Sunday, June 12, 2022

40. பா.மோகனதாஸ் அவர்களுடனான நேர்காணல்

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பா.மோகனதாஸ் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கலைகளும் கலைஞர்களும் போற்றப்பட வேண்டும். படைப்பாளர்கள் வெளியிடும் நூல்கள் மற்றும் படைப்புகள் சமூகத்திற்குத் தேவையானதாக இருக்க வேண்டும்.                                                  

கலை இலக்கியத்தின் பல துறைகளிலும் உங்களுக்கு ஒரு அனுபவம் இருக்கின்றது. பல துறைகளிலும் நீங்கள் தடம் பதித்திருக்கின்றீர்கள். உங்களது ஆரம்ப காலம் எழுத்துத் துறையாகத்தான் இருந்திருக்கின்றது. அந்தவகையில் எழுத்துத் துறைக்குள் எப்படியாக வந்தீர்கள்?

நான் கிழக்கிலங்கையின் மீன் பாடும் தேனாடு, கலைகளின் களஞ்சியம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மாநகரின் தென் எல்லைக் கிராமமான துறைநீலாவணையை பிறப்பிடமாகக் கொண்டவன். தரம் ஒன்று தொடக்கம் உயர் தர கலைப் பிரிவு வரை துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று உயர் தரத்தில் தேறி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு தெரிவாகியிருந்தேன்.

அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நான்கு வருட நுண்கலைமாணி, நாடகமும் அரங்கக் கலையினையும் கற்று நுண்கலைமாணி சிறப்பு பட்டத்தினைப் பூர்த்தி செய்து, தற்போது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) அரங்கற்கலை பாடத்திற்காக நியமனம் பெற்று ஆசிரியராக கடமையாற்றி வருகின்றேன்.

பாடசாலையில் படிக்கும் காலங்களில் தமிழ் மீது கொண்ட அதீத ஆர்வத்தினால் நிறைய புத்தகங்களை வாசித்து அலசி ஆராய்வதை நான் எனது பழக்கமாகக் கொண்டிருந்தேன். அதுவே என் எழுத்துத் துறைக்கு வித்திட்டது.

படிக்கும் காலங்களிலேயே சமூக சிந்தனை சார் செயற்பாடுகளில் இயல்பூக்கம் ஏற்பட்டது. சமூகம் சார்ந்த சிந்தனை என் குருதியோடு இரண்டறக் கலந்ததாக எண்ணத் தோன்றுகின்றது. எழுத்துத் துறை மிகவும் பிடித்த துறையாகவும் சுதந்திரமானதும் உண்மையானதும் பொதுமக்களுக்காக இயங்கும் துறையாகவும் சமூகத்துடன் சமூகம் சார்ந்து செயற்படக்கூடிய துறையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.


உங்களுடைய குடும்பப் பின்னணியில், எழுத்துத் துறை சார்ந்து வேறு யாரும் இருக்கின்றார்களா?

இல்லை. எனது தந்தை ஏழு ஆண்டுகள் வரையுமே கல்வி கற்றவர். எனது தாய் சாதாரண தரம் வரை கல்வி கற்றவர். எனது அம்மப்பா தங்கராசா என்பவர் விச வைத்தியத் துறையில் சிறந்து விளங்கியவர். தான் எழுத்துத் துறையில் இயங்குவதற்கு ஏதுவாக இருந்தவை சமூகம் சார் எண்ணப்பாடும், வீட்டில் கிடைத்த பூரண சுதந்திரமும் இயல்பூக்கமுமேயாகும்.

வீட்டில் மூத்த ஆண் பிள்ளையாக தாலாட்டி சீராட்டி பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் செல்லப் பிள்ளையாகவே வளர்க்கப்பட்டேன். காலையில் வீட்டை விட்டுப் புறப்பட்டால் வீடு வந்து சேர இரவுப் பொழுதாகும். கலையிலக்கிய நிகழ்வுகள், இலக்கிய சந்திப்புகள், பாரம்பரிய ஆற்றுகைகளை கண்டுகளித்தல், இளைஞர் கழக பயிற்சிப் பட்டறைகள், கலை நிகழ்வுகள், ஊடகப் பயணங்கள் இவ்வாறு பல மணித்தியாலங்கள் வெளியிலேயே கடந்து செல்லும். சில வேளைகளில் இவற்றுக்காக வெளியில் தங்கி நிற்க வேண்டிய தேவையும் ஏற்படும்.

எனது வாழ்நாளில் முழுமையான நேரத்தை வாசிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் ஊடகத்துக்காகவும் மற்றும் கலையிலக்கிய பயணங்களுக்காகவுமே செலவிட்டுள்ளேன். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட களத்தில், எழுத்தில் இருக்கும் நேரமே என்னை தொடர்ச்சியாக எழுதத் தூண்டியது.


எழுத்துத் துறை என்று பார்க்கின்ற போது எப்படியான, என்ன வகையான இலக்கியத் துறையில் அதிக நாட்டம் செலுத்தினீர்கள்?

கட்டுரைகள், திறனாய்வுகள், நேர்காணல்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளேன்.

சமூகம், சமூக இலக்கியம், பாரம்பரியக் கலையிலக்கிய கலையாற்றுகைகள், ஆளுமையாளர்கள் சார்ந்த விடயங்களையே பெரும்பாலும் எழுதியுள்ளேன். விளிம்பு நிலை பாரம்பரியக் கலையிலக்கியங்கள் சமூக மட்டத்தில் எவ்வாறு உள்ளது, அதன் இருப்புகள், முக்கியத்துவம், அதனை மேம்படுத்தல், எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது, விளிம்பு நிலை கலைஞர்களின் தேவைப்பாடுகள் அவர்களது சவால்கள் ஆகிய விடயங்களையே எனது கட்டுரைகள் பேசுவதாகவுள்ளது.


திறனாய்வு, நேர்காணல், கட்டுரை என எழுத்திலக்கியத் துறை சார்ந்து எழுதும் நீங்கள் முதன் முதலாக எத்துறையினை தேர்ந்தெடுத்தீர்கள்?

பாரம்பரிய கலையின் இன்றைய நிலை, பாரம்பரியக் கட்டியக்காரன், இலக்கிய அரங்கப் பாரம்பரியம் ஆகிய மூன்று கட்டுரைகளை முறையே தினக்குரல், சுடர்ஒளி மற்றும் தினகரன் ஆகிய மூன்று செய்தித்தாள்களுக்கும் பா. தாஸன் (சஞ்சயன்) எனும் பெயரில் தபால் மூலம் அனுப்பி வைத்தேன். அனுப்பி ஒரு வாரங்களின் பின்னர் மூன்று பத்திரிகைகளிலும் பிரசுரமாகியது.

செய்தித் தாள்களில் பிரசுரமான கட்டுரைகளைப் பார்க்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன். எனது கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட முதல் வரவேற்பும் ஆதரவுமாக அப்பிரசுரங்கள் அமைந்திருந்தது. தினக்குரலில் பணி புரியும் பாரதி இராஜநாயகம், ந. லெப்ரின்ராஜ் மற்றும் சுடர்ஒளி, தினகரன் பத்திரிகை குழுமத்தினர் என்றும் மறக்க முடியாதவர்கள். என்னை முதன் முதலாக ஊக்கப்படுத்தியவர்கள் பத்திரிகை ஆசிரியர்களே, அவர்கள் இப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

பிரசுரமான கட்டுரைகளை எனது பெற்றோரிடமும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் காட்டி மகிழ்ந்தேன். அக்கட்டுரைகள் எனக்கு ஆத்ம திருப்தியை தந்தது. அதன் பின்னரே செய்தித் தாள்களுக்கு மேன்மேலும் கட்டுரைகள் எழுத வேண்டும், எனது கட்டுரைகள் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டும் என்ற சிந்தனை மேலேழுந்தது. நிறைய கட்டுரைகள் எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தியவை பத்திரிகைகள்தான். ஒவ்வொரு கட்டுரைப் படைப்பும் எனக்கு ஒரு பிரசவமாகவே இருந்தது. பிரசுரமான கட்டுரைகளின் ஒவ்வொரு விடயங்களையும் பார்க்கும்போது பிஞ்சுக் குழந்தைகளைப் பார்ப்பது போன்று இருக்கும். இன்றுவரை கட்டுரைகளை ஆத்ம திருப்திக்காகவும் சமூகத்துக்காகவுமே எழுதி வருகின்றேன்.

ஊடகத்துறைக்குள் எப்பொழுது வந்தீர்கள், ஊடகத்துறையில் இருந்து எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றீர்கள்?

சமூகம் சார்ந்த சிந்தனை செயற்பாடே ஊடகத் துறைக்குள் என்னை தற்செயலாக இழுத்துவிட்டது. சமூகத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள், உரிமைகள் மறுக்கப்படும் போது பொதுமக்களின் சவால்களை   வெளிக்கொணர்வதற்கு ஊடகமே மிகச்சரியான ஆயுதமாக எனக்குப்பட்டது. 

சமூகத்தின் உண்மையான பிரதிநிதிகளாக கலைஞர்களும் படைப்பாளர்களும் ஊடகவியலாளர்களுமே செயற்படுகின்றனர். சமூகத்தின் பிரதிநிதிகள், சமூகத்தின் பிரச்சினைகளை, சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை, அவர்களது உரிமைகளை, எழுத்தின் ஊடாக தட்டிக் கேட்பவர்களாக, பெற்றுக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

கடந்த ஏழு வருட காலத்துக்கும் மேலாக பத்திரிகைகளுக்கு கலையிலக்கிய, சமூக வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கும் போது எழுத்தாற்றலினால் ஊடகத் துறைக்குள் நேர்மையான பாதையில் நுழைய முடிந்தது. எப்பொழுதும் நேர்மையாக பயணிப்பது சந்தோசமாகவே இருக்கும். அப்போது தான் மக்களின் பிரச்சினைகளை தைரியமாக எவருக்கும் பீதியடையாமல் வெளிப்படுத்த முடியும். மற்றவர்களின் தயவுடன் பயணிப்போமாக இருந்தால் சுதந்திரமாகவோ நேர்மையாகவோ செயற்பட முடியாது. மக்களுடன் வாழ்ந்து, மக்களது பிரச்சினைகளை வெளிப்படுத்துவதென்பது ஒருவித அனுபவம். ஊடகம் என்பது ஒரு தொழில் அல்ல. எம்மை நம்பியிருக்கும் மக்களுக்கு இருபத்திநான்கு மணி நேரமும் களத்தினின்று, ஒரு தியாக உணர்வோடு, சேவை செய்ய வேண்டிய சமூக சேவையாகும்.


உங்களுடைய பெரும்பாலான எழுத்துக்களை பத்திரிகைகளின் வாயிலாகத்தான் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அதையும் தாண்டி அண்மையில் வெளியிட்ட "படைப்பாக்க ஆளுமைகள்" நூல் பற்றி விசேடமாக என்ன குறிப்பிடுவீர்கள்?

எனது எழுத்துக்கள் கடந்த ஏழு வருட காலங்களுக்கும் மேலாக செய்தித் தாள்களில் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன. வாசகர்கள் செய்தித் தாள்களில் எனது படைப்புகளைப் பார்த்து, படைப்புகளுக்கான வரவேற்பையும் ஊக்கப்படுத்தலையும் தந்து கொண்டிருக்கின்றார்கள். எனது கட்டுரை, திறனாய்வு படைப்பு ஆகியவற்றினை தேவையேற்படின் என்னிடமிருந்தோ, என் உறவினர்களிடமிருந்தோ செய்தித் தாள்களில் பிரசுரமானவற்றைப் பெற்றுக்கொண்டு நூலுருவாக்க முடியும். சமூகத்திற்கு தேவையான நிறைய கட்டுரைகள் எழுத வேண்டுமே தவிர நூலுருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதுகளில் என்னிடம் பெரிதாக இருக்கவில்லை. இதற்கு விசேடமான காரணம் படைப்புகளை நூலுருவாக்கம் செய்ய பாரிய நிதி வசதி தேவை என்பதேயாகும்.                                                                                 

இருந்தாலும் நான் நேர்காணல் செய்து, செய்தித் தாள்களில் பிரசுரமான ஆளுமையாளர்களின் நேர்காணல்களில் சிலவற்றைத் தொகுத்து, ஷஷபடைப்பாக்க ஆளுமைகள்' எனும் நூலினை பிரசுரம் செய்து அண்மையில் வெளியிட்டுள்ளேன். இந்த நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்கியவர் நீங்களும் எழுதலாம் சஞ்சிகை ஆசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கம் அவர்களாவார். 

நூலைப் பொருத்தவரை இந்த நூலுக்கான ஆசியுரையை மட்டு. அம்பாறை மறை மாவட்ட ஆயர், பேரருட் தந்தை ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் வழங்கியுள்ளார். அவசியமானதொரு புதுவரவு என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக கேராசிரியர் செ. யோகராசா அவர்கள் சிறப்பானதொரு குறிப்பை வழங்கியிருக்கிறார். அத்துடன் என்னைப் பறிறிய குறிப்புக்களை சபா. மதன் அவர்களும் நூலுக்கான வாழ்த்துரையை கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், மற்றும் பதிப்பாசிரியர் என்ற பல்வகை ஆற்றல்களை தன்னகத்தே கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணா வித்யாசாகர் அவர்கள் வழங்கி நூலுக்கு சிறப்புச் செய்துள்ளார்கள். 73 ஆளுமைகளுடன் நான் செய்த நேர்காணல்களைத் தொகுத்து, 426 பக்கங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு காந்தன் அச்சகம் இந்தப் புத்தகத்தை அச்சிட்டுத் தந்தது குறிப்பிடத்தக்கது. 


ஆய்வுத்துறை சார்ந்த தங்களின் ஈடுபாட்டைக் கூற முடியுமா?

யாழ்ப்பாண திருநெல்வேலியைச் சேர்ந்த முதுபெரும் நாடகாசிரியர் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் அன்னையிட்ட தீ மற்றும் எந்தையும் தாயும் ஆகிய இரு நாடகங்களை அடிப்படையாக வைத்து ஷஷபோர்க்கால உளவியல் நாடகங்கள்' எனும் பல்கலைக்கழக ஆய்வை முன்னெடுத்திருந்தேன். போர்க்காலத்திற்குள் யுத்தத்தினால் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கிய துன்ப துயர சவால்கள், போர்ச் சூழலுக்குள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் ஒவ்வொருவரினதும் உள்ளக் குமுறல்களை நாடகாசிரியர் எவ்விதம் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை எனது ஆய்வு ஆராய்வதாக உள்ளது.

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நாடகத்துறை சார்ந்து படிக்கும் காலங்களில் கூத்துக் கலைஞர் வேலாட்சி வல்லிபுரத்தின் கலையிலக்கிய ஆளுமையினை களத்திற்கு சென்று நேர்காணல் செய்து ஒரு தொகுப்பாக சமர்ப்பித்திருந்தேன். எனது ஒவ்வொரு கலை இலக்கிய கட்டுரைகளும் ஆய்வாகவே இருக்கும்.


எழுத்துத் துறையில் இருந்த உங்களுக்கு எப்படி மேடை நாடகக் கலைஞராக, மேடை நாடகத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது?


உயர் தரம் படிக்கும் காலங்களில், நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களையே கலையிலக்கிய நிகழ்வுகளில் மேடையேற்ற வைத்துவிடுவார்கள். ஏனையவர்கள் அதுபற்றித் தெரியாது நடிக்க வராது என்று தப்பித்துக் கொள்வார்கள். பாடசாலைக் காலங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளேன். நிறைய விடயங்களை மனப்பாடம் செய்யும் முறைமையினை அரங்கியற் பாடமே கற்றுத் தந்தது.

உயர் தர கலைத் துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் ஏ தர சித்தியுடன் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் ஆகிய இரு பல்கலைக்கும் தெரிவாகியிருந்தேன். நாடகத் துறையின் மீது கொண்ட நாட்டத்தினால் தென்கிழக்கு பல்கலை செல்லாமல் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நான்கு வருட கற்கை நெறியை மேற்கொள்ளும் காலங்களில் நாடகச் செயற்பாட்டில் தானும் ஒருவனுமாக செயற்பாடு நாடகக் கொள்கைகள் சார்ந்து நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன். பல்கலை பரீட்சைக்காக தனியனாக நாடகங்களை எழுதி தயாரித்து நடித்து மேடையேற்றியுள்ளேன். அங்கு படித்த ஒவ்வொரு மாணவர்களும் இச்செயற்பாட்டில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மேடையேற்ற நாடகங்களும் ஒவ்வொரு அனுபவத்தையும் படிப்பினையையும் கற்றுத் தந்தது.


வளர்ந்து வருகின்ற எழுத்தாளர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆளுமையாளர்களை முன்மாதிரியாகக் கொள்வார்கள். அவர்களுடைய சாயல், பாணி அவர்களது எழுத்துக்களில் இருக்கும். உங்களது எழுத்துக்களுக்கு ஏதாவது தனி அடையாயங்கள் இருக்கின்றனவா இல்லாவிட்டால் வேறு யாரும் எழுத்தாளர்களினுடைய சாயலை பின்பற்றுகின்றீர்களா?

தனியடையாளங்கள் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். சமூகத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஆனால் பிறரால் கவனிக்கப்படாத விடயங்களையே எனது எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. விளிம்பு நிலை கலை வடிவங்களின் தேவை, முக்கியத்துவ இருப்பு, சமூகப் பண்பாடு, பன்மைத்துவம் போன்ற விடயங்களை எனது கட்டுரைகளுக்கூடாக ஆராய்ந்துள்ளேன்.

சாதாரண சமூகங்கள் வாழ்கின்ற இடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடி கலையிலக்கிய பண்பாட்டு மரபுகளை, சவால்களை, ஆதங்கங்களை கேட்டறிந்து அவர்களுக்கூடாகவே அல்லது அவர்களது விடயங்களுக்கூடாகவே ஒவ்வொரு ஆய்வு கட்டுரைகளும் என்னால் வெளிக்கொண்டு வரப்படுகின்றது.

பத்திரிகைகள் ஊடாகத்தான் உங்களது அதிகமான படைப்புகளை வெளியிட்டு வருகின்றீர்கள். உங்களது படைப்புகள் உங்களது பெயரிலா இல்லை புனைப்பெயரிலா வெளிவருகின்றது?

ஆரம்பகால கட்டுரைகள் பா. தாஸன் (சஞ்சயன்) எனும் பெயரில் பிரசுரமாகியிருந்தது. அதன் பிற்பாடு துறையூர் தாஸன், பாக்கியராஜா தாஸன் எனும் பெயரிலும் பிரசுரமாகியது. எழுதத் தொடங்கி மூன்று மாத காலம் கடந்ததும் அனைத்துக் கட்டுரைகளும் பாக்கியராஜா மோகனதாஸ் எனும் எனது முழுப்பெயரிலேயே வந்தது. இப்பொழுதும் அவ்வாறே வந்துகொண்டிருக்கின்றது.


வருங்கால இளந்தலைமுறையினருக்கு கூற விரும்புவது?

தமிழ்மொழியினை நேசியுங்கள், பரந்தளவில் ஆழமாக தேடியறிந்து கற்றுக் கொள்ளுங்கள். சாதிப்பவர்களாக தடம் பதிப்பவர்களாக நாளை வரலாற்றில் பேசப்படுபவர்களாக உருவாக வேண்டும். ஒவ்வொரு விடயங்களையும் வெகு ஆழமாக கற்க வேண்டும். தமிழர்களாகிய நாங்கள் தாய்மொழியாகிய தமிழ் பாடங்களுள் கவிதை, கட்டுரை, திறனாய்வு, நாடகம், நாவல், அழகியல், இலக்கியம் எனும் பல்வேறு விடயங்களை கற்கிறோம். கற்கும் காலத்திலயே அதுபற்றி ஆழ அகலமாக தேடுவதனுடன், ஆக்க இலக்கியப் படைப்புகளை பாடசாலைக் காலத்திலிருந்து படைக்க வேண்டும். 


அழகியற் பாடங்களை கற்கச் செய்வதற்கு, ஆக்க இலக்கிய படைப்புகளை உருவாக்குவதற்கு பாடசாலையில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோர்களும் துறைசார் பயிற்சியினை கற்பதற்கான பாதையினை மாணவர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். ஒரு மாணவரை மருத்துவராகவும் படைப்பாளராகவும் உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமுமே காணப்படுகின்றது.

கலைகளும் கலைஞர்களும் போற்றப்பட வேண்டும். படைப்பாளர்கள் வெளியிடும் நூல்கள் மற்றும் படைப்புகள் சமூகத்திற்குத் தேவையானதாக இருக்க வேண்டும். கலைஞர்கள் படைப்பாளர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாக செயற்பட்டு பக்கச் சார்பற்றவர்களாக தமது படைப்புகளை படைக்க வேண்டும்.


தங்களுக்கு கிடைத்த விருதுகள் தொடர்பாக கூற விழைவது?

லக்ஸ்டோ, ஆர்.கே. ஊடக வலையமைப்பு மற்றும் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடாத்திய பல்துறை சார்ந்தோருக்கான திறமைக்கான தேடல் விருது விழாவில் 'கலைச்சுடர் விருது' (2019) வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் பல்துறைக்கான 'இளங்கலைஞர் விருது' (2018) கிடைக்கப் பெற்றது.

மலையக கலை கலாசார சங்கத்தினால் 'தேசபிமானி விஸ்வகீர்த்தி' (2019) எனும் தேசிய மட்ட கௌரவத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


39. கவிஞர் ஏறாவூர் தாஹிர் அவர்களுடனான நேர்காணல்

கவிஞர் ஏறாவூர் தாஹிர் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகம் குடும்பப் பின்னணி குறித்து?

நான் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றி தற்போது ஓய்வு நிலையில் உள்ளேன். எனது பெற்றோர் சாகுல் ஹமீத், மர்ஹும் ஹாஜியானி ஹதீஜத் உம்மா தம்பதியராவர். மர்ஹுமா ஹாஜறா எனது வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்து மறைந்தார். தற்போது என் மக்களின் அன்பான உபசரிப்பிலும் பராமரிப்பிலும் எனது வாழ்வியம் சக்கரமாக சுழன்று கொண்டிருக்கின்றது. (நீண்ட சுய வரலாறொன்றின் சுருக்கமே இவை)


உங்களது பாடசாலை வாழ்க்கை மற்றும் தொழில் அனுபவம் பற்றியும் கூறுங்கள்?

எனது கற்றல் செயற்பாடுகள் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் துவக்கம் பெற்று, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் முற்றுப் பெற்றது. பாடசாலை விலகளின் பின் சுகாதார திணைக்களத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய பின்னர் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைமை பணிமனையில் கணக்கு எழுதுனராகப் (Account Clark) பணியாற்றிய போதே ஆசிரிய நியமனம் கிடைத்தது. 

குளியாப்பிட்டி, மடிகே மிதியால என்ற கிராமத்தில் கற்பித்தல் தொழிலேற்று, அதன்பின் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு வருடங்கள் பயிற்சியை முடித்து வெளியேறிய எனக்கு, பொலன்னறுவை தம்பாளை அல் ஹிலால் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக நியமனம் கிடைத்தது. இரண்டு வருடங்கள் அங்கு கடமையாற்றி, வெளிநாடு சென்று சவுதியில் றியாத் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பணிபுரிந்த பின், மீண்டும் தாயகம் திரும்பி ஆசிரியர் தொழிலில் இணைந்துகொண்டேன்.


உங்கள் குடும்பத்தவர்களுக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

மாணவப் பருவத்தில் பாடசாலை மாணவர் மன்றம், இலக்கிய மன்றங்களின் செயலாளராகவும், 'சந்தனம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கியுள்ளேன். இனி, என்னைப் பொறுத்தமட்டில் தரமான சுவையான இலக்கியப் படைப்புகளின் தாஸன் நான். எனது குடும்பப் பின்புலமும் அவ்வாறே. எனக்கு தமிழ் கற்பித்த ஆசான்களில் என்னால் மறக்க மறந்தோராகப் பண்டிதர் எஸ். குமாரசாமிசேர், 'அவைவேந்து' யூசுப் சேர் ஆகியோர் விளங்குகின்றனர். மேலும், எனது தந்தை மர்ஹும் சாஹுல் ஹமீத், தாயார் மர்ஹுமா ஹதீஜத் உம்மா ஆகிய இருவரும் இலக்கியத் துறையில் எனது வழிகாட்டிகளாக இருந்தனர். 

பொதுவாக எனது குடும்பமே ஒரு கலை பூங்காவனம் எனலாம். என் உடன் பிறப்புக்களான செய்னுலாப்த்தீன், அபூஹனிபா ஆகிய இருவரும் சிறந்த பாடகர்கள். இலக்கிய இரசனையும் விமர்சகருமாக சகோதரர் ரியாசுல் ஹஸன் விளங்குகிறார். இளைய சகோதரர் றிபாய்தீன் என்னைப் போல் கவிதை, கட்டுரை, பாடல் ஆக்கங்களிலும் அரபு எழுத்தணிக் கலையிலும் பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றார். தங்கை பரீனாவை ஒரு கலை இலக்கியவாதி என்றால் மிகையல்ல. அவ்வாறே என் மைத்துனர் அல்ஹாஜ் நஸீர் (ஜே.பி) அவர்களும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் கவிதை ஆற்றல் படைத்தவராகவும் திகழ்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக எனது தந்தையும் தாயும் ஆன்மிக செயற்பாடுகளிலும் வியத்தகு தம்பதியராக விளங்கினர்.


உங்களுக்கு கவிதைகளில் ஈடுபாடு வந்தது எப்படி?

இளமையிலேயே வாசிப்பில் நேசம் கொண்டவனாக இருந்தேன். என் மாலைப் பொழுதுகளும் விடுமுறை தினங்களும் பெரும்பாலும் பொது நூலகத்திலேயே கழிந்தன. அதிலும் விசேடமாக இளமையிலேயே கவிதை நூல்களை அதிக விருப்பத்துடன் வாசித்தமையும் என் பெற்றோரின் பின்புலமுமே கவிதைகளின் மீதான ஈடுபாட்டுக்குக் காரணங்கள் எனலாம். அன்றைய இளமைப் பழக்கம் இன்றுவரை என்னைத் தொட்டு தொடர்கிறது. 


கவிதைகளில் நகரத்துக் கவிதை, கிராமத்துக் கவிதை என்று வகை பிரித்துப் பார்க்கலாமா? உங்களது இரசனை எப்படியுள்ளது?

கவிதைகள் எனப்படுபவை மனித மன எழுச்சியின் வெளிப்பாடுகளேயாகும். கவிதைகள் நாமாக உருவாக்குவதில்லை. அவை தாமாகவே கவிஞனின் உள்ளத்தில் ஊற்றெடுத்து வெள்ளமெனப் பீறிட்டுப் பாய்வனவாகும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அவை, கருக்கட்டி வளர்ந்து பிரசவிக்கப்பட வேண்டும். ஆனால் கவிதையெனும் முலாம் பூசப்பட்ட வசனங்கள் துண்டாடப்பட்டும், நிரல், நிரைப்படுத்தப்பட்டும் மாயா ஜாலங்களை விஞ்சியவையாய் வெளிவந்த வண்ணமே இன்றைய தமிழிலக்கியம் அதிகதியில் விரைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.


நீங்கள் கேட்டியிருந்த நகர்ப்புற, நாட்டுப்புறக் கவிதைகள் இடையேயான வேறுபாடுகளை என்னால் உணர முடியவில்லை. கவிதைகள் நாடு, நகர் கடந்தவை. இன, மத, இட இடைவெளிகள் தாண்டியவை என்பதே எனது கருத்து. இரண்டையும் பகுத்து நோக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இரண்டிலுமே சுவைத்து இரசிக்கத்தக்கவை நிறையவே உள்ளன. கருத்து செறிவானவை இருக்கின்றன.


உங்கள் கவிதைகளின் தனித்துவம் பற்றி என்ன சொல்வீர்கள்?

அதனைத் தீர்மானிப்பது நான் அல்ல. எனது கவிதைகளை நுகரும் வாசக நெஞ்சங்களே.




இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

இதுவரை இரண்டே இரண்டு கவிதைப் புத்தகங்களே வெளிவந்துள்ளன. ஷஷமறக்க மறந்த மனிதம்' கருக்கட்டி, முழுமை பெறுவதற்கு எனக்கு உற்சாகமும் உத்வேகமும் தந்தவர்களில் கவிஞர் கலாபூஷணம் மீராலெப்பை சேர் (அனலக்தர்), அலியார் சுபைர் (தேனீக்களை இலக்கிய வட்ட தலைவர்), ஜனாப் மூபாஸ்தீன் (உதவி கல்வி பணிப்பாளர்), எம்.ஏ.ஸீ.ஏ. லத்தீப் ஹாஜியார் (ஜே.பி) போன்றோர் என்றும் என்னால் மறக்க மறந்தோராக விளங்குகின்றனர். அத்துடன் எனது கடைசி வரிகள் எனும் கவிச்சரம், மருத்துவம் தோற்றுப் போய் துன்பியலில் துவண்டு கொண்டிருந்த எனது துணைவியை ஒரு புத்தகமாய் உருவகித்து ஷஷஅதன் வாசிப்பின் கடைசி வரிகளில் நான்' என்பதை சுட்டி நிற்பதே அப்பெயரிடலின் பிரதான நோக்கமாகும்.


"கடைசி வரிகள்" கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கவிதைகளின் கருப்பொருட்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய கடைசி வரிகள் என்ற கவிதை நூலானது 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 173 பக்கங்களை உள்ளடக்கியுள்ள இந்த நூலில் 86 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக இதில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்களை நோக்குமிடத்து ஆன்மீகக் கவிதைகள், அகம் சார்ந்த கவிதைகள் மற்றும் பல்வேறு வகையிலான கருப்பொருட்களில் அமைந்துள்ள கவிதைகள் என்று புத்தகம் முழுவதும் கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. விரிவாக இதுபற்றிச் சொல்வதைவிட வாசகர்கள் அதனை வாசித்து இன்புறுவதனையே நான் விரும்புகின்றேன்.


"மறக்க மறந்த மனிதம்" கவிதை நூலில் உள்ளடங்கியுள்ள கவிதைகள் பற்றி விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன? இந்தத் தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

நூலின் உள்ளடக்கம் பற்றி விசேட குறிப்புகள் என்று சொல்வதென்றால் கால, நேர, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு அமைய என்னவளில் அவை பிக்காஸோ, டாவின்சி ஓவியங்கள் எனலாம். மேலும் நூலின் தலைப்பினை வாசகர்கள் சற்று நிதானித்து புரியத்தக்கதாய் அமைதல் வேண்டும் என்ற நோக்கில் தெரிவு செய்தேன்.


பெண் எழுத்தாளர்களின் கவிதைகளை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

கவிதைகளில் ஆண், பெண் என்ற வேறுபாடுகள் தேவையற்றவை. கருத்தாழமிக்க கவிதைகளைப் படைக்கும் பெண் கவிஞர்கள் இன்று மட்டுமல்ல, தொன்றுதொட்டே இலக்கிய வானில் சிறகடித்துள்ளனர். சிறகடிக்கின்றனர். சான்றாக ஷஷஇந்திய வானம்பாடி'  எனும் சிறப்பிக்கப்பட்ட மேடம் சரோஜினி நாயுடுவை குறிப்பிடலாம். இந்திய உபகண்ட விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்திய பெண் கவிஞர் அவர்.


ஒரு சிறந்த கவிதை எப்படி அமைய வேண்டும்?

வாசகர் இதயங்களை வசீகரித்து ஆழ ஊடுருவி பாமரனும் படித்து சுவைக்கத்தக்க, சிந்தைக்கு விருந்தும் மருந்துமாக அகராதியின் அவசியம் (அதிகம்) அற்றவையாக திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுவனவாக கருத்தாழ மிக்கவையாக அமைபவையே சிறந்த கவிதைகள் என்பதையும், வாசகர்களை நயக்கவும், வியக்கவும் வைப்பனவும் எனலாம்.


கவிதைக்கும் பாடல் வரிகளுக்குமான வித்தியாசமாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

பொதுவாக பாடல்களும் ஒருவகையில் கவிதைகள் எனும் வரம்புக்குள் அடங்கியவையே. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் ஏன் பாரதி, பாரதிதாசன் போன்றோரின் கவிதைகளும் ஒருவகையில் பாடல்களே!  பாடல்களும் பெரும்பாலும் கவிதைகளே எனலாம்.

உண்மையில் கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் வித்தியாசம் பெரிதாய் இல்லை. மரபுக் கவிதைகள் பெரும்பாலும் பாடல்களாகப் பரிணமிக்கத்தக்கவையே. இதற்குச் சான்றாக ஏறாவூர் தேனீ கலை இலக்கிய மன்ற அமைப்பின் தலைவராகவும், சிறந்த பாடகராகவும் கவிஞராகவும் மேடை நடிகராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் விளங்கி, அண்மையில் காலமான மர்ஹும் அலியார் சுபைர் என்பவர் எனது 'மறக்க மறந்த மனிதம்' வெளியீட்டு நிகழ்வின் போது அதே நூலில் இடம்பெற்றுள்ள 'மரணம் வேண்டாம்' என்ற கவிதையைப் பாடி அவையை வியக்கச் செய்தமையைக் குறிப்பிடலாம். 


உங்களை மிகவும் கவர்ந்த கவிஞர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்? என்ன காரணம்?

எனக்குப் பிடித்த கவிஞர்களைப் பற்றிக் கூறுவதெனில், சிந்தைக்கும், சிந்தனைக்கும் விருந்தாகவும், மருந்தாகவும் கவிதைக் களம் கலக்கும் கவிதைகளின் சொந்தக்காரர்கள் அனைவருமே எனக்கும் சொந்தக்காரர்கள்தாம் ஜனரஞ்சகக் கவிஞர்கள் மட்டும்தான் என்றில்லை. எவரையும் அவ்வாறு சுட்டு விரல் நீட்டி என்னால் குறிப்பிட முடியவில்லை. இருந்தும் புரட்சிக் கமால், அவை வேந்து யூசுப் சேர் போன்றோரின் கவிதைகளும், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, சோம சுந்தரப் புலவர், சின்னத் தம்பிப் புலவர், அப்துல் காதர் லெப்பை புலவர், முகைதீன் பிச்சை புலவர், சரிப்தீன் புலவர், தசாவதானி சேகுத் தம்பி பாவலர் போன்றோர் தமிழின் அளவு கணிசமற்ற இன்ப இரசத்தை வாசகர் இதய மனைகளுள் அள்ளி அள்ளி நிறைந்தவர்களாவர்.


உங்களைக் கவர்ந்த கவிதை ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னைக் கவர்ந்த கவிதைகள் ஒன்றா இரண்டா குறிப்பிடுவதற்கு. என்னைக் கவர்ந்த கவிதைகள் பலவற்றில் மண் வாசனை கமழும் 'புரட்சிக் கமால்' அவர்களின் இரு கவிதைகளைத் தர விரும்புகிறேன்.


கார் மேகப் பட்டிலோர் பொன்னிழை பின்னியே

காட்டிடும் மின்னலின் நாட்டியம் போல்,

ஊர்ப்புறத் தோப்பிலோர் ஊஞ்சலை உந்துவார்,

உள்ளாடை பொங்கிடும் ஒப்பனை போல்,

வேர்ப்பலாவடு நின்ற வார்க்கச்சை வீங்கிட

விளையாட்டயர்வதன் விந்தையடி!

மார்கழி விடுதலை! 

நாளைக்குன் மாப்பிளை

வருதலுக்குமுன் ஏற்பாடோ? 


எனும் நீண்ட கவிதையும்,

வண்டியின் கீழே நாயொன்று

வலமிடமாக நோக்காடி,

சண்டியன் போலே செல்கிறது

வண்டியின் கீழே நாயொன்று..


எனத் தொடரும் கவிதையும் என் மானசீக திரையில் அடிக்கடி விழி சிமிட்டும்.

அண்மையில் நான் வாசித்த சேகனாப் புலவரின் கவிதை ஒன்றினை குறிப்பிட விழைகிறேன் இந்தக் கவிதைக்கு விளக்கம் புரியாமல் கவிஞர்கள் சிலரிடம் வினவியும், விளக்கம் அமையாமல் இருக்கிறேன். இக்கவிதையின் விளக்கத்தை கவித்துவ புலமை உள்ளோரிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். கவிதை இதோ:-


இயல் மன்னிய மஹ்மூறெனும்

எழில் பள்ளியின் நேரே

வியல் மன்னிய திருவாயொளி

மிக வீசிய என்றன்

செயல் மன்னிய கஃபாவணி

திகழ் நன்குடி வைத்தேன்

சுய மன்னவர் அபயம் பல

துயரின்றி அறிவே!


                ***

பொறிகாவன புலன் காவன

புகல் காவன பிசகா

நெறி காவல செயல்காவல

நிலை காவல வைத்தே

குறி காவல மனை காவல

குடி காவல என்றன்

அறி காவல அபயம் பல

துயரின்றிய அறிவே!


தற்காலத்தில் இருக்கின்ற கவிஞர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்பு எந்தளவில் இருக்கிறது? உங்களிடமுள்ள கவிதை தொடர்பான அறிவை இளந்தலைமுறையினருக்கு எப்படிக் கொடுக்கின்றீர்கள்?

என்னைப் பொறுத்தளவில் தற்காலம், அக்காலம் என்றில்லை. அனைத்துத் தரம், தரப்பினருடனும் மனம் விட்டுப் பழகுகிறேன். என்னை நாடி இளம் கவிஞர்கள் வரும் போதெல்லாம் என்னால் முடிந்த தெரிந்த ஆலோசனைகள் வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த மன நிறைவடைகிறேன்.


இந்தக் கொரோனாக் காலங்களில் புத்தக வெளியீடுகள் வெற்றியளிப்பதாக நினைக்கிறீர்களா?

என்னால் வடிக்கப்பட்ட கவிதைகளின் தொகை பற்றி எனக்கே தெரியாது. அனைத்தும் நூலுருப்பெற்றிருப்பின், வெளியீடு தசாப்தங்களைத் தாண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். 'புத்தக வடிவெடுத்தல்' என்பது பிரசவவலியைவிட கொடியது என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். கொரோனாக் காலங்களில் மட்டுமா? நாளுக்கு நாள் உச்சம் தொட விரையும் விலைவாசி? கடதாசித் தட்டுப்பாடு? சாதாரண காலத்திலேயே பிரசவ வலியை விஞ்சியிருந்த புத்தக வெளியீடு, இப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையிலேயே உள்ளது.


நீங்கள் இலக்கிய உலகில் எவ்வாறு அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

ஏறாவூர் தாஹிர் என்பவரும் ஒரு கவிஞர்தான் என கவித்துவப் பரப்பு ஏற்றுக்கொண்டால் போதும்.


ஏனைய கவிஞர்களின் கவிதைகளை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

நல்ல கவிதைகளைப் படைப்போரைத் தட்டிக் கொடுப்பேன். அல்லாதவர்களைத் தட்டிக் கழிப்பேன்.


இளந்தலைமுறையினர் மரபுக் கவிதைகளைப் படித்துவிட்டுத்தான் புதுக் கவிதைகளை எழுத வேண்டுமா?

அவ்வாறென்றில்லை. படிப்பதும், விடுவதும் அவரவர் விருப்பைப் பொறுத்தவை. படித்தால் நல்லது தானே! கவித்துவம் மெருகேறும் தானே!

மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், எனும் இடைவெளிக்குள் கவிதைப் பகுத்துப் பார்க்க விருப்பற்றவன் நான். இரண்டிலுமே தரமான, மனங்களை தடவுகின்ற கவிதைகள் உள்ளன. சான்றாகப் பல கவிதைகளைக் குறிப்பிட முடியும். (விரிவஞ்சி அவை வேண்டாம்) அத்துடன் தமிழ் இலக்கியக் களத்தில் கவிதைகள் மட்டுமின்றி, பாடல்கள், கதைகள், கட்டுரைகள், மேடைப் பேச்சுகள், உரைகள், வாழ்த்து மடல்கள், பட்டிமன்றம் என்றெல்லாம் எனது இலக்கியப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.


கவிதைகள் தவிர்த்து வேறு எத்துறைகளில் ஆர்வம் அதிகம்?

சமய, சமூகப் பணிகளுடன் இலக்கியம் பற்றிய அனைத்திலுமே.


பல தசாப்த காலங்களாக இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். அந்தவகையில் இதுவரை உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த பரிசுகள், பாராட்டுகள், பட்டங்கள் மற்றும் விருதுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

அவற்றைப் பட்டியலிடத் தொடங்கினால் பக்கங்கள் நீண்டு விடும். எனவே, அவை வேண்டாம். எனினும் 'கலாபூஷணம், தேசமான்ய, சமூக ஜோதி, கலைத் தென்றல்' முதலியன போதும் என நினைக்கிறேன்.


இறுதியாக என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?

இலக்கிய உலகம் மிக விசாலமானது, ஆழமிக்கது. வாசிப்பின் மூலமே அதில் தடம் பதித்து ஏறு நடை போடலாம் என்பதுடன் தொடர்ந்து எழுத வேண்டும். என்னை இந்த நேர்காணலில் இதய பூர்வமாக இணைத்துக் கொண்ட உங்களுக்கும், செந்தூரம் இதழாசிரியர் மற்றும் அதன் அமைப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் என் அகம் கனியும் நன்றிகளை தெரிவித்து விடை பெறுகின்றேன். நன்றி!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

38. விவேகானந்தனூர் சதீஸ் அவர்களுடனான நேர்காணல்

விவேகானந்தனூர் சதீஸ் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

என்னைப் பற்றி கூறுவதானால்; வடக்கிலங்கை மாவட்டத்தின் விவேகானந்த நகர் என்ற நகர்ப்புறத்தை  வாழ்விடமாகக் கொண்டவன். செல்லையா - பவளவள்ளி இணையரின் இளைய மகன். மனைவி, மகள் என சிறியதொரு குடும்பத்தின் தலை மகன். கிளிநொச்சி சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் நோயாளர் காவு ஊர்தி ஓட்டுநராகக் கடைமையாற்றி வந்த நான், சுயாதீன ஊடகவியலில் கரிசனை கொண்டவன் என்று சுருக்கமாகக் கூறலாம். 


உங்கள் பாடசாலை வாழ்க்கை, இலக்கிய ஆர்வம் பற்றியும் குறிப்பிடுங்கள்?

'ஆதவன் முன்பள்ளி' தொடங்கி ஆரம்பக் கல்வியூட்டிய அயலகப் பள்ளியாம் கனகாம்பிகைக்குளம் அ.த.க. பாடசாலையில் இடைநிலை பயின்றேன். கிளி. இந்துக் கல்லூரி; இறுதியாக கிளி. மத்திய கல்லூரி என நான்கு நிலை அறிவுச் சாலைகளையும் நன்றியோடு நினைவில் கொள்கின்றேன். போர் நிலத்தில் வாழ விதிக்கப்பட்டிருந்த எமது மாணவப் பருவங்கள் இயல்பு நிலைக்கு அப்பாற்பட்டிருந்த காலங்கள் அவை. அதற்காக எமது அன்றாடங்களை நாம் அடகு வைத்திருக்கவில்லை. பாடப் புத்தகங்களின்றியும் பதுங்கு குழி வாழ்க்கையுமாக கடந்து கொண்டிருந்த அந்நாட்களிலும் கல்விச்சாலைகள் தொடர்ந்தன. அநேகமாக நான் பேச்சு, விவாதம், வில்லிசை போன்ற கலை நிகழ்வுகளில் பங்குபற்றுவதுண்டு. தவிர உதைப்பந்தாட்ட விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். 


உங்களை எழுத்தாளராக வளர்த்த பின்னணி என்ன? இத்துறையில் வளர வழிவகுத்தவர்கள் யார்?

என்னை ஒரு எழுத்தாளன் என்று பறைசாற்றிக் கொள்ளும் அளவுக்கான பக்குவத்தை இன்னும் அடையவில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் என் எழுத்து முயற்சிகளுக்கான பின்னணியை 'காலச் சூழலிடம்' கையளிக்க கடமைப்படுகிறேன். எனதிந்த படைப்பிலக்கியப் பயணத்தில் தொடர்ந்தும் நடை பயில்வதற்கு எனது ஆக்கங்களுக்கு களம் தந்துவரும் அச்சு ஊடகங்களும் சஞ்சிகைகளும் முதன்மைக் காரணமெனக் காண்கிறேன். தவிர எனது படைப்புகளின் முதல் வாசகியாக மட்டுமின்றி உந்துசக்தியாக செயற்பட்டுவரும் எனது அம்மா பவளவள்ளி மிக முக்கியமானவர்.


நீங்கள் எந்தெந்த இலக்கியத் துறைகளில் இயங்கி வருகிறீர்கள்?

'ஆசைக்கு ஒரு கவிதை எழுதிப் பார்ப்போம்' எனத் தொடங்கிய என் எழுத்தார்வம் சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து,  விமர்சனம், குறுநாவல் என முன்நகர்ந்து தற்போது நாவலில் காலடி வைத்திருக்கிறது. 


உங்களது முதலாவது படைப்பை பத்திரிகையில் பார்த்தவுடன் உங்களது மனநிலை எப்படி இருந்தது? 

1999 இல் தினமுரசு பத்திரிகையின் 'கருத்தோவியத்திற்கான நான்கு வரிகள்' பக்கத்திற்காக சிறிய கவிதை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த வாரம் அது எனது பெயர், முகவரியுடன் பாராட்டுக் கவிதையாக அச்சேறி வந்திருந்தது. அதனைக் கண்டு ஆனந்தமடைந்தது மட்டுமல்ல, ஓடி ஓடி அந்தப் பத்திரிகைப் பக்கத்தை அனைவருக்கும் காண்பித்து பெருமை கொண்டேன் என்ற உண்மையையும் சொல்ல வேண்டும்.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

01. 'இரும்புக் கதவுக்குள்ளிருந்து...' (கவிதை) 2012 கலை இலக்கியப் பேரவை வெளியீடு

02. 'விடியலைத் தேடும் இரவுகள்...' (கவிதை) 2016 படைப்பாளிகள் உலகம் வெளியீடு

03. 'சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு...' (கவிதை) 2017 படைப்பாளிகள் உலகம் வெளியீடு

04. 'மனச்சிறையிலிருந்து...' (கவிதை) 2017 காவியாலயா வெளியீடு

05. 'வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்...' (சிறுகதை) 2021 ஜீவநதி வெளியீடு

'துருவேறும் கைவிலங்கு' என்ற கட்டுரைத் தொகுதி பாதி முடிந்த நிலையில் பதிப்பகத்தில் இருக்கிறது. எங்கட புத்தகங்கள் வெளியீட்டு அமைப்பு இதனை வெகு விரைவில் வெளியீடு செய்ய இருக்கிறது. பெரும்பாலும் இவ்வருடம் இந்த நூலினை வெளியிடலாம் என்றே நினைக்கின்றேன்.


நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது? 

அந்த மகிழ்ச்சியை மற்றும் மனநிறைவை, கருச்சிதைவுகளை மாத்திரமே கண்டு நொந்திருந்த தாயொருத்தி முதற் குழந்தையை பிரசவித்த போது ஏற்படக்கூடிய ஆனந்தத்திற்கு ஒப்பிடுகிறேன்.


'இரும்புக் கதவுக்குள் இருந்து...' என்ற உங்களது முதலாவது கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

'சிறைக்கூடத்தில் இருந்து, பண்டிட் ஜவகர்லால் நேரு தன்னுடைய மகள் இந்திராவுக்கு 'என் பிரியமான பிரியதர்ஷினிக்கு...' என்று எழுதிய கடிதங்களின் தொகுப்பு பின் நாளில் நூலாக வெளியானது. அது வெறும் கடிதங்களைக் கொண்ட நூல் மாத்திரமல்ல. உணர்வு, ஒழுங்கு, வாழ்வின் இலட்சியம், தூரநோக்கு எனப் பல நல்லவற்றை உள்ளடக்கிய நூல். அதேபோல என்னுடைய கன்னிக் கவிதைகளும் நல்ல பல கருத்துக்களையும் கருப்பொருட்களையும் கொண்டனவாக அமைந்துள்ளன என்று போராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் இந்த நூலுக்கான அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.


'உங்கள் விடியலைத் தேடும் இரவுகள்...' கவிதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்?


'தேசத்திற்கு ஒளிகொண்டு பாய்ச்சும் வலிமை நூல்களுக்கே அதிகமாக உள்ளது' என்பதற்கிசைய அடக்குமுறை அக்கினியில் அவித்தெடுக்கப்படுகின்ற சமுதாயத்தின் துன்ப துயரங்களில் சிலவற்றை கிள்ளியெடுத்து கவிதைப் புள்ளியிட்டு வாசகர் தம் கட்புலனில் அனுபவிக்கத் தந்துள்ளேன். இவை சில மனங்களையேனும் தொட்டு, மாற்றங்களை விளைவிக்க வேண்டுமென ஆவல் கொண்டதன் உப விளைவே 'விடியலைத் தேடும் இரவுகள்' என்ற நூல். 


உங்கள் சிறுகதை நூலின் தலைப்பு குறித்தும் கருப்பொருட்கள் குறித்தும் என்ன சொல்லப் போகிறீர்கள்? 

போரினால் பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டியின் வாழ்வாதாரத்திற்குத் துணையாக இருந்துவந்த பழமையான வேப்ப மரமொன்றை வீதி அகழிப்பு என்ற அபிவிருத்தியின் பெயரால் தறிக்க முற்படுவதும் இறுதியில் அதைத் தடுத்து நிறுத்தப் போராடிய மூதாட்டி, தன் குடும்பத்தை வாழ வைத்த மரத்தோடு சேர்ந்து தானும் மடிவதுமான சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாகியது. ஷவேப்ப மரமும் பவளம் ஆச்சியும்| என்ற இந்த சிறுகதைத் தொகுதி தாங்கி வந்துள்ள கதைக் கருக்களாக நமது சமுதாயக் குடிகள் சந்தித்து வருகின்ற ஏக்கம், தாக்கம், தவிப்பு, நட்பு - பிரிவு, உறவு, விழிப்பு எனப் பல்வேறுபட்ட சங்கதிகளைச் சொல்லி நிற்கிறது. 


ஒரு நூல் பிரசுரம் என்பது ஒரு பிரசவத்திற்கு ஒப்பானது என்கிறார்களே! இதுபற்றி என்ன சொல்வீர்கள்?

இது முற்றிலும் மெய்யான கூற்றென்பதை அனுபவ வாயிலாகக் கண்டவன் நான். உழைப்பதைவிட சேமிப்பது கடினம் என்பார்கள். அதேபோன்றுதான் ஒரு படைப்பை ஆக்குவதைவிட அதை செப்பமான நூலாக வெளிக் காணச் செய்வது மிகக் கடினம். எமது தேசத்தில் எழுதுபவர்களுக்கான ஊக்குவிப்பு மந்த கதியிலிருந்து மாறுவதாக இல்லை. ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதன் செலவுப் பெறுமதியைத் தன்னும் மீட்டெடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில்தான் எமது உள்நாட்டு புத்தகங்களின் விற்பனை விகிதம் காணப்படுகிறது. திறன், தொழிநுட்பத்தின் அதிகரித்த ஆக்கிரமிப்பு மற்றும் அநேகமான வாசகர்கள் அயலுறவு தேசத்தின் கவர்ச்சி மிகுந்த (அமைப்பு, தலைப்பு, கரு) நூல்களை வாசிப்பதில் ஆர்வத்தைக் காட்டுவதால் உள்ளூர் படைப்புகள் புறக்கணிப்புக்குள்ளாகின்றன.


உங்கள் மனதை வசீகரித்த கவிதைகள் அல்லது கவிதை வரிகள் பற்றிக் கூறுங்கள்? 

இதற்குப் பொதுவாகவே பதிலளிக்கிறேன். மரபென்று பரையொலித்துக் கொண்டு கடைநிலை மாந்தரை  சென்றடையாத எந்தப் படைப்புகள் மீதும் எனக்கு நாட்டமில்லை. படைப்புகள் எப்போதும் சமூக நலன் சார்ந்து நிற்க வேண்டுமென நினைக்கிறேன். அந்தவகையில் குரலற்ற மனிதர்களின் குரலாக ஒலிக்கின்ற வரிகள் பொதுவாக என்னை வசீகரிப்பதுண்டு.



ஆரம்ப காலங்களில் உங்கள் படைப்புகளுக்கு களம் தந்த ஊடகங்கள் பற்றி?


வலி சுமக்கும் என் வரிகளுக்கு களம் தருவதில் அநேகமான ஊடகங்கள் பின்நின்றதில்லை. குறிப்பாக தினமுரசு, தினகரன், உதயன், சுடர் ஒளி, தமிழ் தந்தி, வீரகேசரி, தினக்குரல், வலம்புரி, காலைக்கதிர், மலை முரசு போன்ற தேசிய பிராந்திய பத்திரிகைகளை குறிப்பிட முடியும். சஞ்சிகைகள் வரிசையில்; இருக்கிறம், ஞானம், பூங்காவனம், கவிஞன், தளவாசல், ஜீவநதி, எங்கட புத்தகங்கள், கலைமுகம், கரை எழில் போன்றவற்றை குறிப்பிடுவேன். தவிர, சில மின் இதழ்களையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனாலும் சில முதன்மை சஞ்சிகைகள் தமக்கென்று முகமறிந்த வாடிக்கைப் படைப்பாளிகள் சிலரைத் தொடர்ந்து திருப்திப்படுத்தியாக வேண்டும் என்று கருதுவதால் வளர்ந்து வரும் புதுமுக எழுத்தாளர்கள் ஊக்கப் படுத்தப்படாமல் ஏமாற்றமடைந்து எழுத்துலகிலிருந்து கரைந்து காணாமல் போய்விடுகிறார்கள். 


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் நீங்கள் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துகள் உங்களை அதிகமாகக் கவர்ந்ததாக நினைக்கிறீர்கள்? 

ஆரம்ப நாட்களில் அனைத்தையும் வாசித்தேன். பின் நாட்களில் தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். கைதேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை கோடிட்டுக் காட்டுவதால் புதுமுக எழுத்தாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுவார்களோ என அஞ்சுகிறேன். எனவே பெயர்ப் பட்டியலைக் கூற விரும்பவில்லை. ஆதலால் வாசகர் தாமே வாசித்து தீர்மானித்துக் கொள்வார்களாக. இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும், எழுத்துக்களின் வாய்மையினை வாழ்க்கையில் கொண்டவர்களாக எல்லா எழுத்தாளர்களும் இருந்துவிடமாட்டார்கள். பலருடைய படைப்புகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. பொதுநலன் பற்றி எழுதி விருதுகளை வாங்கி வீட்டில் அடுக்கிக் கொண்டு கழுவித் துடைத்த சுயநலமிகளை நான் சந்தித்திருக்கிறேன்.


படைப்பைப் போலவே படைப்பாளிகளும் இருப்பார்கள் என்றெண்ணி அது பொய்த்துப்போன சம்பவங்களை நீங்கள் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி?

நிச்சயமாக. சாகித்திய விருது பெற்ற ஒரு எழுத்தாளரின் நாவலைப் படித்துவிட்டு அவருடன் நேசம் கொண்டிருந்தேன். ஒருநாள் குறித்த நேசரை அணுகி எனது சிறுகதையொன்றைப் பற்றிக் கூறிவிட்டு 'இவ்வாறு சொல்லிச் சென்றால் நன்றாக இருக்குமா?' என்று சிநேக பூர்வமான ஆலோசனையொன்றை கேட்டேன். அதற்கவர் 'நீங்கள் எழுதக் கூடியவர் தானே. எழுதிப் பல பரிசுகள் வென்றிருக்கிறீர்கள். நீங்கள் எழுதினால் அது சரியாகத்தான் இருக்கும்..' என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டார். 'நான் போட்டியில் பங்கு பற்றியிருந்தால் உங்களது சிறுகதைக்கு பரிசு கிடைத்திருக்காது' என்று அந்த 'விருதெழுத்தாளர்' முன்பொருநாள் கூறியது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. அன்று தொடக்கம் அவரிடம் எந்த ஆலோசனைகளையும் நான் கேட்பதில்லை. ஆனாலும் அவரது படைப்புகளை நான் வளர்வதற்காக இன்னும் அதிகமாக விரும்பி வாசிக்கிறேன்.


இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தமட்டில் தகவல்களை மிக வேகமாக மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கின்றன. ஆனபோதிலும் அவற்றின் நம்பகத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்பன கேள்விக்குறியாகவே நோக்கப்படுகிறது.


உங்களது எழுத்துக்களின் நோக்கம் என்ன? உங்களது படைப்புகளுக்கு அல்லது உங்களுக்கு கிடைத்த ஆதரவுகள், வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

படைப்பிலக்கியம் என்பது பிரச்சாரம் அல்ல. வெறும் பொழுது போக்குப் பணியுமல்ல. பெயருக்கும் புகழுக்குமான வேலையும் அல்ல. மனிதர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள், அதில் உள்ள செருகல்கள், விரிசல்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், குமுறல்கள், உள் மன ஏக்கங்கள் என அனைத்தையும் ஊடுருவி நோக்கி கலை நயத்துடன் படைப்பதே படைப்பு ஆகும். 

விழிப்புணர்வு மற்றும் ஆவணப்படுத்தலுக்கான படைப்புகளுக்கு அப்பால் சில படைப்பாளிகள் சந்தை நிலவரங்களை அறிந்து சரக்குகளை தேடி எழுதும் விருதுக்கான படைப்பாளிகளாக எழுத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் தற்போது வரை விழிப்புணர்வு மற்றும் ஆவணமாக்களை நோக்காகக் கொண்டே எழுதி வருகிறேன். அந்தவகையில் ஆதரவுகளும் வரவேற்புகளும் நிறையவே கிடைக்கின்றன. தவிர இதுவரை சிறுகதைகளுக்காக பல பரிசுகளும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன. இவைதவிர எனது நான்கு கவிதைத் தொகுதிகளும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவரால், 2017 ஆம் வருடத்தில் ஷஷஅரங்காற்றுகை ஆய்வு|| இற்கு உட்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


உங்களது படைப்புகளால் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

என்னால் நாட்டின் தேசிய பத்திரிகைகளுக்கு எழுதப்பட்ட கட்டுரைப் படைப்புகள் சிலவற்றின் மூலம் சில உடனடி மாற்றங்கள் நிகழ்ந்ததை அவதானித்து ஆச்சரியமடைந்திருக்கிறேன். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு எவராலுமே கண்டுகொள்ளப்படாதிருந்த யாழ். குடாநாட்டை மையப்படுத்திய அரச சேவை நிறுவனம் ஒன்றின் ஒட்டுமொத்த குறைபாடுகளையும் ஊடுருவி நோக்கி, அவற்றை கோடிட்டுக் காட்டி கட்டுரை ஒன்றை வரைந்து பல பத்திரிகைகளுக்கு அனுப்பியிருந்தேன். அந்தக் கட்டுரை அடுத்த வாரம் வெளிவந்த ஆறு பத்திரிகைகளிலும் அதுவும் விசேடமாக ஒரே நாளில் முழுப் பக்கக் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டது. ஆகையினால், குறித்த நிறுவனம் தாமதிக்காமல் குறிப்பிடத்தக்களவு குறைநிரப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தமையை ஒரு மாற்றமாகவே பார்க்க முடிகின்றது. இது எனக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது. இத்தகைய அனுபவங்கள் மறக்கவியலாதவை.


உங்களது எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றி குறிப்பிடுங்கள்? 

கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், குறுநாவல் என்பனவற்றைக் கடந்து எதிர்காலத்தில்  காத்திரமான நாவல்களைப் படைத்து எனது ஆவணப்படுத்தலை அகலிக்க வேண்டுமென விருப்பங்கொள்கிறேன்.


இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?

இலத்திரணியல் நூல்களை வாசிப்பதிலும் பார்க்க முடிந்தவரை அச்சு நூல்களை வாசிப்போம்;.. சேமிப்போம்;.. பகிர்ந்து கொள்வோம். பிரதேசத்தில் இடம்பெறும் நூல் வெளியீடுகளுக்கு அழையா விருந்தாளியாக என்றாலும் சென்று கலந்து கொண்டு, பணம் செலுத்தி புத்தகங்களைப் பெற்றுக் கொள்வோம். 


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்