மன்னூரான் ஷிஹார் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) கூறுங்கள்?
எனது தந்தை சேகு ஹுசைன் அவர்கள் ஓர் ஆசிரியராக மற்றும் அதிபராக கல்வித் துறையில் சேவையாற்றினார். அவர் இறுதியாக மன்னார் சிங்கள மொழி மூலப் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இப்போது அவர் இவ்வுலகில் இல்லை என்பதை எண்ணுகையில் எனது கண்கள் பனிக்கின்றன. எனது தாயார் ஜெய்னா உம்மா அவர்கள் ஒரு சிறந்த கலைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரும்கூட திறமைமிக்க ஓர் இலக்கியவாதி. அவரது மரபுக் கவிதைகள் தனித்துவமானவை; சந்தம் பொதிந்தவை. நாடகங்கள் எழுதுவதிலும் அவர் புலமை மிக்கவர். எனது உடன் பிறப்புக்களைப் பற்றிச் சொல்வதாயின், எனக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர்கள் மூவருமே ஆசிரிய சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். எனது பெற்றோருக்கு நான்தான் கடைசிப் பிள்ளை. செல்லமாய் வளர்ந்த கடைக்குட்டி என்று சொல்லலாம். 2006 ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த நான் தற்போது மூன்று ஆண் வாரிசுகளின் அன்புத் தந்தை என்ற பரிணாமத்தையும் பெற்றுவிட்டேன். எனது மனைவி பாத்திமா வஹீஸா அவர்களும்கூட ஓர் ஆங்கில ஆசிரியையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் எனது க.பொ.த. உயர் தரக் கல்வியை முடித்துவிட்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இரண்டில் சிறிது காலம் கடமையாற்றினேன். அதன் பின்னர் 2005 ம் ஆண்டில் போட்டிப் பரீட்சை மூலமாக ஆங்கில ஆசிரியர் நியமனத்தைப் பெற்று மன்னார் கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றிக்கொண்டிருந்தபோது கடந்த 2016 ம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு இலங்கை அதிபர் சேவையில் (SLPS) இணைந்து கொண்டேன்.
தற்போது மன்/எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றுகின்றேன். கல்விப் பணி என்பது ஒரு காத்திரமானதும் சவால் நிறைந்ததுமான பணியென்பதை உணர முடிகின்ற அதேவேளை அது ஓர் ஆத்ம திருப்தியைத் தரக்கூடிய பணியென்பதையும் அவ்வப்போது நிதர்சனமாகக் காண முடிகின்றபோது மகிழ்ச்சியடைகின்றேன்.
உங்கள் இலக்கியப் பிரவேசம் எந்தப் பின்னணியிலிருந்து ஆரம்பமானது?
மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவர்கள் ஒவ்வொருவருள்ளேயும் ஏதேனுமொரு ஆற்றல் மிகைத்திருக்கும். இறைவன் கொடுத்த அந்த ஆற்றல் சிலரிடமிருந்து ஏதோவொரு விதத்தில் வெளிப்பட்டுவிடுகின்ற அதேவேளை பலரது ஆற்றல் அவர்களுக்குள்ளேயே புதைந்து விடுவதுமுண்டு.
என்னைப் பொறுத்தவரையில் எனது குடும்பப் பின்னணியானது இறைவன் எனக்குள் விதைத்திருந்த இலக்கிய ஆற்றலையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமையப் பெற்றிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், தமிழ் இலக்கியங்கள் மீதான குறிப்பாக கவிதைகள் மீதான ஈர்ப்பு எனக்குள் ஏற்படக் காரணமாய் அமைந்தவை எனது தாயாரின் மரபுக் கவிதைகளேயாகும். அவர் எழுதிய சிறுகதைகள், நாடகங்கள் என்பவற்றை எனது சிறுவயதில் நான் ஆர்வத்துடன் வாசித்திருக்கின்றேன். என்றாலும்கூட அவரது கவிதைகளை நான் வாசிக்கின்றபோது எனக்குள் அவை மீதான ஏதோவோர் இனம்புரியாத பேரார்வத்தை உணர முடிந்தது. அந்தப் பின்னணியிலிருந்துதான் எனது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்திருக்கின்றது.
இலக்கிய உலகில் நுழைந்த காலம் மற்றும் சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் எனது தாயாரின் கவிதைகளை வாசித்தபோது ஏற்பட்ட அந்த உணர்வு என்னை எனது எட்டாவது வயதில் எழுதவும் வைத்தது. எட்டு வயதில் நான் எழுதிய அந்த இரண்டே வரிகள் அவ்வப்போது நினைவுக்கு வருகையில் எனக்குள்ளேயே நான் சிரித்துக்கொள்வதுண்டு. ஆனாலும் அவ்வரிகளினுள்ளே ஒளிந்திருக்கும் ஒரு பேரர்த்தத்தை நினைக்கையில் எனக்குள் வியப்பே மேலோங்கும்.
'கந்தனும் முருகனும் ஒன்றுதான்,
'கா'னாவும் 'மூ'னாவும் ரெண்டுதான்'
என்று எங்கள் வீட்டு சமையலறைக் கதவில் பள்ளிக்கூடத்திலிருந்து பொறுக்கி வந்த வெண்கட்டித் துண்டுகளால் நான் எழுதிய அந்த வரிகள் வெறும் எதுகை மோனைகளை வேண்டி எழுதப்பட்டவை போல எண்ணத் தோன்றினாலும்கூட அதற்குள்ளும் ஒர் அர்த்தம் ஒளிந்திருப்பதை பின்னரான நாட்களில் உணர முடிந்தபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதாவது, 'இறைவன் என்பவன் ஒருவன்தான்; மனிதர்கள்தான் அவனை தமக்கேற்றாற்போல் வேறுபடுத்தி நோக்குகிறார்கள்' என்பதே அந்த அர்த்தம். அப்போது ஆரம்பித்ததுதான், இப்போது வரையில் எழுதத் தோன்றுகின்றவற்றை எல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் எது?
முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் என்கின்றபோது எனது எட்டு வயதில் நான் எழுதிய அந்த இரு வரிகளைத்தான் சொல்லலாம். என்றாலும்கூட நீண்ட காலமாக சிறுசிறு கவிதைகளையே ஆங்காங்கே எழுதி வைத்திருந்தேன். முழுமையாக நான் எழுதிய முதற்கவிதை என்ற வகையில் மதீனா தேசிய பாடசாலையில் தரம் ஒன்பதில் நான் கற்கின்றபோது பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டியில் சீதை பற்றிய ஒரு கவிதையினை எழுதி முதற்பரிசு பெற்றேன். அந்தக் கவிதையின் தலைப்பு உண்மையில் இப்போது ஞாபகத்திலில்லை. அதன் பின்னர்தான் கவிதைகள் எழுதுவதற்கான ஓர் உத்வேகம் எனக்குள் ஏற்பட்டது.
நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றியும் குறிப்பிடலாமே?
நான் வெளியிட்ட நூல்கள் என்று பட்டியலிட்டுச் சொல்கின்ற அளவிற்குப் பெரிதாக இல்லை. இதுவரையில் ஒரேயொரு நூல்தான் என்னால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 'ஒரு யுகத்தின் சோகம்' என்னும் அந்த நூல் ஒரு கவிதைத் தொகுதியாகும். 2011ம் ஆண்டு மன்னார் எழுத்தாளர் பேரவையினால் வெளியிட்டு வைக்கப்பட்ட அந்தக் கவிதைத் தொகுதியானது நாற்பத்தைந்து கவிதைகளை உள்ளடக்கியது. அவற்றுள் அநேகமானவை மரபுக் கவிதைகளாகவும் ஏனையவை புதுக்கவிதைகளாகவும் உள்ளன.
நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது?
உண்மையில் அந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாது. நீண்டகாலக் காத்திருப்பின் பின் கருத்தரிக்கின்ற ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் உணர்வை ஒத்த உணர்வு அது. நூலொன்றை வெளியிடுவதென்பது சாதாரணமானதும் மிக இலகுவானதுமான காரியமென்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. நூலொன்றை அதுவும் காத்திரமான நூலொன்றை வெளிக்கொணர்வதென்பது அத்துணை இலகுவான காரியமல்ல என்பதை அவர்கள் களத்தில் இறங்கிப் பார்த்தால்தான் அறிந்துகொள்வர்.
நான் எனது நூலை வெளியிட்ட அதே வருடத்தில் அல்லது அதற்கு முன்னைய வருடத்தின் இறுதிப் பகுதியில் என்று நினைக்கிறேன், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாநாட்டில் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் இலக்கிய ஆளுமைகளுடனான சந்திப்பும் எனக்குள் ஏற்படுத்திய உத்வேகம் என்னை எனது முதல் நூலாகிய 'ஒரு யுகத்தின் சோகம்' என்ற நூலை விரைவாக வெளியீடு செய்வதற்குத் தூண்டியது என்பதே உண்மை. ஏற்கனவே கணினி மயப்படுத்தப்பட்டு, பக்க வடிவமைப்பும் மேற்கொள்ளப்பட்டு தயாராக இருந்த அந்த நூலை ஒரு சில மேம்படுத்தலுடன் பிரசுரித்து எனது கன்னி நூலாக வெளியிட முடிந்தது. முதல் நூல் என்ற அந்தக் கனவு இறைவன் அருளால் நனவானபோது ஏற்பட்ட பேரானந்தத்தைக் கேட்கவா வேண்டும்! நீங்களும் ஓர் எழுத்தாளர் என்பதால் அந்த உணர்வை நீங்களும் ஒரு காலத்தில் நிச்சயமாக அனுபவித்திருப்பீர்கள்.
"ஒரு யுகத்தின் சோகம்" நூலில் அடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றி சொல்லுங்கள்?
'ஒரு யுகத்தின் சோகம்' என்னும் எனது கவிதைத் தொகுதியானது அதனுள்ளே பத்தாவதாக அமைந்திருக்கும் கவிதையின் தலைப்பினையே பெயராகக் கொண்டது. இலங்கைத் தீவின் வடக்கில் பிறந்தவன் என்பதால் முப்பதாண்டு கால யுத்தத்தின் வடுக்கள் எனக்குள்ளும் உண்டு. அந்தவகையில் யுத்தம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் இக்கவிதைத் தொகுதியின் சில கவிதைகளில் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களாகப் பிரதிபலித்திருப்பதை அவதானிக்கலாம்.
'என்று தணியுமிந்த...?', 'மனித நேயமது எங்கே?', 'ஒரு யுகத்தின் சோகம்', '2000 இடம் ஓர் இறைஞ்சல்', 'பட்டமரத் துளிர்ப்புகள்', 'பெப்ரவரி 04, 2008' போன்ற தலைப்பிலான கவிதைகள் யுத்தத்தின் மீதான கசப்புணர்வை வெறுப்போடும் ஏளனத்தோடும் வெளிப்படுத்தும் கவிதைகளாக அமையப் பெற்றிருக்கின்றன. அவைதவிர அவ்வப்போது நாட்டிலும் சர்வதேசத்திலும் நிகழ்ந்து எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திப்போன சில சம்பவங்களையும் சரித்திரங்களையும்கூட சில கவிதைகளின் கருவாக்கியிருக்கின்றேன். அத்தோடு காதல், தாய்மை, பொதுவுடைமை, சுதந்திர வேட்கை முதலான கருப்பொருட்களையும் கையாண்டுள்ளேன். மொத்தத்தில் எனதந்தக் கவிதைத் தொகுதியானது பல கருப்பொருட்களின் சேர்க்கையாக வெளிவந்தது.
உங்களது கவிதைகள் குறியீட்டுக் கவிதைகளாக உள்ளதாக உணர்கிறீர்களா? நீங்கள் எழுதிய கவிதைகளில் நீங்கள் அதிகம் நேசிக்கும் கவிதை எது?
எனது எல்லாக் கவிதைகளுமே அவ்வாறானவை என்று சொல்லிவிட முடியாது. என்றபோதிலும்கூட குறியீட்டுக் கவிதைகளையும் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றேன். சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்கின்றபோதுதான் அது உரியவர்களைச் சென்றடையும். அப்படி ஒரு நிலை தோன்றுகின்றபோது அங்கு குறியீடுகளை விடுத்துக் கவிதை புனையவேண்டி ஏற்படுகின்றது.
குறித்தவொரு விடயத்தைக் குறியீட்டுக் கவிதைகளால் உணர்த்துவதுதான் சாலப் பொருத்தமானது என்ற நிலைதோன்றுகிறபோது அவ்வாறு செய்வதே சரியான தீர்மானமாக இருக்கும். ஏனெனில், வழியேற்படுத்த கவிதை புனையவேண்டிய தேவை கவிஞனொருவனுக்கு இருக்கின்ற அதேவேளை சிலருக்கு வலியேற்படுத்தவும் கவிதை புனையவேண்டிய அவசியம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
எதிரியின் கன்னத்தில் ஓங்கி அறைவதற்கு குறியீட்டுக் கவிதைகளே மிகப் பொருத்தமானவை என்பது எனது அபிப்பிராயம். நான் எழுதிய கவிதைகளுள் நான் நேசிக்கின்ற கவிதை எதுவென்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். பதில் சொல்வதற்குக் கொஞ்சம் சிரமமான கேள்விதான். எனது கவிதைகளில் அநேகமானவை என் நேசத்திற்குரியவை. அதிலும் குறிப்பாக 'மெய்ப்பட வேண்டும்' என்ற எனது கவிதையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
"மன்னூரான்" என்ற புனைப் பெயரில் எவ்வாறு வாசகர்கள் மத்தியில் சரளமாக அறிமுகமாகினீர்கள்?
'மன்னூரான்' என்ற பெயர் உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அப்பெயரில் நீங்கள் எழுதுங்களேன் என்றும் எனக்கு ஆலோசனை வழங்கியவர் யாரென்றால், இலக்கிய உலகில் மன்னார் மண்ணுக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்த இலக்கியவாதிகளுள் ஒருவரான பிரபல நாவலாசிரியர் எஸ்.ஏ. உதயன் அவர்கள்தான். நான் மன்னார் மண்ணைச் சேர்ந்தவன் என்பதால் 'மன் 10 ஊரான்' என்ற கருத்தில் அப்பெயரை அவர் பரிந்துரைத்தார். நானும் அவர் சொல்லுக்கு மதிப்பளித்து அப்பெயரை எனது புனைபெயராக ஏற்றுக்கொண்டேன். அப்பெயராலேயே நானும் இலக்கிய உலகில் அறிமுகமாகிவிட்டேன்.
ஓரு யுகத்தின் சோகத்துக்குப் பிறகு ஏன் அதிக காலமாக நூல்களை வெளியிடவில்லை?
அந்த நூலின் பின்னர் நீண்ட இடைவெளியொன்று ஏற்பட்டிருப்பதை ஒத்துக்கொள்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் 'ஒரு யுகத்தின் சோகம்' என்ற நூலை வெளியிட்டதன் பிறகுதான் நான் அதிகமாக எழுதும் பழக்கத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றேன்.
இந்த இடைவெளியை நான் எனது எழுத்துக்களை புடம்போடுவதற்கான அவகாசமாக எடுத்துக் கொண்டேன். 2011ம் ஆண்டின் பிற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரையில் பல சஞ்சிகைகளிலும் தினசரிகளிலும் எழுதி வருகின்றேன். பல வானொலி மற்றும் தொலைக்காட்சிக் கவியரங்குகளிலும் மேடைக் கவியரங்குகளிலும் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அவ்வாறு பார்க்கின்றபோது எனது நூல் வெளியீடுகளில்தான் தாமதம் ஏற்பட்டுள்ளதேயன்றி எனது எழுத்துப் பணியானது இறைவனருளால் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தற்போது எனது மூன்று கவிதைத் தொகுதிகள் கணினிமயப்படுத்தப்பட்டு தயாராக உள்ளன. அவை அச்சுவாகனம் ஏறுவது மாத்திரமே மீதமிருக்கின்ற வேலை. 'மூன்றாம் ஒருவன்', 'நேயர் விருப்பம்', 'உயிரின் இடைவெளி' ஆகிய அம்மூன்று கவிதைத் தொகுதிகளையும் விரைவில் வெளிக்கொணர வேண்டும் என்பதே எனது அவா. இறைவன்தான் அதற்குத் துணைபுரிய வேண்டும்.
தற்போதைய ஈழத்துக் கவிதைச் செல்நெறி பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?
பொதுவாக தற்காலக் கவிஞர்கள் மீதான ஒரு மட்டரகமான பார்வை பலரிடத்திலே இருப்பதை அவர்களது விமர்சனங்கள் வாயிலாகக் கண்டுகொள்ள முடிகின்றது. அதிலும் குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைகளையும் தென்னிந்தியத் தமிழ்க் கவிதைகளையும் இருவேறு கோணங்களில் பார்க்கின்ற ஒரு மரபு பலரிடையே இருந்து வருகின்றது. அது தவறான கற்பிதம் என்பதை நான் அடித்துச் சொல்வதோடு அதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஈழத்துக் கவிதைகளுக்கென்று ஒரு தனித்துவம் இருப்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது. அவற்றினுள்ளே இருக்கும் வலி நிஜமான வலி.. அவற்றினுள்ளே இருக்கும் அங்கலாய்ப்பு நிஜமான அங்கலாய்ப்பு.. அவற்றினுள்ளே இருக்கும் குதூகலமும்கூட நிஜமான குதூகலம்.. என்பதை அவற்றை வாசிக்கையில் உணர முடிகின்றது. அக்கவிதைகளில் போலிகளை மிக அரிதாகவே காண முடிகின்றது.
வாக்கியங்களை துண்டுகளாக உடைத்துப் போட்டுவிட்டு அல்லது எதுகை மோனை வந்துவிட்டால் எல்லாமே கவிதைதான் என்ற தோரணையில் அவற்றைக் கவிதைகள் என்றும், தம்மைத் தாமே கவிஞர்கள் என்றும் சொல்லிக்கொள்ளும் போலிகளையும்கூட நகைப்புடன் கடந்து செல்ல வேண்டிய நிலையும் இங்கு இல்லாமலில்லை. என்றாலும்கூட தரமான கவிஞர்களையும் அவர் தம் தரமான கவிதைகளையும் வாசிக்கின்ற போது அடடா இத்துணை கவித்துவம் இவர்களுக்குள் இருந்திருக்கின்றதே என்று வியந்ததுண்டு.
என்னைப் பொறுத்தவரையில், ஈழத்துக் கவிதைகளின் செல்நெறி ஓரளவு ஆரோக்கிய நிலையில் உள்ளது என்றே மதிப்பிடத் தோன்றுகிறது. இது எனது வாசிப்பினதும் அனுபவத்தினதும் வழிவந்த அபிப்பிராயமே. இம்மதிப்பீடு ஒவ்வொருவர் பார்வையைப் பொறுத்தும் வேறுபடலாம்.
கவிதை, சிறுகதை, விமர்சனம், நாவல், ஆய்வு, சிறுவர் இலக்கியம், கட்டுரைகள் ஆகிய பல்வேறு வகையான இலக்கியத் துறைகளில் உங்களது பங்களிப்புக்கள் எவற்றில் உள்ளது?
கவிதைகளைப் பொறுத்தவரையில் தமிழ்க் கவிதைகளுக்கு மேலதிகமாக ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். கவிதைகளுக்கு அப்பால் சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளேன். அவை சில சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. சில கவிதை நூல்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் விமர்சனம் செய்துள்ளேன். அவை இலங்கையின் பிரபல நாளிதழ்களிலே வெளிவந்துள்ளன. இலக்கியம் சார்ந்த சில கட்டுரைகளை இலக்கிய சஞ்சிகைகளிலே எழுதி வருகின்றேன். சிறுவர்களுக்கான பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளேன். அவைதவிர பாடலாக்கத்திலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பல பாடல்கள் எழுதியுள்ளேன். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் இயக்கத்தில் உருவான 'ஓணான்' என்ற திரைப்படத்திற்கும்கூட நான்தான் பாடல்களை எழுதியிருந்தேன்.
இன்றைய சமூகம் படைப்பாளிகளுக்கு சரியான அங்கீகாரத்தை வழங்குகிறது என்று நினைக்கிறீர்களா?
படைப்பாளிகளுக்கான அங்கீகாரத்தைப் பற்றிப் பேசினால் கவலைதான் மிஞ்சும். கலை இலக்கியப் படைப்புக்கள்தான் சமூகத்தினதும் காலத்தினதும் கண்ணாடி என்பதைப் புரிந்துகொள்ள ஏனோ இந்த சமூகம் மறுக்கிறது. ஒரு கலைஞன் அல்லது இலக்கியவாதி தான் சார்ந்த சமூகத்தின் அவலங்களை, பிரச்சினைகளை, பெருமைகளை ஏனையோருக்குப் புரியவைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுக்கின்றான். அவனுக்கான அங்கீகாரம் அவன் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதே சமூகத்தாலேயே புறக்கணிக்கப்படும்போது அவனது பரிதாப நிலையை என்னவென்பது? இன்றைய படைப்பாளிகளின் நிலை இவ்வாறுதான் இருக்கின்றது.
வேறு வேறு களியாட்டங்களுக்கும் இன்னோரன்ன தேவையற்ற விடயங்களுக்கும் கொடுக்கப்படுகின்ற நேரமும் முக்கியத்துவமும் இலக்கிய உருவாக்கத்திற்கோ அல்லது இலக்கிய நிகழ்வுகளுக்கோ கொடுக்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை.
உங்களது சிறுகதைகளுக்கான கருப்பொருட்களை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றீர்கள்? சிறுகதைகளை எவற்றில் களப்படுத்தி வருகின்றீர்கள்?
சமூகத்தில் வேரூன்றிப் போயிருக்கின்ற பிரச்சினைகளைத்தான் எனது அநேகமான சிறுகதைகளில் கருப்பொருளாக்கியிருக்கின்றேன். உதாரணத்திற்குச் சொல்வதென்றால் போதைப் பொருள் பாவனையின் சீர்கேடு, பரீட்சை மையக் கல்வியின் விபரீதம், இன முரண்பாடுகளின் விளைவுகள் போன்ற எண்ணக் கருக்களை அவற்றின் மூலமாக வாசகர்களுக்கு நன்கு உணர்த்த முயன்றிருக்கின்றேன். எனது சிறுகதைகளை மாதாந்த இலக்கிய சஞ்சிகைகள் சிலவற்றில் களப்படுத்தி வருகின்றேன்.
ஒரு இலக்கியப் படைப்பாளியான நீங்கள் ஏனைய படைப்பாளிகளுக்கு கூற விரும்புவது என்ன?
ஓர் இலக்கியப் படைப்பாளி என்றவகையில் வளர்ந்துவரும் இலக்கியப் படைப்பாளிகளுக்கு கூற விரும்புவது என்னவெனில், உங்கள் எழுத்துக்கள் எப்போதும் உங்களுக்கான ஒரு தனித்துவத்தோடு தொடரட்டும். உங்கள் எழுத்துக்களைப் பற்றிய தீர்மானங்கள் உங்களுடையதாக இருக்கட்டும். யாரையேனும் திருப்திப்படுத்துவதற்காக எழுதுவதை விடுத்து உங்கள் ஆத்ம திருப்திக்காக எழுதுங்கள். விமர்சனங்கள் எதிர்மறையாக வருகின்றபோது அதையும் கொஞ்சம் பரிசீலித்தபடியே நகருங்கள், ஆனால் எக்காரணம் கொண்டும் உங்கள் எழுத்துப் பயணத்தை நிறுத்திவிடாதீர்கள். முத்தாய்ப்பாய் இன்னொரு அறிவுரை, தயவுசெய்து விருதுகளைத் துரத்தாதீர்கள். நீங்கள் நிதானமாய் எழுதிக்கொண்டேயிருங்கள், காலம் கனிகின்றபோது உங்கள் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் உங்களைத் தேடி வரும். அப்போது விருதுகளும் சேர்ந்தே உங்களை நாடி வரும்.
இன்றைய நவீன தொழில் நுட்ப இலத்திரனியல் ஊடகங்களின் ஆக்கிரமிப்பின் ஊடாகக் கூட நூற்றுக் கணக்கில் இலங்கையில் கவிதை, சிறுகதை, விமர்சனத் தொகுப்புக்கள் வெளிவருவது பற்றிய உங்களது கருத்து என்ன?
இலங்கையைப் பொறுத்தமட்டில் நாளேடுகளும் சஞ்சிகைகளும் எத்தனை பேரின் இலக்கியப் பசியைத்தான் தீர்த்துவிடப் போகின்றன என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது. இப்படியிருக்கும்போது இன்றைய நவீன தொழில்நுட்ப இலத்திரனியல் ஊடகங்களின் பங்களிப்பை மெச்சித்தான் ஆகவேண்டும். அதேவேளை 'தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன்' என்கின்ற நிலைக்கு இலக்கியத்தை அவை தள்ளிவிட்டனவோ என்கின்ற சந்தேகமும் எழுகின்றது. நல்ல இலக்கியங்களைக் கொண்டுவருகின்றபோது நவீன தொழில்நுட்ப இலத்திரனியல் ஊடகங்களானவை வரவேற்புக்குரியவையாகவும் மாற்றமாகக் கொண்டுவருகின்றபோது வருந்தத்தக்கவையாகவும் அமைகின்றன என்பதே உண்மை.
"தெருட்சி" என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் என்ற வகையில் அந்தச் சஞ்சிகையின் வெளியீடு பற்றிக் குறிப்பிடுங்கள்?
'தெருட்சி' சஞ்சிகையானது மன்னார் எருக்கலம்பிட்டி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக இரு தடவை வெளிவந்திருக்கின்றது. இது பல காத்திரமான இலக்கியப் படைப்புக்களை உள்ளடக்கிய ஒரு சஞ்சிகையாகும். 'தெருட்சி' என்பது தெளிவு, அறிவு போன்ற பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு பதம். இச்சஞ்சிகையின் வரவில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் அது தொடர்ந்தும் வெளிவருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இறைவனருளால் அம்முயற்சி கைக்கூடும் என நம்புகின்றோம்.
வாசிப்பு என்பது இன்றைய சமூகத்திடம் குறிப்பாக மாணவர்களிடம் மிகவும் அருகிவிட்ட ஒன்றாகக் காணப்படுகிறதே. பாடசாலையின் பிரதி அதிபராக இதுபற்றிய உங்கள் கருத்து யாது?
உண்மைதான். மாணவர்களிடையே வாசிப்பு என்பது ஓர் அருகி வருகின்ற பழக்கமாக இருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பாடசாலைகளில் அவ்வப்போது ஊட்டப்படுகின்றன. வாசிப்பு வாரம், வாசிப்பு மாதம், வாசிப்பு முகாம் என்றெல்லாம் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஆனாலும் இன்றைய மாணவர் சமுதாயத்திடம் அந்த வாசிப்புப் பழக்கத்தில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துவது என்பது இமாலயப் பிரயத்தனத்தோடு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையாகத்தான் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக பாடங்கள் சார்ந்த நூல்களுக்கு மேலதிகமாக வேறு இலக்கிய நூல்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருக்கின்றது. என்றாலும், காலத்திற்கு ஏற்றாற்போல் வாசிப்பை ஊக்குவிப்பதற்கான பல்வேறு புதிய உத்திகளை பாடசாலைகளில் நாம் கையாள்வதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் வேரூன்றச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?
எனது இலக்கியப் பயணத்தில் எனக்கு உறுதுணையாய் இருந்த சிலரை இந்தவேளையில் நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன். அந்தவகையில் எனது தாயார், எனது சகோதரர் மன்னார் எம். ஷிபான், எனது மாமா கலைமதி யாசீன், எனது இலக்கிய நண்பர்களான மன்னார் அமுதன், சாகித்திய விருதாளன் எஸ்.ஏ. உதயன் போன்றவர்களை மறந்துவிட முடியாது. ஏனெனில் அவர்கள் என்னை எழுதும்படி எப்போதுமே தூண்டிக்கொண்டிருப்பவர்கள்.
அதேபோன்று ஜீவநதி, பூங்காவனம், சுவைத்திரள், படிகள், வெள்ளாப்பு, வாகை முதலிய இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள்தான் எனது இலக்கியப் படைப்புக்களுக்கு களம் கொடுக்க முன்வந்தவர்கள். மேலும், எழுத்தாளர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், திரு. நடா மோகன் மற்றும் ஷைபா அப்துல் மலிக் (லண்டன் தமிழ் வானொலி), கனக கவி சக்திதாசன் (தமிழ் யாழ், முரசொலி), கவிஞர் மேமன்கவி, சந்தக் கவிமணி கிண்ணியா அமீரலி, கவிஞர் ஏ.எம். அஸ்கர் (வசந்தம் அலை வரிசை), பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், தமிழ்த்தென்றல் அலி அக்பர் போன்றவர்கள் இலங்கைத் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக என் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு வழிசமைத்தவர்கள். அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்து நிற்கின்றேன். என்னை நேர்காணல் செய்துகொண்டிருக்கும் உங்களுக்கு என் விசேடமான நன்றிகள். ஏனெனில், எனது கன்னிப் படைப்பாகிய 'ஒரு யுகத்தின் சோகம்' கவிதை நூல் பற்றிய விமர்சனத்தை முதன் முதலில் இலங்கையின் பிரபல நாளிதழ் ஒன்றிலே வழங்கியிருந்தது நீங்கள்தான். இறுதியாக, என்னுடனான இந்த நேர்காணலை மேற்கொண்ட தங்களுக்கு மீண்டும் எனது நன்றிகளைக் கூறி பிரசுரித்த பெருந்தகைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்






No comments:
Post a Comment