Sunday, March 29, 2020

21. சட்டத்தரணி இரா. சடகோபன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.12.22

சட்டத்தரணி இரா. சடகோபன் அவர்களுடான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்கள் வாழ்விடம், கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் பிறந்து வளர்ந்தது நாவலப்பிட்டி நகருக்கு அருகாமையில் உள்ள தொளஸ் பாகை என்ற இடத்தில் இருந்த மொஸ் வில்ல  (தமிழில் மாசி விலை தோட்டம்) என்ற தோட்டத்தில் ஆகும். அந்தத் தோட்டத்தில் இருந்த தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றுவிட்டு அதன் பின்னர் அருகிலிருந்த நகரமான நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் க.பொ.த. உயர்தரம் வரை படித்துவிட்டு அங்கிருந்து பட்டக் கல்வி பயில கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானேன். அங்கே எனக்கு கிடைத்தது புவியியல் சிறப்பு பட்டம். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதும் கிடைத்த முதல் தொழில் சந்தைப்படுத்தல் ஆய்வு உத்தியோகத்தர். அதன் பின்னர் பத்திரிகைத்துறை, சட்டத்துறை என தொடர்ந்ததே என் வாழ்க்கை.


02. உங்கள் குடும்பப் பின்னணி பற்றிக் கூறுங்கள்?

எங்கள் குடும்பத்தில் மொத்தம் பதினோரு பேர். அதில் நான் ஆறாவது. சிறுவயதில் சுட்டிப் பையன் என்று பெயர் பெற்று இருந்தேன். நான்கு அக்காமார், ஒரு அண்ணன், ஒரு தம்பி, மூன்று தங்கைகள்.  செல்வச் செழிப்பு வாய்ந்த குடும்பமாக இல்லாவிட்டாலும் தாய் தந்தையார் எமக்கு எந்தவிதக் குறைகளையும் வைக்காமலேயே எங்களை வளர்த்தனர். எங்களுக்கு கல்வி புகட்டுவதற்கு அவர்கள் மிகுந்த பிரயத்தனப்பட்டனர். அதன் விளைவாக எங்கள் குடும்பத்தில் ஒரு சட்டத்தரணி, ஒரு கணக்காளர், ஒரு வைத்தியர், ஒரு ஆசிரியை ஆகியோர் உருவாகினர்.

எனது துணைவியார் ஒரு உயர் அரசாங்க அதிகாரி.  நாங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது சந்தித்துக் கொண்டோம். எங்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். மகள் என்னைப்போல் இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டி வருகின்றார். இருவருமே ஓவியத்தில் வல்லவர்கள் என்று கூற முடியும். அதற்குக் காரணம் என் தாய் வழி முன்னோர்கள் ஸ்தபதிகள் என்று அழைக்கப்படுகின்ற கோயில்களில் சிற்பங்கள் வடிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் மரபணுக்கள் எமது ரத்தத்திலும் இருக்கலாம் என்று கூற வாய்ப்புண்டு.


03. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

எனது தந்தை ஒரு நல்ல பாடகர். அவர் ஒரு பாட்டு ரசிகரும் ஆவார். எனது இரண்டு அக்கா மார்களும் நன்றாக நடனமாடுவார்கள். எனது அப்பாவுக்கு பாட்டின் மீது காணப்பட்ட மோகம் காரணமாகவே அக்காலத்தில் புகழ்பெற்ற பாடகராகத் திகழ்ந்தத வி. சடகோபன் என்ற பின்னணிப் பாடகரின் பெயரையே எனக்கும் பெயராகச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார். அந்தக் காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டு வாசல் முற்றத்தில் திண்ணைக் கச்சேரிகள் நடக்கும். எனது தந்தையும் வேறு சிலரும் பாடுவார்கள். எனது தந்தைக்கு சில வாத்தியக் கருவிகளை இசைக்கவும் பரிச்சயம் இருந்தது. அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து நடனம் மற்றும் கூத்து கலைஞர்கள் வருடா வருடம் வருவார்கள். அவர்கள் சுமார் மூன்று மாதங்களுக்கு நாடகங்களும் கூத்துக்களும் நடத்துவார்கள். ஒரு சில காமன்கூத்து அனுபவங்கள் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. கூத்துக் கலைஞர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு விருந்துபசாரம் அளித்து என் தந்தை மகிழ்வார். எனது தாயாரும் அதற்கு உறுதுணையாக இருப்பார்.


04. சட்டத்தரணியாக பணியாற்றும் நீங்கள் இலக்கியத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? அதற்கான காரண கர்த்தாவாக இருந்தவர் யார்?

நான் முதலில் ஒரு பத்திரிக்கையாளர். அதன் பின் நீண்ட காலத்திற்கு பின்னரே நான் ஒரு சட்டத்தரணியாக வந்தேன். ஆனால் நான் பாடசாலையில் இருக்கும்போதே எனது இலக்கியப் பணியைத் தொடங்கிவிட்டேன். 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே நானும் நண்பர்களும் இணைந்து கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்து நடத்தினோம். அது எங்கள் பாடசாலையில் மட்டுமல்ல சுற்றியிருந்த பாடசாலைகளிலும் புகழ்பெற்றது. அப்போதுதான் என் முதலாவது கவிதையை நான் எழுதினேன். அதன் தலைப்பு ஷஷதேனீர் மலர்கள்'. அது ஒரு துன்பியல் கவிதை. என் நண்பர்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அக்காலத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு தமிழ் இலக்கியம் ஒரு பாடமாக இருந்தது. இந்தப் பாடத்தை எங்களுக்குப் படிப்பித்தவர் சண்முகலிங்கம் பண்டிதர் அவர்கள்.

ஒவ்வொரு நாளும் அவர் பாடத்தைத் தொடங்கும் முன்பு ஒரு சங்ககால கவிதையை வாசித்து, அதற்கு நய விளக்கம் செய்வார். அன்று பாடத்தின் போது எப்படியோ என் கவிதை அவர் கையில் இருந்தது. அவர் அதைக் கையில் எடுத்தவுடன் எனக்கு திக்கென்று இருந்தது. அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்தேன். ஆனால் அவர் சொல்லச் சொல்ல என் மேனி சிலிர்த்தது. எனக்கு வியப்பாகவும் இருந்தது. என்னை அவர் எழுந்திருக்கச் சொன்னார். எனது கவிதையை ஒவ்வொரு வரியாக வாசித்தார். அதற்கு நய விளக்கம் சொன்னார். அதன் மொழி நடை, எதுகை மோனை, சுருதி சந்தம், அது எவ்வாறு இலக்கணத்துக்குள் வருகிறது, அதன் கருத்து உள்ளடக்கம், அதில் பொங்கும் உணர்ச்சிப் பிரவாகம் என்று எல்லாம் ஒரு அரை மணி நேரம் பேசினார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கூச்சமாகவும் இருந்தது. என் கவிதைக்குள் இத்தனை சங்கதிகளா என்று வியந்து போனேன். அவர் பேசி முடித்ததும் பாராட்டு விண்ணைப் பிளந்தது. அப்போது பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு காலம் நிறைவுற்றதனைத் தொடர்ந்து அவர்கள் பொன்விழா கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார்கள். அந்த கவிதைப் போட்டிக்கு என்னை அந்த கவிதையை அனுப்புமாறு ஆசிரியர் எனக்கு வேண்டுகோள் விடுத்தார். நானும் அப்படியே செய்தேன். அகில இலங்கை கவிதை போட்டியான அதில் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. எனக்கு முன் முதலாம் இரண்டாம் பரிசுகளை வென்றவர்கள் அப்போது புகழ் பெற்றிருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் க.ப. லிங்கதாசன் ஆகியோர் ஆவர். அவர்களுடன் போட்டியிட்டு நான் மூன்றாம் பரிசு பெற்றேன் என்று எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நான் ஒரு கவிஞனாக வர வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். எனினும்  நாடகத்துறை, சிறுகதைத் துறை, நாவல், மொழிபெயர்ப்பு என என் இலக்கிய பணிகள் விரிந்து பறந்து சென்றன.


05. ஒரு சஞ்சிகையாசிரியராக உங்களது இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் வீரகேசரியில் ஒரு பத்திரிகையாளனாக இருந்து விலகிய அனுபவம் ஒரு கசப்பான அனுபவம் ஆகும். எனது எழுத்துப் பணிக்கு அங்கே அங்கீகாரம் கிடைக்கவில்லை. நான் அங்கிருந்து விலகி சட்டத்தரணியாக என் பணியை ஆரம்பித்த போது லங்காதீப பத்திரிகை நிறுவனம் அவர்களால் ஆரம்பிக்கப்படவிருக்கும் சிறுவர் பத்திரிகைக்கு என்னை ஆசிரியராக பணிபுரிய அழைத்தார்கள். அதுதான் பின்னர் ஷஷவிஜய்' சிறுவர் பத்திரிகையாக புகழ்பெற்றது. அதில் நான் எனது எல்லாத் திறமைகளையும் பதித்து சிறப்புறச் செய்தேன். அதன் விற்பனை நாடெங்கும் பெருகி பரவியது. அதில் நான் எழுதிய சிறுவர் சிறுகதைகள், சிறுவர் தொடர் கதைகள் பிரசித்தி பெற்றன. அவையே என்னை புகழின் உச்சத்திற்கு உயர்தின. அங்கிருந்து நான் விலகி வந்தபோது மீண்டும் வீரகேசரி நிறுவனம் ஷஷசுகவாழ்வு' என்ற சஞ்சிகையை என் கரங்களில் வைத்து அதனை நடத்தித் தருமாறு பணித்தது. அதிலும் இன்று வரை எனது எழுத்துப் பணிகள் தொடர்கின்றன.


06. இதுவரை வெளிவந்த உங்கள் படைப்புக்கள் பற்றி விரிவாகக் குறிப்பிடுங்கள்?

01. வசந்தங்களும் வசீகரங்களும் (1998)
02. ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள் (2002)
03. உழைப்பால் உயர்ந்தவர்கள் (2007)
04. கசந்த கோப்பி (2010)
05. எங்கள் கிராமம் (2012)
06. கண்டிச் சீமையிலே (2014)
07. சொந்த மண்ணின் அந்நியர் (2015)
08. இரத்த வரலாறு (2017)

ஆகிய 08 நூல்களை வெளியிட்டுள்ளேன். 1998 இல் வெளிவந்த எனது முதலாவது நூலான ''வசந்தங்களும் வசீகரங்களும்'' ஒரு கவிதை தொகுப்பு. இந்த நூல் மத்திய மாகாண சாகித்திய விருதினை பெற்றுக்கொண்டது. 2002 இல் வெளிவந்த ''ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்'' நூல் சிறுவர்களுக்கானது. அந்த நூலில் கடந்த 1000 ஆண்டுகளில் இந்த உலகை மேம்படச் செய்தவர்கள் என்ற வகையில் முதல் பத்து பேர்களை தெரிவு செய்து அவர்களின் வாழ்க்கை குறிப்பை அதில் தொகுத்தேன்.

அதனைத் தொடர்ந்துதான் நான் மொழிபெயர்ப்புத் துறைக்குள் நுழைந்தேன். 2007 ஆம் ஆண்டு வெளிவந்த எனது முதலாவது மொழிபெயர்ப்பு நூல் ''உழைப்பால் உயர்ந்தவர்கள்'' ஆகும். அதனைத் தொடர்ந்து கிறிஸ்டின் வில்சனின், ''கசந்த கோப்பி'', மார்ட்டின் விக்ரமசிங்கவின் ''எங்கள் கிராமம்'' ஆகிய எனது மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தன. இந்த மூன்று மொழிபெயர்ப்பு நூல்களுக்குமே எனக்கு சாகித்திய விருதுகள் கிடைத்தன. அதன் பிறகு வெளிவந்த ''கண்டிச் சீமையிலே'' பாரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ஏனோ தெரியவில்லை அதற்கு சாகித்ய விருது வழங்கப்படவில்லை. 2015 இல் வெளிவந்த ''சொந்த மண்ணின் அந்நியர்'' எனது சிறுகதைகளை உள்ளடக்கியதாகவே வெளிவந்தது. இறுதியாக எனது சொந்த நாவலான ''இரத்த வரலாறு'' வெளியானது.

07. உங்கள் கவிதை, சிறுகதை, நாவல்களுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்  கொள்கிறீர்கள்?

எனது சிறுகதைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ஒன்று நான் நீண்ட காலமாகவே அவ்வப்போது எழுதி வரும் எனது மலையக சமூகம் சார்ந்த சிறுகதைகள். இரண்டாவது நான் விஜய் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது சிறுவர்களுக்காக எழுதிய சுமார் 300 சிறுகதைகள். மூன்றாவது இப்போது நான் ஆசிரியராக கடமை புரியும் சுகவாழ்வு சஞ்சிகையில் "வாழ்வின் பாடங்கள்'' என்ற தலைப்பில் எழுதிவரும் படிப்பினைக் கதைகள்.

மலையகம் சார்பாக நான் எழுதியிருக்கும் சுமார் 18 சிறுகதைகளும் எனது அனுபவ சிறுகதைகள். அவை என் வாழ்க்கையில் உண்மையாக நடந்த சம்பவங்களை வைத்து நான் எழுதியவைகள். குறிப்பாக கூறப்போனால் அந்த எல்லாச் சம்பவங்களுமே மலையக மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிகளின் பால் விளைந்தவை. உதாரணமாக லட்சக்கணக்கான ஏக்கரில் அழகிய பல தேயிலைத்  தோட்டங்கள் சிறுதுண்டுகளாக சிதறடிக்கப்பட்டு இனவாத நோக்கில் அங்கே காலங்காலமாக கூடியிருந்த மலையக மக்களைப் புறந்தள்ளி சிங்கள மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட போது என் குடும்பங்கள் போன்றவைகள் அங்கிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.
அவ்விதம் வெளியேற்றப்பட போது யுத்த காலத்தில் எவ்வாறு அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேற்றப்பட்டனரோ அதேபோன்ற துன்பங்களுடன் நாங்கள் கூட நாங்கள் இருந்த எங்களது வாழ்விடங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டு எங்கே செல்வது என்று தெரியாமல் எங்கோ ஓரிடத்தில் ஓடி ஒழிந்து பின்னர் அவ்விதம் ஒழிந்த இடங்களையே எங்களது நிரந்தர வாழ்விடங்களாக  ஆக்கிக்கொண்டு துன்பங்களை சுமந்துகொண்டு வாழ்ந்த கதைகள் நிறைய உள்ளன. அத்தகைய சம்பவங்களே இந்தக் கதைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவைதான் இந்த சிறுகதைகளுக்கும் எனது கவிதைகளுக்கும் கருவாக அமைந்திருக்கின்றன. அவற்றைப் படிப்பவர்களுக்கு நான் எவ்வாறு வலியை உணர்ந்து சுமந்தேனோ  அதே வழியை அவர்களால் உணர முடியும். அவை உணர்வுகளுடன் கூடியவை. அவற்றைப் படிக்கும்போது உங்கள் கண்களிலும் ஒரு துளி கண்ணீர் வராமல் இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன்.

08. 'வசந்தங்களும் வசீகரங்களும்' கவிதை நூலை 1998 இலேயே வெளியிட்டுள்ளீர்கள். இந்த வகையில் ஒரு சிறந்த கவிதை எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தான் வெளியிட்ட முதலாவது நூல்தான் இந்தக் கவிதை நூல். அந்தக் கவிதை நூலில் என் இளமைக் காலத்திலிருந்து சுமார் இருபத்தைந்து வருடங்களாக நான் எழுதிய என் இளமைக்கால கவிதைகள் காணப்படுகின்றன. என்றாலும் நான் அந்த நூலுடன் என் கவிதைகளை நிறுத்தி விடவில்லை. அதன் பின்னரும் நான் கவிதை எழுதிக் கொண்டுதான் இருந்தேன். இப்போது கூட அவைகள் அனைத்தையும் தொகுத்தால் இன்னொரு கவிதை நூலை என்னால் வெளியிட முடியும் என்ற அளவுக்கு என்னிடம் கவிதைகள் நிறையவே உள்ளன. அவற்றில் வடக்கில் இடம் பெற்ற யுத்தத்தைப் பற்றிய கவிதைகளும் உள்ளன.

ஒரு சிறந்த கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எவராலும் கூறிவிட முடியாது. ஆனால் சிறந்த கவிதைகள் எப்படி இருந்திருக்கின்றன என்று கூற முடியும். சிறந்த கவிதைகள் உணர்வு பூர்வமாக இருந்திருக்கின்றன. உணர்ச்சி பொங்கும் விதமாக இருந்திருக்கின்றன. அநீதிகளுக்கு எதிராக சீரிப் பொங்குவனவாக இருந்திருக்கின்றன. சமுதாயக் கேடுகளை கண்டிப்பதாக இருந்திருக்கின்றன. அராஜகங்களை எள்ளி நகையாடுவதாக இருந்திருக்கின்றன. அரசியல் அவல நிலைகளை சித்தரிப்பதாக இருந்திருக்கின்றன. கொடுமைகளை சாடுபவையாக இருந்திருக்கின்றன. இத்தகைய அம்சங்களை உள்வாங்கி பாடினால் அவை சிறந்த கவிதைகளாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


09. இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க முடியாதவர் அல்லது மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டா?

என் வாழ்க்கையும் இலக்கிய உலகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. அவை பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்திருக்கின்றன.  இருந்தாலும் சுவாரசியமான ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.

1990களை அண்டிய காலப் பகுதி அது. அப்பொழுது நான் வீரகேசரி வாரமலரில் பொதிகை என்ற இலக்கியப் பக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். அதில் 'நெற்றிக் கண்ணன்' என்ற தலைப்பில் ஷஷநக்கீரன்' என்ற பெயரில் இலக்கிய உலகில் நடக்கும் அடாவடித்தனங்களைப் பற்றி விமர்சன நோக்கில் கண்டித்து எழுதி வந்தேன்.

அப்போது எழுத்தாளர் என். ரகுநாதன் என்பவர் ஒரு இலக்கிய விழாவில் உரை நிகழ்த்தும் போது இப்போது எழுதிவரும் எல்லா எழுத்தாளர்களும் அயோக்கியர்கள். அவர்கள் எழுதுவது ஒன்று செய்வது வேறு ஒன்று. அவர்களின் பேனாக்கள் எல்லாவற்றையும் பிடிங்கி நெருப்பிலிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் நான் பின்வருமாறு எழுதியிருந்தேன். ''அப்படி எல்லா எழுத்தாளர்களின் பேனைகளையும் பிடுங்கி நெருப்பிலிட்டு கொளுத்த வேண்டுமென்றால் அதில் அவரது பேனையும் சேர்ந்து தான் இருக்கும். சமகால எழுத்தாளர்கள் பற்றி அவருக்கு  தெரிந்து இருப்பதனால்தான் அவ்வாறு அவர் கூறுகிறார்.  ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சங்ககாலப் புலவர்களின் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது.  அவர்கள் நல்லவர்களா அயோக்கியர்களா என்பதும் நமக்கு தெரியாது. அவர்களிடமிருந்து அயோக்கியர்களைப் பிரித்து அவர்கள் எழுதியவற்றை தீ வைத்து கொளுத்துவது முடியாத காரியம். ஆதலால் படைப்பையும் படைப்பாளியையும் ஒருசேர பார்க்கக் கூடாது. படைப்பு ஒன்றைப் படைத்த பின் படைப்பாளி இறந்து விடுகிறான் என்றொரு ஆங்கிலக் கூற்று ஒன்று உண்டு. படைப்பு எப்போதுமே தனித்துவமானது'' என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதனால் கோபம் அடைந்த மேற்படி எழுத்தாளர், அதனை எழுதியது பிரபல எழுத்தாளர் கே. விஜயன் என்று தவறாகக் கருதி அவரை ஒரு இலக்கிய கூட்டத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துவிட்டார். இக்காலத்தில் கே. விஜயனும் என்னோடு வீரகேசரியில்தான் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் ஓடோடி வந்து ஷஷநீர் இப்படி எழுதப் போய் நான் அல்லவா உதை வாங்க வேண்டியிருக்கிறது' என்று வருத்தப்பட்டுக் கூறினார்.

நான் அவரை ஆறுதல்படுத்தி ஷஷநல்ல விஷயம் தானே அதனை நீங்கள் எழுதியதாகவே வைத்துக்கொள்ளுங்கள். கிடைத்ததை உங்களுக்கு கிடைத்த பரிசாக எண்ணிக்கொள்ளுங்கள்' என்று சிரித்துக்கொண்டே கூறினேன். அவர் அதற்கு ஒன்றுமே பதில் சொல்லவில்லை.

10. நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக இலக்கியத் துறையில் பணியாற்றி வரும் உங்களுக்கு இலக்கியத்துறை பற்றி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஏதாவது முக்கியமான விடயம் ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுங்கள்?

உண்மையைச் சொன்னால் இன்று இலக்கியத்துறை அல்லது இலக்கிய உலகு ஆரோக்கியமானதாக இல்லை.  நாட்டின் ஏனைய துறைகளைப் போலவே இத்துறையிலும் போட்டி, பொறாமை,  ஊழல், முறைகேடுகள், தில்லு முல்லு,  வெட்டுக் குத்துகள் எல்லாமே நிறைந்து போய்க் காணப்படுகின்றன. ஒருவரின் திறமையை மதித்து அங்கீகரிக்கும் மனப்பாங்கு எங்கோ காணாமல் போய்விட்டது. கௌரவிப்புகள், விருது வழங்குதல் என்பனவெல்லாம் போலியான சடங்குகளாகப் போய்விட்டன. விருதுகள் கூட ஆளைப் பார்த்து வழங்கப்படுகின்றதுவேயன்றி படைப்பை பார்த்து வழங்கப்படுவதில்லை. தவறான இடங்களில் தவறான மனிதர்களே பதவிகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று கூறி வைத்தார்களோ என்னவோ.

11. உங்கள் எழுத்துக்களின் வெற்றிக்கு காரணம் என்ன வென்று நினைக்கின்றீர்கள்?

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கிய காரணத்தை நான் பிரதானமானதாகக் குறிப்பிடலாம். அது எனது கடுமையான உழைப்பும் முயற்சியும்தான். ஒரு சிற்பி ஒரு சிலையை வடித்து எடுக்கும்போது அதனை ஒரே மூச்சில் செய்து முடித்து விடமாட்டான். அதனைப் பார்த்து பார்த்து, சிந்தித்துச் சிந்தித்து ஒவ்வொரு கோணங்களிலும் மெதுமெதுவாக சரிசெய்து, அதனை செதுக்கிப் பூர்த்தி செய்வான். அதன் பின்பும் அவன் பணி ஓய்ந்து விடுவதில்லை. சிலையின் எல்லா அங்கங்களும் உரிய முறையில் வடிக்கப்பட்டுள்ளனவா என தடவித் தடவிப் பார்ப்பான். இறுதியாக அச்சிலையின் உதடுகளும் மூக்கும் கண்களும் உயிருள்ளனவாக இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்த பின்னரே அவன் பணி முற்றுப்பெறுகிறது. எழுத்தாளர்களின் சிருஷ்டிகளும் அவ்விதம் நிர்மாணிக்கப்படுமானால் அவை கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.


12. இலக்கியப் பணி சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

இலக்கியப் பணி வேறு எனது வாழ்க்கை வேறு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அதனால் இரண்டுக்குமே ஒரே கொள்கை தான் இருக்க முடியும். அது சகலருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடமைக் கொள்கையாகும். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றில் அங்கத்தினராக சேர்ந்து செயல்பட ஆரம்பித்தேன். எனக்கு சிங்கள மொழியில் புலமை  ஏற்பட அதுவே ஒரு காரணமாக அமைந்தது. அவ்விதம் சிங்களத் தோழர்களுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில்தான் எமது இயக்கத்தின் கிளைச் செயலாளராக செயலாற்றிய தோழர் கூடியிருக்கும் மக்களுக்கு சிங்களத்தில் உரையாற்றிய போதெல்லாம் நான் அதனைத் தமிழில் சமகாலத்தில் உரை பெயர்த்து சொல்வேன். அந்தக் கொள்கை தான் என் இலக்கியத்திலும் பரிணமிக்கிறது.


13. இறுதியாக நீங்கள் வெளியீடு செய்த ஷஇரத்த வரலாறு| நாவல் வெளியீட்டு விழா ஒரு வெற்றி விழாவாக இடம்பெற்றதாக அறிகின்றேன். இதுபற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

இறுதியாக இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற்றது என்று சொல்வதிலும் பார்க்க நான் ஏற்பாடு செய்த அனைத்து விழாக்களும் வெற்றிகரமான நிகழ்வுகள்தான் என்று கூறி வைக்க விரும்புகிறேன். காரணம் அவை எல்லாமே வாசகனை மையமாகக் கொண்டு அவனை மதித்து ஏற்பாடு செய்து செய்த விழாக்கள். எனவே அவை சபை நிரம்பிய விழாக்களாக இருந்தன. நான் இதுவரை 08 நூல்களை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் இரண்டைத் தவிர ஏனையவை எனது சொந்த முயற்சியால் வெளியீடு செய்தவை. எனது ஏதாவது ஒரு நூலின் வெளியீட்டு விழா தோல்வியடைந்திருந்தால் நான் அடுத்த நூலாக்க முயற்சிக்கு போய் இருந்திருக்க மாட்டேன். அவ்விதம் முயற்சித்து தோல்வியடைந்து வாழ்க்கையில் நொந்து போன பலரை எனக்கு தெரியும். இலங்கை நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து முயற்சிகளை ஊக்குவிக்கப் போதுமான அமைப்புகள் இல்லை. நூல் கையெழுத்துப் பிரதியை அதற்கான பெறுமதியை விலை கொடுத்து வாங்கி பதிப்பித்து சந்தைப்படுத்தி விநியோகம் செய்யும் எந்த அமைப்பும் கிடையாது. அரசாங்கத்தின் சில ஏற்பாடுகளும் ஊழல் மலிந்தவைகளாகவே காணப்படுகின்றன. எழுத்தாளனே பிரதியையும் தயாரித்து, தட்டச்சு செய்து, எழுத்துப் பிழைகளைச் சரிபார்த்து, பதிப்பித்து, பிரசாரப் படுத்தி, தோளில் சுமந்து சென்று விற்பனை செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் எழுத்தாளன் மிகப் பாரிய சுமை ஒன்றை சுமந்து கொண்டுதான் இருக்கிறான். இதனைக் கண்டு கொள்ளாத பலரும் அவனை எள்ளி நகையாடுவதற்கு மாத்திரம் தவறுவதில்லை.


14. இலக்கிய அமைப்புக்களில் தாங்கள் அங்கத்தவராக இருக்கிறீர்களா? அவ்வகையான இலக்கிய அமைப்புக்களின் சேவைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளராகவும் மற்றும் சில அமைப்புகளில் ஒருங்கிணைப்பாளராகவும்  இருக்கிறேன். அவற்றில் சிங்கள அமைப்புகளும் உள்ளடங்குகின்றன. அவற்றின் வாயிலாக பல இலக்கியக் கூட்டங்களையும், எழுத்தாளர் சந்திப்புகளையும், இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளையும், இலக்கியப் போட்டிகளையும், எழுத்தாளர் கௌரவிப்பு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றோம். அவற்றில் கலந்து கொண்ட பலர் இன்று வளர்ந்த எழுத்தாளர்களாக உருவாகி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

அண்மையில் கூட கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஷஷபாடசாலை பிள்ளைகளுக்கு மத்தியில் படைப்பாற்றலை வளர்ப்பது எப்படி?' என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் என்னதான் முயற்சி எடுத்தாலும் இளையோர் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டு போகிறது. அதற்கு நம் நாட்டின் கல்விக் கொள்கை தடையாக இருக்கிறது. பாடசாலைகளில் அறிவு உண்டாக்கும் கல்விமுறை இல்லாமல் போய் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான கல்வி முறையாக நமது கல்விமுறை மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இதில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். என்றபோதும் ஆசிரியர், அதிபர், பெற்றோரின் மனப்பாங்கும் இது தொடர்பில் மாற்றப்பட வேண்டும்.


15. மலையகத் தமிழர்களின் இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றி விசேடமாக என்ன குறிப்பிடப் போகிறீர்;கள்?

மலையக தமிழர்கள் மத்தியில் எழுத்து, கலை, கலாசாரம் என்பன பிற்பட்ட காலத்திலேயே உருவாயின என்ற ஒரு தவறான கருத்து நிலவுகின்றது. இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோப்பித் தோட்டங்களில் தொழில் புரிவதற்காக இலங்கை வந்தபோதே தமது சகல பாரம்பரிய கலை கலாசார அம்சங்களையும் சேர்த்தே தம்முடன் கொண்டு வந்தனர்.

இவற்றில் மிகப் பிரதான அம்சமாக பங்கு வகிப்பது மக்கள் கலை இலக்கியமாக பரிணமிக்கின்ற வாய்மொழி இலக்கியங்களாகும். தமிழ்நாட்டின் கலை இலக்கியப் பாரம்பரியங்கள் சங்க காலத்துக்கும் முன்னிருந்து ஆரம்பிக்கின்றன. அதனால் மலையக மக்களின் கலை இலக்கிய கலாச்சார பாரம்பரியங்களை சங்க இலக்கியத்தின் இலக்கிய கலை கலாசார பாரம்பரியங்களும் பின்னர் மன்னர் காலத்து கலை கலாசார பாரம்பரியங்களின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும். வாய்மொழி இலக்கியம், கூத்து நாடகம், வாத்தியக் கருவிகளின் பாவனை, நடனம் போன்றவற்றில் தேசிய கலை இலக்கியத்திற்கு அவர்களது பங்களிப்பு பாரியதாகவே காணப்படுகின்றது.


16. உங்கள் ஆக்கங்கள் எழுத்து வடிவில் மாத்திரம்தான் உள்ளதா? மேடைப் பேச்சுக்களில் ஏதும் பங்களிப்பு செய்து வருகின்றீரா?

எனது மேடைப் பேச்சுக்கள் எனது பாடசாலை காலத்தில் இருந்து ஆரம்பமாகின்றன. தமிழ்த்தின போட்டிகள் அல்லது வேறு ஏதேனும் இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு அது பாடசாலைக்குத் தெரிய வந்தால் அதில் பங்கு பற்றுவோரின் பெயர் பட்டியலில் முதலாவதாக எனது பெயர் எப்போதும் காணப்படும். நான் பங்குகொண்ட அனேகமான போட்டிகளில் பரிசும் விருதுகளும் பெற்று எனது பாடசாலைக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன். நற்றமிழ் கழகம் என்று அழைக்கப்பட்ட எமது பாடசாலை இலக்கிய மன்றத்தின் தலைவராக நான் இரண்டு வருடங்கள் பதவி வகித்தேன். அந்தக் காலமே அந்த மன்றத்தின் பொன்னான காலமாக கல்லூரியில் இப்போதும் பேசப்படுகிறது. அதன்பின் பல்கலைக்கழகத்திலும் எனது இலக்கியப் பணிகள் தொடர்ந்தன. பல்கலைக்கழகத்தில் நான் மூன்று நாடகங்களை மேடையேற்றினேன். அவற்றில் ஒரு நாடகத்துக்கு நடுவராக விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் வந்திருந்தார். அவர் பின்னர் ஷஷசன்' என்ற ஆங்கில பத்திரிகையில் அது தொடர்பாக எழுதியிருந்த விமர்சனம் என்னை வெகுவாக உற்சாகப்படுத்துவதாக அமைந்தது. எனது வாழ்க்கையிலும்கூட மேடைப்பேச்சு, நாடகம் மற்றும் ஏனைய கலை வடிவங்களான சித்திரமும் சிற்பமும் கூட என் வாழ்க்கையுடன் ஒன்றாக இணைந்து போய்விட்டன. நான் சில ஓவியங்களையும் சிற்பங்களையும் கூட படைத்துள்ளேன். சுமார் 35 நூல்களுக்கு அட்டைப் படங்கள் வரைந்துள்ளேன். மலையக மக்கள் தொடர்பான அரசியல் பொருளாதார சமூக பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றினை ஆய்வு செய்து பல  கட்டுரைகளை பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் எழுதியதுடன் மேடைகளில் அவற்றை ஆய்வுக் கட்டுரைகளாக கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்திருக்கிறேன் என்பது தொடர்பில் விசேடமாக இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.


17. விருதுகள் தகுதியானவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றனவா? சில படைப்புக்கள் நடுவர் குழுக்கே போவதில்லை. இது எனக்கு ஏற்பட்ட அனுபவம். இதுபற்றி என்ன சொல்வீர்கள்?

விருதுகள் சரியானவர்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கம்பரின் பாட்டுக்களில் குற்றம் கண்டுபிடிக்க ஒட்டக்கூத்தர் என்ற ஒரு புலவர் இருக்கவில்லையா? அந்த ஆண்டவனின் பாட்டிலேயே குற்றம் கண்டு பிடித்து தருமிக்கு பொற்கிழி வழங்குவதே தடுப்பதற்கு நக்கீரன் என்ற ஒரு புலவன் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறான். இப்போதெல்லாம் முதலில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விருது வழங்குகிறார்கள். அப்புறம்தான் தகுதியானவர்களைத் தேடுகிறார்கள். விருது வாங்குவதற்கு கூட செல்வாக்கு உள்ளவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்படுகிறார்கள். தகுதியானவர்கள் பின் வரிசைக்குத் தள்ளப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.


18. மொழிபெயர்ப்புத் துறையில் நீங்கள் செய்துவரும் பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்? மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கும் போது அவற்றின் மூல நூல்களை வாசிப்பது போன்ற இரசனை கிடைக்குமா?

இதுவரை நான் மொத்தம் ஆறு நூல்களை மொழி பெயர்ப்பு செய்து இருக்கிறேன். அவற்றில் மூன்று சிங்களத்திலிருந்து தமிழுக்கும் ஏனைய மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றைப் பேர் சொல்லி குறிப்பிடுவதாயின் பந்துபால குருகேயின் ஷஷஉழைப்பால் உயர்ந்தவர்கள்', கிறிஸ்டின் வில்சனின் ஷஷகசந்த கோப்பி', மாட்டின் விக்ரமசிங்கவின் ஷஷஎங்கள் கிராமம்', உப்பாலி லீலா ரத்னாவின் ஷஷதேத்தண்ணி', லோனா ரைட் அவர்களின் ஷஷமாநிற மங்கை||, சார்ணல்ஸ் டிக்கன்ஸின் 'ஒலிவர் ட்விஸ்ட்' என்பனவாகும்.

இவற்றில் முதல் மூன்று நூல்களுக்கு எனக்கு சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன. ஏனைய மூன்று நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து இப்பொழுது நூல் வடிவில் உருவாக காத்துக்கொண்டிருக்கின்றன.

நான் மொழிபெயர்த்த அனேகமான நூல்கள் என்னது இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சமூகம் சார்ந்தவை. இவற்றை எழுதியவர்கள் சிங்களவர்களும் ஆங்கிலேயர்களும் ஆவார்கள். எனவே எனது மொழிபெயர்ப்புக்கள் உடன் ஒப்பிடும்போது எனது நூல்கள் மூலநூல் போலவும் அவர்கள் எழுதியவை மொழிபெயர்ப்புகள் போலவும் காணப்படுகின்றன. உதாரணமாக கிறிஸ்டின் வில்சன் என்ற எழுத்தாளர் தனது ஷஷபிட்டர் பெரி' என்ற நாவலில் வுhநல யசந டிநயவiபெ வழஅ.. வழஅ.. வழ உநடிசயவந னநநியஎயடi என்று எழுதுகிறார். இதனையே  அனுலா டி சில்வா என்ற எழுத்தாளர் சிங்களத்தில் மொழிபெயர்க்கும்போது ஷஷஅவர்கள் பெர வாத்தியம் இசைத்து தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்' என்று கூறுகிறார்.

மலையக தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த இரண்டு கூற்றுக்களுமே அச்சமூகத்திடமிருந்து அன்னியப்பட்டுக் காணப்படுகின்றன. இதனை நான் தமிழில் மொழி பெயர்த்த போது அவர்கள் ஷஷதப்படித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்' என்று எழுதினேன். தப்பு என்பது இச் சமூகத்துக்கு மிக நெருங்கிய ஒரு வாத்தியக் கருவி ஆகும்.  அதனை  ஷஷடொம்... டொம்....' என்றோ அல்லது ஷஷபெர' என்றோ  அழைக்க முடியாது. எது எப்படி இருந்த போதும் வேறொரு சமூகத்தைப் பற்றி அவர்களது எண்ணங்கள் கருத்துக்கள், கலை கலாசாரங்கள், மற்றும் ஏனைய சமூக அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவற்றை இத்தகைய மொழிபெயர்ப்புகள் மட்டுமே பிற இன மக்களுக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.


19. இலக்கியத்தினூடாக அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறீர்களா? இன்று நடைபெற்று வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இது சாத்தியமாகுமா?

மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளமாகவும் உள்ளது. ஒரு மனிதன் பேசுவதை அவன் அவன் பேசும் மொழியை அறிந்திருந்தால் மட்டுமே மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும். எனவே ஒரு சமூகத்தை பற்றி தெரிந்துகொள்ள, வேறொரு நாட்டினர் பற்றி தெரிந்து கொள்ள, அவர்கள் மொழியை நாம் தெரிந்திருத்தல் வேண்டும். ஆனால் அப்படி பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருப்பது சாத்தியமானதல்ல. இங்குதான் மொழிபெயர்ப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இலக்கியங்களும் நூல்களும் ஒரு சமூகத்தைப் பற்றியும் அவர்களது பிரச்சினைகள் என்ன என்பது பற்றியும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன. எனவே ஒரு சமூகத்தின் இலக்கியங்களை வாசிப்பதன் வாயிலாக அந்த சமூகத்தின் பிரச்சினைகளையும் அவர்கள் என்ன கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள் என்பதையும் இன்னொரு சமூகத்தால் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய செயற்பாடு சமூகங்களிடையே காணப்படுகின்ற பல்வேறு சந்தேகங்களையும், அச்சங்களையும்கூட தீர்க்கும் வல்லமை பொருந்தியது.  இன்று தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனைகளை சிங்கள சமூகம் புரிந்து கொள்ளாமை காரணமாகவே அவர்கள் தமிழ்ச் சமூகத்தையும் முஸ்லிம்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அச்சம் கொள்கிறார்கள். இரண்டு சமூகங்களும் இரண்டு மொழிகளையும் பேசுவார்களாயின், அவர்களின் இலக்கியங்களை படிப்பார்களாயின் நமது 90 சதவீத பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் நடைமுறையில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களின் மொழியையும் இலக்கியத்தையும் அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

அரசாங்கங்கள்தான் உரிய மொழிக் கொள்கையை வகுத்து செயற்படுத்துவதன் மூலம் இலக்கியங்கள் வாயிலாக இன ஒற்றுமையை ஏற்படுத்தலாம்.  கனடா நாட்டின் கியூபெக் மாநிலம் அந்த நாட்டில் இருந்து பிரிந்து போவதை இத்தகைய மொழிக்கொள்கை வாயிலாக அந்த நாடு வெற்றிகரமாக தடுத்திருக்கிறது.


20. சிறுகதை, நாவல்களைப் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள் துப்பறியும் மர்மக் கதைகள் பற்றி என்ன சொல்வீர்கள்?

இறுதியாக வெளிவந்த எனது ''இரத்த வரலாறு'' என்ற நாவலைப் படித்ததன் விளைவாக இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த நாவல் ஒரு சரித்திர நாவலாக இருந்தாலும் அதனை ஒரு துப்பறியும் கதைப் பாணியிலேயே நான் எழுதியிருக்கிறேன். அதனை வாசித்து ஒரு வாசகன் உங்கள் கதை 200 மைல் வேகத்தில் ஒரு திரைப்படம் போல் ஓடுகிறது என்று குறிப்பிட்டார். இந்தக் கதையை நான் ஏன் எழுதினேன் என அந்த நூலின் முன்னுரையில் விரிவாக விளக்கி இருக்கிறேன். இந்தக் கதை தொடராக சூரியகாந்தி பத்திரிகையில் வெளிவந்த போது இந்த மாதிரி கதைகளை எல்லாம் சடகோபன் போன்றவர்கள் எழுதக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

இப்படி ஒரு சிலரின் அறியாமை, குறுகிய மனப்பான்மை காரணமாக இலங்கையில் இத்தகைய இலக்கியங்கள் படைக்கப்படாமலேயே போகின்றன. ஷஷதுப்பறியும் கதை தானே' என்று எள்ளி நகையாடி அந்த நூலையும் அந்த எழுத்தாளரையும் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். அதனால் இலங்கை வாசகனுக்கு அவனது பதின்ம வயதில் படிப்பதற்கு படைப்புகள் கிடைக்காமல் போகின்றன. இப்போது முதிய வயதில் இருக்கும் மூத்த எழுத்தாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலை விமர்சகர்கள் இப்படி யாரையாவது கேட்டால் அவர்களின் பதின்ம வயதில் அவர்கள் இத்தகைய துப்பறியும் கதைகளை வாசித்துத்தான் தமது வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்து கொண்டார்கள் என்பது தெரியவரும். இது எனது அனுபவ உண்மை. இலங்கை எழுத்தாளர்கள்  இத்தகைய படைப்புக்களை சிருஷ்டிக்க முன்வருவதில்லை. அதனை ஜனரஞ்சகப் படைப்பு என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அதன் காரணமாக பதின்ம வயதுப் பாடசாலை மாணவர்கள் தமிழ்நாட்டின் இத்தகைய நூலாசிரியர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், ரமணி சந்திரன் போன்றோரின் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து வாசிக்கின்றார்கள். நான் ''விஜய்'' பத்திரிகையின் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் இதனை நன்றாகவே உணர்ந்தேன். அக்காலத்தில் நான் எழுதிய ஷஷமர்ம தேசம்', ''பேய்களுக்கு இசை விருந்தளித்த கண் தெரியாத இசைஞன்'', ''விஷப் பரிட்சை'' போன்ற நாவல்கள் பதின்ம வயது வாசகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்திருந்தன. ஆரம்பகால வாசகன் தனது வாசிப்புப் பழக்கத்தை அபிவிருத்தி செய்து கொள்ள இத்தகைய நூல்கள் மிக அவசியமான வழிகளாகும்.


21. உங்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது வாழ்க்கை முழுவதிலுமே விருதுகளும் பரிசுகளும் சான்றிதழ்களும் குவிந்து கிடக்கின்றன. நான் எனது 16 வயதில் எழுதிய எனது முதல் கவிதையே பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் தனது பொன் விழாவையொட்டி நடத்திய அகில இலங்கை கவிதை போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது. அதன் பிறகு கவிதை, சிறுகதை, கட்டுரைகள் என வந்த பல போட்டிகளிலும் தொடர்ச்சியாக பங்குபற்றி பல பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறேன். மத்திய மாகாண சாகித்திய விருது, இலங்கை இலக்கியப் பேரவை தந்த விருது, துறைவி - தினகரன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கிடைத்த விருது, மொழிபெயர்ப்புக்காக பெற்ற மூன்று தேசிய சாகித்திய விருதுகள் போன்றன குறிப்பிடத்தக்கன.


22. இளம் படைப்பாளர்களுக்கு விசேடமாக தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

''சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்'' என்று ஒரு பழமொழி இருக்கிறது. நம்மிடம் எல்லையற்ற அறிவை நாம் சேமித்து வைத்திருந்தால்தான் நாம் எழுதும் எழுத்தில் அவை வெளிப்பட்டு அதனை படிப்பவர்களுக்கும் சமூகத்துக்கும் அது பிரயோஜனமாக இருக்கும். நாம் இடைவிடாது வாசிப்பதன் மூலம்தான் நமக்குள் அறிவை களஞ்சியப்படுத்திக்கொள்ள முடியும். உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் பலரையும் நுணுகிப் பார்த்தோமானால் அவர்கள் எல்லோருமே அறிவாற்றலில் உயர்ந்தவர்களாகவும் அறிஞர்களாகவும் தத்துவவியலாளர்களாவும் இருந்திருக்கிறார்கள் என்பதைக் காண முடியும். எழுத்தாளன் என்பவன் சமூக மேம்பாட்டுக்காக தன் எழுத்து வாயிலாக ஏதாவது ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். ஆதலால் தாம் எழுத்தாளனாக வேண்டும் என்று விரும்புபவர் ஒவ்வொருவரும் முதலில் அறிவுச் செல்வத்தை தேடிக் கொள்ள வேண்டும். அதனைத் தேடி வைத்துக்கொண்டு எழுதுகோலை பிடிப்பவன் அத்துறையில் நிச்சயம் வெற்றி பெறுவான்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

20. ஆசிரியர் வேலணையூர் ரஜிந்தன் உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.11.17

ஆசிரியர் வேலணையூர் ரஜிந்தன் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகம், பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது பெயர் பாலசுந்தரம் ரஜிந்தன். தந்தை அரசரத்தினம் பாலசுந்தரம், தாயார் பாலசுந்தரம் கமலேஸ்வரி. சொந்த ஊர் வேலணை, ஆரம்பக் கல்வியை யா/வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்திலும், சாதாரண தரத்தினை யா/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலும் உயர் தரத்தை யா/வேலணை மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளேன்.


உங்கள் தொழில் அனுபவம் பற்றியும் கூறுங்கள்? 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் ஷஷகற்பித்தலில் தேசிய டிப்ளோமா' ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்து மன்ஃ சென். லூட்ஸ் மகா வித்தியாலயத்தில் 06 வருடங்கள் விசேட கல்வி ஆசிரியராகப் பணியாற்றி தற்பொழுது யா/ நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகன்றேன்.


இலக்கிய உலகில் நுழைந்த காலம் மற்றும் சுவாரஷ்யமான சம்மவங்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

பாடசாலைக் காலத்தில் மாணவர் மன்றங்களில் பிடித்த கவிதைகளைப் படித்தலுடன் ஆரம்பமானது. எனது இலக்கிய உலகுக்கான நுழைவு. அவ்வாறே கவிதை ஆர்வம் ஏற்பட்டு கவிதைகள் எழுதவும் ஆரம்பித்தேன். உயர்தரத்தில் கவியரங்கில் முதற்பரிசு பெற்றதும், தீவக வலய மட்டத்தில் பட்டிமன்றத்தில் தலைமை தாங்கி வெற்றி பெற்றதும் மறக்க முடியாத தருணங்கள். தொடர்ந்தும் ஆலய நிகழ்வுகள், ஊர்ப் பொது நிகழ்வுகள், கவியரங்கம், பட்டிமன்றம் என்றும், பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி என கவிதை, கவிதை சார் நிழ்ச்சிகள் என்றும் பயணிக்கின்றேன்.


நீங்கள் இதுவரை எழுதி வெளியிட்ட நூல்கள் எத்தனை?

அழகோவியம் (கவிதை மின்னூல்) 2017
பொற்கனவு (கவிதை நூல்) 2018
நிலா நாழிகை (கவிதை நூல்) 2018
கட்டிடக் காடும் யுரேனியக் கதிரும் (கவிதை நூல்) 2019

எனது கவிதைப் பயணத்தில் கவிதைகள் தொகுக்கும் முயற்சி முதற் தடவையாக 'அழகோவியம்' எனும் பெயரில் மின்னூலாகவே உருவாக்கம் பெற்றது. 2017 ஆம் ஆண்டு அதனை யாழ் இலக்கிய குவியம் செவ்வனே செயற்படுத்தி மின்னூலாக இணையத்தில் வெளியீடு செய்திருந்தது. இதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர்கள் யாழ் இலக்கிய குவியத்தின் தலைவர் கவிஞர் வேலணையூர் தாஸ், மற்றும் கவிஞர் யாழ் பாவாணன் ஆகியோர். இதுவே எனது முதல் மின்னூல் வடிவம் பெற்ற கவிதைத் தொகுப்பாகும்.

அச்சில் நூலுருவில் வெளியான எனது அடுத்த மூன்று படைப்புக்கள் 'பொற் கனவு', 'நிலா நாழிகை', கட்டிடக் காடும் யுரேனியக் கதிரும்' ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் ஆகும். எப்படியோ இந்த நான்கு நூல்களைத்தான் என்னால் இதுவரை வெளியிட முடிந்தது. ஆனால் இனிவரும் காலங்களில் ஆத்ம நேசம் என்ற கவிதை நூலை 2020 இல் வெளியிட உத்தேசம் கொண்டுள்ளேன்.


நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது?

பொற்கனவு, நிலா நாழிகை ஆகிய இரு நூல்களை வெளியிடும் போது அவை இரண்டையும் இரட்டைப் பிரசவமாகவே கருதினேன். காரணம் ஒரு தாய் முதற் பிள்ளையைப் பிரசவிக்கப்படும் இன்னல்கள், வேதனைகள், இடர்கள், எதிர்பார்ப்பு, அளவில்லா ஆனந்தம் இப்படி அனைத்தும் எனக்குள்ளும் ஏற்பட்டது. அதிலும் வெளியீடு காணும் அந்த நொடி அது வார்த்தைகளை மிஞ்சிய ஓர் அற்புதமான தருணம் என்றே சொல்ல முடியும்.


''பொற் கனவு'' நூலின் ஊடாக வாசகர்களுக்கு விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

பொற்கனவு கவிதை நூல் சமூகம் சார் கவிதைகளைத் தாங்கிய ஒரு படைப்பு. மனித உணர்வுகளின் உன்னதங்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற விடயமும், கடந்து வந்த பாதைகளில் எனக்கு ஏற்பட்ட அனுபவப் பாடங்களை அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கமும், எமது பண்பாடு, பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆவலும், தமிழ் மொழியின் மேன்மையும் என்று அவற்றை வாசகர்களுக்கு கவிநயத்துடன் கலந்து படைத்திருக்கிறேன்.


''நிலா நாழிகை'' கவிதை நூலில் உள்ள கருப்பொருட்கள் பற்றிச் சொல்லுங்கள்? ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

நிலா நாழிகை பெரும்பாலும் காதல் உணர்வு சார்ந்த படைப்பு. பல இடங்களில் காதல் உணர்வின் ஊடாக கடந்த கால இன்னல்களையும் பதிவேற்றியுள்ளேன். அன்று முதல் இன்று வரை காதல் என்றாலே நிலவைப் பாடாத கவிஞர்கள் யாருமிருக்க முடியாது. அதுபோலவே என் காதல் கவிகளில் பெரும்பாலும் நிலவே என் பாட்டுடை நாயகி, ஆகையாலே தான் அத்தலைப்பை நான் தேர்ந்தெடுத்தேன்.


ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் நீங்கள் வாசிப்பதுண்டா? யாருடைய எழுத்துக்கள் உங்களை அதிகமாகக் கவர்ந்ததாக கருதுகிறீர்கள்?

ஈழத்துப் படைப்பாளர்களின் கவிதைகளைத்தான் அதிகம் விரும்பிப் படிப்பதுண்டு. அதிலும் மஹாகவி உருத்திரமூர்த்தி, முருகையன், புதுவை இரத்தினதுரை போன்றோர் கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்துள்ளன. கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் எனக்கு மிகப்பிடித்தவை. இந்தியக் கவிஞர் வைரமுத்து கவிதைகளையும் அதிகம் படிப்பதுண்டு.


ஒரு நூல் பிரசுரம் என்பது ஒரு பிரசவத்துக்கு ஒப்பானது என்கிறார்களே. இதுபற்றி என்ன சொல்வீர்கள்?

முற்றிலும் சரியான கருத்துத்தான். ஒரு நூலைப் படைப்பதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு தாய் பிள்ளையைப் பெற்றெடுக்கப்படுகின்ற அத்தனை உணர்வுகளையும் ஒரு நூலைப் படைக்கும் படைப்பாளனும் அடைந்துவிடுகின்றான். நூலைப் படைக்க அவன் எடுக்கின்ற முயற்சிகள், அடைந்த வேதனைகள், இடர்கள், அவமானங்கள், நெருக்கீடுகள், இப்படிப் பல துயரங்களைத் தாங்கி நூல் வெளியீட்டில், தாய் மழலையைப் பெற்றெடுத்த மகிழ்வு போல பேரானந்தம் அடைகின்றான் படைப்பாளன்.


உங்களது நூல்களை வெளியிட ஊக்குவித்தவர்கள் யார்?

அடிப்படை ஊக்குவிப்பாளர்கள் என் தாயும் தந்தையும் என் துணைவியும், என்னிளைய சகோதரனும். ஊக்குவிப்பாளர்கள் வரிசையில் இன்னும் பலர் இருக்கின்றார்கள். குறிப்பாக கவிஞர்கள் வேலணையூர் தாஸ், வேலணையூர் சுரேஸ், நிர்மலா சிவராயசிங்கம், சகோதரி ரேவதி ராமமூர்த்தி, வைச ஊடக வலையமைப்பின் நிறுவனர் திரு ஜெ.ஜெனார்த்தனன் போன்ற பலர் இருக்கின்றார்கள்.


உங்கள் படைப்புக்கள் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? உங்களது எந்தப் படைப்பை அதிகமாக நேசிக்கிறீர்கள்?

எனது படைப்புகள் அடிப்படையில் தாய் மொழி தமிழின் மீது கொண்ட ஆத்ம பற்றுதலும் கவிதையில் நான் கொண்ட தீராக் காதலுமே காரணமாகும். ஒரு தாய்க்குத் தனது எல்லாப் பிள்ளைகளும் ஒரே பாசத்திற்குரியவையே அதுபோலவே எனது எல்லாப் படைப்புகளும் ஆத்மார்தமாக நேசத்திற்குரியவை.


முகநூலை அதிகமான இலக்கியவாதிகள் பயன்படுத்துகின்றார்களே. இதுபற்றி நீங்கள் நினைப்பது என்ன?

தற்காலத்தில் முகநூல் ஓர் சிறந்த ஊடகம். அதில் எந்த அளவு நன்மை இருக்கின்றதோ அதே அளவு தீமையும் இருக்கின்றது. அதைப் பயன்படுத்துபவர்கள் உணர்ந்து பயன்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை முகநூலில் நல்ல நண்பர்கள் வட்டத்தை சம்பாதித்திருக்கின்றேன். எனது இலக்கிய வளர்ச்சியில் அவர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது.


நீங்கள் குறியீட்டுக் கவிதைகளையும் எழுதியுள்ளீர்களா?

ஆமாம் எல்லாவற்றையும் குறிப்பிட முடியாது. சில கவிதைகள் குறியீட்டுக் கவிதைகளாகவே அமைத்துள்ளேன். கவிதைக் கருவிற்கு ஏற்றவாறு அவற்றை அமைத்துக் கொள்கின்றேன்.


நீங்கள் எழுதிய கவிதைகளில் நீங்கள் அதிகம் நேசிக்கும் கவிதை எது?

எல்லாக் கவிதைகளையும் அதிகம் நேசிக்கின்றேன். குறிப்பிட்டுக் கூற வேண்டுமாயின் எனது முதற் கவிதையைக் கூறுவேன். உயர்தரம் கற்கின்ற போது எழுதியது. அந்தக் கவிதை எனது முதல் நூலான பொற்கனவு நூலில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது அக்கவிதையின் தலைப்பு ஷஷமுதல் கவிதை அம்மா' என்பதாகும்.


இது கவிதை என்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் அல்லது அடையாளம் காண்கிறீர்கள்?

கவிதைக்கென்று பொது விதிமுறைகள் இல்லை. என்றாலும் நான் சில வரையறைகளை வைத்திருக்கின்றேன். அதாவது மறைவாகவோ, வெளிப்படையாகவோ ஒரு விடையத்தை ஆழமாக விதைக்க வேண்டும். அவ்விடயம் வாசகனை ஷஷஅட நாம் இப்படிச் சிந்திக்கவில்லையே' என்ற ஏக்கத்தை உண்டு பண்ண வேண்டும். அதேவேளை மொழியின் செழுமை, அழகு, மகத்துவம், தனித்துவம் என்பன சொல்லாளுகைகளில் புலப்பட வேண்டும். பரந்த விடயத்தைச் சுருங்கச் சொல்ல வேண்டும். வரிகளின் கட்டமைப்பைப் பேண வேண்டும். (வரிக்கு 2 - 4 சொற்கள், பந்தி அமைப்பு) எதுகை, மோனை, உவமானம், உவமேயம், சந்தம் என்பனவும் கவிதைக்குச் சிறப்புச் சேர்க்கும். இவ்வகையான விடயங்களை வைத்தே கவிதையை நான் தீர்மானிக்கின்றேன்.


இன்றைய அதிகமாக வெளிவரும் படைப்புகள் பற்றி என்ன சொல்வீர்கள்? 

இன்று அதிகமாக படைப்புக்கள் வெளிவருகின்றன. ஒரு வகையில் மகிழ்சியான விடயம்தான். இருந்தாலும் ஆரோக்கியமான படைப்புகளை காலம்தான் தீர்மானிக்கும். படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமது படைப்புக்களின் தராதரத்தை ஒன்றுக்கு ஆயிரம் முறை ஆராய்ந்த பின்னரே வெளியிட வேண்டும். காரணம் படைப்பு என்பது ஒரு வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல ஒரு வரலாற்றையே படைக்கவும் கூடியது.


கவிதைத் துறை தவிர வேறு எந்தத் துறையில் ஈடபாடு காட்ட முயற்சி செய்வீர்கள்?

இதற்கு என்னிடம் இருப்பது ஒரு பதில் தான். அது என் நீண்ட காலக் கனவும் கூட அறிவிப்புத் துறைதான் அந்தக் கனவு.


ஒரு இலக்கியப் படைப்பாளியான நீங்கள் ஏனைய படைப்பாளிகளுக்கு கூற விரும்புவது என்ன?

நமது படைப்புகள் ஒவ்வொன்றும் நாளைய தலைமுறைக்கு ஓர் சிறந்த வழிகாட்டுதலாக அமைய வேண்டும். அத்துடன் தொன்மையும், புதுமையும், பெருமையும் மிகு நம் தாய் மொழி தமிழை உலகமே கொண்டாட வழி செய்தல் வேண்டும்


வாசிப்பு என்பது இன்றைய சமூகத்திடம் குறிப்பாக மாணவர்களிடம் மிகவும் அருகிவிட்ட ஒன்றாகக் காணப்படுகிறதே. இதுபற்றி ஆசிரியர் என்ற வகையில் உங்கள் கருத்து யாது?

இது முற்றிலும் உண்மையான கருத்து. இதனைச் சீர் செய்வதென்பது நவீன கால தொழில்நுட்ப அசுர வளர்ச்சிப் போக்கில் அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. எனினும் இரு வழிமுறைகளைக் கையாண்டால் இதனை ஓரளவுக்காயினும் சாத்தியப்படுத்தலாம். அதாவது பாடசாலை மட்டத்தில் நூலகத்தினூடாக மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த பல்வேறு செயற் திட்டங்களை முன்னெடுப்பது. மற்றது சமூக மட்டத்திலும் நூலக பயன்பாட்டிற்கான ஊக்குவிக்கும் நுட்ப முறைகளைக் கையண்டு மாணவர் வாசிப்புத்திறனை மேம்படுத்துவது. குறிப்பாக வாசிப்பதற்கான சந்தர்ப்பங்கள், ஆர்வமூட்டல்கள், பாராட்டுக்கள், கௌரவிப்புக்கள் வழங்கப்பட வேண்டும்


இலக்கிய உலகில் கற்றுக்கொண்டவற்றில் நீங்கள் வாசகர்களுக்குக் கூற விரும்புவது என்ன?

ஒவ்வொரு எழுத்தாளனும் பல்வேறு இடர்களை அனுபவித்தே ஒவ்வொரு நூலையும் வெளியிடுகின்றான். அந்த நூல்களுக்கான சரியான அங்கீகரத்தை வாசகர்களே வழங்க வேண்டும். பிரபலமான எழுத்தாளர்களால் தான் சிறந்த நூல்கள் வெளிவரும் என்பதல்ல. புதிய எழுத்தாளர்களாலும் காத்திரமான நூல்கள் வெளிவருகின்றன. எனவே புதிய தரமான எழுத்தாளர்களை இனங்காட்டுவதும் உங்கள் தலையாய கடமையாகும்.


எழுத்துறையில் உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், வரவேற்புக்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

• வேலணைப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் 2019 ஆம் ஆண்டிற்கான இளங்கலைஞர் விருது
• இலங்கை இந்திய கவிதைக் குழுமங்களின் விருதுகள்
• கவிச்சிற்பி (தமிழமுது கவிச்சாரல் - இந்தியா)
• கவித்தீபம் (தடாகம் கலை இலக்கிய வட்டம் - இலங்கை )
• பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் விருது (இலக்கம் 83 கவியுலகப் பூஞ்சோலை - இந்தியா)
• இசைக் கவி (சிறந்த பாடலாசிரியர் விருது - ஊ...ல...ழ...ள - இந்தியா)
• கவித்தாமரை (டாக்டர் ஜீவாவின் கவிதைப பூங்கா - இந்தியா )
• இளங்கவி விருது (முத்தமிழ் களம் ஃ கம்பன் கவிக்கூடம் - இந்தியா)
• கவிச்சிகரம் (சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா - இந்தியா)

சக்தி எப். எம். மற்றும் சக்தி டீவி போன்ற இலங்கையின் முன்னணி வானொலி, தொலைக்காட்சிகளில் எனது நேர்காணல் இடம்பெற்றுள்ளது எனக்கு மன நிறைவாக உள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் இலக்கிய குவியத்தின் உறுப்பினர் உரிமை பெற்றதும் எனக்கு மகிழ்ச்சியான விடயமே. இதுதவிர 2019 அரச இலக்கிய விருது வழங்கல் விழாவிற்கான அழைப்பும் எனக்குக் கிடைத்தது.


வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?

எந்த ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களும் முழுமை பெறுவதென்பது வாசகர்களால் பேசப்படும் போதேயாகும். அவ்வாறே வாசகர்களுக்கு எழுத்தாளர்களை இனங்காட்டும் மிகப்பெரும் பங்கு ஊடகங்களுக்கும் இருக்கின்றது. அப்பணியை சிறப்பாக செய்திருக்கின்ற தினக்குரல் பத்திரிகைக்கும் பன்னூலாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் என் ஆத்மார்த்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மூச்சும், வாய்ப் பேச்சும், கவி வீச்சும்
தமிழையே உயர்வாய்ப் போற்றும் - என்றும்
தரணியில் தமிழைப் பறை சாற்றும்!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

19. கவிஞர் ஷெல்லிதாசன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.10.20

மூத்த கவிஞர் ஷெல்லிதாசன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


தங்களைப் பற்றிய அறிமுகத்தை தினக்குரல் வாசகர்களுக்காக கூறுங்கள்?

சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் நான். தந்தை இளையதம்பி பேரம்பலம், தாயார் பூரணம். இவர்களின் எட்டாவது புதல்வன் நான். ஆரம்ப காலத்தில் பல நில புலன்களுடன் இல்லறம் புகுந்த எனது பெற்றோர், சில துன்பியல் சம்பவங்களினால் இருக்க ஒரு துண்டு நிலமில்லா ஏழைகளாக்கப்பட்டமை எமது ஊரறிந்த சரித்திரமே. அப்படி நிர்க்கதியாக்கப்பட்ட ஏழைப் பெற்றோரின் பிள்ளையாகப் பிறந்தமையால் பசியை, பட்டினியை, இல்லாமையின் கொடுமையை, அதன் வலியை, கண்ணீரை, நிஜவாழ்வில் அனுபவித்தவன். எனவே அதற்கெதிராக வினையாற்றவென எழுதுகோல் எடுத்து வந்த சிறு கவிஞன் நான்.


தங்களது கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவங்கள் பற்றிக் கூறுங்கள்?

ஒரேயொரு உடுப்பைத் தோய்த்து உலர்த்திப் போட்டு, காலிலே செருப்பேதுமின்றி வெயிலில் 3 மைல் தூரம் நடையில் பள்ளி சென்று துன்பத்திற்கு எதிராகப் போராட சிறு வயதிலேயே கற்றுக்கொண்ட பாடம் முதன்மையானது. இப்படியாக எனது ஆரம்பக் கல்வியை எனது வீட்டுக்கு அண்மையில் உள்ள மெதடிஸ் மிஷன் பாடசாலையிலும், அதன்பின் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்று வெளியேறி யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் வர்த்தகக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தேன்.

தொழில் அனுபவங்களினைச் சொல்லப் போனால் கூலி வேலை, கடை மனேஜர் வேலை, தொழிலாளர் மேற்பார்வை வேலையென மிகவும் குறைந்த வேதனத்தில் கடமையாற்றி இறுதியில் எனது மூத்த சகோதரரின் உதவியால் திருகோணமலை நீர்ப்பாசன பெரும் தெருக்கள் திணைக்களத்தில் ஓர் அமையத் தொழிலாளர் மேற்பார்வையாளராக இணைந்து கந்தளாய், கிண்ணியா, ஆலங்கேணி, தம்பலகாமம் எனப் பல இடங்களில் பணிபுரிந்து இறுதியில்  திருகோணமலை நீர்ப்பாசனக் காரியாலயத்தில் பல காலம் அமைய எழுதுநராகக் கடமையாற்றி முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நிரந்தர நியமனம் பெற்று ஓய்வு பெற்றேன்.


தங்களது இலக்கியப் பிரவேசம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஒவ்வொரு மனிதனது வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும் சக்திகளாக அவனுக்கு அமையும் பெற்றோர், ஆசான்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் தாக்கம் செலுத்துகின்றன. அந்தவகையில் சிறுவயதில் ஓர் இந்தியப் பிராமணர் குடும்பத்தின் அரவணைப்பில் வளரும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. அது ஓர் தனிக்கதை. விரிவஞ்சி அதனை விளக்குவதற்கு முடியவில்லை.
அந்தப் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பாட்டியும் அவரது ஒரே மகனும் நூல்கள், சஞ்சிகைகளை வாசிப்பதில் பேரார்வம் கொண்டவர்கள். அதன் காரணமாக தமிழகத்தில் இருந்து அவ்வேளை வெளிவந்த வார, மாத சஞ்சிகைகளுடன் எமது நாட்டில் இருந்து வெளிவரும் கலைச்செல்வி, மல்லிகை, புதினம், ஈழநாடு, என்பனவும் அவர்களது வீட்டில் வந்து குவியும். அது ஒரு பொற்காலம். அந்த இலக்கியத் தடாகத்தில் நீந்தி வளர்ந்த மீன் குஞ்சாக நானானேன். அதேபோன்று எனக்குத் தமிழ்; கற்பித்த ஆசான், வித்துவான் வேந்தனாரின் அழகான கற்பித்தல் முறையும் இலக்கியத்தின் பால் ஓர் ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தியது.

இவற்றிற்கு மேலாக எனது பதும வயதில் ஈழத்து இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர்களாக விளங்கிய கே.டானியல், இளங்கீரன், சில்லையூரான், நீர்வை பொன்னையன், பெனடிக்டபாலன் என்போருடன் எமது மானசீகக் குருவும் வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடியுமான தோழர். மு.கார்த்திகேசனின் அரசியல் வகுப்புக்களும் என்னை ஓர் இலக்கியவாதியாக மாற்ற உந்து சக்தியாக விளங்கின என்றால் மிகையாகாது. அதற்கேற்றவாறு தமிழக, ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கியங்களை கற்கும் சந்தர்ப்பம் எனக்குத் தானாகக் கனிந்தது. இப்படியாக நான் இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டவனாக வளர்ந்த வேளை இடதுசாரி இயக்க எழுத்தாளர்களின் அறிமுகமும் அவர்களது படைப்புக்களை வாசிக்கும் ஆர்வமும் எனக்குள் முகிழ்ந்தது.


"ஷெல்லிதாசன்" என்பது தங்களது புனைப் பெயர் என்று நினைக்கிறேன். இப்பெயரை தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவோ?

ஆமாம் ஷெல்லிதாசன் எனது புனைப் பெயரே. கனகரத்தினம் எனது இயற்பெயராகும். ஏன் நான் ஷெல்லிதாசன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். அது ஓர் தற்செயலான தேர்வு. நான் தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் வேளை 'கன்னி' என்ற றோணியோ சஞ்சிகையின் ஆசிரியராகப் பணிபுரியும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்தச் சஞ்சிகையில் பலரின் ஆக்கங்கள் வெளிவந்தன. ஆசிரியரான எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் பி.கே.ஆர் என்ற பெயரிலேயே ஷஷகன்னி'யில் எழுதினேன். ஆனால் அந்தப் பெயரைவிட ஓர் அழகிய பெயரைத் தேடியபோது பாரதியாரின் இளமைக்கால புனைப்பெயரான ஷெல்லிதாசன் எனும் புனைப்பெயர் என்னைக் கவர்ந்தது. ஏதோவொரு மனத்துணிவில் அந்த மகாகவியில் புனைப்பெயரை நான் தத்தெடுத்துக் கொண்டேன். அந்த வகையில் அந்த மகாகவி என்னுள் என்றும் வாழ்ந்து ஆசி தருவதை நான் உணர்ந்திருக்கின்றேன்.


தங்களது முதல் கவிதை எவ்வாறான சூழ்நிலையில் உருவானது?

'கன்னி' எனும் சஞ்சிகையின் ஆசிரியராக நான் வந்த சந்தர்ப்பமும் இடதுசாரி இலக்கிய ஆளுமைகளின் தொடர்புகளும் 'தோழா புறப்படு' என்னும் முதற் கவியைப் படைக்க எனக்கு உந்து சக்தியாக அமைந்தன. அது எனது பத்திரிகையிலேயே முதலில் வெளிவந்து இரட்டிப்பு மகிழ்ச்சியைச் தந்தது.


இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்களைப் பற்றி கூறுவீர்களா?

இதுவரை 05 நூல்களை வெளியிட்டுள்ளேன். 'செம்மாதுளம்பூ' கவிதை நூல் நீங்களும் எழுதலாம் வெளியீடாக 2010 இலும், 'நகர வீதிகளில் நதிப்பிரவாகம்' எனும் கவிதை நூல் ஜீவநதி வெளியீடாக 2013 இலும் 'வண்ண வண்ணப் பூக்கள்' சிறுவர் பாடல் நூல் மகுடம் வெளியீடாக 2015 ஆம் ஆண்டும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அனுசரணையுடன் 'எங்களில் ஒருத்தி' எனும் சிறுகதை நூல் 2017 இலும் பல்கலைச் செல்வி 'இராஜம் புஷ்பவனம் படைப்புக்கள்' எனும் நூல் எனது தொகுப்பு நூலாக அதே ஆண்டிலும் வெளிவந்தது.



தங்களது பெரும்பாலான கவிதைகளில் பேசு பொருட்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

கவிதையை வாசிப்பவர்கள் என்னடா கவிதை இது எனப் பேசாத வகையில் எனது கவிதைகளின் பேசு பொருட்கள் அமைய வேண்டும் என்பதில் நான் கவனமாக உள்ளேன். சமூக அடக்கு முறை, சாதியம், சமூகச் சீர்கேடுகள், இன மத முரண்பாடுகள், இல்லாமை என்பவற்றிற்கு எதிராக கருத்துக்களை கவிதைகளில் முதன்மைப்படுத்துவது கவிஞர்களின் முதற் கடமை என்ற வகையில் எனது எழுத்துக்களும், அதன் பாதைவழி பயணம் செய்கின்றன.


'செம்மாதுளம்பூ', 'நகர வீதிகளில் நதிப்பிரவாகம்' போன்ற பெயர்களை தங்களது நூல்களுக்கு சூட்டியமைக்கான விசேட காரணம் என்ன?

செம்மை அழகானது உழைப்பவனின் வண்ணம் அது. 'செம்மாதுளம்பூ' பாட்டாளி வர்க்கத்தின் வண்ணக்கொடியை நினைவூட்டுவதால் அந்தப் பெயர் எனது முதற்கவிதை நூலின் பெயரானது. நகர வீதிகளில் நதி ஓடுவதில்லை. அந்த வீதிகளில் மக்கள் எழுச்சி வெள்ளம் பிரவாகித்து ஓட வேண்டும். அநீதி, அடக்குமுறை, சுரண்டல்களை கொடிய மனித மிருகங்களை எல்லாம் அந்தப் புரட்சி வெள்ளம் அடித்து அள்ளியெடுத்து கடலுக்குள் கொண்டு சேர்த்து நரகமாகிவிட்ட நகரங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது அந்தப் பெயரின் தார்ப்பரியமாகும்.


ஒரு படைப்பாளன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

ஒரு படைப்பாளன் தன்னை ஒரு வித்தியாசமான புத்திஜீவி என்றோ சமுதாயத்திற்கு போதிக்க வந்த ஒரு போதகனாகவோ தன்னைக் கருதுவதை முதலில் கைவிட வேண்டும். தான் கூறும் கருத்துக்கள் ஊருக்கு உபதேசம் தனக்கல்ல என்ற மாதிரி அமையாது தான் செல்லும் வழி தானும் நடந்து காட்ட வேண்டும்.

உங்களது சிறுகதை ஆக்கத்திற்கான பின்னணியாக இருந்த விடயங்கள் எவை? சிறுகதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகிறீர்கள்?
சிறுகதை மட்டுமல்ல கவிதையும் கூட ஒரு படைப்பாளியிடையே அவ்வப்போது தாக்கம் செலுத்தும் காட்சிகள், சம்பவங்கள், என்பவை அதற்கான அருட்டுணர்வை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் எனது வாழ்வு அனுபவங்களை கவிதையாக வடித்த போதும் அவற்றை சற்று விரிவுபடுத்திச் சொல்லும் எண்ணம் எனக்குள் தோற்றம் பெற்றதால் அந்தக் கருத்துக்களை சிறுகதைகளாகப் படைக்க முயன்றேன். அது எனக்கு வெற்றியளித்தது என்று நான் கருதுகின்றேன்.


கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, சிறுவர் இலக்கியம் போன்ற வடிவங்களில் நீங்கள் மிகவும் இரசிப்பது எதை?

நல்லதோர் கேள்வி. எதையும் வாசித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையுள்ளவர்களுக்கு வடிவங்கள் ஒரு பொருட்டல்ல. தற்போதைய அவசர யுகத்தில் வாசிப்பதில் அதிக நேரத்தை செலவு செய்ய முடியாத நிலை  பலருக்கு ஏற்படுகிறது. அந்தவகையில் எனது வாசிப்பில் முதலில் கவிதையும், அடுத்ததாக சிறுகதையும் இடம்பிடிக்கின்றது. ஆயினும் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை வடிவங்களும் எனது அபார இரசிப்புத் தன்மைக்கு உட்பட்டவையே.


முற்போக்கு எழுத்துக்கள் பற்றி ஒரு முற்போக்கு எழுத்தாளராக என்ன சொல்வீர்கள்?

சமூக மேம்பாட்டுக்காகவும், சமுதாய கட்டமைப்பை முன்னோக்கி நகர்த்தும் எழுத்துக்கள் யாவும் முற்போக்கு எழுத்துக்களே. ஜனரஞ்சகம், பின் நவீனத்துவம் என்ற போர்வையில் நாசூக்காக சமுதாயத்தை சீரழிக்கும் கருத்துக்களை பரப்பும் இலக்கியங்கள் பிற்போக்குத் தன்மை கொண்டவை. அவை நிராகரிக்கப்பட வேண்டியவையாகும். 'சமஷ்டி' என்ற சொல் எப்படி பேரினவாதிகளுக்கு கசப்பானதோ, அதேபோன்று முற்போக்கு என்று சொன்னால் சிலருக்கு அலர்ஜி எடுக்கிறது. கசப்பாக இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம்?

உங்களது எழுத்தில் எவ் ஆளுமையின் தாக்கம் காணப்படுகின்றது? 

எனது இளமைக் காலத்தில் நான் சந்தித்த அரசியல், இலக்கிய ஆளுமைகளின் தாக்கம் எனது எழுத்தின் பாதையை தீர்மானித்தன என்றால் மிகையாகாது. எழுத்தாளர்களான கே.டானியல், இளங்கீரன், சில்லையூரான், முருகையன், நீர்வை பொன்னையன், பெனடிக்ட் பாலன் போன்றோரின் எழுத்துக்களும் வடபுலத்து அரசியல் ஆளுமையாக அன்று விளங்கிய மு. கார்த்திகேசன் அவர்களது பேச்சுக்களும், அரசியல் வகுப்புக்களும் என்போன்ற இளைஞர்களை வழிநடத்தி ஆளுமையை செலுத்தின.


தங்களது படைப்புக்கள், சமூகத்திற்கு தேவையான விடயங்களை எடுத்துரைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?

அப்படி நினைத்தே எழுதுகின்றேன். ஆனாலும் அதன் தேவைப்பாட்டை வாசகர்களால் தான் தீர்மானிக்க முடியும்.

உங்களால் இலக்கிய உலகில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது உண்டா?
நான் இலக்கிய உலகிற்கு வந்ததே ஒரு மறக்க முடியாத சம்பவம். ஒரு கவிஞனாக, சிறுகதை ஆசிரியனாக, பாடலாசிரியனாக, சிறுவர் இலக்கிய படைப்பாளியாக வருவேனென நான் எண்ணியது கிடையாது. அப்படியாக நான் உருவெடுத்ததை ஒரு மறக்க முடியாத சம்பவமாகவே நான் கருதுகின்றேன்.


'வண்ண வண்ணப் பூக்கள்'  என்ற தங்களது சிறுவர் பாடல் நூலுக்கு சாகித்திய விருது கிடைத்தமை பற்றி என்ன சொல்வீர்கள்?

எனது தமிழாசிரியர் அமரர் வித்துவான் க. வேந்தனார் ஆகும். அவரிடம் பயின்ற வேளை, அவர் எழுதிய சிறுவர் பாடல்களை சுடச்சுட எமக்கு வாசித்துக் காட்டி எம்மை குதூகலத்திற்கு உள்ளாக்குவார். அவரது பாடல்களும், அவர் சொல்லித் தந்த தமிழும் என்னையும் ஒரு கவிஞனாக, சிறுவர் பாடல்களைப் புனையும் ஆற்றல் உள்ளவனாக வளர்த்தன. அதுவே வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்து விருதையும் வென்றது. எனது ஆற்றலுக்கு வழிவகுத்த எனது குருவுக்கே எனது சாகித்திய விருது சமர்ப்பணம்.


வானொலியில் மெல்லிசை பாடல்கள் எழுதிய அனுபவங்கள் பற்றி குறிப்பிடுங்கள்? பாடல்கள் எழுதும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை?

இலங்கை வானொலியில் ஒரு காலகட்டம் மெல்லிசை பாடல்களின் பொற்காலமாக திகழ்ந்தது. பல நல்ல இசையமைப்பாளர்களுடன் பாடகர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியதில் இலங்கை வானொலியின் பங்கு அளப்பரியது. திருகோணமலையில் எனது அயல் வீட்டில் இலங்கை வானொலி இசையமைப்பாளர்களில் ஒருவரான என். இம்மானுவேல் அவர்கள் வசித்து வந்தார்கள். அவர் அடிக்கடி கொழும்புக்குச் சென்று வானொலியில் பல மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைத்து வழங்கி வருவதுண்டு. திடீரென ஒரு நாள் தான் இசையமைத்துப்பாட சில மெல்லிசைப் பாடல்களை எழுதித்தரும்படி கூறினார். ஏற்கனவே வானொலிக்கு சில மெல்லிசைப் பாடல்களை எழுதிய அனுபவத்தை அறிந்து அவர் என்னை அணுகினார். நானும் அவர் வழங்கிய சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியதோடு இசைவாணர் கண்ணனது இசையமைப்பில் 'புதுரோஜா மலரே' போன்ற சிறந்த பாடல்களுடன் தமிழ்நாடு (விஸ்வநாதன்) இராமமூர்த்தி அவர்களின் இசையமைப்பில் ஒரு பாடலும் எழுதும் பாக்கியம் கிடைத்தது.

ஆரம்ப வரிகள் ஒரு பாடலைத் தூக்கிவிடுகின்றன. அதேபோன்று இசையமைப்புக்கு ஏற்ற அழகிய வரிகளும் மக்களின் இரசனையை கவரும் கருத்துக்களும் பாடல்களை நாம் எழுதும் போது கருத்தில் கொள்ளவேண்டியவையாகும்.


எழுத்துத் துறைக்குள் நுழைந்ததைப் பற்றி தற்போது என்ன நினைக்கின்றீர்கள்?

உண்மையில் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே நான் எண்ணுகின்றேன். தானுன்டு தன் வாழ்வு உண்டு என வாழ்ந்து மடிந்து மறையாமல் ஏதோ சமுதாயத்திற்கு நானும் நல்லதைச் செய்தேன்.. செய்து வருகிறேன்.. என்ற மன ஆறுதலை எழுத்துத்துறை எனக்குத் தந்ததோடு பல எழுத்தாளர், கவிஞர் போன்றோரின் அறிமுகமும் அதனால் ஏற்பட்டது என எண்ணும் போது ஒரு மனத்திருப்தி ஏற்படுகிறது.


"பல்கலைச் செல்வி இராஜம் புஸ்பவனம் படைப்புக்கள்" எனும் நூலின் தொகுப்பாசிரியர் என்ற வகையில் என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?

ஒரு காலகட்டத்தில் இராஜம் புஸ்பவனம் என்ற பெண் படைப்பாளியை அறியாதவர்கள் இல்லை என்ற வகையில் அவர் மிகவும் ஆர்வத்துடன் கவிதை, சிறுகதை, வில்லிசை, வானொலி நாடகங்கள் என பல்வேறுபட்ட வகையில் எழுதிப் பலரும் அறியப்பட்டவராகத் திகழ்ந்தார். அப்படி எழுதிக் குவித்தவர் தனது ஆக்கங்களை நூல் உருவாக்கும் முன்னரே அமரத்துவம் எய்திவிட்டது பெரும் குறையாக அமைந்துவிட்டது. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவரது ஒரே மகள் தனது தாயாரின் ஆக்கங்களை நூலுருவாக்க வேண்டுமென்று பெருமுனைப்புடன் செயற்பட்டார். அதற்கான பணியை நிறைவேற்ற அவரது சிறிய தந்தையாரான என்னை அனுப்பி அணுகிய போது அவரது வேண்டுகோளை ஏற்று அவரது நிதி அனுசரணையுடன் மேற்படி நூலின் தொகுப்பாசிரியராகி அதனை நான் வெளிக்கொண்டு வந்தேன்.


ஊடகங்கள் மூலம் தங்களது படைப்புகளுக்கு போதிய களங்கள் கிடைக்கின்றனவா?

மிகத் தாராளமாக கிடைக்கின்றன. இலங்கையில் இருந்து வெளிவரும், வெளிவந்த சிற்றிதழ்களான ஞானம், ஜீவநதி, நீங்களும் எழுதலாம், பூங்காவனம், தாயக ஒலி, செங்கதிர், மகுடம், கவிஞன், தாயகம், ஓசை, பேனா என்பவற்றுடன் தினக்குரல், தினகரன், சுடர்ஒளி, வீரகேசரி என்பனவும் எனது எழுத்து முயற்சிகளுக்கு களம் அமைத்துத் தருவதை இங்கு நன்றியுடன் கூறுவதில் பெருமையடைகின்றேன்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதற்குப் பதிலாக எனது செம்மாதுளம்பூ கவிதை நூலின் ஆரம்பக் கவிதையின் சில வரிகள் இதோ...

'சோம்பல் என்பதை நானறியேன், எந்த
சொந்தத்தை நம்பியும் நான் வாழேன்
வீழும் வரையும் நானோயேன் அதற்கு
வேண்டும் திடங்கொள் மனசிருக்கு.'


கலை இலக்கியத் துறையில் தங்களது படைப்புகளுக்கு கிடைத்த பாராட்டுகள், பரிசுகளைப் பற்றி குறிப்பிடுங்கள்?

எனது சிறுவர் பாடல் நூலான வண்ண வண்ணப் பூக்கள் அரச சாகித்திய விருது, வவுனியூர் உதயனானர் விருது என இரு விருதுகளைப் பெற்றது மன நிறைவைத் தருகின்றது. தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது விழாவில் கலைமாமணி விருதையும் அண்மையில் பெற்றேன். அதேவேளை மேலும் பல விருதுகளும் பாராட்டுக்களும் எனக்குக் கிடைத்துள்ளன. அதையெல்லாம் சொல்லி பெருமை பேசுவதை நான் விரும்பவில்லை.


மூத்த எழுத்தாளர் என்ற வகையில் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை  என்ன?

முதலில் எனது ஆலோசனையை இன்றைய இளம் எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறி. எவரும் எவருக்கும் ஆலோசனை வழங்குவதைத் தவிர்ப்பதே தற்காலத்தில் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்பது எனது கருத்து.


இறுதியில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஆரம்பகாலம் முதல் இற்றைவரை எனது இலக்கியப் பணி தொடர பக்கத் துணையாக விளங்கிவரும் எனது துணைவியாருக்கும் (அவரும் எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டவர்.) என்போன்ற பல எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு அவர்களின் திறமைகளை வெளியுலகு அறிய முனைப்புடன் செயற்படும் தங்களுக்கும் எனது பாராட்டுக்களுடன் நன்றியையும் இங்கு கூறுவதுடன் அதற்கெல்லாம் உற்ற துணையாக விளங்கி அவற்றை அவ்வப்போது சிறந்த முறையில் பிரசுரித்து எம்மைக் கௌரவித்து வரும் ஞாயிறு தினக்குரலுக்கும் அதன் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இறுதியில் நான் இங்கு பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

18. ஜெறாட் நோயல் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.08.04

ஜெறாட் நோயல் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப்பற்றி சிறியதொரு அறிமுகத்தை தாருங்கள்?

என்னுடைய பெயர் ஜெறாட் நோயல். என்னுடைய பிரதேசம் யாழ்ப்பாணம். வீட்டிலே மொத்தமாக 7 பேர். நான் மூத்த பிள்ளை. 02 தம்பி. 02 தங்கச்சி. அழகான குடும்பம். எந்தவொரு மனிதனுடைய வாழ்க்கையைப் பார்த்ததாலும் அவனுடைய வாழ்க்கையின் தொடக்கத்தில் எப்படியும் பல கஷ்டங்களை எதிர்கொண்டே பெரும்பாலானவர்கள் வளர்ந்திருப்பார்கள். அதேபோலவே என்னுடைய வாழ்விலும் அதைவிட கூடுதல் என்றே கூறுவேன். அவ்வளவு தூரம் நான் கடினப்பட்டே இன்று ஒரு நடிகனும், பாடகனும் ஆனேன்.

இன்றும் என்னுடைய வாழ்விலே பல சவால்கள் காணப்படுகின்ற போதும் நான் மனம் கோணவோ சோர்ந்து போகவோ இல்லை. நூறு வீத விடா முயற்சியுடனும் ஏன் வெறித்தனத்துடனும் பயனிக்கின்றேன். நான் ஒரு கலைஞனாக இன்று வளர்ந்திருக்கின்றேன் என்றால் பலதரப்பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்தே வளர்ச்சி பெற்றேன்.

என்னுடைய இந்த வளர்ச்சியில் பெரிய பகுதி எனது அம்மா மற்றும் நண்பர்களையே சேரும். அவர்கள் இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் பயணித்து இருக்கவே முடியாது. மிக முக்கியமாக உயிர் வாழும் தெய்வமாகிய என்னுடைய அம்மா அவர்களின் நூறு வீத ஆசீர்வாதமும் அன்பும்தான் இன்னும் எனக்கு வலுச் சேர்க்கின்றது. அத்துடன் அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் உளவியல் கற்கைநெறியை தற்போது பூர்த்தி செய்து ஓர் உளவியலாளனாக பொது சேவைகள் செய்தும் வருகின்றேன். இப்படித்தான் நான் மெது மெதுவாக வளர்ச்சியடைந்தேன்.


உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றியும் பாடசாலைக் காலங்களில் கலைத்துறையில் உங்களது ஈடுபாடு பற்றியும் குறிப்பிடுங்கள்?

பாடசாலைக் காலங்களில் பாடசாலை மட்டத்திற்குள்ளே பாடல், நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலுமே என்னால் சரியான தருணங்களில் கால் ஊன்ற முடிந்தது. இருந்த போதும் அதற்கு அப்பால் என்னால் செல்ல முடியவில்லை. மாகாண மட்டம், மாவட்ட மட்டம் இத்தோடு நின்று விடும். எனது கனவு தேசிய மட்டம் செல்ல வேண்டும் என்பதுதான். ஆனால் என்னால் செல்ல முடியாது போய்விடும். காரணம் என்னுடைய குடும்ப வறுமைதான் எனக்குள் இருந்த கலைஞனையும் முடங்கச் செய்தது. யுத்தமும் ஒரு காரணம்.

பாடசாலைக் கல்வி முடிந்த பின்பு வெளியே வந்ததும் என்னால் கலைத் தாயை விட்டுக் கொடுக்க முடியவில்லை. கலைத் தாகம் தீர்ந்தாக இல்லை. மிகவும் சவாலாக இருந்தது என்னை விடவில்லை. என் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து போராடினேன். பட்ட கஷ்டத்திற்கு இறைவன் துணையால் இருந்த நிலையைவிட ஓரளவு பயன் கிடைத்தது. பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினேன். பல விருதுகளும் கிடைக்கத் தொடங்கின. தேசிய விருது வாங்க வேண்டும் என்று  நம்பிக்கையோடு பயணிக்கின்றேன். இது தான் என் கனவின் பயணம்.


நடிகனாக வர வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

பாடசாலைக் காலங்களில் பாடசாலையிலும் பொதுவெளி இடங்களிலும் பலரால் அவமதிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறான ஏமாற்றுதல்களே நாளடைவில் என்னை நடிகனாகவும், பாடகனாகவும், நடனக் கலைஞராகவும் உருவாக்கியது. உதாரணமாக ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது பகிர்ந்து கொள்கின்றேன். சந்தர்ப்பத்தை எமக்கு தருவது போல் இறுதி நாள் மட்டும் தந்துவிட்டு அடுத்த நாள் நிகழ்ச்சியை மேடையேற்றும் போது என்னை முன் வரிசையில் நிற்கக்கூட அனுமதிக்கமாட்டடார்கள். கடைசி வரிசைக்கு அனுப்பிவிடுவார்கள்.

பாடலில் ஒரு அனுபவம் எப்பவும் மறக்கவே முடியாது. 6 மணிக்கு பயிற்சி என்பார்கள். நான் 4 அல்லது 4.30 மணிக்கு முன்பே சென்றுவிடுவேன். காரணம் எல்லாவற்றிலுமே ஒரு அதீத ஈடுபாடுதான். ஒரு 10 நாட்களுக்கு மேல் எனது பயிற்சியைப் பார்த்துவிட்டு 10 நாளுக்கு பின் பெரிய பாடகர் வந்ததும் ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லாமல் எனக்கு கொடுத்த பாடலை அவரையே பாட வைத்தது. இப்படி பல பல புறக்கணிப்புக்களே என்னை இப்படி உருவாக்கியது.


உங்கள் குடும்பத்தினர் நீங்கள் நடிகன் என்பதை எப்படி பார்க்கின்றனர்? ஆதரவு கொடுக்கின்றனரா?

ஆகா இதென்ன கேள்வி? என்னுடைய குடும்பம்தான் எனக்கு முதல் நூறு வீத ஒத்துழைப்பும். அதற்கு அடுத்துத்தான் ஏனைய உறவுகள். இன்று என்னுடைய ஒவ்வொரு அசைவுகளிலும் என்னோடு கூட இருப்பது என் அம்மாவே. நான் நினைக்கின்றேன் என்னுடைய குடும்பம் போல எந்த குடும்பமும் இந்த இலங்கை நாட்டிலே ஒரு கலைஞனுக்கு இவ்வளவு ஒத்துழைப்பினை வழங்க முடியாது என்று. காரணம் வீட்டிலே நான் தான் மூத்தவன். சொந்த வீடும் இல்லை. பார்க்கிற நேரம் எல்லாம் நடிப்பு நடிப்பு எண்டு தான் திரிகிறேன். இனி எல்லாம் உங்களுக்கு புரியுமென்று நினைக்கின்றேன். இதுவரைக்கும் நீ ஏன் வேலைக்கு போகவில்லை என்று ஒரு நாள் கூட கேட்டது இல்லை. என்னுடைய அம்மா அப்பா என் உடன் பிறந்த சகோதரங்கள் கடவுள் எனக்கு கொடுத்த உன்னத சொத்து. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் கடவுளே இவர்களே எனக்கு இதே உறவாகக் கிடைக்க வேண்டும்.


நீங்கள் இதுவரையும் எத்தனை படைப்புக்களில் பணியாற்றியுள்ளீர்கள் அவற்றை கூறுங்கள்?

இந்த 10 வருட காலப் பகுதிக்குள் 52 படைப்புக்களை என்னால் செய்ய முடிந்துள்ளது. 08 சிறந்த நடிகர் விருதுகள், 02 சிறந்த பாடகர் விருது தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்.

* வீடியோ பாடல் - 19
* முழு நீளத்திரைப்படம் - 04
* குறுந்திரைப்படம் - 08
* தொலைக்காட்சி நாடகம் நெடுந்தொடர் - 07
* விளம்பரம் - 14

வீடியோ பாடல் - 19

2012 :- உண்மை காதல் வீடியோ பாடல்
2012 :- TCNL TV – Bishop House christion video Song
2013 :- மஞ்சப் பூவே வீடியோ பாடல்
2014 :- என் இதயம் யாருக்கு தெரியும் கிறீஸ்தவ வீடியோ பாடல்
2014 :- காதலி மணமகளாக விற்கப்படுகின்றாள் வீடியோ பாடல்
2014 :- நீ தந்த காயங்கள் வீடியோ பாடல்
2015 :- பூவிழி வீடியோ பாடல்
2015 :- உயிர் வரை ஏனோ வீடியோ பாடல்
2016 :- றோமியோ வீடியோ பாடல்
2016 :- ஊதா பூவு கண்ணு (OPK)
2016 :- கதிர்காம கந்தன்
2016 :- என் சகியே (படத்தொகுப்பில்)
2016 :- கதிர்காம கந்தன்
2017 :- ருத்ரன்
2017 :- தின்னவேலி குட்டி
2017 :- I Miss You Jaffna
2017 :- ஏழரை சனி
2017 :- சாந்தமான பொண்ணு
2018 :- கானல் தேவதை
2018 :- Maimma Beat - Sinhala Version

நீளத்திரைப்படம் - 04

2011 :- என்னுள் என்ன மாற்றமோ - முழு நீளத்திரைப்படம் (நண்பனாக)
2015 :- மனசுக்குள் ஒரு மழைச்சாரல் (நோர்வே சர்வதேச தமிழ் திரைப்பட விருது விழாவில சிறந்த நடிகர் விருது எனக்கு கிடைத்துள்ளது)
2015 :- கண்டம்
2016 :- திசை

குறுந்திரைப்படம் - 08

2007 :- உன்னைத் தேடி - குறுந்திரைப்படம் (சிறு பாhத்திரம்)
2011 :- கெட்டவன் - குறுந்திரைப்படம் (இன்னும் வெளியிடப்படவில்லை)
2013 :- 1023 வருடங்கள் - குறுந்திரைப்படம்
2013 :- தூண்டில்கள்  - குறுந்திரைப்படம்
2015 :- உன் விழிகளில் விழுந்த நாள் முதல் - குறுந்திரைப்படம்
2016 :- கொடூரன் - குறுந்திரைப்படம்
2016 :- கறுப்பு மணி - இந்தியா
2017 :- ஒரு கதை சொல்லட்டுமா

தொலைக்காட்சித் தொடர் நாடகம் - 07

2013 :- சித்திரம் - நாடகம் நெடுந்தொடர் (ரூபவாகினி நேத்ரா சனல்)
2015 :- நிழல் - நாடகம் நெடுந்தொடர் (சக்தி தொலைக்காட்சி)
2015 :- 13B நீ நான் பேய் - நாடகம் நெடுந்தொடர் (சக்தி தொலைக் காட்சி)
2016 :- கிருமினல் (சக்தி தொலைக்காட்சி)
2016 :- காக்க காக்க (ராஜ் ரீவி தென்னிந்தியா தொலைக்காட்சி)
2017 :- முதல் கனவே (Dialog TV dialog Web Series)
2017 :- கௌதமி (ரூபவாஹினி - நேத்ரா தொலைக் காட்சி)

விளம்பரம் - 09

2010 :- Andra திருமண மடல் விளம்பரம்
2011 :- நெல்லி சோடா விளம்பரம்
2015 :- புடவை கடை (TOP PAZ) விளம்பரம்
2015 :- ராம் அழகுக் கலை கடை விளம்பரம்
2015 :- Raam Beauti Center (PS)
2016 :- Asin Paint
2016 :- Mobitel
2017 :- Show Room Add Killinochi Town
2017 :- Dan TV Add
2017 :- Arul Global Express  Trincomalle
2017 :- Digital Image – Prints
2018 :- Digital Image – Prints
2018 :- Maliban Tea (TVC)
2018 :- Causeway Paints (TVC)



உங்களது கலையுலகப் பிரவேசம் எவ்வாறு ஏற்பட்டது?

இலங்கையைப் பொறுத்தவரையில் திரைப்பட வாய்ப்புக்கள் தென் பகுதியிலேயே மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. வட பகுதிகளில் அது மிகவும் மங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது என்றே கூறுவேன். இருந்தபோதிலும் சில சில சந்தர்ப்பங்களில் மட்டுமே சந்தர்ப்பங்கள் கிடைப்பதனையும் காண முடிகின்றது.

இப்படி இருக்கையில் 2009 ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் (AAA.Movies International) திரைப்பட நிறுவனம் திரைப்படத் துறையில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று விளம்பரப்படுத்தி இருந்தது. அப்போது எனக்கு இருந்த ஆர்வம், சாதிக்க வேண்டும் என்ற வெறி நண்பன் ஒருவரின் உதவியுடன் என்னை அங்கு கொண்டு போய் சேர்த்தது. 350 க்கும் மேற்பட்டோர் நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பங்களை அனுப்பி இருந்தனர். இருப்பினும் இறைவனின் திட்டமோ என்னவோ எனக்கே அச்சந்தர்ப்பம் வந்து சேர்ந்தது. நான் இறைவனில் அதீத நம்பிக்கை கொண்டவனும் கூட. நான் முதன் முதலாக தொலைக்காட்சியில் தோன்றி என்னை வெளி உலகிற்கு அடையாளம் காட்டியது, Andra Wedding Card விளம்பரம் தான்.

அதனைத் தொடர்ந்து "பனைமரக்காடு" திரைப்படத்தில் கதாநாயகனின் நெருங்கிய நண்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். தொடர்ந்து நெல்லி சோடா என்று 02 விளம்பரங்களில் நடித்து விட்டேன். இதனைத் தொடர்ந்தே ஏனைய படங்களும் நான் நடிப்பதற்கு வந்து சேர்ந்தது. Andra Wedding Card விளம்பரம் சூட்டிங் செய்யும் போது பணியாற்றிய நண்பன் ஷமிதன் 02 வருடங்கள் கழித்து என்னை தொடர்பு கொண்டு தான் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் என்னை நடிக்கவும் கேட்டுக் கொண்டார். பின்பு நானும் அதிலே நடித்துக் கொடுத்தேன்.

"1023 வருடங்கள்" திரைப்படம் எனக்கோர் பாரிய மைல் கல். இப்போது 1023 வருடங்கள் திரைப்படம் இதிலே நடித்ததற்காக எனக்கு சிறந்த குநற்திரைப்படத்திற்கான சிறந்த நடிகருக்குரிய விருதையும் பெற்றுக்கொண்டேன். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பல குறுந்திரைப்பட இயக்குநர்கள் தங்களினுடைய திரைப்படங்களில் நடிப்பதற்கும் என்னிடம் கேட்டுள்ளனர். இவ்வாறுதான் எனக்கு திரைத்துறையில் முதல் வாய்ப்புக் கிடைத்தது. இந்தத் திரைப்படம் இப்போது பாரிய வரவேற்பைப் பெற்று திரையிலே ஓடி, பலரது பாராட்டையும் பெற்று என்னை நிலை நிறுத்தியுள்ளளது. என்னால் நடிக்க முடியும் என்ற நல்லதோர் பெயரையும் பெற்றுக் கொடுத்த திரைப்படம் இது. இப்படித்தான் தற்போது பல சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைக்கின்றன. நான் செய்கின்ற அனைத்து படைப்புக்களையும் அவை பற்றிய தகவல்களையும் முகநூலிலே பதிவு செய்கின்றேன். இதனை அனைவருமே பார்க்கின்றனர். பல சந்தர்ப்பங்கள் அமைகின்றன.


நடிப்புத் துறையில் உங்களுக்கென்ற ஒரு தனிப்பாதையை அல்லது தனி வழியை ஏற்படுத்திக் கொள்வீர்களா? 

கண்டிப்பாக! ஓவ்வொரு கலைஞனுக்குள்ளேயும் அந்த எண்ணம் கண்டிப்பாகவே இருக்கும். என்னை பொறுத்தமட்டில் அந்த எண்ணம் இருந்தால் தான் ஒரு கலைஞன் மிக அதிகமான தூரம் பயணிக்க முடியும் என நம்புகின்றேன். உண்மையிலேயே நான் அந்த வழியைத்தான் ஏற்படுத்திக் கொள்கின்றேன்.


அதுபோல எவற்றிலெல்லாம் பாடியுள்ளீர்கள்?

2003 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை யாழ். தூய மரியன்னை பேராலயத்தில் பாடகராக இன்றும் இருக்கின்றேன். 2007 ஆம் ஆண்டு ஒரு பாடல் போட்டியிலே எங்களினுடைய பாடகர் குழாம் போட்டியிட்டு 01 ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. அதிலே எல்லோருக்கும் விருது கிடைத்தது. அதுதான் என்னுடைய வளர்ச்சியும் ஆரம்பமும் பாடகனாக. அதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்டத்தை மட்டும் ஒன்று திரட்டி அரசினால், ஷஷவடக்கின் நட்சத்திரம்|| பாடல் போட்டி இடம்பெற்றது. அதிலே பங்குபற்றி இறுதி 05 சுற்று மட்டும் வந்தமை எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்துதான் நான் இசைக் குழுக்களில் பாடும் வாய்ப்பும் அதிகரித்தது. நான் முதன் முதலில் இணைந்த இசைக் குழு ஷஷஜங்கரன்|| இசைக்குழு தற்போது 06 இசைக் குழுக்களுக்கும் மேல் பாடி வருகின்றேன்.

இதுவரைக்கும் "மன்னியும்", "இழப்பினும் சக்தியுண்டு" இறுவெட்டுக்களில் பாடியுள்ளேன். பாடிக்கொண்டும் இருக்கின்றேன். 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட யாழ் நட்சத்திரம் - 2014 பாடல் போட்டியில் பங்கு தென்னிந்திய இசையமைப்பாளர் தினாவிடம் இருந்து சிறந்த பாடகருக்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டேன்.

2014 ஆம் ஆண்டு டேன் தொலைக்காட்சி ஒருவருடமாக நடாத்திய 'பாடுங்கள் சொல்லுங்கள்' பாடல் போட்டியில் 380 க்கும் மேற்பட்ட பாடகர்களுடன் பாடியிருந்தேன். இதுவரைக்கும் 40 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளேன். மோட்டார் சைக்கிள் எனக்கு முதல் பரிசாகக் கிடைத்தது. நிகழ்ச்சியில் பங்கு கொண்டு 40 பாடலுக்கு மேல் தொடர்ந்து பாடியுள்ளமை பாரிய வெற்றியை, நம்பிக்கையை எனக்குள் எழச் செய்துள்ளது. பல பேரினுடைய பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளது. அதனைவிட 2013 இல் நடத்தப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்ததால் நடாத்தப்பட்ட இளம் பாடகர் போட்டியில் பங்கு கொண்டு 01 ஆம் நிலை பெற்று தேசிய மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டேன்;. இதிலே எனக்கு இளம் பாடகர் விருதும் கிடைத்துள்ளது.


நடிப்பதிலா அல்லது பாடுவதிலா உங்களுக்கு விருப்பம் அதிகம்?

நல்ல கேள்வி தான். பாடல், ஆடல், நடிப்பு இந்த முன்றையுமே நான் அதிகமாக நேசிக்கின்றேன். இதில் பாடலும் நடிப்பும் சிறப்பானவை. இந்த இரண்டும் என்னுடைய இரண்டு கண்களைப் போன்றவை. நான் சாதிக்கத் துடிப்பது நல்லதோர் நடிகனாகவும் பாடகனாகவும்; வரவேண்டும் என்பதே. இவைதான் என்னுடைய ஆசை, விருப்பம் எல்லாமே. நடிப்பில் மட்டுமே அதிகூடிய கவனம் செலுத்துகின்றேன்.


நீங்கள் நன்றாக நடனமும் ஆடுவீர்களாமே?

ஆகா! ஆம்.. பெரிதாய் முறைப்படி எதுவும் கற்கவில்லை. ஆனால் அதிலும் ஒரு வெறித்தனம் இருக்கு என்றுதான் சொல்லுவேன். நான் நடிகாக வருவதற்கு முன்பு 2004, 2005, 2006, 2007 ஆம் ஆண்டுகளில்; மேடைகளில் சென்று நடனம் ஆடுவதே என்னுடைய வேலையாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் எங்கு விழாக்கள் என்றாலும் எங்களினுடைய 3Star Dance Group நிற்கும். அந்தளவிற்கு ஓடி ஆடி திரிந்தோம். எப்படியும் அதுவும் ஒரு கை பார்த்துவிடனும் என்ற விருப்பம்தான். முடியாது என்று எதுவும் இல்லை. இது தான் என்னுடைய வாக்கு. தற்போது நடித்துள்ள முழு நீளத் திரைப்படமான மனசுக்குள் ஒரு மழைச்சாரல், ஊதா பூவு கண்ணு (OPK), கானல் தேவதை போன்ற வீடியோப் பாடல்களில் எல்லாம் நடனம் ஆடியுள்ளேன்.

நடனம் என்பது ஈசியான விடயம் என்று யாருமே நினைக்க வேண்டாம்;. சப்பா.. அவ்வளவு கஷ்டம். முழு நீளத் திரைப்படப் பயிற்சியின் போது மாஸ்டர் கிருஷ்ணா என்னைக் கசக்கிப் பிழிந்து எடுத்துவிட்டார். கஷ்டப்பட்டால் எதையுமே நாம் இலகுவாக்க முடியும் என்பதனை எனது திரைப்படத்திலும் ஏனைய வீடியோப் பாடல்களில் எல்லாம் நடனம் பயிற்சி பெற்ற போது தான் உணர்ந்தேன்.

2007 - பிரதேச செயலக கலாசார விழா - சிறந்த நடனக் குழுவுக்கான சான்றிதழ் கிடைத்தது. மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. சினிமாவிற்குள் முழுமையாக இறங்கியுள்ளதனால் இப்போது தனியே வெளி இடங்களில் மேடைகளில் ஆடுவதே இல்லை. எல்லாம் நிறுத்திவிட்டு திரைப்படம், பாடல்களிலே தான் முழுக் கவனமும் இப்போது. ஒரு வீடியோ பாடலுக்கான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கு. பாடல் முழுக்க முழுக்க நடனம் சார்ந்ததாகவே இருக்கின்றது. மிகவும் ஒரு வித்தியாசமான விதத்திலே அதனை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம். மிக விரைவிலே நீங்கள் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.


உங்களது முதல் நடிப்பு அல்லது பாடல் அனுபவம் பற்றிக் கூறுங்கள்?

உண்மையிலே முதல் பாடல் முதல் நடிப்பு இரண்டுமே வாழ்விலே மறக்கவே முடியாத தருணம். 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி தான் எனக்குள் ஒரு பாடகன் இருப்பதனை நான் இணங்கண்டு கொண்டேன். ஏற்கனவே 2003 முதல்; ஆலய வழிபாட்டில் பாடிக் கொண்டிருந்தேன். தற்போதும் பாடுகின்றேன். அரசாங்கத்தால் வடக்கின் நட்சத்திரம் எனும் பாடல் போட்டி ஒன்று இடம் பெற்றது. யாழ்ப்பாண பிரிவிலே 170 க்கும் மேற்றபட்ட பாடகர்கள் பங்கு பற்றியிருந்தனர். அதிலே 3 சுற்றில் பாடி 6 ஆவது பாடகராக தெரிவு செய்யப்பட்டேன். எவ்வளவு பயம், பதட்டமான அந்தத் தருணத்தை இப்போ நிகைக்கையிலும் மெய் சிலிர்க்கின்றது.


உங்கள் படைப்புகளுக்கு சமூகத்தில் எந்தளவு அங்கீகாரம் இருக்கிறது?

ஆரம்ப காலத்தில் நான் சினிமாவிற்குள் காலடி பதிக்கும் போது எம்மவர்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா என்று எனக்குள் சரியான பயம், பதட்டம் இருந்தது. ஆனால் தற்போது அது இல்லை. காரணம் என்னைத் தாங்கி தூக்கி விடுபவர்களே அவர்கள் தானே. இன்று எம்மவர்கள் மத்தியில் எமக்கு முழு ஆதரவுகள் பல விதங்களில் கிடைக்கின்றது.

ஆகவே அதைப்பற்றி நான் தற்போது சிந்திப்பதில்லை. நான் போகும் பாதையைப் பற்றியே என்னுடைய சிந்தனைகள் யாவும். என்னுடைய படைப்பையும் பார்த்துப் பார்த்து கருத்து சொல்வார்கள். தொலைபேசி அழைப்புச் செய்து வாழ்;த்துவார்கள். நாளாந்தம் சந்திக்கும் போது பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள். பெரியவர்கள், மூத்தவர்கள் பலர் ஆசீர்வதிப்பார்கள்.  நீ எங்கட பிள்ளையடா நல்லா வருவாய், பெயர் சொல்லும் அளவு வருவாய், வரலாற்றில் காலூன்றுவாய் என்று பல பல வார்த்தைகளை ஆசீர்வாதமாய் பொழிவார்கள். எதுவுமே தெரியாமலே வந்து, எவுதுமே தெரியாமலே இருக்கின்ற என்னை இப்படி வாழ்த்துகின்றார்களே. எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கும். உண்மையில் தற்போது பாரிய அளவு ஒத்துழைப்பு சமூகத்திலே உள்ளது. அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.


அண்மையில் நடித்த மனசுக்குள் ஒரு மழைச்சாரல்‬ படம் பற்றிக் கூறுங்கள்?

வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு முழு நீளத் திரைப்படம் மனசுக்குள் ஒரு மழைச்சாரல். இத் திரைப்படமே எனக்கு பெரிய அனுபவம் தான். (நோர்வே தமிழ் சர்வதேச விருது விழாவில சிறந்த நடிகர் விருது எனக்கு கிடைத்துள்ளது). ஏற்கனவே 03 முழு நீளத் திரைப்படத்திலே நடித்திருக்கின்றேன். ஒன்று "கண்டம்", "என்னுள் என்ன மாற்றமோ?", "திசை".

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படத்திலே 100க்கும் மேற்பட்ட ஈழத்து திரைத்துறை கலைஞர்கள் பலர் பங்கு பற்றியுள்ளனர். ஈழத்திலே முதன் முதலாக அதிக செலவிலேயும் அதிக கலைஞர்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமாக இது காணப்படுகின்றது. பல புதுப் புது அனுபவங்களை இத் திரைப்படத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டேன்.


உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

2007 - பிரதேச செயலக கலாசார விழா - சிறந்த நடனக்குழுவுக்கான சான்றிதழ்
2012 - தேசிய மாவட்ட இளைஞர் விருது இளம் பாடகர் 2ம் இடம் தேசிய மட்டத்திற்கு சென்றமை
2012 - சுப்பர் சிங்கர் (வட மாகாணம்) சிறந்த பாடகருக்கான சான்றிதழ்
2013 - தேசிய மாவட்ட இளைஞர் விருது இளம் பாடகர் 1ம் இடம் தேசிய மட்டத்திற்கு சென்றமை
2013 - National Day Celebration - 2ம் இடம்
2014 - குறும் திரைப்படத்திற்கான சிறந்த நடிகர் விருது - 1023 வருடங்கள்) இளமை விருதுகள்
2014 - பாடலுக்கான சிறந்த நடிகர் விருது - மஞ்சப் பூவே வீடியோ பாடல்) ரதி விருதுகள்
2014 - பாடலுக்கான சிறந்த நடிகர் விருது - (மஞ்சப் பூவே வீடியோ பாடல்) இளமை விருதுகள்
2014 - பாடலுக்கான சிறந்த நடிகர் விருது - (மஞ்சப் பூவே வீடியோ பாடல்) வேல்ஸ் விருதுகள்
2015 - Best DAN TV (பாடுங்கள் சொல்லுங்கள்) Singer 1st Place Moter Bick
2015 - பாடலுக்கான சிறந்த நடிகர் விருது - (பூவிழி வீடியோ பாடல்) ரதி விருதுகள்
2016 - மனசுக்குள் ஒரு மழைச்சாரல் (நோர்வே தமிழ் சர்வதேச விருது விழாவில சிறந்த நடிகர் விருது NTFF)

• கலைமுத்து
• கலைத்தீபம்
• சமூகஜோதி பட்டம்
• கலைமாமணி விருது 02 தடவைகள்


முதன் முதலாக கமெரா முன்னாடி நின்ற அனுபவம் எப்படியிருந்தது?

Andra Wedding Card விளம்பரம்  முதல் சூட் பண்ணும் போது கஷ்டமாக இருந்தது. காரணம் கமெரா முன் நிற்காத நான் முதன் முதலில் நிற்கும் போது அவ்வளவு மக்கள் கூட்டம். முதன் முதலாக அவ்வளவு சனக்கூட்டத்ததை நேரிலே பார்த்தேன். முதல் தடவையே என்னுடைய காதலி என்னுடைய தோளில் சாயும் போது நான் அரவனைக்கும் காட்சி. அவரை யார் என்று கூட தெரியாது. ஸ்பாட்ல தான் காட்டினாங்க. கொழும்பு நடிகை வேற. வெட்கம் ஒரு பக்கம். பயம் ஒரு பக்கம். இப்ப நினைச்சா என்னை நினைச்சு சிரிப்பு தான் வருகுது. சில நேரங்களில கடந்து வந்த பாதைகளை நினைச்சுப் பார்ப்பேன். பின்பு சந்தர்ப்பங்கள் சரியாக அமையும் போது சரியாக பயன்படுத்தத் தொடங்கினேன். முதன் முதலாக கமெரா முன் நின்ற தருணத்தை எப்பவுமே மறக்கவே முடியாது.


உங்கள் வெற்றியின் பின்னால் யார் இருக்கிறார்கள்?

ஓவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒவ்வொரு பெண் இருப்பாள் என்பார்கள். என் வெற்றியின் துணையாய் என் வெற்றியின் முதல் படிக்கட்டாய் என் அன்பு அம்மா தான் இருக்கின்றார்.  அதற்கு அடுத்து என் அப்பா என் சகோதரங்கள் உள்ளனர். சிறப்பாக என்னுடைய முகம் தெரிந்த, தெரியா நண்பர்கள் உறவுகள் முகநூல் என் உறவுகள் இவர்கள் அனைவருமே என்னை தாங்கியுள்ளனர். இவர்களே என் வெற்றியின் காரண கர்த்தாக்கள். யாரையாவது குறிப்பிட மறந்து இருப்பின் அவர்களையும் சேர்த்து அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளைக் கூறுகின்றேன்.


கலைப் பயணத்தில் ஏற்பட்ட ஏதாவதொரு மறக்க முடியாத அனுபவம்?

என்னால இது அது என்று தனிய குறிப்பிட்டு கூற முடியாது காரணம் எல்லா படைப்புக்களிலும் ஏதாவது ஒரு மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும். இருந்தாலும் பாடல் விஷயத்தில ஒரு விடயம் எப்பவுமே மறக்க முடியாத ஒன்று தான். தொலைக்காட்சி ஒன்று ஒரு வருடமாக நடாத்திய பாடல் போட்டியில் 40 க்கும் மேற்பட்ட பாடல்களை 380 க்கும் மேற்பட்ட பாடகர்களுடன் பாடியிருந்தேன். ஒரு வருடமாக பாடி இருந்த தருணத்திற்கும் வந்திருந்தேன். 7 மணிக்கு கடைசி இறுதிச் சுற்று. 4 மணிக்கு தொலைபேசி அழைப்பு. இறுதி சுற்று ஆரம்பமாவதற்கு 3 மணித்தியாலத்திற்கு முன்பு பாடலை மாற்றும் படி தொலைபேசி அழைப்பு. அதுவும் 3 மாதகாலமாக இதைத்தான் இறுதிச் சுற்றில் பாட வேண்டும் நான் தயார் செய்து வைத்திருந்த பாடல். எப்படி இருக்கும் எனக்கு நான் என்ன செய்வேன். நான் மனதுக்குள் அழுதேன். அது அம்மாவுக்கு தெரியாது. அந்த நேரம் அது பெரிய கனவாக இருந்த தருணம். என்னால எதுவுமே செய்ய முடியாத நிலை.

அம்மா என் அருகே வந்து நீ மனம் குழம்ப வேண்டாம். உன்னால் முடியும் நீ இந்தப் பாடலைப் பாடு. நீ வெற்றியடைவாய் என்று சொன்னா. கோவிலில் கூட போய் வேண்டினேன். என்னால நம்பவே முடியல்ல. அந்த இறுதித் தருணத்தில்தான் என் அம்மாவின் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் இருக்கும் சக்தியை உணர்ந்தேன். இறுதிச் சுற்றில் 6 பேர் போட்டியாளர்கள் முதலாம் இடம் என் பெயரை அறிவித்தனர். அந்தக் கணம் எப்படி இருந்திருக்கும். எனக்கு இப்ப கூட அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. மோட்டார் சைக்கிள் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அதனை அனைவர் முன்பாகவும் என் அன்பு அம்மாவின் கைகளினாலேயே வாங்கச் செய்தேன். மறக்க முடியாத அனுபவம்.


நீங்கள் நடித்தவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த படைப்பு எது?

இதுவரை நான் நடித்த அனைத்து படைப்புக்களுமே என்னால் முழுவதுமாக விரும்பியே படைக்கப்பட்டவை. குறுந்திரைப்படங்கள், வீடியோ பாடல்கள், தொலைக்காட்சி நாடகங்கள், விளம்பரங்கள் யாவுமே பூரணமான விருப்பத்துடனேயே நான் நடித்துக் கொடுத்தேன். 1023 வருடங்கள் என்னுடைய முதலாவது சினிமா அறிமுகப் படம். முதல் படமே சிறந்த நடிகர் விருது கிடைத்தது. நான் நடித்த அனைத்து வீடியோ பாடல்களுமே எனக்கு ஒவ்வொரு விதமான வளர்ச்சியை உயர்ச்சியை தந்தவைதான். ஆனால் நான் இறுதியாக நடித்த ஷஷபூவிழி|| எனும் வீடீயோ பாடல் உலகமெங்கும் எனக்குள்ளும் ஒரு நடிகன் இருக்கின்றான் என்பதனை நிரூபித்துக் காட்டியது. அதனைத் தொடர்ந்துதான் பல தயாரிப்பாளர்கள் என்னில் நம்பிக்கை வைத்து படைப்புக்களை எனக்கு வழங்க முனைந்தனர். இந்தப் பாடல் எனக்கு ஒரு திருப்புமுனையான பாடலே. அதனால் அதனை மறக்கவே முடியாது.

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படம் என்னுடைய முதலாவது முழு நீளத திரைப்படம். முதல் முழு நீளத்திரைப்படத்திற்கே சர்வதேச ரீதியில் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. ஆகவே எந்தவொரு படைப்பையும் என்னால் மறக்கவோ தவிர்க்கவோ முடியாது.


இலங்கை சினிமாத் துறையின் வளர்ச்சியை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

இலங்கை சினிமாத் துறையினுள் குறிப்பாக தமிழ் சினிமாத் துறை மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு வருவதனைக் காண முடிகின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய படைப்புக்களை நமது இளைஞர்கள் படைக்கத் தொடங்கிவிட்டனர். ஓவ்வொரு நாளும் விடியும் போது முகநூலை பார்த்தால் புதிய பாடல், புதிய படம், போஸ்டர் என்று காண முடிகின்றது. இன்று எல்லோரும் தமது திறமையை வெளிக்காட்டுவதற்கு முனைப்புடன் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்குரிய வசதி வாய்ப்புக்கள் இல்லாமையே பாரிய சவாலாகக் காணப்படுகின்றது.


பகுதி நேரமாகவோ நடிப்புத் துறையில் ஈடுபடுகின்றீர்கள்?

இல்லை. என்னுடைய ஏக்கம் கனவே சினிமாவாகவே இருப்பதனால் எப்படி என்னால் பகுதி நேரமாக ஈடுபட முடியும்? என்னுடைய முழு நேர தொழிலே எனது சினிமா மட்டுமே. இதற்குச் சில காரணங்களும் உண்டு. நான் பகுதி நேரமாக இத்துறையில் ஈடுபட்டால் திடீரென படப்பிடிப்பிற்காக கொழும்பு அல்லது மட்டக்களப்பு வரச் சொன்னால் எப்படி செல்ல முடியும். முழு நேரமாக ஈடுபட்டால் எந்த இயக்குனர், எங்கிருந்து, எப்ப கூப்பிட்டாலும் உடனடியாகச் செல்ல முடியும்.


உங்களைக் கவர்ந்த நடிகர் யார்? ஏன்?

பல நடிகர்கள் உள்ளனர் ரஜனி, விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா எனப் பல பேரைக் கூறலாம். ஆனாலும் விஜய் அண்ணாவை கொஞ்சம் கூட பிடிக்கும். காரணம் நடிப்பு, டான்ஸ், சண்டைக்காட்சி எல்லாம் ரொம்ப றிஸ்க் எடுத்து கஷ்ரப்பட்டு பண்ணிட்டு இருக்கார். கடின உழைப்பாழி. அதனால கொஞ்சம் கூட பிடிக்கும்.


தென்னிந்திய சினிமாவுக்குள் நுழையும் எண்ணங்கள் உண்டா?

ஆம் உண்டு. நிச்சயமாக  தென்னிந்தியாவில் இருந்து அழைப்புக்கள் வந்தால் சென்று நடிப்பதற்கு நான் ஆயத்தமாகவே உள்ளேன். பல இயக்குனர்கள் என்னிடம் பேசியுள்ளனர். கண்டிப்பாக ஏதாவது ஒரு படைப்பு என்றாலும் ஓகே ஆகும் என நம்பிக்கையுள்ளது. இறைவன் விதிப்படியே இனி நடப்பவை எல்லாம்.


உங்களுடைய சினிமா பயணத்தில் உங்களால் தயாரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட படைப்புகள் உள்ளதா?

ஆம். 2017 ஆம் ஆண்டு தின்னவேலி குட்டி எனும் வீடியோ பாடல் முற்று முழுதாக என்னால்  உருவாக்கப்பட்டது. இப்பாடலில் நான் பாடல் பாடி, நடித்து, தயாரித்து, இயக்கி உள்ளேன். 05 லட்சத்திற்கும் அதிகமான பணம் இப்பாடல் படப்பிடிப்பிற்காக செலவாகியுள்ளது. இப்பாடல் படப்பிடிப்பிற்கு என்னுடைய சில நண்பர்களும் பண உதவி செய்துள்ளனர். நீண்ட நாள் இயக்குனராக சில படைப்புக்களை நான் படைக்க வேண்டும். அதுபோல் அவ் ஆசையும் நிறைவேறிச்சு. இதற்கு கூடவே இருந்து உதவி செய்த நண்பன் வாகீஷன், சுதர்ஷன்? இன்னும் பலர் உள்ளனர். நூன் யாரையுமே மறக்கவே முடியாது.


இளந்தலைமுறையைச் சேர்ந்த ஈழத்தின் பிரபலமான நடிகர் என்ற வகையில் நடிப்புத் துறையில் ஆர்வங்காட்டுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புக்pன்றீர்கள்?

என்னபை; போன்ற கலைஞர்களுக்கு நான் கூறுவது இதுவே. முதலில் நாங்கள் எந்தக் கலைத்துறையிலே இருந்தாலும் அந்தத் துறையிலே சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் விடா முயற்சியும் கண்டிப்பா எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டும். அடுத்ததாக எம்மையே நாம் அதற்கென அர்ப்பணிக்க வேண்டும்.  அப்போது தான் அந்தத் துறையிலே நாம் மிளிர முடியும். எந்தத் துறை சார்பாக செயற்படுகின்றோமோ அது சம்மந்தமாக நாளாந்தம் சிறு மணித் துளிகளையாவது அதற்கென ஒதுக்கி பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு  எமக்கென மற்றவர்கள் செய்த மிகச் சிறிய உதவிகளில் கூட நாங்கள் நன்றி உள்ளவராய் இருக்க வேண்டும். பலர் அதை மறந்தே விடுகின்றோம்.

இவற்றோடு சேர்த்து கடவுள் நம்பிக்கையும் கட்டாயம் வேண்டும். இறைவன் இல்லை என்றால் எல்லாமே போச்சு. குறிப்பாக பெற்ற தாயை எப்போதுமே மறந்து கூட விடாதீர்கள். தாயின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே நான் கூறிய இந்த விடயங்கள் எம்மிடையே காணப்படுமாயின் கட்டாயம் நாம் மனம் நோக வேண்டிய நிலையே வராது நாளாந்தம் ஏதேனுமொரு ஏணிப் படியிலே ஏறிச் செல்லலாம். இவற்றைவிட நான் வேறு விடயங்களைக் கூற வேண்டிய தேவையே இல்லை. இவற்றைச் செய்தாலே போதும் நினைத்த விடயங்களை மிக எளிதாகவே செய்து  முடித்துவிடலாம்.  இவை யாவும் என்னுடைய அனுபவம் இவற்றையே நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்