கவிஞர் ஏறாவூர் தாஹிர் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகம் குடும்பப் பின்னணி குறித்து?
நான் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றி தற்போது ஓய்வு நிலையில் உள்ளேன். எனது பெற்றோர் சாகுல் ஹமீத், மர்ஹும் ஹாஜியானி ஹதீஜத் உம்மா தம்பதியராவர். மர்ஹுமா ஹாஜறா எனது வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்து மறைந்தார். தற்போது என் மக்களின் அன்பான உபசரிப்பிலும் பராமரிப்பிலும் எனது வாழ்வியம் சக்கரமாக சுழன்று கொண்டிருக்கின்றது. (நீண்ட சுய வரலாறொன்றின் சுருக்கமே இவை)
உங்களது பாடசாலை வாழ்க்கை மற்றும் தொழில் அனுபவம் பற்றியும் கூறுங்கள்?
எனது கற்றல் செயற்பாடுகள் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் துவக்கம் பெற்று, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் முற்றுப் பெற்றது. பாடசாலை விலகளின் பின் சுகாதார திணைக்களத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய பின்னர் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைமை பணிமனையில் கணக்கு எழுதுனராகப் (Account Clark) பணியாற்றிய போதே ஆசிரிய நியமனம் கிடைத்தது.
குளியாப்பிட்டி, மடிகே மிதியால என்ற கிராமத்தில் கற்பித்தல் தொழிலேற்று, அதன்பின் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு வருடங்கள் பயிற்சியை முடித்து வெளியேறிய எனக்கு, பொலன்னறுவை தம்பாளை அல் ஹிலால் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக நியமனம் கிடைத்தது. இரண்டு வருடங்கள் அங்கு கடமையாற்றி, வெளிநாடு சென்று சவுதியில் றியாத் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பணிபுரிந்த பின், மீண்டும் தாயகம் திரும்பி ஆசிரியர் தொழிலில் இணைந்துகொண்டேன்.உங்கள் குடும்பத்தவர்களுக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?
மாணவப் பருவத்தில் பாடசாலை மாணவர் மன்றம், இலக்கிய மன்றங்களின் செயலாளராகவும், 'சந்தனம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கியுள்ளேன். இனி, என்னைப் பொறுத்தமட்டில் தரமான சுவையான இலக்கியப் படைப்புகளின் தாஸன் நான். எனது குடும்பப் பின்புலமும் அவ்வாறே. எனக்கு தமிழ் கற்பித்த ஆசான்களில் என்னால் மறக்க மறந்தோராகப் பண்டிதர் எஸ். குமாரசாமிசேர், 'அவைவேந்து' யூசுப் சேர் ஆகியோர் விளங்குகின்றனர். மேலும், எனது தந்தை மர்ஹும் சாஹுல் ஹமீத், தாயார் மர்ஹுமா ஹதீஜத் உம்மா ஆகிய இருவரும் இலக்கியத் துறையில் எனது வழிகாட்டிகளாக இருந்தனர்.
பொதுவாக எனது குடும்பமே ஒரு கலை பூங்காவனம் எனலாம். என் உடன் பிறப்புக்களான செய்னுலாப்த்தீன், அபூஹனிபா ஆகிய இருவரும் சிறந்த பாடகர்கள். இலக்கிய இரசனையும் விமர்சகருமாக சகோதரர் ரியாசுல் ஹஸன் விளங்குகிறார். இளைய சகோதரர் றிபாய்தீன் என்னைப் போல் கவிதை, கட்டுரை, பாடல் ஆக்கங்களிலும் அரபு எழுத்தணிக் கலையிலும் பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றார். தங்கை பரீனாவை ஒரு கலை இலக்கியவாதி என்றால் மிகையல்ல. அவ்வாறே என் மைத்துனர் அல்ஹாஜ் நஸீர் (ஜே.பி) அவர்களும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் கவிதை ஆற்றல் படைத்தவராகவும் திகழ்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக எனது தந்தையும் தாயும் ஆன்மிக செயற்பாடுகளிலும் வியத்தகு தம்பதியராக விளங்கினர்.உங்களுக்கு கவிதைகளில் ஈடுபாடு வந்தது எப்படி?
இளமையிலேயே வாசிப்பில் நேசம் கொண்டவனாக இருந்தேன். என் மாலைப் பொழுதுகளும் விடுமுறை தினங்களும் பெரும்பாலும் பொது நூலகத்திலேயே கழிந்தன. அதிலும் விசேடமாக இளமையிலேயே கவிதை நூல்களை அதிக விருப்பத்துடன் வாசித்தமையும் என் பெற்றோரின் பின்புலமுமே கவிதைகளின் மீதான ஈடுபாட்டுக்குக் காரணங்கள் எனலாம். அன்றைய இளமைப் பழக்கம் இன்றுவரை என்னைத் தொட்டு தொடர்கிறது.
கவிதைகளில் நகரத்துக் கவிதை, கிராமத்துக் கவிதை என்று வகை பிரித்துப் பார்க்கலாமா? உங்களது இரசனை எப்படியுள்ளது?
கவிதைகள் எனப்படுபவை மனித மன எழுச்சியின் வெளிப்பாடுகளேயாகும். கவிதைகள் நாமாக உருவாக்குவதில்லை. அவை தாமாகவே கவிஞனின் உள்ளத்தில் ஊற்றெடுத்து வெள்ளமெனப் பீறிட்டுப் பாய்வனவாகும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அவை, கருக்கட்டி வளர்ந்து பிரசவிக்கப்பட வேண்டும். ஆனால் கவிதையெனும் முலாம் பூசப்பட்ட வசனங்கள் துண்டாடப்பட்டும், நிரல், நிரைப்படுத்தப்பட்டும் மாயா ஜாலங்களை விஞ்சியவையாய் வெளிவந்த வண்ணமே இன்றைய தமிழிலக்கியம் அதிகதியில் விரைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
நீங்கள் கேட்டியிருந்த நகர்ப்புற, நாட்டுப்புறக் கவிதைகள் இடையேயான வேறுபாடுகளை என்னால் உணர முடியவில்லை. கவிதைகள் நாடு, நகர் கடந்தவை. இன, மத, இட இடைவெளிகள் தாண்டியவை என்பதே எனது கருத்து. இரண்டையும் பகுத்து நோக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இரண்டிலுமே சுவைத்து இரசிக்கத்தக்கவை நிறையவே உள்ளன. கருத்து செறிவானவை இருக்கின்றன.
உங்கள் கவிதைகளின் தனித்துவம் பற்றி என்ன சொல்வீர்கள்?
அதனைத் தீர்மானிப்பது நான் அல்ல. எனது கவிதைகளை நுகரும் வாசக நெஞ்சங்களே.
இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
இதுவரை இரண்டே இரண்டு கவிதைப் புத்தகங்களே வெளிவந்துள்ளன. ஷஷமறக்க மறந்த மனிதம்' கருக்கட்டி, முழுமை பெறுவதற்கு எனக்கு உற்சாகமும் உத்வேகமும் தந்தவர்களில் கவிஞர் கலாபூஷணம் மீராலெப்பை சேர் (அனலக்தர்), அலியார் சுபைர் (தேனீக்களை இலக்கிய வட்ட தலைவர்), ஜனாப் மூபாஸ்தீன் (உதவி கல்வி பணிப்பாளர்), எம்.ஏ.ஸீ.ஏ. லத்தீப் ஹாஜியார் (ஜே.பி) போன்றோர் என்றும் என்னால் மறக்க மறந்தோராக விளங்குகின்றனர். அத்துடன் எனது கடைசி வரிகள் எனும் கவிச்சரம், மருத்துவம் தோற்றுப் போய் துன்பியலில் துவண்டு கொண்டிருந்த எனது துணைவியை ஒரு புத்தகமாய் உருவகித்து ஷஷஅதன் வாசிப்பின் கடைசி வரிகளில் நான்' என்பதை சுட்டி நிற்பதே அப்பெயரிடலின் பிரதான நோக்கமாகும்."கடைசி வரிகள்" கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கவிதைகளின் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
என்னுடைய கடைசி வரிகள் என்ற கவிதை நூலானது 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 173 பக்கங்களை உள்ளடக்கியுள்ள இந்த நூலில் 86 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக இதில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்களை நோக்குமிடத்து ஆன்மீகக் கவிதைகள், அகம் சார்ந்த கவிதைகள் மற்றும் பல்வேறு வகையிலான கருப்பொருட்களில் அமைந்துள்ள கவிதைகள் என்று புத்தகம் முழுவதும் கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. விரிவாக இதுபற்றிச் சொல்வதைவிட வாசகர்கள் அதனை வாசித்து இன்புறுவதனையே நான் விரும்புகின்றேன்.
"மறக்க மறந்த மனிதம்" கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கவிதைகள் பற்றி விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன? இந்தத் தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
நூலின் உள்ளடக்கம் பற்றி விசேட குறிப்புகள் என்று சொல்வதென்றால் கால, நேர, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு அமைய என்னவளில் அவை பிக்காஸோ, டாவின்சி ஓவியங்கள் எனலாம். மேலும் நூலின் தலைப்பினை வாசகர்கள் சற்று நிதானித்து புரியத்தக்கதாய் அமைதல் வேண்டும் என்ற நோக்கில் தெரிவு செய்தேன்.
பெண் எழுத்தாளர்களின் கவிதைகளை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
கவிதைகளில் ஆண், பெண் என்ற வேறுபாடுகள் தேவையற்றவை. கருத்தாழமிக்க கவிதைகளைப் படைக்கும் பெண் கவிஞர்கள் இன்று மட்டுமல்ல, தொன்றுதொட்டே இலக்கிய வானில் சிறகடித்துள்ளனர். சிறகடிக்கின்றனர். சான்றாக ஷஷஇந்திய வானம்பாடி' எனும் சிறப்பிக்கப்பட்ட மேடம் சரோஜினி நாயுடுவை குறிப்பிடலாம். இந்திய உபகண்ட விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்திய பெண் கவிஞர் அவர்.
ஒரு சிறந்த கவிதை எப்படி அமைய வேண்டும்?
வாசகர் இதயங்களை வசீகரித்து ஆழ ஊடுருவி பாமரனும் படித்து சுவைக்கத்தக்க, சிந்தைக்கு விருந்தும் மருந்துமாக அகராதியின் அவசியம் (அதிகம்) அற்றவையாக திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுவனவாக கருத்தாழ மிக்கவையாக அமைபவையே சிறந்த கவிதைகள் என்பதையும், வாசகர்களை நயக்கவும், வியக்கவும் வைப்பனவும் எனலாம்.
கவிதைக்கும் பாடல் வரிகளுக்குமான வித்தியாசமாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?
பொதுவாக பாடல்களும் ஒருவகையில் கவிதைகள் எனும் வரம்புக்குள் அடங்கியவையே. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் ஏன் பாரதி, பாரதிதாசன் போன்றோரின் கவிதைகளும் ஒருவகையில் பாடல்களே! பாடல்களும் பெரும்பாலும் கவிதைகளே எனலாம்.
உண்மையில் கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் வித்தியாசம் பெரிதாய் இல்லை. மரபுக் கவிதைகள் பெரும்பாலும் பாடல்களாகப் பரிணமிக்கத்தக்கவையே. இதற்குச் சான்றாக ஏறாவூர் தேனீ கலை இலக்கிய மன்ற அமைப்பின் தலைவராகவும், சிறந்த பாடகராகவும் கவிஞராகவும் மேடை நடிகராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் விளங்கி, அண்மையில் காலமான மர்ஹும் அலியார் சுபைர் என்பவர் எனது 'மறக்க மறந்த மனிதம்' வெளியீட்டு நிகழ்வின் போது அதே நூலில் இடம்பெற்றுள்ள 'மரணம் வேண்டாம்' என்ற கவிதையைப் பாடி அவையை வியக்கச் செய்தமையைக் குறிப்பிடலாம்.
உங்களை மிகவும் கவர்ந்த கவிஞர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்? என்ன காரணம்?
எனக்குப் பிடித்த கவிஞர்களைப் பற்றிக் கூறுவதெனில், சிந்தைக்கும், சிந்தனைக்கும் விருந்தாகவும், மருந்தாகவும் கவிதைக் களம் கலக்கும் கவிதைகளின் சொந்தக்காரர்கள் அனைவருமே எனக்கும் சொந்தக்காரர்கள்தாம் ஜனரஞ்சகக் கவிஞர்கள் மட்டும்தான் என்றில்லை. எவரையும் அவ்வாறு சுட்டு விரல் நீட்டி என்னால் குறிப்பிட முடியவில்லை. இருந்தும் புரட்சிக் கமால், அவை வேந்து யூசுப் சேர் போன்றோரின் கவிதைகளும், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, சோம சுந்தரப் புலவர், சின்னத் தம்பிப் புலவர், அப்துல் காதர் லெப்பை புலவர், முகைதீன் பிச்சை புலவர், சரிப்தீன் புலவர், தசாவதானி சேகுத் தம்பி பாவலர் போன்றோர் தமிழின் அளவு கணிசமற்ற இன்ப இரசத்தை வாசகர் இதய மனைகளுள் அள்ளி அள்ளி நிறைந்தவர்களாவர்.
உங்களைக் கவர்ந்த கவிதை ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?
என்னைக் கவர்ந்த கவிதைகள் ஒன்றா இரண்டா குறிப்பிடுவதற்கு. என்னைக் கவர்ந்த கவிதைகள் பலவற்றில் மண் வாசனை கமழும் 'புரட்சிக் கமால்' அவர்களின் இரு கவிதைகளைத் தர விரும்புகிறேன்.
கார் மேகப் பட்டிலோர் பொன்னிழை பின்னியே
காட்டிடும் மின்னலின் நாட்டியம் போல்,
ஊர்ப்புறத் தோப்பிலோர் ஊஞ்சலை உந்துவார்,
உள்ளாடை பொங்கிடும் ஒப்பனை போல்,
வேர்ப்பலாவடு நின்ற வார்க்கச்சை வீங்கிட
விளையாட்டயர்வதன் விந்தையடி!
மார்கழி விடுதலை!
நாளைக்குன் மாப்பிளை
வருதலுக்குமுன் ஏற்பாடோ?
எனும் நீண்ட கவிதையும்,
வண்டியின் கீழே நாயொன்று
வலமிடமாக நோக்காடி,
சண்டியன் போலே செல்கிறது
வண்டியின் கீழே நாயொன்று..
எனத் தொடரும் கவிதையும் என் மானசீக திரையில் அடிக்கடி விழி சிமிட்டும்.
அண்மையில் நான் வாசித்த சேகனாப் புலவரின் கவிதை ஒன்றினை குறிப்பிட விழைகிறேன் இந்தக் கவிதைக்கு விளக்கம் புரியாமல் கவிஞர்கள் சிலரிடம் வினவியும், விளக்கம் அமையாமல் இருக்கிறேன். இக்கவிதையின் விளக்கத்தை கவித்துவ புலமை உள்ளோரிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். கவிதை இதோ:-
இயல் மன்னிய மஹ்மூறெனும்
எழில் பள்ளியின் நேரே
வியல் மன்னிய திருவாயொளி
மிக வீசிய என்றன்
செயல் மன்னிய கஃபாவணி
திகழ் நன்குடி வைத்தேன்
சுய மன்னவர் அபயம் பல
துயரின்றி அறிவே!
***
பொறிகாவன புலன் காவன
புகல் காவன பிசகா
நெறி காவல செயல்காவல
நிலை காவல வைத்தே
குறி காவல மனை காவல
குடி காவல என்றன்
அறி காவல அபயம் பல
துயரின்றிய அறிவே!
தற்காலத்தில் இருக்கின்ற கவிஞர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்பு எந்தளவில் இருக்கிறது? உங்களிடமுள்ள கவிதை தொடர்பான அறிவை இளந்தலைமுறையினருக்கு எப்படிக் கொடுக்கின்றீர்கள்?
என்னைப் பொறுத்தளவில் தற்காலம், அக்காலம் என்றில்லை. அனைத்துத் தரம், தரப்பினருடனும் மனம் விட்டுப் பழகுகிறேன். என்னை நாடி இளம் கவிஞர்கள் வரும் போதெல்லாம் என்னால் முடிந்த தெரிந்த ஆலோசனைகள் வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த மன நிறைவடைகிறேன்.
இந்தக் கொரோனாக் காலங்களில் புத்தக வெளியீடுகள் வெற்றியளிப்பதாக நினைக்கிறீர்களா?
என்னால் வடிக்கப்பட்ட கவிதைகளின் தொகை பற்றி எனக்கே தெரியாது. அனைத்தும் நூலுருப்பெற்றிருப்பின், வெளியீடு தசாப்தங்களைத் தாண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். 'புத்தக வடிவெடுத்தல்' என்பது பிரசவவலியைவிட கொடியது என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். கொரோனாக் காலங்களில் மட்டுமா? நாளுக்கு நாள் உச்சம் தொட விரையும் விலைவாசி? கடதாசித் தட்டுப்பாடு? சாதாரண காலத்திலேயே பிரசவ வலியை விஞ்சியிருந்த புத்தக வெளியீடு, இப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையிலேயே உள்ளது.
நீங்கள் இலக்கிய உலகில் எவ்வாறு அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
ஏறாவூர் தாஹிர் என்பவரும் ஒரு கவிஞர்தான் என கவித்துவப் பரப்பு ஏற்றுக்கொண்டால் போதும்.
ஏனைய கவிஞர்களின் கவிதைகளை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
நல்ல கவிதைகளைப் படைப்போரைத் தட்டிக் கொடுப்பேன். அல்லாதவர்களைத் தட்டிக் கழிப்பேன்.
இளந்தலைமுறையினர் மரபுக் கவிதைகளைப் படித்துவிட்டுத்தான் புதுக் கவிதைகளை எழுத வேண்டுமா?
அவ்வாறென்றில்லை. படிப்பதும், விடுவதும் அவரவர் விருப்பைப் பொறுத்தவை. படித்தால் நல்லது தானே! கவித்துவம் மெருகேறும் தானே!
மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், எனும் இடைவெளிக்குள் கவிதைப் பகுத்துப் பார்க்க விருப்பற்றவன் நான். இரண்டிலுமே தரமான, மனங்களை தடவுகின்ற கவிதைகள் உள்ளன. சான்றாகப் பல கவிதைகளைக் குறிப்பிட முடியும். (விரிவஞ்சி அவை வேண்டாம்) அத்துடன் தமிழ் இலக்கியக் களத்தில் கவிதைகள் மட்டுமின்றி, பாடல்கள், கதைகள், கட்டுரைகள், மேடைப் பேச்சுகள், உரைகள், வாழ்த்து மடல்கள், பட்டிமன்றம் என்றெல்லாம் எனது இலக்கியப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கவிதைகள் தவிர்த்து வேறு எத்துறைகளில் ஆர்வம் அதிகம்?
சமய, சமூகப் பணிகளுடன் இலக்கியம் பற்றிய அனைத்திலுமே.
பல தசாப்த காலங்களாக இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். அந்தவகையில் இதுவரை உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த பரிசுகள், பாராட்டுகள், பட்டங்கள் மற்றும் விருதுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
அவற்றைப் பட்டியலிடத் தொடங்கினால் பக்கங்கள் நீண்டு விடும். எனவே, அவை வேண்டாம். எனினும் 'கலாபூஷணம், தேசமான்ய, சமூக ஜோதி, கலைத் தென்றல்' முதலியன போதும் என நினைக்கிறேன்.
இறுதியாக என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?
இலக்கிய உலகம் மிக விசாலமானது, ஆழமிக்கது. வாசிப்பின் மூலமே அதில் தடம் பதித்து ஏறு நடை போடலாம் என்பதுடன் தொடர்ந்து எழுத வேண்டும். என்னை இந்த நேர்காணலில் இதய பூர்வமாக இணைத்துக் கொண்ட உங்களுக்கும், செந்தூரம் இதழாசிரியர் மற்றும் அதன் அமைப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் என் அகம் கனியும் நன்றிகளை தெரிவித்து விடை பெறுகின்றேன். நன்றி!
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


























