Saturday, February 19, 2022

29. தென்றல் சஞ்சிகையாசிரியர் க. கிருபாகரன் அவர்களுடனான நேர்காணல்

தென்றல் சஞ்சிகையாசிரியர் க. கிருபாகரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம் பெரும் கிராமமான திருப்பழுகாமத்தில் பிறந்து, இன்று கல்லடியில் வாழ்ந்து வருகிறேன். எனது ஆரம்பக் கல்வியைத் திருப்பழுகாமம் விபுலானந்த கனிஷ்ட வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை திருப்பழுகாமம் கண்டு மணி மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரியிலும் கற்றேன். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று, 1998 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வி ஆசிரியராக நியமனம் பெற்றேன்.


ஊடகத்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

கிழக்கின் முதுபெரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான அமரர் வீ.சு. கதிர்காமத்தம்பியின் வழிகாட்டல், ஊக்கப்படுத்தல் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட ஆறு மாத கால ஊடகவியலாளர் பயிற்சியைப் பூர்த்தி செய்தேன். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக் கதிர் தினசரிப் பத்திரிகையின் செய்தியாளராகவும், மாணவர் பகுதிப் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டேன். அத்தோடு தேசிய தினசரிப் பத்திரிகையான சுடர்ஒளியின் நிருபராகவும் 2002 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை செயற்பட்டேன். எனினும் எனது ஈடுபாடு இலக்கியத்தின் பால் இருந்தமையால் 2008 ஆம் ஆண்டு சித்திரை 06 ஆம் நாளில் காலாண்டுச் சஞ்சிகையாகத் தென்றல் - தேசிய பல்சுவைக் குடும்பச் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தேன். அப்போது எனக்குத் துணையாக, உதவியாக மட்டக்களப்பு ஹரித்தாஸ் எகெட் நிறுவனப் பணிப்பாளர் வணபிதா சிறிதரன் சில்வெஸ்டர் இருந்தார்.


தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, கல்லூரி வாழ்க்கை போன்றவற்றை முதலில் கூறுங்கள்?

எனது பாடசாலைக் காலத்திலேயே கையெழுத்துச் சஞ்சிகையைத் தயாரித்தேன். ஆனால் அதனை வெளிக்கொணர்வதில் பல்வேறு தடைகள், இடர்பாடுகள் ஏற்பட்டன. இந்நிலையிலேயே கிழக்கின் முதுபெரும் பத்திரிகையாளரும், கிழக்கிலிருந்து வெளிவந்த 'விடிவானம்', 'தினக்கதிர்' பத்திரிகைகளின் ஸ்தாபக ஆசிரியருமான வீ.சு. கதிர்காமத்தம்பியின் வழிகாட்டல், ஊக்கப்படுத்தல் காரணமாக தென்றலை வெளிக்கொணர தூண்டப்பட்டதோடு, விற்பனை, ஆக்கம் தேடுதல் எனப் பல வழிகளிலும் உறுதுணையாகச் செயற்பட்டார்.


உங்களது ஆரம்ப காலப் படைப்புகள் மற்றும் பிரசுரங்கள் குறித்துச் சொல்ல முடியுமா?

நான் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பக் கல்வி பயிற்சி நெறியை தொடர்ந்த காலப் பகுதியில் தென்றலை மாதாந்தப் பத்திரிகையாக 11 இதழ்களை வெளிக்கொணர்ந்தேன். எனினும் அக்காலங்களில் தொடர்ந்து அதனை வெளிக்கொணர முடியவில்லை.


தென்றல் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் யாவை எனக் குறிப்பிடுங்கள்?

வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தல், மூத்த எழுத்தாளர்களை இன்றைய இளந்தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைத்தல், மாணவர்களின் அறிவுப் பசிக்கு விருந்தூட்டல், மட்டக்களப்பின் கலை, கலாசாரப் பாரம்பரியங்களை வெளிக்கொணர்தல் ஆகிய இலக்கினை நோக்காகக் கொண்டு தென்றல் சஞ்சிகை இலக்கிய உலகில் காலடி பதித்தது.


இலக்கியத்தின் காத்திரமான தன்மையைப் பேணுவதில் சிற்றிதழ்களில் வகிபங்கு எந்தளவிலுள்ளது?

பத்திரிகைகள் செய்தியை வெளியிடுவதோடு தமது கடமையை நிறைவு செய்கின்றன. ஆனால் சஞ்சிகைகள் தமது வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதோடு ஓர் ஆவணப்படுத்தல் சாதனமாகவும் அமைகின்றது. எனவே தான் இன்றைய நவீன யுகத்திலும் கூட சஞ்சிகைகளின் தேவைப்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகிறது. ஒருவர் வெளியூர்களுக்குப் பயணம் செய்கையில் இவ்வாறான சஞ்சிகைகளே அவருக்குப் பொழுது போக்குச் சாதனமாகவும் அமைகிறது.


உங்களைக் கவர்ந்த ஈழத்து எழுத்தாளர் யார்? ஏன்?

அமரர் இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்கள்தான். இவர் மிகவும் எளிமையானவர். அவர் வாழும் காலத்தில் எம்மைப் போன்ற இலக்கியத் தாகம் கொண்டோருக்கு பல்வேறு அறிவுரைகள் கூறுவதோடு, சஞ்சிகை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாகச் செயற்பட்டார். இன்றைய காலகட்டத்தில் பொறாமை, போட்டிகள், வஞ்சகம் நிறைந்த சூழலில் அவரின் அன்பும், அரவணைப்பும் தென்றலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதோடு, தொடர் வருகைக்கும் வித்திட்டது எனக் கூறினால் அது மிகையாகாது.


'தென்றல்' சஞ்சிகையை வெளியிடுவதில் எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள் பற்றிக் கூறுங்கள்?

எமது மக்கள் உள்ளூர் பதிப்புகள் என்றாலே ஏதோ ஒரு மனநிலையில் தான் அதனை நோக்குகின்றனர். விலை அதிகம். தரமில்லை. பக்கம் குறைவு என்று பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர். இதனால் சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்டு, விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் சஞ்சிகை அச்சிடுவதற்கான செலவுகள் அதிகரிப்பு மற்றும் சஞ்சிகைகளுக்கான சந்தாக் கட்டணங்கள் உரிய நேரத்துள் கிடைக்காமை போன்ற பல காரணங்களும் தொடர்ந்து ஒரு சஞ்சிகை வெளியீட்டைச் செய்யத் தடைகளாகவே அமைகின்றன.


இச்சவால்களை எதிர்கொள்ள நீங்கள் எடுத்துள்ள நல்ல முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இன்று தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சஞ்சிகைகள் கூட, கடந்த காலங்களில் இவ்வாறான சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளன. எனினும் அவை மனம் சோர்ந்து விடவில்லை. இவற்றைப் பாடமாகக் கொண்டு தடைகளை உடைத் தெறிந்து சஞ்சிகை வரலாற்றில் 'தென்றல்' பல்வேறு பரிமாணங்களுடன் நிச்சயம் இடம் பிடிக்கும்.


தொடந்து 'தென்றல்' சஞ்சிகையின் மேலதிக வளர்ச்சிக்கு நீங்கள் செய்யவுள்ள உடனடிச் செயற்பாடுகள் எவை?

எமது சஞ்சிகையின் சந்தாதாரர்களை அதிகரிக்கப் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாளவுள்ளோம். அத்துடன் நாடளாவிய ரீதியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் 'தென்றலை' அறிமுகம் செய்து, விற்பனையினை அதிகரிக்கவுள்ளோம். மேலும் இதனை மக்கள் பயணம் செய்யும் பேரூந்து, புகையிரதம் போன்றவற்றில் நேரடியாகச் சென்று விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இவை பயனளிக்குமிடத்து 'தென்றல்' மேலதிக ஆளுமையுடன் புதுப் பொலிவு பெறும்.


தாங்கள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக வெளியிட்டு வரும் தென்றல் சஞ்சிகை பற்றி என்ன சொல்வீர்கள்?

சஞ்சிகைகள் காலப் பதிவேடாக அமைவதன் காரணமாக அவற்றை தொடர்ந்து வெளிக்கொணர வேண்டியது சஞ்சிகையாளன் என்ற அடிப்படையில் என் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை. இதனை தடைகள் தாண்டி தமிழ் மக்கள் வாழும் பட்டி தொட்டி எங்கணும் சென்றடைய வழி சமைத்துக்கொண்டிருக்கிறேன்.


தென்றல் சஞ்சிகையின் சிறப்பம்;சங்கள் குறித்தும், அதன் சமூகப் பயன்பாடுகள் குறித்தும் கூறுங்கள்?

சஞ்சிகையில் இலங்கையில் மாத்திரமின்றி, நாடு கடந்தும் தேசம் கடந்தும் வாழுகின்ற ஆற்றல்மிக்க மூத்த படைப்பாளிகள் பலரை எமது இன்றைய இளந்தலைமுறையினருக்கு அடையாளப்படுத்தி, அவர்களது ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் அமைந்த தென்றலின் தேடல், எம்மை விட்டு நீங்கிச் சென்றோரை நினைவு கூரும் வகையில் நீத்தார் நினைவு, புதிய வரவுகள், சமகால நிகழ்வுகளை வெளிக்; கொணரும் வகையிலான கவிதைகள், சிறுகதைகள், சிறுகதை எழுதுவது எவ்வாறு? என்ற தொடர் கட்டுரை எனப் பலவற்றைக் கூறிக் கொண்டே போகலாம். பயன்பாடுகளாக புலமைப் பரிசில் மாணவர்களின் அறிவாற்றலை விருத்தி செய்வதோடு, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எமது தென்றல் சஞ்சிகையின் கல்விப் பிரிவால் வருடா வரும் நான்கு பரீட்சைகள்; நடாத்திச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.



நீங்கள் அண்மையில் வாசித்த படைப்புக்களில் உங்கள் மனதில் பதிந்துள்ள படைப்பு பற்றிச் சொல்வீர்களா?

வெற்றித் திருமகன் நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்நூலில் இராமாயணத்தை இளம் சிறார்களுக்கு மிக எளிய நடையில் நூலின் ஆசிரியர் மு. தம்பிப்பிள்ளை அறிமுகம் செய்கிறார். அத்தோடு இராம அவதாரத்திலிருந்து முடிபுனைதல் வரையும் உள்ள விடயங்களைச் சிறுகதைகளாக்கி தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் இராமனின் புனித தெய்வத் தன்மையும், வீரப் பிரதாபங்களும், அற ஒழுக்கங்களும் வெளிப்படுகின்றன.


ஈழத்தில் வெளிவரும் ஏனைய சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் உண்டா?

வாசிப்பதால் மனிதன் பூரணத்துவடைகிறான் என்பதற்கிணங்க எமது சகோதரச் சஞ்சிகைகளான ஜீவநதி, மகுடம், தொண்டன், சுவைத்திரள், பூங்காவனம், செங்கதிர், ஞானம் உட்பட பல்வேறு சஞ்சிகைகளையும் வாசித்து அவற்றின் ஊடாக புதிய தேடல்களை விருத்தி செய்து கொள்வேன்.


உங்களது இலக்கிய வாழ்வில் இதுவரை மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் கூறுங்கள்?

எமது தென்றல் சஞ்சிகையின் தொடர் வருகைக்காகவும், அது கலை, இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காகவும் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகத் தமிழ் சிற்றிதழ் சங்கம் கொழும்பு மாநகரில் நடாத்திய மாநாட்டில் வைத்து வழங்கிய மணவாளன் இலக்கிய விருதைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இதனை உணர்கிறேன்.


இலக்கிய இரசனையுள்ளவர்கள் நூல்களை வெளியிடுவது வழமை. உங்களது சொந்தப் படைப்புக்களை நூலாக வெளியிட வேண்டுமென்ற எண்ணம் இதுவரை தோன்றவில்லையா?

எனது படைப்பாக ஈழத்தில் மாத்திரமின்றி, புலம் பெயர்ந்து வாழ்கின்ற எழுத்தாளர்களை வெளிக்கொணரும் வகையில் தென்றல் சஞ்சிகையில் இதுவரை வெளிவந்த 17 இலக்கியவாதிகளை வெளிக்கொணரும் வகையில் தென்றல் சஞ்சிகையின் ஐம்பதாவது இதழை தென்றலின் தேடல் பாகம் - 01 ஆக வெளிக் கொணர்ந்துள்ளேன். இத்தேடல்கள் எதிர்காலத்தில் பல்வேறு பாகங்களாகச் சுடர்விட்டுத் தென்றலோடு தென்றலாக அகில மெல்லாம் பரிணமிக்கும்.


அண்மையில் வெளியிடப்பட்ட தென்றலின் தேடல் பாகம் - 01 நூலிலுள்ள தகவல்களைப் பார்க்கும் போது 17 எழுத்தாளர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளமை நல்ல விடயம். ஆனால் அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தற்காலம் வரை தொகுக்கப்படவில்லை. என்பதை ஒரு குறையாகக் காண்கிறேன். இதற்கு என்ன காரணம். சொல்வீர்களா?

இதுவரை வெளிவந்துள்ள தென்றலின் தேடலில் 37 கலைஞர்களின் விபரங்கள் களங்கண்டுள்ளன. இவற்றை வெளியிடுவதிலுள்ள செலவு காரணமாகவே பாகங்களாக வெளியிட எண்ணினேன். அத்தோடு ஐம்பதாவது மலர் வெளியீட்டு நிகழ்வில் வைத்து ஐம்பது முத்தான கலைஞர்களையும் கௌரவிக்க எண்ணியிருந்தோம். இவற்றுக்கான செலவு கூடுதலாக இருந்தமையால் இதழை மேலும் விரிக்க முடியவில்லை.


இதுவரை உங்களது இலக்கியப் பணிகளுக்காக உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?

2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடக சேவை, மற்றும் கலை இலக்கியப் பணியைப் பாராட்டி, அமரர் வீ.சு. கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்தமாக 'வீ.சு. கதிர்காமத்தம்பி விருது' வழங்கிக் கௌரவித்தது. அதனைத் தொடர்ந்து நான் தொடர்ந்து 'தென்றல் சஞ்சிகை'யை வெளிக்கொணர்வதற்காகவும், அதன் பணிகளைப் பாராட்டியும் உலகத் தமிழ்ச் சிற்றிதழ் சங்க மாநாடு 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற போது அதில் வைத்து 'மணவாளன் இலக்கிய விருது' வழங்கிக் கௌரவித்தது. அத்தோடு மட்டக்களப்பு அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தால் எனது கலை, இலக்கியச் சேவையைப் பாராட்டி 2014 ஆம் ஆண்டில் தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான இயக்குனர் இமயம் கே. பாரதி ராஜாவால் எனக்கு விருது வழங்கப்பட்டது.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்?

நானே தென்றலை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பலர், நாம் இந்தியச் சஞ்சிகைகளையே விரும்பித் தேடி வாங்குவதாகவும், உள்ளூர் சஞ்சிகைகள் எமக்குத் தேவையில்லை எனவும் கூறுகின்றனர். இவ்வேளையில் மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் அதனைக் கேட்டு நான் மனம் சோர்ந்து விடவில்லை. பல மூத்த எழுத்தாளர்கள் கூட பல்வேறு தடைகளைத் தாண்டியே இன்று உயரிய நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் தென்றலும் எதிர்காலத்தில் தடைகள் தாண்டி, வீறு கொண்டெழுந்து சாதனைகள் பல படைக்கும்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Tuesday, August 31, 2021

28. மன்னூரான் ஷிஹார் அவர்களுடனான நேர்காணல்

மன்னூரான் ஷிஹார் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) கூறுங்கள்?


இலங்கையின் வடக்கு மாகாணத்தில் எழில் வளங்களோடு பல தொழில் வளங்களையும் கொண்டமைந்த மன்னார்த் தீவில் நகரத்தை அண்டிய கிராமமாகிய உப்புக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்டவன் நான். எனது இயற்பெயர் முஹம்மது ஷிஹார். 

எனது தந்தை சேகு ஹுசைன் அவர்கள் ஓர் ஆசிரியராக மற்றும் அதிபராக கல்வித் துறையில் சேவையாற்றினார். அவர் இறுதியாக மன்னார் சிங்கள மொழி மூலப் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இப்போது அவர் இவ்வுலகில் இல்லை என்பதை எண்ணுகையில் எனது கண்கள் பனிக்கின்றன. எனது தாயார் ஜெய்னா உம்மா அவர்கள் ஒரு சிறந்த கலைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரும்கூட திறமைமிக்க ஓர் இலக்கியவாதி. அவரது மரபுக் கவிதைகள் தனித்துவமானவை; சந்தம் பொதிந்தவை. நாடகங்கள் எழுதுவதிலும் அவர் புலமை மிக்கவர். எனது உடன் பிறப்புக்களைப் பற்றிச் சொல்வதாயின், எனக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர்கள் மூவருமே ஆசிரிய சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். எனது பெற்றோருக்கு நான்தான் கடைசிப் பிள்ளை. செல்லமாய் வளர்ந்த கடைக்குட்டி என்று சொல்லலாம். 2006 ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த நான் தற்போது மூன்று ஆண் வாரிசுகளின் அன்புத் தந்தை என்ற பரிணாமத்தையும் பெற்றுவிட்டேன். எனது மனைவி பாத்திமா வஹீஸா அவர்களும்கூட ஓர் ஆங்கில ஆசிரியையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

மன்/ அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் எனது பள்ளி வாழ்க்கையைத் தொடங்கிய நான் 1990 களில் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர் அகதிகளாக இடம்பெயர்ந்து சென்று எனது தந்தையின் பிறப்பிடமாகிய குருணாகல் மாவட்டத்தின் சியம்பளாகஸ்கொட்டுவை மதீனா தேசிய பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தேன். அங்கு எனது க.பொ.த. சாதாரண தரம் வரை கற்ற நான் மீண்டும் எனது பிறப்பிடமாகிய மன்னார் மண்ணுக்கே திரும்பி வந்து, எனது பள்ளி வாழ்க்கையை எந்தப் பாடசாலையில் ஆரம்பித்தேனோ அதே பாடசாலையில் அதாவது மன்/ அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் எனது க.பொ.த. உயர் தரத்தை வர்த்தகப் பிரிவில் நிறைவு செய்தேன்.

நான் எனது க.பொ.த. உயர் தரக் கல்வியை முடித்துவிட்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இரண்டில் சிறிது காலம் கடமையாற்றினேன். அதன் பின்னர் 2005 ம் ஆண்டில் போட்டிப் பரீட்சை மூலமாக ஆங்கில ஆசிரியர் நியமனத்தைப் பெற்று மன்னார் கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றிக்கொண்டிருந்தபோது கடந்த 2016 ம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு இலங்கை அதிபர் சேவையில் (SLPS) இணைந்து கொண்டேன். 

தற்போது மன்/எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றுகின்றேன். கல்விப் பணி என்பது ஒரு காத்திரமானதும் சவால் நிறைந்ததுமான பணியென்பதை உணர முடிகின்ற அதேவேளை அது ஓர் ஆத்ம திருப்தியைத் தரக்கூடிய பணியென்பதையும் அவ்வப்போது நிதர்சனமாகக் காண முடிகின்றபோது மகிழ்ச்சியடைகின்றேன்.


உங்கள் இலக்கியப் பிரவேசம் எந்தப் பின்னணியிலிருந்து ஆரம்பமானது?

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவர்கள் ஒவ்வொருவருள்ளேயும் ஏதேனுமொரு ஆற்றல் மிகைத்திருக்கும். இறைவன் கொடுத்த அந்த ஆற்றல் சிலரிடமிருந்து ஏதோவொரு விதத்தில் வெளிப்பட்டுவிடுகின்ற அதேவேளை பலரது ஆற்றல் அவர்களுக்குள்ளேயே புதைந்து விடுவதுமுண்டு. 


என்னைப் பொறுத்தவரையில் எனது குடும்பப் பின்னணியானது இறைவன் எனக்குள் விதைத்திருந்த இலக்கிய ஆற்றலையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமையப் பெற்றிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், தமிழ் இலக்கியங்கள் மீதான குறிப்பாக கவிதைகள் மீதான ஈர்ப்பு எனக்குள் ஏற்படக் காரணமாய் அமைந்தவை எனது தாயாரின் மரபுக் கவிதைகளேயாகும். அவர் எழுதிய சிறுகதைகள், நாடகங்கள் என்பவற்றை எனது சிறுவயதில் நான் ஆர்வத்துடன் வாசித்திருக்கின்றேன். என்றாலும்கூட அவரது கவிதைகளை நான் வாசிக்கின்றபோது எனக்குள் அவை மீதான ஏதோவோர் இனம்புரியாத பேரார்வத்தை உணர முடிந்தது. அந்தப் பின்னணியிலிருந்துதான் எனது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்திருக்கின்றது. 


இலக்கிய உலகில் நுழைந்த காலம் மற்றும் சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் எனது தாயாரின் கவிதைகளை வாசித்தபோது ஏற்பட்ட அந்த உணர்வு என்னை எனது எட்டாவது வயதில் எழுதவும் வைத்தது. எட்டு வயதில் நான் எழுதிய அந்த இரண்டே வரிகள் அவ்வப்போது நினைவுக்கு வருகையில் எனக்குள்ளேயே நான் சிரித்துக்கொள்வதுண்டு. ஆனாலும் அவ்வரிகளினுள்ளே ஒளிந்திருக்கும் ஒரு பேரர்த்தத்தை நினைக்கையில் எனக்குள் வியப்பே மேலோங்கும். 

'கந்தனும் முருகனும் ஒன்றுதான்,

'கா'னாவும் 'மூ'னாவும் ரெண்டுதான்'  

என்று எங்கள் வீட்டு சமையலறைக் கதவில் பள்ளிக்கூடத்திலிருந்து பொறுக்கி வந்த வெண்கட்டித் துண்டுகளால் நான் எழுதிய அந்த வரிகள் வெறும் எதுகை மோனைகளை வேண்டி எழுதப்பட்டவை போல எண்ணத் தோன்றினாலும்கூட அதற்குள்ளும் ஒர் அர்த்தம் ஒளிந்திருப்பதை பின்னரான நாட்களில் உணர முடிந்தபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதாவது, 'இறைவன் என்பவன் ஒருவன்தான்; மனிதர்கள்தான் அவனை தமக்கேற்றாற்போல் வேறுபடுத்தி நோக்குகிறார்கள்' என்பதே அந்த அர்த்தம். அப்போது ஆரம்பித்ததுதான், இப்போது வரையில் எழுதத் தோன்றுகின்றவற்றை எல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றேன். 


முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் எது?

முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் என்கின்றபோது எனது எட்டு வயதில் நான் எழுதிய அந்த இரு வரிகளைத்தான் சொல்லலாம். என்றாலும்கூட நீண்ட காலமாக சிறுசிறு கவிதைகளையே ஆங்காங்கே எழுதி வைத்திருந்தேன். முழுமையாக நான் எழுதிய முதற்கவிதை என்ற வகையில் மதீனா தேசிய பாடசாலையில் தரம் ஒன்பதில் நான் கற்கின்றபோது பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டியில் சீதை பற்றிய ஒரு கவிதையினை எழுதி முதற்பரிசு பெற்றேன். அந்தக் கவிதையின் தலைப்பு உண்மையில் இப்போது ஞாபகத்திலில்லை. அதன் பின்னர்தான் கவிதைகள் எழுதுவதற்கான ஓர் உத்வேகம் எனக்குள் ஏற்பட்டது.


நீங்கள் வெளியிட்ட நூல்கள்  பற்றியும் குறிப்பிடலாமே?

நான் வெளியிட்ட நூல்கள் என்று பட்டியலிட்டுச் சொல்கின்ற அளவிற்குப் பெரிதாக இல்லை. இதுவரையில் ஒரேயொரு நூல்தான் என்னால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 'ஒரு யுகத்தின் சோகம்' என்னும் அந்த நூல் ஒரு கவிதைத் தொகுதியாகும். 2011ம் ஆண்டு மன்னார் எழுத்தாளர் பேரவையினால் வெளியிட்டு வைக்கப்பட்ட அந்தக் கவிதைத் தொகுதியானது நாற்பத்தைந்து கவிதைகளை உள்ளடக்கியது. அவற்றுள் அநேகமானவை மரபுக் கவிதைகளாகவும் ஏனையவை புதுக்கவிதைகளாகவும் உள்ளன. 


நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது?

உண்மையில் அந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாது. நீண்டகாலக் காத்திருப்பின் பின் கருத்தரிக்கின்ற ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் உணர்வை ஒத்த உணர்வு அது. நூலொன்றை வெளியிடுவதென்பது சாதாரணமானதும் மிக இலகுவானதுமான காரியமென்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. நூலொன்றை அதுவும் காத்திரமான நூலொன்றை வெளிக்கொணர்வதென்பது அத்துணை இலகுவான காரியமல்ல என்பதை அவர்கள் களத்தில் இறங்கிப் பார்த்தால்தான் அறிந்துகொள்வர். 

நான் எனது நூலை வெளியிட்ட அதே வருடத்தில் அல்லது அதற்கு முன்னைய வருடத்தின் இறுதிப் பகுதியில் என்று நினைக்கிறேன், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாநாட்டில் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் இலக்கிய ஆளுமைகளுடனான சந்திப்பும் எனக்குள் ஏற்படுத்திய உத்வேகம் என்னை எனது முதல் நூலாகிய 'ஒரு யுகத்தின் சோகம்' என்ற நூலை விரைவாக வெளியீடு செய்வதற்குத் தூண்டியது என்பதே உண்மை. ஏற்கனவே கணினி மயப்படுத்தப்பட்டு, பக்க வடிவமைப்பும் மேற்கொள்ளப்பட்டு தயாராக இருந்த அந்த நூலை ஒரு சில மேம்படுத்தலுடன் பிரசுரித்து எனது கன்னி நூலாக வெளியிட முடிந்தது. முதல் நூல் என்ற அந்தக் கனவு இறைவன் அருளால் நனவானபோது ஏற்பட்ட பேரானந்தத்தைக் கேட்கவா வேண்டும்! நீங்களும் ஓர் எழுத்தாளர் என்பதால் அந்த உணர்வை நீங்களும் ஒரு காலத்தில் நிச்சயமாக அனுபவித்திருப்பீர்கள்.


"ஒரு யுகத்தின் சோகம்" நூலில் அடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றி சொல்லுங்கள்?

'ஒரு யுகத்தின் சோகம்' என்னும் எனது கவிதைத் தொகுதியானது அதனுள்ளே பத்தாவதாக அமைந்திருக்கும் கவிதையின் தலைப்பினையே பெயராகக் கொண்டது. இலங்கைத் தீவின் வடக்கில் பிறந்தவன் என்பதால் முப்பதாண்டு கால யுத்தத்தின் வடுக்கள் எனக்குள்ளும் உண்டு. அந்தவகையில் யுத்தம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் இக்கவிதைத் தொகுதியின் சில கவிதைகளில் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களாகப் பிரதிபலித்திருப்பதை அவதானிக்கலாம். 

'என்று தணியுமிந்த...?', 'மனித நேயமது எங்கே?', 'ஒரு யுகத்தின் சோகம்', '2000 இடம் ஓர் இறைஞ்சல்', 'பட்டமரத் துளிர்ப்புகள்', 'பெப்ரவரி 04, 2008' போன்ற தலைப்பிலான கவிதைகள் யுத்தத்தின் மீதான கசப்புணர்வை வெறுப்போடும் ஏளனத்தோடும் வெளிப்படுத்தும் கவிதைகளாக அமையப் பெற்றிருக்கின்றன. அவைதவிர அவ்வப்போது நாட்டிலும் சர்வதேசத்திலும் நிகழ்ந்து எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திப்போன சில சம்பவங்களையும் சரித்திரங்களையும்கூட சில கவிதைகளின் கருவாக்கியிருக்கின்றேன். அத்தோடு காதல், தாய்மை, பொதுவுடைமை, சுதந்திர வேட்கை முதலான கருப்பொருட்களையும் கையாண்டுள்ளேன். மொத்தத்தில் எனதந்தக் கவிதைத் தொகுதியானது பல கருப்பொருட்களின் சேர்க்கையாக வெளிவந்தது. 


உங்களது கவிதைகள் குறியீட்டுக் கவிதைகளாக உள்ளதாக உணர்கிறீர்களா? நீங்கள் எழுதிய கவிதைகளில் நீங்கள் அதிகம் நேசிக்கும் கவிதை எது?

எனது எல்லாக் கவிதைகளுமே அவ்வாறானவை என்று சொல்லிவிட முடியாது. என்றபோதிலும்கூட குறியீட்டுக் கவிதைகளையும் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றேன். சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்கின்றபோதுதான் அது உரியவர்களைச் சென்றடையும். அப்படி ஒரு நிலை தோன்றுகின்றபோது அங்கு குறியீடுகளை விடுத்துக் கவிதை புனையவேண்டி ஏற்படுகின்றது. 

குறித்தவொரு விடயத்தைக் குறியீட்டுக் கவிதைகளால் உணர்த்துவதுதான் சாலப் பொருத்தமானது என்ற நிலைதோன்றுகிறபோது அவ்வாறு செய்வதே சரியான தீர்மானமாக இருக்கும். ஏனெனில், வழியேற்படுத்த கவிதை புனையவேண்டிய தேவை கவிஞனொருவனுக்கு இருக்கின்ற அதேவேளை சிலருக்கு வலியேற்படுத்தவும் கவிதை புனையவேண்டிய அவசியம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. 

எதிரியின் கன்னத்தில் ஓங்கி அறைவதற்கு குறியீட்டுக் கவிதைகளே மிகப் பொருத்தமானவை என்பது எனது அபிப்பிராயம். நான் எழுதிய கவிதைகளுள் நான் நேசிக்கின்ற கவிதை எதுவென்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். பதில் சொல்வதற்குக் கொஞ்சம் சிரமமான கேள்விதான். எனது கவிதைகளில் அநேகமானவை என் நேசத்திற்குரியவை. அதிலும் குறிப்பாக 'மெய்ப்பட வேண்டும்' என்ற எனது கவிதையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.


"மன்னூரான்" என்ற புனைப் பெயரில் எவ்வாறு வாசகர்கள் மத்தியில் சரளமாக அறிமுகமாகினீர்கள்?

'மன்னூரான்' என்ற பெயர் உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அப்பெயரில் நீங்கள் எழுதுங்களேன் என்றும் எனக்கு ஆலோசனை வழங்கியவர் யாரென்றால், இலக்கிய உலகில் மன்னார் மண்ணுக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்த இலக்கியவாதிகளுள் ஒருவரான பிரபல நாவலாசிரியர் எஸ்.ஏ. உதயன் அவர்கள்தான். நான் மன்னார் மண்ணைச் சேர்ந்தவன் என்பதால் 'மன் 10 ஊரான்' என்ற கருத்தில் அப்பெயரை அவர் பரிந்துரைத்தார். நானும் அவர் சொல்லுக்கு மதிப்பளித்து அப்பெயரை எனது புனைபெயராக ஏற்றுக்கொண்டேன். அப்பெயராலேயே நானும் இலக்கிய உலகில் அறிமுகமாகிவிட்டேன்.


ஓரு யுகத்தின் சோகத்துக்குப் பிறகு ஏன் அதிக காலமாக நூல்களை வெளியிடவில்லை?

அந்த நூலின் பின்னர் நீண்ட இடைவெளியொன்று ஏற்பட்டிருப்பதை ஒத்துக்கொள்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் 'ஒரு யுகத்தின் சோகம்' என்ற நூலை வெளியிட்டதன் பிறகுதான் நான் அதிகமாக எழுதும் பழக்கத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றேன். 

இந்த இடைவெளியை நான் எனது எழுத்துக்களை புடம்போடுவதற்கான அவகாசமாக எடுத்துக் கொண்டேன். 2011ம் ஆண்டின் பிற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரையில் பல சஞ்சிகைகளிலும் தினசரிகளிலும் எழுதி வருகின்றேன். பல வானொலி மற்றும் தொலைக்காட்சிக் கவியரங்குகளிலும் மேடைக் கவியரங்குகளிலும் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அவ்வாறு பார்க்கின்றபோது எனது நூல் வெளியீடுகளில்தான் தாமதம் ஏற்பட்டுள்ளதேயன்றி எனது எழுத்துப் பணியானது இறைவனருளால் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தற்போது எனது மூன்று கவிதைத் தொகுதிகள் கணினிமயப்படுத்தப்பட்டு தயாராக உள்ளன. அவை அச்சுவாகனம் ஏறுவது மாத்திரமே மீதமிருக்கின்ற வேலை. 'மூன்றாம் ஒருவன்', 'நேயர் விருப்பம்', 'உயிரின் இடைவெளி' ஆகிய அம்மூன்று கவிதைத் தொகுதிகளையும் விரைவில் வெளிக்கொணர வேண்டும் என்பதே எனது அவா. இறைவன்தான் அதற்குத் துணைபுரிய வேண்டும்.


தற்போதைய ஈழத்துக் கவிதைச் செல்நெறி பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?

பொதுவாக தற்காலக் கவிஞர்கள் மீதான ஒரு மட்டரகமான பார்வை பலரிடத்திலே இருப்பதை அவர்களது விமர்சனங்கள் வாயிலாகக் கண்டுகொள்ள முடிகின்றது. அதிலும் குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைகளையும் தென்னிந்தியத் தமிழ்க் கவிதைகளையும் இருவேறு கோணங்களில் பார்க்கின்ற ஒரு மரபு பலரிடையே இருந்து வருகின்றது. அது தவறான கற்பிதம் என்பதை நான் அடித்துச் சொல்வதோடு அதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். 

ஈழத்துக் கவிதைகளுக்கென்று ஒரு தனித்துவம் இருப்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது. அவற்றினுள்ளே இருக்கும் வலி நிஜமான வலி.. அவற்றினுள்ளே இருக்கும் அங்கலாய்ப்பு நிஜமான அங்கலாய்ப்பு.. அவற்றினுள்ளே இருக்கும் குதூகலமும்கூட நிஜமான குதூகலம்.. என்பதை அவற்றை வாசிக்கையில் உணர முடிகின்றது. அக்கவிதைகளில் போலிகளை மிக அரிதாகவே காண முடிகின்றது. 

வாக்கியங்களை துண்டுகளாக உடைத்துப் போட்டுவிட்டு அல்லது எதுகை மோனை வந்துவிட்டால் எல்லாமே கவிதைதான் என்ற தோரணையில் அவற்றைக் கவிதைகள் என்றும், தம்மைத் தாமே கவிஞர்கள் என்றும் சொல்லிக்கொள்ளும் போலிகளையும்கூட நகைப்புடன் கடந்து செல்ல வேண்டிய நிலையும் இங்கு இல்லாமலில்லை. என்றாலும்கூட தரமான கவிஞர்களையும் அவர் தம் தரமான கவிதைகளையும் வாசிக்கின்ற போது அடடா இத்துணை கவித்துவம் இவர்களுக்குள் இருந்திருக்கின்றதே என்று வியந்ததுண்டு. 

என்னைப் பொறுத்தவரையில், ஈழத்துக் கவிதைகளின் செல்நெறி ஓரளவு ஆரோக்கிய நிலையில் உள்ளது என்றே மதிப்பிடத் தோன்றுகிறது. இது எனது வாசிப்பினதும் அனுபவத்தினதும் வழிவந்த அபிப்பிராயமே. இம்மதிப்பீடு ஒவ்வொருவர் பார்வையைப் பொறுத்தும் வேறுபடலாம்.


கவிதை, சிறுகதை, விமர்சனம், நாவல், ஆய்வு, சிறுவர் இலக்கியம், கட்டுரைகள் ஆகிய பல்வேறு வகையான இலக்கியத் துறைகளில் உங்களது பங்களிப்புக்கள் எவற்றில் உள்ளது?

கவிதைகளைப் பொறுத்தவரையில் தமிழ்க் கவிதைகளுக்கு மேலதிகமாக ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். கவிதைகளுக்கு அப்பால் சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளேன். அவை சில சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. சில கவிதை நூல்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் விமர்சனம் செய்துள்ளேன். அவை இலங்கையின் பிரபல நாளிதழ்களிலே வெளிவந்துள்ளன. இலக்கியம் சார்ந்த சில கட்டுரைகளை இலக்கிய சஞ்சிகைகளிலே எழுதி வருகின்றேன். சிறுவர்களுக்கான பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளேன். அவைதவிர பாடலாக்கத்திலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பல பாடல்கள் எழுதியுள்ளேன். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் இயக்கத்தில் உருவான 'ஓணான்' என்ற திரைப்படத்திற்கும்கூட நான்தான் பாடல்களை எழுதியிருந்தேன். 


இன்றைய சமூகம் படைப்பாளிகளுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்குகிறது என்று நினைக்கிறீர்களா?

படைப்பாளிகளுக்கான அங்கீகாரத்தைப் பற்றிப் பேசினால் கவலைதான் மிஞ்சும். கலை இலக்கியப் படைப்புக்கள்தான் சமூகத்தினதும் காலத்தினதும் கண்ணாடி என்பதைப் புரிந்துகொள்ள ஏனோ இந்த சமூகம் மறுக்கிறது. ஒரு கலைஞன் அல்லது இலக்கியவாதி தான் சார்ந்த சமூகத்தின் அவலங்களை, பிரச்சினைகளை, பெருமைகளை ஏனையோருக்குப் புரியவைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுக்கின்றான். அவனுக்கான அங்கீகாரம் அவன் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதே சமூகத்தாலேயே புறக்கணிக்கப்படும்போது அவனது பரிதாப நிலையை என்னவென்பது? இன்றைய படைப்பாளிகளின் நிலை இவ்வாறுதான் இருக்கின்றது. 

வேறு வேறு களியாட்டங்களுக்கும் இன்னோரன்ன தேவையற்ற விடயங்களுக்கும் கொடுக்கப்படுகின்ற நேரமும் முக்கியத்துவமும் இலக்கிய உருவாக்கத்திற்கோ அல்லது இலக்கிய நிகழ்வுகளுக்கோ கொடுக்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை. 


உங்களது சிறுகதைகளுக்கான கருப்பொருட்களை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றீர்கள்? சிறுகதைகளை எவற்றில் களப்படுத்தி வருகின்றீர்கள்?

சமூகத்தில் வேரூன்றிப் போயிருக்கின்ற பிரச்சினைகளைத்தான் எனது அநேகமான சிறுகதைகளில் கருப்பொருளாக்கியிருக்கின்றேன். உதாரணத்திற்குச் சொல்வதென்றால் போதைப் பொருள் பாவனையின் சீர்கேடு, பரீட்சை மையக் கல்வியின் விபரீதம், இன முரண்பாடுகளின் விளைவுகள் போன்ற எண்ணக் கருக்களை அவற்றின் மூலமாக வாசகர்களுக்கு நன்கு உணர்த்த முயன்றிருக்கின்றேன். எனது சிறுகதைகளை மாதாந்த இலக்கிய சஞ்சிகைகள் சிலவற்றில் களப்படுத்தி வருகின்றேன். 


ஒரு இலக்கியப் படைப்பாளியான நீங்கள் ஏனைய படைப்பாளிகளுக்கு கூற விரும்புவது என்ன?

ஓர் இலக்கியப் படைப்பாளி என்றவகையில் வளர்ந்துவரும் இலக்கியப் படைப்பாளிகளுக்கு கூற விரும்புவது என்னவெனில், உங்கள் எழுத்துக்கள் எப்போதும் உங்களுக்கான ஒரு தனித்துவத்தோடு தொடரட்டும். உங்கள் எழுத்துக்களைப் பற்றிய தீர்மானங்கள் உங்களுடையதாக இருக்கட்டும். யாரையேனும் திருப்திப்படுத்துவதற்காக எழுதுவதை விடுத்து உங்கள் ஆத்ம திருப்திக்காக எழுதுங்கள். விமர்சனங்கள் எதிர்மறையாக வருகின்றபோது அதையும் கொஞ்சம் பரிசீலித்தபடியே நகருங்கள், ஆனால் எக்காரணம் கொண்டும் உங்கள் எழுத்துப் பயணத்தை நிறுத்திவிடாதீர்கள். முத்தாய்ப்பாய் இன்னொரு அறிவுரை, தயவுசெய்து விருதுகளைத் துரத்தாதீர்கள். நீங்கள் நிதானமாய் எழுதிக்கொண்டேயிருங்கள், காலம் கனிகின்றபோது உங்கள் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் உங்களைத் தேடி வரும். அப்போது விருதுகளும் சேர்ந்தே உங்களை நாடி வரும். 


இன்றைய நவீன தொழில் நுட்ப இலத்திரனியல் ஊடகங்களின் ஆக்கிரமிப்பின் ஊடாகக் கூட நூற்றுக் கணக்கில் இலங்கையில் கவிதை, சிறுகதை, விமர்சனத் தொகுப்புக்கள் வெளிவருவது பற்றிய உங்களது கருத்து என்ன?

இலங்கையைப் பொறுத்தமட்டில் நாளேடுகளும் சஞ்சிகைகளும் எத்தனை பேரின் இலக்கியப் பசியைத்தான் தீர்த்துவிடப் போகின்றன என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது. இப்படியிருக்கும்போது இன்றைய நவீன தொழில்நுட்ப இலத்திரனியல் ஊடகங்களின் பங்களிப்பை மெச்சித்தான் ஆகவேண்டும். அதேவேளை 'தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன்' என்கின்ற நிலைக்கு இலக்கியத்தை அவை தள்ளிவிட்டனவோ என்கின்ற சந்தேகமும் எழுகின்றது. நல்ல இலக்கியங்களைக் கொண்டுவருகின்றபோது நவீன தொழில்நுட்ப இலத்திரனியல் ஊடகங்களானவை வரவேற்புக்குரியவையாகவும் மாற்றமாகக் கொண்டுவருகின்றபோது வருந்தத்தக்கவையாகவும் அமைகின்றன என்பதே உண்மை. 


"தெருட்சி" என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் என்ற வகையில் அந்தச் சஞ்சிகையின் வெளியீடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

'தெருட்சி' சஞ்சிகையானது மன்னார் எருக்கலம்பிட்டி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக இரு தடவை வெளிவந்திருக்கின்றது. இது பல காத்திரமான இலக்கியப் படைப்புக்களை உள்ளடக்கிய ஒரு சஞ்சிகையாகும். 'தெருட்சி' என்பது தெளிவு, அறிவு போன்ற பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு பதம். இச்சஞ்சிகையின் வரவில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் அது தொடர்ந்தும் வெளிவருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இறைவனருளால் அம்முயற்சி கைக்கூடும் என நம்புகின்றோம். 


வாசிப்பு என்பது இன்றைய சமூகத்திடம் குறிப்பாக மாணவர்களிடம் மிகவும் அருகிவிட்ட ஒன்றாகக் காணப்படுகிறதே. பாடசாலையின் பிரதி அதிபராக இதுபற்றிய உங்கள் கருத்து யாது?

உண்மைதான். மாணவர்களிடையே வாசிப்பு என்பது ஓர் அருகி வருகின்ற பழக்கமாக இருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பாடசாலைகளில் அவ்வப்போது ஊட்டப்படுகின்றன. வாசிப்பு வாரம், வாசிப்பு மாதம், வாசிப்பு முகாம் என்றெல்லாம் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஆனாலும் இன்றைய மாணவர் சமுதாயத்திடம் அந்த வாசிப்புப் பழக்கத்தில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துவது என்பது இமாலயப் பிரயத்தனத்தோடு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையாகத்தான் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பாடங்கள் சார்ந்த நூல்களுக்கு மேலதிகமாக வேறு இலக்கிய நூல்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருக்கின்றது. என்றாலும், காலத்திற்கு ஏற்றாற்போல் வாசிப்பை ஊக்குவிப்பதற்கான பல்வேறு புதிய உத்திகளை பாடசாலைகளில் நாம் கையாள்வதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் வேரூன்றச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். 


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?

எனது இலக்கியப் பயணத்தில் எனக்கு உறுதுணையாய் இருந்த சிலரை இந்தவேளையில் நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன். அந்தவகையில் எனது தாயார், எனது சகோதரர் மன்னார் எம். ஷிபான், எனது மாமா கலைமதி யாசீன், எனது இலக்கிய நண்பர்களான மன்னார் அமுதன், சாகித்திய விருதாளன் எஸ்.ஏ. உதயன் போன்றவர்களை மறந்துவிட முடியாது. ஏனெனில் அவர்கள் என்னை எழுதும்படி எப்போதுமே தூண்டிக்கொண்டிருப்பவர்கள். 

அதேபோன்று ஜீவநதி, பூங்காவனம், சுவைத்திரள், படிகள், வெள்ளாப்பு, வாகை முதலிய இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள்தான் எனது இலக்கியப் படைப்புக்களுக்கு களம் கொடுக்க முன்வந்தவர்கள். மேலும், எழுத்தாளர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், திரு. நடா மோகன் மற்றும் ஷைபா அப்துல் மலிக் (லண்டன் தமிழ் வானொலி), கனக கவி சக்திதாசன் (தமிழ் யாழ், முரசொலி), கவிஞர் மேமன்கவி, சந்தக் கவிமணி கிண்ணியா அமீரலி, கவிஞர் ஏ.எம். அஸ்கர் (வசந்தம் அலை வரிசை), பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், தமிழ்த்தென்றல் அலி அக்பர் போன்றவர்கள் இலங்கைத் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக என் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு வழிசமைத்தவர்கள். அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்து நிற்கின்றேன். என்னை நேர்காணல் செய்துகொண்டிருக்கும் உங்களுக்கு என் விசேடமான நன்றிகள். ஏனெனில், எனது கன்னிப் படைப்பாகிய 'ஒரு யுகத்தின் சோகம்' கவிதை நூல் பற்றிய விமர்சனத்தை முதன் முதலில் இலங்கையின் பிரபல நாளிதழ் ஒன்றிலே வழங்கியிருந்தது நீங்கள்தான். இறுதியாக, என்னுடனான இந்த நேர்காணலை மேற்கொண்ட தங்களுக்கு மீண்டும் எனது நன்றிகளைக் கூறி பிரசுரித்த பெருந்தகைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Tuesday, June 8, 2021

27. பாடகர் மாத்தளைக் கமால் அவர்களுடனான நேர்காணல்

பாடகர் மாத்தளைக் கமால் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

1962 நவம்பர் 07ஆந் திகதி மாத்தளையில் பிறந்த நான், மாத்தளைக் கமால் என்ற பெயரில் கலை உலகுக்கு  அறிமுகமாகினேன். எனது தாயார் மாத்தளையைச் சேர்ந்தவரானாலும், தந்தையார் இந்தியர். அதாவது தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக்காரர். (1998 இல் அவர் காலஞ்சென்றுவிட்டார்) 

என் சிறு வயதிலிருந்தே நான் கலை, இலக்கியத் துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக வளர்ந்து வந்தேன். தமிழ்ப் பாடத்தில் ஒரு பிழை விட்டதற்காக 03ஆம் வகுப்பில் ஒரு தடவையும் ஆங்கிலப் பாடத்தில் ஒரு பிழை விட்டதற்காக 04ஆம் வகுப்பில் ஒரு தடவையும் ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்ட நான், அந்த நிகழ்வுகளின் பின் எல்லா வகுப்புகளிலும், அவ்விரு பாடங்களில் 60க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெறக் கூடியவனாகத் திகழ்ந்தேன். வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக எந்த ஒரு நூல் கையில் கிடைத்தாலும், வாசித்து முடித்த பின்பே அதைக் கீழே வைப்பேன்.


02. உங்களது பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?

க.பொ.த. சாதாரண தரம் வரை மாத்தளை மற்றும் கம்பளை ஸாஹிராக் கல்லூரிகளில் கற்று, உயர்தரத்துக்கு சித்தியடைந்த நிலையில், எனது குடும்பத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக எனக்கு உயர்தரப் படிப்பைத் தொடர முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. அதுவரை எல்லா வகுப்பிலும் சித்தியடைந்தேன். 

எனது முதலாவது தொழிலே ட்யூஷன்தான். தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் ஆங்கிலம் பயின்று வந்தார்கள். பிறகு சில பள்ளிவாசல்களில் கடமையாற்றிய அனுபவங்களும் எனக்குண்டு.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் கொழும்புத் துறைமுக அதிகார சபையில் 1996 இல் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவியை வழங்கியிருந்த போதிலும், குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் மூன்று வருடங்கள்கூட அங்கு பணியாற்ற முடியாமற் போனது. 

தற்போது பொது அமைப்புக்களுக்கான கொள்கை விளக்கப் பாடல்களை இயற்றி, பாடிக் கொடுத்தல் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் பாடுதல் போன்றவற்றை எனது தொழிலாகக் கொண்டுள்ளேன். அத்துடன் வருமானம் ஈட்டும் நோக்கில் வீட்டில் ஒரு சிறிய கோழிப்பண்ணை ஒன்றையும் நடத்தி வருகின்றேன்.


03. ஒரு பாடகராக வருவதற்கு உங்களுக்கு எப்படி வாய்ப்புக் கிடைத்தது?

2014 இல் காலஞ்சென்ற என் தமக்கையான மாத்தளை ஃபர்வீன் அவர்கள் 1970களின் ஆரம்ப வருடங்களில் ஹிந்திப் பாடல்களின் மெட்டுகளுக்கு தமிழ்ப் பாடல்களை இயற்றும் ஆற்றலுடையவராகத் திகழ்ந்தார். அவரது ஆற்றல் அவரின் தம்பியான என்னையும் ஈர்த்தது. நானும் பாடல்களை இயற்ற ஆரம்பித்தேன். பாடவும் தொடங்கினேன். ஆனால், எனது மூன்று அல்லது நான்கு வயதாக இருந்தபோதே என் தந்தையார் எனக்காக செய்து தந்திருந்த ஒரு சிறிய கதிரையில் ஒரு காலைத் தூக்கி வைத்துக் கொண்டு, மறைந்த தமிழக முதலமைச்சரும், பிரபல நடிகருமான "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர். அவர்களின் ஸ்டைலில் ஒரு கையை வீசி, "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.." என்று ஆரம்பமாகும் பாடலை நான் "ஹம்" பண்ணிக் கொண்டிருந்ததாக பின்னாட்களில், பெருமிதத்துடன் தந்தை குறிப்பிடுவார். துரதிர்ஷ்டவசமாக அன்னார் 1967 இல் ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், என் கலை இலக்கியத் துறைகளின் வளர்ச்சியில் என் தமக்கையின் பங்களிப்பு மிகக் கணிசமாக இருந்ததெனலாம்.

அத்தோடு, அவரை மணமுடித்திருந்த என் மைத்துனரான கலகெதற எம்.எம்.ஏ. ஹக் மாஸ்டரும் ஒரு திறமை வாய்ந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்தமையும்கூட, என் வளர்ச்சியில் ஒரு பெரும் பங்களிப்பைச் செய்யத் தவறவில்லை. 1970களின் ஆரம்ப வருடங்களில்  கொடிகட்டிப் பறந்த சிங்களப் பாடல்களில் கணிசமானவை ஹக் மாஸ்டர் அவர்களது இனிமையான இசையமைப்பிலும், நேர்த்தியான மெட்டமைப்பிலும் உருவானவையே. 

"கீதா", "சுஜீவா", "சுனேத்ரா", "ஒபய் மமய்", "ஸூகிரி கெல்ல" முதலிய பிரபல சிங்களத் திரைப்படங்களின் தயாரிப்பாளரான ஜோ சுகந்தா அவர்களது 05 திரைப்படங்களுக்கும் இசையமைத்த ஹக் மாஸ்டர் அவர்கள், அவற்றில் இடம்பெற்ற 35 பாடல்களுக்கும் சிறப்பாக மெட்டமைத்துமிருந்தார். அவற்றுள் மறைந்த இலங்கையின் பிரபல பாடகர் எச்.ஆர். ஜோதிபால அவர்கள் பாடிய "தகின தஸுனே", "சந்தன எல்லென் நாலா", "ஹிடின்ன பொட்டக் ஹிடின்ன", "அலங்கார ராத்ரீ யாமே", "வாஸிய துடு தென" முதலிய பாடல்களும் அடங்கும். என் மைத்துனரால் நான் புடம் போடப்பட்டேன்.

கல்லூரிக் காலம் நிறைவுற்ற பின், 1980களில் இலங்கை வானொலியில் பிரபலமாகி வந்த "பாட்டுக்கு பாட்டு" நிகழ்ச்சிகளைப் பிரதி ஞாயிறு தோறும் செவிமடுத்து வந்தபோது, அதில் நாமும் கலந்து கொண்டால் என்ன என்ற நினைப்பு மனதை ஆட்கொண்டது. அதற்காக ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்த எனக்கு, 1981 ஏப்ரல் 24 ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவிருந்த குரல் தேர்வுக்கு வருமாறு கோரி ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. நானும் அன்று அங்கே போனேன். ஆனால், பாடல் துறையில் முன்னேறி, பெரும் பாடகனாகத் திகழ வேண்டும் என்ற எந்தவொரு எதிர்பார்ப்பும், தூர நோக்கும் அப்போதுகளில் என்னிடம் இருக்கவே இல்லை. 

போட்டியின் ஒலிப்பதிவுக்குத் தெரிவு செய்யப்பட்ட நான், அன்றைய எனது முதலாவது நிகழ்ச்சியின் அபிமானப் பாடலாக இசைத்தது, "கலைமாமணி" கமல்ஹாசன் முதலாவதாகப் பாடிய "அந்தரங்கம்" படத்தில் இடம்பெற்ற "ஞாயிறு ஒளி மழையில்" என ஆரம்பமாகும் பாடலைத்தான். "பாட்டுக்கு பாட்டு" நிகழ்ச்சியை செவிமடுத்தோர்க்கு நன்கு தெரிந்திருந்த ஒரு விடயமே, அதில் பாடப்படும் அபிமானப் பாடலில் ஒரு சில வரிகளை அல்லது சரணம், பல்லவியோடு மணி ஒலிக்கப்பட்டு, மறுதரப்பிலுள்ள போட்டியாளர் ஆரம்பித்துப் பாடவேண்டிய எழுத்து குறிப்பிடப்படும். ஆனால், அன்றோ வழமைக்கு மாற்றமாக அப்பாடலை முழுமையாக நான் பாடி முடியும்வரை மணி ஒலிக்கச் செய்யப்படவே இல்லை. நான் பாடி முடியும்வரை பொறுமையோடு அதை ரசித்துக் கொண்டிருந்த நமது "உலக அறிவிப்பாளர்" ஜனாப் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்கள் உடனடியாகவே, "ஆ! இனிமையாகப் பாடினீர்கள், கமால்!" என்று தனது முதலாவது பாராட்டை எனக்குத் தெரிவித்தார்.

வாஸ்தவத்திலேயே அந்த நாளும், அந்த நேரமும் எனக்காக இறைவன் அமைத்துத் தந்த ஒரு பொன்பொழுதாகும். அன்றிலிருந்து ஆரம்பமானது என் கலைத்துறைப் பயணம்.

04. நீங்கள் ஒரு பாடகராக வளர வழிவகுத்தவர்கள் யார்?

நான் பாடகராக வர வழிவகுத்தவர்கள் ஏலவே நான் குறிப்பிட்டவர்களோடு, எனது கல்லூரிப் பருவத்தில் வகுப்புக்களில் பாடச் சொல்லி வேண்டுகோள் விடுத்து, பாட வைத்து ரசித்துப் பாராட்டிய ஆங்கிலப் பாட ஆசிரியர்களான எம்.எம். பாரூக் சேர் மற்றும் பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம். ஃபாரூக் சேர் அத்துடன் கணிதப் பாட ஆசிரியரான ஹுசைன் சேர் ஆகியோர்களாவார். ஆரம்ப காலத்தில் நான் ஹிந்திப் பாடல்களையே பாடி வந்தேன்.


05. உங்கள் குடும்பத்தினருக்கும் இத்துறையில் ஈடுபாடுகள் காணப்பட்டதா?

என் குடும்பத்தினரில் எனது மூத்த சகோதரர் தம்பி வஸீர் தனது கவிதைகள் புனையும், மெட்டமைக்கும் ஆற்றலை என்னைப் போன்று தொடர்ந்து வெளிப்படுத்தும் நேர அவகாசம் அற்றவர், அவர் தன் தொழிலுக்காக கணிசமான நேரத்தை அர்ப்பணித்து வருவதன் காரணமாக கலை, இலக்கியத் துறைகளுக்கான அவரது பங்களிப்பு பெரிதாக இல்லை. அவர் தற்போது தமது குடும்பத்தினருடன் மல்வானையில் வசித்து வருகிறார்.

எனது மூத்த சகோதரி மாத்தளை ஃபர்வீன் அவர்கள், 1970களின் ஆரம்ப வருடங்களில் ஹிந்திப் பாடல்களின் மெட்டுகளுக்கு தமிழ்ப் பாடல்களை இயற்றும் ஆற்றலுடையவராகத் திகழ்ந்தார். அத்துடன் மித்திரன் வாரமலர், ஜனனி வார இதழ் முதலியவற்றில் சுமார் 42 தொடர்கதைகளை எழுதி இருந்தார். அவர் 2014 ஓகஸ்ட் 15 ஆம் திகதி காலஞ்சென்ற பின்பும் கூட "ஃப்ரெண்ட்ஷிப்" என்ற தலைப்பிலான அவரது இறுதித் தொடர்கதை மித்திரன் வாரமலரில் தொடர்ந்து பிரசுரமாகிக் கொண்டிருந்தது. கவலையான விடயம் என்னவென்றால் அவற்றுள் ஒன்று கூட நூலுருப் பெறவில்லை என்பதுதான்.


06. உங்களாலும் பாட முடியும் என்று முதலாவதாக உணர்ந்த சந்தர்ப்பம் எப்படியானது?

நான் மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் 04ஆம் தரத்தில் பயின்ற கால கட்டத்தில்தான் எனக்குப் பாட முடியும் என்ற உணர்வும், நம்பிக்கையும் ஏற்பட்டது.


07. உங்கள் மனதைக் கவர்ந்த பாடகர் யார்? அவரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விடயமென்ன?

என் மனதைக் கவர்ந்த பாடகர் அதாவது என் அபிமானப் பாடகர், கலாஜோதி டாக்டர். கே.ஜே. யேசுதாஸ் அவர்கள். அவர் 1990ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் வாழும் மலையாள சமூகத்தினரின் ஓணம் பண்டிகைகளில் கலந்து கொள்ள வருகை தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நான் அவரை மூன்று தடவைகள் கொழும்பில் சந்தித்து அளவளாவியுள்ளேன். அவற்றுள் ஒரு தடவை 1996 இல் என்று நினைக்கிறேன் அவரது இசைநிகழ்ச்சி ஒன்றை நேரில் பார்வையிடும் விருப்பத்தை அவரிடம் நான் தெரிவித்த நாளில், அன்று மாலை சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற அவரின் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று, அங்குள்ள ஏற்பாட்டாளர்களிடம், "இந்தப் பையனுக்கு முன் வரிசையில ஒரு சீட் கொடுத்துடுங்க!" என்று வேண்டுகோள் விடுத்த ஒரு நல்ல மனிதாபிமானி அவர். அன்று அந்த நிகழ்ச்சியில் அவர் முதன் முதலாகப் பாடிய பாடல், "கிளிப்பேச்சு கேட்க வா" படத்தில் இடம்பெற்ற "அன்பே வா அருகிலே!" என்று ஆரம்பமாகும் இனிமையான பாடலாகும். இதில் மறுபக்கம் என்னவென்றால் அந்த நேரம் எனது சட்டைப்பையில் இருந்தது வெறும் ஐம்பது ரூபாய்தான். மேலும், அவரது இலட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இதுவரை வேறு எவருக்குமே இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று நம்புகிறேன். தான் ஒரு பெரிய பாடகர், உலகப் பிரசித்தி பெற்றவர் என்ற எந்தவிதமான பந்தாவும் அவரிடம் இருந்ததே இல்லை. 

அன்றைய பிற்பகலில் அவர் தங்கியிருந்த ஹோட்டலின் லொபியில் அவரை நான் சந்தித்தபோது, நான் இயற்றி, மெட்டமைத்திருந்த, "சிங்காரப் பைங்கிளியே காலெடுத்து வா!" என ஆரம்பமாகும் என்ற பாடலை அவரிடம் பாடிக் காட்டியபோது, மிகவும் உற்சாகமாக தாளம்போட்டு அவர் ரசித்துக் கேட்டதை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது.  

மேலும், 1997 இல் ஆரம்பித்து 1999 மார்ச் வரை ஜனனி வார இதழில் 60 வாரங்களாக நான் எழுதி வந்த தொடர்கதைக்கு அவர் அன்று ஆரம்பமாகப் பாடிய "அன்பே வா அருகிலே!" என்று ஆரம்பமாகும் பாடலின் முதல் வரியிலேயே பெயரைச் சூட்டியதன் காரணம்கூட அவருக்கு ஒருவகையில் நன்றி தெரிவித்துக் கொள்வதற்கே. ஆனால், என் அபிமானப் பாடலைப் பாடியவர் சிம்மக் குரலோன் டீ.எம். சௌந்தரராஜன் அவர்கள். அவர் "எங்க மாமா" என்ற படத்துக்காகப் பாடிய, "எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்!" என்று ஆரம்பமாகும் பாடலாகும்.


08. பாடல் துறையில் இஸ்லாமியர்களின் வகிபங்கு எவ்வாறுள்ளது?

ஆரம்ப காலம் முதலே பாடல்கள், கவிதைகள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த கணிசமானோரால் போசிக்கப்பட்டு வந்துள்ளபோதிலும், மார்க்க ரீதியான கட்டுப்பாடுகளும் இருந்தே வருகின்றன. தற்காலத்தில் அந்த வரம்புகளை மீறிச் செல்வோர்க்கு உலகம் ஒரு பெரிய வரவேற்பை அள்ளி வழங்கத் தயாராக உள்ளது. வட்டத்தின் வரம்புக்குள் நின்றபடியே இத்துறையில் உச்சம் கண்ட உமர் கய்யாம், அல்லாமா இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோரும் நம் மத்தியில் இருந்தே வருகின்றனர்.


09. உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது? ஏன்?

முன்பு குறிப்பிட்ட சிம்மக் குரலோன் டீ.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய, "எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்!" என்று ஆரம்பமாகும் பாடலே எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதற்குக் காரணம், என் மனோ நிலையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் 100 வீதம் பிரதிபலிக்கும் கருத்துக்கள் இப்பாடலில் விரவிக் கிடக்கின்றன.


10. இத்துறையில் உங்களை வியப்பில் ஆழ்த்தியவர் யார்?

கின்னஸில் இடம்பிடித்து, சுமார் அரைநூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் இசை உலகை ஆக்கிரமித்திருந்த மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி. அவர்களின் ஆற்றல்களும், அவரது பணிவான நடத்தையுமே என்னை வியப்பிலாழ்த்தியது.


11. நீங்கள் இதுவரை வெளியிட்ட இறுவட்டுக்கள் குறித்து கூறுவீர்களா?

2001இல் நான் முதன் முதலில் வெளியிட்டது, "இன்னும் ஓர் இன்த்திஃபாழா" என்ற ஓர் ஒலிநாடாவைத் தான். அதன் விற்பனை, பிரதிகள் 5000 ஐத் தாண்டின. எனது முதலாவது ஒலிநாடாவின் வெளியீடு 2001 ஆம் ஆண்டில் கொழும்பு - 02 தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் முஸ்லிம் மீடியா ஃபோரமின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அதுதான் ஃபலஸ்தீனப் புரட்சி தொடர்பில் தமிழ் மொழியில் முழு உலகிலும் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஓடியோ வெளியீடாகும். முற்றிலும் சுய மெட்டுக்களிலான 12 பாடல்கள் அந்த ஒலிநாடாவில் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் 06 பாடல்களை நான் பாடியதுடன், அக்கரைப்பற்று ஜாவித் இப்ராஹீம், திஹாரிய மஸாஹிர், பஸ்யால இஷ்ரத் ஹுஸைன், கஹடோவிட அன்ஃபால் நஹாஸ், முஜாஸா ஜமால்தீன் முதலிய ஐந்து இளவயதுப் பாடகர்களை அவ்வெளியீட்டில் பாட வைத்து, அவர்களை கலைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதற்காக முழு அனுசரணையையும் வழங்கியிருந்த என் சகோதரர் வஸீர் அவர்களும் ஒரு பாடலைப் பாடியிருந்தார். அதன் பிரதிகள் 5000 ஐயாயிரத்துக்கு மேல் விற்பனையாகின.

எனது இரண்டாவது வெளியீடு "கல்" என்ற தலைப்பில் 2004இல் வெளியாகியது. மொத்தமாக 11 பாடல்கள் கொண்டிருந்த அந்த ஒலிநாடா வெளியீடு எனது கலைத்துறைப் பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு 1998 முதல் 2004 வரை பல்வேறு கல் வகைகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு நான் இயற்றிய "கல்லுதான்.." என ஆரம்பமாகும் பாடல் அவ்வெளியீட்டில் இடம்பெற்றிருந்ததே காரணமாகும். அதன் பிரதிகள் 11,500க்கு மேல் விற்பனையாகின.

அதற்கு அடுத்த வருடம் எனது மூன்றாவது பாடல் தொகுதி, "ஓ.. ஸுநாமியே!" என்ற தலைப்பில் வெளியானது. அதில் இடம்பெற்றிருந்த 13 பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அவற்றுள் மிக அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்த பாடலான, "மர்ளிய்யா தாத்தா.. ராளியா தாத்தா.." பட்டிதொட்டி எங்கிலும் ஒலிக்கத் தொடங்கியது. அதன் பிரதிகளும் 10,500ஐத் தாண்டி நாடுபூராகவும் விற்பனையாகின. 

அதைத் தொடர்ந்து 2006 இல், "ஃபலஸ்தீன தாயகமே", 2007இல் "நெஞ்சம் ஏங்குதே!" 2008இல் "இன்ஷா அல்லாஹ்", 2010இல் "ஆடு", "மதுர கான மழை", 2013இல் "Why this மதவெறி?' போன்றவையும் வெளியாகின. 

2001 முதல் 2018 வரையான 17 வருட காலத்துக்குள் மொத்தமாக 50,000 (ஐம்பதாயிரம்) பிரதிகளுக்கு மேல் எனது 09 ஒலிநாடா மற்றும் இறுவட்டுத் தொகுதிகளும் விற்பனையாகி சாதனை படைத்தன. நாடு பூராவும் பல ஊர்களில் ஆயிரத்துக்கும் மேலான பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளேன்.


12. இந்த ஒவ்வொரு ஒலிநாடாவிலும் அல்லது இறுவட்டிலும் எத்தனை பாடல்கள் உள்ளடக்கம்? இவற்றுக்கான பாடல் வரிகளையும் நீங்களே எழுதி, இசையமைத்துப் பாடினீர்களா?


1. இன்னும் ஓர் இன்த்திஃபாழா (12 பாடல்கள்) - ஒலிநாடா

2. கல் (11 பாடல்கள்) - ஒலிநாடா, இறுவட்டு

3. ஓ ஸுநாமியே! (13 பாடல்கள்) - இறுவட்டு

4. ஃபலஸ்தீன தாயகமே! (15 பாடல்கள்) - இறுவட்டு

5. நெஞ்சம் ஏங்குதே! (14 பாடல்கள்) - இறுவட்டு

6. இன்ஷா அல்லாஹ் (15 பாடல்கள்) - இறுவட்டு

7. மதுர கான மழை (16 பாடல்கள்) - இறுவட்டு

8. ஆடு (9 பாடல்கள்) - இறுவட்டு

9. Why this மதவெறி? (10 பாடல்கள்) - இறுவட்டு

ஆகிய 09 வெளியீடுகளிலும் மொத்தமாக இடம்பெற்றிருந்த 115 பாடல்களுள் 55 பாடல்களுக்கான மெட்டுக்களையும் நானே அமைத்திருந்தேன். "மதுர கான மழை" இறுவட்டு பாடற்தொகுதியில் இடம்பெற்ற முதலாவது பாடலான ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சி கீதத்துக்கு மெட்டமைத்தவர் எனது மைத்துனரான கலகெதர எம்.எம்.ஏ. ஹக் ஆவார்.


13. பலரது மனதிலும் இடம் பிடித்த, நீங்கள் வரிகள் எழுதிப் பாடிய, "மர்ளியா தாத்தா.. ராளியா தாத்தா.." பாடல் குறித்து என்ன சொல்வீர்கள்?

பாடலை ஆரம்பத்தில் ஃபாத்திமா தாத்தா.. ஆயிஷா தாத்தா.. என்றே இயற்ற நினைத்திருந்தும், பிறகு எனது முடிவை மாற்றிக் கொண்ட காரணம், அப்பெயர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த விசுவாசிகளின் அன்னையரது புனிதமான பெயர்களின் கண்ணியத்தைப் பேணிக்கொள்ள வேண்டும் என்பதனாலாகும். எனவே, சாதாரணமாக சமூகத்தில் புழங்கக்கூடிய பெயர்களோடு பாடலை ஆரம்பித்தேன். அப்பாடல் என்னை உலக அளவில் பிரபல்யப்படுத்தும் என்று நான் முதலில் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அறிவுரைகளை நகைச்சுவையாக பாடல்கள் மூலமும் வழங்கலாம் என்பது எனது இப்பாடலின் வாயிலாக நிரூபணமாகியுள்ளது.

கணிசமான பெண்கள் இப்பாடலை செவிமடுத்த பின் தொலைக்காட்சி பார்ப்பதை குறிப்பாக டெலி ட்ராமாக்கள் பார்ப்பதை அறவே நிறுத்திவிட்டதாக மிகவும் நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்தன. இப்போதும் கிடைக்கின்றன.


14. நீங்கள் எழுதிய பாடல்களைத் தொகுத்து ஒரு "மெல்லிசைப் பாடல்கள்" நூலை வெளியிடலாமே? ஏன் இதுவரை இதில் அக்கறை காட்டவில்லை?

நம் நாட்டில் எவருமே தமிழ் இலக்கியத் துறையில் முதலீடு செய்து, 100 வீதம்  வெற்றி மற்றும் இலாபம் பெறுவது கடினமான ஒரு காரியம். எனவே, கையைச் சுட்டுக்கொள்ள நான் விரும்பவில்லை. எனினும், இன்ஷா அல்லாஹ், இதன் பிறகு அதுபற்றி சிந்திக்கலாம்.


15. பாடல் தவிர வேறு எவ்வகையான துறைகளில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகின்றீர்கள்?

சிறு வயதிலிருந்தே நான் ஒரு தீவிர வாசிப்பாளன். கலையும், இலக்கியமுமே என்னை ஈர்த்த இரண்டு துறைகளாகும். விளையாட்டுத் துறையில் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆன்மீக நாட்டம் 18 வயதில் உண்டானது.

1970களில் தினகரன் பத்திரிகையில் அவ்வப்போது இலங்கையில் முஸ்லிம் தனித்துவ அரசியலின் அவசியம் தொடர்பாக எம்.எச்.எம். அஷ்ரஃப் எழுதிய பல கட்டுரைகளை என் பதின்ம வயதிலேயே வாசிக்கக்கூடிய வாய்ப்பு எனக்கிருந்தது. ஆனால், அவர் யார், எப்படி இருப்பார் முதலிய விவரங்களை நான் அந்நாட்களில் அறிந்திருக்கவில்லை.

எனினும், 1988இல் முதன்முதலாக மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தொலைக்காட்சியில் ஒவ்வொரு கட்சியினரும் கொள்கை விளக்க பிரசார ஒளிபரப்புகளில் அதே எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் ஒருநாள் உரையாற்றிய நிகழ்ச்சியை காணக் கிடைத்ததும் அதுநாள் வரை அரசியலில் எந்த ஓர் ஈடுபாடும் இருந்திராத என் மனசை ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் ஆகர்ஷித்தது. பின்னர் தேர்தல் பரப்புரைக்காக மாத்தளைக்கு வந்த மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களை நேரில் சந்தித்து, அந்தப் பிரசாரக் கூட்டத்தில் ஒரு பாடலைப் பாட அனுமதி கேட்டுப் பாடினேன். 

தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக நாகூர் ஈ.எம். ஹனீஃபா அவர்கள் பல பிரசார கீதங்களை இசைத்துள்ள தகவலை அவரிடம் தெரிவித்து, "உங்களது கட்சிக் கொள்கைகளையும் இதே அடிப்படையில் பிரசாரப்படுத்தலாம்தானே?" என்று கேட்டேன். அவரோ எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் எனது மஷூராவை அதாவது ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, என்னையும் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டார். பின்னரான பல வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது பிரசாரப் பாடல்களை நான் பல மேடைகளில் பாடி வந்தேன்.

1992இல் கட்சிக்கான ஒரு கீதத்தை அவர் இயற்றியவுடன் அதைத் தாங்கள் பாட வேண்டும் எனப் பல பாடகர்களும் வேண்டுகோள்களை விடுத்தபோதிலும், மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களோ, "முஸ்லிம் கொங்கிரஸுக்கு ஆயிரம் பாடகர்கள் வரலாம். ஆனால், கட்சி கீதத்தை நமது மாத்தளைக் கமால்தான் பாட வேண்டும்." என்று மிகத் தீர்மானமாகச் சொல்லியதுடன், அதனைப் பாடவைத்து, 1992 இல் கொழும்பின் பரடைஸ் பார்க்கில் நடைபெற்ற கட்சியின் 10ஆவது தேசிய மாநாட்டின் போது, அக்கீதம் உட்பட பதினொரு பாடல்கள் கொண்ட ஓர் ஒலிநாடாவையும் வெளியிட்டு வைத்தார். அவ்விழாவுக்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்கள், அக்கீதத்தை அந்த மேடையில் நான் பாடிய போது மிகவும் ரசித்துக் கேட்டதுடன் சுமார் அரை மணி நேரத்தில் அந்த கீதத்தை மீண்டும் ஒரு முறை என்று சொல்லி, மீண்டும் கேட்டு ரசித்தமை, அக்கட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். 

பின்னர் 1997 ஜனவரியில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அக்கட்சி கீதத்தின் மீள் ஒலிப்பதிவுக்காக என்னை அழைத்துச் சென்றார் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள். 1997 மார்ச் 19ஆந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, "புதிய வெளிச்சங்கள்" ஒலிநாடாவின் வெளியீட்டு விழாவின்போது, கட்சி கீதத்தைப் பாடியமைக்காக எனக்குப் பொன்னாடை போர்த்தி, விருதும் வழங்கி கௌரவித்தார் அந்தப் பெருந்தகை. 

எனினும், 1988 முதல் 2018 வரை அக்கட்சியின் ஆஸ்தானப் பாடகராக பணியாற்றி வந்த நான், தற்போதைய தலைமைத்துவம் மர்ஹும் எம்.எச்.எப். அஷ்ரஃப் அவர்களின் உயரிய கொள்கைகளைக் கைவிட்டு விட்டு தான்தோன்றித்தனமாக செயல்படுவதன் காரணமாக பிறகு அக்கட்சியிலிருந்து விலகி, தற்போது அகில இலங்கை மக்கள் கொங்கிரஸ்ஸில் இணைந்துள்ளேன்.


16. வேறு என்ன வெளியீடுகளைச் செய்ய உத்தேசம்?

The Real Super Star என்ற தலைப்பில் எனது இறுதி ஒலிவடிவ (mp3) வெளியீட்டைச் செய்ய நல்லாட்சி அரசாங்க காலத்தில் நான் முடிவெடுத்திருந்த போதிலும், அது சாத்தியமாகவில்லை. இன்ஷா அல்லாஹ், இவ்வருடம் நான் ஏற்கெனவே ஜனனி வார இதழில் 1997, 1998, 1999 வருடங்களில் தொடராக எழுதிவந்த, "அன்பே வா அருகிலே!" என்ற தொடர்கதையை ஒரு தனி நாவலாக அல்லது இரண்டு பாகங்களாக வெளியிடும் உத்தேசமும் உள்ளது. மேலும், தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகிய என் 200க்கும் மேற்பட்ட கவிதைகளின் தொகுதிகள் ஒன்றிரண்டு வெளியிடவும் நாடியுள்ளேன்.


17. பழைய அல்லது இடைக்காலப் பாடல்களைப் பாடும் போது எவ்வகையான மன உணர்வைப் பெறுவீர்கள்?

பழைய பாடல்களில் கணிசமானவை தத்துவக் கருத்துக்கள் பொதிந்தவையாக இருந்தமையே என் மனசு பாடல் துறையில் ஆகர்ஷிக்கப்பட்டமைக்கான அடிப்படைக் காரணம் என்ற உண்மையை இங்கே ஒப்புக் கொண்டாக வேண்டும். அவற்றை எந்த ஒரு சபையிலும் பாடலாம். பாடும்போதும் ஒரு லயிப்புணர்வு இருக்கும். இடைக்காலப் பாடல்கள் பெரும்பாலும் "இசைஞானி" இளையராஜாவின் இரண்டு தசாப்த கால ஆதிக்கத்தில் இருந்தன. உண்மையில் என்னை அதிகமாகப் பாடத் தூண்டியவை அவர் இசையில் உருவான பாடல்களே. அதிலும் காலஞ்சென்ற திரு. எஸ்.பி.பி. ஒரு சகலகலா வல்லவராக இருந்து பாடிய பாடல்கள், மறக்க முடியாதவை. அவரது அணுக்குகள் எனும் அசைவுகள் வளரும் பாடகர்களுக்கு நல்ல பயிற்சிகளைத் தரக் கூடியன. இன்பமான பாடல்களைப் பாடுகையில் ஒரு துள்ளல் உணர்வும், சோகமான பாடல்களைப் பாடுகையில் உணர்வை உருக்கி, கண்ணீரையும் கசியச் செய்கிற குழைவும் இருக்கும்.


18. ஹிந்தி மொழிப் பாடல்களையும் பாடியுள்ளீர்களா? இதுபற்றி?

அக்கால கட்டத்தில் பிரபலமாக இருந்த "ஆராதனா" படப் பாடல்களான "மேரே ஸப்னோகி ராணி கப் ஆயேகீது", "ரூப்பு தேரா மஸ்தானா" மற்றும் "கிஸ்மத்" படப் பாடலான "லா கோன் ஹெயஹா திலு வாலே" போன்ற பாடல்கள் எனது சிறு வயதிலிருந்தே நான் பாடிய பாடல்களாகும். பாஷை விளங்காவிட்டாலும்கூட, ஹிந்தி மிகவும் இனிமையான ஒரு மொழி என்பதால் அம் மொழியிலான பாடல்கள் உலக அளவில் இன, மொழி, தேச பேதமின்றி அனைவராலும் ரசிக்கப்படுகிறது கூடியவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.


19. புதிதாக இசையமைத்து, புதிய பாடலாசிரியர்களின் பாடல்களையும் பாடலாம் தானே?

ஆம். ஆனால் அப்படியான எந்த ஓர் உத்தேசமும் எனக்கு இதுவரை இருந்ததில்லை. சிலவேளை புதிய பாடலாசிரியர்கள் ஏதாவது முக்கியமான கருத்தாழமுள்ள பாடல்களை இயற்றித் தந்தால், மெட்டமைத்துப் பாட முடியும்.


20. ஈழத்து இளம் பாடகர்களுக்கு ஒரு பாடகராக என்ன கூற விரும்புகிறீர்கள்?

நல்ல கருத்துள்ள பாடல்களைப் பாடுங்கள். பிரபல்யம் கிடைக்கலாம் என்பதற்காக ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட பாடல்களைத் தவிர்த்துவிட்டு, இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும், சமாதான சகவாழ்வையும் மேம்படுத்தக்கூடிய நல்ல பாடல்களைத் தெரிவு செய்து பாடுங்கள் என்று தான் இன்றைய காலகட்டத்தில் கூற வேண்டியுள்ளது.


21. பாடல் துறையில் இனிவரும் காலங்களில் உங்கள் பயணம் எப்படியானதாக இருக்கும்?

YouTube தளத்தில் ஒரு மோசடிப் பேர்வழி எனது குரலில் ஒலிக்கும் "மர்ளியா தாத்தா.." என்ற பாடலை பல்வேறு செம்மையாக்க வேலைகளைச் (Editing) செய்து பதிவேற்றியுள்ளார். ஆனால், எனது அனுமதியை அவர் பெறவே இல்லை. ஆயிரக்கணக்கானோர் அப்பாடலைப் பார்வையிட்டுள்ளார்கள். ஆனால், எனக்கு அதில் வெறும் பிரசித்தி மட்டுமே கிடைத்துள்ளது. அந்தத் திருட்டுப் பேர்வழி இந்தக் காரியத்தைச் செய்து, எத்தனை ஆயிரம் ரூபாய்களை சம்பாதித்துக் கொண்டாரோ எனக்குத் தெரியவில்லை. எனினும், எனது அனுமதியைப் பெறாத அவரது இந்தச் செயலை நான் இதுவரை அங்கீகரிக்கவுமில்லை. மன்னிக்கவும் மாட்டேன். எனது நேயர்களுக்காக இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் எனது பல பாடல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளேன்.


22. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பெரும்பாலும் கிடைத்ததெல்லாம் பாராட்டுப் பரிசுதான். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் 14 போட்டிகளில் பங்குபற்றி, 10 தடவை முதற்பரிசு பெற்றேன். "பாட்டுக்கு பாட்டு" நிகழ்ச்சியின் அனுசரணையாளர்கள் பரிசு என்ற பெயரில், வவுச்சர் ஒன்றைத் தந்து, அதற்கான பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ள அவர்களது வியாபார ஸ்தலத்திற்கு நாம் போனதும், "நீங்கள் ஏதாவது நகைகளை எம்மிடம் விலைக்கு வாங்கினால், அந்தப் பரிசுத் தொகையைக் கழித்துவிட்டு நகையைத் தருவோம்.." என்று ஈனத்தனமாகச் சொல்வதுண்டு. தவிரவும், 1990 இல் மஹாபொல அகில இலங்கை ரீதியிலான பாடல் போட்டியில் முதற் பரிசாக 5,000 ரூபா கிடைத்தது. 

மேலும், மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தி வந்த பாடல் போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளை அள்ளிக் குவித்த அனுபவம் எனக்குண்டு. ஆம். 1992, 1993 ஆகிய இரு வருடங்களிலும் அகில இலங்கை ரீதியிலான இஸ்லாமிய கீதப் போட்டிகள் மற்றும் புதிய பாடல்கள் போட்டிகள் இரு பிரிவிலும் மொத்தம் 04 போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றமை என் கலைத்துறை வரலாற்றில் மறக்க முடியாத பொன்னான நிகழ்வுகள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. 

இலங்கை வானொலியில் சுஜாதாவின் "இசை அலைகள்" மற்றும் அம்பாள்ஸ் ஜுவல் ஹவுஸின் "வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்" முதலிய நிகழ்ச்சிகளில் முதலாம் பரிசுகளைப் பெற்றுள்ளேன். 

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சி கீதத்தைப் பாடியமைக்காக 1997 மார்ச் 19ஆந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "புதிய வெளிச்சங்கள்" ஒலிநாடாவின் வெளியீட்டு விழாவின்போது, கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் பொன்னாடை போர்த்தி, விருதும் வழங்கி என்னை கௌரவித்தார். 

1999 இல் இரத்தினபுரி அகில இன நல்லுறவு ஒன்றியம் "சாமஸ்ரீ இசை நிலா" எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 

2007 பெப்ரவரியில் புத்தளத்திலிருந்து பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த "அஸ்ஸகீனாஹ்" சஞ்சிகையின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற அதிபருமான அல்ஹாஜ். ஸீ.எஸ்.எம்.எம். ஹனீஃபா அவர்கள் எனக்கு "மக்கள் கவிஞர்" எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். 

அந்தப் பட்டம் பழம்பெரும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதாகும் எனப் பின்னர் நான் அறிந்தேன். ஒரு கத்துக்குட்டிக் கவிஞனான எனக்கு இப் பட்டம் குருவியின் தலையில் பனங்காய் மாதிரிதான்.


23. இறுதியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?

ஒவ்வொரு மனிதனிடம் காணப்படும் அனைத்து ஆற்றல்கள் ஏக இறைவனால் வழங்கப்படும் அருட்கொடைகளாகும். அவற்றின் மூலம் மனித சமுதாயம் முன்னேறவும், நன்மைகளை விளைவிக்கவும், சமாதானத்தைக் கட்டிக் காக்கவும் உயர் பங்களிப்புக்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதுவே எனது இறுதிப் பகிர்தலாகும்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Saturday, January 30, 2021

26. எழுத்தாளர் டீன் கபூர் அவர்களுடனான நேர்காணல்

 எழுத்தாளர் டீன் கபூர் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, குடும்பப் பின்னணி பற்றி எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் கல்வி, கலை, இலக்கியம், நெசவு ஆகியவற்றால் செழித்து விளங்கும் ஓர் அழகிய கிராமமான மருதமுனையில் சாதாரணமான ஒரு குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவன் நான். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் தரம் வரை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலேயே கற்றேன். கற்றுக் கொண்டிருக்கின்ற காலங்களிலேயே இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு ஆசிரியர்களால் உந்தப்பட்டேன். குறிப்பாக, உயர் தரத்தில் பயின்று கொண்டிருந்த நாட்களில் நண்பர்களோடு இணைந்து இலக்கியம் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திரிந்த அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. 


உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக எப்போது ஆரம்பித்தது?

ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கின்ற காலத்திலேயே எனக்குள் எழுதுவதற்கான ஆர்வம் குடிகொண்டுவிட்டது. அப்பொழுதெல்லாம் எங்களுரில் உள்ள பொது நூலகத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. இளவயதிலேயே வாசிப்புப்; பழக்கத்தையும், எழுதும் ஆர்வத்தையும் என்னிடம் ஏற்படுத்திய நூலகம் அது. அன்றைய நாட்களில் மின்னல், தூரிகை, காற்று எனும் பெயர்களில் கையெழுத்துச் சஞ்சிகைகளை நானே உருவாக்கி, யாருக்கும் தெரியாமல் நூலக மேசைகளில் வைத்துவிடுவேன். பின் தூரத்தே நின்று எத்தனை பேர் அவற்றை வாசிக்கின்றார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பேன்.


1979 இல் தினபதிப் பத்திரிகையானது கையெழுத்துச் சஞ்சிகைகளுக்கான போட்டி ஒன்றை நடாத்தியருந்தது. அச்சமயம் எங்களது பாடசாலையில் 'கலங்கரை' எனும் சஞ்சிகையை உருவாக்கும் முயற்சியில் உயர் தர வகுப்புக் குழுவினருடன் நானும் இணைந்து செயற்பட்டேன். எனது கையெழுத்து மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதாகக் கூறி அவர்கள் என்னையும் இணைத்துக் கொண்டார்கள். அப்போதே மனம் எழுதுவதற்கு உந்திக் கொண்டிருந்தாலும், 1987 இலேயே தேசிய பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை எழுதும் வாய்ப்புக் கிட்டியது. 


இலக்கியத் துறைக்குள் நுழைவதற்கான முதற் காரணி எது?

வாசிப்பதற்கான சூழல் மற்றும் தொடர் வாசிப்பு ஆகியவையே காரணமாகும்.


உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

இலக்கிய ஈடுபாடு என்பது வாசித்தல், புனைதல் என்ற இரண்டு விடயங்களோடும் தொடர்புபட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால் எனது குடும்பத்தைச் சேர்ந்த பலர் புனைதலிலும் பார்க்க படைப்புக்களை வாசிப்பதில் ஈடுபாடு காட்டவே செய்கின்றனர். ஆம் - இல்லை ஆகியவற்றில் ஒன்றைப் பதிலாக முன்வைக்க முடியாமைக்கு மன்னிக்கவும்.



இலக்கியத் துறையில் இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றி குறிப்பிடுங்கள்? நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

''குரோட்டன் அழகி'' (1994), ''திண்ணைக் கவிதைகள்'' (2007) இல் ''சொற்களில் சுழலும் பிரபஞ்சம்'' (2019) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. நூல் வெளியீட்டு முயற்சியில் வெற்றி பெற்றீர்களா? என்று மற்றுமொரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். பொதுவாக, வெற்றி - தோல்வி ஆகிய எதிர்வு நிலைகளுக்குள்ளால் நகர்த்தப்படும் கேள்விகளில் நான் அதிகம் உடன்படுவதில்லை. இலக்கியச் செயற்பாடு என்பது அப்படியான ஒரு போட்டி நிகழ்வும் அல்ல. இலக்கியச் செயற்பாடுகளில் வெற்றி என்பதை எதனைக் கொண்டு தீர்மானிப்பது? என்றொரு கேள்வியைக் கேட்டால் அது நீண்ட நெடிய விவாதங்களைத் திறந்துவிடும். ஆகையால், இரண்டு வகையான பொருள்கோடலின் அடிப்படையில் இக்கேள்வியை அணுகுகிறேன். ஒன்று, வெளியீட்டு நிகழ்வுக்கு வருகை தருவோர் மற்றும் நூல் விற்பனையாகும் வீதம் பற்றியது. இரண்டு, வாசகர்கள் நூல்களை வாசிப்பதும், அதுபற்றி எழுதி உரையாடுவதும் பற்றியது. இவ்விரண்டு விடயங்களையும் நான் எனது எழுத்து முயற்சிகளுக்கான உந்துதல்களாகவே பார்க்கின்றேன். அத்தகைய உந்துதல்கள் எல்லா நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. அதே சமயம், எனது எழுத்துச் செயற்பாடுகள் எனக்கான சுதந்திர வெளியில் கடிவாளங்களற்றுப் பயணித்துக் கொண்டிருக்கும் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்களைப் பற்றிக் கூறுங்கள்?

நீண்ட பட்டியல் உள்ளது. ஒவ்வொருவருடனான அனுபவங்களுடன் கூறுவதாக இருந்தால் பல நேர்காணல்கள் தேவைப்படும். மிக நெருக்கமானவர்களை மாத்திரம் குறிப்பிடுகிறேன். 

''குரோட்டன் அழகி'' (1994) எனும் எனது முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரிதும் துணை நின்றவர் எனது ஆசிரியர் காலம் சென்ற எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் மருதூர் பாரி அவர்கள். அன்று முனைப்பு எனும் சஞ்சிகையில் எனது எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்ததோடு மாத்திரமன்றி, எனது முதற் தொகுதியை முனைப்பு அச்சகத்தில் அச்சிட்டு, முனைப்பு வெளியீடாகவே கொண்டு வருவதில் ஈடபாட்டுடன் செயற்பட்டவர் அவர். அதேபோன்று, எனது முதற் தொகுதியினை வாசித்து, அதற்கு அணிந்துரை எழுதி, என்னை ஊக்கப்படுத்திய எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்களும் இன்றும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கவர். 

''திண்ணைக் கவிதைகள்'' (2007) நூலை வெளியிடுவதற்கு மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்ட நண்பர்கள் பக்கபலமாக நின்றனர். இதில் எழுத்தாளர்களான அம்ரிதா ஏயெம், ஜமீல் ஆகியோர் எனப் பலரையும் குறிப்பிடலாம். 


மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களின் வெளியீடுகளையும் தொடர்ந்து சுமார் 12 வருடங்களின் பின்னர் ''சொற்களில் சுழலும் பிரபஞ்சம்''  (2019) கவிதைத் தொகுதி ''கிடுகு'' கலை இலக்கிய அமைப்பின் செயற்பாட்டாளரும் இளம் இலக்கிய விமர்சகருமான அப்துல் ஆபித், கவிஞரும் தேர்ந்த விமர்சகருமான இமாம் அத்னான் ஆகியோரி;ன் ஊக்கப்படுத்தலுடன் வெளிவந்தது. இத்தொகுதி வெளியீட்டின் போது, மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்ட நண்பர்களும், கிடுகு கலை இலக்கிய அமைப்பினரும் மாத்திரமன்றி அக்கரைப்பற்றைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் றஸாக் அவர்களும் பலவகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்கினர். 


''குரோட்டன் அழகி'' நூல் பற்றி நீங்கள் விசேடமாகக் கூற விரும்புவது என்ன?

எனது எழுத்தின் முதல் அடையாளம் குரோட்டன் அழகிதான். எனது ஊர் கிராமமாக இருந்த காலத்தில் எழுதப்பட கவிதைகள் அவை. இப்போது எனது கிராமத்தின் அதிகமான அடையாளங்கள் மாறிப்போயிற்று. இன்று இத்தொகுதியில் உள்ள கவிதைகளை வாசிக்கும் சிலர் 30 வருடங்கள் முன்னுள்ள மருதமுனைக்குத் தம்மை அழைத்துச் செல்வதாக அடிக்கடி கூறுவதுண்டு. இத் தொகுதிக்கு எழுத்தாளர் நண்பர் உமா வரதராஜன் அவர்கள் எழுதிய உரையில் ''இளம் பராயத்து நினைவின் சுகங்களை மீட்டல், இயற்கை அழகின் லயிப்பு, மனதில் பதிந்த சில மாந்தர்கள், பிராணிகள், பறவைகள் என இவரது கவியுலகின் பயணம் நகர்கிறது. மரம், செடி, கொடி, ஆறு, கடல், வயல், வரப்பு, மழை, வெயில் என அலைகின்ற உள்ளம் அவருக்கு உரியது. மேடு, பள்ளம், சரிவு, சுழி என அவருடைய நதி ஓடிக்கொண்டிருக்கிறது'' என்று சொல்வதை இங்கு ஞாபகமூட்டுவது பொருத்தம் என நினைக்கின்றேன். 


உங்களது கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவு, அல்லது வரவேற்புக்கள் பற்றிக் கூறமுடியுமா?

வாசகர்களில் இரு வகையினர் உள்ளனர். முதலாவது வகையினர் கவிதைகளை மேலாட்டமாக வாசித்து ரசிப்பவர்கள். அதாவது, தாம் கருதும் கவிதைக் கூறுகளையோ, தமக்கு நெருக்கமான கருத்தியல்களையோ தேடுபவர்கள். இரண்டாவது வகையினர் கவிதைகளுக்குள் நுழைந்து கேள்விகள் கேட்டு இடையீடு செய்பவர்கள். இவர்களைத் திறனாய்வு செய்பவர்கள் என்றும் சொல்லலாம். முதலாவது வகை வாசகர்களிடமிருந்து கிடைக்கக் கூடிய ஆதரவு சிறியளவு ஊக்கமளித்தாலும், இரண்டாவது வகையினரிடமிருந்து கிடைக்கக் கூடிய சுதந்திரமானதும் ஆக்கபூர்வமானதுமான விமர்சனங்களையே எனது கவிதைகளுக்குக் கிடைக்கும் ஆதரவாக எடுத்துக் கொள்கிறேன். வெறுமனே 'அற்புதமானது', 'கனதியானது', 'ஆழமானது' போன்ற பாராட்டுக்களை மாத்திரம் வைத்துக் கொண்டு கவிதைச் செயல்களில் அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ள முடியாது என்பதனை ஆழமாக நம்புபவன் நான். எனவேதான் விமர்சனங்களை, திறனாய்வுகளை எல்லாம் எனது எழுத்துக்களுக்கான உந்துதல்களாக எடுத்துக் கொள்கிறேன். 


திண்ணைக் கவிதைகள் பற்றியும் குறிப்பிடுங்களேன்?

2007 இல் வெளிவந்தது. 'திண்ணை' எனும் இணையத்தளத்தில் வெளியான எனது கவிதைகளின் தொகுப்பு அது. தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் பரீட்சார்த்த முயற்சிகள்தான். குரோட்டன் அழகியிலுள்ள கவிதைகளிலிருந்து வடிவம், எடுத்துரைப்பு முறைகள் சார்ந்து அதிகமான மாற்றங்களை அதில் காணலாம். இத்தொகுதிக்கு அணிந்துரை எழுதிய எழுத்தாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அம்ரிதா ஏயெம் அவர்கள் இக்கவிதைகள் பற்றிக் கூறும்போது, கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உணர்வுகள் வெளிப்பட்ட மன நிலையில் புனையப்பட்டவைகள் என்றும், குறித்த கவிதைகளில் சர்ரியலிச, மெஜிகல் ரியலிசப் போக்குகளை அவதானிக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டிருந்தமையினை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 


இறுதியாக வெளிவந்த உங்களது ''சொற்களில் சுழலும் பிரபஞ்சம்'' கவிதை நூலின் தனித்துவம் பற்றிக் குறிப்பிட முடியுமா? இந்த நூலில் உள்ளடக்கியுள்ள கருப் பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

மொழி என்பது மனித வாழ்வியலோடு, பண்பாட்டோடு இறுக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது. தனிமனித, சமூக உளவியலிற்குப் பின்னாலும் மொழி முக்கிய பாத்திரத்தை ஏற்றிருக்கிறது. மொழியினைப் பயன்படுத்தும் விதத்தினால் பெரும் வன்முறைகள், ஒடுக்குமுறைகள் என்பன நிகழவும் வாய்ப்புண்டு. பல்வேறு கஷ்டங்களுடனும் துன்பங்களுடனும் உலவும் உள்ளங்கள் ஆறுதல் பெறவும் வாய்ப்புண்டு. இன்று நாம் பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்குப் பின்னால் எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன. நம்மை அறியாமல் அவை 'நான்' அல்லாதவைகள் மீது வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இங்கு தூஷண வார்த்தைகளை பிரதானப்படுத்திக் குறிப்பிடவில்லை (அவையும்தான்). மாறாக, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பற்றித்தான் சொல்கிறேன். உதாரணமாக, ''சிறுபிள்ளைத்தனமாக நடக்க வேண்டாம்'' என்ற வார்த்தைப் பிரயோகத்தை எடுத்துக் கொள்வோம். இதனை சாதாரணமாக நோக்கும் போது, ''ஒரு செயலை இந்த விதமாகச் செய்யக் கூடாது'' என்று அர்த்தம் கொண்டாலும் மறைமுகமாக அது ஒரு வன்முறையைச் செய்கிறது. ''சிறு பிள்ளைகள் அல்லது குழந்தைகளது செயல்கள் வெறுக்கத்தக்கவை'' எனும் பொதுவான ஒரு பார்வையை மீள உருவாக்கி விடுகிறது. குறித்த வார்த்தைப் பிரயோகத்தை ''நீங்கள் செய்யும் செயலில் இப்படியான தவறுகள் இருக்கின்றன'' என்றும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், குறித்த வார்த்தையில் குழந்தைகளுடைய செயல்பாடுகள் மதிப்பற்றவையாக, பெறுமதியற்றவையாக மாற்றப்படுகின்றன. குழந்தைகளின் உலகை மதிக்கும் யாவரும் இதனைப் புரிந்து கொள்வர். இன்னும் இதுபோன்ற பல உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். 

இதனை நான் கூறியமைக்கு முக்கிய காரணம், கவிதை என்பதும் மொழியின் ஒரு விளைவுதான். பல சொற்களின் கூட்டு அது. கவிதை வடிவமைக்கும் போது கவிதைக்கான சொற்களை, வார்த்தைகளைத் தெரிவு செய்வதில் காட்டும் அசிரத்தை நம்மை அறியாமல் வன்முறைக் கூறாகவும் மாறிவிடும். எனது முன்னைய கவிதைகளிலும் பார்க்க இத்தொகுதியில் உள்ள கவிதைகளை வடிவமைக்கும் போது அவற்றிற்கான சொற்களில் அதிக கரிசனை எடுத்திருக்கிறேன். மனிதர்கள் மீது மாத்திரமல்ல, மனிதர் அல்லாத உயிரிகள் மீதும் நான் தேர்வு செய்யும் சொற்கள் மறைமுகமாக வன்முறை புரியக்கூடாது என்பதில் முடிந்தளவு அக்கறை செலுத்தியிருக்கிறேன். இவைதவிர, மீபுனைவு (Metafiction), ஊடிழைப் பிரதி (Intertext) போன்ற உத்திகளையும் இக்கவிதைகளில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறேன். 


கருப்பொருட்கள் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இத்தொகுதியில் உள்ள பல கவிதைகளை வடிவமைக்கும் போதே வாசகரின் சுதந்திரத்தையும் கருத்திற்கொண்டு, அக்கவிதைகளில் அவர்கள் சிந்தித்தல் எனும் உழைப்பைச் செலவளிக்கும் வகையிலே உத்திகளையும் கையாண்டிருக்கிறேன். ஆதலால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைவிட வாசகர் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் எனது தற்போதைய கவிதைச் செயற்பாட்டின் முக்கியமான அரசியல். 


இதுவரை நீங்கள் எழுதியவற்றில் எந்தப் படைப்பை அதிகமாக நேசிக்கின்றீர்கள்?

ஓவ்வொரு கவிதைகளையும் நான் மிகவும் நேசித்தே எழுதுகிறேன். ஆனாலும், நமது சிந்தனை என்பது காலத்திற்குக் காலம் வளர்ச்சியடைய, வளர்ச்சியடைய நமது எழுத்துக்களில் உள்ள போதாமையினையும் அது உணர்த்திச் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? அந்தவகையில் சமகாலத்தில் நான் எழுதிய, எழுதுகின்ற கவிதைகளையே அதிகம் நேசிக்கின்றேன். ஆனாலும், இவ்விடயத்தில் வாசகரின் நிலைப்பாடுகள் என்பது வேறானவையாக இருக்கலாம். 


எதிர்காலத்தில் உங்கள் படைப்புக்கள் எப்படி அமைய வேண்டுமென்று நினைக்கின்றீர்கள்? 

கவிதைச் சூழலில் சுதந்திரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கவிதையினை வடிவமைக்கும் போதும் ஏதாவது புதிய கூறினை, உத்தியினைக் கையாளவே முயற்சிக்கிறேன். நிபந்தனைகளை முன்னாயத்தமாக வைத்துக்கொண்டு கவிதைகளைப் படைப்பதைவிட, கவிதைக்கான அரசியல் கதையாடலை முன்வைக்கத் தேவையான புனைவு உத்திகளைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பரிசோதனை செய்து பார்ப்பதிலும் கரிசனை கொள்ள விரும்புகிறேன். உங்கள் கேள்விக்குப் பொதுவாக, ஒரு பதிலைச்; சொல்வதானால், வன்முறைகளற்ற பிரதிகளாக எனது படைப்புகள் அமையவேண்டும் என நினைக்கிறேன். 

 

எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றியும் குறிப்பிடுங்கள்.?

இது காலவரையில் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட எனது கவிதைகளைத் தொகுதியாக்கும் எண்ணம் உள்ளது.


நீங்கள் ஓர் ஆசிரியர் என்ற வகையில் இன்றைய மாணவர்களின் இலக்கியம் மீதான ஈடுபாடு, எழுத்துத் துறை நாட்டம் பற்றிக் கூற முடியுமா?

மிகவும் குறைவு. மாணவர்களிடம் சுதந்திரமான வாசிப்புப் பழக்கம் உருவாகும் போது மாத்திரமே இவ்விரண்டும் சாத்தியம். வாசிப்புக்கான வாய்ப்பும் சூழலும் ஊக்கப்படுத்தலும் பாடசாலைச் சூழலில் உருவாகும் போது, மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கமும் ஏற்பட்டுவிடும்.


உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? 

பலர் உள்ளனர். புதுமைப் பித்தன், சண்முகம் சிவலிங்கம், மருதூர்க்கொத்தன், உமா வரதராஜன், எம்.ஏ. நுஃமான், எம்.ஐ.எம். றவூப், றியாஸ் குரானா, அம்ரிதா, குட்டி ரேவதி, இமாம் அத்னான்.. என்று இப்பட்டியல் நீண்டு செல்லும். எழுத்தாளர்கள் என்பதற்கும் அப்பால் இவர்களது எழுத்துக்களே என்னைக் கவர்ந்தன. 


இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி, வாசிப்பை அதிகரிக்கச் செய்கின்றது என்று குறிப்பிட முடியுமா? 

இலத்திரனியல் ஊடகங்கள் வாசிப்பை அதிகரிக்கின்றனவா? ஏன்பதைவிட வாசிப்பை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு அதில் நிறையவே வழிகளும், சிறப்பம்சங்களும்  இருக்கின்றன என உறுதியாகக் கூற முடியும். எந்தவொரு ஊடகமும் அதனைப் பயன்படுத்தும் விதத்திலேயே தங்கியுள்ளதல்லவா?


இலக்கியத் துறையில் உங்களால் இன்னும் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்.?

பல சம்பவங்கள் இருக்கின்றன. நீங்கள் கேட்டதற்கிணங்க ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். 2010 ஆம் ஆண்டளவில் நடைபெற்றது. எங்களது பிரதேச ஆளுமை, கவிஞரும் எழுத்தாளருமான சண்முகம் சிவலிங்கம் அவர்கள் ஆங்கிலத் தட்டச்சு வேலைக்காக அவ்வப்போது என்னை நாடுவதுண்டு. ஒரு நாள் என்னிடமிருந்து குரோட்டன் அழகி, திண்ணைக் கவிதைகள் ஆகிய இரு தொகுதிகளையும் பெற்று வீடு சென்றவர் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் என்னிடம் வந்தார். இரண்டு தொகுதிகளிலுமிருந்து 34 கவிதைகளை அடையாளப்படுத்தி, அவற்றை ஒரு தொகுதியாக்கும் படியும், அதற்குரிய முன்னுரையைத் தான் எழுதித் தருவதாகவும் கூறியிருந்தார். அன்று எனக்கு ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் அம்முயற்சி பின்தள்ளிப் போனது. பின் 2012 அளவில் அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாமா? என்று யோசித்தக் கொண்டிருக்கையில் அவரின் மரணச் செய்தி காதுகளை வந்தடைந்தது. பெரும் வேதனையளித்தது. அவருடன் பேசிய அனுபவங்களை இன்றும் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. 


இலக்கியத் துறையில் உங்களுக்கும் உங்கள் படைப்புக்களுக்கும் கிடைத்த வரவேற்புக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் கூற முடியுமா?

இவை எவற்றையும் இலக்காக வைத்து நான் கவிதைப் படைப்பாக்கத்தில் ஈடுபடுவதில்லை. நான் முன்னர் கூறியது போன்று எனது கவிதைகள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மீதே நான் அக்கறை கொள்கிறேன். விமர்சனங்கள் சிலபோது பாராட்டுதல்களாகவும் அமையும். சிலபோது சிக்கல்களைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமையும். இரண்டையும் நேரிய கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறேன். இன்னும் ஒருவகையில் சொல்வதானால் எனது கவிதைகள் திறனாய்வுகளுக்கு உட்படுவதையும், பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதையும், வாசகர்கள் அதுபற்றிப் பேசுவதையும் எனது படைப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்புகளாக, பரிசுகளாக, பட்டங்களாக, விருதுகளாக எடுத்துக் கொள்கிறேன். அதே சமயம் அவ்வப்போது என்னையும், எனது எழுத்து முயற்சிகளையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் நினைவுச் சின்னங்களை, சான்றிதழ்களை நான் புறக்கணிப்பதுமில்லை. அவையும் ஒரு வகை உந்துதல்தானே. ஆனால், அவையே எனது இலக்கல்ல. 


வளர்ந்து வரும் கவிஞர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

வளர்ச்சியடைந்த கவிஞர்கள், வளர்ந்து வரும் கவிஞர்கள் என்று எதனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பது? என்றொரு கேள்வி நீண்ட காலமாக இலக்கிய வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. வயதை, அனுபவத்தை அடிப்படையாக வைத்து அதனைத் தீர்மானிப்பதா? எழுத்தாற்றலை வைத்துத் தீர்மானிப்பதா? இதுவும் இலக்கிய வெளியில் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுள் ஒன்றுதான். ஷவளர்ந்து வரும் கவிஞர்| என்று பொதுவாக அடையாளப்படுத்தப்படும் ஒருவர் மிக நீண்ட காலமாக கவிதை எழுதி வரும், வயதில் முதிர்ந்த ஒரு கவிஞரைவிட கனதியான கவிதைகளையும் எழுதக்கூடும். அப்படி எழுதுபவர்கள் பலர் உள்ளனர். வளர்ந்து வரும் கவிஞர்கள் என்பதைவிட, அண்மைக் காலத்தில் இலக்கிய வெளிக்குள் நுழைந்து தீவிரமாக இயங்கி வருவோர் என இமாம் அத்னான், தணிஸ்கரன், முர்ஷித், நப்லா, சாஜித் அஹமட், ஜெம்சித் சமான், சுந்தர் நிதர்சன், நஸீஹா முகைதீன், அன்வர் புஹாரி எனச் சிலரை அடையாளப்படுத்த முடியும். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் இன்னும் பலர் உள்ளனர்.


இறுதியாக நீங்கள் வாசகர்களுக்குச் சொல்ல விரும்புவது?

ஒரு படைப்பு என்பது வாசகருடைய இடைவினையுடன்தான் இயங்குகிறது. அர்த்தம் பெறுகிறது. எனவே, தயவு செய்து இலக்கிய எழுத்துக்களையும் நேரமொதுக்கி வாசியுங்கள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Tuesday, November 10, 2020

25. வைத்திய கலாநிதி எம்.எம். நௌஷாத் அவர்களுடனான நேர்காணல்

வைத்திய கலாநிதி எம்.எம். நௌஷாத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

எம்.எம். நௌஷாத் என்ற பெயரில் சிறுகதைகளை எழுதி வருகின்றேன். மருத்துவராகப் பணிபுரியும் நான் தற்போது கல்முனைப் பிராந்திய மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் பொறுப்பாளராக இருக்கிறேன். மனைவி தைஹிபா ஆவார். என் முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர் அவர். எனக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். இருவர் பல்கலைக்கழகத்திலும் இருவர் உயர் தரமும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 


உங்களது குடும்பப் பின்னணி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆரம்பக் கல்வியை ஊவா மாகாணத்திலுள்ள அளுப்பொத்தை முஸ்லிம் வித்தியாலயம், பசறை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தொடர்ந்தேன்.  நான் மருத்துவராக வர வேண்டும் என்ற இலட்சியத்தில் இருந்த என் தந்தையார் உயர் கல்வியை தொடர வேண்டுமென்ற நோக்கத்திற்காக எனது  பிறந்தகமான சம்மாந்துறைக்கு என்னை அனுப்பி வைத்தார். 1974 இல் இது நிகழ்ந்தது. இது என் வாழ்க்கையில் பாரிய திருப்பு முனையாக அமைந்தது. கல்வியில் இப்போதைய நிலையை அடைவதற்கும் இலக்கிய முனைப்பு ஏற்படுவதற்கும் இந்தப் புள்ளி முக்கியமானது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் என்னைச் செம்மைப்படுத்தியது. முக்கியமாக தமிழாசிரியராக இருந்த எனது தந்தை மர்ஹூம் யூ.எம் முஸ்தபா அவர்கள், மறைந்த வீ ஆனந்தன் அவர்கள், மேலும் மன்சூர் ஏ. காதர் அவர்களும் என்னுடைய சிற்றப்பா யூ செய்ன் அவர்களும் வழிகாட்டிகளாக இருந்தார்கள். இப்போதும் எனக்கு மனோபலத்தை தந்து கொண்டிருப்பவர் என் தாயே. அவர் ஆசிரியையாக இருந்தவர். ஜெமீலா டீச்சர் என்றால் யாருக்கும் தெரியும். 


1981 இல் நான் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். அதன் பின்னான 2005 ஆம் ஆண்டு வரையான சுமார் 25 வருடங்கள் என் இலக்கிய வாழ்க்கையில் தேக்கமுற்ற காலமாகக் கழிந்தன. மருத்துவக் கல்லூரியில் கற்ற காலமும் தொழில் நெருக்கடிகள் நிலவிய காலமுமே அது. 


உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எத்தனை ஆண்டுகளாக சிறுகதைகளை எழுதி வருகின்றீர்கள்?

ஆறாம் வகுப்பிலிருந்தே சின்னச் சின்ன ஆக்கங்களைப் படைத்து வந்திருக்கிறேன். 1978 அல்லது 1979 இல் நான் எழுதிய முதற் சிறுகதையான வெளிச்சத்திற்கு வருவோம் நீர்ப்பாசனத் திணைக்கள தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றது. இதன் பின்வந்த ஓரிரண்டு ஆண்டுகளில் மிகவும் வேகமாக சிறுகதைகளை எழுதினேன். கிட்டத்தட்ட எல்லா வார இதழ்களிலும் சஞ்சிகைகளிலும் என் கதைகள் வந்தன. மல்லிகை, சிரித்திரன், சுடர், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, வியூகம், தீபம் ஆகிய அவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு இவ்வேளை நான் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் எவ்வித முன் அறிமுகமுமின்றி அவர்கள் என் கதைகளைப் பிரசுரித்தனர். எனினும் அக்கதைகள் எனக்கு பூரண திருப்தியைத் தரவில்லை. அக்கதைகளை என்னுடைய சிறுகதைத் தொகுதிகளில் சேர்க்காததன் காரணமும் அதுவே. 


உங்கள் சிறுகதைக்கான கதைக் கருக்களை எப்படிப் பெற்றுக்கொள்கிறீர்கள்?

சுற்றி வாழும் மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும், அவர்களின் அனுபவங்களிலிருந்தும், என்னுடைய அனுபவங்களிலிருந்தும். என்றாலும் அவைகளை என் கதைகளில் நேரடியாக நான் விவரிப்பதில்லை என்பதால் பலர் என் கதைகளை வெறும் கட்டுக் கதை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் பூடகமாக நான் சொல்வதைப் புரிந்துகொள்ள நிச்சயம் ஆழ்ந்த வாசிப்பு அவசியம். 


"வெளிச்சத்திற்கு வருவோம்" என்ற உங்களது முதலாவது சிறுகதைக்கு பரிசு கிடைத்தது பற்றி என்ன சொல்வீர்கள்?

அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. ஏனெனில் நான் அகில இலங்கை ரீதியில் முதல் பரிசு பெற்ற அதேசமயம் ஆறுதல் பரிசுகள் பெற்ற மற்றைய எழுத்தாளர்கள் அவ்வேளை பிரபல்யமானவர்களாக இருந்தார்கள். அக்கதை சுடர் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகிற்று. 


இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய சிறுகதைத் தொகுதியான சொர்க்கபுரிச் சங்கதி 2016 ஆம் ஆண்டிலும் பூச்செண்டு போல் ஒரு மனிதன் 2020 இவ்வருடமும் வெளிவந்தன. எனது பத்து சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் இஸிவர அஸப்புவ (ரிஷியின் ஆச்சிரமம்) என்ற தலைப்பில் கொடகே பிரசுமாக 2017 இல் வெளிவந்தது. சி.ஜி.எஸ். ஆனந்த அவர்களும் லரீனா அப்துல் ஹக் அவர்களும் கதைகளை மொழிபெயர்த்தார்கள். 


2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசினால் வழங்கப்படுகின்ற சாகித்திய விருது, ஷஷசொர்க்கபுரிச் சங்கதி' என்ற உங்களது முதலாவது சிறுகதை நூலுக்கே கிடைத்துள்ளது. இதுபற்றிக் குறிப்பிடுங்கள்?  

முன்னர் எழுதிய மரபு வழியான எழுத்துப் பாணி எனக்கு பிடிக்காததால் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் வித்தியாசமான பாணியில் சிறுகதைகளை எழுத முயற்சித்தேன். விருது பெற்ற அந்தத் தொகுதியும் முற்றிலும் அவ்வாறான கதைகளையே கொண்டிருந்தன. மொத்தம் முப்பத்தி மூன்று கதைகள். மேலும் ஓவியர் ருத்ரா அந்நூலுக்கு சிறப்பான முறையில் ஓவியங்களை வரைந்தார். எனவே எனது புதிய எழுத்திற்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாகவே இதனைக் கருதுகிறேன். 


2020 இல் வெளிவந்த 'பூச்செண்டுபோல் ஒரு மனிதன்' என்ற உங்களது இரண்டாவது சிறுகதை நூலின் கருப்பொருட்கள் பற்றிக் கூற முடியுமா? நூலின் தலைப்பாக இதனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

அனேகமான கதைகள் மனிதர்களின் ஆழ்மனதைச் சித்தரிக்கின்றன. எனவே வாசகர்களும் தீவிர சிந்தனையுடனான வாசிப்பு மூலமே இக்கதைகளைப் புரிந்து கொள்ள முடியும். எப்போதும் பூக்களின் மீது ஆழ்ந்த பிரேமை எனக்குண்டு. எனவே வியப்படைவதற்கு இத்தலைப்பில் ஒன்றுமில்லை. மேலும் இத்தலைப்பு கவர்ச்சியாக இருக்குமென்று நினைத்தேன். 


'வளர்ந்தோருக்கான தேவதைக் கதைகளை எழுத முடியுமா?' என்ற சிந்தனைதான் உங்களை எழுத வைத்தது என்று கூற முடியுமா? அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

இது என்னுடைய சிந்தனைப் போக்கு அல்ல. மாய யதார்த்த பாணிக் கதைகள் போன்ற சொற்களால் இதனை விவரிக்கிறார்கள். தீவிர சமாச்சாரங்களை பூடகமாகச் சொல்வதற்கு. நான் நினைக்கிறேன் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மிகவும் அதிகமாக இக்கோட்பாடு  வழியே எழுதி இருக்கிறார்கள். ஏனைய அடக்குமுறை நிலவிய நாடுகளிலும் இப்பாணியைப் பின்பற்றி எழுதினார்கள். சர்வதேச ரீதியிலும் ஏன் தமிழிலும் கூட நிறைய எழுத்தாளர்கள் இந்தப் பாணியைப் பின்பற்றி எழுதுகிறார்கள். அதற்கு நான் பயன்படுத்திய எளிய பதம் தான் அது. வாசிப்பை வாசகமயப் படுத்துவதற்காக நானும் ஒரு முயற்சி செய்து பார்த்தேன். அவ்வளவே. அது சரியான பதமா என்று கேட்டால் எனக்குத் தெரியாது என்பதே விடையாகும். 


சிறுகதைகளின் வரையறைகள் பற்றிச் சொல்லுங்கள்? ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும்;?

சிறுகதைகளின் வரையறைகளை இப்போது நான் பேசுவது அறிவீனமானது. தட்டையான பாணியில் எழுதுவதும் பாடப் புத்தக சட்டகங்களைப் பின்பற்றி எழுதுவதும் வழக்கொழிந்து வருகிறது. இப்போது எவ்வாறெல்லாம் எழுத முடியுமோ அத்தனை முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கிறார்கள். மேலும் பின்நவீன எழுத்தின் கூறாக கட்டுடைத்தல் என்ற சொல் பிரபலமாகி வருகிறது. இது புதிய விஷயம் அல்ல. கட்டுடைத்தல் என்பது கதையை அசிங்கமாக்குவது அல்லது அலங்கோலப்படுத்துவது அல்லது ஒருவருக்கும் புரியாமல் எழுதுவது அல்ல. என்னுடைய புரிதல் என்னவென்றால் ஒழுங்கின்மையில் ஓரொழுங்கைத் தேடுவது. எந்தப் பாணியில் எழுதினாலும் கதையை ஒரு புள்ளியில் கட்டுக்குள் அல்லது மையத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அப்போதுதான் நல்ல கதையாக அது இருக்கும்.

ஏர்னஸ்ட் ஹெமிங்வே சிறுகதை எழுதுவது தொடர்பில் கூறியிருப்பது மிகவும் பொருத்தம் என்று நம்புகிறேன். எழுதுவது என்பது எப்போதும் பெரும் சட்டத்திட்டங்களை உள்ளடக்கி இருப்பதாய் நான் காணவில்லை. சிலபோது அது இலகுவாய் நேர்த்தியாய் வந்தமைந்து விடுகிறது. இன்னும் சில நேரங்களிலோ அது மலையைக் குடைந்து வெடித்துச் சிதற வைக்கும் பெரும் கைங்கரியமாயும் காரியச் சுமையாயும் ஆகிவிடுகிறது..


தற்கால சிறுகதைப் போக்குகள் பற்றிய உங்களது அவதானிப்புக்களைக் கூறுங்கள்?

தற்காலம் என்பது இறந்த காலத்தின் நீட்சி என்று நம்புபவன் நான். எனவே கடந்த கால புனைவுகளைக் கட்டாயம் வாசித்து கால மாற்றத்தால் கதை சொல்லுதலில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ளல் வேண்டும். உள்நாட்டிலும் தமிழ் மொழியிலும் சிறந்த கதைகள் நிறையவே உள்ளன. முதலில் அவற்றை வாசித்து அக்காலப் போக்கை அறிந்த பின்னரே தற்காலப் போக்குகளை ஆராய முடியும். 

இப்பொழுது நுண்கதைகள் (ளூழசவ குiஉவழைn), நுண் சித்தரிப்பு (ஆiஉசழ யேசசயவழைn), குடயளா குiஉவழைn போன்ற மிகவும் குறுகிய வடிவக் கதைகளில் கவனம் சென்றுள்ளது. ஆனால் நிறைய எழுத்தாளர்கள் அதனை பத்திரிகைகளில் நாளாந்தம் பிரசுரமாகும் குட்டிக் கதைகள் என்றோ சிறுகதைகளைச் சுருக்கி எழுதுவது என்றோ தவறாகப் புரிந்துள்ளனர். அடர்த்தியான எழுத்தாற்றல், நுட்பமான கற்பனை என்பன இருப்பின் இதற்குள் நுழையலாம். என்றாலும் நீண்ட கதைகள் என்று நீங்கள் நம்பும் சிறுகதைகளுக்கு இன்னும் மௌசு இருக்கிறதென்று நம்புகிறேன். மேலும் சிறுகதைகளின் உருவம், உள்ளடக்கம், மொழி, கதை சொல்லும் பாணி என்பவற்றில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் நிறைய அவ்வாறான கதைசொல்லிகள் உருவாகியிருக்கிறார்கள். எனவே இக்கால கட்டத்தில் எழுத்தாளனுக்கு கற்பனை மட்டும் போதாது. அதியுச்ச கற்பனையும் அறிவியல் அறிவும் பரந்து விரிந்த வாசிப்பும் தேவை. 


நீங்கள் எழுதிய சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கதை அல்லது கதைகள் எது? ஏன்?

பூச்செண்டு போல் ஒரு மனிதன் தொகுதியில் உள்ள முதலாவது கதையைத் தவிர மற்ற ஏழு கதைகளும் எனக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பட்டாம்பூச்சி என்ற நிஜமும் மரத்துடன் பேசுதல் என்ற புனைவும், திடுக்குறச் செய்யும் இரட்டைத் தலைச் சர்ப்பம் ஆகிய கதைகள் மிகவும் பிடிக்கும். காரணம் இக்கதைகளுக்காக நான் கடினமான உழைப்பைச் செலுத்தியிருக்கிறேன். 


உங்களுக்கும் வாசகர்களுக்குமான தொடர்பு எவ்வாறுள்ளது? வாசகர்கள் உங்களது எவ்வகையான கதைகளை விரும்பி வாசிக்கின்றனர்?

என்னுடைய வாசகர்களை இரண்டு வகையறாவுக்குள் உள்ளடக்கலாம். அதில் அடங்கியுள்ள சுவாரஷ்யமான கதைக்காக வாசிப்போர் ஒரு ரகம். இவ்வகைக்குள் நிறைய மாணவர்களும், தீவிர வாசகர்களின் மனைவிமார்களும் அடங்குகிறார்கள். மற்றவர்கள் தீவிர வாசகர்கள். இவர்கள் விமர்சனப் பார்வையோடும், கதையின் பின்புலம், கருப்பொருள், ஆரம்பம், முடிவு, மொழிநடை, கதையின் பாணி போன்றவற்றை நுணுகி ஆராய்ந்தும் வாசிப்பவர்கள். என்னிடம் கேள்வி எழுப்புகின்ற அதீத ஆர்வம் உள்ள வாசகர்களும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும் நுனிப்புல் மேய்கின்ற அல்லது முன்னுரை அணிந்துரை மட்டுமே வாசிக்கின்ற சோம்பேறி வாசகர்களை நான் விரும்புவதில்லை. 


உங்கள் சிறுகதைகளுக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

நிறைய வரவேற்பு இருந்தாலும் அந்நிய மொழிநடை தொடர்பாகவும் பரிச்சயமற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் தொடர்பாகவும் பலர் என்னிடம் விவாதித்திருக்கிறார்கள். அது என்னுடைய பலவீனமாகக் கூட இருக்கலாம். 


எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறீர்கள்? ஏன்?

அனேகமாக தேர்வு செய்த நூல்களையும் என்னுடைய எழுத்தாள நண்பர்கள், முகநூல் நண்பர்கள் சிபாரிசு செய்யும் புத்தகங்களையும் வாசிக்கிறேன். இப்போது ஷோபா சக்தியின் இச்சாவை வாசிக்கிறேன் மற்றும் தந்தை கோரியோ, ஹாருகி முரகாமியின் கினோ தஸ்தாவஸ்கியின் அசடன் என்பவைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். கூடுதலாக மொழிபெயர்ப்பு நூல்களின் மீதுதான் எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. வட்டத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை மொழிபெயர்ப்புகள் எமக்குக் காட்டுகின்றன. 


உங்களுடைய எழுத்தாள நண்பர்களாக யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?

எழுத்துகளுக்காகத் தங்களை அர்ப்பணித்து எழுதும் அனைத்து எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நான் நண்பர்களாகவே மதிக்கிறேன். இவ்விடத்தில் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும் விதத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களோடு பயணிக்கும் சிலர் இருக்கிறார்கள். பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், மன்சூர் ஏ. காதர், உமா வரதராஜன், ரியாஸ் குரானா, அனார் இஸ்ஸத் ரெஹானா போன்றவர்கள். 


ஒரு வைத்தியராக இருக்கும் நீங்கள், சிறுகதைகளை எந்தெந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

பிரத்தியேக வைத்திய சிகிச்சை நிலையத்திலும், பிரயாணங்கள் செய்யும் வேளையிலும், இரவுகளிலும் சிறுகதைகளை எழுதுகின்றேன்.


தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

தற்போது கொரோனாவினைத் தொடர்புபடுத்தி 'அன்பியல், துன்பியல், கொரோனா' என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதுகிறேன். 


உங்களது இலக்கிய வாழ்வில் இதுவரை மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

சொர்க்கபுரிச் சங்கதி சிறுகதைகள் தொடர்பில் நிறைய வாசகர்களும் எழுத்தாளர்களும் என்னைப் பாராட்டினார்கள். என்னுடைய கதைகளை ரசிப்பவர்களாக நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். எனினும் மொழிபெயர்ப்புத் தொகுதி தொடர்பில் என்னுடன் எவ்வித அறிமுகமுமின்றி கமல் பெரேரா என்ற எழுத்தாளர் பிரபல சிங்கள வார இதழான தினமினவில் எழுதிய கட்டுரையை மறக்க முடியாது. பத்திரிகையின் அரைப் பக்கத்தில் வர்ணப் படத்தோடு அது வெளியாகியது. 


இதுவரை கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியான சொர்க்கபுரிச் சங்கதி நூலுக்கு 2017 இல் கிழக்கு மாகாண சபை விருது, அரச இலக்கிய விருது, கொடகே விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றேன். 


நிறைவாக இளைய தலைமுறைப் படைப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் என்ன சொல்லப் போகிறீர்கள்?

படைப்பாளிகளை இவ்வாறு வகைப்படுத்துவதை நான் வரவேற்பதில்லை. ஆழ்ந்த ஆய்வு இன்றியும் நூல்களை வாசிக்காமலும் நுனிப்புல் மேய்வது போல் எழுதுவதையும் மேலோட்டமாக வாசிப்பதையும் யாராக இருந்தாலும் நான் வெறுக்கிறேன். குறைந்த பட்சம் தமிழில் வெளிவந்த ஒரு சிறந்த சிறுகதைத் தொகுதியையோ கவிதைத் தொகுதியையோ வாசிக்காமல் நான் சிறப்பாக எழுதுகிறேன் என்று சொல்பவர்களின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதே. சிறந்த படைப்பாளிகள் எல்லா வயதிலும் சிறப்பாக எழுத முயற்சிப்பார்கள். சில எழுத்தாளர்கள் தமது முதல் படைப்பிலேயே உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். சிலருக்கு கால வளர்ச்சி தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு அடைமொழி தேவையில்லை. எழுத்தாளன், வாசகன் இருவருக்கும் உழைப்பு தேவைப்படுகிறது. வாசகர்களுக்கு அறிவுரை அவசியமில்லை. தேர்ந்த வாசகர்கள் எதை வாசிப்பது என்று அறிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கு நேரமில்லாதோர் பத்திரிகைச் செய்திகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்