. முதற் சங்கம் அழிந்த போதும் அவை அழியவில்லை என்பதை யாவரும் அறிவர். அவற்றை நினைத்தபடியெல்லாம் அழித்துவிட முடியாது. இது திண்ணம். புதுக்கவிதைகள் எனக் கூறிக்கொண்டு பலரும் எழுதத் தொடங்கிய போதும் அதனால் மரபுக் கவிதைகளையோ சங்க நூல்களையோ எவராலும் அழித்துவிட முடியாது. அவ்வாறு நினைப்போர் தற்பெருமைக்காகக் கூறிக் கொள்வாரேயாம். இப்போது பல இடங்களிலும் தமிழ்ச் சங்கங்கள் பல்கிப் பெருகி வருகின்றன. பட்டங்களும் கொடுக்கிறார்கள். இது பரவலாய் உள்ளதைக் காண்க. நாமும் இந்தியாவில் தமிழ்ச் சங்கம் அமைத்துள்ளோம். வாழ்க நற்றமிழ்! வாழ்க மரபுக் கவிதைகள்!!
உங்களது படைப்புகளுக்கான வாசகர் வட்டம் எந்தளவில் உள்ளது?எனது வாசகர் வட்டம் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றெல்லலா நாடுகளிலும் உள்ளன. அதிகப் பேர் நம் நூல்களைக் கேட்டுப் படிப்பது மட்டுமல்லாது என்னை வினைந்து கேட்டு, கூட்டங்களும் வைக்கிறார்கள். எனது நூல்களை நிறையப் பேர் வாங்கிப் படிக்கிறார்கள்.
ஈழத்து எழுத்தாளர்களினதும் இந்திய எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கிடையே நீங்கள் அவதானிக்கும் பிரதான ஒற்றுமை, வேற்றுமைகள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்?
நல்ல தமிழில் எழுதும் போது இந்திய எழுத்தாளர்கள் மத்தியிலும் இலங்கை எழுத்தாளர்கள் மத்தியிலும் ஒற்றுமை வேற்றுமைகளிரா.
இலங்கை எழுத்தாளர்களுடன் அல்லாது இந்திய எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்பட காரணம் என்ன?இலங்கையில் கதவு தாழிடப்பட்டிருந்தது. புகுத முடியவில்லை. எனினும் இந்தியாவில் கதவு விரியத் திறக்கப்பட்டிருந்தது. ஆங்கு புகுதலில் எளிது கண்டேன். அதனாலேயே நான் எழுதும் நூல்களனைத்தும் ஆங்கேயே அச்சிடப்பட்டன, இப்போதும் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்குதான் எனது நூல்களுக்கு அதிக வரவேற்புகள் இருந்தது. இதனாலேயே இந்திய எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்படக் காரணமாயிற்று.
ஏனைய உள்நாட்டு எழுத்தாளர்களுடனான உறவுகள் எப்படியுள்ளது? எவ்வகையான எழுத்துகளை ஃ யாருடைய எழுத்துகளை அதிகம் வாசிக்கிறீர்கள்?
உள்நாட்டு எழுத்தாளர்களின் உறவு அதிகம் உண்டு. பாகுபாடில்லாமல் இலக்கியத் தமிழில் எழுதுவோர் எவராயினும் அவரின் ஆக்கங்களை யான் அதிகம் வாசிப்பேன்.
புராண இலக்கியங்களை இளந்தலைமுறை எழுத்தாளர்கள் வாசிப்பதாக நினைக்கிறீர்களா?
மிகக் குறுகியவர்களே வாசிக்கிறார்கள். இளந்தலைமுறைகள் அதிகம் கற்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அவைகள் அவருடைய மதச் சார்புள்ளவைகள் ஆயின் முஸ்லிம் பிள்ளைகள் இதில் அதிகம் தொடர்பு வைப்பதில்லை. எவ்வாராயினும் அறிவு, நம் தமிழ் மொழி என்பதன் நிமித்தம் அவற்றைப் படித்தல் அவசியமாகும். தமிழ் படிப்பவர்களுக்குத் தமிழ் மிகமிக முக்கியமானதாகும். பல்வேறு வகையான நடைமுறைகளை தமிழில் கண்டுகொள்ளலாம். இதில் ஞானக் கலைகளும் உண்டு. கதைப் போக்குகள் நல்லதாயிருக்கும். ஆறுமுக நாவலர் எழுதிய தமிழ் நடைகள் போற்றத்தக்கன என்பேன். நல்ல நடைகள் தமிழில் உண்டு. முருகன் அல்லது அழகு முதலான நூல்களில் ஞானம், இலக்கியம் போன்றவைகள் வித்தாய்த் திகழும்.
நீங்கள் இதுவரை வாசித்த நூல்களில் உங்களைக் கவர்ந்த நூல் எது? ஏன்?
யான் இதுவரை வாசித்த நூல்களில் இலக்கியப் பாடல்கள், திருக்குறள், நாலடியார், கம்பராமாயணம் முதலான இன்னும் பல நூல்கள். அவைகள் இகத்தை மட்டும் குறிப்பிடாது அகத்தையும் கூறுகின்றன.
உங்களது ஆரம்ப கால இலக்கியத்துக்கும் தற்கால இலக்கியத்தக்கும் எவ்வாறான வேறுபாடுகள் காணப்படுகின்றது?
எனது ஆரம்ப கால இலக்கியம் சங்க கால இலக்கிய நூல்களுடன் தொடர்புடையது. எனது வயது பதினேழுக்கு மேல் மரபுக் கவிதைகள் எழுதுவதில் மிக்க ஆர்வங்கொண்டு எழுதி வந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை என்னால் எழுதப்படும் பாக்கள் யாவும் யாப்பிலக்கண அமைவு கொண்டுள்ளமையால் அன்றும் இன்றும் தரத்தில் ஒரே நிலைகொண்டது. யாப்பிலக்கண ஒழுங்கு முறைப்படியே புதுப் பாக்களையும் எழுதி வருகிறேன். பாட்டுக்கு எதுகையும் மோனையும் உயிர் போன்றவை. யாப்பிலக்கண வழுவின்றி பா வமைத்தலையே புலவர்கள் விரும்புவார்கள். முன்பைவிட இப்போது யாத்துவரும் இலக்கிய நூல்கள் மிக்கன. (அதிகம்)
உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
இதுவரை யான் செய்து வந்தவற்றுள் உள்ள மீதியைச் செய்து வருகிறேன். உமர் (ரலி) புராணம் 2ஆம் 3ஆம் பாகம், நன்னூலுக்கான விளக்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சாதாரணமாக எழுத்தாளர் ஒருவரின் பணி எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
நம் பணி பணத்துக்காகவெனக் கருதாதிருத்தல் வேண்டும். பெருமைக் கெழுதாமல் இலக்கியங்களுக்கு ஏற்ற தரத்தில் எழுதல் வேண்டும். சங்க கால இலக்கியத்துக்கு, அதன் தரத்திற்கு அமைந்த நடையில் எழுதல் வேண்டும். எவர் எதை வாசிக்கிறாரோ அவருக்கது பொருத்தமான நடையாக, அது அமைய வேண்டும். எவர் எதை விரும்புகிறாரோ அதற்கேற்ற விளக்கம் அதில் இருத்தல் வேண்டும். சிறந்த இலக்கியத்தை பத்திரிகைத் தமிழுடன் கலத்தல் நல்லதன்று என்பது எனது கருத்து.
இலக்கிய வாழ்வில் இதுவரை உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?
என்னுடைய இலக்கண, இலக்கிய வழியிலே சிலர் வந்து முட்டித் தோற்றனர். ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் கடுமையாக எழுதுகிறீர்கள் என்றார். பாருங்கள்,
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக என எவ்வளவு இலகுவாக உள்ளது என்றார்.
உண்மைதான், மறுபுறம் பார்க்கும் போது,
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை எனவும் உள்ளது காண்க என்றேன், அவர் வாய் மூடிச் சென்றார்.
பல தசாப்த இலக்கிய வாழ்வில் உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
இதுவரை நான் எழுதி வெளியிட்டவை பலவுண்டு. அவைகள் வெளிவந்த போதும் இதற்கான பட்டங்கள், பதவிகள் முதலானவற்றை எடுப்பதற்கான பகீரதப் பிரயத்தனங்களை நானோ எனது தோழர்களோ எடுக்கவில்லை. அவற்றை எமக்குத் தோவையெனக் கருதவுமில்லை. சிலருக்குக் கிடைத்த இடைவழிப் பட்டங்கள், மதிப்புரைகள் மட்டும் பெரிய புத்தகப் படங்களோடும் பெரிய நூல்களாகப் படங்களுடனும் அச்சிட்டுப் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். இப்படியான தற்பெருமைகளை நானோ எனது தோழர்களோ விரும்பவில்லை.
எதிர்காலச் சந்ததிகளுக்கு நீங்கள் கூறும் அனுபவ மொழிகள் யாவை?
எதிர்காலச் சந்ததிகள் இலக்கணத் தமிழில் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இலக்கண, இலக்கிய நூல்களையும் நன்கு கற்றல் வேண்டும். மனங்களுக்கேற்ற புதுப்புது கல்வியைத் தரும் கலைத் துறைக்கு உகந்த நல்ல விடயங்களை எழுதுதல் அவசியம். பார்த்ததையே பார்த்து பிரதி பண்ணாமல் மனதுக்கேற்ற நல்ல புதிய விடயங்களை எழுத்தாளர்கள் அமைத்துக் கொள்ளல் வேண்டும். நல்ல இலக்கியச் சொற்களை அமைத்துக்கொள்ளல் வேண்டும். சொல்லாராய்ச்சியோடு எழுதல் வேண்டும். பல்லுடைக்கும் தமிழ் என்றெல்லாம் கூறி கம்பராமாயணம், சீறாப் புராணம் முதலான மற்றும் சங்க கால இலக்கிய நூல்களை உதாசீனம் செய்யாதிருத்தல் வேண்டும். ஆயின் சொல் வளர்ச்சி குன்றி தாயினும் தந்தையினும் பேச்சு வழக்குகள் எம்மில் ஊன்றிவிடும். அதனை எளிய தமிழெனவும் சொல்ல முடியாது. கொச்சைத் தமிழ் வழக்கில் அது அமைந்துவிடும். இவையெல்லாம் கவனித்து எழுதுதலே இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும் தொண்டு செய்தல் எனவாகும்.
இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நன்னூலை நல்லபடி கற்றுக் கொள்ளுங்கள். தொல்காப்பியத்தை படித்துக் கொள்ளுங்கள். இலக்கண வழுவின்றி நல்லபடி எழுதுங்கள். நல்ல இலக்கணம், இலக்கியம் முதலியவைகளுடன் வாழ்வைக் களியுங்கள், கழியுங்கள்.
வாழ்க தாய் மொழி!
பற்கலைகளும் வாழ்க!!
தமிழின எதிரிகள் வீழ்க!!!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்