சுப்ரமண்ய செல்வா அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
எனது பெயர் செல்வரத்தினம். நான் மலையகத்தை சேர்ந்தவன். எனது தந்தை தேயிலைத் தோட்டங்களில் தலைமை எழுதுனராகப் பணியாற்றினார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதோடு மட்டும் நின்றுகொள்ளாமல் நான் மணவளக்கலை தொடர்பாகவும் அதிகம் பேசியிருக்கிறேன். இது தொடர்பில் நிறையக் கலந்துரையாடல்கள் செய்துள்ளேன். வாழ்வியலோடு தொடர்புபட்ட பல விடயங்களை அலசி ஆராய்ந்துள்ளேன்.
எனது படைப்புக்களின் மூலம் எனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை. நான் சொல்லுகின்ற விடயங்கள் சக மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவோ அல்லது ஆறுதலாகவோ இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். மனிதப் பண்புகளிலே மிகச் சிறந்த பண்பு ஈகை. முகநூலில் நான் பார்த்த ஒரு சிறிய விடயம் அல்லது கருத்து ''பெறுவதும் இன்பம்.. கொடுப்பதும் இன்பம்..'' பெற்றுக் கொள்பவர்கள் இன்பம் அடைகிறார்கள் அதுபோல கொடுப்பவர்கள் கொடுத்த திருப்தியில் நிம்மதியாக உறங்குகின்றார்கள். இங்கு நான் எனது சிந்தனைகளைக் கவிதையாகக் கொடுக்கிறேன் அவ்வளவே.
உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் கண்டி அசோகா வித்தியாலயத்திலும், புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் கல்வி கற்றேன். கண்டி அசோகா வித்தியாலயம் என் வாழ்க்கையில் ஒரு அற்புதமான அடித்தளமாக அமைந்தது. அங்கு கல்வியில் மட்டுமன்றி கலை, இலக்கியம், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் எங்களுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்தார்கள். நிறைய வாசிக்கத் தூண்டினார்கள். வாசிக்கக் கட்டாயப்படுத்தினார்கள் என்றே சொல்லலாம்.
உங்கள் தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடலாமே?
எனது உயர்தர படிப்புக்குப் பிறகு கொழும்பில் ஒரு இந்திய கட்டிட நிர்மாண நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்று தொழில் செய்தேன். எப்பொழுதுமே கவிஞர்கள், படைப்பாளிகள் ஏழ்மையாக இருப்பது கண்கூடு. இதிலிருந்து ஒரு மாற்றத்தைப் பெறவே நான் இடைக்காலத்தில் அதாவது சுமார் இரண்டு தசாப்தத்துக்கும் மேலான காலம் கவிதைகள் எழுதுவதை விட்டுவிட்டு தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்று சவுதி அரேபியாவில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். 1995 ஆம் வருடம் நாடு திரும்பி ''செல்கோ'' என்ற எனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து, கடந்த 23 வருடங்களாக அதனை நடத்தி வருகிறேன். இடைப்பட்ட 20 வருடங்களாக எனது எழுத்துத் துறைக்கு நீண்டதொரு தடை ஏற்பட்டுவிட்டது.
எந்த ஒரு கலைஞனுக்கும், எழுத்தாளனுக்கும் பொருளாதாரச் சுதந்திரம் நிச்சயமாக அவசியம். அப்பொழுதுதான் அவன் பொருளாதாரச் சுமை பற்றிய கவலைகள் அற்று தனது படைப்புக்கள் மீது உண்மையான கவனத்தைச் செலுத்த முடியும். நான் ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்த பிறகே கடந்த 05 வருடங்களாகவே மீண்டும் எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டி வருகின்றேன். தமிழிலும் இலக்கியத் துறையிலும் அதாவது கவிதைத் துறையிலும், சிறுகதைத் துறையிலும் ஏனைய துறைகளிலும் அக்கரையோடு எழுதி வருகின்றேன்.கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளில் நீங்கள் இலக்கியம் படைக்கிறீர்கள். இலக்கியத்தின் மீது ஈடுபாடு காட்ட உங்களைத் தூண்டியவர்கள் யார்?
கண்டி அசோகா வித்தியாலயம் பள்ளியின் அதிபராக இருந்த அமரர் சொல்லின் செல்வர் செ. நடராஜா அவர்கள்தான். இவர் ஒரு தமிழ் ஆர்வலர். மிகச் சிறந்த பேச்சாளர். அவர் மூலம் எனக்கு தமிழ் ஆர்வமும் வாசிப்பு பழக்கமும் ஏற்பட்டது. அன்று தொடங்கிய வாசிப்பு பழக்கம் இன்றும் தொடர்கிறது. பாடசாலைக் காலங்களில்; ஒவ்வொரு வாரமும் ஒரு நூலையாவது வாசிக்க கட்டாயப்படுத்தியிருந்தார்கள். பரந்துபட்ட வாசிப்பு என்னை படைப்பாளியாக்கியது. 17 ஆவது வயதிலேயே எனது படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரமாகத் தொடங்கின. தற்போது ஷசுப்ரமண்ய செல்வா| என்ற புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது தந்தையின் பெயர் சுப்பிரமணியம். அவரது பெயரையும் எனது பெயரில் முற்பகுதியையும் இணைத்து இந்தப் புனைப் பெயரை உருவாக்கினேன். இதற்கு இன்னொரு ஆழமான காரணம் மகாகவி பாரதி மீது நான் கொண்ட பெரும் பற்றுத்தான். மகாகவி பாரதியாரை நான் அதிகம் நேசிக்கின்றேன். அவர் மீதும் அவருடைய வாழ்க்கை மீதும், அவருடைய கவிதைள் மீதும் நிறையப் பற்றுக் கொண்டுள்ளேன். மட்டுல்லாமல் அவரை நான் அதிகம் நேசிப்பதால் நிறைய விடயங்களைப் பெற்றுக்கொண்டுள்ளேன். நான் மட்டுமல்ல எல்லாக் கவிஞர்களும் தமிழ்க் கலைஞர்களும் எல்லாத் தமிழர்களும் நிறையவே பெற்றுக்கொண்டுள்ளார்கள். உண்மையிலே தமிழின் மறுமலர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் என்று மகாகவி பாரதியாரை நிச்சயமாகச் சொல்லலாம்.
எத்தனை ஆண்டுகளாக கவிதை எழுதி வருகின்றீர்கள்?
கடந்த 38 வருடங்களாக கவிதை எழுதி வருகின்றேன். அதாவது 1981 இல் தொடர்ந்த எனது கவிதைப் பயணம் இன்றுவரை தொடர்கிறது. ஆனால் இடையில் ஒரு 20 வருடங்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதாலும், நாடு திரும்பிய பிறகு என்னை நிலைநாட்டிக்கொள்ள போராட வேண்டியிருந்ததாலும் எழுத்துப் பயணம் தடைப்பட்டது. பின்னர் மீண்டும் தொடர்ந்த என் எழுத்துப் பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழ்மீது கொண்ட பற்றுத் தான் உங்களை எழுத்துத் துறையில் ஈடுபட வைத்ததா?
ஆமாம். நிச்சயமாக. முன்பு எப்படி தமிழ் இருந்தது? ஒரு காலத்தில் தமிழ் எழுதுகின்ற புலவர்கள் எல்லாம் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். ஒரு மன்னன் புலவனிடம் சென்று பொற்கிளியைக் கொடுக்கும் போது அவர் அதனை மன்னரின் கைகளினால்ப் பெற்றுக்கொள்ளாமல், ஷநீ அதனை ஒரு தட்டிலே வைத்துவிடு, நான் அதனை எடுத்துக் கொள்கின்றேன்| எனக் கூறியதாக ஒரு வரலாற்றுக் கதை உள்ளது. பின்னரான காலத்தில் பிறமொழிக் கலவை காரணமாக குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை பிற நாட்டுப் படையெடுப்புகள் மூலம் தமிழுடைய செழுமை மங்கிப் போனது என்று சொல்லலாம். ஆங்கிலேயரின் படையெடுப்புக் காரணமாக தமிழுடன் ஆங்கிலமும் கலந்துவிட்டது. பின்னர் தமிழை மறுமலர்ச்சிப் பாதையிலே கொண்டு வந்தது, தமிழை தமிழுக்குண்டான பெருமையை எடுத்துச் சொன்னது, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம் என்றும் எல்லா மொழிகளிலுமே சிறந்த மொழி தமிழ் மொழி என்றும் கூறி பலரும் தமிழின் புகழ் பாடினர்.
இதனை சொல்லக் கூடிய யோக்கியதை சுப்ரமண்ய பாரதியாருக்குத்தான் இருந்தது. ஏன் என்றால் பல மொழிகளையும் தெரிந்து வைத்திருந்த போதிலும் சுப்ரமண்ய பாரதியாரே தமிழின் புகழை அதிகம் பாடினார். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் கவிஞனது பெயரில் ஒரு பகுதியை எனது புனைப் பெயராகக் கொண்டதில் நான் மிகவும் மகிழ்வடைகின்றேன். எனது எழுத்துப் பயணத்தைத் தொடர்கின்றேன்.
உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எந்த ஊடகத்தில் வெளிவந்தது?
நான் எனது 17 ஆவது வயதில் பேனா பிடித்து, கவிதை எழுத ஆரம்பித்தவன். 1981 இல் தினகரன் வாரமஞ்சரியில் எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. எனது 17 - 18 வயது காலங்களில்த்தான் பத்திரிகைகளில் நிறையக் கவிதைகளை எழுதியுள்ளேன். தினகரன் வாரமஞ்சரி, தினமுரசு வார மலர், மித்திரன் வார மலர், ஞாயிறு தினக்குரல் ஆகியவற்றில் எனது பல ஆக்கங்கள் களம் கண்டுள்ளன.
புதுக் கவிதைக்கும், நவீன கவிதைக்கும் என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?
இறுக்கமான கட்டுக்கோப்புகளோடு பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவில் இருந்த தமிழ் கவிதைகள் யாப்பிலக்கண மரபிலிருந்து மாறி புதுவடிவம் பெற்றதுதான் புதுக்கவிதை. இதன் முன்னோடி மகாகவி சுப்பிரமணிய பாரதியார். உள்ளடக்கத்தில் மாற்றம் இருந்தாலும் அங்கு வடிவ மாற்றமே முதன்மையானது. நவீன கவிதையின் உள்ளடக்கமே முதன்மை பெறுகிறது. அத்தோடு படைப்பாளியின் அனுபவங்களை வாசகனுக்கு நேரடியாகக் கடத்தாமல், வரையறையற்ற வாசிப்பு அனுபவங்களை அவனுக்குத் தருகிறது.
''தொடுதூரத்தில் விடிவானம்'' என்ற உங்கள் நூல் பற்றி யாது கூறுவீர்கள்? இந்த நூலின் கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
கடந்த 35 வருடங்களாக நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ''தொடுதூரத்தில் விடிவானம்'' என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளேன். கவிதைகளை எழுதும்போது குறிப்பிட்ட எந்தக் கருப்பொருளையும் கருத்தில் கொண்டு நான் எழுதுவதில்லை. ஆனால் நான் எழுதிய கவிதைகள், காதல், ஊடல், இல்லற வாழ்வு, சமூகச் சீரழிவுகள், தனிமனித அவலங்கள், போரின் வலி, அறிவியல் முன்னேற்றம் என்னும் பெயரில் இயந்திரமயமாகிப் போன வாழ்க்கை, நேர்மறை சிந்தனைகள், சுயமுன்னேற்றக் கருத்துக்கள் என பலவிதமான கருப்பொருட்களில் வெளிவந்துள்ளன.
தொடுதூரத்தில் விடிவானம் என்ற மகுடக் கவிதையில் (பக்கம் 57) நல்ல சிந்தனையை வாசகர்களுக்கு முன்வைத்துள்ளேன். இந்தக் கவிதையானது ஒரு சுய முன்னேற்றக் கவிதை என்றும் குறிப்பிடலாம். ''தொடுதூரத்தில் விடிவானம்'' என்ற எனது நூலின் தலைப்பின் மூலம் சோம்பிக் கிடக்கின்ற ஒருவனைத் தட்டியெழுப்பி, விடிவானம் வெகு தூரத்தில் இல்லை, தொடுதூரத்தில் தான் இருக்கிறது என்று சொல்லி நிற்கின்றேன். நீ அடைய முயற்சிக்கும் குறிக்கோள் உனக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. எழுந்து நின்று நீ முயற்சித்தால் நிச்சயமாக உன்னால் அதனை அடைய முடியும். உன்னால் அடைய முடியாது என்று நீ நினைத்துக்கொண்டிருப்பது நீயாக நினைத்துக் கட்டிக்கொண்டுள்ள ஒரு சிறை. அந்தச் சிறையில் வெளியே தாழ்ப்பான்கள் இல்லை. உள்ளே நீயே போற்றுக்கொண்டுள்ள தாழ்ப்பான்களை உடைத்துக்கொண்டு நீயேதான் வெளியே வர வேண்டும். வெளியே வாய்ப்புக்கள் விரவிக் காணப்படுவதை நீயே அவதானிக்கலாம். அந்த வாய்ப்புக்களை பற்றிக்கொண்டு நிச்சயமாக உனது நோக்கத்தை அடைய முடியும் என்றே நான் குறிப்பிடுகின்றேன். அதாவது பல சம்பவங்களை மேற்கோள்காட்டி தைரியப்படுத்தி வந்து, கவிதையின் கடைசிப் பகுதிகளில் கூட உற்சாகமூட்டும் வார்த்தைகளை எழுதியுள்ளேன். மூடிய கதவை முழுநேரம் வெறிக்கிறாய்.. திறந்திருக்கும் கதவுகளை திரும்பிப் பார்க்க மறுக்கிறாய்..
இழந்த வாய்ப்புக்களுக்காக கவலைப்படுவதை விடுத்து பறந்து கிடக்கும் நிறைய வாய்ப்புக்களை உற்று நோக்கி பயன்படுத்தலாம் என்பதே எனது சிந்தனையாக இருக்கிறது. சோர்ந்து போகாமல் நாம் பல புதிய, புதிய வாய்ப்புக்களைத் தேட வேண்டும்.
இந்த நூலிலுள்ள காத்திருப்புகள் (பக்கம் 23) என்ற கவிதையும் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாகும். போதிவனம் பதிப்பகத்தினூடாக 119 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலில் 56 கவிதைகளும், குறுங்கவிதைகள் சிலவும் காணப்படுகின்றன.
இளம் தலைமுறைக் கவிஞர்களின் ஆரம்பக் கவிதைத் தொகுப்பு போல் உங்களது முதலாவது கவிதைத் தொகுப்பில் காதல் கவிதைகளைக் காணவில்லையே ஏன்?
என்னுடைய 50 வயதுக்குப் பிறகு வெளிவரும் கவிதைத் தொகுதியே ''தொடுதூரத்தில் விடிவானம்'' என்ற இந்தக் கவிதைத் தொகுதி. வாழ்க்கையில் நெடு தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் நான் நிறைய அறிவுகளைப் பெற்றுள்ளேன். அப்படியே பல அனுபவங்களையும் பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த அறிவும், அனுபவமும் எனக்கு வழங்கியுள்ள முதிர்ச்சித் தன்மையே எனது சொற்களிலும் செயல்களிலும் அதிகூடிய தாக்கம் செலுத்தியுள்ளன. இப்படியான வாழ்க்கை அனுபவங்கள் காரணமாகவே நான் ஆரம்பக் கவிஞர்கள் போல் காதல் கவிதைகளை அதிகம் எழுதவில்லை. அது தவிர்ந்த நல்ல கருத்துக்களை எனது கவிதைகளினூடாக முன்வைத்துள்ளேன். நான் பாரதியாரைப் பின்பற்றியவன் என்பதன் காரணமாகவே இப்படியான ஒரு தணித்துவமான சிந்தனை என்னில் குடிகொண்டுள்ளது என்றும் சொல்லலாம்.
பத்திரிகைகள், சஞ்சிகைகள் தவிர வேறு எந்த ஊடகங்கங்களில் உங்கள் ஆக்கங்கள் வெளிவருகின்றன?
'அகவரிகள்' என்னும் எனது வலைப்பதிவில் எனது எல்லாப் படைப்புகளையும் பதிவிடுகிறேன். முகநூலிலும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை பகிர்கின்றேன். அவ்வப்போது தொலைக்காட்சி நேர்காணல்களிலும் பங்குபற்றுவதுண்டு.
சிறுகதைகள் மீதான உங்களது ஈடுபாடு எந்தளவில் உள்ளது?
மிகுந்த ஈடுபாடு உள்ளது. ஆரம்ப காலத்தில் சில சிறுகதைகள் எழுதி உள்ளேன். மல்லிகை, நவ உதயம் போன்ற சஞ்சிகைகளில் அவை வெளிவந்துள்ளன. கவிதைகளைப் போலவே சிறுகதைகள் எழுதுவதும் இடையிலே தடைப்பட்டுவிட்டது. இப்பொழுது மீண்டும் எழுதத் தொடங்கி இருக்கிறேன். அண்மையில் 'சாய்வு நாற்காலி' என்கிற எனது சிறுகதை ஒரு ஞாயிறு தினகரன் வாரப் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து எழுத ஆவல் கொண்டுள்ளேன்.
படைப்பாளிகள் எவ்வாறு உருவாக வேண்டும்?
ஒரு நல்ல படைப்பாளி முதலில் ஒரு நல்ல வாசகனாக இருக்க வேண்டும். அத்தகைய வாசிப்பு அனுபவம் அவனுள் ஏற்படுத்தும் மாற்றங்களையும், அவனது அன்றாட வாழ்வின் அனுபவங்களையும் அவனது படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்.
சில சம்பவங்கள் மனதை ரணப்படுத்தும். அதன் பின்னணியில் பல ஆங்கங்கள் தோன்றும். அப்படி உங்களை மிகவும் பாதித்து, நீங்கள் எழுதிய படைப்புக்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
2001 ஆம் ஆண்டு வடக்கில் சில தமிழ்ப் பெண்கள் படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. அதன் தாக்கத்தில் நான் எழுதிய கவிதை அந்தக் காலப் பகுதியில் ஞாயிறு தினக்குரலில் பிரசுரமானது. அதேபோல் குஜராத் இனக் கலவரம், வடக்கில் இறுதி யுத்தத்தில் நடந்த பேரழிவுகள், சிரிய நாட்டு யுத்தத்தில் மரணித்த சிறு குழந்தைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் நடத்தும் தொடர் போராட்டம் போன்றவை என்னுள் ஏற்படுத்தும் வலிகளை அந்தந்தக் காலங்களில் கவிதைகளாக படைத்துள்ளேன். அத்தோடு நான் அறிந்த மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவலங்களையும் கவிதை ஆக்கியுள்ளேன்.
அதிகமதிகம் எவ்வகையான நூல்களை வாசிக்கின்றீர்கள்?
தமிழ், ஆங்கில மொழிகளில் எல்லாவிதமான நூல்களையும் வாசிப்பதுண்டு. சுயசரிதைகள், சுயமுன்னேற்ற நூல்கள், வணிக மேலாண்மை நூல்கள், நாவல், சிறுகதை, கவிதை என எனது வாசிப்பு பரந்துபட்டது. ஒரே காலப்பகுதியில் ஏறக்குறைய ஐந்து புத்தகங்கள் வாசிப்பதுண்டு.
எதிர்காலத்தில் எவ்வகையான நூல்களை வெளியிட உத்தேசம்?
எதிர்காலத்தில் வேறு என்ன துறைகளில் உங்களது அவதானிப்புக்களைச் செலுத்துவீர்கள்?
தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னொரு கவிதைத் தொகுதி வெளியிடும் எண்ணம் உண்டு. அத்தோடு வாழ்வியல் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவற்றையும் தொகுத்து புத்தக உருவில் கொண்டுவர விரும்புகிறேன். மற்றும் சிறுகதை, சிறுவர் இலக்கியம் ஆகியவற்றிலும் ஈடுபடும் உத்தேசம் உண்டு.
முழு நேரத் தொழிலதிபராக வியாபார நிறுவனத்தை நடாத்தி வரும் நீங்கள் இந்தக் கலைத் துறைக்கு உங்களது நேரத்தை எப்படி ஒதுக்கிக் கொள்கின்றீர்கள்?
எனக்குத் தமிழ் மொழி மீதும் கவிதைகளிலும், சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆர்வம் உண்டு. வீட்டிலே எனது தந்தையார் ஓய்வாக இருக்கும் நேரமெல்லாம் எதையாவது வாசித்துக்கொண்டிருப்பார். இந்தச் சூழலே எனக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியது. தொடர் வாசிப்பே என்னை எழுதத் தூண்டியது. இதனை என்னால் விட்டுவிட முடியவில்லை.
லௌகீக வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கட்டாயம் ஒரு தொழில் செய்வது போல எனது ஆத்ம திருப்திக்காக தமிழையும் கவிதைகளையும் நேசிக்கின்றேன். எனவே இதற்காகவும் எனது நேரத்தை ஒதுக்குகின்றேன். தொழிலையும், தமிழையும் கவனிக்கத் திட்டமிடல் மூலம் நேர முகாமைத்துவத்தைக் கடைபிடிக்கிறேன். பொதுவாக ஷதிட்டமிடலுக்காக செலவளிக்கின்ற ஒரு 10 நிமிடம் அதை செயல்படுத்துவதற்காக செலவளிக்கின்ற 50 நிமிடத்தை சேமிக்கும்| என்று சொல்வார்கள். எதையுமே திட்டமிட்டால் நிறைய நேரம் கிடைக்கும். அந்த அடிப்படையிலேயே எனக்கு எழுதவும் நேரம் கிடைக்கின்றது.
வாழ்வியலோடு தொடர்புபட்ட விடயங்களையும் கருத்துக்களையும் நீங்கள் முன்வைப்பது இந்தக் கால கட்டத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிடுவீர்களா?
நிறைய வாசிக்கும் போது வாழ்வியலோடு தொடர்புபட்ட நிறைய விடயங்கள் எனக்குக் கிடைக்கின்றன. இந்த வாசிப்பில் கிடைத்த அறிவு மேலும் பல நல்ல சிந்தனைகளைத் தூண்டி நிற்கின்றன. ஏனையவர்களோடு உரையாடும் போது கூட, சில கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் உரிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் சொன்ன கருத்தக்களுக்கு மதிப்பளித்து உரிய செயற்பாடுகள் சீராக நடைபெறும். பொதுவாக சிறிய, சிறிய விடயங்களை நான் பெரிதுபடுத்துவதில்லை.
'வார்த்தைகள் வடிவமைக்கின்றன வாழ்க்கையை' என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரையைப் பத்திரிகையில் எழுதினேன். இந்தக் கட்டுரையில் வாழ்வியலோடு தொடர்புபட்ட பல விடயங்களையும் குறிப்பிட்டுள்ளேன். இதனை வாசிப்பதிலிருந்து வாழ்வியலோடு தொடர்புபட்ட கருத்துக்கள் இந்தக் கால கட்டத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றித் தெளிவாகக் கண்டுகொள்ள முடியும். இந்தக் கட்டுரையை வாசித்த பலரும் மிகவும் சிலாகித்து எனது சிந்தனையைப் பாராட்டடி தனது கருத்துக்களை முன்வைத்தார்கள் என்பது மறக்க முடியாது.
இறுதியாக இளந்தலைமுறைப் படைப்பாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?
நிறைய வாசியுங்கள். பரந்துபட்ட வாசிப்பானது மொழி மீதான உங்களது ஆளுமையை அதிகரிக்கும்;, சிந்தனையைத் தூண்டும்;. அத்துடன் மனிதர்கள் மீதான, சூழல் மீதான உங்களது பார்வையை ஆழப்படுத்தும். அது உங்கள் படைப்பை மேலும் செம்மைப்படுத்தும். எனவே நிறைய வாசியுங்கள்.
நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்








































