Saturday, February 19, 2022

32. ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா அவர்களுடனான நேர்காணல்

ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா அவர்களுடனான நேர்காணல்

(ஜமாலியா செய்யத் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா)


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா (ஜமாலியா செய்யத் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா) என்பது எனது பெயர். இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள, வெலிகமயிலிருந்து இரண்டு மைல்கள் தூரத்திலுள்ள வெலிப்பிட்டி எனும் சிற்றூரில் 1937 டிசம்பர் திகதி 20 இல் பிறந்தேன். எனது வயது ஐந்தாகும் போது ஆங்குள்ள சிறு பள்ளிக்கூடத்தில் என்னைக் கல்வி கற்பதற்காகச் சேர்த்தார்கள். ஆங்கு மூன்றாம் ஆண்டுவரை என் தாய் மொழியைக் கற்றேன். அங்கு அதற்குமேல் வகுப்புகள் அங்கு இருக்கவில்லை.

பின்னர் என் மதிப்பிற்குரிய தந்தையவர்கள் என்னை வெலிகாமத்திலுள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் ஆண்டில் சேர்த்தார்கள். அதில் ஒரு வருடம் படித்த பின்பு அதன் பக்கத்தில் உள்ள ஒரு கனிஷ்டப் பாடசாலையில் ஆண்டு ஆறிலிருந்து ஆங்கிலக் கல்வி கற்றேன். அங்கு படித்து அரசுப் பரீட்சையில் சிரேஷ்ட வகுப்பில் சித்தியடைந்தேன். இதுவரை தமிழில் ஒவ்வொரு பாடங்களே படித்திருந்தேன்.

எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர் ஒவ்வொருவரும் சிறந்த தமிழ் அறிவுள்ளவர்கள். எமது மதிப்பிற்குரிய தந்தையவர்களும் தமிழிலும், அரபி, ஆங்கிலம் முதலான ஏனைய கலைகளையும் நன்கு கற்றவர்கள். மதிப்பிற்குரிய தகப்பனார் அவர்கள் அறபியில் மிகத் தேர்ந்தவர். ஆதலால் அவர்களிடம் கசடறக் கற்கும் திறனையும் பெற்றேன்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் எஸ்.எஸ்.ஸி. சித்தியடைந்தேன். எனவே நம்மூர்ப் பக்கத்திலே உள்ள அகுரஸ்ஸை எனும் ஊரில் உள்ள போர்வை எனும் கிராமத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பதவியேற்றேன். அங்கு மூன்று வருடங்கள் கடமை புரிந்து, காலியில் இருந்த அரசினர் தமிழ் ஆசிரியர்ப் பயிற்சிக் கலாசாலை ஒன்றில் பயிற்சி பெற்றேன். இரண்டு வருடங்கள் கற்று முடிந்ததும் வெலிகாமத்தில் உள்ள அறபா பாடசாலையில் கற்பித்தேன். அதன்பின் எனக்கு ஓர் இடமாற்றம் கிடைத்தது. அது குருநாகலிலுள்ள பண்டார கொஸ்வத்தை எனும் ஊரில் உள்ள தமிழ்ப்  பாடசாலையாகும். அங்கு தலைமையாசிரியராகக் (அதிபராக) கடமை புரிந்தேன். அங்கு ஒரு வருடமே எனக்குக் கடமையாற்றக் கிடைத்தது. அதற்குப்பின் எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அங்கிருந்து சிலாபத்திலுள்ள கல்விப் பணிப்பகம் சென்றேன். நான் அங்கு வட்டாரக் கல்வி அதிகாரியாக ஐந்து வருடங்கள் பணி புரிந்தேன். அதன்பின் அநுராதபுரத்திலுள்ள கல்வி பணிப்பகத்திற்கு மாற்றம் பெற்றேன். அங்கும் பதினொரு வருடங்கள் பணி புரிந்தும் எனக்கு மாற்றம் கிடைக்காததால், அத்தொழிலை எறிந்து என் தொழில் தமிழ் தாய்க்கு பணி செய்து கிடப்பதே எனும் உயர் நோக்கில் தாயில்லம் வந்து சேர்ந்தேன். 

எமது தமிழ்ப் பணி எட்டாம் வகுப்பிலிருந்து ஆரம்பமாகத் தொடங்கிற்று. எல்லாருக்கும் உள்ள இயற்கைக் குணமென்னும் பொறாமை உறவினருக்குள்ளும் இருந்ததனால் யான் எதிர் நீச்சல் போட்டேன். கடவுள் நம்முடனிருந்தார். அக்காலத்தில் பத்திரிகைக்கு எழுதிய ஒரிரண்டு பாக்களே பிரசுரிக்கப்பட்டன. மற்றவை உறவினர்கள் திருவிளையாட்டுக்குள் மறைந்தன. 


நீங்கள் எப்போது, எந்த வயதில் எழுத்துத் துறைக்குள் நுழைந்தீர்கள்? உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?


என் வயது ஏழிலிருந்து என் இக்கைங்கரியத்தை கடவுள் ஆரம்பித்து தந்தார். எனது பாடசாலைத் தொழிலில் நான் பெற்ற அனுபவம் தொழிலைத்தீரச் செய்தல் என்பதாகும். பாடசாலையில் சக மாணாக்கரோடு ஒன்று கூடிப் பழகுவதில் பல அனுபவங்கள் உண்டாகின. ஒருவரின் குணம் மற்றவரின் குணத்திற்கும் பெரிதும் மாறுபட்டதாயிருந்தது. எவரெவருக்கு எவரெவர் பிடித்தமாயிருப்பாரோ அவர் குணத்திற்கேற்ப நண்பர்களைப் பிடித்துக்கொள்வர், உறவாடுவர். இந்தவகையில் புதுப் புது நட்புக்களைப் பிடித்துக்கொள்வதிலும், அவர்களுடன் படித்த பாடங்களை மீட்டிக்கொள்வதிலும் ஓர் அலாதியான இன்பம் உண்டாகிறது. இல்லத்தில் அடைந்து கிடப்பதைவிட பள்ளிக்குச் செல்வதில் மிகச் சந்தோஷமுண்டு. பாடசாலையில் படித்து வந்து பின்னர் ஆசிரியராகத் தொழில் கிடைத்ததும் ஒரு புது அநுபவம் உண்டாகியது. மாணாக்கர் மனதிற்கு ஏற்றபடி கற்பித்து மாணாக்கர் வெற்றியடையச் செய்வதில் பெரும் பெரும் அநுபவமுண்டானது. 


ஆசிரியராக பல்வேறு ஆண்டுகள் சேவை புரிந்த நீங்கள் மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்ததா?

மாணாக்கர் மிகச் சிலரிடத்தே இலக்கிய ஆர்வம் காணப்பட்டது. ஆசிரியராக பணிபுரிந்து வந்த காலத்தில் பலதரப்பட்ட மாணாக்கர் பயிலும் பள்ளியில் அவர்களின் குண, பழக்க வழக்கங்கள் மிக மிக வேறுபாடடைந்திருக்கும். இவர்களின் ஒரு பகுதியினர் கல்விக் கேள்விகளில் மிக விருப்பமுடையோராய்க் காண்பர். இப்படிப்பட்ட மாணாக்கர் சித்திரம் வரைதல், பாடல்கள் பாடல் முதலியனவற்றில் மிக்கச் சிறப்புடையோராய் காணப்படுவர். ஆசிரியர் மாணாக்கர் பலவகையிலும் முன்னேற்றமடைய இலக்கியத் திறன் வாய்ந்த ஆசிரியர்களும் காரணமாவர். ஆசிரியர்களில் மதிப்புக் கொண்ட மாணாக்கர் இலக்கியம் முதலான இன்பக் கலைகளில் முன்னேறுவர். இந்தவகையில் யானும் ஒருவராய் இருந்தமையால் என்னிடம் கற்றவர்கள், நல்ல இலக்கியப் பாடல்களைப் பாடுவதிலும் எழுதுவதிலும் சிறப்புற்றுத் தோன்றினர்.   


எத்தனை ஆண்டுகளாக கவிதைகளை எழுதி வருகின்றீர்கள்? மரபுக் கவிதைகள் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

பல்லாண்டுகளாக தமிழ்க் கவிதைகள் எழுதி வருகிறேன். அளவிட்டுச் சொல்ல முடியாது. மரபுக் கவிதைகள் கற்பாரிடத்து உயர் நோக்கங்களையும், மொழியில் உயர்ச்சியையும் உண்டு பண்ணும். மரபுக் கவிதைகள் சட்டதிட்டங்களையும் அதனை உறுதியாகக் கடைபிடிக்கும் ஒரு நெறியையும் வாழ்க்கையில் உண்டு பண்ணும். மொழியறிவு விரிவடையும், பாட்டெழுத வேண்டும்; என்பதற்காக சிலர் கரடுமுரடாகவும் எழுதுவார்கள்.


மரபுக் கவிதைகளை நீங்கள் எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்? இத்துறையில் நீங்கள் ஈடுபட வழிகாட்டியவர்கள் யாவர்?

எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் புதுக் கவிதைகளை உபயோகிப்பதில்லை. அதுவும் வேண்டின், பாரதியார் எழுதிய கிளிப் பாட்டு போல் இலக்கண வழுவின்றி எழுதுவேன். பாக்கள் வாழ்த்துகளாயினும் சரியே, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நான் மரபுக் கவிதைகளையே எழுதுகிறேன். புராணங்கள் கவிதைகள் முதலான இவை யாவும் யாப்பிலக்கண அமைவோடு அமைவதையே நான் விரும்புகிறேன். சிறப்புமிக்கச் சங்க கால நூல்களும் சிறப்புமிக்க அவற்றின் உரைகளும் எனக்கு மிகவும் வழிகாட்டின. 


இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்?

புது வகைக் கவிதைகள் (பாரதியார் எழுதிய கவிதைகளைப் பின்பற்றியும்) நூல்கள் எழுதியுள்ளேன். உமர் (ரலி) புராணம் எனும் பெயருடன் ஒரு புராணம் எழுதியுள்ளேன். ஓரிலக்கண நூலும் எழுதியுள்ளேன். யாப்பிலும் ஒரு விளக்க நூல் எழுதியுள்ளேன். அந்தவகையில் இதுவரை இருபது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளேன். நான் வெளியிட்ட பல நூல்களுள், குறிஞ்சிச் சுவை, ஐங்குறுநூறு வரிசையில் பாலைவனம், நாயகர் பன்னிரு பாடல், ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர், மஹானந்தலங்கார மாலை, அண்ணல் நபிகள் அற்புத அகில நாதர், இறையருட்பா, தாகி பிரபம், பாத்திமா நாயகியார் மாலை, உமர் (ரலி) புராணம் ஆகியவை இவற்றுள் சிலவாகும். எதிர்காலத்தில் இன்னும் பல நூல்கள் அச்சிடற்குள்ளன.


மரபுக் கவிதைகளை எழுதுவதில் பாண்டித்தியம் பெற்ற நீங்கள் புதுக் கவிதைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

மரபுக் கவிதைகள் இலக்கண எல்லைகளுடன் அமைந்தவை. யாப்பிலக்கணம் தவறினால் அதனைப் பாவென்றே கூற முடியாது. எதுகையிருக்க வேண்டும், மோனையிருக்க வேண்டும். எதுகைக் கேற்ற மோனை வரவில்லையானால் அதிற் பாவிலக்கணப் பிழைப்பட்டுவிடும். இதில் ஓர் ஒழுங்கு முறையுண்டு. ஆனால் இன்று உலவும் புதுக் கவிதைகளில் எழுத்து, அசை, சீர், பந்தம், அடி தொடை முதலியன ஒழுங்கு முறையில் அமைந்ததாக இல்லை. அவைகளில் ஓர் ஒழுங்கு முறை காணப்படவில்லை. ஆதலால் புதுப்புது முறைகளை உண்டு பண்ணாமல் உள்ள யாப்பிலக்கணத்தையே கடைபிடித்து வருதல்தான் அவசியமாகிறது.


அக்காலங்களில் கவிஞர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் எழுதும் பாக்கள் யாவும் சிறப்புடையனவாயும் யாப்பிலக்கண அமைதியுடனும் இருந்தன. அவர்களுக்குத்தான் கவிஞர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள் என்ரெல்லாம் பட்டங்கள் வழங்கினர். இன்றோ இதைக் காண்பது அரிதிலுமரிது. அக்காலத்தில் பிழையாகப் பாடியவர்களின் காதுகள் துண்டிக்கப்பட்டன. 

கவிதைக்கு யாப்பிலக்கணம் இருத்தல் வேண்டும். அல்லாதன சொல்லாகவும் சீரற்ற சீராகவும் அமைந்திருப்பதும், அவர்களுக்குப் பெருங்கவிஞர் பட்டங்கள் அளிப்பதும், விந்தையாகவுள்ளது. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, முதலானவற்றைப் படித்து அறிந்து கொள்ளலாம். புதுக்கவிதைகள் என்பனவற்றை யான் பொருந்தவில்லை.  


'மரபுக் கவிதைகள் காலப்போக்கில் முற்றாக அழிந்துவிடும்' எனப் பரவலாகச் சொல்லப்படுகிறதே. இதுபற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

மரபுக் கவிதைகள் பல்லாண்டுகளுக்கு முன்னேயே உற்பத்தியாயின. முதற் சங்கம் அழிந்த போதும் அவை அழியவில்லை என்பதை யாவரும் அறிவர். அவற்றை நினைத்தபடியெல்லாம் அழித்துவிட முடியாது. இது திண்ணம். புதுக்கவிதைகள் எனக் கூறிக்கொண்டு பலரும் எழுதத் தொடங்கிய போதும் அதனால் மரபுக் கவிதைகளையோ சங்க நூல்களையோ எவராலும் அழித்துவிட முடியாது. அவ்வாறு நினைப்போர் தற்பெருமைக்காகக் கூறிக் கொள்வாரேயாம். இப்போது பல இடங்களிலும் தமிழ்ச் சங்கங்கள் பல்கிப் பெருகி வருகின்றன. பட்டங்களும் கொடுக்கிறார்கள். இது பரவலாய் உள்ளதைக் காண்க. நாமும் இந்தியாவில் தமிழ்ச் சங்கம் அமைத்துள்ளோம். வாழ்க நற்றமிழ்! வாழ்க மரபுக் கவிதைகள்!!  


உங்களது படைப்புகளுக்கான வாசகர் வட்டம் எந்தளவில் உள்ளது?

எனது வாசகர் வட்டம் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றெல்லலா நாடுகளிலும் உள்ளன. அதிகப் பேர் நம் நூல்களைக் கேட்டுப் படிப்பது மட்டுமல்லாது என்னை வினைந்து கேட்டு, கூட்டங்களும் வைக்கிறார்கள். எனது நூல்களை நிறையப் பேர் வாங்கிப் படிக்கிறார்கள். 


ஈழத்து எழுத்தாளர்களினதும் இந்திய எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கிடையே நீங்கள் அவதானிக்கும் பிரதான ஒற்றுமை, வேற்றுமைகள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்?

நல்ல தமிழில் எழுதும் போது இந்திய எழுத்தாளர்கள் மத்தியிலும் இலங்கை எழுத்தாளர்கள் மத்தியிலும் ஒற்றுமை வேற்றுமைகளிரா.


இலங்கை எழுத்தாளர்களுடன் அல்லாது இந்திய எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்பட காரணம் என்ன?

இலங்கையில் கதவு தாழிடப்பட்டிருந்தது. புகுத முடியவில்லை. எனினும் இந்தியாவில் கதவு விரியத் திறக்கப்பட்டிருந்தது. ஆங்கு புகுதலில் எளிது கண்டேன். அதனாலேயே நான் எழுதும் நூல்களனைத்தும் ஆங்கேயே அச்சிடப்பட்டன, இப்போதும் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்குதான் எனது நூல்களுக்கு அதிக வரவேற்புகள் இருந்தது. இதனாலேயே இந்திய எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்படக் காரணமாயிற்று.  

  

ஏனைய உள்நாட்டு எழுத்தாளர்களுடனான உறவுகள் எப்படியுள்ளது? எவ்வகையான எழுத்துகளை ஃ யாருடைய எழுத்துகளை அதிகம் வாசிக்கிறீர்கள்?

உள்நாட்டு எழுத்தாளர்களின் உறவு அதிகம் உண்டு. பாகுபாடில்லாமல் இலக்கியத் தமிழில் எழுதுவோர் எவராயினும் அவரின் ஆக்கங்களை யான் அதிகம் வாசிப்பேன்.


புராண இலக்கியங்களை இளந்தலைமுறை எழுத்தாளர்கள் வாசிப்பதாக நினைக்கிறீர்களா?

மிகக் குறுகியவர்களே வாசிக்கிறார்கள். இளந்தலைமுறைகள் அதிகம் கற்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அவைகள் அவருடைய மதச் சார்புள்ளவைகள் ஆயின் முஸ்லிம் பிள்ளைகள் இதில் அதிகம் தொடர்பு வைப்பதில்லை. எவ்வாராயினும் அறிவு, நம் தமிழ் மொழி என்பதன் நிமித்தம் அவற்றைப் படித்தல் அவசியமாகும். தமிழ் படிப்பவர்களுக்குத் தமிழ் மிகமிக முக்கியமானதாகும். பல்வேறு வகையான நடைமுறைகளை தமிழில் கண்டுகொள்ளலாம். இதில் ஞானக் கலைகளும் உண்டு. கதைப் போக்குகள் நல்லதாயிருக்கும். ஆறுமுக நாவலர் எழுதிய தமிழ் நடைகள் போற்றத்தக்கன என்பேன். நல்ல நடைகள் தமிழில் உண்டு. முருகன் அல்லது அழகு முதலான நூல்களில் ஞானம், இலக்கியம் போன்றவைகள் வித்தாய்த் திகழும். 


நீங்கள் இதுவரை வாசித்த நூல்களில் உங்களைக் கவர்ந்த நூல் எது? ஏன்?

யான் இதுவரை வாசித்த நூல்களில் இலக்கியப் பாடல்கள், திருக்குறள், நாலடியார், கம்பராமாயணம் முதலான இன்னும் பல நூல்கள். அவைகள் இகத்தை மட்டும் குறிப்பிடாது அகத்தையும் கூறுகின்றன.


உங்களது ஆரம்ப கால இலக்கியத்துக்கும் தற்கால இலக்கியத்தக்கும் எவ்வாறான வேறுபாடுகள் காணப்படுகின்றது?

எனது ஆரம்ப கால இலக்கியம் சங்க கால இலக்கிய நூல்களுடன் தொடர்புடையது. எனது வயது பதினேழுக்கு மேல் மரபுக் கவிதைகள் எழுதுவதில் மிக்க ஆர்வங்கொண்டு எழுதி வந்தேன்.  அன்றிலிருந்து இன்றுவரை என்னால் எழுதப்படும் பாக்கள் யாவும் யாப்பிலக்கண அமைவு கொண்டுள்ளமையால் அன்றும் இன்றும் தரத்தில் ஒரே நிலைகொண்டது. யாப்பிலக்கண ஒழுங்கு முறைப்படியே புதுப் பாக்களையும் எழுதி வருகிறேன். பாட்டுக்கு எதுகையும் மோனையும் உயிர் போன்றவை. யாப்பிலக்கண வழுவின்றி பா வமைத்தலையே புலவர்கள் விரும்புவார்கள். முன்பைவிட இப்போது யாத்துவரும் இலக்கிய நூல்கள் மிக்கன. (அதிகம்) 


உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை யான் செய்து வந்தவற்றுள் உள்ள மீதியைச் செய்து வருகிறேன். உமர் (ரலி) புராணம் 2ஆம் 3ஆம் பாகம், நன்னூலுக்கான விளக்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


சாதாரணமாக எழுத்தாளர் ஒருவரின் பணி எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

நம் பணி பணத்துக்காகவெனக் கருதாதிருத்தல் வேண்டும். பெருமைக் கெழுதாமல் இலக்கியங்களுக்கு  ஏற்ற தரத்தில் எழுதல் வேண்டும். சங்க கால இலக்கியத்துக்கு, அதன் தரத்திற்கு அமைந்த நடையில் எழுதல் வேண்டும். எவர் எதை வாசிக்கிறாரோ அவருக்கது பொருத்தமான நடையாக, அது அமைய வேண்டும். எவர் எதை விரும்புகிறாரோ அதற்கேற்ற விளக்கம் அதில் இருத்தல் வேண்டும். சிறந்த இலக்கியத்தை பத்திரிகைத் தமிழுடன் கலத்தல் நல்லதன்று என்பது எனது கருத்து. 


இலக்கிய வாழ்வில் இதுவரை உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய இலக்கண, இலக்கிய வழியிலே சிலர் வந்து முட்டித் தோற்றனர். ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் கடுமையாக எழுதுகிறீர்கள் என்றார். பாருங்கள்,


கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக என எவ்வளவு இலகுவாக உள்ளது என்றார். 


உண்மைதான், மறுபுறம் பார்க்கும் போது,

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை எனவும் உள்ளது காண்க என்றேன், அவர் வாய் மூடிச் சென்றார். 


பல தசாப்த இலக்கிய வாழ்வில் உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

இதுவரை நான் எழுதி வெளியிட்டவை பலவுண்டு. அவைகள் வெளிவந்த போதும் இதற்கான பட்டங்கள், பதவிகள் முதலானவற்றை எடுப்பதற்கான பகீரதப் பிரயத்தனங்களை நானோ எனது தோழர்களோ எடுக்கவில்லை. அவற்றை எமக்குத் தோவையெனக் கருதவுமில்லை. சிலருக்குக் கிடைத்த இடைவழிப் பட்டங்கள், மதிப்புரைகள் மட்டும் பெரிய புத்தகப் படங்களோடும் பெரிய நூல்களாகப் படங்களுடனும் அச்சிட்டுப் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். இப்படியான தற்பெருமைகளை நானோ எனது தோழர்களோ விரும்பவில்லை. 


எதிர்காலச் சந்ததிகளுக்கு நீங்கள் கூறும் அனுபவ மொழிகள் யாவை?

எதிர்காலச் சந்ததிகள் இலக்கணத் தமிழில் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இலக்கண, இலக்கிய நூல்களையும் நன்கு கற்றல் வேண்டும். மனங்களுக்கேற்ற புதுப்புது கல்வியைத் தரும் கலைத் துறைக்கு உகந்த நல்ல விடயங்களை எழுதுதல் அவசியம். பார்த்ததையே பார்த்து பிரதி பண்ணாமல் மனதுக்கேற்ற நல்ல புதிய விடயங்களை எழுத்தாளர்கள் அமைத்துக் கொள்ளல் வேண்டும். நல்ல இலக்கியச் சொற்களை அமைத்துக்கொள்ளல் வேண்டும். சொல்லாராய்ச்சியோடு எழுதல் வேண்டும். பல்லுடைக்கும் தமிழ் என்றெல்லாம் கூறி கம்பராமாயணம், சீறாப் புராணம் முதலான மற்றும் சங்க கால இலக்கிய நூல்களை உதாசீனம் செய்யாதிருத்தல் வேண்டும். ஆயின் சொல் வளர்ச்சி குன்றி தாயினும் தந்தையினும் பேச்சு வழக்குகள் எம்மில் ஊன்றிவிடும். அதனை எளிய தமிழெனவும் சொல்ல முடியாது. கொச்சைத் தமிழ் வழக்கில் அது அமைந்துவிடும். இவையெல்லாம் கவனித்து எழுதுதலே இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும் தொண்டு செய்தல் எனவாகும். 


இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நன்னூலை நல்லபடி கற்றுக் கொள்ளுங்கள். தொல்காப்பியத்தை படித்துக் கொள்ளுங்கள். இலக்கண வழுவின்றி நல்லபடி எழுதுங்கள். நல்ல இலக்கணம், இலக்கியம் முதலியவைகளுடன் வாழ்வைக் களியுங்கள், கழியுங்கள்.


வாழ்க தாய் மொழி!

பற்கலைகளும் வாழ்க!!

தமிழின எதிரிகள் வீழ்க!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


31. ஆ. முல்லைதிவ்யன் உடனான நேர்காணல்

 ஆ. முல்லைதிவ்யன் உடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

எனது பெயர் ஆனந்தமயில் முல்லைதிவ்யன். நான் முல்லைத்தீவின் செல்வபுரத்தில் பிறந்தேன். எழுத்தாளரான எனது தந்தையார் த. ஆனந்தமயில் அமரத்துவம் அடைந்துவிட்டார். அம்மா நகுலேஸ்வரி. ஐந்து அண்ணாக்கள், ஒரு தங்கச்சி. இதுதான் எனது குடும்பம். நான் தற்போது யாழ்ப்பாணத்தின் பொலிகண்டியில் வசித்து வருகின்றேன்.


02. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?


முல்லைத்தீவின் செல்வபுரத்தில் பிறந்து தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் நான், எனது ஆரம்பக் கல்வியை யா/கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்திலும், இடைத் தரக் கல்வியை யா/விக்கினேஸ்வராக் கல்லூரியிலும், க.பொ.த. சாதாரண தரக் கல்வியை யாஃபொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும், க.பொ.த. உயர் தரத்தை யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றேன். பின்னர் திறந்த பல்கலைக் கழகத்தில் முகாமைத்துவ பட்டப் படிப்பை மேற்கொண்டேன்.


03. கலை இலக்கியத் துறைக்குள் எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?


எனது தந்தையார் த. ஆனந்தமயில் (அமரர்) அவர்கள் ஈழத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளராக இருந்தமையால் வீட்டிலையே நிறையப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எனக்குக் கிடைத்தது. இதனைவிட எனது அப்பாவின் வழிகாட்டுதல்களும் பின்னூட்டல்களும் என்னை இலக்கியத் துறைக்குள் கால் பதிக்கச் செய்தது.


04. உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக எப்போது ஆரம்பித்தது? முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் எது?

பாடசாலைக் காலத்திலே எனது எழுத்து முயற்சி ஆரம்பமாகியது. யாஃவிக்கினேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது அங்கு நடை பெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றியிருந்தேன். அப்போது நான் எழுதிய ஷஷவிடிவை நோக்கி|| கவிதை முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது. அக்கவிதைக்கு எனது தமிழ் ஆசிரியர் திருமதி சிவராமலிங்கம் அவர்களுடையதும் அதிபர் அவர்களுடையதும் மாணவர்களது பாராட்டும் கிடைத்தது.


05. உங்கள் படைப்புகளுக்கு ஊடகங்கள் எந்தளவில் களம் அமைத்துத் தந்தது?

ஒரு கலைஞனின் வளர்ச்சியில் ஊடகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அந்தவகையில் எனது படைப்புகளை வெளிக்கொணர இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. இந்த நேரத்தில் என்னை வளர்த்து விட்டிருக்கின்ற ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


06. இதுவரை வெளிவந்த உங்களது நூல் அறுவடைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் இதுவரை 10 நூல்களை வெளியிட்டுள்ளேன். இதில் ஆறு கவிதை நூல்களும் இரண்டு சிறுகதை நூல்களும் ஒரு மொழிபெயர்ப்பு நூலும், கட்டுரை, கவிதைகள், சிறுகதைகள் கலந்த ஒரு நூலும் உள்ளடங்கும். அவையாவன:-

1. நல்லதோர் கனவும் அந்தரிப்போரும் (கவிதை) - 2011

2. கவியின் ஏக்கம் (கவிதை) - 2012

3. அம்மா காத்திருக்கக் கூடும் (கவிதை) - 2013

4. அக்காவுக்கு எழுதிய கடிதம் (கவிதை) - 2014

5. தாய்நிலம் (சிறுகதை) - 2015

6. தாய்நிலம் (மொழிபெயர்ப்பு - தமிழ், ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு) - 2017

7. முல்லை நிலமும் நந்திகடலும் (கவிதை) - 2018

8. வள்ளிபுனத்து ஆலமரம் (கவிதை) - 2019

9. கொக்குத்தொடுவாய் கொக்குகளும் கூழாமுறிப்பு பாலைகளும் (கவிதை, கட்டுரை, சிறுகதை) - 2020

2016 ஆம் ஆண்டில் தாய்நிலம் என்ற சிறுகதை நூல் இரண்டாம் பதிப்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாக அமைகிறது.


07. நூல்களை வெளியிட ஊக்குவித்தவர்கள் யார்?

நான் இதுவரை ஒன்பது நூல்களையும் இணையத் தளத்தில் பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளேன். இதில் எனது எட்டு நூல்களையும் சொந்தக் காசிலையே வெளியிட்டுள்ளேன். நான் ஓர் எழுத்தாளராக இருந்த காரணத்தால் அம்மா எனது புத்தாக்க முயற்சிகளைத் தட்டிக் கொடுத்தார். ஒன்பதாவது நூலுக்கான அனுசரணையை பொலிகை இணையம் வழங்கியிருந்தது. பொலிகை இணையத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.


08. உங்கள் "கொக்குத்தொடுவாய் கொக்குகளும் கூழாமுறிப்பு பாலைகளும்" என்ற நூலின் தலைப்பு பற்றிக் கூறுங்கள்?

எனது நூலுக்கு இந்தத் தலைப்பு இடப்படுவதற்கான காரணம் என்னவெனில் இந்தப் புத்தகத்திலே வன்னி மண் சார்ந்த பல விடையங்கள் காணப்படுகின்றன. இந்தப் புத்தகத்தின் உள்ளே ஷஷகொக்கு தொடுவாய் கொக்குகளும் கூழாமுறிப்பு பாலைகளும்|| என்ற கவிதை காணப்படுகின்றது. அதேபோல இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற சிறுகதை ஒன்றிலே கூழாமுறிப்பு பாலைகள் பற்றி வருகின்றது. ஆகவே இரண்டையும் சேர்த்து "கொக்குதொடுவாய் கொக்குகளும் கூழாமுறிப்பு பாலைகளும்" என்று பெயர் சூட்ட முடிவு செய்தேன். இதனைவிட மண் பற்றும் ஒரு காரணமாகும்.


09. மேற்படி நூலின் ஊடாக இலக்கிய உலகுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

இந்த புத்தகத்தில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆக்கமும் பல கருப்பொருட்களை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆக்கங்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக மாற்றியதன் பிரதான காரணம் வருங்கால சந்ததிக்கான ஆவணப்படுத்தலாகும்.


10. உங்களது நூல்களில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றி பொதுவாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

எனது நூல்கள் பல கருப்பொருட்களைத் தாங்கியதாகவே வெளிவருகின்றன. குறிப்பாக இயற்கை மீதான ஈர்ப்புகள், போரின் அவலங்கள், மண்ணின் மாண்புகள், மொழி மற்றும் இனம் சார்ந்த பெருமைகள், தன்னம்பிக்கை ஊட்டும் உபதேசங்கள் என அவை விரிவு கொள்ளும்.


11. இதுவரை எழுதிய உங்களது சிறுகதைகள் குறித்து?

நான் இதுவரை இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன். அச் சிறுகதைகள் ஷஷதாய் நிலம்|| என்ற பெயரில் சிறுகதை நூலாக வெளிவந்தது. குறிப்பாக போரின் வடுக்களை, போருக்கு பின்னரான வாழ்வியலை பிரதிபலிக்கின்ற படைப்புகளாக இச் சிறுகதைகள் இருக்கின்றன. இதில் தாய்நிலம் என்ற சிறுகதை யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தினரால் தமிழ், ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. நான் எழுதிய சிறுகதைகள் கலாசார திணைக்களம் ஆண்டுதோறும் நடாத்துகின்ற இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவை.


12. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்? அண்மையில் வாசித்த படைப்பு எது?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி, கவிஞர் தாமரை ஆகியோருடைய படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஈழத்தை பொறுத்தவரை எழுத்தாளர் தெணியான், எம்.ஏ நுஃமான், சோ. பத்மநாதன், துவாரகன், த. அஜந்தகுமார், எனது தந்தையார் த. ஆனந்தமயில் (அமரர்) ஆகியோரின் படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்தவை.


13. இளையவர்களிடையே இணையப் பாவனை அதிகரித்து நூல்களின் வாசிப்பு குறைந்து வரும் இக்கால கட்டத்தில் வாசிப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்?

இன்றைய உலகமயமாதலில் மூலை முடுக்கெல்லாம் தொழில்நுட்ப பாவனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே  புத்தகங்களை வாசிப்பது குறைவடைந்து வருகின்றது. ஆகவே புத்தக வாசிப்பை மேம்படுத்த வேண்டுமாயின் நடமாடும் நூலகங்களை ஆரம்பித்து, அதனூடாக வார இறுதி நாட்களில் புத்தகங்களை வழங்கி, வாசிப்புத் திறனை ஊக்குவிக்கலாம். இதனைவிட புத்தங்களை மையப்படுத்தி வினா விடைப் போட்டிகளை பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தலாம். இவ்வகையான முயற்சிகளின் மூலமே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த முடியும்.


14. உங்களது படைப்புகள் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசியிருக்கிறதா?

ஆம்.. எனது தாய் நிலம் சிறுகதை நூலில் உள்ள ஷஷநட்சத்திரப் பூக்கள், சிகரம், பாரமில்லாக் கனவுகள்|| போன்ற சிறுகதைகள் பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியவை.



15. சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு மிகவும் கணிசமாகக் குறைந்து வருகின்றது. நாவல் துறையில் ஆர்வம் காட்டவில்லையா?

ஆம்.. தற்போதைய இலக்கிய வெளியில் நாவல்களின் வரவு குறைவடைந்துள்ளது. நான் சில நாவல்களை வாசித்துள்ளேன். குறிப்பாக சாகித்திய ரத்னா தெணியான் அவர்களின் ஷஷமரக்கொக்கு|| நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. சிறுகதை, கவிதை, பாடல், கட்டுரை என பலவற்றை எழுதியுள்ள எனக்கு நாவல் ஒன்றையாவது எழுதி, நூலாக்கம் செய்துவிட வேண்டும் என்ற கனவு இருக்கின்றது. எதிர்காலத்தில் நிச்சயமாக எனது ஒரு நாவல் புத்தக வடிவம் பெறும்.



16. உங்களைப் போன்று வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் விசேடமாகக் கூறும் செய்தி என்ன?

தேடலும், நிறைந்த வாசிப்புத் திறனும் இருக்குமானால் நல்ல படைப்புகளை படைக்க முடியும். கலை இலக்கிய போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்ற வேண்டும். அப்போதுதான் போட்டி போடும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்வதோடு, தரமான படைப்புகளையும் படைத்துக்கொள்ள முடியுமாகும். தனிய ஒரே இலக்கிய வடிவத்தில் நிற்காமல் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பாடல் ஆக்கம், நாட்டார் கலை எனப் பல இலக்கிய வடிவங்களில் தடம் பதிக்க வேண்டும். அப்போதுதான் எங்கள் தனித்துவத்தை நிலை நாட்ட முடியும்.


17. உங்கள் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

யாழ் பிரெஞ்சு நட்புறவு கழகத்தால் எனது தாய்நிலம் சிறுகதை - ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது என்னால் மறக்க முடியாத நிகழ்வாக அமைகிறது.


18. உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது பத்தாவது புத்தகமான "லயத்தின் குடியிருப்புகள் பேசுகின்றன" என்ற புத்தகத்தை வெளியிடக் காத்திருக்கின்றேன். இதனைவிட எனது பிறந்த நாளை முன்னிட்டு நான் பிறந்த முல்லை மண் பற்றி எழுதிய பாடல் ஒன்றை வெளியிடவுள்ளேன். இவைதவிர பல படைப்புகளை எதிர்காலத்தில் படைப்பேன் என்ற நம்பிக்கை நிறையவே எனக்கு இருக்கின்றது.


19. கலை இலக்கியத் துறையில் உங்கள் படைப்புகளுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுவார்களா?

கலாச்சார திணைக்களம் வருடா வருடம் நாடாத்துகின்ற தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் இதுவரை ஐம்பதிற்க்கு மேற்பட்ட வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன். இதில் பிரதேச மட்டம், மாவட்ட மட்டம், தேசிய மட்டம் ஆகியன உள்ளங்கும்.

எனக்குக் கிடைத்த விருதுகள் என்று சொல்லும் போது:-

• 2019 ஆம் ஆண்டு வடமராட்சி பிரதேச செயலகம் வழங்கிய "கலைத்தளிர்" விருது

• 2019 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட கலை, கலாசாரப் பேரவை வழங்கிய "இளங்கலைஞர்" விருது

• 2020 ஆம் ஆண்டு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் இணைந்து வழங்கிய இளங்கலைஞர் விருது

போன்ற விருதுகள் இதுவரை கிடைத்துள்ளன. இதனைவிட வடமராட்சி வடக்கு கலாச்சார பேரவை, வல்வெட்டித்துறை கலாச்சார மையம், பொலிகை கலை இலக்கிய மன்றம், ஒளியரசி சஞ்சிகை, பொலிகை மக்கள் படிப்பகம் போன்ற என்னை கௌரவித்துள்ளன.


20. இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

இலக்கிய வெளியில் நாங்கள் பயணிப்பதோடு நிற்காமல் பாடசாலை மாணவர்களையும் இலக்கிய வெளியில் பயணிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு கிராமங்களில் கலை இலக்கியப் போட்டிகளை நடாத்தி சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு எழுத்தாளரும் சமூகத்தைப் பற்றி சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் 


30. கவிஞர் ஏ.எச்.ஏ. ழாஹிர் அவர்களுடனான நேர்காணல்

கவிஞர் ஏ.எச்.ஏ. ழாஹிர் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

எனது பெயர் அப்துல் ஹமீது அப்துல் ழாஹிர். நான் அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மருதமுனையில் பிறந்தேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது ஆரம்பக் கல்வி மருதமுனை அல் ஹம்றா வித்தியாலயாலயத்திலும். பின்னர் க.பொ.த. சாதாரண தரம் வரை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியிலும், க.பொ.த. உயர் தரத்தினை கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். 1978 ஆம் ஆண்டு அரச சேவையில் இணைந்து கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றினேன். 2016 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்.


உங்களை கவிஞராக வளர்த்த பின்னணி என்ன? இத்துறையில் வளர வழிவகுத்தவர்கள் யார்?

கவிஞராக வேண்டும் எனும் எண்ணமெல்லாம் இளமைக் காலத்தில் இருக்கவில்லை. சமூகத்தில் நடக்கும் மக்கள் விரோத செயற்பாடுகள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற ஆசை எனக்குள் வெகுவாக இருந்தது. அதன் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை கற்றதும், நண்பர்களின் உந்துதலுமே கவிதை எழுதக் காரணமாக அமைந்தது.


தங்களது முதற் படைப்பு எப்போது, எதில் வெளியானது? எந்தெந்தப் பத்திரிகைகளில் எழுதி வருகின்றீர்கள்?

எனது முதற் கவிதை 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரி பத்திரிகையில் ஷஷமுக்காட்டு முகம்|| எனும் பெயரில் வெளியானது. அனேகமான பத்திரிகைகளில் எனது கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.


சுமார் எத்தனை வருடங்களாக கவிதை எழுதி வருகின்றீர்கள்?

சுமார் இருபது வருடங்களாகக் கவிதை எழுதி வருகின்றேன். அத்துடன், நான் கல்முனை பிரதேச செயலகத்தில் தலைமைப்பீட கிராம உத்தியோகத்தராகவும் பின் நிர்வாக கிராம உத்தியோகத்தராகவும் கடமை செய்துகொண்டிருந்த வேளையில் பிரதேச செயலகத்தில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறும். அந்நிகழ்வுகளில் கலையோடு சம்பந்தமான நிகழ்ச்சிகளில் எனக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். அதுவே பின்னாட்களில் மும்முரமாக எழுத வேண்டும் எனும் எண்ணம் வரக் காரணமாக அமைந்தது.


நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களை ஏழுதத் தூண்டிய சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? 

அவ்வப்போது சமூகத்திற்குள்ளும் வெளியேயும் நிகழும் சமூக ஒத்திசைவற்ற கருமங்கள் பொதுவாகவும் தனிப்பட்ட ரீதியிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அக் கருப்பொருளை மையப்படுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்த எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போதெல்லாம் கவிதைகளை எழுதுவேன்.


உங்களுடைய முதல் பிரசவம் "நாணிய நடுக்காடு" எனும் தலைப்பு குறித்தும், நூலின் வரவு பற்றியும் என்ன குறிப்பிடுவீர்கள்?

நாகரீகம் என்பது என்னவென்று தெரியாத காலத்தில் மக்கள் நடுக் காடுகளில் அலைந்து குகைகளில் உறங்கினர். அவர்கள் தங்களது உடல்களை இலை, பட்டை, மிருகங்களின் தோல்களால் மறைத்து வாழ்ந்து வந்தனர். காட்டை விட்டு நதிக்கரைகளுக்கு இடம் பெயர்ந்து சிறுசிறு கூட்டங்கள் சமூகங்களாகி விவசாயம் என்று நாகரீகம் ஆரம்பமாகி ஆயிரமாயிரம் வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்போது உடலோவியம் (டீழனல Pயiவெiபெ) என்ற பெயரில் துண்டுதுணி கூட இல்லாமல் வண்ணப் பூச்சுக்களால் உடலை மறைத்து நாகரிகம் எனக் காட்டுகின்றனர். இச் செயற்பாடுகளைக் கண்டு நடுக் காட்டு மரங்கள் வெட்கித் தலைகுனிகின்றன. இப்படி ஒரு கவிதை எனது கவிதைத் தொகுதியில் உள்ளது. அதனையே நூலின் தலைப்பாக ஷஷநாணிய நடுக்காடு|| எனப் பெயரிட்டேன். 

இது எனது முதலாவது கவிதைத் தொகுதி. இதனை எனது சமர்ப்பணமாக வாசகர்களுக்கு முன்வைத்துள்ளளேன். ஏனெனில் புத்தகம் ஒன்றினை சிலர் முழுமையாக வாசிப்பதும் அனேகர் சிறிது பார்த்துவிட்டு அப்படியே கிடப்பில் போட்டு விடுவதும் வழக்கம். புத்தகங்களை வாசிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே வாசகர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளளேன். 


உங்கள் "நாணிய நடுக்காடு" கவிதை நூலில் உள்ளடக்கியுள்ள கருப்பொருள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது கவிதைத் தொகுதியில் தனியே ஒரு கருப்பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் தாய்மை, நட்பு, காதல், வீரம், வறுமை போன்ற பெரும்பாலான குணாதிசயங்களை உள்ளடக்கியே வெளியிட்டுள்ளேன். எழுத்து என்பதனை வெறுமனே பொழுதுபோக்காக மட்டும் நோக்காது படிப்பினையாகவும் வாசகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஓர் எழுத்தினை வாசகர்களிடையே கொண்டு செல்வது இலகுவான காரியமல்ல.


உங்கள் கவிதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என நம்புகின்றீர்களா?

ஒவ்வொரு முயற்சியும் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. அதேபோல எழுத்தாளர்களும் தங்களின் எழுத்து மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றார்கள். தவிரவும், எவரும் புதிதாக கருத்தினைத் தெரிவிப்பதில்லை. பழைய விடயங்களை புதுப்புது சொல்லாட்சிகளின் கீழ் வெளிப்படுத்துகின்றனர். ஆனாலும் பாரதியின் காலத்தினைப் போல தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக் குறியே.


கவிதைகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டு;ம்? ஒரு சிறந்த கவிதை எவற்றைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

கவிதைகள் உயிரோட்டமுள்ளதாகவும், படிப்பினைகளை தரக்கூடியதாகவும் இருத்தல் அவசியம். சமூகத்தில் நிகழும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் பிரவேசித்து கவிதைகளை விழிப்புணர்வூட்டும் வகையில் எழுதும் போது சிறிய தாக்கத்தினை அல்லது மாற்றத்தினை ஏற்படுத்தினாலும் அது பெரும் வெற்றியே.


சக எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

ஆலோசனை கூறுமளவிற்கு நான் பெரும் எழுத்தாளன் அல்ல. இருப்பினும் நான் படித்த அல்லது அவதானித்த வகையில் சிலரின் எழுத்துக்களின் வாக்கியத்தின் ஒழுங்கீனம் கரணமாக என்ன சொல்ல வருகின்றார் என்பது முடிவில் தெளிவில்லாமல் போகின்றன. எனவே, சொற்றொடர்களை அமைக்கும் போது பலமுறை அவதானித்து எழுதுவது சிறப்பாக அமையும் எனக் கருதுகின்றேன்.


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துகள் உங்களை அதிகமாகக் கவர்ந்ததாக கருதுகின்றீர்கள்?

ஆம். வாசித்தேன், வாசிக்கின்றேன். அதற்காக நேரசூசி போட்டு வாசிப்பது கிடையாது. நேரம் கிடைக்கும் போது வாசிப்பதுண்டு. அவர் இவர் என்று வகைப்படுத்தி வாசிப்பதில்லை. அந்தக் காலத்தில் இரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி), சாண்டில்யன், ஜெயகாந்தன், சுஜாதா என்பவர்களைக் குறிப்பிடலாம்.


கவிதைத் துறை தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகின்றீர்கள்? 

கவிதை தவிரவும் சிறுகதைகள் எழுதுவதிலும் ஆர்வம் இருக்கின்றது. எழுதியும் இருக்கின்றேன். மேலும் எழுதத் தூண்டும் அளவிற்கான களம் அமையாததால் அதன்பால் செலுத்தப்படும் அவதானம் குறைந்துளள்ளது. காலத் தேவைக்கேற்றவாறு தொடர எண்ணியுள்ளேன்.


இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில் வாசிப்பு மட்டம் எந்தளவில் இருக்கின்றது என்று நினைக்கின்றீர்கள்?

இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்ததன் காரணமாக வாசிப்பு மட்டத்தில் சிறு தளர்வு ஏற்பட்டாலும் வாசிப்பு பாதிப்புக்குள்ளாகும் நிலைக்குச் செல்லவில்லை என்பது யதார்த்தம். ஏனெனில் இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப அச்சு ஊடகங்களும் அதிகரித்திருப்பது கண் கூடு.


மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றி பொதுவாக என்ன சொல்வீர்கள்?

தாய் மொழிக் (தமிழ்) கவிதைகள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இலைமறை காய்களாய் இருக்கும் நம் கவிஞர்களின் பெயர்கள் வியந்து பேசப்படு;ம் நிலை உருவாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். 


உங்கள் இலக்கிய வாழ்வில் இதுவரை உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்?

யார் வாழ்வில் தான் மறக்க முடியாத சம்பவம் இல்லை. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்தவர்களிடமும் போட்டி உள்ளது. அப் போட்டி இலக்கியவாதிகளையும் விட்டு வைக்கவில்லை. போட்டி என்று வந்தால் அதன் விளைவு என்ன என்பது யாவரும் அறிவர். அப்படியான சம்பவங்கள் பல உள்ளன. அவைகளைக் கூறி யாரையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.


இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

நேர்காணல் மூலம் பதிலுரைப்பவர்கள் தங்களது கருத்துகளை நிதானமாக அச்சு ஊடகம்  ஊடாக பகிர்ந்துகொள்வதால் இதனை வாசிப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படுகின்றது.


உங்களது கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

ஆதரவுகள் நிறையவே கிடைத்தன. நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே ஆதரவுகளும் வரவேற்புகளும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும், வெளியூர்களில் எனது கவிதைகளுக்கு எப்படியான வரவேற்பு இருக்கிறது என்று தெரியாது. காரணம் வேறு பிரதேச வாசகர்களுக்கு எனது கவிதைத் தொகுதி இன்னும் பெரிதாகச் சென்றடையவில்லை. அதன் பின்னரே அதுபற்றிக் குறிப்பிட முடியும்.


உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிதைகளோடு சிறுகதையும் எழுதியிருக்கின்றேன். கூடுதல் நேரம் சிறுகதை எழுதுவதில் கழிக்க எண்ணியுள்ளேன். அதுதவிர கவிதைகளை சிங்கள மொழிக்கு, மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்ற விருப்பமும் இருக்கின்றது.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்..?

வரையறைக்குள் நிற்பதனால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஒரு விடயத்தினை மட்டும் கவிஞர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். விரசமாக கவிதை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கின்றேன்.  


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


29. தென்றல் சஞ்சிகையாசிரியர் க. கிருபாகரன் அவர்களுடனான நேர்காணல்

தென்றல் சஞ்சிகையாசிரியர் க. கிருபாகரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம் பெரும் கிராமமான திருப்பழுகாமத்தில் பிறந்து, இன்று கல்லடியில் வாழ்ந்து வருகிறேன். எனது ஆரம்பக் கல்வியைத் திருப்பழுகாமம் விபுலானந்த கனிஷ்ட வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை திருப்பழுகாமம் கண்டு மணி மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரியிலும் கற்றேன். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று, 1998 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வி ஆசிரியராக நியமனம் பெற்றேன்.


ஊடகத்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

கிழக்கின் முதுபெரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான அமரர் வீ.சு. கதிர்காமத்தம்பியின் வழிகாட்டல், ஊக்கப்படுத்தல் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட ஆறு மாத கால ஊடகவியலாளர் பயிற்சியைப் பூர்த்தி செய்தேன். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக் கதிர் தினசரிப் பத்திரிகையின் செய்தியாளராகவும், மாணவர் பகுதிப் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டேன். அத்தோடு தேசிய தினசரிப் பத்திரிகையான சுடர்ஒளியின் நிருபராகவும் 2002 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை செயற்பட்டேன். எனினும் எனது ஈடுபாடு இலக்கியத்தின் பால் இருந்தமையால் 2008 ஆம் ஆண்டு சித்திரை 06 ஆம் நாளில் காலாண்டுச் சஞ்சிகையாகத் தென்றல் - தேசிய பல்சுவைக் குடும்பச் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தேன். அப்போது எனக்குத் துணையாக, உதவியாக மட்டக்களப்பு ஹரித்தாஸ் எகெட் நிறுவனப் பணிப்பாளர் வணபிதா சிறிதரன் சில்வெஸ்டர் இருந்தார்.


தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, கல்லூரி வாழ்க்கை போன்றவற்றை முதலில் கூறுங்கள்?

எனது பாடசாலைக் காலத்திலேயே கையெழுத்துச் சஞ்சிகையைத் தயாரித்தேன். ஆனால் அதனை வெளிக்கொணர்வதில் பல்வேறு தடைகள், இடர்பாடுகள் ஏற்பட்டன. இந்நிலையிலேயே கிழக்கின் முதுபெரும் பத்திரிகையாளரும், கிழக்கிலிருந்து வெளிவந்த 'விடிவானம்', 'தினக்கதிர்' பத்திரிகைகளின் ஸ்தாபக ஆசிரியருமான வீ.சு. கதிர்காமத்தம்பியின் வழிகாட்டல், ஊக்கப்படுத்தல் காரணமாக தென்றலை வெளிக்கொணர தூண்டப்பட்டதோடு, விற்பனை, ஆக்கம் தேடுதல் எனப் பல வழிகளிலும் உறுதுணையாகச் செயற்பட்டார்.


உங்களது ஆரம்ப காலப் படைப்புகள் மற்றும் பிரசுரங்கள் குறித்துச் சொல்ல முடியுமா?

நான் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பக் கல்வி பயிற்சி நெறியை தொடர்ந்த காலப் பகுதியில் தென்றலை மாதாந்தப் பத்திரிகையாக 11 இதழ்களை வெளிக்கொணர்ந்தேன். எனினும் அக்காலங்களில் தொடர்ந்து அதனை வெளிக்கொணர முடியவில்லை.


தென்றல் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் யாவை எனக் குறிப்பிடுங்கள்?

வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தல், மூத்த எழுத்தாளர்களை இன்றைய இளந்தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைத்தல், மாணவர்களின் அறிவுப் பசிக்கு விருந்தூட்டல், மட்டக்களப்பின் கலை, கலாசாரப் பாரம்பரியங்களை வெளிக்கொணர்தல் ஆகிய இலக்கினை நோக்காகக் கொண்டு தென்றல் சஞ்சிகை இலக்கிய உலகில் காலடி பதித்தது.


இலக்கியத்தின் காத்திரமான தன்மையைப் பேணுவதில் சிற்றிதழ்களில் வகிபங்கு எந்தளவிலுள்ளது?

பத்திரிகைகள் செய்தியை வெளியிடுவதோடு தமது கடமையை நிறைவு செய்கின்றன. ஆனால் சஞ்சிகைகள் தமது வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதோடு ஓர் ஆவணப்படுத்தல் சாதனமாகவும் அமைகின்றது. எனவே தான் இன்றைய நவீன யுகத்திலும் கூட சஞ்சிகைகளின் தேவைப்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகிறது. ஒருவர் வெளியூர்களுக்குப் பயணம் செய்கையில் இவ்வாறான சஞ்சிகைகளே அவருக்குப் பொழுது போக்குச் சாதனமாகவும் அமைகிறது.


உங்களைக் கவர்ந்த ஈழத்து எழுத்தாளர் யார்? ஏன்?

அமரர் இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்கள்தான். இவர் மிகவும் எளிமையானவர். அவர் வாழும் காலத்தில் எம்மைப் போன்ற இலக்கியத் தாகம் கொண்டோருக்கு பல்வேறு அறிவுரைகள் கூறுவதோடு, சஞ்சிகை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாகச் செயற்பட்டார். இன்றைய காலகட்டத்தில் பொறாமை, போட்டிகள், வஞ்சகம் நிறைந்த சூழலில் அவரின் அன்பும், அரவணைப்பும் தென்றலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதோடு, தொடர் வருகைக்கும் வித்திட்டது எனக் கூறினால் அது மிகையாகாது.


'தென்றல்' சஞ்சிகையை வெளியிடுவதில் எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள் பற்றிக் கூறுங்கள்?

எமது மக்கள் உள்ளூர் பதிப்புகள் என்றாலே ஏதோ ஒரு மனநிலையில் தான் அதனை நோக்குகின்றனர். விலை அதிகம். தரமில்லை. பக்கம் குறைவு என்று பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர். இதனால் சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்டு, விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் சஞ்சிகை அச்சிடுவதற்கான செலவுகள் அதிகரிப்பு மற்றும் சஞ்சிகைகளுக்கான சந்தாக் கட்டணங்கள் உரிய நேரத்துள் கிடைக்காமை போன்ற பல காரணங்களும் தொடர்ந்து ஒரு சஞ்சிகை வெளியீட்டைச் செய்யத் தடைகளாகவே அமைகின்றன.


இச்சவால்களை எதிர்கொள்ள நீங்கள் எடுத்துள்ள நல்ல முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இன்று தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சஞ்சிகைகள் கூட, கடந்த காலங்களில் இவ்வாறான சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளன. எனினும் அவை மனம் சோர்ந்து விடவில்லை. இவற்றைப் பாடமாகக் கொண்டு தடைகளை உடைத் தெறிந்து சஞ்சிகை வரலாற்றில் 'தென்றல்' பல்வேறு பரிமாணங்களுடன் நிச்சயம் இடம் பிடிக்கும்.


தொடந்து 'தென்றல்' சஞ்சிகையின் மேலதிக வளர்ச்சிக்கு நீங்கள் செய்யவுள்ள உடனடிச் செயற்பாடுகள் எவை?

எமது சஞ்சிகையின் சந்தாதாரர்களை அதிகரிக்கப் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாளவுள்ளோம். அத்துடன் நாடளாவிய ரீதியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் 'தென்றலை' அறிமுகம் செய்து, விற்பனையினை அதிகரிக்கவுள்ளோம். மேலும் இதனை மக்கள் பயணம் செய்யும் பேரூந்து, புகையிரதம் போன்றவற்றில் நேரடியாகச் சென்று விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இவை பயனளிக்குமிடத்து 'தென்றல்' மேலதிக ஆளுமையுடன் புதுப் பொலிவு பெறும்.


தாங்கள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக வெளியிட்டு வரும் தென்றல் சஞ்சிகை பற்றி என்ன சொல்வீர்கள்?

சஞ்சிகைகள் காலப் பதிவேடாக அமைவதன் காரணமாக அவற்றை தொடர்ந்து வெளிக்கொணர வேண்டியது சஞ்சிகையாளன் என்ற அடிப்படையில் என் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை. இதனை தடைகள் தாண்டி தமிழ் மக்கள் வாழும் பட்டி தொட்டி எங்கணும் சென்றடைய வழி சமைத்துக்கொண்டிருக்கிறேன்.


தென்றல் சஞ்சிகையின் சிறப்பம்;சங்கள் குறித்தும், அதன் சமூகப் பயன்பாடுகள் குறித்தும் கூறுங்கள்?

சஞ்சிகையில் இலங்கையில் மாத்திரமின்றி, நாடு கடந்தும் தேசம் கடந்தும் வாழுகின்ற ஆற்றல்மிக்க மூத்த படைப்பாளிகள் பலரை எமது இன்றைய இளந்தலைமுறையினருக்கு அடையாளப்படுத்தி, அவர்களது ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் அமைந்த தென்றலின் தேடல், எம்மை விட்டு நீங்கிச் சென்றோரை நினைவு கூரும் வகையில் நீத்தார் நினைவு, புதிய வரவுகள், சமகால நிகழ்வுகளை வெளிக்; கொணரும் வகையிலான கவிதைகள், சிறுகதைகள், சிறுகதை எழுதுவது எவ்வாறு? என்ற தொடர் கட்டுரை எனப் பலவற்றைக் கூறிக் கொண்டே போகலாம். பயன்பாடுகளாக புலமைப் பரிசில் மாணவர்களின் அறிவாற்றலை விருத்தி செய்வதோடு, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எமது தென்றல் சஞ்சிகையின் கல்விப் பிரிவால் வருடா வரும் நான்கு பரீட்சைகள்; நடாத்திச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.



நீங்கள் அண்மையில் வாசித்த படைப்புக்களில் உங்கள் மனதில் பதிந்துள்ள படைப்பு பற்றிச் சொல்வீர்களா?

வெற்றித் திருமகன் நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்நூலில் இராமாயணத்தை இளம் சிறார்களுக்கு மிக எளிய நடையில் நூலின் ஆசிரியர் மு. தம்பிப்பிள்ளை அறிமுகம் செய்கிறார். அத்தோடு இராம அவதாரத்திலிருந்து முடிபுனைதல் வரையும் உள்ள விடயங்களைச் சிறுகதைகளாக்கி தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் இராமனின் புனித தெய்வத் தன்மையும், வீரப் பிரதாபங்களும், அற ஒழுக்கங்களும் வெளிப்படுகின்றன.


ஈழத்தில் வெளிவரும் ஏனைய சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் உண்டா?

வாசிப்பதால் மனிதன் பூரணத்துவடைகிறான் என்பதற்கிணங்க எமது சகோதரச் சஞ்சிகைகளான ஜீவநதி, மகுடம், தொண்டன், சுவைத்திரள், பூங்காவனம், செங்கதிர், ஞானம் உட்பட பல்வேறு சஞ்சிகைகளையும் வாசித்து அவற்றின் ஊடாக புதிய தேடல்களை விருத்தி செய்து கொள்வேன்.


உங்களது இலக்கிய வாழ்வில் இதுவரை மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் கூறுங்கள்?

எமது தென்றல் சஞ்சிகையின் தொடர் வருகைக்காகவும், அது கலை, இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்புக்காகவும் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகத் தமிழ் சிற்றிதழ் சங்கம் கொழும்பு மாநகரில் நடாத்திய மாநாட்டில் வைத்து வழங்கிய மணவாளன் இலக்கிய விருதைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இதனை உணர்கிறேன்.


இலக்கிய இரசனையுள்ளவர்கள் நூல்களை வெளியிடுவது வழமை. உங்களது சொந்தப் படைப்புக்களை நூலாக வெளியிட வேண்டுமென்ற எண்ணம் இதுவரை தோன்றவில்லையா?

எனது படைப்பாக ஈழத்தில் மாத்திரமின்றி, புலம் பெயர்ந்து வாழ்கின்ற எழுத்தாளர்களை வெளிக்கொணரும் வகையில் தென்றல் சஞ்சிகையில் இதுவரை வெளிவந்த 17 இலக்கியவாதிகளை வெளிக்கொணரும் வகையில் தென்றல் சஞ்சிகையின் ஐம்பதாவது இதழை தென்றலின் தேடல் பாகம் - 01 ஆக வெளிக் கொணர்ந்துள்ளேன். இத்தேடல்கள் எதிர்காலத்தில் பல்வேறு பாகங்களாகச் சுடர்விட்டுத் தென்றலோடு தென்றலாக அகில மெல்லாம் பரிணமிக்கும்.


அண்மையில் வெளியிடப்பட்ட தென்றலின் தேடல் பாகம் - 01 நூலிலுள்ள தகவல்களைப் பார்க்கும் போது 17 எழுத்தாளர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளமை நல்ல விடயம். ஆனால் அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தற்காலம் வரை தொகுக்கப்படவில்லை. என்பதை ஒரு குறையாகக் காண்கிறேன். இதற்கு என்ன காரணம். சொல்வீர்களா?

இதுவரை வெளிவந்துள்ள தென்றலின் தேடலில் 37 கலைஞர்களின் விபரங்கள் களங்கண்டுள்ளன. இவற்றை வெளியிடுவதிலுள்ள செலவு காரணமாகவே பாகங்களாக வெளியிட எண்ணினேன். அத்தோடு ஐம்பதாவது மலர் வெளியீட்டு நிகழ்வில் வைத்து ஐம்பது முத்தான கலைஞர்களையும் கௌரவிக்க எண்ணியிருந்தோம். இவற்றுக்கான செலவு கூடுதலாக இருந்தமையால் இதழை மேலும் விரிக்க முடியவில்லை.


இதுவரை உங்களது இலக்கியப் பணிகளுக்காக உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?

2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடக சேவை, மற்றும் கலை இலக்கியப் பணியைப் பாராட்டி, அமரர் வீ.சு. கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்தமாக 'வீ.சு. கதிர்காமத்தம்பி விருது' வழங்கிக் கௌரவித்தது. அதனைத் தொடர்ந்து நான் தொடர்ந்து 'தென்றல் சஞ்சிகை'யை வெளிக்கொணர்வதற்காகவும், அதன் பணிகளைப் பாராட்டியும் உலகத் தமிழ்ச் சிற்றிதழ் சங்க மாநாடு 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற போது அதில் வைத்து 'மணவாளன் இலக்கிய விருது' வழங்கிக் கௌரவித்தது. அத்தோடு மட்டக்களப்பு அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தால் எனது கலை, இலக்கியச் சேவையைப் பாராட்டி 2014 ஆம் ஆண்டில் தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான இயக்குனர் இமயம் கே. பாரதி ராஜாவால் எனக்கு விருது வழங்கப்பட்டது.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்?

நானே தென்றலை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பலர், நாம் இந்தியச் சஞ்சிகைகளையே விரும்பித் தேடி வாங்குவதாகவும், உள்ளூர் சஞ்சிகைகள் எமக்குத் தேவையில்லை எனவும் கூறுகின்றனர். இவ்வேளையில் மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் அதனைக் கேட்டு நான் மனம் சோர்ந்து விடவில்லை. பல மூத்த எழுத்தாளர்கள் கூட பல்வேறு தடைகளைத் தாண்டியே இன்று உயரிய நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் தென்றலும் எதிர்காலத்தில் தடைகள் தாண்டி, வீறு கொண்டெழுந்து சாதனைகள் பல படைக்கும்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்