கவிஞர் ஆ.லெ.மு. இர்ஷாத் உடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகம் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?
எனது பெயர் இர்ஷாத். நான் வாழைச்சேனையில் வசித்து வருகிறேன். பாடசாலைக் கல்வியை தரம் 01 – 13 வரை மட்/மம/ வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கற்று கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு நான்கு ஆண்டுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்தேன்.உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடுங்கள்?
குடும்பப் பின்னணி எனும் போது நான் இலக்கியவாதியாக மலர்வதற்கு என் தாய்தான் அடிப்படையாக இருந்திருக்கிறார். அவர் இரண்டாம் தரம் வரை கற்றவர். என் தாய் படிப்பில் முதன்நிலை மாணவியாக இருந்தும் அவரின் பெற்றோர் தங்களது வியாபார நிலையத்தை பராமரிப்பதற்காக வேண்டி தாயாருடைய கல்வியை இடையில் நிறுத்திவிட்டனர். அவர் கடையில் இருந்த நேரங்களில் மித்திரன் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள், கட்டுரைகள், கவிதைகளை வாசித்திருக்கிறார். அவர் வாசித்த அக்கருத்துக்கள் மரபணு ரீதியாக என்னை இலக்கியவாதியாக அடையாளம் காட்டியிருப்பதாகவே நான் உணர்கிறேன். எனது சிறுபருவத்தில் தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளும் வீட்டில் வாங்கப்படும். அவற்றில் வருகின்ற பாப்பா முரசு, முளைவிடும் அரும்பு போன்ற பகுதிகளை வாசித்ததும் நான் இலக்கியவாதியாக பிரசவிப்பதற்கு ஒரு தூண்டியாக அமைந்திருக்கிறது.
உங்களது முதலாவது ஆக்கத்தை பத்திரிகையில் பார்த்தவுடன், உங்களது மனநிலை எப்படி இருந்தது?
மட்டில்லா மகிழ்ச்சியாக இருந்தது. பத்திரிகைக்கு அனுப்பிய ஆக்கங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்குமா? பிரசுரமாகி இருந்தால் அதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பத்திரிகைக் கடையை அடைந்து பத்திரிகையில் எனது கவிதைகளைக் கண் பார்க்கும் வரை இருக்கும். இப்போது இணையத்தின் மூலமாக பார்க்க முடிகிற படியினால் இந்த ஆர்வம் பெரிதாக இல்லை.
உங்களது எழுத்துகளின் படிநிலை வளர்ச்சி பற்றிக் கூறுங்கள்?
2000 ஆம் ஆண்டில் நான் தரம் 07 இல் கல்வி கற்கும்போது என்னில் கவிதை வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில காலங்கள் உறங்கு நிலையில் இருந்தேன். பின் கவிதை எழுதுவதும் அவற்றைக் கிழித்து வீசிவிடுவதுமாக இருந்தேன். உயர் தரத்தில் கற்கும்போதே எழுதிய கவிதைகள் சிலவற்றை சேமிக்கத் தொடங்கினேன். பல்கலைக்கழகம் சென்ற பிற்பாடு கவிதை எழுதுவது தீவிரமானது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் என்னை எழுதும்படி தூண்டினார். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியானதும் பத்திரிகைகளுக்கு கவிதைகளை அனுப்பத் தொடங்கினேன். பல்கலைக்கழகம் செல்வதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டில் 'அவன் திருடனா?' என்ற தலைப்பில் சிறுகதையையும் எழுதி வைத்திருந்தேன். ஹைக்கூ வகைமைக் கவிதைகளோடு சிறுவர் கதைகளையும் எழுதி வருகிறேன். கவிதைக்காக காத்திருப்பதைவிட அவ்வப்போது உதிக்கின்ற வரிகளை எழுதிக்கொள்கிறேன். நாவல் எழுதுவதற்கான களம் இருக்கிறது. இறைவன் நாடினால் அதற்குரிய பக்குவம் வந்ததும் எதிர்காலத்தில் எழுதுவேன்.
வெளிவந்த உங்களது முதல் பிரசவம் 'ஒளி பூக்கும் இரவு' ஹைக்கூ கவிதை நூல் பற்றிக் கூறுங்கள்?
2017 – 2020 வரை என்னால் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைக்கூகளைக் கொண்டு இந்நூலை வெளியிட்டேன். நிதி நிலையை ஒழுங்கு செய்யத் தாமதமானதால் நூல் பிரசுரமும் தாமதமானது. முதலில் வெளிவந்திருக்க வேண்டியது எனது புதுக்கவிதை நூலே. ஆனாலும் ஹைக்கூ அதனை முந்தி முதலில் வெளிவந்துவிட்டது. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த இந்த ஹைக்கூ நூலில் முனைவர் ம. ரமேஷ், முனைவர் வெ. புகழேந்தி, ராஜூ ஆரோக்கியசாமி, இளையபாரதி கந்தகப்பூக்கள் ஆகியோரின் அணிந்துரைகளும் கவிச்சக்கரவர்த்தி ஜின்னாஹ் சரிபுத்தீன், கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
உங்களுடைய முதல் பிரசவம் 'ஒளி பூக்கும் இரவு' என்ற நூலின் தலைப்புக் குறித்துக் கூறுங்கள்?
எதேச்சையாக உள்ளத்தில் இருந்து உதித்த தலைப்புத்தான் இது. முன்னர் நான் இந்த நூலுக்கு வேறொரு தலைப்பையே தேர்ந்து வைத்திருந்தேன். இறைவன் இத்தலைப்பையே நாடிவிட்டான். முகநூலில் நூலின் தலைப்பைப் பதிவிட்டபோது கவிஞர்கள் தலைப்பைப் பாராட்டினர். விஜயகுமார் என்ற தமிழக கவிஞர் நூலின் தலைப்புக்காகவே விருது வழங்கலாம் என்று கூறினார். நூலின் தலைப்பு கவித்துவமானதென்று முனைவர் ம. ரமேஷ் அவர்கள் தனது அணிந்துரையில் சிறப்பாக விளக்கியுள்ளார். நூலின் வெளியீட்டு வைபவத்தின்போது அன்பர் ஒருவர் 'ஒளி பூக்கும் இரவு' என்பதை 'இரவு பூக்கும் ஒளி' என்று பின்னிருந்து வாசித்தார். எப்படிப் பார்த்தாலும் தலைப்பு கட்சிதமாக பொருந்திவிடுகிறது.
நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும்போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது?
எப்படியாவது முதல் நூலை வெளியிட்டு இலக்கிய உலகில் தடம் பதிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக மனதைக் குடைந்துகொண்டிருந்தது. நூலை வெளியிடுவதற்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதில் ஏற்பட்ட கால தாமதத்தின் காரணமாக நீண்டகாலக் காத்திருப்பின் பின்னரே எனது நூல் வெளியிடப்பட்டது. இலக்கிய வானில் சிறகடித்துப் பறக்க ஒரு நூல் பறவையையாவது வெளியிடவில்லையே என்ற ஏக்கம் இதன் மூலம் தீர்ந்தது. இந்த முயற்சிக்காக ஒத்துழைத்த யாவருக்கும் இவ்விடத்திலும் நன்றி கூறுகின்றேன்.
பொதுவாக ஹைக்கூவிற்கும் கவிதைக்கும் இடையில் எந்த மாதிரியான வித்தியாசம் உள்ளது?
மரபுக் கவிதை எழுத தேர்ந்த பயிற்சி அவசியம். எனினும் புதுக் கவிதை எழுதுவதற்கு பெரிதாக பயிற்சி அவசியமில்லை என்ற நிலையில் ஹைக்கூ எழுத பயிற்சி மிக மிக அவசியம்.
கவிதை மனித வாழ்வின் பல்வேறு கோணங்களையும், இயற்கை உட்பட யாவற்றையும் கூறும். ஹைக்கூ இயற்கையையும் மிகச் சிறிய உயிரினங்களையும் குறியீடு, படிமம் என்பவற்றின் உதவியோடு வெளிப்படுத்தும்.
கவிதை சுருக்கமாகவும் விரிவாகவும் அமையலாம். ஹைக்கூ மிகச் சுருக்கமாகவே அமையும்.
சின்னப் பொறிக்குள்
மின்னல் தெரிப்புகள்
ஹைக்கூ ஹைக்கூ
என்று வதிலை பிரபா ஹைக்கூவின் இலக்கணத்தை ஹைக்கூவாகவே கூறிவிடுகிறார். கடுகு சிறிதெனினும் காரம் பெரிதென்ற தமிழ்ப் பழமொழி ஹைக்கூவிற்கே மிகப்பொருந்துவதாக எழுத்தாளர் சுஜாதா கூறுவார்.
ஹைக்கூவிற்கும் கவிதைக்குமிடையிலான வேறுபாடுகளைப்பற்றி தமிழ்நாடன் பின்வருமாறு கூறுகிறார்.
கவிதை இல்லாததைக் கொண்டு வரும். ஹைக்கூ இருப்பதையே காட்டும்.
கவிதை சுவைநீர் என்றால் ஹைக்கூ தேன்.
கவிதை உற்பத்தி. ஹைக்கூ வெளிப்பாடு.
கவிதை புறமனம் தீட்டும் ஓவியம். ஹைக்கூ அடிமனத்தின் வெடிப்பு.
உங்களது நூல் வெளியீட்டுக்கு கைகொடுத்து உதவியவர்கள் பற்றிக் கூறுங்கள்?
எனது நூலை தானே வடிவமைக்க வேண்டும் என்று நண்பர் ஏ.ஆர். அப்ராஸ் என்னைச் சந்திக்கும் வேளைகளில் வேண்டிக்கொள்வார். நூலை சிறப்பாக வடிவமைத்து பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தவரும் அவரே. நாங்கள் நூல் வெளியீட்டு விழாவினைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தபோது இக்பால் சனசமூக நிலையத்தினர் தாமாகவே முன்வந்து அவர்களாகவே நூல் வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்து தந்தனர். கொரோனா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விழா நிகழ்வு நடைபெற்றது. எதிர்கால நூல் வெளியீடுகளை வெகு சிறப்பாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களில் ஹைக்கூ கவிதைகள் மேல் உங்களுக்கு நாட்டம் ஏற்பட விசேட காரணம் என்ன?
ஹைக்கூ சிறிய கவிதை வடிவம். குழந்தை சிறியதாக இருப்பதனால் அனைவருக்கும் அதனைப் பிடிப்பது போன்று ஹைக்கூ எனக்குப் பிடித்துப் போனது. ஹைக்கூ பற்றிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் உரைகள், முகநூலில் இயங்கும் ஹைக்கூ குழுமங்களான ஹைக்கூ உலகம், ஹைக்கூ படர்பார்வை, நிலாவில் ஒரு ஹைக்கூ, போன்ற ஹைக்கூ குழுமங்களின் வழிகாட்டல்கள், அனைத்துக்கும் மேலாக க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய நயம் பாடத்தில் 'மின்மினிகளால் ஒரு தோரணம்' என்ற ஹைக்கூ தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரையை முன்வைத்து அதனை மாணவர்க்கு கற்பிப்பதற்காக மேற்கொண்ட தேடல்கள் என்பவற்றோடு ஹைக்கூவின் ஆழமான தன்மை, குறியீடு, படிமப்பாங்கு, இயற்கை ஒன்றிப்பு என்பவை என்னை ஹைக்கூ கவிஞனாக நிலை நிறுத்தின.
சக இளம்படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் விசேட செய்தி என்ன?
படைப்பாளர்கள் தொடர்ந்து வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்க வேண்டும். எப்படியான சங்கடங்கள் வந்தபோதும் துணிவுடன் படைப்புகளை நூலாக வெளிக்கொணர முயல்தல் வேண்டும். இவ்விடத்தில் மௌலான ரூமியின் கவிதை நினைவில் வருகிறது. 'தாகம் கொண்டவர் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை. தண்ணீரும் தாகம் கொண்டவரைத் தேடிக்கொண்டிருக்கிறது.' தேடுங்கள், தேடல் உங்களை விடுதலையாக்கும். வெற்றிக்குத் தூரமில்லை. தோல்விக்கு நேரமில்லை.
நீங்கள் ஒரு தமிழ்ப் பாட ஆசிரியர் என்ற வகையில் வாசிப்புப் பழக்கத்தில் இருந்து தூர விலகும் இளைய தலைமுறையினரை வாசிப்பில் ஈடுபடுத்த என்ன ஆலோசனைகளை முன்வைப்பீர்கள்?
வாசிப்பானது போட்டி ரீதியாக ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்று. பெற்றோர், ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தோடு பயனுள்ள நூல்களையும் வாசிக்க குழந்தைகளை சிறுவயது முதலே ஆற்றுப்படுத்த வேண்டும். பரிசுப் பொருளாக புத்தகங்களை அன்பளிப்புச் செய்யலாம். வீட்டிலும் நூலகங்களை உருவாக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து நாளொன்றில் ஒரு மணிநேரம் வாசிக்கப் பழகி, பின் நேரத்தை அதிகரிக்கலாம். இன்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இணைய நூல்களைப் படிக்கின்ற வாசகர்களை ஊக்குவிக்க, இணைய நூலகங்களும் பரவலாக்கப்பட வேண்டும். போட்டிகளை நடாத்துவது வாசிப்பை ஊக்குவிக்க உதவும்.
ஹைக்கூ தவிர வேறு எத்துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்கள்?
புதுக் கவிதை, கஸல் கவிதை, சிறுகதை, சிறுவர் கதை போன்ற துறைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறேன்.
உங்கள் சிறுகதைப் படைப்புகள் பற்றி கூற விளைவது?
இதுவரை சில சிறுகதைகளையே எழுதியுள்ளேன். ஓரிரண்டு கதைகள் பத்திரிகையிலும் சஞ்சிகையிலும் பிரசுரமாகி உள்ளன. எழுதிய கவிதைகளை நூலுறுப்படுத்தும் ஏற்பாடுகள் முடிந்ததன் பின்னர் விரிந்த தளத்தில் சிறுகதைகளின் பக்கம் முழுக் கவனத்தைச் செலுத்த எண்ணியுள்ளேன்.
எவ்வகையான விடயங்களை ஆய்வாக ஆய்வுக் கட்டுரையாக எழுதியுள்ளீர்கள்?
உளவியல், சமூகவியல், சமயம்;, இலக்கியம், சூபித்துவம் போன்ற விடயங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். அத்தோடு பேராய்வுகளாக 'பெரிய புராணத்தில் சைவ சித்தாந்த பதிக்கோட்பாடு ஓர் ஆய்வு' எனும் தலைப்பில் பல்கலைக்கழக பட்ட ஆய்வையும், 'சமூகவியல் நோக்கில் வை. அஹமதின் சிறுகதைகள் ஓர் ஆய்வு' எனும் தலைப்பில் கொழும்புத் தமிழ்ச் சங்க பட்டயக் கற்கையின் ஆய்வையும்; மேற்கொண்டிருக்கிறேன்.
எழுத்துத் துறையில் உங்களை வியப்பில் ஆழ்த்தியவர்கள் யார்? ஏன்?
கவிக்கோ அப்துல் ரகுமான், பெருமாள் முருகன், மு. மேத்தா, ஏ.பீ.எம். இத்ரீஸ், ராஜகவி ராஹில், நா. முத்துக்குமார், ஜெயகாந்தன், சுஜாதா போன்ற பலரையும் கூறலாம். அவர்கள் புதிது புதிதான கோணங்களில் சுவைபட படைப்புகளைப் படைத்திருப்பர். சிந்தனைகளை ஆழமாக்கி வைப்பனவாக இப்படைப்புகள் காணப்படும்.
நீங்கள் நேசித்து, வாசித்த படைப்பைப் பற்றியும் அதன் சுவாரஸ்யத் தன்மைகள் பற்றியும் குறிப்பிட முடியுமா?
கவிக்கோ அப்துல் ரகுமானின் 'மினிமினிகளால் ஒரு கடிதம்'. இந்நூல் முதன்முதலாக தமிழில் வெளிவந்த கஸல் கவிதைகளின் தொகுப்பு. கஸல் அரபியில் பிறந்து, பாரசீகத்தில் வளர்ந்து, உருதுவில் இருந்து தமிழுக்கு கவிக்கோவினால் அறிமுகம் செய்யப்பட்டது. கஸல் என்றால் காதலியுடன் பேசுதல் என பொருள்படுகிறது. உலகியல், ஆன்மிகம் சேர்ந்த கலவை. பெரும்பாலும் காதலின் சோகத்தைப் பாடுவது. 'சுவை புதிது, பொருள் புதிது சோதிமிக்க நவகவிதை' என்ற பாரதியின் கவிதை இலக்கணத்தை இக்கவிதை நூலில் காண முடிவது சிறப்பு. இக்கவிதைகளின் புதுமை நயம் கண்டு சினிமா பாடலாசிரியர்களும் கவிக்கோவின், கவி வரிகளைத் தமது பாடல்களில் எடுத்தாண்டுள்ளனர்.
காதல் என்பது
கண்ணாடியும் கல்லும்
ஆடும் ஆட்டம்
இந்தக் கவி வரிகளைப் பயன்படுத்தி நா. முத்துக்குமார் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் 'ஒரு கல் ஒரு கண்ணடி..| எனும் பாடலை எழுதி புகழ் பெற்றார். இப்படிப் பலரும் இந்நூலில் உள்ள கவிதைகளைப் பயன்கொண்டு பாடல்களை இயற்றியுள்ளனர். இதுதொடர்பாக கவிக்கோவும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் இருந்து சுவைமிக்க சில கஸல்களை வாசகரின் பார்வைக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்.
கூடுகட்டத்
தன் உதிர்ந்த
இறகுகளையே பொறுக்கும்
பறவையைப் போல
நான் உன்
நினைவுகளைப் பொறுக்குகிறேன்..
அரசு
முப்பத்துமூன்று சதவிகிதம்
சிவபெருமான் ஐம்பது சதவிகிதம்
நான் உனக்கு ஒதுக்கியதோ
நூறு சதவீதம்
இசையைப் போலவே
நீயும் எங்கிருந்து வருகிறாய்
என்பது தெரியவில்லை..
இலக்கியத் துறையில் உங்கள் எதிர்கால இலக்கு என்னவாக இருக்கும் என்பது குறித்துக் கூறுங்கள்?
வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இறுதிவரை வாழ வேண்டும் என்பதே எனது தற்கால மற்றும் எதிர்கால இலக்காகும்.
உங்கள் கவிதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
எனது கவிதைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் உவந்தேற்று வெளியிட்டு உதவியுள்ளன. பலரும் பாராட்டி ஊக்குவித்துள்ளனர். முதல் நூலுக்கான கொடகே சாகித்திய விருது எனது ஹைக்கூ நூலுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீர்கள்?
என் இலக்கியப் பணிக்கு ஒத்துழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். படைப்பாளர்கள் பொருளாதாரம் உட்பட பல தடங்கள்களுக்கு மத்தியிலேயே நூல்களை வெளியீடு செய்கின்றனர். அவர்கள் மனம் சோர்ந்து விடா வண்ணம் படைப்புகளுக்கு வாசகர்கள் என்றும் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். எழுத்தாளுமை நிறைந்த சமூகமாக யாவரும் எழுர்ச்சி பெற வேண்டும். வெற்றி தலையையும் தோல்வி இதயத்தையும் தழுவாதிருக்கட்டும். (படித்ததில் பிடித்த சிந்தனை)
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்