Sunday, June 12, 2022

38. விவேகானந்தனூர் சதீஸ் அவர்களுடனான நேர்காணல்

விவேகானந்தனூர் சதீஸ் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

என்னைப் பற்றி கூறுவதானால்; வடக்கிலங்கை மாவட்டத்தின் விவேகானந்த நகர் என்ற நகர்ப்புறத்தை  வாழ்விடமாகக் கொண்டவன். செல்லையா - பவளவள்ளி இணையரின் இளைய மகன். மனைவி, மகள் என சிறியதொரு குடும்பத்தின் தலை மகன். கிளிநொச்சி சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் நோயாளர் காவு ஊர்தி ஓட்டுநராகக் கடைமையாற்றி வந்த நான், சுயாதீன ஊடகவியலில் கரிசனை கொண்டவன் என்று சுருக்கமாகக் கூறலாம். 


உங்கள் பாடசாலை வாழ்க்கை, இலக்கிய ஆர்வம் பற்றியும் குறிப்பிடுங்கள்?

'ஆதவன் முன்பள்ளி' தொடங்கி ஆரம்பக் கல்வியூட்டிய அயலகப் பள்ளியாம் கனகாம்பிகைக்குளம் அ.த.க. பாடசாலையில் இடைநிலை பயின்றேன். கிளி. இந்துக் கல்லூரி; இறுதியாக கிளி. மத்திய கல்லூரி என நான்கு நிலை அறிவுச் சாலைகளையும் நன்றியோடு நினைவில் கொள்கின்றேன். போர் நிலத்தில் வாழ விதிக்கப்பட்டிருந்த எமது மாணவப் பருவங்கள் இயல்பு நிலைக்கு அப்பாற்பட்டிருந்த காலங்கள் அவை. அதற்காக எமது அன்றாடங்களை நாம் அடகு வைத்திருக்கவில்லை. பாடப் புத்தகங்களின்றியும் பதுங்கு குழி வாழ்க்கையுமாக கடந்து கொண்டிருந்த அந்நாட்களிலும் கல்விச்சாலைகள் தொடர்ந்தன. அநேகமாக நான் பேச்சு, விவாதம், வில்லிசை போன்ற கலை நிகழ்வுகளில் பங்குபற்றுவதுண்டு. தவிர உதைப்பந்தாட்ட விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். 


உங்களை எழுத்தாளராக வளர்த்த பின்னணி என்ன? இத்துறையில் வளர வழிவகுத்தவர்கள் யார்?

என்னை ஒரு எழுத்தாளன் என்று பறைசாற்றிக் கொள்ளும் அளவுக்கான பக்குவத்தை இன்னும் அடையவில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் என் எழுத்து முயற்சிகளுக்கான பின்னணியை 'காலச் சூழலிடம்' கையளிக்க கடமைப்படுகிறேன். எனதிந்த படைப்பிலக்கியப் பயணத்தில் தொடர்ந்தும் நடை பயில்வதற்கு எனது ஆக்கங்களுக்கு களம் தந்துவரும் அச்சு ஊடகங்களும் சஞ்சிகைகளும் முதன்மைக் காரணமெனக் காண்கிறேன். தவிர எனது படைப்புகளின் முதல் வாசகியாக மட்டுமின்றி உந்துசக்தியாக செயற்பட்டுவரும் எனது அம்மா பவளவள்ளி மிக முக்கியமானவர்.


நீங்கள் எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகிறீர்கள்?

'ஆசைக்கு ஒரு கவிதை எழுதிப் பார்ப்போம்' எனத் தொடங்கிய என் எழுத்தார்வம் சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து,  விமர்சனம், குறுநாவல் என முன்நகர்ந்து தற்போது நாவலில் காலடி வைத்திருக்கிறது. 


உங்களது முதலாவது படைப்பை பத்திரிகையில் பார்த்தவுடன் உங்களது மனநிலை எப்படி இருந்தது? 

1999 இல் தினமுரசு பத்திரிகையின் 'கருத்தோவியத்திற்கான நான்கு வரிகள்' பக்கத்திற்காக சிறிய கவிதை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த வாரம் அது எனது பெயர், முகவரியுடன் பாராட்டுக் கவிதையாக அச்சேறி வந்திருந்தது. அதனைக் கண்டு ஆனந்தமடைந்தது மட்டுமல்ல, ஓடி ஓடி அந்தப் பத்திரிகைப் பக்கத்தை அனைவருக்கும் காண்பித்து பெருமை கொண்டேன் என்ற உண்மையையும் சொல்ல வேண்டும்.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

01. 'இரும்புக் கதவுக்குள்ளிருந்து...' (கவிதை) 2012 கலை இலக்கியப் பேரவை வெளியீடு

02. 'விடியலைத் தேடும் இரவுகள்...' (கவிதை) 2016 படைப்பாளிகள் உலகம் வெளியீடு

03. 'சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு...' (கவிதை) 2017 படைப்பாளிகள் உலகம் வெளியீடு

04. 'மனச்சிறையிலிருந்து...' (கவிதை) 2017 காவியாலயா வெளியீடு

05. 'வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்...' (சிறுகதை) 2021 ஜீவநதி வெளியீடு

'துருவேறும் கைவிலங்கு' என்ற கட்டுரைத் தொகுதி பாதி முடிந்த நிலையில் பதிப்பகத்தில் இருக்கிறது. எங்கட புத்தகங்கள் வெளியீட்டு அமைப்பு இதனை வெகு விரைவில் வெளியீடு செய்ய இருக்கிறது. பெரும்பாலும் இவ்வருடம் இந்த நூலினை வெளியிடலாம் என்றே நினைக்கின்றேன்.


நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது? 

அந்த மகிழ்ச்சியை மற்றும் மனநிறைவை, கருச்சிதைவுகளை மாத்திரமே கண்டு நொந்திருந்த தாயொருத்தி முதற் குழந்தையை பிரசவித்த போது ஏற்படக்கூடிய ஆனந்தத்திற்கு ஒப்பிடுகிறேன்.


'இரும்புக் கதவுக்குள் இருந்து...' என்ற உங்களது முதலாவது கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

'சிறைக்கூடத்தில் இருந்து, பண்டிட் ஜவகர்லால் நேரு தன்னுடைய மகள் இந்திராவுக்கு 'என் பிரியமான பிரியதர்ஷினிக்கு...' என்று எழுதிய கடிதங்களின் தொகுப்பு பின் நாளில் நூலாக வெளியானது. அது வெறும் கடிதங்களைக் கொண்ட நூல் மாத்திரமல்ல. உணர்வு, ஒழுங்கு, வாழ்வின் இலட்சியம், தூரநோக்கு எனப் பல நல்லவற்றை உள்ளடக்கிய நூல். அதேபோல என்னுடைய கன்னிக் கவிதைகளும் நல்ல பல கருத்துக்களையும் கருப்பொருட்களையும் கொண்டனவாக அமைந்துள்ளன என்று போராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் இந்த நூலுக்கான அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.


'உங்கள் விடியலைத் தேடும் இரவுகள்...' கவிதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்?


'தேசத்திற்கு ஒளிகொண்டு பாய்ச்சும் வலிமை நூல்களுக்கே அதிகமாக உள்ளது' என்பதற்கிசைய அடக்குமுறை அக்கினியில் அவித்தெடுக்கப்படுகின்ற சமுதாயத்தின் துன்ப துயரங்களில் சிலவற்றை கிள்ளியெடுத்து கவிதைப் புள்ளியிட்டு வாசகர் தம் கட்புலனில் அனுபவிக்கத் தந்துள்ளேன். இவை சில மனங்களையேனும் தொட்டு, மாற்றங்களை விளைவிக்க வேண்டுமென ஆவல் கொண்டதன் உப விளைவே 'விடியலைத் தேடும் இரவுகள்' என்ற நூல். 


உங்கள் சிறுகதை நூலின் தலைப்பு குறித்தும் கருப்பொருட்கள் குறித்தும் என்ன சொல்லப் போகிறீர்கள்? 

போரினால் பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டியின் வாழ்வாதாரத்திற்குத் துணையாக இருந்துவந்த பழமையான வேப்ப மரமொன்றை வீதி அகழிப்பு என்ற அபிவிருத்தியின் பெயரால் தறிக்க முற்படுவதும் இறுதியில் அதைத் தடுத்து நிறுத்தப் போராடிய மூதாட்டி, தன் குடும்பத்தை வாழ வைத்த மரத்தோடு சேர்ந்து தானும் மடிவதுமான சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாகியது. ஷவேப்ப மரமும் பவளம் ஆச்சியும்| என்ற இந்த சிறுகதைத் தொகுதி தாங்கி வந்துள்ள கதைக் கருக்களாக நமது சமுதாயக் குடிகள் சந்தித்து வருகின்ற ஏக்கம், தாக்கம், தவிப்பு, நட்பு - பிரிவு, உறவு, விழிப்பு எனப் பல்வேறுபட்ட சங்கதிகளைச் சொல்லி நிற்கிறது. 


ஒரு நூல் பிரசுரம் என்பது ஒரு பிரசவத்திற்கு ஒப்பானது என்கிறார்களே! இதுபற்றி என்ன சொல்வீர்கள்?

இது முற்றிலும் மெய்யான கூற்றென்பதை அனுபவ வாயிலாகக் கண்டவன் நான். உழைப்பதைவிட சேமிப்பது கடினம் என்பார்கள். அதேபோன்றுதான் ஒரு படைப்பை ஆக்குவதைவிட அதை செப்பமான நூலாக வெளிக் காணச் செய்வது மிகக் கடினம். எமது தேசத்தில் எழுதுபவர்களுக்கான ஊக்குவிப்பு மந்த கதியிலிருந்து மாறுவதாக இல்லை. ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதன் செலவுப் பெறுமதியைத் தன்னும் மீட்டெடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில்தான் எமது உள்நாட்டு புத்தகங்களின் விற்பனை விகிதம் காணப்படுகிறது. திறன், தொழிநுட்பத்தின் அதிகரித்த ஆக்கிரமிப்பு மற்றும் அநேகமான வாசகர்கள் அயலுறவு தேசத்தின் கவர்ச்சி மிகுந்த (அமைப்பு, தலைப்பு, கரு) நூல்களை வாசிப்பதில் ஆர்வத்தைக் காட்டுவதால் உள்ளூர் படைப்புகள் புறக்கணிப்புக்குள்ளாகின்றன.


உங்கள் மனதை வசீகரித்த கவிதைகள் அல்லது கவிதை வரிகள் பற்றிக் கூறுங்கள்? 

இதற்குப் பொதுவாகவே பதிலளிக்கிறேன். மரபென்று பரையொலித்துக் கொண்டு கடைநிலை மாந்தரை  சென்றடையாத எந்தப் படைப்புகள் மீதும் எனக்கு நாட்டமில்லை. படைப்புகள் எப்போதும் சமூக நலன் சார்ந்து நிற்க வேண்டுமென நினைக்கிறேன். அந்தவகையில் குரலற்ற மனிதர்களின் குரலாக ஒலிக்கின்ற வரிகள் பொதுவாக என்னை வசீகரிப்பதுண்டு.



ஆரம்ப காலங்களில் உங்கள் படைப்புகளுக்கு களம் தந்த ஊடகங்கள் பற்றி?


வலி சுமக்கும் என் வரிகளுக்கு களம் தருவதில் அநேகமான ஊடகங்கள் பின்நின்றதில்லை. குறிப்பாக தினமுரசு, தினகரன், உதயன், சுடர் ஒளி, தமிழ் தந்தி, வீரகேசரி, தினக்குரல், வலம்புரி, காலைக்கதிர், மலை முரசு போன்ற தேசிய பிராந்திய பத்திரிகைகளை குறிப்பிட முடியும். சஞ்சிகைகள் வரிசையில்; இருக்கிறம், ஞானம், பூங்காவனம், கவிஞன், தளவாசல், ஜீவநதி, எங்கட புத்தகங்கள், கலைமுகம், கரை எழில் போன்றவற்றை குறிப்பிடுவேன். தவிர, சில மின் இதழ்களையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனாலும் சில முதன்மை சஞ்சிகைகள் தமக்கென்று முகமறிந்த வாடிக்கைப் படைப்பாளிகள் சிலரைத் தொடர்ந்து திருப்திப்படுத்தியாக வேண்டும் என்று கருதுவதால் வளர்ந்து வரும் புதுமுக எழுத்தாளர்கள் ஊக்கப் படுத்தப்படாமல் ஏமாற்றமடைந்து எழுத்துலகிலிருந்து கரைந்து காணாமல் போய்விடுகிறார்கள். 


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் நீங்கள் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துகள் உங்களை அதிகமாகக் கவர்ந்ததாக நினைக்கிறீர்கள்? 

ஆரம்ப நாட்களில் அனைத்தையும் வாசித்தேன். பின் நாட்களில் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். கைதேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை கோடிட்டுக் காட்டுவதால் புதுமுக எழுத்தாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுவார்களோ என அஞ்சுகிறேன். எனவே பெயர்ப் பட்டியலைக் கூற விரும்பவில்லை. ஆதலால் வாசகர் தாமே வாசித்து தீர்மானித்துக் கொள்வார்களாக. இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும், எழுத்துக்களின் வாய்மையினை வாழ்க்கையில் கொண்டவர்களாக எல்லா எழுத்தாளர்களும் இருந்துவிடமாட்டார்கள். பலருடைய படைப்புகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. பொதுநலன் பற்றி எழுதி விருதுகளை வாங்கி வீட்டில் அடுக்கிக் கொண்டு கழுவித் துடைத்த சுயநலமிகளை நான் சந்தித்திருக்கிறேன்.


படைப்பைப் போலவே படைப்பாளிகளும் இருப்பார்கள் என்றெண்ணி அது பொய்த்துப்போன சம்பவங்களை நீங்கள் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி?

நிச்சயமாக. சாகித்திய விருது பெற்ற ஒரு எழுத்தாளரின் நாவலைப் படித்துவிட்டு அவருடன் நேசம் கொண்டிருந்தேன். ஒருநாள் குறித்த நேசரை அணுகி எனது சிறுகதையொன்றைப் பற்றிக் கூறிவிட்டு 'இவ்வாறு சொல்லிச் சென்றால் நன்றாக இருக்குமா?' என்று சிநேக பூர்வமான ஆலோசனையொன்றை கேட்டேன். அதற்கவர் 'நீங்கள் எழுதக் கூடியவர் தானே. எழுதிப் பல பரிசுகள் வென்றிருக்கிறீர்கள். நீங்கள் எழுதினால் அது சரியாகத்தான் இருக்கும்..' என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டார். 'நான் போட்டியில் பங்கு பற்றியிருந்தால் உங்களது சிறுகதைக்கு பரிசு கிடைத்திருக்காது' என்று அந்த 'விருதெழுத்தாளர்' முன்பொருநாள் கூறியது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. அன்று தொடக்கம் அவரிடம் எந்த ஆலோசனைகளையும் நான் கேட்பதில்லை. ஆனாலும் அவரது படைப்புகளை நான் வளர்வதற்காக இன்னும் அதிகமாக விரும்பி வாசிக்கிறேன்.


இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தமட்டில் தகவல்களை மிக வேகமாக மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கின்றன. ஆனபோதிலும் அவற்றின் நம்பகத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்பன கேள்விக்குறியாகவே நோக்கப்படுகிறது.


உங்களது எழுத்துக்களின் நோக்கம் என்ன? உங்களது படைப்புகளுக்கு அல்லது உங்களுக்கு கிடைத்த ஆதரவுகள், வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

படைப்பிலக்கியம் என்பது பிரச்சாரம் அல்ல. வெறும் பொழுது போக்குப் பணியுமல்ல. பெயருக்கும் புகழுக்குமான வேலையும் அல்ல. மனிதர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள், அதில் உள்ள செருகல்கள், விரிசல்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், குமுறல்கள், உள் மன ஏக்கங்கள் என அனைத்தையும் ஊடுருவி நோக்கி கலை நயத்துடன் படைப்பதே படைப்பு ஆகும். 

விழிப்புணர்வு மற்றும் ஆவணப்படுத்தலுக்கான படைப்புகளுக்கு அப்பால் சில படைப்பாளிகள் சந்தை நிலவரங்களை அறிந்து சரக்குகளை தேடி எழுதும் விருதுக்கான படைப்பாளிகளாக எழுத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் தற்போது வரை விழிப்புணர்வு மற்றும் ஆவணமாக்களை நோக்காகக் கொண்டே எழுதி வருகிறேன். அந்தவகையில் ஆதரவுகளும் வரவேற்புகளும் நிறையவே கிடைக்கின்றன. தவிர இதுவரை சிறுகதைகளுக்காக பல பரிசுகளும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன. இவைதவிர எனது நான்கு கவிதைத் தொகுதிகளும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவரால், 2017 ஆம் வருடத்தில் ஷஷஅரங்காற்றுகை ஆய்வு|| இற்கு உட்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


உங்களது படைப்புகளால் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

என்னால் நாட்டின் தேசிய பத்திரிகைகளுக்கு எழுதப்பட்ட கட்டுரைப் படைப்புகள் சிலவற்றின் மூலம் சில உடனடி மாற்றங்கள் நிகழ்ந்ததை அவதானித்து ஆச்சரியமடைந்திருக்கிறேன். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு எவராலுமே கண்டுகொள்ளப்படாதிருந்த யாழ். குடாநாட்டை மையப்படுத்திய அரச சேவை நிறுவனம் ஒன்றின் ஒட்டுமொத்த குறைபாடுகளையும் ஊடுருவி நோக்கி, அவற்றை கோடிட்டுக் காட்டி கட்டுரை ஒன்றை வரைந்து பல பத்திரிகைகளுக்கு அனுப்பியிருந்தேன். அந்தக் கட்டுரை அடுத்த வாரம் வெளிவந்த ஆறு பத்திரிகைகளிலும் அதுவும் விசேடமாக ஒரே நாளில் முழுப் பக்கக் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டது. ஆகையினால், குறித்த நிறுவனம் தாமதிக்காமல் குறிப்பிடத்தக்களவு குறைநிரப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தமையை ஒரு மாற்றமாகவே பார்க்க முடிகின்றது. இது எனக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது. இத்தகைய அனுபவங்கள் மறக்கவியலாதவை.


உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றி குறிப்பிடுங்கள்? 

கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், குறுநாவல் என்பனவற்றைக் கடந்து எதிர்காலத்தில்  காத்திரமான நாவல்களைப் படைத்து எனது ஆவணப்படுத்தலை அகலிக்க வேண்டுமென விருப்பங்கொள்கிறேன்.


இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?

இலத்திரணியல் நூல்களை வாசிப்பதிலும் பார்க்க முடிந்தவரை அச்சு நூல்களை வாசிப்போம்;.. சேமிப்போம்;.. பகிர்ந்து கொள்வோம். பிரதேசத்தில் இடம்பெறும் நூல் வெளியீடுகளுக்கு அழையா விருந்தாளியாக என்றாலும் சென்று கலந்து கொண்டு, பணம் செலுத்தி புத்தகங்களைப் பெற்றுக் கொள்வோம். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Sunday, February 20, 2022

37. கவிஞர் ஏ.கே. முஜாரத் உடனான நேர்காணல்

கவிஞர் ஏ.கே. முஜாரத் உடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் 


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்? 

நான் ஏ.கே. முஜாரத் (1979). கிண்ணியா மஹ்ரூப் நகரில் வசித்துக் கொண்டிருக்கும் நான், பிறிமா மா ஆலயத்தில் மின்சாரப் பகுதியினுள் பணிபுரிகிறேன். இலக்கியத் துறையில் 22 வருடங்களாக சேவையாற்றி வருகிறேன். 



உங்களது தொழில் அநுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா? 

முதலில் உள்ளூரில் வீடுகளுக்கு மின் இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருந்ததேன். பின்பு எனக்கு பிறிமா பிரைவேட் கம்பனியில் நிரந்தரமான வேலை கிடைத்தது. அதற்குப் பின்புதான் புரிந்தது நான் கற்றுக் கொண்டது கடுகளவு கற்க வேண்டியது நிறையவே இருக்கின்றன என்பதாய். அதுபோன்று சகல இன நண்பர்களோடும் பழகுவதற்கும் ஒருமித்து தொழில் புரிவதற்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 


உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்ப பின்னணி, கல்லூரி வாழ்க்கை போன்றவற்றை முதலில் கூறுங்கள்? 

சாதாரன தரப் பரீட்சைக்காக நண்பர்களோடு படித்துக் கொண்டிருந்த காலத்தில் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் இருந்தது. அவைகளில் முக்கியமாக கவிதைப் பகுதிகளையும் வாசிப்பேன். எனது படிப்பு அறையில் இருந்த நண்பர்களும் கவிதைச் சூழலோடு இருந்ததன் காரணமாக எனக்குள்ளும் கவிதை எனும் அற்புதமான மொழி உருவாகத் தொடங்கியது. பின்பு பாடசாலையில் ஆசிரியர்களும் குடும்பத்தார்களும் எனக்கு பக்க பலமாக அமைந்தார்கள். 



நீங்கள் எப்போது, எந்த வயதில் எழுத்துத் துறைக்குள் நுழைந்தீர்கள்? உங்களை எழுத்தாளராக வளர்த்த பின்னணி என்ன? 

1999 ஆம் ஆண்டு, இருபது வயதில் கவிதைகளை எழுதுவதற்கு ஆரம்பித்தேன். இதற்கு முக்கிய காரணம் அல்லது பின்னணி எனும் போது நான் காதலைத் தான் மிகவும் பிரியத்தோடு சொல்வேன். 


உங்களது முதற் படைப்பு எப்போது, எதில் வெளியானது? எந்தெந்தப் பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் எழுதியுள்ளீர்கள்? 

1999.06.06 இல்; முதலாக ஜனனி பத்திரிகையில் ஷஷஅவளைப் பார்த்தாயா சொல்' என்ற கவிதை தான் பிரசுரமானது. அதற்குப்பின் தினகரன், வீரகேசரி, தினக்குரல், நவமணி, தினமுரசு, மித்திரன் வாரமலர், மெட்ரோ நியூஸ், எங்கள் தேசம், மீள்பார்வை, தமிழ்த் தந்தி, போன்ற பிரதான பத்திரிகைகளிலும் நேயம், படிகள், சிறகுகள், நிகழ் காலம், கரும்பு, கலைமுத்து, பேனா, எறும்புகள் போன்ற சஞ்சிகைகளிலும் மற்றும் கிண்ணியா நெட், வார்ப்பு, இணையத் தளங்களிலும் முகநூலிலும் இன்னும் வானொலிகளிலும் எனது கவிதைகள் சிறகுகள் விரித்திருக்கின்றன. 


எப்படிப்பட்ட மனநிலையில் உங்களுடைய கவிதைகளை எழுதுகின்றீர்கள்? எழுதுவதற்கு உங்களுக்குத் தனி மனநிலை வேண்டுமா? 

எனது இன்ப துன்பமான இரண்டு பக்க மன நிலையிலும் கவிதைகள் மிக வேகமாக ஊற்றெடுக்கும். அது ஒரு நதியைப் போன்று ஓடிக் கொண்டே இருக்கும். இதற்கு மிக முக்கியமாக எனக்கு தனி சூழல் தேவைப்படுகிறது. 


இதுவரை நீங்கள் வெளியிட்ட புத்தகங்களைப் பற்றி கூறுங்கள்? 

01. பூக்களால் ஒரு புகைப்படம் 

02. றிசானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும் 

03. சாத்தான் வழிந்தோடும் சொற்கள் 

04. பட்டாம் பூச்சிகளால் உன் பெயரை எழுதுகிறேன்

போன்ற கவிதைப் பிரதிகளை இதுவரை நான் வெளியீடு செய்திருக்கிறேன்.


நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா? உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?

நிச்சயமாக ஒவ்வொரு நூல் வெளியீட்டு விழாவிலும் நான் வெற்றி கண்டுள்ளேன். வெளியீட்டு நிகழ்வுக்கு அல்லது வெற்றிக்கு உதவியாக இருந்தவர்கள் எனும் போது தோழர்களும் கவிஞர்களுமான ஏ. நஸ்புள்ளாஹ், ஜே. பிரோஸ்கான், எம்.ரீ. சஜாத், நஸார் இஜாஸ் போன்ற இன்னும் பலர் எனலாம். 


உங்கள் "சாத்தான் வழிந்தோடும் சொற்கள்" கவிதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? ஏன் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தீர்கள்? இந்த நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

அவ்வப்போது நடந்தேறிய காட்சிகளை நிகழ்வுகளை கவிதைப் புகைப்படங்களால் எடுத்து இப் பிரதியை அலங்கரித்திருக்கிறேன். இதனால் இப்பிரதி வாசகர்களால் வரவேற்கப்பட்டதோடு இந்நூலின் வருகை எனக்கு மகிழ்வையும் தேடித் தந்திருக்கிறது. மேலும் சாத்தான் வழிந்தோடும் சொற்கள் எனும் இப் பிரதியின் தலைப்பைப் பற்றி சொல்வதாயின் தெருமுனையில் நடந்து கொண்டிருந்த காட்சிகள் வெருக்கத்தக்கதாக அமைந்தன. அக் காட்சிகளையே இப்பிரதி முழுக்க வெளிப்படுத்தி இருக்கிறேன். எனவே தான் இப்பிரதி சாத்தான் வழிந்தோடும் சொற்களாக மகுடம் சூடி இருக்கிறது. இப்பிரதியின் கருப்பொருள் பற்றி சொல்வதாயின் நிகழ் சூழலில் நடந்து கொண்டிருந்த சுயநலம், முரண், குரோதம், பெருமை, புறம் பேசுதல், அகங்காரம், சூழ்ச்சிகள் போன்ற விடயங்களில் மனிதர்கள் சாத்தான்களாக வழிந்தோடிக் கொண்டிருந்தார்கள். அவைகளையே இங்கே காட்சிப் படுத்தியிருக்கிறேன். 


உங்கள் படைப்புக்கள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா? கவிதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக்கூடிய பல மாற்றங்களில் நீங்கள் எவற்றை இலக்காகக் கொள்கிறீர்கள்?

கவிதைகளிணூடாக முழுமையாக சமூக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று சொல்ல முடியாது ஓரளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். முரண்பாடுகளற்ற சமூகத்தை உருவாக்கி ஒவ்வொருவருக்குள்ளும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும், அன்பையும் வளர்க்க வேண்டும் என்பதில் நானும் எனது படைப்புகளும் இலக்காகக் கொண்டு இயங்குகின்றேன். 


உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? அதுபோல் உங்களை மிகவும் கவர்ந்த படைப்பு எது?

எனக்குப் பிடித்த சிறந்த எழுத்தாளர் என்றால் கிண்ணியா மர்ஹூம் கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி அவர்களையே சொல்வேன். எனக்குப் பிடித்த படைப்பு எனும் போது இவருடைய 'குடையும் அடை மழையும்' கவிதைப் படைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 


இனிவெளிவரும் உங்கள் படைப்புக்கள் எப்படி அமைய வேண்டுமென்;று நினைக்கிறீர்கள்?

வாசகர்களை கனவு உலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உற்சாகப்படுத்தக் கூடிய படைப்பாகவும் ஷஇப்படியும் கற்பனையின் உச்சத்திற்கு செல்ல முடியும்| என்ற வியப்பைத் தரக் கூடிய படைப்பாக்கத்தையும் வாசகர்களுக்கு வழங்கி, என் எழுத்து மீது பிரியத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லது அமைய வேண்டும் என நினைக்கிறேன். 


இதுவரை உங்கள் படைப்புகளுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?


பாராட்டுக்கள், பரிசுகள் 

* 2002 ஆம் ஆண்டு மர்ஹூம் அஷ்ரப் சேரின் ஞாபகர்த்தமாக நடாத்திய அகில இலங்கை ரீதியாக கவிதைப் போட்டியில் 02 ஆம் இடம்

* 2007 இல் கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தினால் கவிதை 03 ஆம் இடம் 

* 2008 இல் கிண்ணியா மத்திய கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு கவிதைப் போட்டி 01 ஆம் இடம் 

*  2009 பிரதேச சாகித்திய விழா கவிதைப் போட்டி 03 ஆம் இடம்

*  2012 நகரசபை பொது நூலகத்தினால் வாசிப்பு தினத்தை முன்னிட்டு கவியரங்கில் சான்றிதழ்

*  2014 பிரதேச சாகித்திய விழா கவிதைப் போட்டி 03 ஆம் இடம் 

*  2015 குறிய நூல்களுக்கான கரவாகு இலக்கிய சந்தி நடத்திய சோலைக் கிளி விருதுப் போட்டியில் எனது ஷஷசாத்தான் வழிந்தோடும் சொற்கள்' கவிதைப் பிரதியும் தெரிவாகி பாராட்டும் பரிசும் சான்றிதழும் பெற்றது. 

* 2016 ஆம் ஆண்டு வாசிப்பு தினத்தை முன்னிட்டு நடத்திய கவிதைப் போட்டியில் 02 ஆம் இடம் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. 

* 2018 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்இலக்கியத் துறையில் மிக சிறப்பாக சேவையாற்றியமையப் பாராட்டிஇளங் கலைஞர் பாராட்டு வழங்கி சான்றிதழும் நினைவுச் சின்னமும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டது. 


விருதுகள்

*  2014 இல் சிறகுகள் கலை இலக்கியத்தினால் மக்கள் கவிஞன் விருது. 

*   2015.11.28 இல் நடத்தப்பட்ட பிரதேச கலை இலக்கிய விழாவில் இலக்கியத் துறையில் ஆற்றிய மிகச் சிறந்த பணிக்காக கவித்தாரகை என்ற பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. 

*   2016.12.11,12,13 ஆம் திகதிகள் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு பொன்விழா மாநாட்டில் இலக்கியப் பணியைக் கௌரவித்து சான்றிதழும் நினைவுச் சின்னமும் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


இலங்கையில் வெளிவரும் கவிதைப் படைப்புகள் பற்றி என்ன சொல்வீர்கள்?

அக புற சூழலை பேசக் கூடிய மிக காத்திரமான படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவருகின்றன. என்றாலும் காலங்களுக்கு ஏற்ப கவிதை மொழிகளையும் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் இன்றைய இலக்கிய சூழலுக்கு இருக்கிறது. 


கவிதைகள் தவிர வேறு எத்துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றீர்கள்?

சிறுவர் பாடல் துறையிலும் ஓரளவு ஆர்வம் காட்டி வருகிறேன். 


உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்கள் எந்த வகையில் உதவியது?

எனது படைப்புகளை பத்திரிகையில் பிரசுரித்து வானொலியிலும் ஒலிக்கச் செய்து எனது எழுத்துத் துறையை வெளியுலகுக்கு கொண்டு வந்ததே ஊடகங்கள்தான் என மன மகிழ்வுடன் கூறலாம். 


எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிதைகள் எழுதி அனுப்பிவிட்டு பத்திரிகையில் எப்ப வரும், எப்ப வரும் என்று காத்திருப்பதும் கவிதை வந்திட்டால் நித்திரையும் இல்லாமல் சந்தோசத்தில் மிதப்பதுமான அந்தக் காலங்களின் இன்பச் சூழலை இன்றும் மறக்க முடியாது. அதுபோல கைபேசி இல்லாத அந்தக் காலங்களில் ஒவ்வொரு மாலைப் பொழுதும் இலக்கியத் தோழர்களைச் சந்திக்கச் செல்வதும் சில நேரம் அவ்வளவு தூரம் சென்று சந்திக்க முடியாமல் திரும்பும் போது ஏற்படும் கவலைகளும் சுகமான வலியாகவே இருக்கும். 


சமகாலத்து ஈழத்து இலக்கியம் பற்றிய உங்களது கணிப்பீடு என்ன?

சமகாலத்திய இலக்கியமானது புதுவிதமான இலக்கிய மொழிகளைக் கொண்டு இயற்கையோடு அமர்ந்து கனவு உலகத்திற்கும், கற்பனை உலகத்திற்கும் சென்று வாசகர்களை வசியப்படுத்தும் வித்தைகளை தற்போதைய இலக்கிய மொழிகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இவ்விலக்கிய படைப்பாக்கங்கள் கனதிகளோடும் அழகியலோடும் எல்லைகள் மீறிய தரத்தோடு வந்துகொண்டிருக்கின்றன. 


ஒரு எழுத்தாளராக உங்களுக்குக் கிடைத்த அநுபவங்களில் எதனைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிரீர்கள்?

நேர காலங்களை இலக்கியத்திற்காகவும் சமூகத்திற்காகவும் செலவளித்து நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதி குவித்த போதும் பல படைப்பாளிகளுக்கு இருக்கும் பிரச்சினைகள்தான் நூல் பிரதிகளாக கொண்டு வர முடியாத நிதிப் பிரச்சினை. அவ்வாறு நூல் வடிவத்தில் கொண்டு வந்தாலும் நூல்களை வாங்கி உற்சாகப்படுத்துவதற்கான மனோ நிலையில் இல்லாத சமூகங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 


உங்களுடைய அடுத்தகட்ட இலக்கிய முயற்சிகள் யாவை?

Sri N Srivatsa (Sri) அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட எனது 50 கவிதைகளும் மற்றும் 'கடுவன் பூனை' எனும் நூல் தலைப்பில் பகவிதைகளும் இருக்கின்றன. இவ்விரு பிரதிகளையும் இவ்வருடம் புத்தாக்கம் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

வாசிப்பு எமது சுவாசிப்பு போன்று எம்மோடு என்றுமே கலந்திருக்க வேண்டும். வாசிப்பின் மூலமாக எமது ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல நூல் பிரதிகளை தெரிவு செய்வது சிறந்தது. நேர்காணல் செய்த கவிதாயினி ரிம்ஸா முஹம்மதுக்கும் பிரசுரித்த பத்திரிகைக்கும் எனது நன்றிகள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் 

36. கவிஞர், எழுத்தாளர் காத்தநகர் முகைதீன்சாலி அவர்களுடனான நேர்காணல்

கவிஞர், எழுத்தாளர் காத்தநகர் முகைதீன்சாலி அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகம், பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?


சாயம் காய்ச்சும் நாகூரார் என அழைக்கப்படும் முகம்மது சாலி அவர்களுக்கும், ஹிதாயத்தும்மாவுக்கும் மகனாக காத்தான்குடியில் நான் பிறந்தேன். என்னுடைய ஆரம்பக் கல்வியை காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய தேசிய பாடசாலையிலும், தொடர்ந்து காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையிலும் கற்று க.பொ.த. சாதாரண தரத்தினை திருகோணமலை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையிலும் கற்றேன்.


உங்கள் தொழில் அனுபவம் பற்றியும் கூறுங்கள்?

உயர்தரத்தில் சித்தியடைந்து யுனானி மற்றும், ஆயுர்வேத வைத்தியத் துறைகளில்  பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போதிலும் குடும்ப வறுமை நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்ல முடியாத சூழ்நிலையில் 10 வருடங்கள் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு பின்னர் தென்னை பயிர்ச்செய்கை சபையில் ஆய்வுகூட உத்தியோகத்தராக இணைந்து சேவையாற்றியதுடன் அந்தக் காலப்பகுதியில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் தொழில்வாண்மை உளவத்துணை பாடநெறிiயைப் பூர்த்திசெய்து ஒரு தொழில்வாண்மை உளவளத்துணையாளராகவும் செயற்பட்டு வருவதோடு இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் சட்டமாணி பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்துள்ளதோடு இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணி பரீட்சையில் சித்தியடைந்துள்ளேன்.


இலக்கிய உலகில் நுழைந்த காலம் மற்றும் சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

திருமலை இந்துக் கல்லூரியில் உயர்தரம் கற்ற காலத்தில் பாடசாலையின் நூலகத்தை அதிகமாக பயன்டுத்துவேன். அது வாசிப்பின் மீதான எனது தாகத்தை அதிகரித்தது. அதிகமாக பத்திரிகை வாசிக்கும் பழக்கம் என்னிடம் இருந்தது. 1999 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதி முடித்த பிற்பாடு நவமணி பத்திரிகையில் கவிதாயினி மரீனா இல்யாஸ் ஷாபி அவர்கள் எழுதிய 'நாளைய கணவனுக்கு நான்கைந்து கேள்விகள்' எனும் கவிதைக்கு நான் எழுதியனுப்பிய 'நாளைய மனைவிக்கு நான்கைந்து விடைகள்' எனும் கவிதையே எனது முதற் கவிதையாகும். எனது முதலாவது கவிதை பத்திரிகையில் பிரசுரமானதைத் தொடர்ந்து நான் தேசிய பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன்.


நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதத் தூண்டப்பட்ட சம்பவங்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

என்னுடைய இளமைப் பருவம் வலி நிறைந்தது. அறியும் பருவத்துக்கு முன்னாலேயே தகப்பனை இழந்த நான் இலங்கையின் யுத்த சூழலில் சிறுவர்கள் பட்ட துன்பங்களையும், வறுமை காரணமான வலிகளையும் அனுபவித்ததோடு மாத்திரமில்லாமல் கல்வியையும் இழந்து நின்ற ஒரு சூழலில் எனது வலிகளை ஆற்றுப்படுத்தும் தளமாகவும் என்போன்றவர்களின் வலிகளை வெளிக்கொணரும் ஊடகமாகவும் எழுத்தையும் இலக்கியத்தையும் இனங்கண்டேன்.


இதுவரை வெளிவந்த உங்களது நூல் அறுவடைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது முதலாவது அச்சுரு நூலாக நான்கு கவிஞர்களின் இணை நூலாக மறைந்த கவிஞர் ஜீவகவி அவர்களினால் தொகுக்கப்பட்ட 'புதைந்த உண்மைகள்' எனும் தொகுப்பு நூல் காணப்படுகின்றது. இதில் எனது பத்து கவிதைகள் இடம்பெற்றன. பின்னர் 'வாழ்தல் மீதான வன்முறைகள்' (2010) எனும் சிறுகதை நூலும் பின்னர் 'நன்னபியே நாயகமே' (2016) எனும் உரைநடை நூலும் பின்னர் 'மழை நின்ற போதும்' (2017) எனும் கவிதை நூலும், பின்னர் 'சிவப்புக்கிரக மனிதன்' (2018) எனும் கவிதை நூலும் வெளிவந்திருக்கின்றன.


'வாழ்தல் மீதான வன்முறைகள்' சிறுகதை நூல் பற்றியும் அந்த நூலில் அடங்கியுள்ள கதைகளின் கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது முதலாவது சிறுகதை நூலான வாழ்தல் மீதான வன்முறைகள் நூலில் இடம்பெறுவதற்காக சுமார் 22 கதைகளை நான் உள்ளடக்கியிருந்தேன். அந்த நூலிற்கு முன்னுரை எழுதுவதற்காக மறைந்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களிடம் ஒப்படைத்தபோது அதில் 12 கதைகளை பதிப்பிக்குமாறும் எதிர்காலத்தில் நீர் ஒரு தனித்துவமான எழுத்தாளராக திகழ்வீர் என்றும் கூறி என்னை வாழ்த்தினார். அந்த நூலானது கொடகே சகோதரர்கள் நிறுவனத்தினரால் அச்சிட்டு வெளியிடப்பட்டு அந்த ஆண்டுக்கான கொடகே சாகித்திய விருதினனயும் பெற்றுக் கொண்டது. 


அதில் இடம்பெறும் வாழ்தல் மீதான வன்முறைகள் எனும் கதையின் கரு காத்தான்குடிப் பள்ளிவாயல்களில் விடுதலைப் புலிகளால் என் கண்முன்னே மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலை நிகழ்வினை கருப்பொருளாகக் கொண்டது. அத்துடன் 'மாப்புள்ள விற்கப் போறம்' எனும் கதையானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காணப்படும் சீதன நடைமுறை மற்றும்; காத்தான்குடியின் திருமண நடைமுறை தொடர்பிலான விடயங்களையும் பேசுகின்ற கருவினைக் கொண்ட கதையாகும். மேலும் 'பன் பாயும் வேப்ப மரமும்' எனும் கதை கிழக்கிலங்கையின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழிலான பாய் பின்னல் தொழிலினையும் அதன் மூலமான தமிழ் முஸ்லிம் உறவினையும் பேசுகின்ற கதையாகும். 'புளியங்குளத்து வேப்பமரம்' எனும் சிறுகதை வன்னியில் இருந்து யுத்தத்தினால் வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்து நாடு திரும்பும் ஒரு முதியவர் தொடர்பிலான கருவினைக் கொண்டது. இவ்வாறாக தொகுப்பில் இடம்பெறும் 12 சிறுகதைகளும் வௌ;வேறான சமூக அவலங்களை வெளிக்கொணரும் கதைக் கருக்களைக் கொண்டு அமைந்துள்ளன.


பொதுவாக உங்கள் சிறுகதைகளுக்கான கருப்பொருட்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றீர்கள்?

என்னுடைய சிறுகதைகளின் கருக்கள் எப்போதும் சமூகம் சார்ந்ததாகவே அமைகின்றது. சமூகத்தில் நடக்கும் அவலங்கள், சமூக ஏற்றத் தாழ்வுகள் மற்றும் உளவியல் ரீதியல் ஏற்படும்; தனி மனிதர்களின் வெளிப்படா உண்மைகள், தமிழ் முஸ்லிம் உறவு என எனது கருப்பொருட்கள் நீண்டு செல்கின்றன.


'மழை நின்ற போதும்' கவிதை நூல் பற்றி விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

கொடகே நிறுவனம் தேசிய ரீதியில் நடத்திய கையெழுத்துப் பிரதிப் போட்டியில் முதலாம் இடத்தினையும் 25,000 ரூபாய் பணப் பரிசினையும் மழை நின்ற போதும் எனும் கையெழுத்துப் பிரதியானது பெற்றுக்கொண்டதோடு, அந்த நூலானது கொடகே நிறுவனத்தினாலேயே அச்சிட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


'சிவப்புக் கிரக மனிதன்' கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கவிதைகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

கிழக்கு மாகாண பண்பாட்லுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்த நூலானது எனது கவிதைகளின் அடுத்த பரிமாணம் எனலாம். புதுக்கவிதைப் பாணிக்கும் நவீன கவிதைப் பாணிக்கும் இடையிலான உத்தியைக் கையாண்டு எழுதப்பட்ட நூலாக இதனை நான் கருதுகின்றேன். அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள், இந்த நூல் தொடர்பில் சிலாகித்து என்னுடன் உரையாடியது மகிழ்ச்சியான செய்தியாகும்.


'நன்னபியே நாயககே' கவிதை நூல் பற்றி விஷேடமாகக் குறிப்பட விரும்புவது என்ன?

இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் பற்றி என் இதயத்தில் காணப்படும் நேசிப்பின், காதலின் வெளிப்பாடே இந்நூல். இந்நூலானது இலங்கையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் (2016) வெளியிடப்பட்டதோடு நபிகள் நாயகம் பற்றியதான ஒரு நவீன காவியம் படைக்கும் உத்வேகத்தையும் என்னுள் விதைத்தது. 

இந்நூலின் பின்னட்டைக் குறிப்பில் நாடறிந்த கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கான் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'காத்தான்குடி இலக்கிய நந்தவனத்துள் முதல் பரம்பரையான கவிஞர் அப்துல் காதர் லெப்பைக்குப்பின் இரண்டாவது இலக்கியப் பரம்பரையில் பேசப்படும் ஒருசில நல்ல விதைகள் கிடைத்ததைப் போல் மூன்றாவது பரம்பரையின் முதன்மைப் படைப்பாளியாக முகைதீன் சாலியைப் பார்க்கலாம்'


இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகளில் நீங்கள் அதிகம் நேசிக்கும் கவிதை எது?

எல்லாமே என் குழந்தைகள். எல்லாமே என் நேசிப்புக்குரியன. இருந்தாலும் கேட்தற்காய் ஓன்று, 


'சிலுவை சுமந்த இரவு'


நட்சத்திரங்களும் நிலவும்

அந்தரத்தில் தொங்க

வானம் இடிந்து 

தலையின் மீது 

வியாபிக்கின்றது 


இமயமலை இடம்பெயர்ந்து

நெஞ்சுக்கு மேலாக 

குந்திக் கொள்ள

இதயம் பிதுங்கி

இரத்தம் கசிகிறது


உடைபட்ட இறகு

இரத்தம் சொட்ட

வீட்டுக் கூரையில்

தொங்குகிறது


ஓடிய நதி

பூச்சிய வெப்பத்தால்

உறைந்து கிடக்கின்றது


நிசப்த இரவொன்றில்

எங்கோ கேட்ட

புல்லாங்குழலின்

மெல்லிய நாதம்

இருண்டு கிடக்கும்

மர்மக் குகையின்

குருட்டு வெளவால்களைக் கடந்து

அவள் காதை அண்மிக்கின்றது


அவன் உறங்குகின்றான்...

உயர்ந்த மலரில்

தேனெடுத்த வண்டொன்று

ரீங்காரமிட

இரவு அவனைத் தழுவுகிறது


அவனது சிலுவைகளைச்

சுமந்து கொண்டு

அவள் விழித்துக் கிடக்கிறாள்!!!


சமீப காலமாக வெளிவரும் படைப்புகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தமிழ் வளர்ந்திருக்கின்றது. படைப்புகள் நவீன உலக மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டிருக்கின்றது. படைப்பாளிகள் புதுமையாக வௌ;வேறு கோணங்களில் தங்கள் படைப்புகளை அறிமுகம் செய்கின்றார்கள். இதனை இலக்கியத்தின் ஆரோக்கியமான நிலையாகவே நான் பார்க்கின்றேன்.


சுமார் எத்தனை வருடங்களாக நீங்கள் எழுதி வருகின்றீர்கள்?

1999 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 22 ஆண்டுகளாக நான் எழுதி வருகின்றேன்.

படைப்புகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும்? ஒரு சிறந்த ஆக்கம் எவற்றைப் பிரதிபலிக்க வேண்டும்?

படைப்பதற்கு வரையறைகள் கிடையாது என்றே நான் நினைக்கின்றேன். ஆனால் அவை நிலைத்து நிற்கவும் வாழ்;வதற்குமான சில வடிவமைப்புக்களை கொண்டிருத்தல் வேண்டும். அவற்றை ஆழ்ந்த வாசிப்பின் ஊடாக அடைந்து கொள்ள முடியும். ஒரு சிறந்த ஆக்கம் முதலில் அதனை படைத்தவனையே பிரதிபலிக்கின்றது. எந்த ஆக்கமாக இருந்தாலும் அதில் ஒரு செய்தி இல்லாவிட்டால் காலப்போக்கில் அது காணாமல் போய்விடும்.


நாவல் எழுதுவதில் உங்களது ஆர்வம் எவ்வாறுள்ளது? உங்கள் நாவல் வெளியீட்டை எதிர்பார்க்கலாமா?

ஒரு கருப்பொருளை பின்னிப்பிணைந்த சமூகச் சிக்கல்களோடு வெளிக்கொணர்வதில் நாவலின் செயற்பாடு அளப்பெரியது. சிறுவயதிலிருந்து நாவல் வாசிப்பின் மீதான ஈடுபாடு அதிகம். விரைவில் எனது நாவலொன்றும் வெளிவர இருக்கின்றது.


இளையவர்களிடையே இணையப் பாவனை அதிகரித்து நூல்களின் வாசிப்பு குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் வாசிப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்?

இன்று அதிகளவிலான நூல்கள் இணையத்தில் காணப்படுகின்றன. நூலகங்களில் பெற முடியாத நூல்களைக்கூட மின் நூல்களாகப் பெறும் வாய்ப்பு இன்று அதிகம். சமூக வலைத்தளத்தில் எழுதும், வாசிக்கும் வாசகர்கள் இன்று அதிகரித்திருக்கின்றார்கள். இளையவர்களை இணைய வாயிலாக வாசிக்கத் தூண்டினால் அவர்களின் வாசிப்பை மேம்படுத்த முடியும் என்று நினைக்கின்றேன்.


சக எழுத்தாளர்களுக்கு நீங்கள் முன்வைக்கும் ஆலோசனை என்ன?

வாருங்கள் பேனாக்கள் மூலம் புரட்சி படைப்போம். 


இலக்கியங்களில் முஸ்லிம்களின் வகிபங்கு எவ்வாறுள்ளது?

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அநேகமானவர்கள் தமிழ் மொழியினைத் தங்களின் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இலக்கியத்தின் எல்லாப் பரப்புகளிலும் அவர்களின் பங்களிப்பு மேலோங்கி இருப்பதை அவதானிக்கலாம். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, காவியம் என அனைத்து இலக்கியப் பரப்புகளிலும் முஸ்லிம்களின் வகிபங்கு வியாபித்திருக்கின்றது என்று கூற முடியும்.


உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சினைகளைப் பேசியிருக்கின்றதா?

என்னுடைய அநேகமான கவிதைகள் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசியிருக்கின்றன. குறிப்பாக 2001 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்த 'சுட்டும் விழிச்சுடர்' எனும் பகுதியில் என்னுடைய பெண்களைப் பற்றிய கவிதைகள் தொடராக வெளிவந்ததைக் குறிப்பிட முடியும். அத்துடன் மேற்படி எனது இரண்டு கவிதைத் தொகுதிகளிலும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பான கனிசமான கவிதைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆணாதிக்கம், முதிர்கன்னி முறையீடு, உனது நினைப்பும் கிளியின் சிரிப்பும், பூவுக்குள் பிரளயம், சிலுவை சுமந்த இரவு, துயரம் சுமப்பவள், தாயாகிய கனவு போன்ற கவிதைகளைக் குறிப்பிட முடியும்.


உங்கள் படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த வரவேற்புகள், விருதுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

2010 ஆம் வெளிவந்த 'வாழ்தல் மீதான வன்முறைகள்' எனும் எனது முதலாவது சிறுகதை நூலுக்கு கொடகே தேசிய சாகித்திய விருது கிடைக்கப் பெற்றது. மேலும் 'மழை நின்ற போதும்' கவிதை நூல் தேசிய ரீதியில் இடம்பெற்ற கையெழுத்துப் பிரதிப் போட்டியில் முதலிடம் பெற்று கொடகே தேசிய விருதினைப் பெற்றுக் கொண்டது. அத்துடன், 'சிவப்புக் கிரக மனிதன்' கவிதை நூலானது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு நூலருவாக்கம் செய்யப்பட்டது. 

2001 ஆம் ஆண்டு அஷ்ரப் நினைவு கவிதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம், 2010 ஆம் ஆண்டு உழைக்கும் மக்கள் கலை விழா சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் முதற் பரிசு,  2011 ஆம் ஆண்டு வியர்வையின் ஓவியம் தேசிய கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம், சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு, 2012 குருமண்வெளி அருட்செல்வநாயகம் சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாமிடம் விருது. 2016 வ. அரசரத்தினம் நினைவு சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடம் போன்ற தேசிய ரீதியிலான விருதுகளையும், பரிசில்களையும் பெற்றுக்கொண்டுள்ளேன்.

2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளராகக் கலந்து கொண்டதுடன், 2011 ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இடம் பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் பேராளராகக் கலந்துகொண்டேன். அத்துடன் 2016 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலக்கியப் பணிக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு எனது நன்னபியே நாயகமே எனும் நூலும் அம்மாநாட்டில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு  காத்;தான்குடி பிரதேச செயலகம் 'கவித்தீபம்' பட்டம் வழங்கி என்னை கௌரவித்தது. 2016 ஆம் ஆண்டு  இஸ்லாமிய இலக்கிய கழகத்தின்; 'கவித்தாரகை' விருது மற்றும் 2016 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண அரச இளம் களைஞர் விருது என்பவற்றைப் பெற்றுக்கொண்டேன். 2013 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கான கலைஞர் தெரிவில் நடுவராகக் கடமையாற்றியதுடன் 2014 ஆம் ஆண்டும் கிழக்கு  மாகாண முதலமைச்சர் விருதுக்கான கலைஞர் தெரிவிலும் நடுவராகக் கடமையாற்றியுள்ளேன்.


எதிர்காலத்தில் எவ்வாறான நூல்களை வெளியிட உத்தேசம்?

எனது கனவு நூலான நாவல் ஒன்றினை எழுதி முடித்திருக்கின்றேன். அது விரைவில் வெளிவர இருக்கின்றது. அத்துடன் எனது பரிசு பெற்ற சிறுகதைகள் அடங்கிய சிறுகதை நூலொன்றும், கிராமியக் கவிதைகள் அடங்கிய நூலொன்றும், 'நபிகள் நாயகம் ஓரு நவீன காவியம்' எனும் நவ காவிய நூலொன்றும் வெளிவர இருக்கின்றது.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்?

ஒரு எழுத்தாளனின் மூலதனம் வாசிப்பு. அதிகம் வாசித்து, நிறைவாய் எழுதினால் சமூக மாற்றத்திற்கான உண்மை இலக்கியம் பிறக்கும்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


35. கவிஞர் வை. கஜேந்திரன் அவர்களுடனான நேர்காணல்

 கவிஞர் வை. கஜேந்திரன் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத் திருநாட்டிலே எண்ணற்ற வரலாறுகளைக் கொண்ட புகழ் பூத்த யாழ்ப்பாணத்திலே எழில்மிகு ஊர்காவற்துறை கரும்பொன்னிலே திரு. திருமதி. வைரமுத்து கிறிஸ்ரின் வசந்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாய் இப்புவியிலே பாதம் பதித்தேன். தமிழன்னையும் எனதன்னையும் இணைந்து என்னை அணைக்க கலைச் செம்மல் கவிஞர் வை. கஜேந்திரன் ஆனேன்.


உங்கள் ஊர் பாடசாலை மற்றும் தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?


எனது ஊர் பல சான்றோர்களையும் அறிஞர்களையும் கல்விமான்களையும் தந்துள்ளது. இங்கு கரும்பொன் ஊர்காவற்துறை (காவலூர்) மிகவும் பழமையான வணிகம் மூலம் வருமானம் வழங்கிய துறைமுகம் அக்காலத்தில் அமைந்திருக்கிறது. எனது பாடசாலைக் காலம் பெரிதும் மகிழ்ச்சியாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நான் குறைந்தது 08 பாடசாலைகளிலாவது கல்வி கற்றிருப்பேன். அப்படிக் கற்றும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி இருந்தும் நாட்டில் ஏற்பட்ட அசாதரண நிலையில் வெளிநாடு சென்றேன். 

அங்கும் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து மீண்டும் நாடு திரும்பினேன். இருந்த கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு வேலை தேடினேன், கிடைக்கவில்லை எல்லாம் சிபாரிசு. குறைந்தது 60 நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருப்பேன். எந்தப் பலனும் இல்லை. கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தேன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 32 வயதில் 32 தொழில்களைச் செய்தாராம். அதுபோல நானும் பல தொழில்களைச் செய்திருக்கிறேன். பல போராட்டங்களின் பின்னர் மன்ஃஅல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் நூலகப் பணியாளராக தற்போது பணியாற்றி வருகின்றேன். 


உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான உங்களது குடும்பப் பின்னணி - இளமைப் பருவம் போன்றவற்றையும் கூறுங்கள்?

எனது தந்தை தந்தை வைரமுத்து. தாய் கிறிஸ்ரின் வசந்தி (அமரர்). மூத்த சகோதரன் வை. டிலோசன், இளைய சகோதரன் வை. அனோஜன், தங்கை சுபாசினி (அமரர்). சிறிய நடுத்தர வருமானமுடைய குடும்பம் என்னுடையது. தாய், தந்தையர்கள் மிகவும் கட்டுப்பாடுடையவர்கள். ஆனால் கலையார்வமிக்கவர்கள். அவர்களின் கலையார்வம் என்னுள் இருந்து எட்டிப் பார்த்த காலம் நான் சாதாரண தரம் இறுதிப் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையாகும். அப்போது நான் முதலில் எழுதிய கவிதை



பரீட்சை வந்தது

பதற்றம் தந்தது

பாதி இரவு தூக்கம் கலைந்தது


தனிமையில் இருந்து பார் 

நண்பனைப் பிரிந்து பார் 

நாளைய பரீட்சைக்கு நீ தயார்


இதை எனது நண்பனிடம் கொடுத்தேன். பார்த்த வேகத்திலே கிழித்து எறிந்துவிட்டான். ஏனடா என்றேன். அது என்ன நண்பனை பிரிந்து பார்.. லூசாடா நீ.. என்றான். அந்தக் கவிதையைத் திருத்தி எழுதிய பின்புதான் அவனுடன் மீண்டும் நட்பு.


சாதாரண தரம் எழுதி உயர்தரம் கற்கும் நேரத்தில் மீண்டும் எனக்குள் இருந்த கவிஞன் கண் விழித்தான். இம்முறை ஒரு காதல் கவிதை எழுதினேன்.


அவள் ஒரு முல்லை மொட்டு

அவள் என் கண்ணில் பட்டு 

அவளுக்காக ஒரு காதல் பாட்டு

அவள் மனதில் காதலை நிலைநாட்டு


இப்படியாக தொடங்கி முடிவில் 


அவளை பிரியமாட்டேன் விட்டு

அவளை தொட்டு 

இடு நெற்றியில் பொட்டு 

ஒரு தாலி கட்டு 



இந்தக் கவிதை நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. வகுப்பாசிரியரிடம் கவிதை சென்றதும் படித்து பரீட்சையில் சித்தியடைய முதல் விழுந்தது திட்டு.


நீங்கள் எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகிறீர்கள்?

இலகியத் துறைகளில் கவிதை, சிறுகதை, சிறுவர் கதை, சிறுவர் கவிதை. நாடகம், பாடல், ஆய்வு, கட்டுரைகள், விமர்சனக் குறிப்புகள் தற்போது நாவல் ஒன்றும் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். எழுத்துறையோடு ஊடகவியலாலராக பணிபுரிகின்றேன். அத்துடன் நடிப்பு, திரைக்கதை இயக்குநர் என்று எனது பணிகள் தொடர்கின்றன. இதுவரை 8 குறுந் திரைப்படங்களை இயக்கியுள்ளேன். அதுமட்டுமல்லாமல் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் எனக்கு என்ன வருமோ அவற்றையே செய்து வருகின்றேன்.


உங்களது முதலாவது படைப்பை எழுதிய தருணம் எப்படியிருந்தது? இற்றை வரைக்கும் எவ்வாறான ஆக்கங்களை எழுதியுள்ளீர்கள்?

எனது முதலாவது படைப்பை எழுதிய தருணம் மிகவும் அருமையானது. உயர்தரம் கற்கும் அந்த இரண்டு வருடங்களில் காதல் கவிதைகள், கல்விக் கவிதைகள் எழுதி எனது சக மாணவர்களிடம் கொடுப்பேன். கொடுக்கும் போது அவர்களுக்குப் பிடித்திருந்தால் கையொப்பம் இடச் சொல்வேன். வகுப்பில் இருந்த 25 மாணவ மாணவிகளில் குறைந்தது 10 முதல் 18 பேர் வரை கையொப்பம் இடுவார்கள். மீதி உள்ள 07 மாணவர்களுக்காக இன்னும் எழுதினேன். 24 பேருக்கும் பிடித்துப்போனது. ஒருவன் மட்டும் சிறந்த காதல் கவிதை எழுதித்தா, என் காதலி எனது காதலை ஏற்றுக்கொண்டால் உனது கவிதையையும் உன்னை கவிஞன் என்றும் ஏற்றுக் கையொப்பம் இடுகின்றேன் என்றான். இது எனக்கு பெரிய சவாலாக அமைந்தது. எப்படிச் சரி இவனையும் கையொப்பம் இடவைக்க வேண்டும். அப்போது எழுதிய கவிதையே  யாழ் பேருந்து பயணத்தில் என்ற பின்வரும் கவிதையாகும்.



அவள் அங்கம் மின்னும் தங்கம் 

அவளை காணவிட்டாள் என் நெஞ்சம் ஏங்கும்

அவள் குரலோ அதிரும் மிருதங்கம்

அவள் கண்டாள் அமுது பொங்கும் 


என்று நான் எழுதிக்கொடுத்தேன். அவன் காதலில் ஜெயித்தான். பிறகு என் கவிதைக்கு கையொப்பமிட்டான்.

பிறகு என்ன 25 மாணவர்களுக்கும் எனது கவிதை பிடித்திருக்கிறது. இப்படியானதொரு பொழுதில்தான் எனது கவிதைக் கையேடு களவுபோனது. மிகவும் கவலையடைந்தேன் தீவிர தேடுதலில் 07 நாட்களின் பின்னர் எனது கைகளில் கவிதைக் கையேடு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மீண்டும் தொலையாமல் இருக்க என்ன செய்யலாம் என்ற எனது சிந்தனையில் ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு சிறிய நூலை ஆக்கலாம். அப்படிச் செய்தால் தொலையாது. 


பத்திரிகையில் அமரர் செ. செபமாலை (குழந்தை) அவர்களின் நேர்காணலைப் பார்த்தேன். அடுத்த நாளே அவரது இல்லத்தில் எனது கவிதைகளோடு நின்றேன். என்ன என்றார். குழந்தை மாஸ்ரர் சேர் நான் எழுதிய கவிதைகள் நூலாக்க வேண்டும் என்றேன். எனது கவிதைகளை வாங்கிவிட்டு 10 நாள் கழித்து வாரும் என்றார். அந்தப் 10 நாட்களும் 10 வருடங்கள் போல் மிகவும் கொடியதாய் நகர்ந்தது எனக்கு. சரியாக 10 ஆவது நாள் அவரது இல்லத்தில் நானும் எனது நண்பன் இந்திரக்குமாரும் மாலை 6.30 மணியில் இருந்து 9.30 மணிவரை காத்திருந்தோம். நாடக மேடையேற்றம் முடிந்து முச்சக்கரவண்டியில் வந்து இறங்கிய குழந்தை மாஸ்ரரும் அவரது துணைவியாரும் என்ன தம்பிகள் இந்த நேரத்தில் என்றார். (8 மணிக்குப் பிறகு நடமாட முடியாது பயம்) கவிதை நூலாக்க என்று இழுத்தேன். இந்த ரீயைக் குடியும் என்று குழந்தை மாஸ்ரரின் துணைவியார் செல்லவும், எதுவும் சொல்லாமல் குழந்தை மாஸ்ரர் எனது கவிதை பயிலைக் கையில் தந்தார். நண்பன் என்னிடம் மெதுவாக எதுவும் எழுதவில்லையா என்று கேட்டான். கொஞ்சம் பொறு என்று சொல்லி பைலைப் பிரித்தேன். அதில் 05 பக்கங்களில் அணிந்துரை சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அத்தருணம் எனது கால்கள் தரையில் இல்லை. காற்றில் பறந்தேன். 


ஆரம்ப காலங்களில் உங்கள் படைப்புகளுக்குக் களம் தந்த ஊடகங்கள் பற்றி?

ஆரம்ப காலங்களில் எனது படைப்புகளுக்கு எந்த ஊடகங்களும் களம் தரவில்லை. ஏன் என்றால் அந்நாட்களில் எனக்கு ஊடகங்களில் பெரிதாக அறிமுகமில்லை. என்னையும் ஊடகங்களுக்குத் தெரியாது. எனது ஆக்கங்கள் ஊடகங்களிற்கு அனுப்பி வராவிட்டால் எனக்கு கவலையேற்படும். புறக்கணிக்கப்படுவதை விரும்பாத நான் முதல் நூல் வெளியான பின்பே சில படைப்புகளை ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தேன். அந்தவகையில் மன்னா கிறிஸ்தவப் பத்திரிகை எனது படைப்புகளை வெளியீடு செய்தது. அத்துடன் தினக்குரல், வீரகேசரி, தினமுரசு வாரமலர், மெட்ரோ நியூஸ், தினகரன், உதயன் போன்ற ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் ஆகியவற்றிலும் வெளிவந்தன. அதற்கு உதவிய ஊடகவியலாளர்களையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூறுகின்றேன்.



இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

இதுவரை சுமார் 05 நூல்களை வெளியிட்டள்ளேன். அவை பின்வருமாறு:-

01. துளிகள் (கவிதைத் தொகுதி) 2005.06.06  

02. துடிக்கும் விழிகள் (கவிதைத் தொகுதி) 2014.03.27

03. மறுபிறப்பு (சிறுகதைத் தொகுதி) 2016.12.13 

04. வைரமுத்துக்கள் (சிறுவர் கவிதை) 2020.12.14

05. நிலா (சிறுவர் கதை) 2021.12.29


இவைதவிர தற்போது கவிதைகள், சிறுகதைகள், நாவல், ஆய்வுகள் என்று எழுதிக்கொண்டு இருக்கின்றேன். சிறுவர் இலக்கியப்; படைப்புகளையும் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். பொருளாதாரம் சரியாக அமைந்தால் அவற்றை விரைவாக வெளியிடுவேன்.


உங்கள் துடிக்கும் விழிகள் கவிதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? அதில் உள்ளடக்கம் பெற்றுள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது முதலாவது படைப்பு வெளிவந்த பின்பு நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று, அங்கிருந்து திரும்பி வந்தபின்பே எனது முதலாவது படைப்பை வெளியீடு செய்தேன். பின்னர் 09 ஆண்டுகளின் பின்பு பெரும் முயற்சியில் துடிக்கும் விழிகள் கவிதை நூலினை வெளியிட்டேன்.

மன்னாரில் துளிகள் கவிதை நூல் வெளியிடும் போது சிறிய வயதில் வெளியிட்ட மாணவன் என்று சொன்னவர்கள். 09 ஆண்டுகளின் பின்பு துடிக்கும் விழிகள் வெளியிடும் போது யார் இவன் புதிதாய் என்று கேட்டார்கள். ஒரு நூல் வெளியிடுவது மட்டுமல்ல கலைஞன் ஒருவன் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டும். அது காலங்கடந்தும் நிலைக்க வேண்டும் என்று அப்போதுதான் உணர்ந்தேன்,  

துடிக்கும் விழிகள் நூலில் உள்ள கருப்பொருட்கள் எல்லாம் அவ்வப்போது எனது வாழ்வில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், இயலாமைகள், நம்பிக்கைகள் என்று எல்லாமே கவிதைகளாக வெளிப்பட்டவைகள்தான் நூலில் உள்ளடகடகம் பெற்றுள்ளன. எனது வாழ்வில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், மாற்றங்கள், மறக்க முடியாத சம்பவங்கள், மனவடுக்கள் போன்றவை கருப்பொருளாய் அமைந்து அவை கவிதைகளாக வெளிப்படுகின்றது என்றும் சொல்லலாம்.

 

நீங்கள் வாசித்த பல கவிதைகளில் உங்கள் மனதில் பதிந்துள்ள ஏனைய எழுத்தாளர் ஒருவரின் ஒரு கவிதையைப் பற்றிச் சொல்லுங்கள்?

எல்லா எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். ஆனாலும் நான் அதிகளவான படைப்புகளை எனது படைப்புகள் வெளிவந்த பின்புதான் படித்தேன். ஏனைய எழுத்தாளர்களது படைப்புகளை படிக்கும் போது அவர்களின் சாயல் எனக்குள் வந்துவிடும் என்ற பயம்தான் அதற்குக் காரணம். எனது பல நண்பர்கள் எழுத்தாளர்களாக, கவிஞர்களாக உள்ளனர். ஆதலால் ஒருவரின் கவிதைபற்றி தனியே குறிப்பிட முடியாது. அப்படி இருந்தும் மிகவும் பிடித்த கவிதையாக புரட்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கவிதை வரிகள் சிலவற்;றைப் பற்றி பகிர்ந்துகொள்கின்றேன்.


இருப்பாய் தமிழா நெருப்பாய்!


இருப்பாய் தமிழா நெருப்பாய்!

இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!

இருப்பாய் தமிழா நெருப்பாய்!


குட்டக்குட்ட நீ குனிந்தால் உலகத்தில்

குட்டிக்கொண்டே தானிருப்பான் - முரசு

கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்

குதிகால் பட ஓடிப் பறப்பான்!


வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்

வல்லமை உன்பகை உடைக்கும்! - அட

நெஞ்சில் தமிழ் வீரம் பொங்க நில்லடா! 

நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!


சிறுகதைகள், கவிதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்?

எனது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், ஏமாற்றங்கள், கோபங்கள், சந்தோசங்களை அப்படியே தேக்கி வைத்துக்கொள்வேன். அதே எனது முன்னிலையில் இன்னொருவருக்கு ஏற்படும் போதும், என்னிடம் யாரும் பகிரும் போதும். ஆம் நான்பட்ட துன்பங்கள் இன்னொருவன் படக்கூடாது. எனது வாழ்வில் இருந்து அவனுக்கு படிப்பினையாக அமைய வேண்டும். அந்த எழுத்தில் இருந்து அவனது வாழ்வை உயர் நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் கருத்தாழம், பொருள் செறிவு இருப்பதோடு தெளிவு பெற வேண்டும் என்ற எண்ணம் தோணும் போதும் எழுதுகோளை ஆயுதமாகத் தூக்கித் தடைகளைத் தகர்ப்பேன். என் வாசகன் நல்வழியில் செல்ல, எனது இனத்தின் பெருமைகளை, விழுமியங்களை, பாடுகளை, வரலாறுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்த, எனது பேனாமுனையோடு சுயசிந்தையும் பயணிக்கும். இது ஒவ்வொரு எழுத்தாளினதும் தலையான கடமை உடமை உரிமை.


உங்கள் சிறுகதை நூலுக்கு மறுபிறப்பு என்ற தலைப்பை ஏன் வைத்தீர்கள்?

ஓவ்வொரு பெண்ணும் குழந்தையை பெற்றெடுக்கும் போது மறுபிறப்புத்தான் எடுக்கிறாள். அதுபோலவே ஒவ்வொரு படைப்பாளனும் தனது படைப்பை வெளிக்கொண்டுவர படாதபாடு படுகின்றான். தாய்மையின் வலியை எப்படி ஏனையவர்களால் உணர முடியாதோ அதேபோல்த்தான் எழுத்தாளனின் நூல் வெளியீட்டு வலிகளையும் உணர முடியாது. அதிலும் அணிந்துரை பெறுவதில் இருந்து அச்சிடுதல் மற்றும் வெளியீடு செய்வது வரை அவன் 10 மாதம் பிள்ளையை சுமக்கும் கர்ப்பிணிப் பெண் போலவே மிகவும் கஷ்டப்படுகின்றான். அதற்காகவே எழுத்தாளர்கள் தற்போதைய சூழலில் இருந்து மறுபிறப்பு எடுக்க வேண்டும் என்பதாகவே எனது நூலின் தலைப்பு அமைந்தது.


ஆக்க இலக்கியப் படைப்புகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும் என்று பொதுவாகக் கேட்கும் ஒருவருக்கு நீங்கள் என்ன பதிலைச் சொல்வீர்கள்? 

ஆக்க இலக்கியப் படைப்புகள் என்பது அவரவர் கற்பனை வளம், எழுத்தார்வம், கருத்தாளுமை, பரந்துபட்ட அறிவின் வெளிப்பாடுகளாக அமையும். அவரவர் விரும்பிய படைப்புகளை படைக்கின்ற போது அது அவரது சொந்த விடயமாக இருக்கலாம், இனத்தின் அடையாளமாக இருக்கலாம். ஆனால் அப்படைப்புகள் அவரது சமூகம் சார்ந்திருக்கிற அதேவேளை அப்படைப்பு பொதுவானதாகவும் ஏனைய மக்களின் வாழ்வியலைப் பேசுவதாகவும் இருக்கும் என்றால் அந்த ஆக்க இலக்கியப் படைப்பு நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.


உங்கள் சிறுகதைகளுக்கான பல்வேறு வகையிலமைந்த கருப்பொருட்களை எவ்வாறு தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள்?

எனது சிறுகதைக்கான கருப்பொருட்களை எனது வாழ்வில் என்னோடு பயணிக்கின்றவர்களின் வாழ்வின் கதைகள்தான். கவிதையில் சொல்ல வந்த விடயம் மறைமுகமாக இருந்தாலும் சிறுகதையில் பாத்திரங்களின் பெயர்கள் மாறுமே தவிர நடந்த சம்பவங்கள் மாறாது. எனது சிறுகதையில் பல கதைகள் அப்படித்தான் உள்ளன. எனது அம்மா சொன்ன கதையின் பின்னணியில் உருவானதுதான் தங்கம் உண்மைச் சம்பவம் தொடர்பான சிறுகதை. இப்படிப் பல கதைகள் இருக்கிறது. பல சிறுகதைகளின் கூட்டு நாவலாவது போல பல நாவல்களின் கூட்டு காவியமாகும். ஒவ்வொரு மனதுக்குள்ளும் ஏராளமான சிறுகதைகள் உண்டு. அவர்களுடன் பேசும் போது வெளிப்படும். அப்படி அவர்களின் மனதில் இருக்கும் நினைவுகள் என்னைப் போன்ற எழுத்தாளர்களின் காதுகளில் விழுந்தால் சிறுகதையாகிவிடும்.


நீங்கள் வெளியிட்ட சிறுவர் நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? சிறுவர் நூல்களைப் படைக்க ஆர்வம் காட்டியமைக்கான விசேட காரணி என்ன?

எனது முதல் மூன்று படைப்புகளும் கவிதை, சிறுகதை பொதுவானதாகத்தான் இருந்தது. என்னிடம் பாடசாலை கீழ் வகுப்பு மாணவர்கள் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதித்தரச் சொல்லிக் கேட்பார்கள். அப்போது நான் எனது இடத்தில் இருந்து எழுத முடியாது. அவர்களைப் போல சிறியவர்களாகி சிந்திக்க வேண்டும். எழுதவும் வேண்டும். அப்படி எழுதிக் கொடுக்கின்ற போது, ஒருநாள் எனது தாயார் என்னிடம் ஒரு விடயத்தைச் சொன்னார். இப்படி எழுதிக்கொடுப்பதைவிட, எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக்கொடு அடுத்த முறை அவர்களே எழுதுவார்கள் என்றார். அன்றிலிருந்து தாயின் கருத்தையே கடைப்பிடிக்கின்றேன். 

சிறுவர் இலக்கியம் சார்ந்த நூல்களின் வரவு மிகவும் குறைவாக உள்ளது. சிறுவர்களுக்கான படைப்புகளை எழுதினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். சிறுவர்களுக்கு ஆரம்பத்திலேயே நல்ல விடயங்களை சொல்லிக் கொடுத்து வழிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இது காலத்தின் கட்டாயம். அதன் விளைவாக வெளிவந்ததுதான் வைரமுத்துக்கள் சிறுவர் கவிதைகள் மற்றும் நிலா சிறுவர் கதை நூல்கள். நானும் சிறுவனாக மாறி சிறுவர் இலக்கியம் படைக்க புறப்பட்டிருக்கின்றேன். சிறுவர் சிறப்புடன் வாழ எனது போனாவும் முயற்சித்திருக்கிறது.


நிலா என்ற சிறுவர் கதை நூல் பற்றி என்ன சொல்வீர்கள்?

பெரியவர்களோ சிறியவர்களோ யாராக இருந்தாலும் கதை சொல்வதும் கேட்பதும் பிடிக்கும். அதுவும் சிறியவர்களுக்கு கதை மிகவும் பிடிக்கும். அன்றைய காலத்தில் தாத்தா, பாட்டி, பெரியோர்கள், அம்மா, அப்பா, ஆசிரியர் என எல்லோரும் கதைகளைச் சொல்லித்தான் அன்பு, பண்பு, பணிவு, ஒழுக்கம் என்று எல்லாம் கற்றுக்கொடுத்தார்கள். அந்தக்காலம் அருமையானது. நவீன யுகத்தில் அந்தக் காலத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே நிலா சிறுவர் கதையின் நோக்கமாக உள்ளது. சிறுவர்கள் ஒவ்வொருவரும் பிரகாசமாய் உயரத்தில் நிலாவைப் போல் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.


ஒரு நூல் பிரசுரம் என்பது ஒரு பிரசவத்துக்கு ஒப்பானது என்கிறார்களே. இதுபற்றி என்ன சொல்வீர்கள்?

பெண்களுக்கே உரித்தானது பிரசவம். அதுபோல எழுத்தாளர்களுக்கே உரித்தானது பிரசுரம். அதுவும் எந்த வித நிதி வழங்களும் இல்லாமல் சொந்த நிதியில் இருந்து வெளியீடு செய்வது என்பது பிரசவம்தான். இந்த உலகில் பாராட்டவோ ஊக்கமளிக்கவோ இருப்பவர்கள் மிகக் குறைவு. ஆனாலும் ஆனந்தமாய் தனது குழந்தையின் முகத்தைக் காணும் போது எப்படி, தாய் தான்பட்ட வேதனைகள் வலியினை மறந்து விடுகிறாளோ அதுபோல தனது படைப்பு பிரசுரமானதும் அந்த சந்தோச வானில் பறக்கிறான் படைப்பாளன். படைப்புகளின் மூலம் பணத்தினை உழைக்க எந்தப் படைப்பாளனும் படைப்பதில்லை. படைப்பின் மூலம் தன்னையும் தனது சமூகத்தையும் வெளிக்கொணரவே அவன் விரும்புகின்றான்.


எழுத்து தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?

தினமகுடி சஞ்சிகையில் பணியாற்றியுள்ளேன். வாகை சஞ்சிகையை வெளியீடு செய்துள்ளேன். தமிழமுது நண்பர்கள் வட்டம் எனும் அமைப்பின் இயக்குநராக இருந்து கல்விக்கான  சேவைகளைச் செய்து வருகின்றேன். பல சமூகசேவை அமைப்புக்களில் பொறுப்பாக இருந்து சேவையாற்றி வருகின்றேன்.


உங்கள் இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

எனது துளிகள் நூல் வெளியீட்டு நிகழ்வை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஆசான் செ. செபமாலை குழந்தை மாஸ்ரர், எனது பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள், நண்பர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் என்று நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஒவ்வொருவரையும் மறக்க முடியாது. ஆரம்பகால எனது இலக்கிய வாழ்வில் என்னை அடையாளப்படுத்த பெரிதும் பாடுபட்டேன். அப்படியான தருணத்தில் தான் நான் ஊடகத் துறையினைத் தெரிவு செய்தேன். சில வருடங்கள் இலவசமாகவும் பல வருடங்கள் குறைந்த சம்பளத்திற்கும் வேலை செய்தேன். விசேடமாக நான் தெரிவு செய்தது கலைஞர் சந்திப்புத்தான். இதுவரை 90 கலைஞர்களை நேர்காணல் செய்துள்ளேன். என் வாழ்வில் மறக்க முடியாத சம்வங்களில் இதுவும் ஒன்று. இப்பணியை இப்போதும் தொடர்கின்றேன். கலைஞர்களை, கலையார்வம் கொண்டவர்களை வெளிக்கொணர்வேன். அவரவர்களுக்குரிய அடையாளம் அவர்களை நிலை நிறுத்தும்.


இலக்கியத் துறையில் உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புகளுக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றிக் கூறமுடியுமா?

2008 ஆம் ஆண்டு மலேசியா முத்தமிழ் படிப்பகம் நடாத்திய தமிழுணர்வு கவிதைப் போட்டியில் பரிசு கிடைத்தது.

2014 - 2021 வரை அரச கலை இலக்கிய விழாவில் பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் கவிதை, சிறுகதை, பாடல், ஆய்வு, சிறுவர் இலக்கியம் படைப்புகளில் முதலாம், இரண்டாம, மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளேன்.

2017.10.21 இல் வெளியீடு செய்யப்பட்ட '1000 கவிதைகள் கவிஞர்கள்' பெருநூலில் 1790 - 1791 பக்கத்தில் பெண்ணாய் இரு என்ற எனது கவிதை பிரசுரமாகியுள்ளது.

2017.09.22 இல் யூனியன் கல்லூரி மண்டபம் யாழ்ப்பாணத்தில் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் விளையாட்டுத்துறை அமைச்சும் வடமாகாணத்தின் கலாச்சாரப் பணிப்பாளர் அவர்களால் மறுபிறப்பு சிறுகதை நூலுக்காக இளங்கலைஞர் விருது வழங்கப்பட்டது.

2017.11.21 இல் மன்னார் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட இலக்கிய விழாவில் இலக்கியத் துறைக்காக 'கலைச்செம்மல்' விருதும் சான்றிதழும் பெற்றுக் கொண்டேன்.

2017.11.25 இல் மன்னார் கலை இலக்கியப் பெருவிழாவில் இலக்கியத் துறைக்காக 'மன்கலைச்சுரபி' விருதும் சான்றிதழும் பெற்றுக்கொண்டேன்.

2018.06.03 அன்று மன்னார் மாவட்ட சைவக் கலை இலக்கிய மன்றத்தினால் நடாத்தப்பட்ட கம்பன் விழாவில் கவிதைக்காக 'கவிச்சுடர்' விருதும் சான்றிதழும் பெற்றுக்கொண்டேன்.

2018.01.27 உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கலை இலக்கியப் பெருவிழா சிறப்பு மலரில் சரித்திரம் உனை சந்திக்கும் என்ற எனது கவிதை 90 ஆம் பக்கத்தில் பிரசுரமானது.

2018.07.01 இல் எனது புது முயற்சியாக ஒரே தடவையில் 03 குறுந் திரைப்படங்கள் வெற்றி கலைச்சங்கம் வெளியீடாக வெளிவந்தது. இது பலரின் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2019.10.11 இல் வடமாகாண கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமும்; வெற்றிக் கிண்ணமும் சான்றிதழும் கிடைத்தது.

2020.12.06 இல் தேசிய கலைஞர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டேன்.


இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீகள்?

இலங்கையில் உள்ள கலைஞர்கள் பெரும்பாலும் மாவட்ட ரீதியாகத்தான் பல அமைப்புக்களில் இருக்கின்றார்கள், தொழிற்படுகின்றார்கள். அனைத்து கலைஞர்களையும் உள்ளடக்கிய ஒரு அகில இலங்கை கலைஞர்கள் சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை இந்த நேர்காணல் மூலம் முன்வைக்கின்றேன். இந்த அகில இலங்கை கலைஞர்கள் சங்கத்தினூடாக வருடத்தில் இரண்டு தடவையாவது கலந்துரையாடல், சந்திப்பு, அறிமுகம் என ஈடுபடலாம். கலைஞர்கள் இறக்கும் போது அவர்களுக்கான இறுதிச் சடங்கு செலவுகளை ஏனைய கலைஞர்கள் பொறுப்பெடுத்துத் செய்யலாம். மூத்த இயலாத கலைஞர்களுக்கான சிறிய கொடுப்பனவை மாதாந்தம் வழங்குவதற்கான முயற்சிகளைச் செய்யலாம். புதிய கலைஞர்களின் படைப்பு வெளியீடு செய்தலும் எல்லா கலைஞர்களும் குறைந்தது ஒரு பிரதி என்றாலும் பெற்றுக்கொள்ளல் அவர்களை ஊக்குவிக்க ஏதுவாக அமையும். அத்துடன் வளரிளம் கலைஞர்களது படைப்புகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற விடயங்களையும் கவனத்தில் எடுப்பது சிறப்பாக இருக்கும். மாவட்டம், மாகாண ரீயிலும் தேசிய ரீயிலும் இனம், மொழி, மதம் கடந்து செயற்படும் ஒரு பலம் பொருந்திய சங்கமாக இச்சங்கம் செயற்பட வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



34. கவிஞர் ஆ.லெ.மு. இர்ஷாத் உடனான நேர்காணல்

 கவிஞர் ஆ.லெ.மு. இர்ஷாத் உடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகம் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது பெயர் இர்ஷாத். நான் வாழைச்சேனையில் வசித்து வருகிறேன். பாடசாலைக் கல்வியை தரம் 01 – 13 வரை மட்/மம/ வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கற்று கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு நான்கு ஆண்டுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்தேன்.


உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடுங்கள்?

குடும்பப் பின்னணி எனும் போது நான் இலக்கியவாதியாக மலர்வதற்கு என் தாய்தான் அடிப்படையாக இருந்திருக்கிறார். அவர் இரண்டாம் தரம் வரை கற்றவர். என் தாய் படிப்பில் முதன்நிலை மாணவியாக இருந்தும் அவரின் பெற்றோர் தங்களது வியாபார நிலையத்தை பராமரிப்பதற்காக வேண்டி தாயாருடைய கல்வியை இடையில் நிறுத்திவிட்டனர். அவர் கடையில் இருந்த நேரங்களில் மித்திரன் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள், கட்டுரைகள், கவிதைகளை வாசித்திருக்கிறார். அவர் வாசித்த அக்கருத்துக்கள் மரபணு ரீதியாக என்னை இலக்கியவாதியாக அடையாளம் காட்டியிருப்பதாகவே நான் உணர்கிறேன். எனது சிறுபருவத்தில் தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளும் வீட்டில் வாங்கப்படும். அவற்றில் வருகின்ற பாப்பா முரசு, முளைவிடும் அரும்பு போன்ற பகுதிகளை வாசித்ததும் நான் இலக்கியவாதியாக பிரசவிப்பதற்கு ஒரு தூண்டியாக அமைந்திருக்கிறது.


உங்களது முதலாவது ஆக்கத்தை பத்திரிகையில் பார்த்தவுடன், உங்களது மனநிலை எப்படி இருந்தது?

மட்டில்லா மகிழ்ச்சியாக இருந்தது. பத்திரிகைக்கு அனுப்பிய ஆக்கங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்குமா? பிரசுரமாகி இருந்தால் அதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பத்திரிகைக் கடையை அடைந்து பத்திரிகையில் எனது கவிதைகளைக் கண் பார்க்கும் வரை இருக்கும். இப்போது இணையத்தின் மூலமாக பார்க்க முடிகிற படியினால் இந்த ஆர்வம் பெரிதாக இல்லை. 


உங்களது எழுத்துகளின் படிநிலை வளர்ச்சி பற்றிக் கூறுங்கள்?

2000 ஆம் ஆண்டில் நான் தரம் 07 இல் கல்வி கற்கும்போது என்னில் கவிதை வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில காலங்கள் உறங்கு நிலையில் இருந்தேன். பின் கவிதை எழுதுவதும் அவற்றைக் கிழித்து வீசிவிடுவதுமாக இருந்தேன். உயர் தரத்தில் கற்கும்போதே எழுதிய கவிதைகள் சிலவற்றை சேமிக்கத் தொடங்கினேன். பல்கலைக்கழகம் சென்ற பிற்பாடு கவிதை எழுதுவது தீவிரமானது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் என்னை எழுதும்படி தூண்டினார். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியானதும் பத்திரிகைகளுக்கு கவிதைகளை அனுப்பத் தொடங்கினேன். பல்கலைக்கழகம் செல்வதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டில் 'அவன் திருடனா?' என்ற தலைப்பில் சிறுகதையையும் எழுதி வைத்திருந்தேன். ஹைக்கூ வகைமைக் கவிதைகளோடு சிறுவர் கதைகளையும் எழுதி வருகிறேன். கவிதைக்காக காத்திருப்பதைவிட அவ்வப்போது உதிக்கின்ற வரிகளை எழுதிக்கொள்கிறேன். நாவல் எழுதுவதற்கான களம் இருக்கிறது. இறைவன் நாடினால் அதற்குரிய பக்குவம் வந்ததும் எதிர்காலத்தில் எழுதுவேன்.


வெளிவந்த உங்களது முதல் பிரசவம் 'ஒளி பூக்கும் இரவு' ஹைக்கூ கவிதை நூல் பற்றிக் கூறுங்கள்?

2017 – 2020 வரை என்னால் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைக்கூகளைக் கொண்டு இந்நூலை வெளியிட்டேன். நிதி நிலையை ஒழுங்கு செய்யத் தாமதமானதால் நூல் பிரசுரமும் தாமதமானது. முதலில் வெளிவந்திருக்க வேண்டியது எனது புதுக்கவிதை நூலே. ஆனாலும் ஹைக்கூ அதனை முந்தி முதலில் வெளிவந்துவிட்டது. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த இந்த ஹைக்கூ நூலில் முனைவர் ம. ரமேஷ், முனைவர் வெ. புகழேந்தி, ராஜூ ஆரோக்கியசாமி, இளையபாரதி கந்தகப்பூக்கள் ஆகியோரின் அணிந்துரைகளும் கவிச்சக்கரவர்த்தி ஜின்னாஹ் சரிபுத்தீன், கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றுள்ளன.


உங்களுடைய முதல் பிரசவம் 'ஒளி பூக்கும் இரவு' என்ற நூலின் தலைப்புக் குறித்துக் கூறுங்கள்?

எதேச்சையாக உள்ளத்தில் இருந்து உதித்த தலைப்புத்தான் இது. முன்னர் நான் இந்த நூலுக்கு வேறொரு தலைப்பையே தேர்ந்து வைத்திருந்தேன். இறைவன் இத்தலைப்பையே நாடிவிட்டான். முகநூலில் நூலின் தலைப்பைப் பதிவிட்டபோது கவிஞர்கள் தலைப்பைப் பாராட்டினர். விஜயகுமார் என்ற தமிழக கவிஞர் நூலின் தலைப்புக்காகவே விருது வழங்கலாம் என்று கூறினார். நூலின் தலைப்பு கவித்துவமானதென்று முனைவர் ம. ரமேஷ் அவர்கள் தனது அணிந்துரையில் சிறப்பாக விளக்கியுள்ளார். நூலின் வெளியீட்டு வைபவத்தின்போது அன்பர் ஒருவர் 'ஒளி பூக்கும் இரவு' என்பதை 'இரவு பூக்கும் ஒளி' என்று பின்னிருந்து வாசித்தார். எப்படிப் பார்த்தாலும் தலைப்பு கட்சிதமாக பொருந்திவிடுகிறது. 


நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும்போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது?

எப்படியாவது முதல் நூலை வெளியிட்டு இலக்கிய உலகில் தடம் பதிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக மனதைக் குடைந்துகொண்டிருந்தது. நூலை வெளியிடுவதற்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதில் ஏற்பட்ட கால தாமதத்தின் காரணமாக நீண்டகாலக் காத்திருப்பின் பின்னரே எனது நூல் வெளியிடப்பட்டது. இலக்கிய வானில் சிறகடித்துப் பறக்க ஒரு நூல் பறவையையாவது வெளியிடவில்லையே என்ற ஏக்கம் இதன் மூலம் தீர்ந்தது. இந்த முயற்சிக்காக ஒத்துழைத்த யாவருக்கும் இவ்விடத்திலும் நன்றி கூறுகின்றேன்.


பொதுவாக ஹைக்கூவிற்கும் கவிதைக்கும் இடையில் எந்த மாதிரியான வித்தியாசம் உள்ளது?

மரபுக் கவிதை எழுத தேர்ந்த பயிற்சி அவசியம். எனினும் புதுக் கவிதை எழுதுவதற்கு பெரிதாக பயிற்சி அவசியமில்லை என்ற நிலையில் ஹைக்கூ எழுத பயிற்சி மிக மிக அவசியம்.

கவிதை மனித வாழ்வின் பல்வேறு கோணங்களையும், இயற்கை உட்பட யாவற்றையும் கூறும். ஹைக்கூ இயற்கையையும் மிகச் சிறிய உயிரினங்களையும் குறியீடு, படிமம் என்பவற்றின் உதவியோடு வெளிப்படுத்தும். 

கவிதை சுருக்கமாகவும் விரிவாகவும் அமையலாம். ஹைக்கூ மிகச் சுருக்கமாகவே அமையும்.


சின்னப் பொறிக்குள்

மின்னல் தெரிப்புகள்

ஹைக்கூ ஹைக்கூ


என்று வதிலை பிரபா ஹைக்கூவின் இலக்கணத்தை ஹைக்கூவாகவே கூறிவிடுகிறார். கடுகு சிறிதெனினும் காரம் பெரிதென்ற தமிழ்ப் பழமொழி ஹைக்கூவிற்கே மிகப்பொருந்துவதாக எழுத்தாளர் சுஜாதா கூறுவார்.

ஹைக்கூவிற்கும் கவிதைக்குமிடையிலான வேறுபாடுகளைப்பற்றி தமிழ்நாடன் பின்வருமாறு கூறுகிறார். 

கவிதை இல்லாததைக் கொண்டு வரும். ஹைக்கூ இருப்பதையே காட்டும். 

கவிதை சுவைநீர் என்றால் ஹைக்கூ தேன்.

கவிதை உற்பத்தி. ஹைக்கூ வெளிப்பாடு.

கவிதை புறமனம் தீட்டும் ஓவியம். ஹைக்கூ அடிமனத்தின் வெடிப்பு.


உங்களது நூல் வெளியீட்டுக்கு கைகொடுத்து உதவியவர்கள் பற்றிக் கூறுங்கள்?

எனது நூலை தானே வடிவமைக்க வேண்டும் என்று நண்பர் ஏ.ஆர். அப்ராஸ் என்னைச் சந்திக்கும் வேளைகளில் வேண்டிக்கொள்வார். நூலை சிறப்பாக வடிவமைத்து பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தவரும் அவரே. நாங்கள் நூல் வெளியீட்டு விழாவினைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தபோது இக்பால் சனசமூக நிலையத்தினர் தாமாகவே முன்வந்து அவர்களாகவே நூல் வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்து தந்தனர். கொரோனா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விழா நிகழ்வு நடைபெற்றது. எதிர்கால நூல் வெளியீடுகளை வெகு சிறப்பாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.


பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களில் ஹைக்கூ கவிதைகள் மேல் உங்களுக்கு நாட்டம் ஏற்பட விசேட காரணம் என்ன?

ஹைக்கூ சிறிய கவிதை வடிவம். குழந்தை சிறியதாக இருப்பதனால் அனைவருக்கும் அதனைப் பிடிப்பது போன்று ஹைக்கூ எனக்குப் பிடித்துப் போனது. ஹைக்கூ பற்றிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் உரைகள், முகநூலில் இயங்கும் ஹைக்கூ குழுமங்களான ஹைக்கூ உலகம், ஹைக்கூ படர்பார்வை, நிலாவில் ஒரு ஹைக்கூ, போன்ற ஹைக்கூ குழுமங்களின் வழிகாட்டல்கள், அனைத்துக்கும் மேலாக க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய நயம் பாடத்தில் 'மின்மினிகளால் ஒரு தோரணம்' என்ற ஹைக்கூ தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரையை முன்வைத்து அதனை மாணவர்க்கு கற்பிப்பதற்காக மேற்கொண்ட தேடல்கள் என்பவற்றோடு ஹைக்கூவின் ஆழமான தன்மை, குறியீடு, படிமப்பாங்கு, இயற்கை ஒன்றிப்பு என்பவை என்னை ஹைக்கூ கவிஞனாக நிலை நிறுத்தின. 


சக இளம்படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் விசேட செய்தி என்ன?

படைப்பாளர்கள் தொடர்ந்து வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்க வேண்டும். எப்படியான சங்கடங்கள் வந்தபோதும் துணிவுடன் படைப்புகளை நூலாக வெளிக்கொணர முயல்தல் வேண்டும். இவ்விடத்தில் மௌலான ரூமியின் கவிதை நினைவில் வருகிறது. 'தாகம் கொண்டவர் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை. தண்ணீரும் தாகம் கொண்டவரைத் தேடிக்கொண்டிருக்கிறது.' தேடுங்கள், தேடல் உங்களை விடுதலையாக்கும். வெற்றிக்குத் தூரமில்லை. தோல்விக்கு நேரமில்லை.


நீங்கள் ஒரு தமிழ்ப் பாட ஆசிரியர் என்ற வகையில் வாசிப்புப் பழக்கத்தில் இருந்து தூர விலகும் இளைய தலைமுறையினரை வாசிப்பில் ஈடுபடுத்த என்ன ஆலோசனைகளை முன்வைப்பீர்கள்?

வாசிப்பானது போட்டி ரீதியாக ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்று. பெற்றோர், ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தோடு பயனுள்ள நூல்களையும் வாசிக்க குழந்தைகளை சிறுவயது முதலே ஆற்றுப்படுத்த வேண்டும். பரிசுப் பொருளாக புத்தகங்களை அன்பளிப்புச் செய்யலாம். வீட்டிலும் நூலகங்களை உருவாக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து நாளொன்றில் ஒரு மணிநேரம் வாசிக்கப் பழகி, பின் நேரத்தை அதிகரிக்கலாம். இன்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இணைய நூல்களைப் படிக்கின்ற வாசகர்களை ஊக்குவிக்க, இணைய நூலகங்களும் பரவலாக்கப்பட வேண்டும். போட்டிகளை நடாத்துவது வாசிப்பை ஊக்குவிக்க உதவும்.


ஹைக்கூ தவிர வேறு எத்துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்கள்?

புதுக் கவிதை, கஸல் கவிதை, சிறுகதை, சிறுவர் கதை போன்ற துறைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறேன்.


உங்கள் சிறுகதைப் படைப்புகள் பற்றி கூற விளைவது?

இதுவரை சில சிறுகதைகளையே எழுதியுள்ளேன். ஓரிரண்டு கதைகள் பத்திரிகையிலும் சஞ்சிகையிலும் பிரசுரமாகி உள்ளன.  எழுதிய கவிதைகளை நூலுறுப்படுத்தும் ஏற்பாடுகள் முடிந்ததன் பின்னர் விரிந்த தளத்தில் சிறுகதைகளின் பக்கம் முழுக் கவனத்தைச் செலுத்த எண்ணியுள்ளேன்.


எவ்வகையான விடயங்களை ஆய்வாக ஆய்வுக் கட்டுரையாக எழுதியுள்ளீர்கள்?

உளவியல், சமூகவியல், சமயம்;, இலக்கியம், சூபித்துவம் போன்ற விடயங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். அத்தோடு பேராய்வுகளாக 'பெரிய புராணத்தில் சைவ சித்தாந்த பதிக்கோட்பாடு ஓர் ஆய்வு' எனும் தலைப்பில் பல்கலைக்கழக பட்ட ஆய்வையும், 'சமூகவியல் நோக்கில் வை. அஹமதின் சிறுகதைகள் ஓர் ஆய்வு' எனும் தலைப்பில் கொழும்புத் தமிழ்ச் சங்க பட்டயக் கற்கையின் ஆய்வையும்; மேற்கொண்டிருக்கிறேன்.


எழுத்துத் துறையில் உங்களை வியப்பில் ஆழ்த்தியவர்கள் யார்? ஏன்?

கவிக்கோ அப்துல் ரகுமான், பெருமாள் முருகன், மு. மேத்தா, ஏ.பீ.எம். இத்ரீஸ், ராஜகவி ராஹில், நா. முத்துக்குமார், ஜெயகாந்தன், சுஜாதா போன்ற பலரையும் கூறலாம். அவர்கள் புதிது புதிதான கோணங்களில் சுவைபட படைப்புகளைப் படைத்திருப்பர். சிந்தனைகளை ஆழமாக்கி வைப்பனவாக இப்படைப்புகள் காணப்படும்.


நீங்கள் நேசித்து, வாசித்த படைப்பைப் பற்றியும் அதன் சுவாரஸ்யத் தன்மைகள் பற்றியும் குறிப்பிட முடியுமா?

கவிக்கோ அப்துல் ரகுமானின் 'மினிமினிகளால் ஒரு கடிதம்'. இந்நூல் முதன்முதலாக தமிழில் வெளிவந்த கஸல் கவிதைகளின் தொகுப்பு. கஸல் அரபியில் பிறந்து, பாரசீகத்தில் வளர்ந்து, உருதுவில் இருந்து தமிழுக்கு கவிக்கோவினால் அறிமுகம் செய்யப்பட்டது. கஸல் என்றால் காதலியுடன் பேசுதல் என பொருள்படுகிறது. உலகியல், ஆன்மிகம் சேர்ந்த கலவை. பெரும்பாலும் காதலின் சோகத்தைப் பாடுவது. 'சுவை புதிது, பொருள் புதிது சோதிமிக்க நவகவிதை' என்ற பாரதியின் கவிதை இலக்கணத்தை இக்கவிதை நூலில் காண முடிவது சிறப்பு. இக்கவிதைகளின் புதுமை நயம் கண்டு சினிமா பாடலாசிரியர்களும் கவிக்கோவின், கவி வரிகளைத் தமது பாடல்களில் எடுத்தாண்டுள்ளனர். 


காதல் என்பது

கண்ணாடியும் கல்லும்

ஆடும் ஆட்டம்


இந்தக் கவி வரிகளைப் பயன்படுத்தி நா. முத்துக்குமார் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் 'ஒரு கல் ஒரு கண்ணடி..| எனும் பாடலை எழுதி புகழ் பெற்றார். இப்படிப் பலரும் இந்நூலில் உள்ள கவிதைகளைப் பயன்கொண்டு பாடல்களை இயற்றியுள்ளனர். இதுதொடர்பாக கவிக்கோவும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் இருந்து சுவைமிக்க சில கஸல்களை வாசகரின் பார்வைக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்.


கூடுகட்டத்

தன் உதிர்ந்த

இறகுகளையே பொறுக்கும்

பறவையைப் போல

நான் உன்

நினைவுகளைப் பொறுக்குகிறேன்..



அரசு

முப்பத்துமூன்று சதவிகிதம்

சிவபெருமான் ஐம்பது சதவிகிதம்

நான் உனக்கு ஒதுக்கியதோ

நூறு சதவீதம்


இசையைப் போலவே

நீயும் எங்கிருந்து வருகிறாய்

என்பது தெரியவில்லை..


இலக்கியத் துறையில் உங்கள் எதிர்கால இலக்கு என்னவாக இருக்கும் என்பது குறித்துக் கூறுங்கள்?

வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இறுதிவரை வாழ வேண்டும் என்பதே எனது தற்கால மற்றும் எதிர்கால இலக்காகும்.


உங்கள் கவிதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா? 

எனது கவிதைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் உவந்தேற்று வெளியிட்டு உதவியுள்ளன. பலரும் பாராட்டி ஊக்குவித்துள்ளனர். முதல் நூலுக்கான கொடகே சாகித்திய விருது எனது ஹைக்கூ நூலுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.


இந்நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீர்கள்?

என் இலக்கியப் பணிக்கு ஒத்துழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். படைப்பாளர்கள் பொருளாதாரம் உட்பட பல தடங்கள்களுக்கு மத்தியிலேயே நூல்களை வெளியீடு செய்கின்றனர். அவர்கள் மனம் சோர்ந்து விடா வண்ணம் படைப்புகளுக்கு வாசகர்கள் என்றும் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். எழுத்தாளுமை நிறைந்த சமூகமாக யாவரும் எழுர்ச்சி பெற வேண்டும். வெற்றி தலையையும் தோல்வி இதயத்தையும் தழுவாதிருக்கட்டும். (படித்ததில் பிடித்த சிந்தனை)


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்